தமிழ் அரங்கம்

Saturday, August 12, 2006

திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல

திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல

பி.இரயாகரன்
12.08.2006

யுத்தத்தின் பெயரில் நடந்தது இனவழிப்பே. இதைப் புலிகள் தொடங்கி வைக்க, பேரினவாதம் முடித்துவைக்க முனைகின்றது. உண்மையில் இரண்டு இராணுவங்கள் மோதவில்லை. திருகோணமலையில் இருந்து தமிழ்மொழி பேசும் மக்களை விரட்டியடிக்கும் பேரினவாத திட்டத்துக்கு இணங்க, புலிகள் நடத்திய வெறியாட்டம் தான் மூதூர்ச் சம்பவம். வெறும் முஸ்லீம் மக்களை மட்டுமல்ல, தமிழ் மக்களையும் அந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கும் வகையில், அந்த மக்களை அந்த மண்ணில் சிறுபான்மை இனமாக்கும் வகையில், அவர்களின் சமூக பொருளாதார வாழ்வைச் சிதைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் தான், இந்த புலி வெறியாட்டம் நடாத்தப்பட்டது. மக்கள் தமது வாழ்வை இழந்து, எல்லை கடந்து நாடோடிகளாகவே ஒடிக்கொண்டிருக்கின்றனர். யாரும் இவர்கள் எமது மக்கள் என்று கூறிக் கொண்டு, அவர்களைப் பாதுகாக்கக் கூட முனையவில்லை.

அண்மைக் காலத்தில் திருகோணமலையில் இருந்து தமிழ் மக்களை அகதியாக இந்தியாவுக்கு புலிகள் விரட்டிக் கொண்டிருந்தனர். அது நிறுத்தப்பட்ட நிலையில் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இன்று முதூர் தாக்குதல் மூலம் மறுபடியும் அந்த மக்களை எல்லை கடந்து ஓட விரட்டுகின்றனர். தமிழ், முஸ்லீம் மக்கள் தமது வாழ்வை புலிகளின் கொடூரமான புலிப் பசிக்கு இரையாக்கி வாழ்விழந்து நாடோடியாகின்றனர். இந்த புலிப் பின்னணியில் பேரினவாதமே வெற்றிகரமாக இலாபம் அடைகின்றது என்றால், புலிகளைக் குப்புற வீழ்த்தி வழிநடத்துபவர்கள் யார்? எடுப்பார் கைப்பிள்ளையாக செயற்படும் புலிகளின் கடந்தகால நடடிவக்கைகளின் பின்னணியில், அன்னிய சக்திகளால் வழிகாட்டப்பட்ட வரலாறுகளை புலிகளே ஒத்துக்கொண்ட உண்மையின் அடிப்படையில், இதை இன்று நாம் ஏன் பார்க்கமுடியாது?

தண்ணீரை மூடுவதும், திறந்து விடுவதுமாக நடத்திய நாடகத்தின் பின்னணியில் தான் மூதூர் தாக்குதலை புலிகள் முன்கூட்டியே திட்டமிட்டனர். முஸ்லீம் மக்கள் மீதான புலிகள் திட்டமிட்டு நடத்திய வெறியாட்டத்தில் அண்ணளவாக 1000 பேரளவில் கொல்லப்பட்டனர். இதில் கணிசமான அளவுக்கு தமிழரும் அடங்குவர். மிக குறுகிய காலத்தில், மிக மோசமான ஒரு இனவெறியாட்டத்தை நாம் சமகாலத்தில் காணமுடியாது. 1983 இனக்கலவரத்துக்கு பிந்திய, அதேயொத்த ஒரு மக்கள் அழிவையும், பழிவாங்கலையும் ஏற்படுத்திய ஒரு காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கையாகும் இது. மிகக் குறுகிய காலத்தில், மிகவும் திட்டமிட்ட வகையில், பாரிய படுகொலைகள் முதல் அந்த சமூகத்தின் இருப்பையே அழிக்கும் வண்ணம், அவர்களின் வாழ்விடங்களையே சிதைத்து அனைத்தையும் சின்னாபின்னமாக்கியுள்ளனர். அங்கு வாழ்ந்த மக்கள், மீண்டும் அங்கு சென்று வாழமுடியாத அளவுக்கு தொடர்ச்சியாகவே, கடுமையான ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். புலிவெறியாட்டத்துக்கு புலம்பெயர்ந்த அகதிகள் மீண்டும் சொந்த பிரதேசத்துக்கு சென்று வாழமுடியாத அளவுக்கு, இனவழிப்பு எச்சரிக்கையை தொடர்ச்சியாக புலிகள் ஆணையில் வைத்துள்ளனர். குறிப்பாக இராணுவம் மற்றும் புலிகளின் வக்கிரமான வெறியாட்டத்துக்கு உள்ளாகிய வண்ணம் இப்பிரதேசம் உள்ளது. இப்பிரதேசம் சூனியப்பிரதேசமாக மாறி நிற்கின்றது. பேய்களும், நாய்களும் தமது சொந்த வக்கிரத்தையே ப+ர்த்தி செய்கின்றன. நீண்டகால நோக்கில் இதில் இலாபம் அடைவது நிச்சயமாக பேரினவாதம் தான். தமிழ்மொழி பேசும் மக்களின் இடப்பெயர்வுக்கு, தமிழ் முஸ்லீம் என்ற பாகுபாட்டை பேரினவாதம் வேறுபடுத்துவது கிடையாது.

1995 இல் புலிகளின் நிர்பந்நத்தால் நடந்த யாழ் இடப்பெயர்வு கூட, மக்களை இந்தளவுக்கு சிதைத்து சின்னாபின்னமாகியது கிடையாது. அந்த இடப்பெயர்வு குறுகிய கால அவகாசத்துடன் திட்டமிடப்பட்டதாக மாறியது. யாழ் மீதான இராணுவப் படையெடுப்பின் போது கூட, இந்தளவுக்கு உயிர் அழிவும் மனித அவலமும் ஏற்பட்டது கிடையாது. நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு, முஸ்லீம் மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் புலிகளால் நடாத்தப்பட்டது. அந்தளவுக்கு முஸ்லீம் மக்கள் மீது புலிகள் நடத்திய மிலேச்சத்தனமான மன்னிக்க முடியாத இந்த தாக்குதல், அவர்களின் கடந்தகால நிகழ்கால முஸ்லீம் விரோத நடவடிக்கையின் மற்றொரு அங்கமாகத் தான் இதனை நிறைவேற்றினர்.

இந்தத் தாக்குதல் திட்டம் முன்கூட்டியது. மே மாதம் இறுதியில் புலிகளின் மக்கள் அமைப்புகளின் பெயரில், எது நடக்கவுள்ளதோ அதை முன் கூட்டியே கூறி விடுத்த அச்சுறுத்தும் துண்டுபிரசுரம் சரி, 04.06.2006 வீரகேசரி பத்திரிகையில் வெளியான துரைரட்ணசிங்கம் எம்.பி மூதூர் பற்றி வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும் திடட்மிட்ட நடவடிக்கையின் ஒரு அம்சமாகும். இவை திடட்மிட்ட ஒரு இனவாத அழித்தொழிப்பு வெறியாட்ட நடவடிக்கைக்கு முன்னோடியான ஒரு சில சமிக்கையாகும்.

புலிகள் இதை முஸ்லீம் மக்கள் மீதான வெறியாட்டமாக நடத்தி முடிக்க, இராணுவம் அதை மேலும் சுத்தமாக்கி வருகின்றது. அத்துடன் இராணுவம் மேலும் ஒருபடி சென்று, போகிற போக்கில் இதற்குள் அனைத்தும் அமிழ்ந்து போகும் வண்ணம், இனச் சுத்திகரிப்பை நடத்துகின்றனர்; மூதூரைக் கடந்த பிரதேசத்தில் இருந்தும் தமிழ் மக்கள விரட்டியடிக்கின்ற வகையில் ஒரு துடைத்தொழிப்பை இராணுவம் நடத்துகின்றது. முஸ்லீம் மக்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியவராத ஒரு நிலையில், தமிழ் மக்களுக்கு என்ன நடக்கின்றது என்ற அவலமும் தெரியாது புதைந்து போகின்றது. அந்தளவுக்கு தமிழ் ஊடகவியல் படுசேற்றில் புதைந்து மூச்சிழுக்கின்றது. திருகோணமலையில் தமிழ்மொழி பேசுகின்ற முஸ்லீங்கள் தமிழர்கள், பூசாரிகளின் பேயாட்டத்துக்கு ஏற்ப குடியெழுப்பப்பட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர். காயடிக்கப்பட்ட தேசியம் தனது மலட்டுத்தனத்தால் எதையும் உயிர்பிக்கும் ஆற்றலற்று வக்கிரமாகி பேயாட்டமாடுகின்றது.

முஸ்லீம் மக்களை தமிழ் மக்களின் ஒரு அங்கமாக காட்டியபடி நடத்தும் இதுபோன்ற தொடர் ஒடுக்குமுறைகள், முடிவின்றி நடக்கின்றது. தமிழ் மக்களின் போராட்டத்தில் முஸ்லீம்கள் இலாபம் பெற முனைவதாக வக்கரித்து உறுமும் குறுந் தேசிய வக்கிரங்களை, சதா காதுகொடுத்து கேட்கின்றோம். அந்த மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான மிலேச்சத்தனமான வெறியாட்டம், யாழ் முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்தை விடவும் மிகமோசமான வகையில் மீண்டும் அரங்கேறியுள்ளது. இதன் பின்பும் கூட, தமிழ் மக்களின் ஒரு அங்கம் தான் முஸ்லீம்கள் என்று கூறவும் கூட செய்கின்றனர்.

இராணுவம் மீதான தாக்குதல் என்ற பெயரில் புலிகள் நயவஞ்சகமாக தொடர்ச்சியாக நாடகமாடுகின்றனர். நாடகமாக நடத்தியது முஸ்லீம் மீதான அழித்தொழிப்புத் தான். கொல்லப்பட்ட முஸ்லீம் மக்கள் பற்றியோ, அவர்களின் அவலநிலையையிட்டு எந்தவிதமான அக்கறையுமற்ற வக்கிரமே தமிழ் ஊடகவியலில் அரங்கேறுகின்றன. உண்மையில் மூதூரில் புலிகள் நடத்தியது, முஸ்லீம் வாழ்விடங்களை தாம் மட்டும் நாசமாக்கி அழிக்கும் வண்ணம் புலிகளின் நடவடிக்கைகள் அமையவில்லை. மாறாக இராணுவத்தின் தாக்குதலிலும் முஸ்லீம் வாழ்விடங்கள் அழியும் வண்ணம் தாக்குதலை நகர்த்தினர். அதாவது இராணுவத்தைக் கொண்டு அழிக்கும் வண்ணம், தாக்குதல் வியூகம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருந்தது. இராணுவத் தாக்குதலை முஸ்லிம் குடியிருப்புகள் ஊடாக நகர்த்தி முழுமையாக மூதூரை நாசமாக்கி மக்களை கொன்று போட்டனர். இப்படி ஒரு இனஅழிப்பு யுத்தம், எமது இனவாத அரசியல் வரலாற்றில் முதன் முறையாக நடத்துள்ளது. யார் தாக்குகின்றனர் என தெரியாத வகையில், குண்டு பொழிவுகளுக்கு இடையில் மூதூர் அழிக்கப்பட்டது. யார் கொல்லுகின்றனர் என்று தெரியாத வண்ணம் கொலைகார நடத்தைகள் தூண்டப்பட்டது. மக்களை பாதுகாப்பது, மக்களை விலத்தி தாக்குதலை நடத்துவது என்பதற்கு மாறாக, அதையே தேடிச் செய்வதே அரங்கேறியது.

குண்டுமாரிக்கு இடையில் அந்த மக்கள் வெளியேற விடாது தடுத்த புலிகள் அதற்கு அவர்களை இரையாக்கினர். அகதியாக தங்கிய இடங்களில் கூட, அந்த மக்களுக்கு நிவாரணம் கிடைக்காத வண்ணம் தடுக்கப்பட்டனர். இந்த நிலையில் பிரஞ்சு தன்னார்வ நிறுவன தொண்டர்களின் இனம் கடந்த மனிதாபிமான செயற்பாடுகள், புலிகளுக்கு சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது. புலிகளின் வழமையான பாணியில் பதிலடி எதிர்பார்க்கக் கூடியதுதான். அவர்கள் யாரால் கொல்லப்பட்டனர் என்ற பின்னனி மர்மமாக இருந்த போதும், இந்த செய்தி முதலி;ல் வெளிவந்த காலம், முதல் முதலில்; இதை அறிவித்த ஊடகங்களின் பின்னணியால் ஊகங்கள் மேலும் சிக்கலுக்குள்ளாகின்றது. இதை புலிகள் ஏன் செய்யமாட்டார்கள் என்று தர்க்க ரீதியாக கூற முடியாத அளவுக்கு, இது போன்ற கொலைகளை புலிகள் செய்வதில்லை என்று கூறுவதற்கு, எந்தத் தார்மிகப் பலத்தையும் கடந்த வரலாற்றில் நாம் காணமுடியாது. அந்தளவுக்கு புலிகளிடம் அரசியல் நேர்மையும் கிடையாது. புலிப் பாசிச குதர்க்கத்தையும், கொச்சைத்தனத்தையும் தாண்டி, இராணுவமும் இது போன்ற கொலை வெறியாட்டங்களை நாசுக்காகவே நடத்திவிடுவது சதா நிகழத்தான் செய்கின்றது.

எல்லாம் புலியாக முன்பு, கொலையே அரசியலாக முன்பு, ஒவ்வொரு கொலையும் யாரால் எதற்கு ஏன் செய்யப்பட்டது என்ற சந்தேகம் யாருக்கும் எழுந்ததில்லை. ஆனால் இன்று அப்படி உறுதியாக கூறமுடியாத அளவுக்கு, கொலைக் கலாச்சாரமே தமிழ்தேசிய அரசியலாகிவிட்டது. இன்று கொலைகளைச் செய்து உலகை தம்பக்கம் வென்றுவிட முடியும் என்ற நப்பாசையில் பல்லிளித்து ஆட்டம் போடுகின்றனர். ஈனத்தனமாக விகாரமான கொலைகளைச் செய்து, அதை படம்பிடித்து உலகுக்கு காட்டுவதன் மூலம், உலகத்தினை தம்பக்கம் வளைத்து தமக்கு சார்பாக மாற்றமுடியும் என்ற தமிழ் தேசிய அரசியல் இன்று அரங்கேறிவருகின்றது. இந்த நிலையில் இந்தக் கொலையை தாம் செய்யவில்லை என்று இருதரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டுவதன் மூலம், இது போன்றவற்றை தாம் செய்வதாக மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றனர். இந்த நிலையில் உண்மை என்பதே கத்தி முனையின் கீழ் அந்தரத்தில் தொங்கிவிடுகின்றது.

இந்தநிலையில் முஸ்லீம் மக்கள் அகதியாகி மூதூரில் பொதுவிடங்களில் தஞ்சம் கோரிய நிலையில், அனைத்து உதவியும் மறுக்கப்பட்டது. குறைந்தபட்சம் தாமாக செயற்பட்டு இயங்க முனைந்த அடிப்படைகள் அனைத்தும் தடுக்கப்பட்டது. முன்னின்றவர்கள் கொல்லபட்டனர் அல்லது துரோகியாக காட்டி கடத்தப்பட்டனர். மக்கள் தாமாக முனைந்து தண்ணீர் குடிக்க முனைந்த போது கூட, புலிகளால் அனுமதி மறுக்கப்பட்டது. இப்படி திட்டமிட்ட முறையில் உருவேற்றப்பட்ட முஸ்லீம் விரோத வெறியுடன் புகுந்த புலி இராணுவம், அந்த மக்களைக் குதறியது. முஸ்லிம் மக்கள் விரோத உணர்வுடன் வெறியேற்றப்பட்டு நடத்திய வெறியாட்டம் ஒருபுறம் அரங்கேற, அதை தலையில் வைத்து நக்கிப் பிழைக்க ஆடுபவனின் முஸ்லீம் விரோத வக்கிரமோ கேவலமாக உலகெங்கும் அரங்கேறுகின்றது. இதுவே பல உண்மைகளை பளிச்சென்று நிரூபித்துவிடுகின்றது.

முஸ்லீம் துரோகி பற்றியும், எட்டப்பர் பற்றியும் மூக்கால் அழுது புலம்பும் ஓட்டுண்ணிப் பினாமிகள், எடுப்பார் கைப்பிள்ளையாகி முன்வைக்கும் நியாயப்படுத்தல்கள் தம்மையறியாமலேயே நிர்வாணமாகி தலைவிரிகோலமாகி விடுகின்றது. மூதூர் தாக்குதலை நியாயப்படுத்த, அதை முஸ்லீம் எட்டப்பர் மீதான தாக்குதலாக வாய் கூசாது உரைக்கின்றனர். சரி எட்டப்பர் இருந்தனர் என்று வைத்துக் கொள்வோம், அதற்காக ஒரு இனத்தையே சூறையாடுவது எப்படி நியாயமாகும். அதே நீங்கள் தானே, தமிழ் மக்கள் மத்தியில் எட்டப்பர் ஒழிப்பை 1986 முதலாக முடிவின்றி நாள் தோறும் நடத்துகின்றீர்களே. அப்படிச் செய்யும் நீங்கள் தமிழனை துரோகிகள் ஏன் கூறுவதில்லை. ஏன் அதை முஸ்லீம் மக்களுக்கு மட்டும் கூறுகின்றீர்கள். அடிவருடிகளாகி நக்கித் தின்னும் புலிப்பினாமிக் கூட்டம் இப்படி குரைத்தபடி, மனித அவலத்தின் மேல் சிலிர்த்து உறுமுகின்றனர்.

அதேநேரம் புலித்தலைவர்கள் தம்மை நலல்பிள்ளையாக காட்டிக் கொள்ள அறிக்கைகளை விடுகின்ற இன்றைய நிலையில், முஸ்லீம் மக்கள் மீதான பலிப்பும் அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும் என்ற வக்கிரத்தை, புலிகளின் பினாமிக் கும்பல் வசைபாடல் ஊடாக முன்வைக்கின்றது. இதை எழுத்திலும் ஆபாசமாக கொட்டித் தீர்க்கின்றனர். ஆனால் புலித் தலைவர்கள் நரிவேஷம் போட்டு ஊளையிட்டுக் கொண்டு, தம்மைத் புனிதராகவே சதா உலகுக்கு காட்டிக் கொள்ள முனைகின்றனர். குறைந்தபட்சம் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் அரசியல் நேர்மை என்பதே இந்த புலித் தேசியத்துக்கு கிடையாது என்பதை சதா நிறுவிக் கொள்கின்றனர்.

முஸ்லீம் மக்கள் மீதான திட்டமிட்ட வெறியாட்டத்தை, இராணுவம் தாக்குதல் சாhந்ததாக காட்டுகின்ற வகையில் பல தளத்தில் பலரால் கருத்துரைக்கப்படுகின்றது. இதில் புலியல்லாத தரப்பும், இதற்குள் தனது அரசியல் நேர்த்திக் கடனை நடத்துகின்றனர். இராணுவ வெற்றி தோல்வி பற்றி மயிர்புடுங்கும் வாதத் திறமை மூலம், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு இனத்துக்கு எதிரான பாரிய குற்றத்தை மூடிமறைத்து ஒரு வம்பு விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

புலிகள் நடத்திய வெறியாட்டம் முஸ்லீம் மக்கள் மீதானது என்ற உண்மையைக் கண்டு கொள்ளாத போக்கு, தமிழ் தரப்பு முழுவதும் இருட்டடிப்புக்குள்ளாகியுள்ளது. இதுவே ஆரம்பத்தில் முஸ்லீம் தரப்பிலும் காணப்பட்டது. முஸ்லீம் தலைவர்கள் ஆரம்பத்தில் இதை வெறும் இராணுவ யுத்தமாக காட்டி புலம்பினர். மெதுவாக ஆனால் காலம் தாழ்த்தியே முஸ்லீம்கள் மீதான புலிகளின் வெறியாட்டமே உண்மையில் நடந்தது என்று ஓப்புக் கொள்ளும் முஸ்லீம் தலைமைகள், அதன் முழுமையான பரிணாமத்தில் மனித அவலத்தை வெளிக்கொண்டு வரமுடியாத அளவுக்கு திணறுகின்றனர்.

மறுபக்கத்தில் முஸ்லீம் மக்களின் எல்லையில்லாத அவலம் சார்ந்த அந்தக் கண்ணீர்க் கதைகளை மீறி, அவை சமூகத்துக்கு புலப்படாத வகையில் சூனியமாகின்றது. புலிகளும் இராணுவமும் பரஸ்பரம் தொடங்குகின்ற யுத்தத்தை நோக்கி முன்முயற்சிகள், முஸ்லீம் மக்களின் அவலம் மழுங்கடிக்கும் வண்ணம் புதைசேற்றில் புதைக்கின்றது. முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலுக்கு மறுபக்கத்தில், அங்கு வாழ்ந்த தமிழ் மக்களும் சிந்திச் சிதறி சின்னாபின்னமாகிவிட்டனர். பொதுவான தாக்குதலில் எதுவெல்லாம் முஸ்லீம் மக்களுக்கு நடந்ததோ, அது தமிழ் மக்களுக்கும் நடந்தது. சொந்த வீட்டை இழந்து, தமது சொத்தை இழந்து, உற்றார் உறவினரை இழந்து, வீதிகள் தோறும் நாயாக அலைகின்றனர். உண்மையில் தமிழ் பிரதேசத்தில் தமிழ்மொழி பேசுவோரின் ஒரு குடிப்பெயர்வே நிகழ்ந்துள்ளது.

திட்டமிட்ட இனவாத சதியே இதன் பின் நிகழ்ந்துள்ளது. திருகோணமலையில் தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலை இல்லாததாக்கும் வகையிலும், அவர்களை மேலும் சிறுபான்மை இனமாக மாற்றுகின்ற நடிவடிக்கையைத் தான், புலிகள் ஊடாக பேரினவாதம் நடத்தி முடித்துள்ளது. பேரினவாதத்துக்கு இதை விட வேறு வடிவில் அந்த மக்களை வெற்றிகரமாக சிதைக்க முடியாது. புலிகளைக் கொண்டு அதை சிதைக்கின்றனர். இது தான் பேரினவாத்தின் மிகத்திட்டமிட்ட அரசியல்;. திருகோணமலை எப்படி சிங்கள இனவாதிகளின் ஆதிகத்துக்குள் சென்றது என்பதை, அதாவது அவர்கள் எப்படி பெரும்பான்மை ஆனார்கள் என்ற வரலாற்று ஆய்வில், புலிகளின் குறித்த இனவொழிப்பு நடவடிக்கையும் காரணம் என்பதை இனி வரலாற்றில் யாரும் மறுக்கமுடியாது.

நடப்பது, நடந்து கொண்டிருப்பது வெறுமனே முஸ்லீம் மக்கள் மேல் மட்டுமல்ல, தமிழ் மக்களும் திருகோணமலையை விட்டு ஒரு சில நாளில் தெரு நாயைப் போலே ஓட ஒட அடித்து விரடட்ப்படுகின்றனர். வாழவே வழியற்ற ஏழை எளிய மக்கள் தமது வாழ்வியலை இழக்க வைத்ததன் மூலம், திடட்மிட்டு அழித்தொழிக்கப்படுகின்றனர். முஸ்லீம் மக்களை புலிகள் முடிந்தவரை கொள்ளையிட்டனர். அவர்களின் வீட்டுச் சொத்துகளைக் கூட புலிகள் கடத்திச் சென்றனர். புலிகள் அங்கிருந்த வங்கிகளை மட்டும் கொள்ளையடிக்கவில்லை, முடிந்தவரை மக்களையும் கொள்ளையடித்தனர்.
மொத்தத்தில் இதன் பின்னணியில் புலிகளை வழிநடத்துவதில், ஒரு அன்னிய சதி உள்ளது. 1985 இல் அநுராதபுரத்தில் சிங்கள மக்கள் மீதான புலியின் இனவெறித் தாக்குதலை, அன்று தாம் செய்யவில்லை என்று மறுத்த புலிகள், பின்னாளில் இந்தியா கூறித்தான் நாம் செய்தோம் என்றனர். இதற்காக புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்கப்பட்டது என்று கூறினர். இதே போன்று புலிகளின் மூதூர் தாக்குதலின் பின், அதாவது இதை வழிநடத்துவதில், இனவாத சக்திகளுக்கும் அன்னிய சக்திகளுக்கும் தொடர்பு இருப்பதை மறுக்கமுடியாது. அந்தளவுக்கு திருகோணமலையில் தமிழ் மொழி பேசும் இரண்டு இன மக்களையும் அடித்து விரட்டிய, விரட்டிவரும் தொடர் நிகழ்வுகள், மறுபடியும் இதை உணர்த்திவிடுகின்றது. முஸ்லீம் மக்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ய, இராணுவம் அதைப் பயன்படுத்தி தமிழ் மக்களை திட்டமிட்டு இனச்சுத்திகரிப்பு செய்கின்றது. நடந்ததும், நடப்பதும் திருகோணமலையை தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை அழித்தொழிக்கின்ற ஒரு நிகழ்ச்சியை புலிகள் திட்டமிட்டு தொடங்கி வைக்க, அரசு அதை முடித்து வைக்க முனைகின்றது.

புலிகள் மீதான ஏகாதிபத்திய தடைகள்

புலிகள் மீதான ஏகாதிபத்திய தடைகள், எதைத்தான் உணர்த்த முனைகின்றது

காதிபத்தியம் மக்களின் எதிரி என்பதையும், புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் எப்படி ஏகாதிபத்தியத்துக்கு உதவுகின்றது என்பதையும் கண்டு கொள்ளும் போது இவை மக்களைச் சார்ந்து நிற்பதன் அவசியத்தையும் மீண்டும் எமக்கு உணர்த்துகின்றது. ஜனநாயகம், தேசியம் இரண்டுமே மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் பின்னிப்பிணைந்தது என்பதையும், இதை மறுக்கும் அனைவரையும் இனம் கண்டு எதிர்த்துப் போராடவும் கூட இது வழிகாட்டுகின்றது.


அண்மையில் புலிகள் மீதான தடைகள் கனடா முதல் ஐரோப்பா (மிதமான மட்டுப்படுத்தபட்ட வகையில் நடைமுறையில் கையாளுகின்றது) வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடைபற்றி புலிகள் ஒரு விதமாகவும், புலியெதிர்ப்பு அணி மற்றொரு விதமாகவும், மூன்றாம் தரப்பு வேறுவிதமாகவும் பார்க்கின்றனர். ஆனால் இதைப்பற்றி மூன்றாம் தரப்பு தமக்குள் ஒருமித்த அரசியல் பார்வையைக் கொண்டிருக்கவில்லை. இந்தத் தடையை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? இதை எப்படி எதிர்கொள்வது என்பது எம்முன்னுள்ள அடிப்படையான விடையமாகிவிட்டது.


ஒருபுறம் இலங்கை அரசு மறுபுறம் புலிகள் என இருவரும் மக்கள் விரோத செயற்பாட்டில் செயற்படுகின்ற ஒரு நிலையில், புலிகள் மட்டும் ஒருதலைப்பட்சமாக தடை செய்யப்பட்டுள்ள இன்றைய நிலையில், மூன்றாம் தரப்பு நடைமுறையில் செயற்படாத நிலையில், குழப்பம் மேலும் அதிகரிக்கின்றது. எப்போதும் புலியாதரவு, புலியெதிர்ப்பு என்ற இரண்டு எதிர்நிலைக்குள் செயல்பட்ட முனைந்தவர்கள், சிந்திக்க முற்பட்டவர்களிடையே இந்தக் குழப்பம் மேலும் ஆழமாகிவிடுகின்றது.


முதலில் ஏகாதிபத்திய புலித் தடைபற்றி நாம் பார்க்கும் போது, புலிகள் மீதான தடை என்பது புலிகளின் பாசிச அரசியல் மீதானதல்ல. அதாவது புலிகளின் அரசியல் சார்ந்த மக்கள் விரோத நடத்தைகள் சார்ந்து இந்தத் தடையை ஏகாதிபத்தியம் செய்யவில்லை. தடையை புலிகளின் நடத்தை மீது மட்டும் கூறி தடை செய்ததே ஒழிய, அதன் அரசியலையல்ல. புலிகளின் மக்கள் விரோத அரசியலையே, ஏகாதிபத்தியமும் தனது அரசியலாக கொள்கின்றது. எனNவு தமிழ் பேசும் மக்கள் புலிகளின் பாசிசம் அல்லாத தமது சொந்த வழியில், சொந்த தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் தடை வந்திருக்கும்.


தடை என்பது இன்றைய உலகமயமாதல் பொருளாதார அமைப்பில், ஏகாதிபத்தியங்களின் தேவையொட்டி வருகின்றது. ஏகாதிபத்திய நலனுக்கு பாதகமான அனைத்தும் தடை செய்யப்படுகின்றது. அதாவது ஒடுக்குமுறை ஏவிவிடப்படுகின்றது. ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நோக்கத்துக்கு சாதகமான அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றது.


இங்கு புலிகள் பாசிட்டுகளா இல்லையா என்பதல்ல, மாறாக ஏகாதிபத்திய பொருளாதார நோக்கத்துக்கு பாதகமான அனைத்தும் உலகளாவில் தடைசெய்யப்படுகின்றது. ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நோக்கத்துக்கு தேவையான அனைத்துப் பாசிசமும் பாதுகாக்கப்படுகின்றது. இந்த அடிப்படையில் இருந்துதான், இந்தத் தடைபற்றிய உள்ளடகத்தை நாம் அரசியல் ரீதியாக புரிந்து கொள்ள முற்படவேண்டும்.


இரண்டாவதாக ஏகாதிபத்தியங்கள் இந்தத் தடையை எதன் மீது நியாயப்படுத்துகின்றது என்பது மிக முக்கியமான விடையமாகின்றது. இதுவும் குழப்பத்தையும், அரசியல் பிறழ்ற்சியையும் ஏற்படுத்துகின்றது. ஏகாதிபத்தியம் தனது நோக்கத்தை நிறைவு செய்ய காரணத்தை கண்டுபிடிப்பார்கள். இந்த உண்மை உலகம் தழுவியது. ஆனால் அவர்களின் மக்கள் விரோத தடைக்கு, நாமே அரசியல் காரணமாக இருப்பது வேறு. இதை நாம் வேறுபடுத்தி புரிந்துகொள்ள வேண்டும். புலிகளின் தடைக்கு கூறும் காரணங்களை, புலிகளே தமது சொந்த மக்கள் விரோத நடவடிக்கை மூலம் வலிந்து உருவாக்குகின்றனர். புலிகளின் தடையை நியாயப்படுத்தும் வகையில், ஏகாதிபத்தியத்துக்கு புலிகள் சதா உதவுகின்றனர். மறுக்க முடியாத மக்கள் விரோத உண்மை சார்ந்து ஏகாதிபத்தியம் நிற்பதன் மூலம், தனது சொந்த மக்கள் விரோத நிலைக்கே ஏகாதிபத்தியம் முற்போக்கு மூலாம் பூசமுடிகின்றது.


புலிகளின் மாபியாத்தனமும், பாசிசமும் உலகம் தழுவியதாக அதுவே கொலைக் கலாச்சாரமாக மாறிவிட்டது. இன்று பணம் தர மறுத்தாலே கொல்லவும், கைது செய்யவும், அவர்களை தமது சித்திரவதைக்கு உள்ளாக்கவும் போதுமான காரணமாகி, அடிப்படையில் மாபியாத்தனமே புலித் தேசியமாகிவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் தவறுகள் என்று உலகளாவில் ஒத்துக் கொள்பவைகளைக் கூட, நடைமுறையில் அதை செய்வதன் மூலம் தமது சொந்த விலங்குக்கு தாமே வலிந்து வடிகால் அமைக்கின்றனர். மனித உரிமை மீறலின் உச்சத்தில் நின்று சதா கொக்கரிக்கின்றனர். அச்சத்தையும், பீதியையும் சமூக உணர்வாக வளர்த்து, அதில் தமது புலித் தேசிய பாசிச வக்கிரத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். இன்று தமிழ் தேசியம் என்பது, பணம் அறவிடுவதும், அவர்களுக்கு அடங்கி நடப்பதும், தாம் சொல்வதை நம்ப வேண்டும் என்றாகிவிட்டது. இதை தவிர வேறு எதையும் தமிழ் தேசியமாக கருதுவதைக் கூட துரோகமாக கருதி சதா அழிக்கின்றனர்.


இந்த நிலையில் ஏகாதிபத்திய தடைகள், தடைக்கான காரணத்தை புலிகளின் நடத்தை சார்ந்து ஏகாதிபத்தியத்தால் முன்வைக்கப்படுகின்றது. புலிகளின் சொந்த நடத்தைக்கு வெளியில், அவர்கள் வழமைபோல் காரணங்களை புலிகள் விடையத்தில் புனையவில்லை. ஏகாதிபத்தியத்தின் சொந்த அரசியல் நரித்தனத்தை இனம் காணமுடியாத வகையில், புலிகளின் கொடூரமான வக்கிரமான மனிதவிரோத நடத்தைகள் மேவி நிற்கின்றன. இதனால் ஏகாதிபத்திய ஆதரவு பலமானதாக மாறிவிட முனைகின்றது.


அரசியல் குழப்பத்தின் விளைவு


இந்த நிலையில் அரசியல் மயக்கம், கோட்பாட்டு திரிபு ஏற்படுகின்றது. புலிகளின் பாசிசம், மாபியாத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது அதை உணர்பவர்கள் புலியை ஒழித்தல் என்ற அடிப்படையில் ஏகாதிபத்திய தடையை ஆதரிக்கின்றனர். அதைக் கொண்டாடுகின்றனர். ஏகாதிபத்திய தடையை புலியின் நடத்தை சார்ந்ததாக நம்புகின்றனர் அல்லது அதை அப்படிக் காட்ட முனைகின்றனர். புலிகளை அழிக்க, இதைவிட்டால் வேறுவழியில் எதிர்கொள்ள முடியாது என்கின்றனர். இப்படி ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடு, அரசியல் நிலைப்பாடாக மாறிவிடுகின்றது. இது சார்ந்த செயற்பாடுகள் முடுக்கிவிடப்படுகின்றது.


இந்த சோரம் போதல் இயல்பாக ஏகாதிபத்தியத்தில் காணப்படும் ஏகாதிபத்திய ஜனநாயகத்தை உயர்ந்த ஜனநாயகமாக விளக்குவதும், அதற்காக வாலாட்டுவதும் தொடங்குகின்றது. இந்த அடிப்படையில் புலியெதிர்ப்பு அணி என்ற ஒரு கும்பல், தெளிவாக ஏகாதிபத்திய கோட்பாட்டு ஆதரவுடன் களத்தில் முன்னுக்கு வந்துள்ளது. இதற்கு ஏகாதிபத்திய அனுசரனை உண்டு.


ஏகாதிபத்தியம் புலிகள் மீதான நெருக்குவாரம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த புலியெதிர்ப்பு கும்பலின் பலமும் அதிகரிக்கும். இது இன்றைய எதார்த்தம். இந்த எதார்த்தம் புலிக்கு தலையசைக்கும் ஒரு பெரிய கும்பல் எப்படி உருவாகி ஆட்டம் போடுகின்றதோ, அப்படி இந்தக் கும்பலுக்கு பின்னாலும் தடை மீதான கடும் போக்கையொட்டி வளர்ச்சியுறுகின்றது. பெரும்பான்மை சமூகம் இந்த இரண்டு போக்கிலும் அங்குமிங்குமாக நிற்பதன் மூலம், மக்கள் விரோதப்போக்கு பலமான ஒன்றாக வளர்ச்சியுறுகின்றது. மக்கள் பற்றி இந்த இரண்டு போக்கும், எதிர்நிலைப் பாத்திரத்தை வகிக்கின்றது.


இதன் விளைவை எப்படி நாம் புரிந்து கொள்வது


உண்மையில் தமிழ் பேசும் மக்களின் அவலமான சமூக வாழ்வு இரண்டு தளத்தில் பந்தாடப்படுகின்றது.


1. சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, பாசிசத்தை தனது சொந்த பேரினவாத நடத்தைய+டாக மொத்த தமிழ் மக்கள் மீது ஏவுகின்றது. தமிழன் என்ற ஒரு காரணமே, அடக்கியொடுக்க போதுமான அடிப்படைக் காரணமாக உள்ளது. இதை இன்று புலிகளின் பெயரில் பேரினவாதம் செய்கின்றது. புலிகளின் பாசித்தின் பின்னால் தன்னையும் தனது பாசித்தையும் மறைத்துக் கொள்கின்றது. புலிகளின் பாசித்தைக் கொண்டு, தமிழ் மக்களைப் பிளந்து பெரும்பகுதியை செயலற்ற நிலைக்குள் நடுநிலைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புலிகளின் பாசிசத்துடன் ஓப்பிடும் போது, பேரினவாதத்தை மென்மையான ஒன்றாக காட்டுகின்றது.


இது அரசியல் குழப்பத்தை, எதிரி பற்றிய தடுமாற்றத்தை உருவாக்குகின்றது. இலங்கையில் பிரதான முரண்பாடு இனமுரண்பாடாக உள்ள நிலையில், பிரதான எதிரி தொடர்ந்தும் அரசாகவே உள்ளது. இதற்கு எதிரான போராட்டத்தை மக்கள் சார்ந்து முன்னெடுக்க வேண்டிய நிலையில், சமூக முரண்பாடுகள் உள்ளது. இந்த அரசியல் அடிப்படையில் புலிகளும் கூட போராடுவதில்லை என்பதே, புலிகள் பாசிசத்தினை சார்ந்திருக்கும் அரசியல் உள்ளடக்கமாகும். பிரதான எதிரியான அரசை, சொந்த மக்களைச் சார்ந்து நிற்காது ஒரு நாளும் வெற்றி கொள்ளமுடியாது. இந்த பேரினவாத மக்கள் விரோத அரசை, ஏகாதிபத்தியமே கட்டமைத்து பாதுகாக்கின்றது. இந்தப் புரிதலின்றி மக்களின் விடுதலை என்பது சாத்தியமில்லை. குறைந்தபட்சம் ஜனநாயகத்தைக் கூட யாராலும் மீட்க முடியாது.


2. இனமுரண்பாட்டின் அடிப்படையில் உருவான போராட்டம் குறுந்தேசியமாகி, இறுதியாக பாசிசமாகி மாபியாத்தனமாகவும் பரிணமித்து நிற்கின்றது. மாபியாத்தனத்தை ஆணையில் கொண்டு, பாசிசத்தை அடிப்படையாக கொண்டு கொலை கொள்ளை சூறையாடலே புலித் தேசியமாகிவிட்டது. இதை அவர்கள் அமுல்படுத்தவும், இதற்கு ஆதரவு தளத்தை பெறவும் அரசை எதிர்க்கின்றனர். இங்கு எதிர்ப்பு என்பது, அரசின் அரசியலையல்ல. அரசின் சில நடத்தைகளையே எதிர்க்கின்றனர். அதிலும் குறிப்பாக இராணுவ நடத்தைகளையே எதிர்க்கின்றனர். இதன் மூலம் தனது சொந்த பாசிச சூழலை தக்கவைக்கின்றனர்.


இந்த இரண்டு போக்கும் மக்களுக்கு எதிராக நடைமுறையில் செயல்படுகின்றது. இதை சுயாதீனமாக எதிர்கொள்ள, மக்கள் நடைமுறை சார்ந்த வழியின்றி செயலற்ற அசமந்தப் போக்கு, இதை எதிர்கொள்ளும் வழி தொடர்பாகவே நமது குழப்பத்தை அதிகரிக்கவைக்கின்றது. எம்மை மீறிய ஒவ்வொரு நிகழ்வின் போதும், இது பாரிய அரசியல் குழப்பத்தை தடுமாற்றத்தை உருவாக்குகின்றது. நாம் எமது சொந்த நிலை மீது தடுமாறுகின்ற போது, அரசியல் குழப்பமும் முரண்பாடுகளும் சதா உருவாகின்றது. இதற்கு எமது நடைமுறை ரீதியான தெளிவான செயற்பாட்டு அடிப்படையின்மை ஒரு முக்கியமான காரணமாகிவிடுகின்றது. இது கோட்பாட்டு ரீதியான தடுமாற்றத்தை உருவாக்குகின்றது.


நாம் ஒவ்வொரு விடையத்தையும் மக்கள் நலன் என்ற அடிப்படையில் இருந்து புரிந்துகொள்வது அவசியம். மக்கள் நலன் என்பது பற்றிய குழப்பம் அவசியமற்றது. மக்களுக்கு வெளியில் எந்தத் தீர்வும், மக்களுக்கு எதிரானது என்பதில் உள்ள புரிதல் முதலில் அவசியமானது. மக்கள் செயலாற்றாத அனைத்தும் மக்களுக்கு எதிரான பாசிசமாகவே மாறும். இது புலியாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.


மக்கள் தமது சொந்த நடிவடிக்கை மூலம், தமது சொந்த நோக்கை நிறைவு செய்வதை உள்ளடக்கியதே, மக்கள் நலன் அடிப்படையிலான உள்ளடக்கமாகும். மக்களின் நலன் சார்ந்த உண்மைகளை, அவர்களின் வாழ்வு சார்ந்து, அதாவது அவர்களின் சமூக பொருளாதார வாழ்வு சார்ந்து இனம் காண்பது அவசியம். இதுவே ஒரு சமூக முன்னோடியின் அரசியல் கடமையுமாகும்.


மக்களுடன் தொடர்பற்ற எந்தச் செயற்பாடும் மக்களுக்கு எதிரானது. இது அரசுக்கு எதிராக இருந்தாலும் சரி, புலிக்கு எதிராக இருந்தாலும் சரி பொதுவானதே. புலிகளின் போராட்டம் மக்கள் விரோதமானது என்பது, மக்களைச் சாராத புலிப் போராட்டத்தைக் குறிக்கின்றது. இது போல்தான் புலிக்கு எதிரான புலியெதிர்ப்புப் போராட்டம் கூட மக்களுக்கு எதிரானது. மக்களைச் சாராத ஒரு சதிக்குழு, ஏகாதிபத்திய துணையுடன் அரசு சார்பாக இயங்குகின்றது. மக்கள் சார்ந்த செயற்பாட்டை நிராகரிக்கும் புலிகள் மற்றும் புலியெதிர்ப்புக் கும்பல், மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக பயன்படுத்துவதை மட்டும் சார்ந்து நிற்கின்றனர்.


மக்களின் சமூக பொருளாதார நலனில் இருந்து செயற்படுவதை, திட்டவட்டமாக மறுக்கின்றனர். எந்தச் செயற்பாடும் மக்களைச் சார்ந்த, அவர்களின் நலன் சார்ந்து இருக்கவேண்டும். இதுவல்லாத அனைத்தும் படுபிற்போக்கானது. மக்களுக்கு எதிரானது. புலித் தடையை எடுத்தால், தடை செய்தவன் சர்வதேச ரீதியாகவே மக்கள் விராதி. உலகளாவிய மக்கள் இந்த மக்கள் விரோதிக்கு எதிராக, உலகம் தழுவிய அளவில் நாள் தோறும் போராடுகின்றனர். ஆனால் எம்மில் ஒரு பகுதியினர் அதற்கு பாய்விரித்து விபச்சாரம் செய்கின்றனர்.


இந்த ஏகாதிபத்தியங்கள் சொந்த மக்களுக்கே எதிரானவர்கள். அதேபோல் மற்றைய நாடுகள் மீதான அதன் அணுகுமுறை, தனது நாட்டின் பொருளாதார நலனுடன் மட்டும் தொடர்புடையது. எப்போதும் எங்கும் தனது நலன் சார்ந்து, படுபிற்போக்காகவே ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் இயங்குகின்றது. இங்கு எந்த மக்கள் நலனும் இவர்களிடையே இருப்பதில்லை. தனது நலன் சார்ந்த உலகமயமாதல் போக்குக்கு இசைவாக, அதன் செயற்பாடுகள் படுபிற்போக்கான மக்கள் விரோதத் தன்மை வாய்ந்தவை. புலித் தடையும் இப்படித் தான். ஆனால் தன்னை முற்போக்கு வேடமிட்டுக் காட்ட, புலிகளின் மக்கள் விரோத செயலை ஆதாரமாக எடுத்துக் கொண்டு தனது நோக்கையே மூடிமறைக்கின்றது.


புலித் தடைக்கு புலியெதிர்ப்பு அணி காரணமா?


புலிகள் கூட ஏகாதிபத்திய தன்மையை மூடிமறைத்தபடி, புலித்தடைக்கான காரணத்தை இட்டுக்கட்டி விடுகின்றனர். குறிப்பாக புலியெதிர்ப்பு அணியும், அரசின் பொய்பிரச்சாரமும் தான் புலித் தடைக்குக் காரணம் என்கின்றனர். ஏகாதிபத்தியத்தை பாதுகாப்பதில் இதைவிட யாரும் விசுவாசமாக வாலாட்டிச் செயற்பட முடியாது தான்.


புலியெதிhப்பு அணிக்கு பெருமை தான். ஆகாகா எம்மை பார், எமது செயலைப் பார் என்பது போல் புலியெதிர்ப்பு பிரசாரமுள்ளது. தடை ஏகாதிபத்திய தனத்தால் உருவானது, அதற்கான காரணத்தை புலிகளின் நடத்தைகளே உற்பத்தி செய்தன. இதை மறுத்து புலிகள் என்ன செய்கின்றனர்.


1 .ஏகாதிபத்தியத் தன்மையையும், அதன் உலகளாவிய மக்கள் விரோதப் போக்கையும் புலிகள் மூடிமறைக்கின்றனர்.


2. தமது தடைக்கு காரணமாக கூறப்பட்ட மக்கள் விரோதத் தன்மையை மூடிமறைக்கின்றனர்.


இதன் மூலம் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கின்றனர். தமது மக்கள் விரோத நடத்தைகளையும் தொடருகின்றனர். மறுபக்கத்தில் தடையை புலியெதிர்ப்பின் செயற்பாடுகளே காரணம் என்று காட்டமுனைகின்றனர். இதன் மூலம் ஏகாதிபத்தியத்தை அப்பாவிகளாகவும், முட்டாளாகவும் தமக்குதாமே தனக்குள் நிறுவமுனைகின்றனர். ஒரு சில ஐந்தறிவற்ற முதிர் முட்டாள்களின் புலியெதிர்ப்புக்கு, உலகமே முடிவு எடுக்குமளவுக்கு தாழ்ந்து விட்டதாக காட்டுவது புலியின் மக்கள் விரோத அரசியலுக்கு அவசியமாகிவிடுகின்றது. இவர்கள் செய்வது மக்களை படுமுட்டாளாக்குவது தான்.


தடைபற்றிய காரணத்தை மக்கள் சிந்திக்கவிடாது, அவர்களை மந்தைக் கூட்டமாக மேய்ப்பதற்காக, இப்படி எதிரி பற்றி மலிவான பிரச்சாரம் மூலம், எதிரியைத் திடட்மிட்டு பாதுகாக்கின்றனர். ஏகாதிபத்தியம் என்பது உலகளாவிய அனைத்து மக்களுக்கும் எதிரானது. இந்த உண்மையை மக்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில், புலிக்கு எதிரான ஒரு சிலர் மீது குற்றம் சாட்டுவதன் மூலம் மக்களுக்கே துரோகம் செய்கின்றனர்.


புலித்தடையின் விளைவு மொத்த மக்களுக்கு எதிரானதாக மாறுகின்றது.


ஏகாதிபத்தியம் பற்றிய புரிதல் இன்றி அதுவே ஏகாதிபத்திய விசுவாசமாக மாறுகின்றது. ஏகாதிபத்தியத்தை ஒரு சிலர் திசை திருப்பிவிட்டதாக கருதி, ஏகாதிபத்தியத்தின் பின் மக்களை ஒடவைக்கின்றது. இது புலி தரப்பிலும், புலியெதிர்ப்பு தரப்பிலும் ஒருங்கே ஒரே புள்ளியில் நிகழ்கின்றது.


இதற்கு மற்றொரு பக்கம் உண்டு. புலித் தடை என்பது, தனிப்பட்ட புலியை மட்டும் குறிப்பாக தடை செய்யவில்லை. மாறாக தமிழ் மக்களின் நியாயமான உரிமையையும் மறுதலிக்கின்றது. சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கின்றது. இது சூக்குமமாகவே புலித்தடையின் பின் நடக்கின்ற ஒரு உண்மையாகும். தமிழ் தேசியம் என்பது வேறு, புலித் தேசியம் என்பது வேறு. இதை பலர் புரிந்து கொள்ளாத ஒன்றாக பார்க்கின்றனர். புலிகள் புலித் தேசியம் தான் தமிழ் தேசியம் என்கின்றனர், புலியெதிர்ப்பும் புலித் தேசியம் தான்தமிழ் தேசியம் என்கின்றனர். என்ன அரசியல் ஒற்றுமை. இந்த சூக்குமத்தை, இந்த மயக்கத்தை ஏகாதிபத்தியம் பயன்படுத்தி தமிழ் தேசியத்தை மறுக்கின்றது. இதையே பேரினவாதம் அனைத்தையும் புலிப்பிரச்சனையாக காட்டி, தமிழ் தேசியத்தை மறுக்கின்றது.


தமிழ் தேசியம் என்பது, அதாவது தேசியத்தின் உள்ளடகத்தில் அது ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதாரக் கொள்கைக்கு எதிரானது. அது தான் தேசியம். தேசியம் என்பது அடிப்படையில் தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு, சொந்த மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் தொடர்புடையதாகவே உள்ளது. தமிழ்மக்களின் சொந்த பொருளாதார தேசியக் கொள்கையை ஏகாதிபத்தியம் அங்கீகரிக்காது. இதையும் சேர்த்துத் தான் தடைசெய்துள்ளது.


ஆனால் புலித் தேசியத்தை அங்கீகரிக்கும். அதுதான் தடையின் பின்பும், கடுமையான நடிவடிக்கையின்றி புலியின் செயற்பாடுகளை பல்வேறு மாற்று வழிகளின் ஊடாக அனுமதிக்கின்றது. இதன் மூலம் புலிகளை இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வருவதன் மூலம், தமிழ் தேசியத்தை புலிகளின் வழியில் அழிப்பது ஏகாதிபத்தியத்தின் நோக்கமாக உள்ளது. தமிழ் மக்களின் தேசியத்துக்கு பதில், ஏகாதிபத்திய பொருளாதார அடிப்படையைக் கொண்ட புலித் தேசியத்தை அமுல்படுத்த, ஒரு அரசியல் கூட்டு இணக்கப்பாட்டை இலங்கை அரசுடன் ஏற்படுத்த ஏகாதிபத்தியம் முனைகின்றது. இதை நிர்ப்பந்திக்கவே மட்டுப்படுத்தப்பட்ட தடையும், புலிகள் மீதான நெகிழ்ச்சியான அணுகுமுறையை ஏகாதிபத்தியம் கையாளுகின்றது.


உண்மையில் புலித்தடை என்பது தமிழ்பேசும் மக்களின் உண்மையான தேசியம் மீதே ஒழிய, புலித் தேசியம் மீதல்ல. அதாவது புலியின் தேசியம் சார்ந்த அரசியல் அல்ல, தமிழ் தேசிய அரசியல் தான் புலியின் பெயரில் தடைக்குள்ளாகியுள்ளது. புலித்தேசியம் ஏகாதிபத்திய நலனுடன் பின்னிப்பிணைந்து கைக்கூலியாக செயற்படத் தயாரான ஒன்றாகும். இதனுடன் ஏகாதிபத்தியம் சமரசம் செய்வதை அனுமதிக்கின்றதே ஒழிய உண்மையான தேசியத்தின் பால் அல்ல. இது மிகவும் நுட்பமான சூக்குமானது. இதனால் தான் புலித் தடையை புலிகள், ஒரு சிலரின் தனிப்பட்ட நடவடிக்கையாக காட்டுகின்றனர்.


மறுபக்கத்தில் புலித் தடை ஊடாக புலியையும், அதன் அரசியலையம் தடை செய்யவில்லை. மாறாக மக்கள் நலன் சார்ந்த, மக்கள் அரசியலையே தடை செய்கின்றது. இந்தத் தடை மூலம், புலியுடன் இணக்கப்பாட்டை உருவாக்கி, தமிழ்தேசியத்தை இல்லாதாக்க முனைகின்றது. மக்கள் நலன் எதையும் ஏகாதிபத்தியம் அங்கீகரிக்காது, அனுமதிக்காது.


புலித் தடையை எதிர்கொள்வது எப்படி


தடைபற்றிய புரிதலுக்கு அப்பால், இதற்கு சார்பாகவோ, புலி தடைக்கு எதிராக புலிக்கு ஆதரவாகவே செயல்படமுடியாது. மாறாக புலித் தடையின் பெயரில், மக்களுக்கு எதிராக செயல்படுவதை எதிhத்துப் போராட வேண்டும். மிக நுட்பமாக இரண்டு கூறிலும் உள்ள மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தி, தனித்துவமாக மக்கள் நலனை முதன்மைப்படுத்தி போராடவேண்டும் தடைக்கான காரணத்தை இரண்டு தரப்பும் எப்படி மூடிமறைக்கின்றது என்பதை அம்பலப்படுத்தி, அவர்களின் ஏகாதிபத்திய ஆதரவு அரசியலை அம்பலப்படுத்த வேண்டும்.


1. புலித்தடையை ஆதரிப்பவர்களின் ஒரு பகுதி, புலிகளால் பாதிகப்பட்டவர்கள் அல்லது புலிகளால் தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுபவர்கள். இவர்களை தனித்துவமாக பிரித்து அதை அணுக வேண்டியுள்ளது. இப்படி கூறி தடையை ஆதரிப்பவர்களின் வாதத்தின் பின் உள்ள உள்ளடகத்தை கவனமாக தெளிவாக பிரித்து, அதை அம்பலப்படுத்த வேண்டும். குறித்த நாடுகளின் சட்ட எல்லைக்குள் புலியின் பாதிப்பை எதிர்கொள்ள முனைவது தவறானதல்ல என்பதை தெளிவுபடுத்த வேண்டும். புலிகளால் ஏற்படும் நேரடி பாதிப்பை, அந்த நாட்டின் சட்ட எல்லைக்குள் அணுகுவது சரியானது. ஆனால் அதை இலங்கை அரசியலுக்குள் பொருத்தி, அதை விரிவுபடுத்தி மக்களை சாராது நிற்பதை தெளிவாக அரசியல் ரீதியாக அம்பலப்படுத்த வேண்டும். அரசியல் அணுகுமுறையில் சொந்த மக்களையும், குறிப்பாக அந்த நாட்டு மக்களையும், சர்வதேச மக்களையும் சார்ந்து நிற்பது தவறல்ல. அதை விடுத்து அரசுடன், அதன் வன்முறை அமைப்பான பொலிசுடன் அல்லது இரகசிய புலனாய்வு அமைப்புடன் செயற்படுவது அம்பலப்படுத்த வேண்டும். மக்களைச் சாராது, இலங்கை அரசியலில் செயற்படுவது படுபிற்போக்கான மனிதவிரோத செயற்பாடாகும். தமிழ் மக்களின் தேசியத்தை அங்கீகரித்து போராடாத வரை, அந்த அரசியல் மக்கள் விரோதமானவை.


2. புலித் தடையை புலிசார்பு நிலையில் நின்று எதிர்த்தல் என்பது தவறானது. புலிகள் மக்கள் சார்ந்த மக்கள் இயக்கமல்ல. மக்களை அடிமைப்படுத்தி, அவர்கள் மீது மாபியாத்தனத்தையும் பாசிசத்தை கட்டமைக்கும் நிலையில் அதை ஆதரிக்க முடியாது. தடைக்கான காரணத்தை ஏகாதிபத்தியத்துக்கு புலிகளின் நடத்தைகளே வாரி வழங்குகின்றது. தடைக்கான காரணத்தை புலிகளை நீக்கக் கோரியும், அதாவது மக்கள் விரோத நடத்தைகளை ஒழிக்க கோருவதன் மூலம், தடைக்கு எதிரான போராட்டத்தை நடத்த மக்களைச் சார்ந்திருக்க கோருவது அவசியம். மக்களுக்கு ஜனநாயகம் அவசியமான நிபந்தனையாகும். இதை மறுக்கின்ற புலிகளுடன், புலித்தடைக்கு எதிராக இணைந்து நிற்க முடியாது. தனித்துவமான வழியில் தனித்து போராடவேண்டும். அதே நேரம் ஏகாதிபத்திய தடைக்கான உண்மைக் காரணத்தை, புலிகள் திட்டமிட்டு மூடிமறைப்பதை அம்பலப்படுத்த வேண்டும். இந்நிலையில்


1. ஏகாதிபத்தியத் தடையை புரிந்து அதை எதிர்க்க வேண்டும்.


2. தேசியத்தை முன்னிலைப்படுத்தி தடையை அம்பலப்படுத்தி போராட வேண்டும்.


3. ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து, ஏகாதிபத்திய தடையை எதிர்த்துப் போராடவேண்டும்.


4. தடையை எதிர்த்து மக்களைச் சார்ந்து நிற்றல் வேண்டும். இதுவல்லாத அனைத்தையும் ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தவேண்டும். மக்கள் என்கின்ற போது சொந்த மக்களையும், குறித்த நாட்டு மக்களையும், சர்வதேச மக்களையும் முழுமையாக சார்ந்து நிற்கவேண்டும்.


5.ஜனநாயகம் தேசியம் இரண்டும் மையமான கோசமாக வேண்டும். இந்த இரண்டையும் புலியும், புலியெதிர்ப்பும் மக்களுக்கு மறுக்கின்றது. இதன் மூலம் இதற்கு எதிரானவர்களை தனிமைப்படுத்தி, தனித்துவமாக போராடவேண்டும்.


6. தடையை தனித்துவமாக இலங்கைக்குள் மட்டும் மட்டுப்படுத்தி பார்க்கும் குறுகிய அரசியலை மறுத்து, சர்வதேச நிகழ்ச்சிப் போக்குடன் அனைத்தையும் பொருத்திப் பார்க்கவேண்டும்.


7. இலங்கை அரசு பாசிசத்தை, அதன் இனவிரோத அழித்தொழிப்பு அரசியலையும் அம்பலப்படுத்துவது அனைத்துக்குமான அரசியல் முன்நிபந்தனையாகும். புலியை தடை செய்ய கூறிய அதே காரணத்துக்கு நிகரானதாக அரசும் செயற்படுகின்றது என்பதை அம்பலப்படுத்தி அதை தடை செய்யாத ஏகாதிபத்தியதனத்தை அம்பலப்படுத்த வேண்டும்.


8. இலங்கையின் பிரதான எதிரி அரசே ஓழிய புலிகள் அல்ல. புலிகள் இரண்டாவது எதிரி என்பதை தெளிவுபடுத்தி போராடவேண்டும்.


இப்படி விரிந்த அரசியல் தளத்தில் மக்கள் எதிரிகளை இனம் காணும் வகையில் இத்தடையின் நோக்கத்தை இனம் காட்டிப் போராடவேண்டும். இதைவிடுத்து இதற்குள் குறுகி, ஒன்றுக்குள் பகுதியாக முடங்குவது தவறானது. மயக்கமும், குழப்பமுமின்றி விடையத்தை சூக்குமமாக்காது வெளிப்படையாக தெளிவுபடுத்தும் வகையில், கோசங்கள் செயற்பாடுகள் முழுமையானதாக செயலூக்கமுள்ளதாக இருக்கவேண்டும்.


Tuesday, August 8, 2006

உலகக் கோப்பை கால்பந்து 2006

உலகக் கோப்பை கால்பந்து 2006
விளையாட்டுக்கு கால் பந்து
வியாபாரத்துக்கு முழுப்பந்து

""2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜெர்மனியில் நடந்த முக்கியமான நிகழ்வு என்ன?'' என்று ஒரு விநாடி வினா நிகழ்ச்சியில் கேள்வி கேட்பதாக வைத்துக் கொண்டால் உங்கள் பதில் என்ன? உலகக் கோப்பைக் கால்பந்து என பளிச்சென்று பதிலளித்து விடலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை.

காரணம் அந்த சொற்றொடர் கூட பிபா என்றழைக்கப்படும் சர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மேளனத்தால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதை அந்த சங்கத்தின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்கள் தவிர வேறு எவரும் பயன்படுத்த முடியாது. அப்படி பயன்படுத்திய 420 நிறுவனங்கள் மீது பிபா உலகெங்கும் வழக்கு தொடுத்திருக்கிறது. ஜெர்மனியில் மட்டும் கால்பந்து தொடர்பான தங்களது காப்புரிமைகளை காப்பாற்றுவதற்கு சட்டவல்லுநர்கள் அடங்கிய 250 பேர் கொண்ட சந்தைப் படை நிர்வாகிகளை பிபா சுற்றவிட்டிருக்கிறது.

இரசிகர்கள் கால்பந்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது பிபாவும், பன்னாட்டு நிறுவனங்களும் போட்டியை வைத்து காசாக்குவதை நடைமுறைப்படுத்தி வருகின்றன. கால்பந்து என்ற நாணயத்தின் இரு பக்கங்களும் இப்படித்தான் இருக்கின்றன.

முக்கனிகளில் சுவையான முதல்கனி மா போல விளையாட்டுகளில் அழகானது கால்பந்து. பதினொரு பேர் கொண்ட அணியினர் பந்தைக் காத்து, கடத்தி, உதைத்து, கட்டுப்படுத்தி, சீறவைத்து, கால்களால் கோலமிட்டு கணநேர வித்தையில் கோல் போடும் அந்த விளையாட்டு நிச்சயம் அழகானதுதான். இந்த அழகின் வலிமையை நிகழ்த்திக் காட்டிய பல்வேறு அணிகளையும், பீலே முதல் மரடோனா, மெஸ்ஸி வரையிலான வீரர்களையும் மறக்க முடியாதுதான்.

இது ஒலிம்பிக்கிற்கு இணையாக உலகமக்கள் பார்க்க விரும்பும் தனித்துவமிக்க விளையாட்டு. கால்பந்தின் மொழியில் இணையும் சர்வதேச உணர்வு. பல்வண்ண ஆடைகளை அணிந்திருக்கும் வீரர்களைக் குழந்தைகள் அழைத்து வருகிறார்கள். விதவிதமான இராகங்களில் தேசிய கீதம். அந்த நேரத்தில் குறும்புக்கார வீரர்கள் சிலர் கண்ணடிக்கிறார்கள். சவுதி அணிவீரர்கள் கோல் போட்டதும் அல்லாவைத் தொழுகிறார்கள். கானா வீரர்கள் சிலுவை போடுகிறார்கள். ஐவரிகோஸ்ட் வீரர்கள் ஆப்பிரிக்கப் பழங்குடி நடனம் ஆடுகிறார்கள். பிரேசில் இரசிகர்கள் சம்பா நடனம் ஆடுகிறார்கள்.

பல்தேசியக் கொடிகளின் வர்ணங்கள் பூசப்பட்ட அழகான முகங்கள், தத்தமது நாட்டு அணிகளின் சட்டைகளை அணிந்தவாறு நடனமாடும் இரசிகர்கள், பீலே பாணி உதை, மரடோனா கையால் போட்ட கடவுளின் கோல், மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பையின் போது இரசிகர்கள் முதன்முதலாக உருவாக்கிய கடல் அலையின் ஆர்ப்பரிப்பு, முந்தையப் போட்டியொன்றில் முதல் நுழைவிலேயே காலிறுதி வரை சென்ற காமரூன் அணியின் சாதனை, சென்ற உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்ற தென் கொரிய அணி, இவ்வாண்டு போட்டியின் காலிறுதியில் பெனால்டி உதையில் தோற்ற அர்ஜென்டினா அணி வீரர்களின் கதறல், வெற்றி பெற்ற ஜெர்மன் அணி பயிற்சியாளர் கிளிம்ஸ்மென்னின் உற்சாகம், கால்பந்தை நேசிக்கும் கேரளத்தில் அர்ஜென்டினா அணியின் வண்ணத்தை தனது படகில் பூசி அழகு பார்க்கும் மீனவர்கள், இந்தியாவில் கால்பந்து உயிர்த்திருக்கும் மேற்கு வங்கத்தில் உலகக்கோப்பை போட்டிகளை கூட்டமாக அமர்ந்து பார்க்கும் தொழிலாளிகள்...

கால்பந்தின் நினைவுகளில் தோய்ந்து எழும் படிமங்கள் கவித்துவமானவை. இந்தக் கவித்துவம் போட்டியை நேரடி ஒளிபரப்பில் அதிக மக்கள் பார்க்கிறார்கள் என்பதிலிருந்து எழவில்லை. உலகமக்களில் பெரும்பான்மையினர் இன்னமும் கால்பந்தைக் காதலிக்கிறார்கள் என்பதே அதன் தோற்றுவாய்.

1954ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும் போது தொலைக்காட்சி இல்லை. இன்று வரையிலும் உலகின் தலைசிறந்த மாஜிக் அணி என்று போற்றப்படும் 1958ஆம் ஆண்டின் பிரேசில் அணியில் பீலே, தீதி, கார்ரின்ச்சா முதலான வீரர்களின் ஆட்டத்தை வானொலியில் மட்டுமே கேட்க முடிந்தது. அந்தப் புகழ்மிக்க ஆட்டத்தின் துடிப்பை ஸ்பானிய வருணணையாளர்கள் உரையில் கொண்டு வந்தார்கள்.

1970இல் மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பையின் போதுதான் தொலைக்காட்சி வந்தது. பொருளாதாரத்தில் பிரிந்திருந்த முதல் உலகமும் மூன்றாம் உலகமும் கால்பந்தில் சேருவதற்கான வாய்ப்பை 80களில் உலகமயமும் செய்தி விளையாட்டு ஊடகங்களும் உருவாக்கின. ஆனால் இந்த வாய்ப்பு கால்பந்து என்ற விளையாட்டை வளர்ப்பதற்கு அல்ல, அதைச் சந்தையில் விலைபேசும் பண்டமாக மாற்றுவதற்கே பயன்பட்டது.
இன்று உலகக் கோப்பை என்பது திறமையும் துடிப்பும் கொண்ட தென் அமெரிக்க ஆப்பிரிக்க இளம் வீரர்களை ஐரோப்பாவின் தனியார் கிளப்பைச் சேர்ந்த தரகர்கள் அடையாளம் காணும் மாட்டுச் சந்தையாக மாறிவிட்டது. இரசிகர்கள் தேசப்பற்றுடன் கூச்சலிடும்போது வீரர்கள் தங்கள் திறனை அடையாளப்படுத்துவதில்தான் அக்கறை காட்டுகிறார்கள்.

கால்பந்தில் ஒரு அணியின் வலிமையான துடிப்பான ஒற்றுமையில்தான் ஒருவர் கோல் போட முடியும். அதனால் கோல் போட்டதன் பெருமை பல வீரர்களின் ஒருங்கிணைந்த ஆட்டத்தின்பால் சேரும். இன்றோ கோல் போடுபவர் மட்டுமே நட்சத்திர வீரர் என்று தொலைக்காட்சியும் ஸ்பான்சர் நிறுவனங்களும் இலக்கணத்தை மாற்றிவிட்டன. அதனால் பல வீரர்கள் தாங்கள் மட்டுமே கோல் போடவேண்டும் என்று நினைப்பதால் பலவாய்ப்புகள் வீணடிக்கப்பட்டு அந்த அணிகள் சுயநலத்தின் விளைவைச் சந்திக்கின்றன. இப்படி ஒவ்வொரு வீரரும் நட்சத்திர வீரராக மாறுவதில்தான் கவனம் செலுத்துகிறார்.

தன் நாட்டுக்காக ஆடுவதில் அவர்பெருமைப்படுவதில்லை. மாறாக தன் நாட்டுக்காக ஆடுவதற்கான வாய்ப்பை வைத்து ஐரோப்பாவின் புகழ் பெற்ற மான்செஸ்ட்ர் யுனைடெட், செல்சியா, லிவர்போல், ரியல் மாட்ரிட், பார்சிலோனா, ஏ.சி.மிலன் முதலான பணக்கார கால்பந்து கிளப்புகளில் விளையாடி கோடிசுவரனாக மாறவேண்டும். அப்படி நட்சத்திர வீரராக நிலைபெற்ற பிறகு பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர தூதராக கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்பதே இந்த வீரர்களின் லட்சியம்.
விளையாட்டில் கால்பந்து மட்டுமே சர்வதேசப் பிரபலத்தைக் கொண்டிருப்பதால் பன்னாட்டு நிறுவனங்களும் இந்த நட்சத்திரங்களை உருவாக்கி விற்பதில் முனைப்பாக இருக்கின்றன. இன்று கால்பந்தைக் கட்டுப்படுத்துவது இந்த தனியார் கிளப்புகளும், பன்னாட்டு நிறுவனங்களும்தான்.

இங்கிலாந்து அணியின் தலைவர் டேவிட் பெக்காமின் சொத்து மதிப்பு மட்டும் 600 கோடி. ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடும் பிரான்சின் ஜிடேனின் வார ஊதியம் 75,000 பவுண்டுகள், பிரேசிலின் ரொனால்டோவின் வாரஊதியம் 60,000 பவுண்டுகள். நல்ல மாடுகளைப் புகழ்பெற்ற மாட்டுச் சந்தைகளில் தேடிப் பிடித்து வாங்குவதைப் போல பல ஐரோப்பிய கிளப்புகள் தென்னமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் பல "மாட்டுத் தரகர்களை' வைத்திருக்கின்றன.

இந்த இரு கண்டங்களைச் சேர்ந்த 5000 வீரர்கள் தற்போது ஐரோப்பிய கிளப்புகளுக்காக விளையாடி வருகிறார்கள். மூன்றாம் உலகம் மாடுகளை ஏற்றுமதி செய்கிறது. முதல் உலகம் மஞ்சுவிரட்டு நடத்தி சம்பாதிக்கிறது. ஐரோப்பாவில் தேசிய உணர்வைவிட கிளப் உணர்வு அதிகம். அதனாலேயே பிபா உலகக் கிளப் கோப்பைக் கால்பந்துப் போட்டியையும் நடத்துகிறது.

ஆரம்பத்தில் இந்தக் கிளப்புகள் விளையாட்டு ஆர்வத்திற்காக துவங்கப்பட்டு தற்போது ஆண்டுக்கு பல நூறு கோடிகள் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்களாக மாறிவிட்டன. இவற்றின் பங்குகள் பங்குச் சந்தையில் விற்கப்படுகின்றன. நட்சத்திர வீரர்களின் விற்பனைக்கேற்ப பங்கு விலை உயரும். பலதொழிற்துறை, ஊடக முதலாளிகளும் அரசியல்வாதிகளும் இந்தக் கிளப்புகளை நடத்தி வருகின்றனர்.

தற்போது பல உலகநாடுகளில் உள்ள கால்பந்தை நேசிக்கும் ஏழ்மையான கிளப்புகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு விட்டன. லத்தீன் அமெரிக்க ஏழைமக்கள் வாழும் சேரிகளிலிருந்து மட்டும்தான் வீரர்கள் கிடைக்கிறார்கள் என்ற அளவில் அவர்களுக்கு ஏழ்மை தேவைப்படுகிறது.

நட்சத்திர வீரர்கள், கிளப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் இவர்களுக்கிடையே கால்பந்தின் ஆதாயத்தை பங்கிட்டுத் தரும் வேலையினை பிபா ஒரு அரசு போல செய்து வருகிறது. பழைய மிட்டாமிராசுகள் காளைகளையும், குதிரைகளையும் வளர்த்து பெருமை காண்பிப்பார்கள். நவீன முதலாளிகளோ கால்பந்து அணியினை பெருமைக்காகவும் வருவாய்க்காகவும் வளர்க்கிறார்கள்.

கால்பந்தில் வர்த்தகம் விளையாட ஆரம்பித்த சில வருடங்களிலேயே ஊழலும் விளைய ஆரம்பித்து விட்டது. நட்சத்திர வீரர்களை வாங்கி விற்பதில் ஊழல், போட்டியின் முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்து மோசடி செய்தல் என்று ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளின் ஊழல் புராணம் மேற்குலகின் ஊடகமே தாங்க முடியாத அளவில் நாறி வருகிறது. இதில் விளையாட்டு எங்கே இருக்கிறது? கால்பந்தில் வணிகமயமாக்கம் நடந்தேறிய பிறகு விளையாட்டு தொலைந்து போனது குறித்து மேற்குலகின் அறிவுஜீவிகள் வருத்தப்படுகிறார்கள். கடிவாளம் கை மாறிய பிறகு குதிரை குறித்து நொந்து என்ன பயன்?

ஒரு கிளப்புக்கு ஒரு நட்சத்திர வீரர் எப்போது வருவார், எவ்வளவு காலம் இருப்பார் என்பது அந்த கிளப்பின் பயிற்சியாளருக்குக்கூடத் தெரியாது. இப்படி ""பல நாடுகளைச் சேர்ந்த, பல மொழி, பண்பாட்டு பின்புலமுள்ள வீரர்களை ஒரு அணியாக்கிப் பயிற்சியளித்து விளையாட வைப்பது ஒரு சர்க்கஸ் கம்பெனி நடத்துவது போல இருக்கிறது என்று சலித்துக் கொள்கிறார் ஒரு பயிற்சியாளர்.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கால்பந்து ஒரு சர்க்கஸ் போல இருப்பதே போதுமானது. இரசிகர்கள் முன்னால் நட்சத்திர வீரர்கள் தோன்ற வேண்டும். ஏதோ ஒன்றிரண்டு கோல்கள் போட வேண்டும். இப்படி விளையாட்டில் மட்டுமல்ல இரசனையிலும் தரம் மிகவும் கீழே இறங்கிவிட்டது.

தற்போதைய உலகக் கோப்பைக்காக ஜெர்மனி வந்துள்ள இரசிகர்கள் விளையாட்டு பார்க்க மட்டுமல்ல மாபெரும் கேளிக்கைக்காகவும் வந்துள்ளனர். இவர்களுக்காக கிழக்கு ஐரோப்பாவிலிருந்து 40,000 விலைமாதர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். முன்னர் சோவியத் யூனியனிலிருந்தும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளிலிருந்தும் தரமான விளையாட்டு அணிகள் வந்தன. தற்போதைய உலகக் கோப்பைக்காக ரசியாவிடமிருந்து கூட அணி வரவில்லை. ஆனால் விலைமாதர்கள் தடையின்றி வருகின்றனர். சோசலிசத்தை வென்ற முதலாளித்துவம் உலகிற்கு அளித்திருக்கும் கொடை இதுதான்! இப்படி ரசிகர்கள் பீரைக் குடித்து, செக்சில் மூழ்கி, கால்பந்தையும் இரசிக்கிறார்கள்.

இப்படிக் கால்பந்தை சீரழித்த பன்னாட்டு நிறவனங்களின் தெரியாத முகம் ஒன்றும் உள்ளது. உலகக் கால்பந்தின் 60% பாகிஸ்தான் நாட்டில் சியால்கோட் எனும் நகரில் தயாராகிறது. சுமார் 2000 பட்டறைகளில் சுமார் 40,000 கொத்தடிமைத் தொழிலாளிகள் அற்பக் கூலிக்காக கால்பந்துகளை தைத்து வருகின்றனர். அடிடாஸ், நைக், பூமா போன்ற பிரபலமான விளை யாட்டு கம்பெனிகள் அனைத்தும் இங்கேதான் கால்பந்துகளைத் தயாரிக்கின்றன. நாளொன்றுக்கு சுமார் 50 ரூபாய் மட்டும் கூலி கொடுத்து கொடூரமாகச் சுரண்டிதான் இந்த நிறுவனங்கள் கோடிகோடியாய்க் கொள்ளையடிக்கின்றன.

கால்பந்து குறித்த சோகக்கதையில் இந்திய சோகத்தை மட்டும் சுருக்கமாகப் பார்ப்போம். இந்தியா உலகக் கால்பந்து நாடுகளின் தரவரிசையில் 117 ஆவது இடத்தில் சோம்பேறித்தனமாக அமர்ந்திருக்கிறது. "வாழைப்பழக் குடியரசு' என்று கேலி செய்யப்படும் மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து டிரினிடாட் மற்றும் டுபாக்கோ என்ற பத்து இலட்சம் மக்கள் தொகை கொண்ட நாடு கூட உலகக் கோப்பைக்காக தனது அணியை அனுப்பியிருக்கிறது. ஆனால் 100 கோடி மக்கள் தொகையில் ஒரு 11 பேரைக் கூட தயார் செய்ய முடியவில்லை.

இதுவும் விளையாட்டு குறித்த பிரச்சினையல்ல, இந்தியாவில் ஜனநாயகம் என்ன தரத்தில் இருக்கிறதோ விளையாட்டும் அந்த தரத்தில்தான் இருக்கும். ஆனால் வர்த்தகத் தரம் அந்த அளவுக்கு மோசமில்லை. இ.எஸ்.பி.என் விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனம் உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்ப சுமார் 55 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரங்களைப் பிடித்திருக்கிறதாம். சென்றமுறை டென் ஸ்போர்ட்ஸ் பத்து கோடிக்குத்தான் வர்த்தகம் செய்தது எனும் போது இது ஐந்து மடங்கு வளர்ச்சி!

இப்போது சொல்லுங்கள், கால்பந்து குறித்த கவித்துவமான நினைவுகளில் எது எஞ்சி நிற்கிறது? இன்றைய உலகமயச் சூழலில் கால்பந்து என்ற விளையாட்டு பன்னாட்டு நிறுவனங்களால் தோற்கடிக்கப்பட்டு விட்டது. இதில் ஒரு உண்மையான இரசிகர் என்ற முறையில் நாம் என்ன செய்வது?
நாமும் விளையாட வேண்டும். விளையாட்டு மைதானத்தில் அல்ல, அரசியல் களத்தில். சர்வதேச பாட்டாளி வர்க்க அணியில் சேர்ந்து உலக முதலாளித்துவத்தை எதிர்த்து ஆடும் ஆட்டத்தின் இறுதியில் நாம் கால்பந்தை மட்டுமல்ல, ஏனைய விளையாட்டுக்களையும் மீட்க முடியும். மனித குலம் தன்னை நெறிப்படுத்திக் கொள்ள கண்டெடுத்து வளர்த்த விளையாட்டுணர்வுக்குப் பொருத்தமான பொற்காலம் அப்போது, அப்போது மட்டுமே நிலவ முடியும்.

மு இளநம்பி

கால்பந்து சங்கமா, காசு புரட்டும் பன்னாட்டு நிறுவனமா?
சர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மேளனம் ஸ்விட்சர்லாந்தில் இலாப நோக்கமற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த சுவிட்சர்லாந்து? அதிகார வர்க்கமும் முதலாளிகளும் லஞ்சப்பணம், கள்ளப்பணம், கறுப்புப்பணம் இன்னபிற ஊழல் பணத்தை இரகசியமாக சேமிப்பதற்கு நம்பிக்கையான வங்கிகளைக் கொண்ட அந்த சுவிட்சர்லாந்து.

உலகக்கோப்பை மற்றும் இன்னபிற சர்வதேச போட்டிகளை நடத்தும் பிபா ஒரு வெறும் விளையாட்டுச் சங்கம் மட்டுமல்ல, பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் பெரும் வர்த்தக நிறுவனமும் ஆகும். அதில் மோசடி செய்த பணத்தை காப்பாற்றுவதற்கென்றே சுவிட்சர்லாந்தில் பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் இந்தப் பதிவினால் ஃபிபா வெறும் 4.5% வர்த்தக வரி செலுத்தினாலே போதும். ஃபிபாவின் தலைவராக இருக்கும் ஸ்லெப் பிளெட்டர் இவரும் அந்த நாட்டைச் சேர்ந்தவர்தான். கடந்த எட்டாண்டுகளாக தலைமைப் பதவியில் இருக்கும் இவர் பிபாவை மாபெரும் பணம் சுரக்கும் ஊற்றாக மாற்றியிருக்கிறார். 1930ஆம் ஆண்டு முதல் பிபா உலகக்கோப்பை போட்டிகளை நடத்தி வருகிறது.

1906ஆம் ஆண்டு பிபாவின் வருமானம் வெறும் 20,550 ரூபாய் மட்டுமே. ஒவ்வொரு உலகக் கோப்பையின் போதும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் மைதானம் முதலான கட்டுமானச் செலவுகளைப் பார்த்துக் கொள்ளுகின்றன. பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்கள் ஸ்பான்சர் தொகையாக பல்லாயிரம் கோடிகளைத் தருகின்றன. இது போக போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கான உரிமத் தொகையாக பல்லாயிரம் கோடி ரூபாய் வருகின்றது.

இப்படி ஒவ்வொரு ஆண்டும் எவ்வித முதலீடோ, செலவோ இன்றி பிபா கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றது. 2002ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது பிபாவின் நிகர இலபாம் 1300 கோடி ரூபாயாகும். 2006இல் செலவு போக 4,290 கோடி ரூபாய் வருவாய் வருமென மதிப்பிடப்பட்டிருக்கின்றது. இத்தொகையில் ஏழை நாடுகளின் சிறு நகரங்களில் பத்து இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் உருவாக்குவதாக இருந்தால் 42,900 நகரங்களில் எளிய முறையில் மைதானத்தைக் கட்டமுடியும்.

ஆனால், பிபாவோ கால்பந்தை வளர்ப்பதற்குப் பதில் காசை அள்ளுவதிலும் மோசடி செய்வதிலும் குறியாக இருக்கிறது. அப்படி சமீபத்தில் ஒரு ஊழல் விவகாரம் அம்பலமாயிருக்கிறது. ஐ.சி.எல் எனப்படும் பிபாவின் பினாமி நிறுவனம் ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறது. இதற்கு பிபாவின் கால்பந்துப் போட்டிகளினால் வரும் வர்த்தக நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. கட்டணச் செலவாக 1,500 கோடி ரூபாயும் தரப்பட்டது. இறுதியில் ஐ.சி.எ.ல் திவால் என அறிவிக்கப்பட அத்தனை ரூபாயும் சுருட்டப்பட்டது. இதில் பிபாவின் அதிகார வர்க்கம் மோசடி செய்துள்ளதை பி.பி.சி. தொலைக்காட்சியின் பனோரமா நிகழ்ச்சி சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. பிபாவின் தலைவரோ இதை ஒரு அறிக்கையில் பொய்யென மறுத்து விட்டு தன் வேலையைச் செவ்வனே செய்து வருகிறார்.
கால்பந்து:

நவீன கிளேடியட்டருக்கு பல்லாயிரம் கோடி கேளிக்கைச் செலவு
பண்டைய ரோமபுரி ஆட்சியில் மக்களைக் கேளிக்கையில் மூழ்க வைக்க கிளேடியட்டர் எனப்படும் அடிமைகளை சாகும் வரை சண்டையிட வைப்பார்கள். வருடம் முழுவதும் நடக்கும் இந்தப் போட்டிகளுக்காக நகரின் மத்தியில் பிரம்மாண்டமான மைதானத்தை பெருஞ்செலவு செய்து கட்டுவார்கள். தற்போது கால்பந்து போட்டிகளும் ஏறக்குறைய அப்படி மாற்றப்பட்டு விட்டன.

2002இல் ஜப்பானும் கொரியாவும் சேர்ந்து நடத்திய உலகக் கோப்பை மொத்த ஆட்டங்களையும் பார்த்த மக்களின் கூட்டுக் கணக்கு 3,000 கோடியாகும். இந்தப் போட்டிக்காக இரு நாடுகளும் மைதானங்கள் கட்டுவதற்காக மட்டும் 35,000 கோடி ரூபாயைச் செலவழித்தன. இதே தொகையை ஒரு இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிசைமாற்று வாரிய வீட்டைக் கட்டுவதாக இருந்தால் 35 இலட்சம் வீடுகளைக் கட்டலாம். அதாவது ஒன்றரைக் கோடி மக்களுக்கு வீடு கிடைக்கும். அல்லது சென்னை மாநகரைப் போன்று மூன்று மாநகரங்களைக் கட்டலாம்.

இவ்வாண்டு உலகக் கோப்பையை நடத்தும் ஜெர்மனி இதற்காக செலவழித்த தொகை 10,000 கோடி ரூபாயாகும். இதே தொகையில் ஐந்து வகுப்பறை கொண்ட ஒரு ஆரம்பப் பள்ளியை ஐந்து இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதாக இருந்தால் சுமார் இரண்டு இலட்சம் பள்ளிகளைக் கட்டலாம்.
இப்படி மைதானம் கட்டுவதற்காக பல்லாயிரம் கோடி செலவழிப்பதால் இந்தப் போட்டிகளை நடத்தும் நாடுகளுக்கு என்ன பயன் என்று கேட்கலாம். கட்டுமானத் தொழில், ஓட்டல், உணவக விடுதிகள், சுற்றுலா, விபச்சாரம், சிறுவர்த்தகம் என்று பலவழிகளில் இந்நாடுகளுக்கு வருமானம் வருகிறது.
ஜெர்மனியில் நடக்கும் போட்டியைக் காண மட்டும் சுமார் 30 இலட்சம் இரசிகர்கள் வந்து போவார்கள் என மதிப்பிடப்படுகிறது. இவர்கள் போட்டி நடக்கும் ஒரு மாதத்திற்கு தினசரி 3,000 ரூபாய் செலவழித்தால் ஜெர்மனியின் இலாபம் என்னவென்று தெரியவரும்.

Sunday, August 6, 2006

புலிகள் மூதூரில் நடத்தியது என்ன?

புலிகள் மூதூரில் நடத்தியது என்ன?

பி.இரயாகரன்
06.08.2006

து இராணுவம் மீதான தாக்குதல் அல்ல. முஸ்லீம்கள மீது மிகவும் திட்டமிட்டு நடத்திய ஒரு இனவெறி தாக்குதலே. இதன் போதே இராணுவம் தாக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான முஸ்லிம் மக்கள் திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் திட்டமிட்ட படுகொலைகள் நடந்துள்ளது. பல பத்து பேர் புலிகளால் கடத்தப்பட்டுள்ளனர். சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளது. சொத்துகள் நாசமாக்கப்பட்டுள்ளது. மிக மோசமான கொடூரமான நடத்தைகளால் பல பத்தாயிரம் மக்களின் புலம்பெயர்வுக்கே இது வித்திட்டுள்ளது. நடத்ததோ மறுபடியும் முஸ்லீம் மக்கள் மீதான புலிகளின் மற்றொரு இனவழிப்புத் தாக்குதல் தான்.

இந்த கொடூரத்தின் முழுமையான உண்மை, மெதுவாக ஆனால் அழுத்தமாக மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது. தமிழ் செய்தி ஊடகங்களின் வக்கிரமான உண்மைக்கு புறம்பான செய்திகளையும மீறி, இவை மனித இனத்தின் நாடி நரம்புகளையே உலுக்கும் வகையில் மெதுவாக கசியத் தொடங்கிவிட்டது.

பலரும் கருத முனைந்தது போல் அண்மைய மூதூர் யுத்தம் போரை நோக்கிய ஒரு நகர்வல்ல. அது குறுகிய சொந்த நலனை அடிப்படையாக கொண்டதும் தமிழ் மக்களுக்கு எதிரானதுமான, ஒரு குறுந்தேசிய வெறியாட்டம். இது நீரை பாதுகாப்பதற்கான புலிகளின் எதிர் யுத்தமுமல்ல. பேரினவாதம் நடத்திய திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் மீதான ஒரு யுத்தமும் அல்ல. மாறாக மறுபடியும் முஸ்லீம்கள் மீதான திட்டமிட்ட இனவெறித் தாக்குதலே.

மே இறுதி வாரத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வெளிவந்த துண்டுப்பிரசுரம் மூலம் விடப்பட்ட ஒரு எச்சரிக்கையின் அடிப்படையில் முழுமையாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
அந்தத் துண்டுப்பிரசுரம் கூறும் வாசகம் என்ன? இதுதான்.

'மூதூர் மக்களுக்கு

கடந்த காலங்களாக வடக்கு கிழக்கு தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதும் கடத்தப்படுவதும் அவர்களது சொத்துக்கள் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் சாதாரண செயலாக மாறிவிட்டது. இதில் உச்சக்கட்டமாக கடந்த காலங்களில் அரச துணைப்படைகளாலும், அவர்களோடு ஒன்றிணைந்துள்ள முஸ்லீம் ஆயுத அருவருடிக் குழுக்களாலும் மூதூர் பகுதியில் வைத்து பல தமிழர்கள் பட்டப்பகலில் ஈவிரக்கமற்ற முறையில் கட்டாக்காலி நாய்களைப் போல் இராணுவ துணைப்படைகளின் உதவியுடன் முஸ்லிம் ஆயுத குழுக்களால் நாளாந்தம் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அழிக்கப்படுகின்றனர்.
அவற்றைப் பார்த்து பரவசப்படும் முஸ்லிம் தலைமைகள் இனி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த இருபது வருடங்களாக நடந்து வரும் தமிழீழ தாயக மீட்புப் போராட்டத்தில் மூதூரில் நிகழ்ந்ததைப் போன்ற மானக்கேடான ஒரு நிகழ்வை எந்தவொரு தமிழனும் எந்தப் பிரதேசத்திலும் அனுபவித்தது கிடையாது. இதனால் பொறுத்தது போதும் இழந்தது போதும் தமிழீழ
தாயக மீட்பை விட மூதூரின் மீட்பு முதன்மையானதாக கருதி தமிழீழ தாயக மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை மூதூரில் தமிழர்கள் முஸ்லீம் ஆயுத அருவருடிக் குழுக்களால் கொலை செய்யப்பட்டதை எந்த ஒரு முஸ்லீம் தலைமையும் கண்டிக்கவும் இல்லை. அவர்களை தண்டிக்கவும் இல்லை.

இதனால் மானத்தை இழந்து உடமையை இழந்து. உயிரையும் இழந்து வாழ்வதை விட தமிழீழ மீட்புப் போராட்டத்தில் மூதூர் மீட்புப் போராட்டம் ஆரம்பித்து விட்டது. எனவே முஸ்லிம் மக்களே தங்களால் கண்டிக்கப்படாதவர்கள் எங்களால் தண்டிக்கப்படப் போகிறார்கள்.

தங்களுக்கும் இப்படுகொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று எண்ணும் மக்கள் மூதூரை விட்டு இன்னும் மூன்று தினங்களுக்குள் வெளியேறிவிட வேண்டும். அப்போது தான் எமது தமிழ் மக்களின் அகதி வாழ்வின் அர்த்தம் தங்களுக்கும் புரியும். இதையும் மீறி மூதூரில் தான் இருப்போம் என்று ஆவேச வார்த்தை பேசுபவர்கள் தமிழீழத்திற்கு எதிரானவர்களாகவே கருதப்படுவார்கள். ஏன் எமது மூதூர் மீட்பில் மாண்டும் போவார்கள்.
இது தங்களுக்கான விரட்டலும் அல்ல. பயமுறுத்தலும் அல்ல. எமது தமிழீழ தாயக மீட்புப் போராட்டத்தில் முதலில் மூதூர் மீட்புப் போராட்டம் ஆரம்பித்து விட்டது என்பதற்குரிய அழைப்புமணியே.

பொறுத்ததிற்காக தமிழன் பயந்தவன் அல்ல. மீட்பதற்காகவே அவன் பொறுத்துள்ளான் என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரியும்.
சொல்லிச் செய்பவன் தமிழனடா அதையும் அஞ்சாமல் செய்பவன் தமிழ் மறவனடா.


தமிழீழ தாயக மீட்புப் படை"

இது முஸ்லீம் மக்களுக்கு எதிராக மே இறுதிவாரத்தில் புலிகளால் மக்களின் பெயரில் வெளியிடப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரம். (கடும் எழுத்தால் அடையாளப்படுத்தி காட்டியது நாம்.) 'இன்னும் ஒருசில நாட்களில் தெரியும்" என்பதையே நடைமுறையில் நடத்திக்காட்டிய ஒரு தாக்குதலே இது. 'தமிழீழ தாயக மீட்பை விட மூதூரின் மீட்பு முதன்மையானதாக கருதி தமிழீழ தாயக மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்." என்ற கூறிய அடிப்படையில் ஒரு குறுந்தேசிய வெறியாட்டம் நடந்துள்ளது. அகதி ஆக்குவதும், அவர்களை கொன்று ஒழிப்பதும் என்பது எல்லாம் முன் கூட்டியே திட்டமிடப்பட்டவைதான், அதை இந்த முன்கூட்டிய துண்டுப்பிரசுரம் அம்பலமாக்குகின்றது.

மனித இனம் மீதான காட்டுமிராண்டித்தனம்

இலங்கை பேரினவாத அரசும், குறுந்தேசிய புலிகளும் நடத்துகின்ற இனவாத குறுகிய நடத்தைகள், மக்கள் வாழ்விற்கான அனைத்து சமூக ஆதாரங்களையும் தவுடுபொடியாக்குகின்றன. மக்கள் எதுவும் செய்ய முடியாத ஏதிலிகளாக, தமது மனித வாழ்விழந்து கொலைகார மனிதவிரோதக் கும்பல்களின் காலடியில் சிதைகின்றனர். மறுபுறத்தில் தேசியம் காட்டுமிராண்டித்தனமான ஒன்றாகவே தன்னை வக்கிரப்படுத்தி இழிந்து நிர்வாணமாகி நிற்கின்றது.

எங்கும் கோரமான இனவெறி அவலங்கள். மனித பிளவுகள். சமூக வக்கிரங்கள். குறுகிய மலினப்பட்ட இனவுணர்வுடன் நடத்தும் வக்கிரமான குதிராட்டம். இதுவே புலம்பெயர்ந்த பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு குஷியான பொழுது போக்கான வம்பளப்பாகிவிட்டது. இந்த மனித அவலத்தையிட்டு, இந்த இனவழிப்பில் மரணப்போரின் வாழ்வுபற்றி அக்கறையற்ற பொழுது போக்குக்கு, இதுவே அவர்களின் விதண்டவாதமான வம்பளப்புக்கு தீனியாகிவிட்டது.

கொல்லப்பட்டவனின் எண்ணிக்கை பற்றி கற்பனைப் பெருமைகள். யாரின் கட்டுப்பாட்டில் குறித்த பிரதேசம் என்ற பிரமைகள். இராணுவ வியூகம்பற்றி வகைவகையான தந்திரக் கதைகள். மனிதாபிமான யுத்தம் பற்றி வம்புப் பேச்சுகள். இப்படி பலவகையான, முண்டங்களாகவே பிறக்கும் முரணான அரசியல் வம்பளப்புகள். ஆனால் மனிதவினம் வரைமுறையின்றி சதா செத்துக் கொண்டிருக்கின்றது.

இதை தற்காப்பு என்றும், மட்டுப்படுத்தப்பட்ட யுத்தம் என்கின்றார்களே! யுத்தத்தின் நோக்கம் மக்களுக்கானதாக இருக்கின்றதா என்றால் இல்லை. ஒரு இளைய தலைமுறையை உயிருடன் பலியிட்டு, மக்களை நடுவில் நிறுத்தி கொன்று குதறுவது எதற்காக? குறுகிய சொந்த நலனை அடைய இனவாத வக்கிரங்கள் அவசியமாகிவிட்டது. முன்பெல்லாம் இனவாத பேச்சு அரசியல் செய்யவே போதுமானதாக இருந்தது. இன்று இனவாத கொலைகள், சூறையாடல்கள் அவசியமாகிவிட்டது.

ஏழை எளிய மக்களின் நீர் மீதான புலிகளின் தடை

புலிகள் நீர் மீதான தடையை தாம் செய்யவில்லை, மக்கள் தான் தடுத்தனர் என்று கூறிய படி, முஸ்லீம் மக்கள் மீதான இன அழிப்பை நோக்கி ஒரு யுத்தத்தை வலிந்து திணித்தனர். ஒரு நேரக் கஞ்சிக்கே வழியற்ற ஏழை எளிய தமிழ் மக்களின் பெயரில், இப்படி ஒரு அக்கிரமம் நடந்தேறியது. புலிகளின் பிரதேசத்தில் இந்த மக்களுக்கு புலியை விட அதிகாரம் உள்ளது என்று கூறியபடி, புலிகள் தமது சொந்தக் காதுக்கே பூச்செருகியபடி அரோகரா போடுகின்றனர்.

புலிகள் வலிந்து திணித்த நீர் மீதான தடை, கடந்தகால குடியேற்றத்தினை முடக்க முன்வைக்கப்பட்டதா எனின் இல்லை. தமது குறுகிய நலன் சார்ந்த பேரங்களுக்குள் இதை முன்னிறுத்தி, அரசியல் ஆட்டம் போட்டனர்.
சிங்கள் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப்பற்றி என்றுமே புலிகள் அக்கறைப்பட்டது கிடையாது. திட்டமிட்ட சிங்கள இனவாத குடியேற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் கூலித்தொழிலாளர்களையும், விவசாயிகளையும் புலிகள் சார்ந்து நின்றது கிடையாது. அவர்களுக்கே எதிரான அரசியலைக் கொண்ட வலதுசாரிப் புலிகள், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நிற்பதாக காட்டுவது அரசியல் வேடிக்கை.

இன்றைய புலித் தமிழ் தேசியம் திட்டமிட்ட குடியேற்றம் சார்ந்து உருவானது கிடையாது. குடியேற்றத்தின் போதெல்லாம் அதை அரசியல் சடங்குக்கு எதிர்த்தவர்களும் சரி, தீவிரமான ஆயுதப்போராட்டமாக மாறிய போதும் சரி, போராட்டமே யாழ் மேலாதிக்க குறுந் தேசியமாகவே வக்கிரப்பட்டது. கடந்த காலத்தில் குடியேற்றம் பற்றி ஒரு தெளிவான மக்கள் சார்புக் கோட்பாடே இருந்தது கிடையாது.

சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டு உருவாக்கிய இனவாத திட்டங்கள் மூலம் தமிழ் மக்களின் பராம்பரிய பிரதேசங்களிலேயே அவர்களை சிறுபான்மை இனமாக்கினர். இதை விரிவாக படிக்க இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்

சிங்கள பேரினவாதம் தமிழ் இனத்தை சிறுபான்மையாக்கி, அவர்களின் வாழ்வை நாசமாக்கிய போது, அதற்காக இன்றுவரை போராடியது கிடையாது. ஆனால் அதை இனவழிப்புக்கு நிகராக, மேலும் குறுகிய தமிழ் குறுந்தேசிய வக்கிரத்துடன் சொந்த இனத்தையே இன்று அழித்து வருகின்றனர். தமிழ் இனத்தையே இந்த மண்ணில் இருந்து தேசியத்தில் பெயரால் ஒடோட அடித்து விர ட்டப்படுகின்றனர். இதுவே இன்றைய உண்மை நிலையாகும்.
தமிழ் தேசியம் கூட தனது பாரம்பரிய பிரதேசத்தை மீட்டெடுக்க வேண்டுமெனின், அந்த பிரதேசத்தில் வாழும் அனைத்து இன மக்களையும் வென்று எடுக்கும் வகையில் அல்லது தமிழ் இனமல்லாத மக்களை நடுநிலைப்படுத்தும் வகையில் அணுகுவது அவசியமானது. அதாவது அந்த மக்களை குறுகிய இனவாதிகளின் அதாவது எதிரியின் கையில் சிக்கவிடாது தடுப்பது அவசியமாகும். ஆனால் தேசியத்தின் பெயரில் குறுகிய தமிழ் இனவாத வக்கிரத்துடன், அந்த மக்களை மேலும் எதிர்நிலைக்கு தள்ளிவிட்டதும், தள்ளிவிடுவதும் நிகழ்கின்றது. மற்றயை இனத்தைக் குறைந்தபட்சம் நடுநிலைப்படுத்துவது மட்டும்தான், வெற்றிகரமாக பாரம்பரிய தமிழ் பிரதேசத்தை மீட்டு எடுக்க உதவும்.

நீர் மீதான பயன்பாட்டு உரிமையை இனங்களுக்கு இடையிலான பகையுணர்வுடன் பிரித்து கையாள்வது என்பது, மிக மோசமான இழிவான ஒரு இனவாத நடவடிக்கையாகும். இங்கு அந்த நீரை நம்பி வாழும் சிங்கள மக்கள், பேரினவாத சுரண்டலுக்கும் உள்ளாகிய அடிமட்ட ஏழை எளிய விவசாயிகள். இதில் தமிழர் முஸ்லீம்கள் என கணிசமான ஒரு பகுதியினர் அடங்குவர். இந்த மக்கள் இனவாத கூத்தில் குளிர் காயும் மக்கள் கூட்டமல்ல. அன்றாடம் உழைத்து வாழும் கஞ்சிக்கே வழியற்ற பரம ஏழைகள்;. அவர்களிடம் புலிகளின் சொந்த நடத்தை சார்ந்த அச்சத்தை தவிர, அவர்கள் எந்த எதிர்வினையையும் ஆற்றுபவர்கள் அல்லர். ஆனால் நீர் தடுப்பு அவர்களின் அன்றாட வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் அழித்ததுடன், தீவிர இனவாதிகளின் பிடிக்குள் அவர்களை வலிந்து தள்ளியதையே தமிழ் மக்களின் பெயரில் புலிகள் செய்துள்ளனர்.

பேரினவாதம் பேசும் இனவாத கட்சியாக தம்மை முழுமையாக அடையாளம் காட்டும் ஜே.வி.பி முதல் அனைவரும் இதையே எதிர்பார்த்து, எலும்பை சுவைக்க காத்திருக்கும் ஓநாய்களாக களத்;தில் இறங்குகின்றனர். சொல்லப் போனால் புலிகளின் இனவாத நடத்தைகள் தான், ஜே.வி.பி போன்ற பேரினவாதிகளின் அரசியலை தக்கவைக்கும் அரசியல் நெம்பு கோலாகிவிடுகின்றது.

தண்ணீரை பெறும் வாதத்துடன் பேரினவாதம் புலிகள் மீது ஒரு தாக்குதலை தொடங்கியது. பேரங்கள் பேச்சுகள் நடக்கமுடியாத வகையில் புலிகள் செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகினற ஒரு நிலையில், புலிகள் தமிழ் மக்களின் கோரிக்கையை அரசு ஏற்க மறுக்கின்றது என்கின்றனர். அந்தக் கோரிக்கைகள் என்ன என்பதை மட்டும் அவர்கள் கூறவில்லை. பின்னால் ஒரு சில உலகவங்கி திட்டத்தை அரசு தடுத்ததாக கூறுவது நிகழ்கின்றது. ஒரு மோசடி அரசியல் மக்களின் பெயரால் புனையப்படுகின்றது.

மக்கள் நலன் எதையும் முன்வைக்க முடியாத பேரங்கள், குழு நலன் சார்ந்தே உருவானது. அரசு தனது பேரினவாத கோர முகத்துடன் தண்ணீருக்காக தாக்குதலை தொடங்கிய போது, அங்கு மக்கள் பற்றி மூக்கால் சிணுங்கி அழுதனர். தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையை பேசித் தீர்க்கப் போவதாக வாய்ச்சவடால் அடிக்கும் இந்தப் பேரினவாதம், அதை ஒரு தலைப்பட்சமாக கூட முன்வைக்கத் தயாரில்லை. இதை சுயமாக எந்தக் கட்சியும், ஏன் பேசி தீர்க்க வேண்டும் என்ற கூறும் கட்சிகளும் கூட முன்வைப்பது கிடையாது. இதை புலிகளும் கூட கோருவது கிடையாது. பரஸ்பரம் இனவாத யுத்தத்தின்; மூலம் தங்களை தக்கவைக்கும் மக்கள் விரோதிகளாகவே, தாக்குதலை தமது குறுகிய பேரம் பேசலுக்காக செய்ய விரும்புகின்றனர். தாக்குதலை தண்ணீரின் பெயரில் அரசு தொடங்கியது. வெற்றி பெற முடியாத தாக்குதலை திணித்து, சமூகங்களை பிளந்து போடுவதில் காட்டும் ஆர்வத்தை, பேசித் தீர்ப்பதில் ஒரு துளி கூட நேர்மையாக இரண்டு தரப்பும் செய்வதில்லை. யுத்தம் அடிநாத கோசமாக, இதை தொடங்கியது யார் என்று குற்றம்சாட்ட, பரஸ்பர காரணங்கள் கூறியபடி தாக்குதலை தொடங்குகின்றனர். இந்த வகையில் தண்ணீரை முன்வைத்து அரசு தாக்குதலை நடத்தியது.
ஆனால் இதற்கு முன்பாகவே தாங்களாக வலிந்து செய்த கொண்ட ஒப்பந்தத்தை மீறி, கிளைமோர்கள், கிரனைட்டுகள் மூலம் அன்றாடம் மனிதவுயிரைப் பலிவாங்கி வந்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட புலியல்லாத நபர்கள் இனம் கண்டு அழிக்கப்படுகின்றனர் பேரினவாதம் புலி சுத்திகரிப்பு படுகொலைகளை நடத்துகின்றது.

யுத்தமும், தாக்குதலும் முன் கூட்டியே நடக்கின்றது. தண்ணீர் இரண்டு தரப்புக்கும் ஒரு சாட்டு. தண்ணீரைப் பயன்படுத்தும் தமிழ் சிங்கள் மக்களையிட்டு எந்த அக்கறையுமற்ற வக்கிர புத்தி கொண்ட இனவாத யுத்தவெறியர்கள், யுத்தத்தை தாக்குதலை மக்களின் பெயரில் வலிந்து திணித்து தமது குறுகிய நோக்கத்துக்காகவே நடத்துகின்றனர்.

மூதூர் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலுக்கு, தண்ணீரை பயன்படுத்தியது

இது வரலாற்று ரீதியாக மன்னிக்க முடியாத, மன்னிப்புக் கேட்க முடியாத மற்றொரு அரசியல் குற்றமாகும். குற்றங்கள் தமிழ் மக்களின் பெயரில் மீண்டும் மீண்டும் தொடருகின்றது. தமிழ் இனத்துக்கு எதிராக, தொடர்ச்சியாக முஸ்லீம் மக்களை வலிந்து இது தள்ளிச் சென்றுள்ள ஒரு இழிவான நடவடிக்கையாகும்.

தமிழ் மக்கள் வாழாத ஒரு பிரதேசத்தின் ஊடாக, இராணுவம் மீதான தாக்குதல் என்றாலே தவறானது. எந்த அரசியல் அடிப்படையுமற்ற ஒரு நிலையில், முன்னைய காலத்தில் கசப்பான அனுபவங்களை முஸ்லீம் மக்களுக்கு உருவாக்கிய ஒரு இயக்கம், அந்த மக்கள் பிரதேசத்தின் ஊடாக தாக்குதலை தொடங்கிய போது அதன் விளைவு பாரதூரமானது. ஆனால் தாக்குதலின் நோக்கம் இராணுவம் மீதானதல்ல, முஸ்லீம் மக்கள் மீதானது என்பது படிப்படியாக அம்பலமாகி வருகின்றது. முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலை நடத்த, இராணுவம் மீதான தாக்குதல் அவசியமாகியது.

முஸ்லீம் மக்கள் மீதான திட்டமிட்ட இனவெறித் தாக்குதலே இன்று நிகழ்ந்துள்ளது. முன் கூட்டியே விடப்பட்ட எச்சரிக்கையின் அடிப்படையில், 'தாயக மீட்பை விட மூதூரின் மீட்பு முதன்மையானதாக கருதி தமிழீழ தாயக மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்" என்ற புலிகளின் "மக்கள்" கூற்றுக்கு இணங்க இது நிகழ்ந்தது. அந்த மக்களின் வாழ்விடங்கள் மேலான சிதைவின் மேல் நடத்தப்பட்ட புலிகளின் குறுந்தேசிய இனவாத தாக்குதல் என்பது, முன்கூட்யே அந்த மக்கள் மேல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இனச் சுத்திகரிப்பை எப்படி நடத்துவது என்பது முதல் யாரை கைது செய்வது என்பது வரை அனைத்தும் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்;தப்பட்டது. முஸ்லீம் மக்கள் மேலான புலிகளின் தொடர்ச்சியான அச்சமூட்டுகின்ற படுகொலை நடவடிக்கையில், இதுவும் ஒன்றாகிவிட்டது.

குறித்த மக்கள் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின், அந்த மக்களின் பெரும் பகுதி புலிகளின் சுற்றி வளைப்புக்குள் சிக்கிய பின் அவர்களை சிதைத்தனர். கசப்பான இழிவான நிலைக்கு அவர்களை இட்டுச் சென்றனர். அவர்களின் அவலங்கள், அந்த மக்கள் சொல்லியழுகின்ற துயரங்கள் எண்ணற்றதாகி அவை அன்றாடம் கசிந்து வெளிவருகின்றன.

பிரச்சனை என்னவென்றால் முஸ்லீம் மக்கள் பற்றி நல்லெண்ணப்பாடு புலிகளிடம் கிடையவே கிடையாது. இதையே பொதுவாக தமிழ் மக்கள் மத்தியில் சதா நஞ்சாக விதைக்கின்றனர். அங்கு இந்த நடத்தை நெறிகளே மிக மோசமானதும் இழிவானதுமான ஒன்றாகவே மாறிவிடுகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் பற்றியே நல்ல அபிப்பிராயம் அற்ற புலிகள், மக்களுக்கு ஜனநாயகம் அவசியமற்றது என்கின்றார்கள். இன்னுமொரு இனமான முஸ்லிம் மக்கள் பற்றி புலிகளின் கருத்து மிக இழிவானதும் மிக வக்கிரமானதுமாகும். முஸ்லீம் மக்கள் பற்றி வெறுப்பூட்டுகின்ற, இழிவுபடுத்துகின்ற, அடக்கியொடுக்கின்ற மனித விரோத வக்கிரத்துடன் ஆயுதபாணியாக்ப்பட்டவர்கள் தான் புலிகள். அவர்கள் முஸ்லீம் மக்களுக்கு அன்பையும் சமாதானத்தையும் அமைதியையும் போதிப்பவர்களல்ல.

அந்த மக்களை இழிவுபடுத்தி வெறுப்ப+ட்டும் வகையில் மீண்டும் மீண்டும் நடந்துவருகின்றனர். இது அம்பலமாகும் போது இதை மூடிமறைக்கவே அவசர நிவாரணம் என்ற பெயரில், பெயர்ப்பலகை அடித்து சில உதவிகளை வழங்கி அதை படமெடுத்து உலகுக்கு அனுப்புகின்றனர். இது போன்ற வேடிக்கையான மிக மோசமான இழிவாடலைத் தவிர, அவர்களால் எதையும் அந்த மக்களுக்கு இதைத் தாண்டிச் செய்ய முடியாது என்பதை மறுபடியும் புதிதாக நிறுவியுள்ளனர். அன்று யாழ் முஸ்லீம் மக்களை வெளியேற்றிய பின் அது தவறு என்ற போலி நாடகத்தை எப்படி இன்று நடத்திக் காட்டி வருகின்றனரோ, அதையே மறுபடியும் நிவாரணம் ஊடாக நடிக்கின்றனர்.

உண்மையில் இந்த புலி நடவடிக்கை, முஸ்லீம் மக்களை பேரினவாதத்தின் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் மிக மோசமாக இட்டுச் சென்றுள்ளது. பாராளுமன்ற கதிரை அரசியலைலைத் தவிர, அந்த மக்களை வழிகாட்டி செல்ல யாருமற்ற நிலையில், அந்த மக்களை பகடைக்காயாக மாற்றுகின்ற அபாயம் அதிகரித்துள்ளது. இராணுவரீதியாக தம்மீதான அவலத்தை எதிர்கொள்ள முடியாத சமூகத்தை, எதிரி இலகுவாக பயன்படுத்தும் வகையில் இப்படையெடுப்பும் அதன் பின்னான ஒடுக்குமுறையும் வழிவிட்டுள்ளது. எதிரி மேலும் வலுவாக வெற்றி பெற்றுள்ளான்.

இராணுவ ரீதியான தாக்குதல் வெற்றிகளை மட்டும் கொண்டு இதை நாம் ஆய்வு செய்ய முடியாது. ஒரு இராணுவம் என்ற வகையில் இராணுவமும் புலிகளும், மிக பெரிய வெற்றிகரமான தாக்குதலை நடத்த முடியும். அதிலும் பேரினவாத இராணுவம் கூலிப்பட்டாளமாக இருப்பதால், புலிகளின் திடீர் தாக்குதல் சார்ந்த வெற்றிகள் சாத்தியமானதே. ஆனால் இது அரசியல் வெற்றியாக மாறிவிடாது. அரசியல் வெற்றி என்பது மக்களை அரசியல் ரீதியாக தம் பக்கம் வென்று எடுப்பதில் தங்கியுள்ளது.

உண்மையில் திருகோணமலை முழுக்க தமிழ் சிங்கள, முஸ்லீம் மக்களிடையான நல்லுறவை மேலும் சிதைத்தன் மூலம், பதற்றமான வாழ்வியல் சூழலைத்தான் தமிழ் மக்களுக்கு பெற்றுத் தந்துள்ளது. நிம்மதியாக வாழ முடியாத அவலமும் சமூகச் சிதைவும் உருவாகுகின்றது. முஸ்லீம் மீதான புலியின் இனச்சுத்திகரிப்பை பயன்படுத்திய பேரினவாதிகள், புலிகளின் கட்டுப்பாட்டு ப் பிரதேசம் மீது நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல் மூலம், தமிழ் மக்கள் மேலான அழிவுகளும் சிதைவுகளும் செய்தியாக கூட யாரும் கொண்டுவரவில்லை. தமிழ் மக்களின் மேல் அக்கறையாக நடிக்கும் கயவர் கூட்டம் கூட, அதை ப+சிமெழுகிவிட்டன. இதை கூறும் தார்மீக பலத்தை, தவறான இழிவான புலி நடத்தைகள் மூடிமறைத்துவிடுகின்றது. அந்தளவுக்கு இழிவான ஒரு முஸ்லீம் விரோத நடவடிக்கை தான் மூதூர் சம்பவமாகும்.

தமிழ் மக்களின் தேசியத்துக்கு எதிரான, புலியின் குறுந் தேசியத்தின் குறுகிய நலன் சார்ந்த வக்கிர நடவடிக்கையே இதுவாகும். போலியான மன்னிப்பு கோரல்களைத் தாண்டியும், இது போன்ற இழிவான செயல்கள் கால இடைவெளியின்றி தொடரத்தான் செய்கின்றன. இதுவே இன்றைய எமது எதாத்தம்.