கீழ்த்தரமான கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை அகற்ற பாளையக்காரர்கள் ஒன்றுபட்டு ஏற்படுத்தியிருந்த தீபகற்பக் கூட்டிணைவில் தெற்கே மருதுபாண்டியர், திண்டுக்கல்லில் கோபாலநாயக்கர் எனக் கூட்டிணைவை வழிநடத்தி வந்தனர். இதில் மலபாரையும், தமிழகத்தையும் தென்னிந்தியப் புரட்சிக் கண்ணியில் இணைப்பதற்கான இடமாக விளங்கியது கொங்கு மண்டலம். அதில் ஆங்கிலேயர்களுக்கு அடங்க மறுத்த பாளையக்காரர்களில் ஒருவர் சின்னமலை.
கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தைக் கருவறுக்க ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, திருநெல்வேலி எனப் பரந்து விரிந்த கூட்டிணைவை உருவாக்க மராட்டியப் போராளி "துந்தாஜிவாக்'கைச் சந்திக்கச் சென்ற மூன்று தூதுக்குழுவில் சின்னமலையின் பெருந்துறைப்பாளையமும் பங்கேற்றது. கொங்குப் பகுதி மைசூர் ஆட்சியின் கீழ் வரிவசூல் பகுதியாக இருந்தாலும் பொதுஎதிரியான கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை வீழ்த்த நாம் ஒன்றுபட வேண்டும் என்ற திப்புவின் வேண்டுகோளை ஏற்று ஆங்கிலேயப் படைகளை திப்புவுடன் சேர்ந்து எதிர்த்துப் போராட 10,000 படை வீரர்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டார் சின்னமலை. அங்கே ஜாக்கோபின் என்ற பிரெஞ்சு புரட்சி வீரர்களால் சின்னமலை படைக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டு, சீரங்கப்பட்டினப் போரில் சிறப்பாக மாலவல்லி எனுமிடத்தில் ஆங்கிலேயப் படைக்குப் பெருத்த சேதத்தையும் விளைவிக்கிறது கொங்குப்படை.
மேலும் நெப்போலியனுக்கு திப்புவின் கோரிக்கையோடு பிரான்சுக்குத் தூதுசெல்லும் வேலையை தீரன் சின்னமலையின் வீரர் கருப்பச்சேர்வை செய்கிறார். திப்புவின் முடிவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தைத் தவிர பிற பகுதிகள் கும்பினிப் படை வசமாகின்றன. அடங்க மறுக்கும் சின்னமலைக்கு ஆங்கிலேயப் படை குறி வைக்கிறது.
அறச்சலூர்ப் போரில் ஆங்கிலப்படையைத் துரத்தி அடிக்கிறார் சின்னமலை. காவிரிக்கரைப் போரில் 1801ல் கர்னல் மாக்ஸ்வெல் படையைத் துரத்துகிறார். அதே மாக்ஸ்வெல்லின் தலையை 1802இல் ஓடாநிலைப் போரில் வெட்டி வீசினார் சின்னமலை. வெறியோடு 1803இல் குதிரைப்படையுடன் சின்னமலையைக் கைது செய்ய வந்த ஜெனரல் ஹாரிஸின் படைகள்மீது எறிகுண்டை வீசித் துரத்தியடிக்கிறார் சின்னமலை. மீண்டும் பெரும்படையுடன் ஜெனரல் ஹாரிஸ் வருவதை அறிந்த சின்னமலை ஓடாநிலைக் கோட்டை வாசலில் பீரங்கியால் தாக்குவது போல வெறும் பீரங்கியை வைத்துவிட்டு கோட்டையிலிருந்து தலைமறைவாகி, காங்கேயம் சென்று அங்கிருந்து வாழை வியாபாரி போன்ற வேடத்தில் பழனி சென்று பிற பாளையக்காரர்களுடன் கும்பினிப் படையைத் தாக்கத் திட்டமிடுகிறார். எட்டப்பனைப் போல இங்கும் சமையல்காரன் நல்லப்பன் காட்டிக் கொடுக்க தீரன் சின்னமலை கும்பனிப் படையால் கைது செய்யப்படுகிறார்.
கும்பினி ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டால் விட்டுவிடுவதாக ஹாரிஸ் பேரம்பேசியும், சோரம் போகாத தீரனும் அவனது சகோதரர்கள் பெரியதம்பி, கிலேதர் ஆகியோருடன் மூவரையும் சங்ககிரி மலைக்கோட்டையில் ஆலமரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றது கும்பினி ஆட்சி. கல்லாய்ச் சமைந்த துயரம் என 1500 அடி உயர சங்ககிரி மலை நம் கண்முன்னே தீரன் சின்னமலையின் நாட்டுப்பற்றை உயர்த்திக் காட்டி நிற்கிறது. பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு இந்த மண் அடிபணியாது என்று கல்லும் மண்ணும் நம்மைப் பார்த்து நம்பிக் கொண்டிருக்கிறது. மறந்து விடவேண்டாம்!
சுடர்விழி
**********************************************************************
""ஆங்கிலக் கம்பெனியின் நற்பேறாலும் உங்களின் நற்பேறாலும் ஆங்கிலக் கம்பெனி அதிகாரிகளின் வீரத்தாலும் சிறந்த கொள்கைகளாலும் அந்தக் காட்டுநாய் சின்ன மருது அவனது சகோதரன் மற்றும் குடும்பத்தார் கைது செய்யப்பட்டு அவர்கள் இழைத்த சதிக்காகச் சாவின் மூலம் பலன் அடைந்தார்கள். மகாபிரபுவே! நான் வெகு காலமாகப் பார்த்து வந்ததில் பிரெஞ்சுக்காரர்கள், சந்தாசாகிபு, திப்பு சுல்தான் முதலியோர் ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றிபெற முடியவில்லை. அவர்கள் அழிக்கப் பட்டுள்ளார்கள். ஆனால் ஆங்கிலக் கம்பெனியை நம்பி வாழ்ந்தவர்கள் பேரும் புகழும் பெற்றிருக்கிறார்கள். அந்த அயோக்கியன் மருது எதை எதிர்பார்த்துக் கலகம் செய்தான் என்பது விளங்கவில்லை.''
25.10.1801ஆம் நாளன்று புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாதத் தொண்டைமான் கம்பெனியின் சென்னை நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம்.
திப்பு சுல்தான் மற்றும் மருதுவின் வீரமும், நாட்டுப்பற்றும், தியாகமும் தொண்டைமானுக்கு விளங்காததில் வியப்பில்லை. வீரத்தைப் போலவே வரலாறு நெடுகிலும் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் துரோகம் எப்போதும் தன்னை உயர்வாகவே கருதிக் கொள்கிறது. கருங்காலித்தனம், காரியவாதம், சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் ஆகியவற்றையே புத்திசாலித்தனம் என்று கருதி தன்னை மெச்சிக்கொள்ளும் துரோகம், தான் பிழைத்திருப்பதையே புகழுக்குரியது என்பதற்கான ஆதாரமாய்க் காட்டுகிறது.
ஆயினும் வரலாறு எதிர்காலத்தில் தான் மதிப்பீடு செய்யப்படுகிறது. சுரண்டி வந்த ஆங்கிலேயரை அண்டிப்பிழைத்தும், போராளிகளைக் காட்டிக்கொடுத்தும் சுகபோகிகளாய் வாழ்ந்த தொண்டைமான்கள் மற்றும் எட்டப்பன்களை இன்றும் தமிழக மக்கள் தம் அன்றாட வழக்கில் அருவெறுப்புடன் துரோகத்தின் இலக்கணமாய் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்ததால் மட்டும் விஜய ரகுநாதத் தொண்டை மானுக்கு இந்த அவப்பெயர் வந்து விடவில்லை. 18, 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தொண்டை மான் பரம்பரையே துரோகத்தின் இழையொற்றித்தான் வாழ்ந்து வந்திருக்கிறது.
1751இல் ஆற்காட்டு நவாப் பதவிக்காக சந்தாசாகிப்பும் முகம்மது அலியும் மோதிக்கொண்டபோது, ஆங்கிலேயர்கள் முகம்மது அலிக்கு ஆதரவாகவும் பிரெஞ்சுக்காரர்கள் சந்தாசாகிப்பை ஆதரித்தும் களம் இறங்குகிறார்கள். இந்தப்போரிலேயே ஆங்கிலேயப்படைக்கு ஆதரவாக 400 குதிரைப்படையினர், 3000 காலாட் படையினரையும் தொண்டைமான் அனுப்புகின்றான். ""இனி இந்தியாவின் எதிர்காலம் ஆங்கிலேயர் வசம்தான்'' என்று தொண்டைமான் யூகித்திருக்கக் கூடும்.
வெள்ளையர்களும் தனது அடிவருடியைக் கண்டு கொண்டார்கள். 28.9.1755 அன்று சென்னையிலிருந்த கவர்னர் ஜார்ஜ் பகாட் தனது தலைமையகத்துக்கு எழுதிய கடிதமொன்றில் ""புதுக்கோட்டை தொண்டைமான் கம்பெனியின் நேசமான நண்பர். தற்போதும், இனிவரும் காலங்களிலும் தொண்டைமானின் பாதுகாப்புக்கு ஆங்கிலேயர்கள் உதவி செய்வார்கள். அதுபோல தொண்டைமானும் ஆங்கிலேயருக்கு உதவி செய்யவேண்டும். தொண்டை மானின் அந்தஸ்திற்கு ஏற்ப அவருக்குரிய மரியாதையையும் கௌரவத்தையும் ஆங்கில அரசு அளித்து வரும்'' என்று குறிப்பிடுகிறான்.
1759ல் சென்னைக் கோட்டையைக் கைப்பற்ற பிரெஞ்சுக்காரர்கள் முயன்ற போது ஆங்கிலேயரைக் காப்பாற்ற 200 குதிரைப்படையினர், 1500 காலாட் படையினர் மற்றும் 250 பணியாட் களையும் தொண்டைமான் அனுப்பினான். பூலித்தேவன் முதலான பாளையக்காரர் களை அடக்குவதற்குச் சென்ற கம்பெனியின் படையில் தொண்டைமானது வீரர்களும் இருந்தனர். 1772ல் இராமநாதபுரம், சிவகங்கை மீது படையெடுத்து முத்து வடுகநாதரைக் கொலை செய்த கம்பெனிப் படையில் தொண்டைமானது 5000 வீரர்களும் இருந்தனர்.
இக்காலத்தில் ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக எழுந்த ஹைதர் அலி தனக்கு உதவுமாறு தொண்டை மானைக் கேட்கிறார். அவன் துரோகிக்கே உரிய ராஜ விசுவாசத்துடன் மறுக்கிறான். சினம் கொண்ட ஹைதரலி தஞ்சாவூரைக் கைப்பற்றிய பிறகு புதுக்கோட்டையின் மீதும் படையெடுக் கிறார். அப்போதும் ஆங்கிலேய விசுவாசத்தில் தொண்டைமான் உறுதியாக இருக்கிறான். நாயினும் மேலான இந்த நன்றிப் பெருக்கைக் கண்டு வெள்ளையர்களே சிலிர்த்திருக்கக் கூடும். இச்சமயத்தில்தான் கட்டபொம் மனைக் காட்டிக் கொடுத்த "வரலாற்றுச் சிறப்பு மிக்க' விஜய ரகுநாதத் தொண்டைமான் 1789ல் பட்டத்திற்கு வருகிறான். திப்பு கொலை செய்யப்பட்ட நான்காவது மைசூர் போரில் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் படையனுப்பி உதவவும் செய்கிறான்.
1799ஆம் ஆண்டு நடந்த முதல் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் தோற்ற கட்டபொம்மன் போரைத் தொடர்வதற்காக மருதிருவரைச் சந்திக்கச் செல்கிறார். கட்டபொம்மனைப் பிடிப்பதற்கு விழிப்புடன் கண்காணிக்கு மாறு திருநெல்வேலி கலெக்டர் லூஷிங்டன் தொண்டைமானுக்கு கடிதம் எழுதுகிறான். அதன்படி திருமயம் அருகே திருக்களம்பூர் காட்டிலிருந்த கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்து ஆணையை நிறைவேற்றுகிறான் தொண்டைமான். கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய பிறகு, தொண்டைமானுக்கு விலையுயர்ந்த குதிரை மற்றும் அலங்கார வேலைப்பாடு மிகுந்த பட்டாடையை வெள்ளையர்கள் பரிசாக வழங்கினர்.
எட்டப்பனுக்கு கட்டபொம்மனது பாளையத்தின் 114 ஊர்களும், திப்புவின் அரண்மனையில் கொள்ளையடித்த தொட்டிப் பல்லக்கு, தங்கக்கலசம் வைத்த கூடாரம், குதிரைகள், போர்முரசு முதலான எலும்புத் துண்டுகளும் பரிசுகளாய்த் தரப்பட்டன. எட்டப்பனை விடத் தொண்டைமானுக்கு பரிசு குறைவுதான். எனினும் அதனால் தொண்டைமானின் பிரிட்டிஷ் விசுவாசம் கடுகளவும் குறைந்துவிடவில்லை.
மருது சகோதரர்களை ஒழிக்க காளையார் கோவில் மீது வெள்ளையர் கள் 1801ஆம் ஆண்டு படையெடுத்த போது 6667 வீரர்களையும், காட்டையழித்துச் சாலை போடுவதற்கு பணியாட்களையும் அனுப்பியதுடன் தனது திருமயம் கோட்டையையும் வெள்ளையர்களுக்குக் கொடுத்தான். வெல்லமுடியாமல் தளர்வுற்றிருந்த வெள்ளையர்களுக்கு ""தொண்டித் துறைமுகம் வழியாக மருதுவுக்கு வரும் பொருள், ஆயுத உதவிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும், மழைக்காலத்திற்கு முன் காளையார் கோவிலை மூன்று திசைகளிலிருந்தும் தாக்கினால்தான் வெல்லமுடியும்'' என ஆலோசனை கூறி வழிநடத்தினான். காடுகளில் தலைமறை வாயிருந்த மருதுவின் வீரர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரைப் பிடித்துக் கொடுத்து அவர்களைத் தூக்கிலேற்ற வைத்தான் தொண்டைமான்.
விகாரமான இந்த துரோகத்துக்குப் பரிசாக, ஆங்கிலேயர்கள் இரண்டு ஐந்தடி தங்கச் செங்கோல்களைத் தொண்டைமானுக்குப் பரிசளித்தார்கள். ஆனால் தொண்டைமானோ, "மதிப்பு மிக்க' இந்தத் துரோகத்துக்கு "மகாராஜா பட்டம்' வேண்டுமென்று கேட்டான். வெள்ளையர்கள் மறுத்து விட்டனர். தனக்கு எடுபிடி வேலை பார்க்கும் ஒரு பாளையக்காரன், மகாராஜா பட்டத்துக்கு ஏங்குவதை எண்ணி ஆங்கிலேயர்கள் நகைத்திருக்கக் கூடும்.
பட்டம் தராவிட்டாலும் பரவாயில்லை. தென்னிந்தியா முழுதும் படையனுப்பித் தொண்டு செய்த தன் அடிமைக்கு செலவுக் காசைக்கூட வெள்ளையன் தரவில்லை. புதுக்கோட்டை எனும் வானம் பார்த்த பூமியின் வறிய விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து பறிக்கப்பட்ட தொகையை வெள்ளையனுக்குப் படையனுப்ப செலவழித்து விட்டு, புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு 60,400 பகோடா கடனும் வைத்துவிட்டு 1807இல் செத்தான் இந்தத் தொண்டைமான்.
அடுத்து பட்டத்துக்கு வந்த தொண்டைமான் (10 வயது) காலத்தில் ஆட்சி நேரடியாக கம்பெனியின் "ரெசிடென்ட்' கைக்குப் போய்விட்டது. மருதுவின் படையால் தஞ்சையில் தோற்கடிக்கப்பட்ட வில்லியம் பிளாக்பர்ன் என்ற அந்த அதிகாரியை "அப்பா' என்றுதான் அழைப்பானாம் சிறுவன் தொண்டைமான். இவர்களை "ஐரோப்பியனுக்குக் கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள்' என்று தனது திருச்சி பிரகடனத்தில் சரியாகத்தான் குறிப்பிடு கிறார் மருது!
1833ல் தொண்டைமானுக்கு "ஹிஸ் எக்ஸலன்சி' விருது வழங்கப்பட்டது. 1857இல் இந்த விருது ரத்து செய்யப்பட்டது. கடனில் மூழ்கிய மன்னனுக்கு இந்த விருது வைத்துக் கொள்ள தகுதியில்லை என ஆங்கிலேய அரசு தெரிவித்துவிட்டது. விருதைத் திரும்பப் பெறுவதற்காக விவசாயிகளை மேலும் கசக்கிப் பிழிந்து வரி வசூலித்து கடனை அடைத்து, 1870இல் மறுபடியும் விருதைப் பெற்று "கவுரவத்தை' நிலைநாட்டிக் கொண்டான்.
1875ஆம் ஆண்டு மதுரை வந்த வேல்ஸ் இளவரசன் தொண்டைமானுக்கு ஏதோ ஒரு மெடலைக் குத்திவிட்டான். 1877ஆம் ஆண்டு விக்டோரியா ராணி, மகாராணியாக பட்டம் சூட்டிக்கொண்ட போது, புதுக்கோட்டையில் சிறப்பு தர்பார் கூட்டப்பட்டு கொண்டாடப் படுகிறது. 1911ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பட்டம் சூட்டிக் கொள்ளும் போது (வ.உ.சி சிறையில் செக்கிழுத்துக் கொண்டிருந்தபோது) தொண்டைமான் லண்டன் சென்று அதில் கலந்து கொள்ளும் பாக்கியத்தையும் பெறுகிறான்.
அதே ஆண்டில் தில்லி வந்த ஐந்தாம் ஜார்ஜ், தொண்டைமானுக்கு "பிரிட்டிஷ் இந்தியப் பேரரசின் தளபதி' எனும் விருதை வழங்குகிறான்.
1914இல் முதல் உலகப்போர் துவங்கியபோது இந்தத் தளபதியிடம் உதவுவதற்குப் படை இல்லை. ஆகவே பிரிட்டனுக்கு 14,000 ரூபாய் மொய் எழுதுகிறான்; இரண்டாம் உலகப் போரின்போது 1,60,000 ரூபாய் மொய் எழுதுகிறான். 1915 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற தொண்டைமான் அங்கு மோலி எனும் வெள்ளையினப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். 20 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு 1920 ஆம் ஆண்டு பாரிசில் குடியேறுகிறான். அவர்களுக்குப் பிறந்த மகனின் பெயர் சிட்னி மார்த்தாண்டன்.
"ராஜாதிராஜ ராஜகுலதிலக ராஜகம்பீர சிறீ சிறீ சிறீ' விஜயரகுநாதத் தொண்டைமானின் பரம்பரை தங்களுடைய துரோக வரலாற்றுக்காக கடுகளவும் கூச்சமோ, குற்றவுணர்வோ கொள்ளவில்லை. தொண்டைமான் என்ற பட்டத்துடன் கம்பீரமாகப் பவனி வந்துகொண்டிருக்கிறார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி மாநகர மேயர் சாருபாலா.
···
துரோகிகளின் வரிசையில் அடுத்து வருபவன் ஆற்காட்டு நவாப். வணிகம் செய்து லாபமீட்டுவதற்குப் பதிலாக மக்களிடம் வரிவசூல் கொள்ளை நடத்தியே இலாபமீட்டலாம் என்பதற்கான வாய்ப்பை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உருவாக்கிக் கொடுத்து, இந்தியாவை ஆக்கிரமிப் பதற்கான கனவையும், அதற்குத் தேவையான களத்தையும் அவர்களுக்கு உருவாக்கித் தந்தவன் ஆற்காட்டு
நவாப்.
இன்றைய தமிழகப் பகுதிகளில் வரிவசூல் செய்வதற்காக மொகலாய மன்னர் ஒளரங்கசீப்பால் 1698இல் உருவாக்கப்பட்டதுதான் நவாப் எனும் பதவி. முதலில் மொகலாய வம்சாவழியினரான நேவாயெட்ஸ் எனப்படுவோரே நவாப்புக்களாக பதவியேற்கின்றனர். முகலாயப் பேரரசு நலிவுற்ற காலத்தில் வாலாஜா எனப்படும் வம்சா வழியினரும் பட்டத்திற்கு வருகின்றனர். இந்த இரு கோஷ்டிகளும் எல்லா வகையான அரண்மனைச் சதிகளிலும், கொலைகளிலும் ஈடுபடுகின்றனர். பதவிக்காக உடன் பிறந்தோரையும், ரத்த உறவுகளையும் கொலை செய்தே வளர்ந்த இந்த வம்சம், நாட்டையும் மக்களையும் ஆங்கிலேயருக்குக் கூட்டிக்கொடுத்ததில் வியப்பல்லை.
1750களில் நேவாயெட்ஸ் வம்சத்தைச் சேர்ந்த சந்தாசாகிப்பிற்கும், வாலாஜா வம்சத்தைச் சேர்ந்த முகம்மது அலிக்கும் நடந்த பதவிச் சண்டையில், சந்தாசாகிப் பிரெஞ்சுக்காரர்களையும், முகமது அலி ஆங்கிலேயர்களையும் அடியாள் படையாக அழைத்தனர். இரண்டு படைகளுமே (படை என்றால் ஆயிரம் இரண்டாயிரம் அல்ல, சில நூறு பேர்தான்) ஐரோப்பா செல்வதற்கான பருவகாலக் காற்றுக்காகக் (சீசன்) காத்திருந்தனர். சும்மாயிருக்கும் நேரத்தில் கைச்செலவுக்கு ஆகுமே என்று இரண்டு படைகளும் நடத்திய ஆஃப் சீசன் சண்டைதான் "கர்நாடகப் போர்'. இந்தக் கேலிக்கூத்தில் முகமது அலி வென்றான். கம்பெனி குமாஸ்தாவான ராபர்ட் கிளைவ் "மாவீரன்' ஆனான்.
ஒப்பீட்டளவில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட எண்ணிக்கையில் குறைவான ஐரோப்பியப் படை, எண்ணிக்கையில் அதிகமான இந்தியப் படைகளைத் தோற்கடிக்க முடிகிறது என்பதைத் தம் அனுபவத்தில் உணர்ந்த ஆங்கிலேயர்களின் மனதில் ஆக்கிர மிப்புக் கனவு முளை விடத் தொடங்கியது.
நவாப்போ வேறு விதமாகக் கனவு காணத் தொடங்கினான். பிரிட்டிஷாரின் படையைப் பயன்படுத்தியே இலங்கை உள்ளிட்ட தென்னிந்தியாவின் சக்ரவர்த்தியாகி விடலாம் என்பது அவன் கனவு. எனவே, பாளையக்காரர் களுடன் வரிவசூல் தொடர்பாக எழும் பிரச்சினைகளில் தொடங்கி எல்லா விவகாரங்களுக்கும் கம்பெனியின் படைகளையே கூலிப்படையாகப் பயன்படுத்த ஆரம்பித்தான். காலப்போக்கில் கம்பெனியின் படைச் செலவுக்கு அடைக்கவேண்டிய தொகை கடனாய் ஏறி ஒரு கட்டத்தில் நவாப் திவால் அடையும் நிலைக்குச் சென்றான். இறுதியில் வேறுவழியின்றி தன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை ஒவ்வொன்றாய் வெள்ளையர்களுக்கு எழுதிக் கொடுக்கத் தொடங்கினான். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்ட ஆரம்பித்தது.
இந்த அளவுக்கு அடி முட்டாளாயிருந்த நவாப் அதற்கேற்ற முறையில் நகைக்கத்தக்க வகையில் ஆட்சியிழந்தான். 1787 மற்றும் 1792 ஆம் ஆண்டுகளில் கம்பெனி இவனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி பெரும்பான்மைப் பகுதிகளின் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது. இறுதியில் ஆட்சியதிகாரம் மட்டும் மாற்றப்படவேண்டும் என்ற நிலையில் 1795ஆம் ஆண்டு முகம்மது அலி செத்துப் போனான்.
சாகும்போது தன் மகன் உம்தத் உல் உம்ராவை அழைத்து, ""மகனே 1792 ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து மயிரளவேனும் மாறுபடும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போட்டு விடாதே. உன் நன்மைக்காகத் தான் என்று சொல்வார்கள். நம்பிவிடாதே.'' என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடினான்.""தலை போய்விட்டது என்ற படியால் முடியாவது மிஞ்சட்டும்'' என்று அவன் நினைத்திருக்கக்கூடும்.
ஆனால் வெள்ளையர்கள் அப்படி நினைக்கவில்லை. அடுத்த ஒப்பந்தத்திற்கு ஆயத்தமானார்கள். உல் உம்ராவோ மன்றாடினான். திப்புவுக்கு எதிரான 1799 இறுதிப் போருக்கு படையும் உணவும் தந்து வெள்ளையருக்கு உதவி அவர்களுடைய நல்லெண்ணத்தைப் பெற முயன்றான். அனைத்தையும் வெள்ளையர்கள் பயன்படுத்திக் கொண்டனர். போர் முடிந்தபின் ""உனக்கும் திப்புவுக்கும் ரகசிய உறவு இருந்ததை நிரூபிக்கும் ஆவணங்களைக் கண்டுபிடித்து விட்டோம்'' என்று நவாபை மிரட்டினான் வெல்லெஸ்லி. ஆதாரமே இல்லாத இந்த வெற்று மிரட்டலைக் கேட்ட மாத்திரத்தில் நோயில் விழுந்து 1801ல் செத்துப் போனான் உம்தத் உல் உம்ரா.
அடுத்து அவனது மகன் அலி ஹுசைன் ஆற்காட்டு நவாப்பாக பதவியேற்கிறான். துரோகிகள் கொஞ்சம் கவுரவமாக நடத்தப்படுவதற்குக் கூட வீரர்கள் உயிர் வாழ்வது ஒரு முன் நிபந்தனையாக இருக்கிறது. திப்பு கொல்லப்பட்ட மறுகணமே தனக்கு இதுகாறும் உதவிவந்த தென்னிந்திய துரோகிகள் அனைவரையுமே செருப்புக்குச் சமமாக நடத்தத் தொடங்கினார்கள் வெள்ளையர்கள். ""அரசாளும் முழு உரிமையையும் எங்களுக்கு எழுதிக்கொடு'' என்று அலி ஹுசைனை மிரட்டியது கம்பெனி. அதை ஒப்புக்கொள்ளவும் முடியாமல், மறுக்கவும் தைரியம் இல்லாமல் அவன் திண்டாடுகிறான்.
""என்னை நவாப் ஆக்குங்கள். நான் எழுதிக் கொடுக்கிறேன்'' என்று வெள்ளையரிடம் பேரம் பேசுகிறான் முகமது அலியின் இரண்டாவது மகனும் அலி ஹூசைனின் சிறிய தந்தையுமான அசிம் உல் தௌலா. உடனே அசிமை நவாப் ஆக்குகிறார்கள் வெள்ளையர்கள். அலி ஹுசைன் விஷம் வைத்துக் கொல்லப்படுகிறான். நவாபின் நாடு முழுவதும் கம்பெனியின் நேரடி ஆட்சிக்குள் வருகிறது, அரண்மனையை மட்டும் சொந்தமாகக் கொண்ட நவாப்புக்கு வரி வசூலில் ஐந்தில் ஒரு பங்கு ஓய்வூதியமாகத் தரப்படுகிறது.
இப்படி பங்காளியை விஷம் வைத்துக் கொன்று பதவியைப் பிடித்த பரம்பரையில் வந்தவர்தான் இன்று சென்னை அமீர் மகாலில் குடியிருக்கும் ஆற்காடு "இளவரசர்'.
···-----------------------------------------------------------------------
முசுலீம்கள் என்றாலே தேசத் துரோகிகள் என்று கூறும் இந்து மதவெறியர்களுக்கு ஆற்காட்டு நவாப்புகளின் வரலாறு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஆனால் அந்த மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போடுகிறார்கள் தஞ்சை மராத்திய மன்னர்கள். அதுவும் ஆர்.எஸ்.எஸ் கொண்டாடும் மராத்திய சிவாஜியின் வழி வந்த மன்னர்கள்!
பொதுவில் தஞ்சை மராத்திய மன்னர்களும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர். ஆனால் ஆற்காட்டு நவாபுக்கும் தஞ்சைக்கும் சிற்சில முரண்பாடுகள் இருந்தன. இந்தப் பின்னணியில் 1773ஆம் ஆண்டு ஆற்காட்டு நவாப் தஞ்சையின் மீது படையெடுப்பதற்குக் கம்பெனியின் உதவியைக் கோரினான். இரு படைகளும் தஞ்சையைத் தாக்கி அப்போது மன்னனாக இருந்த துளஜாஜியைச் சிறைப் பிடித்தன. ஆனால் 1776இல் கம்பெனி துளஜாஜியிடமே ஆட்சிப் பொறுப்பை மீண்டும் ஒப்படைத்தது.
ஹைதர் அலி, திப்பு சுல்தானை வெல்வதற்கு பூனாவை ஆண்டுவந்த மராத்திய பேஷ்வாக்களின் ஆதரவு கம்பெனிக்குத் தேவைப்பட்டதுதான் வெள்ளையர்களின் இந்த நியாய உணர்ச்சிக்குக் காரணம். இதனால் கைதி துளஜாஜி மீண்டும் மன்னனானான். கம்பெனிக்கு ஆண்டு தோறும் 12 லட்சம் ரூபாய் பாதுகாப்புக் கட்டணம் தருவதாகவும், தேவைப்படும் போது கோட்டை கொத்தளங்களைக் கம்பெனிக்கு அளிப்பதாகவும் ஒப்புக்கொண்டான். இப்படி கம்பெனி போட்ட பிச்சையில் உயிர் பிழைத்தது தஞ்சை மராத்திய வம்சம்.
இந்த "மராத்திய வீரன்' துளஜாஜி 1787ல் செத்துப் போனான். இவனது தத்துப் புத்திரன் சரபோஜிக்கும், துளஜாஜியின் காமக்கிழத்திகளில் ஒருத்தியின் மகனான அமர் சிங்குக்கும் பதவிச்சண்டை எழுந்தது. தீர்ப்பளிக்கும் பொறுப்பு "வேத சாஸ்திர வல்லுநர்களான' ஏழு பார்ப்பனப் பண்டிதர்களிடம் விடப்பட்டது. பண்டிதர்களை அமர் சிங் நன்றாக "கவனித்த'படியால் "சரபோஜியைத் தத்தெடுத்தது சாஸ்த்திரத்துக்கு விரோதமானது' என்று அவர்கள் அறிவித்தார்கள். அமர்சிங் 10 ஆண்டுகள் நாடாண்டான். இடையில் இந்த விவகாரத்தில் கம்பெனி நுழைந்தது. ""சரபோஜியை மன்னனாக்கினால் தஞ்சாவூர் அரசை சுலபமாக விழுங்கலாம்'' என்று கம்பெனி கருதியது. அதே ஏழு பண்டிதர்களைக் கூப்பிட்டது கம்பெனி. சாஸ்திரங்களை ஆராய்ந்த அந்தப் பார்ப்பனர்கள் சரபோஜியைத் தத்து எடுத்தது செல்லும் என்று இப்போது தீர்ப்பு கூறினார்கள். காலனியாதிக்கமும் பார்ப்பனியமும் தாங்கள் ஒன்றுபடும் புள்ளியைக் கண்டறிந்தன. மயிரிழையில் சரபோஜியும் மன்னனானான்.
இனி, தஞ்சையை கம்பெனி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர வேண்டியதுதான் பாக்கி. இருந்தாலும் திப்புவைத் தோற்கடிப்பதற்காக மராத்திய பேஷ்வாக்களின் ஆதரவு தேவைப்பட்டதால் வெள்ளையர்கள் கொஞ்சம் தயங்கினார்கள். ஆனால் சரபோஜி தயங்கவில்லை. ""தனக்கு ஆட்சி செய்து அனுபவமில்லை என்பதால் கம்பெனியின் அதிகாரிகள் ஓரிரு வருடங்கள் ஆண்டு காட்டினால் பிறகு நானே பார்த்துக்கொள்வேன்'' என்று கம்பெனியிடம் உதவி கேட்டான் சரபோஜி. கடைசியாக 1799ஆம் ஆண்டு திப்பு தோற்கடிக்கப்பட, கம்பெனி தயக்கம் நீங்கியது. சரபோஜியிடமிருந்து நிரந்தரமாகவே ஆட்சியுரிமையை எடுத்துக்கொண்டது. 1799 அக்டோபர் 25 ஒப்பந்தப்படி 4000 சதுரமைல் கொண்ட தஞ்சை அரசு ஆங்கிலேயர்களின் கீழ் வந்தது. மன்னனுக்குரிய நிதி, நிர்வாக, நீதி உரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சரபோஜிக்குப் பென்ஷன் பணமாக வருடத்திற்கு ஒரு லட்சம் ஸ்டார் பக்கோடாவும், வரி வசூலில் ஐந்தில் ஒரு பங்கு தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
""கோட்டையில்லே கொடியும் இல்லே அப்பவும் நான் ராஜா'' என்று அவ்வப்போது மக்களுக்குத் தரிசனம் தருவதையும், தாசிகளைக் கொஞ்சுவதையும் தவிர வேறு வேலை இல்லாததால் பாட்டு, நடனம், ஓவியம், நூலகம் என்று கலை வாழ்க்கையில் காலம் தள்ள ஆரம்பித்தான் சரபோஜி. இன்றைக்கும் அரசியல்சமூக அக்கறையில்லாமல் கலைத்தவத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாட்டின் சிறுபத்திரிக்கை இலக்கியவாதிகளின் முன்னோடி என்று வேண்டுமானால் சரபோஜியைக் கூறலாம்.
இவ்வாறு கூறுவதனால் சரபோஜியை ஒரு மானமில்லாத கோமாளி என்று மட்டுமே கருதிவிடக்கூடாது. ஜூன் 1801இல் தீபகற்பக் கூட்டிணைவின் கிளர்ச்சி உச்சத்தில் இருந்தபோது கட்டபொம்மனின் தம்பி சிவத்தையா சரபோஜிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில், கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட தொண்டைமானின் துரோகம், பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பி 60,000 பேரைத் திரட்டி ஆறே நாளில் பாஞ்சைக் கோட்டையைக் கட்டிய சாகசம், அந்தப் போரில் 4 ஆங்கிலேயத் தளபதிகளைப் பிடித்துத் தூக்கிலிட்ட வீரம், தற்போது நடத்தி வரும் கொரில்லாப் போரின் வீச்சு அனைத்தையும் விவரித்து, இந்தத் தருணத்தில் மட்டும் நீங்கள் ஆதரித்தால் வெள்ளையரை ஒரேயடியில் ஒழித்து விடலாம் என்று உருக்கமாகக் கோருகிறார். ""எங்களுக்கு எதிராகப் படை அனுப்புகிறீர்களே, இது நியாயமா?'' என்று முறையிடுகிறார். ""நீங்களும் தொண்டைமானும் உதவாவிட்டாலும் பரவாயில்லை, நடுநிலையாவது வகிக்கக் கூடாதா?'' என்று மன்றாடுகிறார்.
செவத்தையாவின் இந்தக் கடிதத்தையும் அதைக் கொண்டு வந்த தூதனையும் கைது செய்து வெள்ளை யனிடம் ஒப்படைக்கிறான் சரபோஜி. தன்னிடம் மிச்சமிருந்த படையையும் வெள்ளையனுக்கு ஆதரவாக அனுப்பி வைக்கிறான். அற்பன் போலத் தோற்றமளிக்கும் சரபோஜியின் உண்மையான கொடூர முகம் இந்த நடவடிக்கையில் வெளிப்படுகிறது.
தியாகிகளுடைய செயலை அவர்களது தன்மானம், நாட்டு நலன், மக்கள் நலன் போன்றவை தீர்மானித்தன. துரோகிகளோ தங்களது அரண்மனை ஆடம்பரத்தையும் சுகபோகத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக தன்மானம், அரசுரிமை, மக்கள் நலன் என எதை வேண்டுமானாலும் "தியாகம்' செய்யத் தயாராக இருந்தார்கள். துரோகத்திற்கோ, தியாகத்திற்கோ சாதி, மத, மொழிப் பிரிவினைகள் இல்லை. திப்புவும், ஆற்காட்டு நவாபும் முசுலீம்கள்; மருது சகோதரர்களும், தொண்டைமானும் தமிழர்கள்; கட்டபொம்மனும், எட்டப்பனும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். எனினும், இந்த அடையாளங்களால் அவர்கள் வரலாற்றில் இணைக்கப்படவில்லை.
திருவிதாங்கூர் மன்னன், மைசூர் உடையார், ஐதராபாத் நிஜாம் ... என இந்தத் துரோகிகளின் பட்டியல் நீள்கிறது. 500க்கும் மேற்பட்ட இந்திய சமஸ்தானங்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் துரோகிகளே. இறுதிவரையில் இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகவே செயல்பட்ட இவர்களுக்கு காங்கிரசு அரசு மானியம் வழங்கியது. அரண்மனை, மக்களைக் கொள்ளையிட்டு இவர்கள் சேர்த்த சொத்துக்களை வைத்துக் கொள்ளவும் அனுமதித்தது. துரோகிகளின் வாரிசுகள் தேசியக் கட்சிகளின் தலைவர்களாகவும் தொழிலதிபர்களாகவும் மாறி விட்டார்கள்.
மருதுவின் கோட்டை பாழடைந்து கிடக்கிறது. கோபால் நாயக்கரையும் தூந்தாஜி வாக்கையும் மக்களுக்கு யாரென்றே தெரியாது. இவர்களுக்கு வரலாற்று நூல்களிலும் இடம் கிடையாது. மைசூர் அரண்மனையில் ஆண்டுதோறும் தசரா நாளன்று, உடையார், தர்பார் நடத்துகிறார். தஞ்சைப் பெரிய கோயிலுக்கு சரபோஜியின் வாரிசுதான் பரம்பரை அறங்காவலர். சுதந்திர தினத்தன்று கவர்னர் மாளிகையின் முக்கிய விருந்தாளி ஆற்காட்டு இளவரசர்.
ஏனென்றால், இது துரோகிகளின் அரசு. விடுதலை வரலாற்றின் துரோகம் கம்பீரமாக அரியணையில் அமர்ந்திருக்க, தியாகம் புறக்கணிக்கப்படும் இந்த அவலம், தியாகிகளைக் கவுரவிக்கும் நினைவுச் சின்னங்களை எழுப்புவதால் மாறிவிடாது. காலனியாதிக்கத்திற்கு நினைவுச்சின்னம் எழுப்பப்படும் போதுதான் தியாகம் அதற்குரிய அரியணையில் கம்பீரமாக அமரும்.
இளநம்பி
""ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டுபுரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்குகள், சிப்பாய்கள் மற்றும் போர்க்கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் கீழ்க்கண்டவாறு தங்களது வீரத்தை வெளிப்படுத்த வேண்டும். ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்.''
1801ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சின்ன மருதுவின் திருச்சி
அறிக்கையில் இருந்து.
சின்ன மருது விடுத்த அறைகூவலை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தம் சொந்த அனுபவத்தில் உணர்ந்தார்கள், தென்னகத்தின் சிப்பாய்கள். 18001801 ஆம் ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் மருது சகோதரர்கள், தூந்தாஜி வாக், கோபால் நாயக்கர், கானி ஜ கான் முதலியோர் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி தியாகிகளானார்கள். ""இனி எதிர்ப்பவர்கள் எவருமில்லை'' என்று ஆங்கிலேயர்கள் இறுமாந்திருந்த நேரம். அந்த இறுமாப்பை மின்னெலெனத் தோன்றிய ஒரு வாளினால் கிழித்துச் சென்றது 1806இல் வெடித்த வேலூர் சிப்பாய்க் கிளர்ச்சி.
""மீசையைக் குறைக்கவேண்டும், புதிய தலைப்பாகையொன்றை அணிய வேண்டும், கடுக்கன், காப்பு முதலான அணிகலன்கள் அணியக்கூடாது'' என்றெல்லாம் சிப்பாய்கள் மீது வெள்ளையர்கள் விதித்த நடை, உடை, பாவனை குறித்த கட்டுப்பாடுகளே வேலூர்க் கிளர்ச்சிக்குக் காரணமென்று கருதுவது அறிவீனம்.
ஒரு இராணுவத்தில் வீரர்கள் கலகம் செய்வதென்பது வெறும் ராணுவக் கட்டுப்பாட்டை மீறிய ஒழுங்கீனம் குறித்த பிரச்சினையல்ல. பாரிய சமூகக் காரணிகளின்றி, ஆளும் வர்க்கத்தின் படைப் பிரிவுக்குள்ளேயே ஒரு கலகம் தோன்றிவிடுவதில்லை. 1946 பம்பாய் கடற்படை வீரர்களின் எழுச்சி, சீக்கிய மக்கள் மீதான அரச பயங்கரவாதம் மற்றும் பொற்கே7õவில் இராணுவ நடவடிக்கைக்கையைத் தொடர்ந்து சீக்கிய ரெஜிமண்ட்டில் நடந்த கலகம், வியட்நாம் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக அமெக்க வீரர்களிடையே எழுந்த எதிர்ப்புணர்வு முதலிய "சிப்பாய்க் கலகங்கள்' இராணுவத் திற்குள் எழுந்த பிரச்சினைகளால் உருவானவை அல்ல; இராணுவத்திற்கு வெளியே சமூகத்தில் நிலவும் அரசியல் முரண்பாடுகளும் போராட்டங்களும் தோற்றுவிக்கும் உணர்வுதான் கலகம் செய்வதற்குரிய தார்மீக பலத்தையும் தைரியத்தையும் ஒரு சிப்பாய்க்கு வழங்குகின்றன.
1800 1801ஆம் முதல் இந்தியச் சுதந்திரப் போருக்குப் பின் தென்னிந்தியாவின் கணிசமான பகுதிகள் கம்பெனியின் பிடிக்குள் வந்துவிட்டன. அப்போது கம்பெனியின் இராணுவத்தில் சுமார் 50,000 இந்தியச் சிப்பாய்கள் இருந்தனர். இவர்களுக் கெல்லாம் வெள்ளையர்களை விடச் சம்பளம் குறைவு, சுபேதார் பதவிக்கு மேல் பதவி உயர்வும் இல்லை என்பதுடன் சிறு தவறுகளுக்குக்கூட மிகக்கடுமையாகத் தண்டிக்கப்பட்டார் கள். இத்தகைய பாகுபாடு குறித்த வெறுப்பு படைவீரர்களிடம் இருந்தது. வெற்றிகள் தந்த இறுமாப்பு வெள்ளையனிடம் சிப்பாய்களிடமோ அடிமைத்தனம் சுமத்திய அவமான உணர்ச்சி. இதுதான் கம்பெனியின் இந்திய இராணுவம். அதிலொரு பிரிவுதான் வேலூர்க் கோட்டை.
வேலூர்க் கோட்டையில் 1800 சிப்பாய்களும் 400 வெள்ளையர்களும் இருந்தனர். வேலூரில் இருந்த 23ஆவது ரெஜிமண்ட்டின் 2ஆவது பட்டாலியன் முழுவதிலும், முதல் பட்டாலியனின் 6 கம்பெனிகளிலும் திருநெல்வேலிச் சீமையிலிருந்து 1801ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட வீரர்கள் நிறைய இருந்தனர். மற்ற பிரிவுகளில், தமது மன்னனின் தியாகத்தை இன்னமும் மறக்க இயலாத திப்புவின் இராணுவத்தைச் சேர்ந்த வீரர்களும் விரவியிருந்தனர்.
இந்த வீரர்கள் எவரும் கம்பெனி இராணுவத்தில் விரும்பிச் சேர்ந்தவர்கள் அல்லர். தெற்கத்திப் பாளையங்கள் கம்பெனியின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தவுடனேயே நிலவரி 100 சதம் உயர்த்தப்பட்டதால், விவசாயம் அழிந்து பஞ்சங்கள் தொடர்கதையாகி மக்களைத் துயரத்திலாழ்த்தின. இந்நிலையில் மக்கள் பலருக்கு அன்று கிடைத்த ஒரே வேலை வாய்ப்பு கம்பெனி ராணுவம்.
1801 ஆம் ஆண்டுதான் மருது சகோதரர்களும், ஊமைத்துரையும், சிவத்தையாவும் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர். அந்த மாபெரும் வீரர்களின் தியாகத்தையும், வெள்ளையர்களின் பயங்கரவாதத்துக்கு இலக்கான தங்களது உற்றார் உறவினர்களின் துயரத்தையும், நெல்லைச் சீமையிலிருந்து வந்த வீரர்கள் எப்படி மறந்திருக்க முடியும்? "மீசையை எடு' என்ற உத்தரவு எஞ்சியிருக்கும் அவர்களுடைய தன்மானத்தின் மீது தொடுக்கப்பட்ட இறுதித்தாக்குதல்.
திப்புவின் ஆறு மகன்களையும், எட்டு மகள்களையும் நூற்றுக்கணக்கான அவரது உறவினர்களையும் வேலூர்க் கோட்டையின் அரண்மனைகளில் சிறை வைத்திருந்தது கம்பெனி அரசு. சிறைப்பட்டிருந்த போதிலும் அரண்மனை வாழ்வு அவர்களைச் சுகபோகிகளாகவும், மந்தபுத்தி உடையவர்களாகவும் மாற்றி விடும் என்று எதிர்பார்த்தார்கள் வெள்ளையர்கள்.
ஆனால், திப்புவின் மூத்தமகன் ஃபத்தே ஹைதரும், மூன்றாவது மகன் மொஹியுதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும் சிறையிலிருந்தபடியே சிப்பாய்களின் ஆங்கிலேய எதிர்ப்புணர்ச்சியை அரசியல் ரீதியாகப் பட்டை தீட்டிக்கொண்டிருந்தனர். சிறை வைக்கப்பட்ட நாளிலிருந்தே தூந்தாஜி வாக்குடனும், மைசூரில் கிருஷ்ணப்பா நாயக் தலைமையில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பாளையக் காரர்களுடனும் தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களது போராட்டத்தை ஊக்கப்படுத்தி வந்தார் ஃபத்தே ஹைதர்.
இதுபோக மைசூர்ப் பகுதியில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய 3000 மக்கள் வேலூர்க் கோட்டையின் சுற்றுவட்டாரத்தில் குடியேறியிருந்தார்கள். திப்புவின் மைசூரைச் சேர்ந்த ஃபக்கீர்கள் எனப்படும் ஏழை இசுலாமியச் சாமியார்கள் வேலூர் வட்டாரங்களில் வெள்ளையர்களை எதிர்த்து "மீண்டும் திப்புவின் அரசை நிறுவுவோம்' என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தும், பாடியும், பொம்மலாட்டம் நடத்தியும் வந்தனர். வேலூர்க் கோட்டை கிளர்ச்சியின் கொதிகலனாக மாறிக் கொண்டிருந்தது.
இந்நிலையில்தான் ஆங்கிலேயத் தளபதிகள் கிராடோக், அக்னியூ முதலியோர் "தலைப்பாகை, மீசை' குறித்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகின்றனர். இவை தம்மை ஐரோப்பிய அடிமைகளாக்கும் சதித்திட்டம் என சிப்பாய்கள் குமுறுகின்றனர்.
இந்த கர்னல் அக்னியூ என்பவன் தான் மருது சகோதரர்களையும், ஊமைத் துரையையும் நரவேட்டையாடியவன் என்பதால் இவன் மேல் சிப்பாய்கள் கூடுதலாக வெறுப்புக்கொண்டிருந்தனர். வேலூரிலும், வாலாஜாவிலும் இருந்த சிப்பாய்கள் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய தலைப்பாகைகளை அணிய மறுத்துக் கலகம் செய்கின்றனர். இதைத் தூண்டிவிட்ட சுபேதார் வேங்கடநாயர் (ஏற்கெனவே திப்புவிடம் பணிபுரிந்தவர்) கைது செய்யப்படுகிறார். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இரண்டு ஹவில்தார்களுக்கு 900 கசையடிகள் தரப்படுகின்றன. ஒரு தலைப்பாகை பற்றிய பிரச்சினைக்கு வெள்ளையர்கள் அளித்த இந்தக் கொடூர தண்டனைகள் சிப்பாய்களின் தன்மான உணர்ச்சியை மேலும் தூண்டி விடுகின்றன.
அந்தத் தன்மான உணர்ச்சி அரசியல் போராட்டமாக மாறுகிறது. "இனி, மீசையும் தலைப்பாகையும் பிரச்சினை யல்ல, கம்பெனி ஆட்சிக்கு முடிவு கட்டுவதுதான் பிரச்சினை' என்று மாறுகிறது சிப்பாய்களின் போராட்டம். ""வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றி எட்டு நாட்கள் வைத்திருந்தால் போதும், மீண்டும் திப்புவின் ஆட்சியை நிலைநாட்டலாம்'' என்று சிப்பாய்களும், திப்புவின் வாரிசுகளும் முடிவெடுக்கின்றனர். அதன் பின் சிப்பாய்களின் இரகசியக் கூட்டங்கள் நடக்கின்றன. சிப்பாய்கள் வாள் மற்றும் குர்ஆன் மீது சத்தியம் எடுத்துக்கொண்டு சபதத்தை நிறைவேற்றுவதாய் உறுதி எடுக்கின்றனர். இந்தச் செய்தி வேலூரில் மட்டுமல்ல, வாலாஜா, ஆற்காடு, சென்னை, ஜதராபாத் முதலிய இராணுவ முகாம்களில் இருக்கும் வீரர்களுக்கும் ரகசியமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஏனைய முகாம்களில் இருக்கும் வீரர்கள் வேலூர்க்கோட்டையின் வெற்றியைத் தெரிந்து கொண்டதும் கிளர்ச்சி செய்ய வேண்டும் என முடிவு செய்யப் படுகிறது.
சுபேதார் ஷேக் ஆதமும், ஜமேதார் ஷேக் ஹுசைனும் சிப்பாய்களின் தலைவர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 1806 ஜூன் 17 அன்று எழுச்சியைத் தொடங்க வேண்டும் என நாள் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்தத் திட்டம் முஸ்தபா எனும் துரோகிச் சிப்பாயின் மூலம் வெள்ளையர் களுக்குக் கசிந்து விடுகிறது. வெள்ளையர்கள் அதை நம்பவில்லை. என்றாலும் பாதுகாப்பு கருதி கிளர்ச்சிச் தலைவர்கள் திட்டத்தை ஜூலை 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறார்கள். இந்தத் தள்ளி வைப்பு ஏனைய முகாம்களி லிருந்த வீரர்களுக்குத் தெரியாததால் ஜூன் 17 அன்று திட்டமிட்டபடி எழுச்சி தொடங்காதது அவர்களிடம் விரக்தி யையும் ஏற்படுத்தியிருந்தது.
இருப்பினும், ஜூலை 10 ஆம் தேதி கிளர்ச்சி வெடித்தது. 9ஆம் தேதி இரவு அமைதியாக இருந்ததால் படை முகாமைச் சுற்றிப்பார்க்கும் பொறுப்பை வெள்ளைத் தளபதிகள் இந்திய அதிகாரிகளிடமே ஒப்படைத்தனர். வேலூர்க் கிளர்ச்சியில் சிப்பாய்கள் மட்டுமல்ல, கம்பெனிப் படையின் இந்திய அதிகாரிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதக் கிடங்கைக் காவல் காத்துநின்ற வெள்ளைக்கார வீரர்களைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றி அதிகாலை 2 மணிக்கு கிளர்ச்சியைத் தொடங்குகின்றனர் சிப்பாய்கள். பின்னர் வெள்ளையர்களின் குடியிருப்புக்களை நோக்கிச் சுடத் தொடங்குகின்றனர். அத்தகைய சூழ்நிலையிலும் பெண்கள், குழந்தைகளின் மீது சிப்பாய்களின் விரல் கூடப்படவில்லை. 14 அதிகாரிகள் உட்பட 150க்கும் மேற்பட்ட வெள்ளையர்கள் இந்தியச் சிப்பாய்களால் கொல்லப்பட்டனர். அவர்களில் வேலூர்க் கோட்டையின் ஆணை அதிகாரி கர்னல் பான்கோர்ட்டும், லெப்டினண்ட் கர்னல் கெராஸ்ஸூம் முக்கியமானவர்கள். மீதமிருந்த வெள்ளையர்களில் பலர் படுகாயமடைந்தனர். சிலர் கோட்டை யின் தடுப்புச் சுவரருகே பதுங்கிக் கொண்டனர்.
கிளர்ச்சி திட்டமிட்டபடி தொடங்கியவுடனே, வெள்ளையர் களின் கொடி இறக்கப்பட்டு திப்புவின் கொடி கோட்டையில் ஏற்றப்படுகிறது. வீரர்கள் திப்புவின் மகனை ""வாருங்கள் நவாப்! வாருங்கள், அச்சமின்றி அரியணை ஏறுங்கள்'' என்று அறைகூவினர். ஆனாலும் இந்தச் சுதந்திரப் பிரகடனம் நெடுநேரம் நீடிக்கவில்லை. அதிகாலை ஆறு மணிக்கே வேலூர் கிளர்ச்சி குறித்த செய்தி அருகில் 14 மைல் தொலைவில் இருந்த ஆற்காட்டை எட்டிவிட்டது. அங்கு ஆணை அதிகாரியாக இருந்த கர்னல் கில்லெஸ்பி பெரும் படையுடன் காலை எட்டு மணிக்கு வேலூர்க் கோட்டைக்குள் நுழைந்துவிட்டான். எதிர்த்தாக்குதல் இவ்வளவு சீக்கிரம் இருக்கும் என்பதைச் சிப்பாய்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அணிதிரண்டு தயாராவதற்குள் கில்லெஸ்பியின் படைகள் பயங்கர வாதத்தைக் கட்டவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டன.
வேலூர்க் கோட்டையைப் பிடித்து எட்டு நாட்கள் வைத்திருக்கத் திட்டமிட்டிருந்த சிப்பாய்கள், அதனை எட்டு மணிநேரம் கைப்பற்றி வைத்திருப்பதற்கே தங்கள் இன்னுயிரைத் தரவேண்டியிருந்தது. சில சிப்பாய்கள் தங்கள் முதன்மை நோக்கத்தை மறந்து சூறையாடலில் ஈடுபட்ட போதும், சில சிப்பாய்கள் கோட்டையை விட்டு வெளியேறிய போதும், பல சிப்பாய்கள் சுதந்திர ஆவேசத்துடன் சாகும் வரையிலும் போரிட்டனர். அவர்களைச் சுட்டுக்கொன்றும், தூக்கிலேற்றியும், பீரங்கி வாயில் வைத்துச் சிதறடித்தும் மகிழ்ந்தன வெள்ளைப் படைகள்.
அந்தக் கொடூரத்தை ஆர்தர் சி.ஃபாக்ஸ் எனும் மாஜிஸ்திரேட் குதூகலத்துடன் பின்வருமாறு விவரிக்கிறான்:
""சிப்பாய்களைப் பீரங்கிகளால் சிதறடித்து மரண தண்டனையை நிறைவேற்றியது மிக ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு ஏராளமான பருந்துகள் வந்தன; அந்த ரத்தக் களறியான விருந்திற்காகவே ஆவலு டன் காத்திருந்ததுபோல் சிறகடித்துக் கிறீச்சிட்டன; பிறகு பெருத்த வெடியோசை எழுந்து அவர்களது உடல்கள் துணுக்குகளாகச் சிதற, அந்தத் துணுக்குகள் தரையைத் தொடுவதற்கு முன் பாய்ந்து கொத்திச் சென்றன, பல கழுகுகள். பணியில் இருந்த உள்நாட்டுத் துருப்புகளும் தண்டனையைப் பார்க்கத் திரண்டிருந்த கூட்டமும் இந்தக் காட்சியைப் பார்த்துப் பீதியில் அலறினார்கள்.''
இந்து, முசுலீம், தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி என்ற பேதமின்றி, "வெள்ளையர்களை வெளியேற்றவேண்டும்' என்ற உயரிய குறிக்கோளுக்காகக் களப்பலியான சுமார் 800 சிப்பாய்களின் குருதி வேலூர்க் கோட்டை அகழியில் கலந்தது. விடுதலைத் தாகத்திற்காகத் தமது குருதியைத் தாரை வார்த்த அந்த வீரர்களால் வேலூர்க் கோட்டை அதிர்ந்து சிவந்தது.
1799இல் கட்டபொம்மன் தூக்கில் தொடங்கி, 1800 1801ஆம் ஆண்டு களில் கிளர்ந்தெழுந்த தென்னிந்தியச் சுதந்திரப் போரின் இறுதி மூச்சு வேலூர்க் கோட்டையில் அடங்கியது. அணைவதற்கு முன் பிரகாசமாய் மூண்டெழுந்த அந்தத் தீ தணிந்தது. ஆயினும் அரை நூற்றாண்டுக்குப் பின் மீரட்டில் மூண்டெழுவதற்காக உள்ளே கனன்று கொண்டிருந்தது கங்கு.
சாத்தன்