ஆணாதிக்க அமைப்பு உருவாக்கிய வட்டத்துக்குள் இயங்க முனையும் பெண், அதில் இருந்து விடுபடுவதற்கு பதில், அதை தீவிரமான தனது கடமையாகவே வலிந்து தேர்ந்தெடுக்கின்றாள். சமூக மாற்றங்களை உட்கிரகிக்க மறுக்கும் போது ஏற்படும் வலி, சொந்த வாழ்வியலையே துன்பமாக்குகின்றது.
நிலப்பிரபுத்துவ பெண் கணவனுக்கு ஏற்ப கடமையை வரிந்து கொண்டு, அதில் மகிழ்ச்சியை காண முனைந்தாள். இதுதான் மகிழ்ச்சி என்று கற்பித்துக் கொண்டு அதில் மகிழ்ச்சியாக வாழ முனைந்தாள்.
நிலப்பிரபுத்துவத்தில் இருந்து விடுபடாத, ஆனால் முதலாளித்துவ எல்லைக்குள் அங்குமிங்குமாக வாழ்கின்ற பெண், இரட்டை வாழ்க்கை முறையைக் கைக்கொள்கின்றாள். நிலப்பிரபுத்துவ ஆணின் குடும்ப அதிகாரத்தை கைவிட்டு விடும் ஆணின் மாற்றம், முதலாளித்துவ உறவுகளினால் உருவாகின்றது. பெண் பற்றி ஆணின் மதிப்பீட்டில் கூட மாற்றம் நிகழ்கின்றது. புதிய சமூக அமைப்புக்கு ஏற்ப, ஆணாதிக்கமாக திரிபடைகின்றது. இந்த வெற்றிடத்தில் நிலபிரபுத்துவ கடமையை தனது அதிகாரத்தின் கருவியாக கையில் எடுத்துக் கொள்ளும் பெண், முதலாளித்துவ ஜனநாயகத்தை குடும்பத்தில் மறுத்துவிடுகின்றாள். குடும்பத்தை மகிழ்ச்சியையே இப்படி சின்னாபின்னப்படுத்துகின்றாள்.
ஒருபுறம் ஜனநாயக தன்மையற்ற நிலபிரபுத்துவ வீட்டு அதிகாரம், மறுபுறும் வேலைச்சுமை. இப்படி இயங்குகின்ற பெண், வீட்டு வேலைகள் முதல் பெண்ணின் வெளி வேலை வரையுள்ள கடுமையான வாழ்க்கைச் சுமைகள், மறுபுறும் கையில் எடுக்கும் வீட்டு அதிகாரம் இப்படி தனது மகிழ்ச்சியையே தொலைத்த ஒரு நிலையில் தான், கடமைகள் பெண்ணால் செய்யப்படுகின்றது. இதனால் உண்மையில் கடினமான உழைப்பினால் ஆற்றப்படும் கடமைகள் ஏற்படுத்தும் பயனைக் கூட, அவள் அனுபவிக்க முடிவதில்லை. இதில் மகிழ்ச்சியை காண்பதற்குரிய சொந்த மனநிலையை அவள் கொண்டிருப்பதில்லை. மாறாக பெண்ணின் உணர்வு வகைப்பட்ட எதிர்வினை, பாரிய சொந்த எதிர்வினையைத் தருகின்றது. தனக்கானதும், தன்னைச் சுற்றி உள்ளவருக்குமான பெண்ணின் உடல் உழைப்பு உருவாக்கும் பயன், உணர்வியல் ரீதியாக பெண்ணை எதிர்நிலைக்கு மாற்றிவிடுவதே பல குடும்பத்தில் காணப்படும் பொது நிகழ்ச்சியாகும்;. மகிழ்ச்சியை அவளால் அனுபவிக்கவும், நுகரவும் முடியாத மனநிலைக்குள் சிக்கி, அவளாகவே மனநோயாளியாகின்றாள். செய்வதை மகிழ்ச்சியாக செய்துவிட்டால், அதன் பலன் வேறு.
கார்ல்மார்க்ஸ் கூறிய ஒரு வார்த்தை இங்கு எடுத்துக் காட்டுவது சாலப் பொருத்தமானது. மக்களுக்கான போராட்டம் தான் மகிழ்ச்சிக்குரிய ஒன்று என்றார். அப்போராட்டம் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், மகிழ்ச்சி என்பது நாம் கொண்டுள்ள சமூக நோக்கில் உள்ளது. இங்கு வறுமை, சிறை, எல்லையற்ற எதிரிகள் அனைத்தையும் எதிர்கொள்வதில் கூட ஒரு மகிழ்ச்சி உண்டு. வாழ்க்கைப் போராட்டம் இப்படித்தான் அமைகின்றது.
குடும்பத்தின் கடமைகள் இந்த சமூக அமைப்பில் சுமையானவை தான். ஆணோ பெண்ணோ அதை சுமக்க வேண்டியுள்ளது. ஆணாதிக்க அமைப்பினால், பெண் பெரும்பகுதியை சுமக்கின்றாள். இதையே தமது வாழ்க்கையாக புரிந்து கொள்கின்றனர். இதையும் மகிழ்ச்சியாக மாற்றுவது என்பதே, வாழ்வு பற்றிய வாழ்க்கைக் கலையாகும். ஆனால் பலரால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிவதில்லை. நாம் சரியென்றுபட்ட ஒன்றை அல்லது வலிந்து திணிக்கும் வாழ்க்கைச் சுமையை, சதா கூறிப் புலம்புகின்ற வாழ்க்;கை, யாருக்கும் மகிழ்ச்சியை உருவாக்காது. சதா கண்ணீரையும், தனிமையையும், புலம்பலையும், சண்டையையும், பிழைபிடிப்பையும் உருவாக்குகின்றது. இப்படி சதா யாரையாவது திட்டித் தீர்க்கின்ற உறவே, பெரும்பாலான குடும்பத்தின் உறவாகிவிடுகின்றது. வயது போகப்போக இதுவே பாரிய உளவியல் சித்திரவதையாகின்றது. தன்னை மட்டுமல்ல, குடும்பத்தின் பிற உறுப்புகளையும் மகிழ்ச்சியற்ற நிலைக்குள் தரம் தாழ்த்திவிடுகின்றனர்.
இப்படி தவிர்க்க முடியாத வாழ்வின் அம்சங்களை சுமையாக கருதுகின்ற வாழ்க்கைமுறை உருவாகிவிடுகின்றது. அதை வேண்டாவெறுப்பாக செய்கின்ற போது, அதன் வெளிப்பாட்டில் எங்கும் மகிழ்ச்சி இருப்பதில்லை. வெறும் கடமையாகவும், அதுவே உணர்ச்சியற்ற சடங்காகவும் சீரழிகின்றது. அந்த உழைப்பில் மகிழ்ச்சியோ, மனநிறைவோ இருப்பதில்லை. உண்மையில் அநேகமான குடும்பங்களில் மகிழ்ச்சி சிதைந்து போகின்றது. இதுவே அவர்களுக்கு இடையிலான பாலியல் உறவிலும் கூட பிரதிபலிக்கும். சினிமா ரசனைக்குள் எமது சமூகம் மூழ்கிக் கிடப்பதற்கு, இதுவும் ஒரு அடிப்படைக் காரணமாகும்;. கனவுலகில் மட்டும், மகிழ்ச்சியாக இருக்க முனைகின்றனர். நிஜத்தில் அப்படி அவர்களால் இருக்க முடிவதில்லை.
பிள்ளைகளுக்கான கடமை, அவர்களை வழிகாட்டுவதை ஓட்டிய பெண்ணின் கடின உழைப்பு ஏற்படுத்தும் உணர்வுகள் கூட, மகிழ்ச்சியான மனநிலையான இயல்பான உணர்வில் செய்யப்படுவதில்லை. கடமைக்காக, தன் தலைவிதியாக எண்ணி, சம்பிரதாயபூர்வமாக இவ் உழைப்பு சடங்காக இயக்கப்படுகின்றது. இந்த எதிர்நிலை விளைவை, அவள்(ன்) உணர்வதில்லை.
இப்படியாக தனது சொந்த வாழ்வை பெண் அழித்துவிடுகின்றாள். உண்மையில் இந்த சுழற்சிக்குள் தான் பெண்ணாகிய அவள் தானாக வலிந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றாள்;, என்பதைக் கூட அவள் உணர்வதில்லை. இந்த நிலையில் கடமையை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பதை கற்றுக்கொள்வதன் மூலம் தான், அவள் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.
உண்மையில் ஆண்களிடம் இருக்க கூடிய மகிழ்ச்சி பற்றிய புரிந்துணர்வு, இரட்டைக் கலாச்சார வாழ்க்கையை கொண்ட பெண்களிடம் இருப்பதில்லை. பெண்ணிடம் உயரிய தாய்மைப் பண்பு இருந்தும் கூட, மகிழ்ச்சி;யை பெண்களிடம் காண்பது என்பது அரிது. பெண்ணின் தாய்மைப் பண்பு, குழந்தைக்கு வழங்கும் பாதுகாப்பையும் அன்பையும் கூட, பெண் இன்று குழந்தைக்கு மறுப்பவளாகிவிட்டாள். பெண் உடல் என்பது தாய்மை சார்ந்தது. அதாவது இயற்கையாகவே சமூகத்தன்மை சார்ந்தது. அதைத் தான் இயற்கை தேர்வு செய்தது. ஆனால் இன்றைய பெண் உடலை வெறும் பாலியல் நுகர்வு சார்ந்த ஒன்றாக, அதை அழகுபடுத்தி காட்டும் உறுப்பாக கருதி வாழ்கின்ற எல்லைக்குள் சீரழிக்கப்பட்டுவிட்டாள்.
தாய்மை கொண்டுள்ள சமூக பண்பில் வெளிப்படும் மகிழ்ச்சியை தொலைத்து, சமூக பண்பை மறுக்கும் தனிமனித நுகர்வுக்குள் சிக்கிவிடுகின்றாள். இந்த மனநிலையில் மகிழ்ச்சியை தேடுவதே, இதன் முரண்நிலை. தனிமனித சுயநலத்தில் எப்படி மகிழ்ச்சி இருக்கமுடியும். அதில் இல்லாததொன்றை வலிந்து தேடுவதாகும்;. வெறும் பொருட்கள், அது சார்ந்த நுகர்வு, அந்த ரசனை மனித மகிழ்ச்சியை வலிந்து ஏற்படுத்தாது. ஆனால் அது ஏற்;படுத்தும் என்ற விளம்பரச் சந்தையின் வாலில் தொங்கும் பெண்ணின் கண்ணோட்டம், எப்படி மனித உணர்வுகளை மகிழ்ச்சியாக்கும்? உண்மையில் தமது சொந்த மகிழ்ச்சியை இனம் காணாது, அதை இழக்கின்றனர். பொருளே வாழ்க்கையாகிவிடும் போது, வாழ்வியல் துன்பத்தைத் தவிர, வேறு எதையும் படைப்பதில்லை. இதுவே பல குடு;ம்பங்களின் இன்றைய நிலை.
மனிதனின் சமூக உணர்வுக்கு அப்பால், அவள் வலிந்து பொருள் உலகில் வாழ முனைகின்றாள்;. அன்பும் பாசமும் என்பதை பொருள் சார்ந்த உறவுக்குள்ளாக சீரழித்;து, அதனூடாக மட்டுமே சமூக உறவினை தீர்மானிக்கின்றாள். பொருட்கள் சார்ந்த எல்லைக்குள், அதற்குள் அன்பையும் பாசத்தையும் கொட்டித் தேட முனைப்பு கொள்கின்றனர். மனித உறவு என்பது இயற்கை சார்ந்த ஒன்று என்பதும், அது பண்பு சார்ந்த ஒன்று என்பதையும், பெரும்பாலான பெண்கள் மறுத்துவிடுகின்றனர். தன்னைச் சுற்றி பொருள் சூனியத்தை உருவாக்கிக்கொண்டு, சமூக உறுப்புகள் மேல் வெறுப்பை கொட்டி தீர்க்கின்றாள்.
ஆண் பெற்ற சமூக அறிவு பெண்ணிடம் கிடையாது. அதாவது ஆணாதிக்க அமைப்பில் பெண் பெற்ற குறுகிய அறிவும், பெண்ணை இப்படியாக குறுக வைத்து வக்கிரப்படுத்துகின்றது. பெண் தொடர்ந்து பாலியல் பண்டமாக இருப்பதுடன், ஏன் அவள் அதன் காவியாக மாறுவதன் அடிப்படையிலேயே பெண்ணில் செயற்பாடுகள் அமைகின்றது. தனது அழகு கவர்ச்சி என்று தொடங்கி, பொருள் கவர்ச்சியில் சீரழிகின்றது. மனித உறவுகள் என்பது நுகர்வுப் பண்பாட்டின் இரக்கமற்ற தன்மையில் அல்லாடுகின்றது. குடும்பத்தில் பெண்ணின் மனநிலை என்பது, கலாச்சாரத்தின் நடுவில் தொங்கியபடி அங்குமிங்குமாக அந்தரத்தில் தொங்கி சீரழிகின்றது. இப்படி சதா திருப்தியற்ற ஒரு மனவுணர்வை அடைகின்றாள்.
பி.இரயாகரன்
01.07.2007