ஆபிரிக்காவின் இழிநிலைமைக்கு அந்த மக்கள் காரணமல்ல.
பி.இரயாகரன்
11.07.2006
முன்னைய தொடர்
பகுதி 1: உலகளாவிய நிதி மூலதனம் சமூகசாரத்தையே உறுஞ்சுகின்றது.
பகுதி 2: கடனும் வட்டியும் இன்றி, உலகமயமாதல் ஒரு கணம் கூட உயிர் வாழ முடியாது
பகுதி 3: உலகைச் சூறையாடும் நிதி மூலதனம் எப்படி உருவானது?
பகுதி நான்கு
அப்படியாயின் யார் காரணம்? முழுக்க முழுக்க கொள்ளையடிக்கும் ஏகாதிபத்தியங்களே காரணமாகும். ஏகாதிபத்திய சூறையாடல் தான், ஆபிரிக்காவின் இன்றைய நிலைமைக்கு காரணமாகும். இந்த பொருளாதார சூக்குமத்தை நாம் தெரிந்து கொள்வதே எம்முன்னுள்ள மிகப் பெரிய சவாலாக உள்ளது. அமெரிக்க மூலதனமும் ஐரோப்பிய மூலதனமும் ஆபிரிக்க மக்களை, கறுப்பு அடிமைகளாக கடத்தி சந்தைகளில் விற்றபோதே இது தொடங்கப்பட்டது. அவர்களின் உடல் வலுவை, உழைப்பாக தமது சொந்த சுபீட்சமான வாழ்வுக்காக பிழிந்து சுரண்டத் தொடங்கிய போதே, அந்த மக்களின் வாழ்வு திட்டமிட்டே அழிக்கப்படத் தொடங்கியது. அமெரிக்க ஐரோப்பிய மூலதனம் இப்படித் தான் அடிமைகளின் உழைப்பைக் சுரண்டிக் கொழுத்தது. இப்படி அமெரிக்கா கண்டம் சார்ந்த மூலதனம், அண்ணளவாக 10 கோடி கறுப்பின அடிமைகளையே ஆபிரிக்காவில் இருந்து சுரண்டலுக்காகவே கடத்திச் சென்றது. இதையே தான் ஐரோப்பிய மூலதனமும் செய்தது. இதன் மூலம் ஆபிரிக்காவின் அவலம் தொடங்க, மேற்கின் செழுமை வித்திடப்பட்டது. அடிமைகளின் இலவசமான கூலியற்ற அடிமை உழைப்பு, பெரும் செல்வக் குவியலை உருவாக்கியது. இந்த செல்வத்தின் இருப்பே சுதந்திரத்தின் கோட்பாடாகியது.
அன்று கூலியற்ற அடிமை உழைப்பு நவீன வர்த்தகமாக வேகம்பெற்ற போதே, சொந்த நாட்டு உழைக்கும் மக்களின் எதிர்ப்புகளால் தான் அடிமைமுறைமை எதிர்ப்புக்குள்ளானது. இதனால் மூலதனம் கொழுத்த இலாபத்தை தக்கவைக்க ஆபிரிக்க நாடுகளையே சொந்த காலனியாக்கத் தொடங்கியது. காலனிகள் மூலம் அந்த மக்களின் அடிப்படையான சமூகநுகர்வை புடுங்கிச் சுரண்டியதன் மூலம், மேற்கு நாடுகளில் செல்வம் படிப்படியாக மேலும் நவீனமாக குவியத் தொடங்கியது. மேற்கின் மூலதனம் இப்படித் தான் கொழுத்து வீங்கியது. இதைக் கொண்டே உலகமயமாதல் என்ற நவீன அடிமைத்தனம் புகுத்தப்பட்ட ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் நாம் இன்று உள்ளோம். இன்று இந்த நாடுகளை தமது அடிமை நாடுகளாக மேற்கு மாற்றிய வரலாற்றுப் போக்கில் தான், அந்த நாட்டு மக்களை கையேந்திய நிலைக்கு இட்டுச் சென்றனர்.
இன்றும் உலகில் அதிகளவிலான வளங்கள் செறிந்த இடம் ஆபிரிக்காவாகவே உள்ளது. ஆனால் அதிக வறுமையுள்ள இடமாக ஆபிரிக்காவே உள்ளது. 30 சதவிகிதமான யூரேனியம் ஆபிரிக்காவிலேயே உள்ளது. வைரத்தில் 96 சதவிகிதத்தையும், குரோமியத்தில் 90 சதவீதத்தையும், பிளாட்டனத்தில் 85 சதவிகிதத்தையும், கோபால்ட்டில் 50 சதவிகிதத்தையும், மாங்கனீசில் 55 சதவீதத்தையும், பாக்சைட்டில் 40 சதவிகிதத்தையும், செம்பில் 13 சதவிகிதத்தையும், பாஸ்பேட்டுகளில் 50 சதவிகிதத்தையும் ஆபிரிக்காவே கொண்டுள்ளது. இதைவிட இரும்பு, நிக்கல், ஈயம் என்று அனைத்து மூலவளங்களும் அங்கு செறிவாக உள்ளது. 10 ஆபிரிக்க நாடுகளே உலகின் எண்ணை வளத்தில் மிகப்பெரும் பகுதியை உற்பத்தி செய்கின்றன. இதைவிட பெரும் நீர் வளங்களையும் கொண்ட ஆபிரிக்காவே, இன்று உலகின் வறுமையின் கோரப்பிடியில் இருப்பதாக காட்டப்படுகின்றது. குடிக்க நீர் இன்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி அன்றாடம் இலட்சக்கணக்கில் மக்கள் உயிருடன் கொல்லப்படுகின்ற, ஒரு சபிக்கப்பட்ட பூமியாக உள்ளது. யாரால் சபிக்கப்பட்டது என்றால், அது ஏகாதிபத்தியத்தால் தான்.
ஆபிரிக்காவிலேயே இன்றும் பெருமளவில் கனிம வளங்கள் உற்பத்தி செய்யப்படுகின்ற இன்றைய நிலையிலும், இதுதான் அந்த மக்களின் அவலமான நிலை. ஏன் இந்த சமூக அவலம்? இவ் உற்பத்திகள் முழுக்கமுழுக்க தனியார் சொத்தாகி அன்னியனின் கட்டுபாட்டுக்குள் சென்றுள்ள நிலையில், சமூகத்தின் வறுமை அவலமாகவே காட்சியளிப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால் இன்றைய உலகளாவிய சமூகப் பொதுப்புத்தி மட்டம், இதை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் எதார்த்த உண்மைகள் புதைகுழியில் புதைக்கப்பட்டு, மனித பிணங்களை அதன் மேல் போட்டே நிரப்புகின்றனர். இதுவே இன்றைய ஆபிரிக்காவின் சமூக எதார்த்தம்.
இதன் மேல் தான் உதவி என்ற பெயரில், ஏகாதிபத்திய மோசடிகள் அரங்கேறுகின்றது. பொதுவாக சூறையாடும் கடனையே, பொதுஜன அறிவியல் மட்டத்தில் உதவியாக காட்டப்படுகின்றது. இதை நாம் உதவி என்று எடுத்தால், அதன் உண்மையான முகம் தான் என்ன? ஏழைநாடுகளுக்கு உதவி என்ற பெயரில் ஒரு டொலர் கடனாக கொடுக்கும் அதேநேரம், இதற்கு 1.30 டொலர் வட்டியாக செலுத்தும் நிலைமைக்கு நாடுகள் அடிமையாகிவிட்டன. இதைத்தான் கவுரவமாக மறைத்து, உதவியாக காட்டப்படுகின்றது.
இந்த உதவி இந்த நாடுகளையே அழித்துவிட்டது. 2000ம்: ஆண்டில் உலகில் 22 நாடுகளின் தேசிய வருமானத்தை விட கடனின் தொகை அதிகமாகிவிட்டது. உதாரணமாக ஜினே பிசு வின் கடன் அதன் தேசிய வருமானத்துடன் ஒப்பிடும் போது 417 சதவிகிதமாகவும், மாற்றினிகின் கடன் 240 சதவிகிதமாகவும், லோஸ்(டழயள) 205 சதவிகிதமாகவுள்ளது. உதவி என்பது சூறையாடல் தான். உதவி என்ற பெயரில் வட்டியை அறவிடும் கடனே வழங்கப்படுகின்றது. உலகத்தையே திவாலாக்கி சூறையாடும் கொடூரமே நடக்கின்றது.
இந்த திவாலான நாடுகளில் வட்டி அறவிடுவதற்கு அப்பால், அவர்கள் மூதலீடு கூட செய்வதில்லை. 2000 ஆண்டில் உலகளவிலான மொத்த முதலீடான 110000 கோடி டொலரில் 520 கோடி டொலர் மட்டும் தான், அதாவது 0.5 சதவிகிதமே இந்த நாடுகளில் முதலிடப்பட்டது. வறுமையான இந்த 49 நாட்டின் ஏற்றுமதியில் 50 சதவிகிதம் கனடா, அமெரிக்கா மற்றும் யப்பானுக்குச் செல்ல மிகுதி ஐரோப்பாவுக்கு சென்றது. செல்வம் அங்கு செல்ல, அந்த நாடு கடனில் மிதக்கின்றது. வறுமையும், நோயும், சமூக அவலமும் பாரிய அளவில் இதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
உண்மையில் மிக வறிய மிகப் பின்தங்கிய பிரதேசமாக மாற்றப்பட்ட ஆபிரிக்காவில் கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக செலவு செய்வதை விடவும், நான்கு மடங்கு அதிகமாகவே வட்டியை ஏகாதிபத்தியங்கள் அறவிட்டு வருகின்றன. இதனால் தான் 1994 க்கும் 2000க்கும் இடையில் ஆபிரிக்காவின் வறுமை 50 சதவிகிதத்தால் வளர்ச்சியுற்றது. ஆபிரிக்காவில் ஏற்படும் வறுமையின் அதிகரிப்பு, ஏகாதிபத்தியம் வசூலிக்கும் வட்டியில் இருந்தும் உற்பத்தியாகின்றது. வட்டி அறவீடுகளே மேற்கில் மேலும் மேலும் குளிர்ச்சியான செழுமையான வாழ்வை உருவாக்குகின்றது. கடனற்ற ஒரு நிலையில் செல்வத்தின் ஒருபகுதி (வட்டியாக கொடுக்கும் செல்வம்), ஏதோ ஒரு வகையில் மக்களைச் சென்றடைந்தது. ஆனால் இன்று உலகமயமாதல் என்ற வேள்விக் கிடங்கில், விட்டில் பூச்சியாக விழுந்துமடியும் மனித உயிர்கள், என்றுமில்லாதளவில் வளர்ச்சியை அடைகின்றது. கல்வி, அடிப்படை மருந்து, அடிப்படை உணவு மீதான சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, அப்பணமே வட்டியாக மேற்கு நோக்கி செல்வதை கண்காணிக்கும் உலக வடிவத்தின் பெயர் தான் உலகமயமாதல். உலகை வரைமுறையின்றி இலகுவாக சுரண்டுவதை துரிதமாக்கி, அதைக் கண்காணிக்கும் அமைப்புத்தான் உலகமயமாதல். இந்த கொள்ளைக்கார உறுப்புகள் தான் உலக வங்கி முதல் அமெரிக்க இராணுவம் வரையிலான மக்கள் விரோதக் கூலிக் கும்பல்களாகும். இதை சூக்குமமாக பாதுகாப்பது தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் என்ற மூகமுடிகள்.
ஆபிரிக்காவின் இன்றைய சமூக அடிமைத்தனத்துக்கு, மேற்கு உதவி என்ற பெயரில் வழங்கிய கடன்களே பிரதானமான காரணமாக அமைந்தன. இதன் வரலாற்றுப் போக்கில் சிலவற்றை குறிப்பாக பார்ப்போம். அடிமைத்தனத்தின் (பின்)நவீன சித்தாந்தமாக உலகமயமாதல் உருவாக முன்பு, வறிய ஆபிரிக்க நாடுகளின் கடன்கள் 1980 இல் 6060 கோடி டொலர் மட்டுமேயாகும். இது 1987 இல் 12900 கோடி டொலராகவும், 2000 இல் 20610 கோடி டொலராகவும், 2004 இல் 27850 கோடி டொலராகவும் மாறியது. கடன்களை திணித்த ஏகாதிபத்தியங்கள் தேசிய திவாலை உருவாக்கி, அங்கிருந்து செல்வங்களை தொடர்ச்சியாக இடைவிடாது கடத்துகின்றனர். ஆபிரிக்காவின் மனித உழைப்பு, மேற்கின் நுகர்வு வெறிக்கு இலவசமாகவும் அபரிமிதமாகவும் தீனிபோடுகின்றது.
இப்படி மேற்கின் சுகபோக வாழ்வுக்கு ஏற்ப திணிக்கப்பட்ட கடன், அவர்களின் சொந்த தேசிய வருமானத்தில் மிகப் பெரிய ஒரு பூதமாகவே உருமாறிவிட்டது. வறிய ஆபிரிக்க நாடுகளின் தேசிய வருமானத்தில் கடன் 1980 இல் 23.4 சதவிகிதமாக இருந்தது. இது 2000 இல் 66.1 சதவிகிதமாக அதிகரித்தது. 1980 இல் இக் கடன் ஆபிரிக்காவின் ஏற்றுமதி வருவாயில் 65.2 சதவிகிதத்தில் இருந்தது. இது 2000 இல் 180.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இப்படி மொத்த ஏற்றுமதியே கடனை (உதவியை) திருப்பிக் கட்டப் போதுமானதாக இருப்பதில்லை. 1980 இல் இந்த கடனுக்கான மீள் கொடுப்பனவு (வட்டியாகவும் முதலாகவும்) 670 கோடி டொலராக இருந்தது. இது 2000 இல் 1460 கோடியாகியது. இந்த மீள் கொடுப்பனவு ஏற்றுமதியில் 7.2 சதவிகிதத்தில் இருந்து 12.8 சதவிகிதமாகியுள்ளது. எப்படி செல்வவளமுள்ள ஆபிரிக்க வளங்கள் திட்டமிட்டு சூக்குமமாக திருடப்படுகின்றது என்பதையே, இந்த கடனுக்கான வட்டி மற்றும் மீள்கொடுப்பனவு எடுத்துக் காட்டுகின்றது. இந்தக் கொள்ளை பலவகையானது. ஆபிரிக்காவின் பெருமளவில் குவிந்துள்ள இயற்கை வளங்கள் அன்னிய பன்நாட்டு கம்பனிகளின் தனிப்பட்ட சொத்தாக மாறிவிட்டது. இதில் தேசிய அரசுகள் எந்த தலையீட்டையும் நடத்த முடியாத வகையில், கடன் நிபந்தனைகள் தனிமனித சுதந்திரம அதை உலக மயமாக்கியுள்ளது. அத்துடன் இந்த இயற்கை வளங்களின் விலையை, மிகமலிவான விலையில் மேற்கு வரைமுறையின்றி சூறையாடுகின்றது. ஆபிரிக்கா நாட்டு மக்களின் பிரதான உணவாக உள்ள சோளம், மேற்கின் மிருகங்களுக்கான உணவாக மாற்றப்பட்டு அடிமாட்டு விலையில் கட்டாயப்படுத்தி கடனுக்காக வட்டிக்காக மேற்கினால் வாங்கப்படுகின்றது. ஆபிரிக்க மக்கள் தமது உணவை இழந்து பட்டினி கிடக்க, மேற்குநாட்டு பண்ணை மிருகங்கள் அந்த உணவையுண்டு கொழுக்கின்றன. இந்த மிருகங்கள் சார்ந்த உணவை உண்ணும் மேற்கு மனிதனோ மேலும் அதீதமாகவே கொழுக்கின்றான். இப்படி அதீதமான மேற்கு நுகர்வு, ஆபிரிக்க மக்களின் பட்டினி மரணங்களின் மீது கட்டமைக்கப்படுகின்றது.
1983 இல் உலகில் எந்தவொரு ஆபிரிக்க நாடும் பெரும் கடனாளி நாடுகளின் கடன் பட்டியலில் இடம் பெறவேயில்லை. ஆனால் இன்று அப்படியல்ல. வறிய ஆபிரிக்காவின் மனித அவலங்களுக்கான அடிப்படையான சமூகக் காரணமே, ஏகாதிபத்தியங்களின் வரைமுறையற்ற சூறையாடல் தான் என்பதை இது துல்லியமாகவே எடுத்துக் காட்டுகின்றது. ஆபிரிக்காவில் பசியாலும், மருந்து இன்றியும் இறக்கும் கோடிக்கணக்கான மரணங்களுக்கு, இந்த ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதாரக் கொள்கைதான் காரணம். இதை இனியும் யாராலும் மறுக்கமுடியாது. கடனை அவர்களின் தலையில் சுமத்திவிட்டு, அதற்கு அறவீடுகள் என்ற பெயரில் அந்த நாடுகளை அடிமைப்படுத்தி கொழுக்கும், மேற்கத்திய சமூகக் கூறு தான் இதற்கான முழுப் பொறுப்புமாகும். கடனின் அளவு, ஒருநாளும் இந்த கடனை மீளக் கொடுக்க முடியாது என்ற நிலையை தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது. அவர்களின் சொந்த தேசிய வருமானத்தைவிடவும், அவர்களின் ஏற்றுமதியை விட கடன் அதிக உயரத்தில் நட்சத்திரமாகவே மின்னுகின்றது. ஆபிரிக்க மக்கள் இந்தக் கடனில் இருந்து மீள்வது என்பது இந்த சமூக அமைப்பை மறுக்கும் ஒரு புரட்சியின்றி, இந்தக் கடனுக்கு ஒருநாளும் முடிவு கட்டமுடியாது. தனிப்பட்ட மனிதன் சார்ந்து, தனிப்பட்ட நாடுகள் சார்ந்து, மனித இனத்தையே சூறையாடும் கொள்ளையை அடிப்படையாக கொண்ட கடனை, தரமறுக்கும் ஒரு புரட்சி தான் மக்களின் நலனை பேணுவதற்கான மாற்றுப் பாதையாக எம்முன்னுள்ளது.
கடனை கட்டும் வகையில் தேசிய உற்பத்தியும், கடன் கொடுத்தவனின் தேவைக்கு ஏற்ற ஒற்றைப் பொருளாதார உற்பத்தியுமாக முற்றாக ஆபிரிக்க பொருளாதாரத்தையே மாற்றி அமைத்துள்ளனர். இந்த ஒற்றைப் பொருளாதாரம் நாட்டின் சுயாதீனத்தையே இல்லாததாக்குகின்றது. ஏற்றுமதிக்கான இந்த ஒற்றைப் பொருளாதாரம் ஏகாதிபத்திய தேவைகளை பூர்த்தி செய்வதாக மாறியுளளது. இந்த வகையில் ஒரு சில நாடுகளின் ஏற்றுமதி ஒரு பிரதானமான ஒரு பொருள் சார்ந்ததாக மாறிவிட்டது. உதாரணமாக
சிம்பாவேயின் 71 சதவிகிதமானது செப்பு உற்பத்தியில் தங்கியுள்ளது.
புரண்டி 73 சதவீகிதம் கோப்பி உற்பத்தில் தங்கியுள்ளது.
ஜினே பிசு 74 சதவீகிதம் கறுப்பு காயூ உற்பத்தில் தங்கியுள்ளது.
ஜெமன் 84 சதவீகிதம் பெற்றோல உற்பத்தில் தங்கியுள்ளது.
மேலும் சில நாடுகளின் ஏற்றுமதி எதைச் சார்ந்து உள்ளது என்று பார்த்தால்
நாடு | உற்பத்திப்பொருள் | சதவிகிதம் |
பெனின் | பஞ்சு | 84 |
மாலி | பஞ்சு | 47 |
புக்கினோ பாசோ | பஞ்சு | 39 |
தாட்ஷ் | பஞ்சு | 38 |
ரூவண்டா | கோப்பி | 56 |
உகன்டா | கோப்பி | 43 |
எத்தியோப்பியா | கோப்பி | 40 |
நிக்ரகுவா | கோப்பி | 25 |
கொண்டுராஸ் | கோப்பி | 22 |
தான்சானியா | கோப்பி | 20 |
சாதோமா பிரின்சிப் | உயஉயழ | 78 |
குயானா | சீனி | 61 |
டாலாவி | புகையிலை | 61 |
மார்ட்னிக் | மீன் | 54 |
செகவ் | மீன் | 25 |
சாம்பியா | செப்பு | 48 |
நைஜீர் | யூரேனியம் | 51 |
பொலிவியா | இயற்கைவாயு | 18 |
காமுறுன் | பெற்றோல் | 27 |
இப்படி ஒற்றைப் பொருளாதார உற்பத்தி முறைகள் அந்த நாடுகளின் பொருளாதார கட்டமைப்பையே தகர்க்கின்ற வகையில், ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து வாழும் வகையில் உருவாக்கப்படுகின்றது. இதை உருவாக்கிய நிலையில் சந்தையைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்கள், செல்வத்தை அந்த மக்களின் பிணங்களின் மேலாக கறக்கின்றனர். சந்தையை முற்றாக தமக்கு சார்பாக தமக்கு இயல்பாக மாற்றிய பின், பொருட்களின் விலையை தாம் விரும்பியவாறு நிர்ணயித்து, அதை அடிமாட்டு விலைக்கு இட்டுச் சென்று சந்தையை திட்டமிட்டு நெருக்கடிக்குள்ளாக்கின்றனர். இதன் மூலம் நாடுகள் மேலும் மேலும் அடிமையாக்கின்றனர்.
மூன்றாம் உலகநாடுகளின் ஒற்றைப் பொருளாதாரத்தை உருவாக்கிய ஏகாதிபத்தியங்கள், அதை எப்படி அடிமாட்டு விலைக்கு இட்டுச் சென்றனர் என்பதற்கு ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம். விலைகள் டொலரில்
உற்பத்தி | ஒரு அலகு | 1980 | 1990 | 2001 |
கோப்பி | 100 கிலோ | 411.7 | 118.2 | 63.3 |
அதின்கனி | 100 கிலோ | 330.5 | 126.7 | 111.4 |
கடலை எண்ணை | தொன் | 1090.1 | 963.7 | 709.2 |
பால்ம் எண்ணை | தொன் | 740.9 | 289.9 | 297.8 |
சோயா | தொன் | 376 | 246.8 | 204.2 |
அரிசி | தொன் | 521.4 | 270.9 | 180.2 |
சீனி | 100 கிலோ | 80.17 | 27.67 | 19.9 |
பருத்தி | 100 கிலோ | 261.7 | 181.9 | 110.3 |
செப்பு | தொன் | 2770 | 2661 | 1645 |
ஈயம் | 100 கிலோ | 115 | 81.1 | 49.6 |
மிக மோசமான வகையில் பொருட்களின் விலைகள் சரிந்த போது, அதை உற்பத்தி செய்த மக்களின் வாழ்வு மிக மோசமானதாக மாறியுள்ளது. உண்மையில் உற்பத்தியாளன் என்ற நிலையை அவன் இழந்து வருகின்றான். நாடுகளின் சுயாதீனமோ திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. நாடுகள் தேசிய தனித்துவத்தை இழந்து அழிவது நல்லது என்று போற்றுவோர், இதை பச்சை நோட்டுக்கு பின்னால் குதூகலத்துடன் கூடிய வக்கிரத்தைக் கொண்டாடுகின்றனர். மறுபக்கத்தில் உற்பத்தியாளனுக்கு கிடைக்கும் விலை குறைந்த போதும், நுகர்வோர் அதே பொருளுக்கு கொடுக்கும் விலைகள் சீராக அதிகரித்தே வந்துள்ளது. இதில் சூழ்ச்சி என்னவென்றால் விவசாய உற்பத்திக்கான ஆதாரப் பொருட்களின் விலை அதிகரித்த போதும், உற்பத்தி விலை அதிகரிக்கவில்லை. மாறாக குறைந்துள்ளதை மேல் உள்ள தரவுகள் காட்டுகின்றது. உதாரணமாக அரிசி உற்பத்தியை எடுத்தால், உரம் கிருமிநாசினி, எண்ணை... போன்ற உற்பத்திக்கான ஆதாரப் பொருட்களின் விலை அதிகரித்த போதும், அரிசியின் ஏற்றுமதி விலை குறைந்தே வந்துள்ளது. நுகர்வோருகான சந்தை விலை அதிகரித்தே வந்துள்ளது. அதேபோல் மேற்கத்தைய நவீன தொழில்நுட்ப உற்பத்திக்கு மூன்றாம் உலக நாடுகள் வழங்கும் ஆதாரப் பொருட்களின் விலை குறைந்து வந்த போதும், மேற்கின் உற்பத்திக்கான விலை அதிகரித்தே வந்துள்ளது.
உள்ளடகத்தில் மூன்றாம் உலகநாடுகளின் உற்பத்திக்கான ஆதாரப் பொருட்களின் விலை அதிகரிக்க, மேற்கின் உற்பத்திக்கான ஆதாரப் பொருட்களின் விலை குறைந்து வந்துள்ளது. உற்பத்தியை எடுத்தால் மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தியான பொருட்களின் விலை குறைந்தும், மேற்கின் உற்பத்தியான பொருளின் விலை அதிகரித்து வந்துள்ளது. இங்கு மூன்றாம் உலக நாடுகள் இரண்டு முறைகளின் மொத்தமாக மேற்கினால் சூறையாடப்படுகின்றது. மேற்கில் இரண்டு முறைகளில் இலாபம் பெருக்கெடுக்கின்றது. இவை திட்டமிட்ட பொருளாதார அரசியல் சதிகள் மூலம், உலகமயமாதலால் கண்காணிக்கப்படுகின்றது.
இதன் மூலம் செல்வம் சிலரின் கையில் குவிவதை துரிதமாக்குகின்றது. மக்கள் ஏழ்மையில் சிக்குவது அதிகரிக்கின்றது. இந்த நிலையில் ஆபிரிக்காவில் ஒரு டொலருக்கும் குறைவாக பெறுவோர் 1990 இல் 75.8 சதவிகிதமாக இருந்தது. இது 2015 இல் 76.4 சதவீகிதமாகும் என்ற ஏகாதிபத்தியமே பெருமையாக அறிவிக்கின்றது. ஐரோப்பவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் வறுமையில் சிக்கியிருந்தோர் 1990 இல் 4.5 சதவீகிதமாக இருந்தனர். இன்று இது 17.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்படி வறுமையும், மனித இழிவும் பெருக்கெடுக்கின்றது.
ஆபிரிக்காவில் ஒரு டொலருக்கு குறைவாகவே நாள் ஒன்றுக்கு பெறுவோரை எடுத்தால்
1990 24.2 கோடி பேர்
2000 30.0 கோடி பேர்
2015 34.5 கோடி பேர் (2015 இது தான் நிலை என்று சர்வதேச ஆய்வுகள் உறுதி செய்கின்றனர்.)
வறுமை பற்றிய புள்ளிவிபரங்கள் கூட, உண்மையில் இதைவிட அதிகமாகும். தமது சொந்தமான கொடூரமான தன்மையை மறைக்க, உலகத்தை ஏமாற்ற புள்ளிவிபரங்களைக் குறைத்து காட்டுவது அன்றாடம் நிகழ்கின்றது. உதாரணமாக உலகவங்கி தனது அறிக்கையில் எண்ணை வளம் கொண்ட நைஜீரியாவில் 41.7 சதவீதம் பேரே ஒரு டொலருக்கும் குறைவாக பெறுவதாக அறிவித்தது. ஐக்கிய நாட்டு சபையோ இதை 75 சதவீதம் என்கின்றது. இப்படி உண்மைகள் அப்பட்டமாக மக்களுக்கு எதிராக உள்ளதை மூடிமறைக்கின்றனர். நைஜீரியாவின் எண்ணை வளத்தை மேற்கத்திய கம்பனிகள் கொள்ளையடிப்பதை மூடிமறைக்கவே, குறைத்துக் காட்டும் புள்ளிவிபரங்கள் அவசியமாகின்றது. எண்ணைக் கம்பனிகளின் வருமானமோ வருடாந்தம் பெரும் தொகையாக மாறி இலாபமாக பெருக்கெடுக்கின்றது.
இப்படி ஆபிரிக்க மக்களின் சமூக சிதைவு என்பது துல்லியமாக அதிகரித்து வருகின்றது. நேற்றைய வாழ்வை இன்று அவர்கள் இழப்பது, அந்த நாடுகளின் அந்த மக்களின் தலைவிதியாக மேற்கு திணித்துள்ளது. வாழவழியற்ற ஏழைகள் ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்படுகின்றனர். பின் அந்நாட்டு மக்கள் கையேந்தி பரிதாபிக்கும் காட்சிகளை உருவாக்கி, உதவியென்ற பெயரில் மேற்கு மக்களின் காதுக்கே பூவைக்கின்றனர். இப்படி ஒரு மனித இனத்தை சூறையாடும் அரசியல் வக்கிரத்தையே (பின்)நவீனத்துவம் அரங்கேற்றுகின்றது.
உதாரணத்துக்கு எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மனித அவலத்துக்கான காரணத்தைப் பார்ப்போம். எத்தியோப்பிய மனித அவலத்துக்கு (பஞ்சத்துக்கு) மழை மேல் குற்றம் சாட்டும் பன்நாட்டு நிறுவனங்களும், ஏகாதிபத்தியங்களும் உண்மையான தமது சொந்த குற்றத்தையே மூடிமறைக்கின்றனர். 1960 இல் உலகவங்கி ஆவாஸ் பள்ளத்தாக்கில் கட்டிய அணைதான், 10 லட்சம் மக்களை கொன்றதுடன் 80 லட்சம் மக்களை நிரந்தரமான பட்டினிக்கு இட்டுச் சென்றது. உலகவங்கி வலிந்து கட்டிய அணை, மக்களின் அன்றாட நீர் தேவையையும், மேச்சல் நிலங்களின் வளத்தையும், விவசாய நிலத்துக்கு கிடைத்து வந்த நீரையும் தடுத்து நிறுத்தியது. இந்த அணை மூலம் உலகவங்கி, ஆபிரிக்க மக்களுக்கு அவர்களின் நீரை இல்லாததாக்கியது. இந்த நீரை ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, பிரிட்டன் மற்றும் பல்வேறு பன்நாட்டு நிறுவனங்கள் உருவாக்கிய பெரும் வேளாண்மை நிறுவனத்துக்கு திட்டமிட்டு திருப்பிவிடப்பட்டது. அந்த மக்கள் இன்று குடிக்கக் கூட நீர் இன்றி அலைகின்றனர். நீரோட்ட பகுதியில் வாழ்ந்த 1.7 லட்சம் மக்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றி, வீதிகளிலும் அகதி முகாங்களிலும் தள்ளினர். 1972 இல் இப்படி வெளியேற்றப்பட்ட மக்களில் 30 சதவிகிதமான மேச்சல் இன மக்கள் உயிர் இழந்தனர். தொடர்ந்தும் நீர் இன்றி உற்பத்திகளை இழந்த வரண்ட பிரதேச மக்கள் பட்டினியால் கொல்லப்பட்டனர். நீரை பெற்ற பன்நாட்டு வேளாண்மை நிலங்களில் உருவான உணவுகள், மேற்கு நோக்கி அணியணியாகவே கடத்தப்பட்டது. அந்த பண்ணைகளில் உற்பத்தி செய்த பொருட்களை ஆபிரிக்காவின் ஏழை எளிய மக்கள் வாங்கும் திறனற்றவராக இருந்ததுடன், அது டொலருக்கு விற்கப்படும் சர்வதேச சந்தைக்கு சென்றது. இதைக் கொண்டு மேற்கின் கால்நடைகள் கொழுக்க வைக்கபட்டபோது, மக்கள் எலும்பும் தோலுமாக மடிவதைத்தான், உலக ஜனநாயகத்தின் சுதந்திரமாக நியாயப்படுத்தப்பட்டது.
இதற்கு இயற்கை மேல் குற்றம் சாட்டியதுடன், இதனால் உருவான யுத்தத்தையே காரணம் என்று பூச்சூடினர். ஆபிக்காவின் பொதுவான இன்றைய யுத்தங்கள் யார் சூறையாடுவது என்பதில் ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகளால், அவர்களின் கைக்கூலிகளுக்கு இடையிலான ஒரு யுத்தமாகவே உருவாகின்றன.
மறுபக்கத்தில் சமூகத்தில் பற்றாக்குறை ஏற்படும் போது, பற்றாக்குறையை ஏற்படுத்தியவன் அதை சமூகப் பிளவுகள் மூலம் திசைதிருப்பி மோதவிடுகின்றான். இதனால் சமூகங்களுக்கு இடையில் மக்கள் விரோத யுத்தங்கள் ஏற்படுகின்றன. பின் யுத்தம் தான் மனித அவலத்துக்கு காரணம் என்று கூறுவது, ஏகாதிபத்தியத்தின் அரசியல் அகராதியில் வழமையான ஒரு அரசியல் மோசடியாகும். எத்தியோப்பிய பஞ்சத்தை தடுக்க, குறித்த அந்த ஏகாதிபத்திய அணையை தகர்த்தாலே போதுமானது. அந்த மக்களின் நிலங்கள், அந்த நீரில் குளிர்வது போல் அந்த மக்களின் வாழ்வும் குளிரும். ஆனால் உலகத்தில் செல்வத்தினை வைத்திருப்பவர்களின் சூறையாடும் ஜனநாயகத்துக்கு இது எதிரானதாகவே, அவர்கள் கூக்குரலிடுவர். இதையே அவர்கள் பயங்கரவாதம் என்பர். இதில் வேடிக்கை என்னவென்றால் குறித்த அணையைக் கட்ட வாங்கிய பணத்துக்கு கூட, எத்தியோப்பிய ஏழை மக்கள் தான் வட்டி கட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த நீரை நுகர்பவன் அல்ல. இது உலகளாவிய பல அணைகளுக்கும் பொருந்தும். மக்களின் எதிர்ப்பை மீறிக் கட்டப்படும் ஏகாதிபத்திய அணைக்கான அவர்களின் பணத்துக்கு கூட, எதிர்க்கும் மக்களே வட்டி கட்டுவதுடன், தமது சொந்த வாழ்வையும் அவர்களுக்காக இழக்கின்றனர். அவர்கள் தமது சொந்த நீர் வளத்தை அன்னியனிடம் இழந்தது மட்டுமின்றி, தமது சொந்த விவசாய நிலத்தையும் கூட அவனிடம் இழந்துவிடுகின்றனர். தமது சொந்த கால்நடைகளைக் கூட இழந்தனர். எந்த அன்னியனிடம் இதையெல்லாம் இழந்தனரோ, அவர்கள் இதை இழக்க வைக்க திட்டமிட்டு திணித்த கடனுக்கு கூட இன்றும் எத்தியோப்பியன் வட்டி கட்டுகின்றான். இது எடுப்பான ஒரு சிறந்த உதாரணம் மட்டும்தான். இதைத் தான் உலககெங்கும் கடன்கள் செய்கின்றன.
ஏழ்மை எப்போதும் எங்கும் வசதியானவனின் வாழ்வை மேலும் வளமாக்கின்றது. ஒரு அமெரிக்கன் ஒரு சோமாலியனை விட 2, 3 மடங்கு அதிகமான கலோரியை பெறமுடிகின்றது. அதாவது ஒரு அமெரிக்கன் ஒரு நாளைக்கு சாராசரி 3600 கலோரியை பெறுகின்ற நிலையில், ஒரு சோமாலியன் சராசரி 1500 கலோரியையே பெற முடிகின்றது. இதற்குள்ளும் பாரிய ஏற்றத் தாழ்வுகள் உண்டு. இது எப்படி சாத்தியமாகின்றது. இதன் சூக்குமம் தான் என்ன? இதை புரிந்து கொள்ளமுடியாத ஒரு நிலையில், மந்தைகளாக நாம் வாழ வைக்கப்படுகின்றோம் என்றால் மிகையல்ல. உலக புரத வளத்தில் பெரும்பகுதி பண்க்கார நாடுகளின் கால்நடைகளுக்கு உணவாகின்றதே, இது எப்படி சாத்தியமாகின்றது? இதற்காகவே மனித உணவை புடுங்கும் உலகமயமாதல் சூறையாடும் கொள்கையை நாம் எப்படி புரிந்துகொள்வது.
ஆபிரிக்காவிலேயே செல்வவளமிக்க தென் ஆபிரிக்காவில் வாமும் இரண்டு கோடி கறுப்பின மக்களுக்கு சொந்த வீடும், விவசாயம் செய்ய நிலமும் இன்றியே வாழ்கின்றனர். பாராளுமன்றத்தில் கறுப்பின தலைவர்கள் ஆட்சிக்கு வந்துவிடுவதன் மூலம், வெள்ளையினத்தவன் இனவெறிக் கொள்கை மூலம் சூறையாடியவை பகிரப்பட்டுவிடுவதில்லை. அங்கு சுரண்டல் அங்கீகரிக்கப்பட்டு தனிமனித சொத்துரிமை காப்பற்றப்பட்ட நிலையில், அந்த மக்கள் பரிதாபகரமான நிலையில் இழிந்தே வாழ்கின்றனர்.
உலகில் வறுமையும், அடிப்படை தேவை மறுக்கப்படுவதும் இந்த சமூக பொருளாதார உறவுகளின் உள்ளடகத்தில் இருந்தே உற்பத்தியாகின்றது. இதை மாற்றாமல் உலக மக்களின் வாழ்வு என்பதே சாத்தியமற்றது. சமூகமாக அதுவே உலகமாக இழிந்து கிடப்பதை சமூக பொருளாதார உறவு உருவாக்கிவிடுகின்றது. கார்ல் மார்க்ஸ் மூலதனத்தில் கூறியது போல் 'பொருளியல் நாடக நடிகர்கள் உணர்வில் இன்றியே அவர்கள் தீட்டாமலேயே, அவர்கள் தம் பிடிக்குள் படாமலேயே, தாமாகவே சமுதாய உறவுப் பிணைப்புகள் உருவாகிவிடுகின்றன." என்றார். இந்த அவலமான இழிநிலையை எமது பொதுவான அறிவியல் மட்டம் பகுத்தாய்ந்து அடையாளம் காணமுடிவதில்லை. அந்தளவுக்கு இந்த சமூக பொருளாதார உறவுகளை நியாயப்படுத்தவும் அல்லது எம்மை அறியாமல் அதன் சமூக பொருளாதார எடுபிடிகளாகி விடுகின்றோம்.
பின் நாமே போலியாக பீற்றிக்கொள்ளும் வகையில், வறுமைக்கான காரணத்தை வாரி சமூகத்தின் மீதே துப்புகின்றோம். ஆபிரிக்காவின் நிலைமை பற்றி, அங்கு அன்றாடம் இயற்கையின் பெயரில் மூலதனத்தின் சூறையாடலால் கொல்லப்படும் வறிய மக்களின் அவலத்தையிட்டு நாம் கண்டு கொள்ள மறுப்பது இப்படித் தான்.
இன்று வறிய நாடுகளாக காட்டப்படும் உலக வரைபடத்தையே உருவாக்கியவர்கள் யார்? பயங்கரவாதம் பற்றி மூச்சுக்கு மூச்சு தம் பிடிப்பவர்களும், ஜனநாயகம் பற்றி பிதற்றுவோர் அல்லாத வேறு யாருமல்ல. காலனீயம் வேர் ஊன்றி வந்த 1800 களில் உலக உற்பத்தியில் 44 சதவீதத்தை வளரும் நாடுகள் உற்பத்தி செய்தன. 1950 இல் 17 சதவீதமாக இது குறைந்து போனது. 1980 இல் 21 சதவீதமாக கூட இது அதிகரித்தது. இந்த இடைக் காலத்தில் 8 சதவீதத்தால் மக்கள் தொகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் 21 சதவீதம் உற்பத்தி உலகமக்களின் 75 சதவீதமானோருக்கு பங்கிடப்பட்ட வேண்டிய நிலையும் உருவானது. இங்கு 1950 க்கும் 1980 க்கும் இடையில் ஏற்பட்ட 4 சதவீத அதிகரிப்பு இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஏற்பட்ட காலனீய நாடுகளின் விடுதலையுடன் தொடர்புடையதாக இருந்தது. அத்துடன் உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட சீனா, தேசிய விடுதலைப் போராட்டத்தில் வென்றதுடன், சோசலிசத்தை நோக்கி முன்னேறியது. இதனடிப்படியில் ஏற்பட்ட வளர்ச்சி, பின்னால் நவகாலனியாகிச் சிதைந்து போனது. இன்று மூன்றாம் உலகம் மேற்கின் உற்பத்தி மையமாக மாறிவருகின்றது. இந்த உற்பத்தியை அந்த மக்கள் நுகர்வதில்லை. ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாறிவிட்டது. எத்தியோப்பாவின் நீர்வளத்தை சுரண்டி அந்த மக்களை பட்டினியில் சாவடிக்கும் நிலையில், அந்த நாட்டின் உற்பத்தி நாட்டை விட்டே வெளியேறுகின்து.
முன்றாம் உலகமக்கள் 200 வருடங்களுக்கு முன் தாம் தமது தேவை கருதி உற்பத்தி செய்து தாமே நுகர்ந்த சொந்த வாழ்வையே இன்று இழந்து நிற்கின்றனர். மத்திய வட ஆபிரிக்காவில் உள்ள 46 நாடுகளை எடுத்தால், 1995 க்கு முந்திய 20 வருடத்தில் நபர்வாரியான தானிய உற்பத்தி 16.5 சதவிகிதத்தால் வீழ்ச்சி கண்டது. யாரால் இது நடக்கின்றது என்பதையே மேலே காணமுடிந்தது. உலக வர்த்தகத்தில் ஆபிரிக்க கண்டத்தின் பங்கு 4 சதவீதம் மட்டுமாக மாறிப்போனது. இதிலும் பெரும்பாலானவை எண்ணை வயல்கள் ஆகும். இவை கூட ஏகாதிபத்தியங்களுக்குத் தான் சொந்தமானவை. உலகின் அதிக கனிம வளங்களைக் கொண்ட ஆபிரிக்கா, உலக உற்பத்திக்கு மிக மலிவான விலையில் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலைக்கு தாழ்ந்துள்ளது. மிக மலிவான விலையில் மூல வளங்களை அபகரித்து அதைக் கொண்டு செய்யும் பொருட்கள், அதிவுயர் சந்தை விலைக்கு சந்தைப்படுத்தப்படுகின்றது. மூல பொருளுக்கும் உற்பத்தி செய்த பின்னர் பொருளும் கிடைக்கும் விலையில் உள்ள இடைவெளி பல மடங்காக மாறிவிட்டது. இது உணவு உற்பத்தியிலும் கூட இதுவே நிகழ்கின்றது. வாங்கி விற்பதற்கு இடையில் மிகப் பெரிய இலாபம் சம்பாதிக்கப்படுகின்றது. உன்னதமானதாக கூறும் இந்த அமைப்பிலேயே திட்டமிட்டு ஒரவஞ்சகமாகவே, உற்பத்தி மற்றும் வளங்களுக்கு சந்தை விலை கிடைக்காத நிலை உருவாக்கப்படுகின்றது. அடிமாட்டு விலைக்கு சமூகத்தை இழிநிலைப்படுத்தி விடுவதன் மூலம், அங்கு வறுமை தலைவிரித்தாட வைக்கப்படுகின்றது. கையேந்தி நிற்கும் பரிதாபகரமான நிலையில் உற்பத்திகள் செய்யப்படுகின்றது.
ஏகாதிபத்தியங்களிடம் நேரடியாகவே கையேந்தி வாழும் நிலைக்கு மக்களை தள்ளிவிடுகின்றனர். பின்னர் வீசியெறியும் சோற்றுப் பருக்கையைக் காட்டி தம்மை மனிதாபிமானமுள்ளவராக காட்டிக் கொள்கின்றனர். இந்த நிலையில் உதவி அமைப்புகள் மற்றும் உழைப்பு அல்லாது கையேந்தி வாழும் நிலைக்கு சில நாடுகளில் பெரும்பான்மை மக்களை தள்ளியுள்ளனர். சோமாலியாவில் 75 சதவீகிதமான மக்கள் இந்த நிலையை அடைந்துள்ளனர். இதே போன்று புறூண்டியில் 66 சதவிகிதமானவர்களும், கொங்கோவில் 64 சதவிகிதமானவர்களும், ஆப்பகானிஸ்தானில் 58 சதவிகிதமானவர்களும், எரித்திரியாவில் 57 சதவிகிதமானவர்களும், தாயிட்டியில் 56 சதவிகிதமானவர்களும், மொசாம்பிக்கில் 54 சதவிகிதமானவர்களும் அங்கோலாவில் 51 சதிPகிதமானவர்களும் இயற்கையான உழைப்பின் ஆற்றலை ஏகாதிபத்தியத்திடம் இழந்து கையேந்து நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். அதாவது 50 ஆபிரிக்கா நாடுகளில் 30 நாடுகள் அல்லது 20 சதவீதமான மக்கள் இந்த நிலைக்கு தரம் தாழ்த்தப்பட்டுள்ளனர். இதைப் போன்று தென் அமெரிக்காவில் வெனிசுலா, கொண்டூராஸ் போன்ற ஏழு நாடுகளில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆசியாவில் 10 நாடுகளில் இந்த நிலை உருவாகியுள்ளது. இதில் ஆப்கான் உள்ளிட மங்கோலியில் 42 சதவீதமானவர்கள் இந்த இழிநிலைக்குச் சென்றுள்ளனர். முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான தாஷ்கிஸ்தான், அஜர்பெய்சான் போன்ற நாடுகளிலும் இந்த நிலை உருவாகியுள்ளது.
உலகமயமாதல் பொருளாதாரக் கொள்கை கையேந்தி வாழும் நிலைக்கு அதிகளவு மக்களை தரம்தாழ்த்தி வருகின்றது. உழைப்பில் இருந்து மட்டுமல்ல, அவர்களின் சொந்த வாழ்விடங்களை விடNட துரத்தி, சிறப்பு பொது அகதி முகாங்களை உருவாக்குகின்றனர். இந்த அகதி முகாம்கள் சாராம்சத்தில் மேற்கில் உள்ள மிருகப் பண்ணைகளை ஒத்ததே. மேற்கில் மிருக பண்ணைகள் அதிக கொழுப்பேறும் வகையில் இந்த மக்களிடம் சூறையாடி உணவிடப்படுகின்றது. ஆனால் அகதி முகாம்களில உயிருடன் வாழ்வோருக்கு எஞ்சியுள்ள கொழுப்பே கரைந்து செயலிழந்து இறந்து போகும் வகையில் தான் உணவிடப்படுகின்றது. அதுவும் ஏகாதிபத்திய மரபு மாற்றுப் பரிசோதனை மூலம் உற்பத்தியாகும் உணவே தமது சொந்த பரிசோதனைக்காக வழங்கப்படுகின்றது. அதாவது நாசிய யூத வதைமுகாமுக்கு நிகராகவே, அதேயொத்த வகையில் உலகெங்கும் பல கோடி மக்களை ஏகாதிபத்தியம் இப்படி இழிவாடி நரைவேட்டையாடுகின்றது.
இதை வழிநடத்தும் உலக வங்கியோ தனது சொந்த பெருமையை, தனது சொந்த முட்டாள் தனத்தின் மேல் பாராட்டத் தயங்குவதில்லை. உலகவங்கி 2004 ம் ஆண்டுக்கான தனது அறிக்கையில் ஆபிரிக்காவின் ஏழ்மை 8.2 கோடியால் அதிகரித்துள்ளாதாக அறிவித்தது. ஆபிரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது என்று அறிவித்தது. கடுமையான வறுமை 1990 இல் 47.4 சதவீகிதமாக இருந்தது. இது 1999 இல் உயர்ந்தது. வளர்ந்துவரும் நாடுகளின் ஆயுள் சராசரி மட்டம் 47 ஆண்டுகளாக குறைந்து போனது. மேற்கில் சராசாரி ஆயுள் அதிகரித்துச் செல்ல, ஏழைநாடுகளில் அது குறைகின்றது. மேற்கின் சூறையாடல் இதைத் தவிர வேறு எதையும் வழிகாட்டுவதில்லை.
கார்ல் மார்க்ஸ் மூலதனத்தில் அமெரிக்கா அடிமைகள் பற்றி கூறும் போது '..நீக்ரோவிடம் மிதமிஞ்சிய உழைப்பு வாங்கும் கட்டாயம் ஏற்பட்டது. சொந்தக்காரர் முதலாளிகள் கணக்கீட்டின்படி நீக்ரோ ஆயுளை 7 ஆண்டுகளாக்கினர். கொடிய வேலை வாங்கி" அவர்களின் உழைப்பின் வளத்தை அழித்தே சூறையாடினர். இதையே இன்றும் (பின்)நவீனமாக செய்கின்றர். இதன் மூலம் அன்று மட்டுமல்ல இன்றும் வெள்ளையினத்தின் செல்வம் பெருகியது. உழைப்பின் சூறையாடல் தான் செல்வத்தின் இருப்பிடமாகின்றன. சூறையாடலுக்கு உள்ளாகுபவன் வறுமையிலும் இல்லாமையிலும் நலிந்து ஒடிந்து போகின்றான்.
மார்க்ஸ்சின் அதே நூலில் இதுபோன்ற மனித அவலத்தையே எடுத்துக்காட்டுகின்றாh. 'ஜியார்ஜியா நெற்பயிர் நிலமும் மிசிசிபி ஆற்றுப்படுகைச் சதுப்பு நிலங்களும் மனித உடலுக்குப் பகையானவை. அங்கு உழைக்கும் அடிமைகள் அகால மரணம் எய்தினர். அடிமை அகால மரணமுற்றால் பேரிழப்பில்லை. அமெரிக்க நில முதலாளிகளுக்கு ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைச் சந்தையில் இடையறாமல் பிடித்துக் கொண்டு வரப்பட்ட வண்ணம் இருந்தனர். வர்ஜீனியா, கெண்டகி ஆகிய மாநிலங்கள் நீக்ரோ அடிமைகளின் வற்றாத ஊற்றுக்களாக இருந்தன." இந்த மனித அவலத்தை யாரும் கவிபாடவில்லை. அமெரிக்க நாகரிகம் பற்றியே எப்போதும் நக்கிய எலும்புக்காகவே பெருமை பேசுகின்றனர். அந்த மக்கள் கொள்ளையிட்டு, அதில் ஆடம்பரமாக கட்டிய மாடமாளிகையில் இருப்பவர்களின் கவர்ச்சி தான் பேசும் பொருளாகியுள்ளது. ஒண்டி வாழவும், உண்டு வாழவும் வழியற்ற ஏழை அடிமைகளையிட்டு யாரும் புலம்பவதில்லை. மார்க்சியவாதிகள் மட்டும் தான், உலகில் அவர்களுக்காக போராடுகின்றனர். கொள்ளையிட்டவனும், சூறையாடுபவனும் வீசும் எலும்பை சுவைக்க ஒரு கும்பல், அதில் ஒரு பகுதியை மக்களுக்கு கொடுப்பதாக காட்டி நக்கித் தின்பவன் மூலம், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக காட்டுவதே இன்று நிகழ்கின்றது.
ஆனால் தொடர்ந்து கொள்ளையையும், சூறையாடலையும் நடத்துகின்றனர். அதில் ஒரு பகுதியை, நிலப்பிரபு பண்ணையார் போல், அடிமையை உற்பத்தி செய்யும் கோயிலில் வைத்தே ஏழைகளுக்கு அன்னதானம் நடத்துகின்றனர். அந்த மக்களின் வாழ்வு அழிக்கப்பட்டு நரபலியிடப்படுகின்றனர். ஆனால் நாகரிகமாக இதை இயற்கை மரணம் என்கின்றனர்.
இப்படி மனித சமூகமே நலமடிக்கப்பட்டுள்ளது. இந்த இழிநிலைக்கான காரணத்தை திசைதிருப்புவதிலும், அதை அந்த மககள் குற்றமாக காட்டுவதிலும், அந்த சமூகம் பின்தங்கிய ஒரு மனித இனமாக காட்டுவதிலும், ஏகாதிபத்திய கருத்தியல் ஆதிக்கம் உலகமயமாக்கப்பட்டுள்ளது.
உண்மையில் உலக ரீதியான சமூக ரீதியான புறக்கணிப்பும், சூறையாடலும் அந்த இனத்தின் அனைத்து சமூக அடிப்படையையும் தரைமட்டமாக்கி வருகின்றது. ஆபிரிக்காவில் ஏற்படும் மலேரியா காய்ச்சலால் வருடம் 50 கோடி வேலை நாள் இழப்பு ஏற்படுகின்றது. மாபெரும் வேலை நிறுத்தத்துக்கு ஒத்ததாக இது உள்ளது. அறிவியல், மருத்துவம் என்பன சந்தை சார்ந்ததாக மாறிய நிலையில், மலேரியா ஒழிப்பு என்பது பணம் இல்லாதவனுக்கு இல்லை என்ற நிலையாகி விட்டது. இப்படி உழைப்பின் வலு, பலம் அனைத்தும் இல்லாது போகின்றது.
தேசம், தேசிய விடுதலை என்று அந்த நாடுகளின் எழுச்சியும், ஏகாதிபத்திய சர்வதேச நெருக்கடிகளும் 1950களிலும், 1960 களிலும் பல நாடுகளுக்கு போலிச் சுதந்திரத்தை வழங்கின. அதன் விளைவாக சிறிது காலம், அந்த மக்களுக்கு பொருளாதார ரீதியாக அது சாதகமாகவே இருந்தது. நவகாலனீத்துவம் போலிச் சுதந்திரத்தின் பின்பக்கமாக, மல வாயிலூடாகவே புகுந்து இறுகிய போது நிலைமை மீண்டும் தலைகீழாகியது. 1960 - 1980க்கும் இடையில் ஆபிரிக்காவில் தனிநபர் வருமானம் 34 சதவிகிதமாக உயர்ந்தது. இது தென் அமெரிக்காவில் 73 சதவிகிதமாக அதிகரித்தது. ஆனால் 1980க்கு பின் தென் அமெரிக்காவில் அது உயரவே இல்லை. ஆபிரிக்காவில் 23 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. இதன் விளைவாக ஆபிரிக்காவில் உலகம் தெரிய தெரியும் அவலம், தென் அமெரிக்காவில் தற்போது தான் தொடங்கியுள்ளது. முன்பு தனிநபர்கள் அனுபவித்த வளர்ச்சி சார்ந்த வாழ்வை, இன்று மேற்கு நாடுகள் சூறையாடியதன் நேரடி விளைவு இது.
அடிப்படை அறிவையும், நவீன தொழில் நுட்ப அறிவையும் ஆபிரிக்காவில் பெறமுடியாத அளவுக்கு, அந்த நாடுகள் திவாலாகிவிட்டன. இந்தியாவில் பார்ப்பனர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுக்க 2000 வருடங்களாக எதை செய்தனரோ, அதை ஒத்த நடைமுறையை ஏகாதிபத்தியங்கள் ஆபிரிக்காவில் நடைமுறைப்படுத்தியுள்ளன. கல்வி பற்றிய தரவுகள் இதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. பாடசாலையில் கல்விகற்போரின் சராசரியான வருடங்கள்
| ஆண் | பெண் |
நைஜிரியா | 2.8 | 1.4 |
பங்களதேசம் | 5.8 | 4.2 |
மொறக் |
7.4 | 5.1 |
ரூவுண்டா | 5.8 | 5.5 |
பிரான்ஸ் | 14.1 | 14.7 |
நோர்வை | 14.3 |
14.9 |
அமெரிக்கா | 15.1 | 15.8 |
கனடா | 15.5 | 16.5 |
கல்வி பற்றி இந்த அடிப்படையான தரவுகள் மேற்கில் கல்வியின் சராசரி ஆண்டுகள் உச்சத்திலும், அதில் பெண்கள் ஆண்களை விட அதிகமாகவும் கற்கின்றனர். உலகின் பின்தங்கிய பிரதேசத்தில் இது மிக மோசமானதாகவும், பெண்களை விட ஆண்கள் அதிக காலமும் கல்வி கற்கின்றனர். இது கல்வி கற்போர் தொடர்பான தகவல் என்ற வகையில், பாடசாலைக்கு செல்லாதவர்களை எடுத்தால், இதன் அவலம் மேலும் மோசமானதாக எடுப்பாக இருப்பதை யாரும் மறுக்கமுடியாது. அன்று முதல் இன்று வரை இந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. மக்களைச் சுரண்டவும், சூறையாடவும் உள்ள உரிமை தான் தனிமனித சுதந்திரத்தினதும், ஜனநாயகத்தினதும் உயர்ந்தபட்ச குறிக்கோளாக உள்ளது.
அன்று காலனித்துவம் எப்படி சூறையாடியது. உதாரணமாக பிரிட்டிஸ் காலனித்துவ வரலாற்றின் தரவுகள் சில இதை துல்லியமாகத் தருகின்றது. பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளர்கள் முதலில் பிடித்த வங்காளத்தில், முதல் பத்தாண்டு முடிய அதாவது 1769-70 இல் அண்ணளவாக ஒரு கோடி பேர் பட்டனியால் இறந்தனர். மொத்த சனத்தொகையில் முன்றில் ஒரு பகுதி மக்கள் இறந்தனர். மீண்டும் கீழ் திசையில் 10 லட்சம் பேர் 1866 இறந்தனர். 1869 இல் ராஜஸ்தானில் 15 லட்சம் பேர் இறந்தனர். 1876 - 1878 இல் 50 லட்சம் பேரும், 1899-1900 இல் 10 லட்சம் பேரும் பட்டினியால் இறந்தனர். அண்ணளவாக ஒரு நூற்றாண்டில் முக்கிய சில பகுதிகளில் மட்டும் இரண்டு கோடி இந்தியர்களை காலனியம் நேரடியாக பலியாக்கி கொள்ளையிட்டது. பிரிட்டிஸ் செல்வ இருப்பு இந்தியா சூறையாடப்படவும், இதன் மூலம் 2 கோடிக்கு மேற்பட்ட மக்களை பட்டினியால் நேரடியாக கொல்வதில் சார்ந்திருந்தது. இதைவிட சுற்றிவளைத்து இயற்கையாக கொன்றது பல கோடியாகும். இன்று அப்படி 10 கோடி மக்கள் உலகளவில் வருடாந்தம் கொல்லப்படுகின்றனர் என்ற உண்மை அன்றைய நிலைக்கு எடுப்பான ஆதாரமாகும்.
இதே போல் வடசீனம் பிரிட்டிஸ் காலனியாக திகழ்ந்தபோது 1876-79 இல் 1.3 கோடி பேர் பட்டினியால் இறந்தனர். 1929 இல் ஹீனான் பகுதியில் 20 லட்சம் பேர் இறந்தனர். இதே காலத்தில் ஜரோப்பாவில் ஒரே ஒரு இடம் தவிர வேறு எங்கும் இந்த மரணங்கள் நிகழ்ந்ததில்லை. நிகழ்ந்தது பிரிட்டிஸ் காலனியான அயர்லாந்தில் மட்டும் தான். 1846-47 இல் 20 முதல் 30லட்சம் மக்கள் இறந்தனர். காலனியத்தின் கொள்ளையின் விளைவை மாhக்ஸ் மூலதனத்தில விரிவாகவே கூறியுள்ளார். அன்று பட்டினி மரணங்களும், அதை தொடர்ந்து ஏற்படும் கொள்ளை நோய்களுக்கும் மேற்குத் தான் காரணமாக இருந்தது. இன்று அதே காரணம் தான் எதார்த்தத்தில் சூக்குமமாகவே உள்ளது.
அன்று ஒரு கோடி வங்க மக்களை கொள்ளையிட்டு கொன்ற பிரிட்டிஸ் காலனீய நோக்கம் தெளிவாகவே இருந்தது. 1769-70 காலனீய பலியெடுப்புக்கு பின், வங்காள கவனர் வாரன் ஹேஸ்டிங்ஸ், 1772 இல் நவம்பர் 3ம் திகதி வெளியிட்ட அறிக்கையில் ~~பிரதேச மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மடிந்து அதனால் விவசாயம் குறைந்த போதிலும் கூட 1771ம் வருட நிகர வசூல் 1768 ஆம் வருட வசூலை விட விஞ்சிவிட்டது. பழைய அளவுகளைக் குறையாமல் கடும் வன்முறை மூலம் பார்த்துக் கொண்டதன் பலனே இது என்றார். எவ்வளவு தத்துரூபமான அப்பட்டமான உண்மை. ஆபிரிக்காவின் இன்றைய அவலத்தின் பின்பு இந்த உண்மை நிர்வாணமாகவே நிசமாகவே உள்ளது. இது தான் காலனித்துவத்தின், நவகாலனித்துவத்தின் நோக்கமும் குறிக்கோளுமாகும். இந்த மோசமான சமூக இழிநிலையை உருவாக்கி, தனிமனித ஜனநாயகம் சுதத்திரத்தின் பெயரில் நலமடித்து பாதுகாக்கின்றனர். ஆனால் கடந்த காலம் இன்றைய அவலத்தைவிட சுபிட்சமானதாகவே இருந்தது.
கி.மு.2250 ஆண்டு முன் பாபிலோன் பேரரசர் உருவாக்கிய ஹம்முராபி சட்ட விதிமுறைகள் இன்றைய நவீன சட்டங்களை விடவும் மிக உயர்ந்த சமூகத் தன்மை கொண்டதாக இருந்தது. ~~ஒரு மனிதனிடம் கொஞ்சம் நிலமிருந்து, புயல் கடவுள் கோபமுற்று அவனது உற்பத்தியை எடுத்துச் சென்று விட்டாலோ, அல்லது நீர் பஞ்சத்தால் சரியான அறுவடை இல்லாது போய்விட்டாலோ, அவன் அந்த வருடம் கடன் வாங்கியவருக்கு தானியம் எதுவும் அளிக்கத் தேவையில்லை. அவ்வருடத்திற்கான வட்டியும் கொடுக்கத் தேவையில்லை. என்று ஒரு முன்னேறிய நவீன சட்டமிருந்தது. இன்று அப்படி எந்த நாட்டில் ஒரு சட்டம் உள்ளது. காலனீய பிரிட்டிஸ் அரசு மூன்றில் ஒரு பகுதி மக்களைக் கொன்று, மிகுதியாக நலிந்து இழிந்து கிடந்த மூன்றில் இரண்டு பங்கு மக்களிடம் அதீதமாக சூறையாடியது. அதற்கு முந்திய வருடத்தை விட கூடுதலாகவே அறவிட்டு அந்த செல்வத்தையே நாடு கடத்திய பெருமை தான் இன்று வரை தொடருகின்றது. இன்று நாடுகள் திவாலாகிய நிலையிலும், பெரும்பான்மை மக்கள் பட்டினியால் வாழ்ந்து மடிகின்ற அவலநிலையிலும், வட்டியை அறவிடுவது மட்டுமின்றி இருப்பதையும் ஏகாதிபத்தியங்கள் சூறையாடிச் செல்லுகின்றன. இதை (பின்)நவீனம் என்கின்றனர். (பின்)நவீனம் என்பது சூறையாடுவதில் உள்ள சூக்குமத்தையே (பின்)நவீனத்துவம் என்கின்றனர். இதை மேல்பூச்சுக்கு மூடிமறைக்கவே சிலர் பின்நவீனத்துவம் என்கின்றனர்.
இந்த (பின்)நவீனத்துவம் என்பது மக்களை சூறையாடுவதும், கொள்ளையிடுவதும், சுரண்டுவதும் தான். இதை நியாயப்படுத்த தனிமனித சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் முன்னிலைப்படுத்தி, சமூகத்தின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மறுத்து, முழுமக்களை அடிமைப்படுத்துகின்ற இன்றைய நிலையில் ஆபிரிக்காவின் அவலம் சிதிலமாகி எம்முன் காட்சியளிக்கின்றது.