தமிழ் அரங்கம்

Thursday, August 24, 2006

விவசாயிகளை ஏய்க்கும் இன்னுமொரு மோசடிநாடகம்

பிரதமரின் விதர்பா பயணம்: விவசாயிகளை ஏய்க்கும் இன்னுமொரு மோசடிநாடகம்

காராஷ்டிரா மாநிலத்திலுள்ள விதர்பா பகுதிக்கு, கடந்த ஜூன் மாத இறுதியில் வந்து போன பிரதமர் மன்மோகன் சிங், ""அப்பகுதி விவசாயிகள் கடனில் மூழ்கி நொடித்துப் போயிருப்பதையும்; அப்பகுதி பருத்தி விவசாயம் நாசமாகி வருவதையும்'' ஒப்புக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். ""பொருளாதாரப் புலி'' மன்மோகன் சிங், தன் கண்களால் பார்த்து இந்த உண்மையை ஒப்புக் கொள்வதற்கு, ஏறத்தாழ 650 பருத்தி விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.


விதர்பா பகுதியில் விவசாயிகளின் வாழ்க்கை இயல்பாகப் போய்க் கொண்டிருப்பதாகப் புளுகி வந்த மகாராஷ்டிர மாநில அரசு, மன்மோகன் சிங் விதர்பா பகுதிக்கு வந்து விவசாயிகளைச் சந்திக்கப் போவது உறுதியானவுடன், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுள் சில குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வேகவேகமாக நட்டஈடு வழங்கத் தொடங்கியது. இதில் கூட, அம்மாநில அரசு நாணயமாக நடந்து கொள்ளவில்லை. நட்டஈடு ஒரு இலட்சம்ரூபாய் என அறிவித்திருந்த அம்மாநில அரசு, அவர்களுக்கு வழங்கியதோ வெறும் முப்பதாயிரம் ரூபாய்தான்!


மன்மோகன் சிங் காலடித்தடம் படப் போகும் சில கிராமங்களில் புதிதாகச் சாலைகள் போடப்பட்டன் தெரு விளக்குகள் போடப்பட்டன் மன்மோகன் விரைவாக வந்து திரும்புவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, மன்மோகன் சிங்கைச் சந்தித்துத் தங்களின் குறைகளைக் கூறுவதற்காக 3035 விவசாயக் குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பிரதமர் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்பட்டது. இப்படியாக மன்மோகன் சிங்கின் பயணமும், சந்திப்பும் அதிகார வர்க்கத்துக்கேயுரிய வக்கிரத்தோடு நடந்து முடிந்தது.


ஆறு மாவட்டங்களைக் கொண்ட விதர்பா பகுதியில், ஏதோ ஒன்றிரண்டு கிராமங்களுக்குப் போய், தேர்ந்தெடுக்கப்பட்ட சில விவசாயக் குடும்பங்களைச் சந்தித்துவிட்டு, மன்மோகன் சிங் தனது கடமையை முடித்துக் கொண்டாலும், ""அவர் ஏதாவது நல்லது செய்வார்'' என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் இருந்தது. குறிப்பாக, ""வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்வார்; கந்துவட்டிக் கடன் கொடுமையில் இருந்து தங்களை மீட்க ஏதாவதொரு வழி சொல்வார்; பருத்திக்குத் தரப்படும் ஆதார விலையøக் கூட்டிக் கொடுப்பார்'' என விவசாயிகள் நம்பினார்கள். ஆனால், இந்தப் பொருளாதாரப் புலி அறிவித்துள்ள நிவாரண உதவித் திட்டத்தை, முதலாளித்துவ விவசாய நிபுணர்களால்கூட முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விதர்பா பகுதி விவசாயிகளோ இத்திட்டத்தை ஏமாற்று மோசடி எனக் காரித் துப்புகின்றனர்.


விதர்பா பருத்தி விவசாயிகளின் துயரத்தைத் துடைப்பது என்ற பெயரில் மன்மோகன் சிங் அறிவித்துள்ள 3,750 கோடி ரூபாய் பெறுமான உதவித் திட்டத்தில், 2,177 கோடி ரூபாய் விதர்பா பகுதியில் நடந்து வரும் பாசனத் திட்டங்களை நிறைவேற்றவும்; 240 கோடி ரூபாய் சொட்டு நீர்ப் பாசனம் போன்ற ""நவீன'' பாசனத் திட்டங்களை நிறைவேற்றவும்; 225 கோடி ரூபாய் தோட்டப் பயிர் விவசாயத்தைப் பிரபலப்படுத்தவும் ஒதுக்கப்பட்டுள்ளது.


இவை போக, பருத்தி விவசாயிகளுக்குக் கிடைத்தது என்னவென்றால், அரசாங்கம் கொடுத்துள்ள கடனுக்கான வட்டித் தள்ளுபடி; அரசாங்கக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக் கெடுவைத் தள்ளி வைப்பது; மற்றும் புதிய கடன் வழங்குவது, தரமான விதைகள் விநியோகிப்பது போன்ற சில்லறை சலுகை அறிவிப்புகள்தான். அடுத்தவன் இலைக்குப் பாயசம் ஊற்றச் சொல்லும் தந்திரமாக முடிந்து போனது, இந்த உதவித் திட்டம்.


உலக வங்கியின் புரோக்கரான மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் செயல்படும் திட்ட கமிசன், ""அப்பகுதியில் நடந்து வரும் பாசனத் திட்டங்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முடித்து விட்டால், பருத்தி விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்து விடும்'' என்ற அரிய யோசனையை மன்மோகன் சிங் விதர்பா பகுதிக்கு ""திக் விஜயம்'' செய்வதற்கு முன்பாகவே, முன் வைத்தது. இதன்படிதான், 3,750 கோடி ரூபாய் உதவித் திட்டத்தில், 2,417 கோடி ரூபாய் ஏறத்தாழ 65 சதவீதம் பாசனத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டக் கமிசனின் இந்த அரிய யோசனையின் இலட்சணம் என்ன தெரியுமா?


விதர்பா பகுதியில் பல பத்தாண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்துவரும் 500க்கும் மேற்பட்ட பாசனத் திட்டங்கள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முடிந்து விட்டால் கூட, விதர்பா பகுதி பூஞ்சோலையாக மாறிவிடாது. அதிகார வர்க்கத்தின் புள்ளி விவரப்படியே, பாசனத் திட்டங்கள் உருப்படியாக நடந்து முடிந்தால் 28.35 இலட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு தான் பாசன வசதி கிட்டும். ஆனால், விதர்பாவில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்போ 97.43 இலட்சம் ஹெக்டேர். பாசன வசதி கிடைக்காத விவசாயிகள் வானத்தையோ, கிணற்றையோ நம்பிதான் விவசாயம் செய்ய வேண்டும். பருத்தி விவசாயிகளுக்குக் கிணறு தோண்ட உதவியோ, மானியமோ தர முன் வராத மைய அரசு, சொட்டு நீர்ப்பாசன மேம்பாட்டுக்காக 240 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை வக்கிரத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.


இது ஒருபுறமிருக்க, மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட ""நீர் ஆதார ஒழுங்குமுறைச் சட்டம், அரசாங்கம் அமைத்து வரும் பாசன வசதிகளை, ஏழைநடுத்தர விவசாயிகள் பயன்படுத்தும் உரிமையைத் தட்டி பறித்துவிட்டது. இச்சட்டத்தின்படி, விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு ஆண்டுக்கு அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய பாசனக் கட்டணம் எட்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு ஆண்டு பாசனக் கட்டணம் ஒன்றரை மடங்கு அதிகமாக 12,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தைக் கட்டத் தவறும் விவசாயிகள் மீது, பாசனக் கட்டணத்தைப் போல 10 மடங்கு அபராதம் விதிக்கப்படுவதோடு ஆறுமாதச் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.


இப்படியொரு பகற்கொள்ளை அடிக்கும் சட்டம் இருக்கும் மாநிலத்தில், விவசாயிகளுக்குப் பாசன வசதி என்பது ஊரை ஏமாற்றுகின்ற வேலைதான். ஒப்பந்த விவசாயம் என்ற பெயரில் நுழைந்துள்ள தரகு முதலாளித்துவ நிறுவனங்கள்; ஏற்றுமதிக்காக தோட்டப் பயிர்களைப் பயிரிடும் நவீன பணக்கார விவசாயிகள்; அரசாங்க காண்டிராக்ட்காரர்கள் இவர்களின் கஜானாவை நிரப்பத்தான், இந்த 2,417 கோடி ரூபாய் பெறுமான பாசனத் திட்டங்கள் பயன்படும்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் பருத்தி விதைகள் என்றாலே, மான்சாண்டோ நிறுவனத்தின் ""பி.டி.'' பருத்தி விதைகள்தான். ஆந்திராவில் பல நூற்றுக்கணக்கான பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு இந்த மலட்டு விதைகளும் ஒரு காரணம் எனத் தெரிந்திருந்த போதிலும், இந்த ""பி.டி.'' பருத்தி விதைகளை மகாராஷ்டிராவில் விற்கும் ஏகபோக உரிமையை, ""மாஹிகோ'' என்ற அரசு நிறுவனமே மான்சாண்டோவிடமிருந்து வாங்கி வைத்துள்ளது.


""ஹெச்.4'' என்ற இரக பருத்தி விதை ஒரு கிலோ ரூ. 300ஃக்கு விற்கப்படும் பொழுது, ""மாஹிகோ'' சந்தையின் மீதான தனது கட்டுப்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு, 450 கிராம் பி.டி. பருத்தி விதைகளை ரூ. 750க்கு விற்று, பருத்தி விவசாயிகளை மொட்டையடித்து வருகிறது.


விதர்பா பருத்தி விவசாயிகள் கோருகிறபடி ""பி.டி.'' மலட்டு விதை விற்பனையையும்; பருத்தி விதைகள் இடுபொருட்கள் விற்பனையில் நடந்து வரும் பகற்கொள்ளையையும் தடுத்து நிறுத்த மன்மோகன் சிங் முயலவில்லை. மாறாக, மான்சாண்டோவின் ஏஜெண்டாகச் செயல்படும் மகாராஷ்டிரா அரசிடம், விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகளை வழங்குவதற்கு 180 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுத்து, பருத்தி விவசாயிகளின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார்.


""பருத்திக்கு மாநில அரசாங்கம் தரும் ஆதார விலையை ரூ. 2700ஃ ஆக உயர்த்துவோம்'' என காங்கிரசு தேசியவாத காங்கிரசு கூட்டணி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இக்கூட்டணி சட்டசபை தேர்தலில் வென்று, மாநில ஆட்சியைப் பிடித்த பிறகு, ஏற்கெனவே கொடுக்கப்பட்டு வந்த ஆதார விலையில் (ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,200ஃ) இருந்து


ரூ. 500ஐ வெட்டி விட்டு, 1,700 ரூபாய்தான் ஆதார விலையாகக் கொடுத்து வருகிறது. இந்த வெட்டின் மூலம், கடந்த ஆண்டு மட்டும், மகாராஷ்டிரா மாநில அரசுக்குக் கிடைத்துள்ள இலாபம் ஏறத்தாழ 1,000 கோடி ரூபாய். விதர்பா பருத்தி விவசாயிகளிடமிருந்து 1,000 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துவிட்டு, 712 கோடி ரூபாய் அளவிற்கு வட்டி தள்ளுபடி செய்திருக்கிறோம் என மன்மோகன் கும்பல் பீற்றிக் கொள்வது கடைந்தெடுத்த மோசடித்தனம்.


பருத்தி அறுவடை முடிந்து விற்பனைக்கு வந்த மார்ச் மாதம் தொடங்கி மே மாதத்திற்குள் விதர்பாவில் 80க்கும் மேற்பட்ட பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்கள். உற்பத்திச் செலவுக்கு ஏற்ற விலை கிடைக்காமல், அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய சந்தையின் சூதாட்டத்திற்குள் விவசாயிகள் தள்ளப்பட்டதுதான் இந்தச் சாவுகளுக்குக் காரணம். மேலும், விதர்பா பருத்தி விவசாயிகளின் அகால மரணத்திற்கும் அமெரிக்காவிற்கும் நேரடித் தொடர்புண்டு.


அமெரிக்கா, தனது நாட்டில் விளையும் பருத்திக்கு, ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 18,000 கோடி ரூபாய் மானியமாகக் கொடுக்கிறது. இதனால், அமெரிக்காவில் இருந்து அடிமாட்டு விலையில் பருத்தி இந்தியாவிற்கு இறக்குமதியாகிறது. இந்த அமெரிக்க பருத்தி மீது வெறும் 10 சதவீத அளவிற்கே சுங்க வரி விதிக்கப்படுவதால், உள்நாட்டில் விளையும் பருத்தியை விட, அமெரிக்க பருத்தி மிக மலிவாக சந்தையில் கிடைக்கிறது. தாராளமயம் என்ற பெயரில் நடக்கும் இந்த நாணயமற்ற வர்த்தக இறக்குமதிதான் இந்தியப் பருத்தி விவசாயிகளைப் போண்டியாக்கி வருகிறது; தற்கொலைக்குத் தள்ளி வருகிறது.


அதனால்தான் விதர்பா பகுதி பருத்தி விவசாயிகள், ""அமெரிக்காவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்வதைக் கைவிட வேண்டும். பருத்திக்கு அரசாங்கம் கொடுக்கும் ஆதார விலையை மூவாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்'' எனக் கோருகிறார்கள். பருத்தி விவசாயிகளின் உயிராதாரமான இந்தக் கோரிக்கைகளை மன்மோகன் சிங் கண்டு கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, சமீபத்தில் அவரின் தலைமையில் கூடிய அமைச்சரவை, விவசாயத் துறை முழுவதிலும் தாராளமயத்தை அமல்படுத்தப் போவதாக முடிவெடுத்திருக்கிறதாம். இந்த முடிவு நடைமுறைக்கு வரும்பொழுது விதர்பாவில் நடந்து வரும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை, காவிரிப் படுகையிலும் நாம் காண நேரிடும்!


மு செல்வம்


Wednesday, August 23, 2006

மதவெறி பயங்கரவாதத்திற்கு அரசு பயங்கரவாதம் தீர்வாகுமா?

மும்பை தாக்குதல்: மதவெறி பயங்கரவாதத்திற்கு அரசு பயங்கரவாதம் தீர்வாகுமா?

மும்பை ஜூலை 11, மாலை 6.24 மணி தொடங்கி 6.31 மணி வரை ஏழு நிமிடங்களில் ஏழு தொடர் வண்டிகளில் நடந்த ஏழு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் 200 முதல் வகுப்பு பயணிகளைப் பலிகொண்டு, 800 பேர்களைப் படுகாயமுறச் செய்த கோரங்களைச் செய்தி ஊடகங்கள் நிறையவே விவரமாகச் சித்தரித்துவிட்டன.


""தேசிய சர்வதேசியத் தலைவர்கள்'' என்று அறியப்பட்ட அனைவரும் கடும் கண்டங்கள் தெரிவித்துவிட்டனர். அரசுத் தலைவர், பிரதமர், ஆளுங்கட்சித் தலைவர், ரயில்வேத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், அதேபோல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லோரும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்த இடங்களைப் பார்வையிட்டு விட்டு, இறந்தோர் குடும்பங்களையும் காயமுற்றோரையும் கண்டு ஆறுதல்கள் வழங்கினர். பாதிக்கப்பட்டவர் குடும்பங்களுக்கு நிதி உதவித் தொகையும் அறிவிக்கப்பட்டு விட்டன.


குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தவுடன், போலீசு மற்றும் சிவில் நிர்வாகத்துக்கு முன்பாகப் பொதுமக்கள் விரைந்து வந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட பல்வேறு செய்திகள், சம்பவங்களை நேரில் பார்த்தவர்களின் விவரணைகள், துயரச் சம்பவங்களை மும்பைவாசிகள் எதிர்கொண்ட விதம், துணிவு, மத வேறுபாடுகளைக் கடந்த நிவாரணப் பணிகள், அடுத்தநாளே மும்பை வழமையான நிலைமைக்குத் திரும்பிய வியப்பு, குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மதக் கலவரங்கள் ஏதும் வெடிக்காமல் தடுத்து, மும்பைவாசிகள் அமைதிகாத்த பெருந்தன்மை என ஏராளமாகப் பத்திரிகைகளில் நிரம்பி வழிந்தன.


கடந்த சில ஆண்டுகளில் இவை போன்ற பயங்கரவாதச் சம்பவங்கள் பல நடந்தும், குறிப்பாக மகாராட்டிரத்தில் கடந்த ஆறு மாதங்களில் பல இடங்களில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டும், பல தீவிரவாதக் குழுக்கள் பிடிபட்டும் இந்த ஜூலை 11 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கத் தவறிய உளவுத் துறை, உளவுத்துறை எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்திவிட்டு, கோரச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய போலீசு துறை, அரசு நிர்வாகம் ஆகியவை கடும் கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டன.


நியூயார்க், இலண்டன், மாட்ரிட்க், கேசபிளங்கா, பாலி, ரியாத், கெய்ரோ என்று கோரமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பலியான நகரங்களின் வரிசையில் மும்பை மேலும் தனிச்சிறப்பான இடம் பெற்றுள்ளதை ஏடுகள் குறிப்பிடுகின்றன. அதாவது, அங்கெல்லாம் ஓரிருமுறைகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. மும்பையிலோ திரும்பத் திரும்ப பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கின்றன. கடந்த ஆறு மாதங்களில், ஆறு இடங்களில் பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து மிக அதிகம் நாசம் விளைவிக்கக் கூடிய வெடிபொருட்கள்ஆயுதங்கள் மகாராட்டிரத்தில் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. 1993இல் 257 பேரைப் பலிகொண்ட தொடர்குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு ஆறு பயங்கரவாதத் தாக்குதல்கள் மும்பையில் நடந்துள்ளன.


1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்தது கிரிமினல் குற்றக்கும்பல் தலைவர்களான தாவுது இப்ராகீம் மமேன் கூட்டணி என்றும், அயோத்தி பாபரி மசூதி இடிப்பைத் தொடர்ந்து 199293 ஆம் ஆண்டில் மும்பையில் ஆர்.எஸ்.எஸ். சிவசேனா இந்து பாசிச வெறியர்கள் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களைப் படுகொலை செய்ததற்கு நடந்த பழிவாங்கும் செயல் என்றும் கூறப்பட்டது. இந்த ஜூலை 11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஸ்கர்இதொய்பா மற்றும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பான ""சிமி'' ஆகியவற்றின் கூட்டுச் செயல் என்றும் செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.


இந்தியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான காரண காரியங்கள், பின்னணி அமைப்புகள் குறித்து இந்திய உளவுத் துறைகளில் உள்ள நம்பகமான நபர்கள் கூறியதாக முக்கியமாக மூன்று கோணங்களிலான ""வதந்திகள் ஊகங்கள் புலனாய்வுச் செய்திகள்'' வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் முதன்மையானது, பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சில பத்து பயங்கரவாத அமைப்புகள் (லஸ்கர், ஜெய்சா, ஹர்கத், ஹிஸ்புல்லா போன்றவை) பாக். அரசு மற்றும் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் நிதி, ஆயுத உதவி, பயிற்சி தரப்பட்டு இந்திய அரசியல், பொருளாதார, சமூக வாழ்வைச் சீர்குலைக்கவும் மதக் கலவரங்களைத் தூண்டவும் ஏவிவிடப்படுகின்றன. பாக். மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் இளைஞர்களும், இந்தியாவிலுள்ள இஸ்லாம் மதபோதனை நிறுவனங்கள் மதரசாக்களில் பயின்ற மாணவர்களும், கிரிமினல்குற்றக் கும்பல்களும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.


இரண்டாவதாக, உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் அல்கொய்தா மற்றும் இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகள். இஸ்ரேலின் ஜியோனிசம், அமெரிக்காவின் கிறித்தவ ஏகாதிபத்தியம், இந்தியாவின் இந்துத்துவம் போன்றவை உலக இஸ்லாத்தை அழித்து வருகின்றன. உலக இஸ்லாமிய மக்களையும் நாடுகளையும், அடக்கி ஒடுக்குவதாகவும் உலகு தழுவிய இஸ்லாமியப் புனிதப் போர் மூலம் அவற்றை எதிர்த்து முறியடிக்க வேண்டும் மேற்கே மொராக்கோ, அல்ஜீரியா, எகிப்து முதல் கிழக்கே பிலிப்பைன்ஸ், பாலி வரை தற்போதுள்ள அரசுகளைத் தூக்கி எறிந்து விட்டு இஸ்லாமிய அரசுகளை நிறுவ வேண்டும் ஈராக், ஆப்கானை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா பிரிட்டன் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துக் கொண்டு அரபு நாடுகளைத் தாக்கி வரும் இஸ்ரேல் காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொண்டு, இந்திய முஸ்லீம்களை ஒடுக்கிவரும் இந்துத்துவ இந்தியா ஆகியவை உடனடி எதிரிகள் இந்நாடுகளோடு பல வகையிலும் கூட்டுச் சேர்ந்துள்ள அரபுஇஸ்லாமியத் துரோகிகளையும் தாக்கும் புனிதப் போர் என்ற முறையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்பதுதான் பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா மற்றும் பல நாட்டு மத அடிப்படைவாதக் குழுக்களின் திட்டம். அவர்களால் ஏவிவிடப்படும் பயங்கரவாதக் குழுக்கள் தாம் ஜூலை 11 மும்பை தொடர்வண்டி குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியுள்ளன என்று செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.


மூன்றாவதாக, அயோத்தி பாபரி மசூதி இடிப்பு அதைத் தொடர்ந்து, குறிப்பாக மும்பை உட்பட நாடு முழுவதும் இந்து மதவெறி சங்க பரிவாரங்கள் நடத்திய படுகொலைகள், அதன் பிறகு ""கோத்ரா'' இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் இஸ்லாமியருக்கு எதிராக நடந்த கொலைவெறியாட்டம், தடா, பொடா போன்ற கொடிய சட்டங்களால் பல ஆயிரம் இஸ்லாமிய இளைஞர்களை அடக்கி ஒடுக்கும் அரச பயங்கரவாதம் இவையெல்லாம் அல்உம்மா, குஜராத்துக்கு பழிவாங்கும் படை, அஞ்சுமான் போன்ற உள்ளூர் அளவிலான பல பயங்கரவாதக் குழுக்கள் தோன்றக் காரணமாகி உள்ளன. நாட்டிலுள்ள பல மதரசாக்களில் மதபோதனை பெற்று, பாகிஸ்தான், வங்கதேசம், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் பயிற்சி பெற்று, வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமிய செல்வந்தர்களின் நிதி உதவி பெற்று, ஆயுதங்களைக் கடத்தி வந்து, தகுந்த தருணம் பார்த்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துகின்றன.


இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை எதுவொன்றையும் அடியோடு நிராகரித்துவிட முடியாது. என்றாலும் இந்தியாவைக் குறி வைத்து நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்துக்கும் இந்திய எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானில் இருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாதக் குழுக்களின் சதிவேலைகள் தாம் என்பதை உறுதிப்படுத்தவே இந்திய ஆளும் வர்க்கங்களும், உளவுத்துறைகளும் விழைகின்றன. மதச்சார்பற்றவை என்று கூறிக் கொள்ளும் காங்கிரசு, இடதுசாரி அணி முதல் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. சிவசேனா முதலிய இந்து மதவெறி பாசிசக் கும்பல்கள் வரை அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இந்தக் கோணத்திலேயே அணுகி வருகின்றன. இத்தகைய அணுகுமுறைதான் இந்த நாடு இவ்வளவு காலமும் கடைப்பிடித்து வரும் இந்துத்துவ ""இந்திய தேசிய''க் கொள்கைக்குப் பொருத்தமாக இருக்கிறது.


அதனால்தான், மும்பை ஜூலை 11 தொடர் வண்டி தொடர் குண்டு வெடிப்புகளை ரயில்வே போலீசு விசாரிப்பதா, பயங்கரவாத எதிர்ப்பு மாநிலப் போலீசு குழு விசாரணை மேற்கொள்வதா என்ற தகராறு தீர்வதற்கு முன்பாகவே, பாகிஸ்தான் ""லஸ்கர் சிமி'' பின்னணிதான் என்று உடனடியாகவே புலனாய்வுச் செய்திகள் வருகின்றன. ஓரிரு நாட்களிலேயே, நேபாளபீகார் எல்லையில் இரு பயங்கரவாதிகள் பிடிபட்டதாகவும், லஸ்கர் தலைவர் ""தண்டா'' கென்யாவில் பிடிபட்டதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால், மும்பை புறநகரில் உள்ள சதுப்பு நிலக் குடிசைகளில் வாழும் முசுலீம் ஏழைகள் நள்ளிரவில் சுற்றி வளைக்கப்பட்டு, 200 அப்பாவிகளை இழுத்துக் கொண்டு போய் ""விசாரணை'' நடத்துகின்றது, மும்பை போலீசு.


அடுத்த நாளே மும்பை வந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரு சேர பாகிஸ்தான் நோக்கி குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானை எச்சரிக்கிறார். வாக்குறுதி அளித்தவாறு பயங்கரவாதிகளை ஏவிவிடுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும், பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை உடனடியாக மூடவேண்டும். இல்லையென்றால் சமாதானம் பேச்சு வார்த்தைகள் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கிறார். எச்சரித்தவாறே, குண்டு வெடிப்புக்குப் பின் சில தினங்களில் நடக்கவிருந்த இந்தியபாக். அயலுறவுத் துறை செயலர்கள் சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டது. புஷ்பிளேர் முதலிய தனது எஜமானர்களிடம் பாகிஸ்தானுக்கு எதிராக புகார் கூறிய மன்மோகன் சிங், ஜி8 நாடுகளின் மாநாட்டில் மும்பை தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ச்சியை எழுப்பி பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றச் செய்தார்.


அமெரிக்காவின் மீது பின்லேடன் தலைமையிலான அல்கொய்தாவின் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ""பயங்கரவாதத்துக்கு எதிரான உலகு தழுவிய போர்'' பிரகடனம் செய்து ஆப்கான், ஈராக் ஆக்கிரமிப்புப் போர் உட்பட பல பாசிசத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன அமெரிக்காவும் பிரிட்டனும். உலகின் பல்வேறு ஏகாதிபத்திய அடிவருடி நாடுகள் அதற்குத் துணை போகின்றன. அந்த நாடுகளின் வரிசையில் தானாகப் போய் இணைந்து கொண்ட இந்தியா, தாலிபான் மற்றும் அல்கொய்தாவுடன், பாகிஸ்தானையும் பயங்கரவாத சக்தியாக வைத்து, அதற்கு எதிராக ""அமெரிக்க பிரிட்டிஷ் பயங்கரவாத எதிர்ப்புப் போரை'' திருப்பிவிடும்படி தொடர்ந்து மன்றாடுகிறது.


ஆனால், அமெரிக்காவும் பிரிட்டனும் தமது ""பயங்கரவாத எதிர்ப்புப் போரின்'' இன்றைய பங்காளியாக பாகிஸ்தானையே சேர்த்துக் கொண்டிருக்கின்றன. ""இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு இசுலாமிய நாட்டுடன் கூட்டு வைத்துக் கொள்வதுதான் சரியான செயல்தந்திரம்'' என்றே ஏகாதிபத்தியங்கள் கருதுகின்றன. அதுமட்டுமல்ல, காஷ்மீர் பிரச்சினை தோன்றிய காலத்திலிருந்தே, இந்தியாவின் நிலையை ஏற்க மறுத்து, பாகிஸ்தான் ஆதரவு நிலையெடுத்து வரும் ஏகாதிபத்தியங்கள், குறிப்பாக பாக்.குடன் நீண்டகாலமாகவே இராணுவ ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டு தொடர்ந்து ஆயுதநிதி உதவி அளித்துவரும் அமெரிக்கா, இந்தியாவின் புகார்களை ஏற்று பாகிஸ்தான் எதிர்ப்பு நிலையெடுக்கும் என்று எதிர்பார்ப்பதே முட்டாள்தனமாகும்.


மேலும், பாகிஸ்தான் ஏவிவிட்டு எல்லைக்கு அப்பாலிலிருந்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதில் உதவுவதில்லை என்பதோடு, அமெரிக்கா பிரிட்டன் முதலிய ஏகாதிபத்தியங்கள், பாகிஸ்தானுடன் சமாதானமாகப் போகும்படி கடுமையான நிர்பந்தமும் கொடுத்து வருகின்றன. அதனால்தான், இஸ்லாமிய எதிர்ப்புபாக். எதிர்ப்பில் அதிதீவிரம் காட்டும் இந்து பாசிச பயங்கரவாத ஆட்சியாளர்களே கூட வலியப் போய் கார்கில் போருக்கு முன்னும் பின்னும் பாகிஸ்தானுடன் சமாதான உறவை ஏற்படுத்தினர். இந்திய விமானம் ஆப்கானுக்குக் கடத்தப்பட்டபோது பா.ஜ.க. மந்திரியே, இந்தியச் சிறையிலிருந்த இரு பயங்கரவாதிகளோடு தனி விமானத்தில் கந்தகார் போய் அவர்களை ஒப்படைத்துவிட்டு, பணயக் கைதிகளை மீட்டு வந்தார். நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தபின் எல்லையில் இராணுவத்தை குவித்து போர் மிரட்டல்கள் விடுத்துவிட்டு, அமெரிக்க பிரிட்டன் நிர்பந்தத்துக்குப் பிறகு ஒரு தோட்டா கூடச் சுடாமல் இந்தியா திரும்பிவிட்டது.


ஆக, எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானில் இருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாதத்தை இந்திய ஆட்சியாளர்களால் ஒருபோதும் உண்மையில் எதிர்க்கவோ, எதிர்த்து முறியடிக்கவோ முடியாது. அது ""சிவபெருமான்'' கழுத்தில் சுற்றிப் பாதுகாப்பாக தவழ்ந்து கொண்டிருக்கும் ""பாம்பு'' போன்றது. இந்தியக் ""கருட''னுக்கு அது அஞ்சுவதே இல்லை. எனவே, எல்லை கடந்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதற்காக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் மீது அதிரடிப் படைத் தாக்குதல்கள் நடத்துவது பாலஸ்தீன, அரபுப் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் பாசிச இராணுவ பயங்கரவாதத் தாக்குதல் போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். ஃ பா.ஜ.க. முதல் காங்கிரசு வரை எந்த இந்திய ஆட்சியாளர்களும் ஒருபோதும் துணியப்போவதில்லை.


இந்த நிலையில் உள்ளூர் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது ஒன்றே, மும்பை ஜூலை 11 போன்று, அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை முறியடிக்கக் கூடியது என்று இந்திய ஆளும் வர்க்கங்கள் நம்புகின்றன. அதற்கான பிரச்சாரத்திலும் தயாரிப்பிலும் இந்துத்துவ தேசியவாதிகள் முதல் போலி மதச்சார்பற்ற ஆளும் கூட்டணி வரை அனைவரும் இறங்கிவிட்டனர்.


இந்து மதவெறி பாசிச பயங்கரவாதிகளின் எண்ணவோட்டத்தை மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் பார்ப்பன பாசிச குரு ""சோ'' தனது ""துக்ளக்'' வார இதழின் தலையங்கமாக எழுதியுள்ளார். ""நடந்துள்ள அராஜகத்திற்குக் காரணம் தேடி அலைவது, அந்த அட்டூழியத்தை நியாயப்படுத்துவதில்தான் முடியும். அதை விடுத்து, தீவிரவாதம் நசுக்கி, பொசுக்கப்பட வேண்டியது என்ற ஒரே உறுதியை மனதில் கொண்டு, அரசு செயல்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு சங்கடங்களையும், அவர்களுக்கு உதவுகிற பலருக்கு அச்சத்தையும், உளவுத்துறை துப்பறிவதற்குப் பல வசதிகளையும், போலீசு தக்க சமயத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிற "பொடா' போன்ற சட்டம் அவசியத் தேவை என்பதை, மத்திய அரசு உணரவேண்டும்.'' (துக்ளக் 26.7.06, பக். 3,4)


பொடாவைத் திரும்பக் கொண்டு வருவது உட்பட ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. பாசிஸ்டுகளின் கருத்தை நிராகரிப்பதாகவும், இஸ்லாமிய பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு அது தீர்வல்ல என்று ஆளும் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிக் கூட்டணிகளும் அவற்றின் அரசும் கூறுகின்றன. ஆனால், பொடா சட்ட நிறைவேற்றம் போன்ற பகிரங்க நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபடவில்லை என்றாலும் அதிகாரபூர்வமற்ற இரகசிய வழிகளில் அரசு பயங்கரவாதத்தை ஏற்கெனவே அமலாக்கி வருகிறது. அதற்காக மத்தியமாநில அரசு உளவுப் படைகளை இறக்கிவிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் என்ற பெயரில் தனிப்படைகள் இயங்குகின்றன. சந்தேகத்துக்குரியவர்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல், வழக்கு விசாரணைகள் நடத்தப்படாமல் சிறையிலடைக்கப்படுகின்றனர். பாகிஸ்தான் ஊடுருவல் பயங்கரவாதி என்ற பெயரில் போலி மோதல்கள் நடத்தி பல இளைஞர்கள் கொல்லப்படுகின்றனர். காஷ்மீரில் அப்பாவிச் சிறுவர்கள் கூட பயங்கரவாதிகள் என்ற பெயரில் கொல்லப்படுகின்றனர்.


காங்கிரசுத் தலைவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள், ஓய்வுபெற்ற உளவுத்துறை போலீசு உயரதிகாரிகளின் முடிவுகள் ஆகியவை இந்து பாசிச பயங்கரவாதிகளின் கருத்துக்களையே பிரதிபலிக்கின்றன. தடா, பொடா சட்டங்கள் கேடாகப் பயன்படுத்தப்பட்டதைப் போலவே, தற்போது கட்டவிழ்த்து விடப்படும் அரசு பயங்கரவாதம், எந்தத் தீவிரவாதத்துடனும் தொடர்பில்லாத ஜனநாயக, முற்போக்கு சக்திகள், பத்திரிக்கையாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் என்று பிற பகுதி மக்களையும் பலிவாங்குவதற்கு ஏவிவிடப்படும் என்பதில் சந்தேகமில்லை.


என்னதான், கடுமையான அரசு பயங்கரவாத ஒடுக்குமுறையை ஏவிவிட்டபோதும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை இந்திய ஆட்சியாளர்களால் ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரவே முடியாது. ஏதோ ஒரு சில மாதங்கள் அமைதியாகி விட்டதாகத் தோன்றினாலும், நேரம் குறித்த வெடிகுண்டுகள் நிறையவே ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவை மும்பை தொடர்வண்டி தொடர் குண்டுகளைப் போல எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.


அதற்கான அடிப்படையின் கர்த்தாவாக இந்திய ஆட்சியாளர்களே உள்ளனர். முதலாவதாக, இந்த நாட்டில் இஸ்லாமிய பயங்ரவாதம் மட்டும்தான் கோரத் தாண்டவமாடுகின்றது என்ற தவறான தோற்றம் உருவாக்கிப் பாதுகாக்கப்படுகிறது. இஸ்லாமிய பயங்கரவாதத்திற்குத் தூண்டுதல் சக்தியாக விளங்குவது இந்து பாசிச பயங்கரவாதம். நாட்டின் பெரும்பான்மை மக்களைச் சமூக அடிப்படையாகக் கொண்டிருப்பதால், குஜராத், 199293 ஆண்டுகளில் நடந்த மும்பை இந்து மதவெறிப் படுகொலைகள், 1985 டில்லி சீக்கியர் மீதான கொலை வெறியாட்டம் போன்ற இந்து பாசிச பயங்கரவாதச் செயல்கள் பெருந்திரள் தாக்குதல்களாக இருக்கின்றன. ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதம் சிறுபான்மை சமூக அடிப்படையைக் கொண்டிருப்பதால், பலமுறை நிகழ்த்தப்பட்ட மும்பை தொடர்குண்டு வெடிப்புகள், கடந்த தீபாவளிக்கு முன்பு நடந்த டெல்லி குண்டு வெடிப்புகள், சமீபத்தில் நடந்த வாரணாசி குண்டு வெடிப்புகள் போன்றவை முற்றிலும் சதிச் செயல்களாக உள்ளன. மேலும், காஷ்மீரில் நடத்தப்படும் அரசஇராணுவ பயங்கரவாதப் படுகொலைகள் எல்லாம் தேசிய நலன்களுக்கானது என்று நியாயப்படுத்தப்படுகின்றன. ஆகவே, இந்துமதவெறி, அரச பயங்கரவாதப் படுகொலைகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத எதிர்த் தாக்குதல்கள் என்ற சுழற்சியில் மாறிமாறி இந்த நாடும் மக்களும் சிக்கிக் கொண்டுள்ளனர்.


ஆனால், இந்திய ஆட்சியாளர்களும், பிற அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ""இசட்'' முதல் ""ஏ'' வரை 26 வகை பிரிவுகளின் கீழ் பூனைப்படைகள் புடை சூழ நடமாடி வருகின்றனர். தொடர்ந்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குவதற்குரிய காரணங்களை உருவாக்கிக் கொடுத்து வருகின்றனர். மத்திய கிழக்கில் அரபு மக்களுக்கு எதிராகப் பாசிச வெறியாட்டம் போடும் ஜியோனிய இஸ்ரேலுடனான இராணுவ உறவுகளை அதிகரித்து வருகின்றனர் ஆப்கானிலும் ஈராக்கிலும் அமெரிக்கபிரிட்டன் ஆக்கிரமிப்பாளருக்குத் துணையாக (நேரடியாக இராணுவத்தை அனுப்பி வைக்க) பலமுறை எத்தணித்தனர். முடியாத நிலையில் தனியார் படை திரட்டி அனுப்பியுள்ளனர். இங்கேயும் இந்து மதவெறி பாசிஸ்டுகள் குஜராத், ஒரிசா, மராட்டியம் போன்ற கொலைவெறியாட்டங்கள் தங்குதடையின்றி நடத்தப்படுகின்றன.


இந்து பாசிச பயங்கரவாதத்துக்கு எதிரான பதிலடிதற்காப்பு நடவடிக்கைகள் என்பதாக மட்டும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் இல்லை என்பதும் உண்மையே. வௌவேறு இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களின் நோக்கங்கள் வௌவேறானவையாக உள்ளன. அமெரிக்காவின் சி.ஐ.ஏ., பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்ற உளவுப் படைகளால் இயக்கப்படும் குழுக்களும் உள்ளன. அல்லாவின் ஆட்சியை நிறுவுவதற்கான புனிதப் போர் (ஜிகாத்) நடத்தும் குழுக்களும் உள்ளன. இஸ்லாம் எதிர்ப்பு, பாக். எதிர்ப்பு இந்துத்துவமே இந்திய தேசியம் என்பதும் தவறு அதேபோல, அல்லாவின் ஆட்சியை நிறுவும் புனிதப்போர் (ஜிகாத்) என்பதும் தவறு. இரண்டுமே மதவெறி பயங்கரவாதத்துக்கு இந்த நாட்டையும் மக்களையும் பலியிடுவதாகும். முன்னதற்குச் சான்று குஜராத் பின்னதற்குச் சான்று மும்பை ஜூலை 11. இரத்தத்தை இரத்தத்தால் கழுவ முடியாது என்பதையே இரண்டும் காட்டுகின்றன.


மு ஆர்.கே.


Tuesday, August 22, 2006

ஒரு மக்கள் யுத்தத்தை புலிகளால் நடத்தவே முடியாது

ஒரு மக்கள் யுத்தத்தை புலிகளால் நடத்தவே முடியாது

பி.இரயாகரன்
22.08.20006

நீதியானதும் நியாயமானதுமான ஒரு மக்கள் யுத்தத்தை இனி ஒருநாளும் புலிகளால் நடத்தவே முடியாது. மாறாக அநியாயமான மக்கள் விரோத யுத்தத்தையே புலிகளால் நடத்த முடியும். எப்படி மக்களுக்கான ஒரு பேச்சுவார்த்தையை அவர்கள் நடத்த முடியாதோ, அதேயொத்த அரசியல் நிபந்தனைதான் ஒடுக்கப்பட்ட மக்கள் யுத்தத்தையும் நடத்த முடியாமைக்கான காரணமாகும். இன்று புலிகள் நடத்த முனைவது, நடத்தப் போவதாக பசப்புவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான யுத்தத்தையல்ல. புலிகள் இன்று நடத்த முனைவது மக்கள் யுத்தமல்ல, மக்கள் விரோத புலி யுத்தத்தையேயாகும். இதை எந்த அடிப்படையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை யுத்தமாக நியாயப்படுத்த முனைந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமானது இந்த அரசியல் என்ற உண்மையை யாரும் மறுதலிக்க முடியாது. சிங்களப் பேரினவாதம் நடத்துகின்ற மக்கள் விரோத பாசிச யுத்தம் எவ்வளவுக்கு கோரமானதாகவும் இழிவானதாகவும் மாறினாலும் கூட, புலிகளின் யுத்தம் ஒடுக்கபட்ட மக்கள் யுத்தமாக ஒருநாளும் மாறிவிடாது.எதிர்வன்முறை பற்றி லெனின் 'நாங்கள் வன்முறையை விரும்புவதில்லை. புரட்சியை மிகமிக சமாதான வழிகளில் ஈட்டவே விரும்புகின்றோம். ஆனால் சுரண்டும் வர்க்கம் எமக்கு எதிராக கொடிய அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் போது சுரண்டும் வர்க்கத்தின் வன்முறையை தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வன்முறை மூலம் எதிர்த்து நிற்கின்றோம்" என்றார். போராட்ட நோக்கங்களுடன் கூடிய நியாயத்தை, போராட்ட முறைகளை மனித இனம் ஏற்றுக்கொள்ளும் வகையில் முன்வைத்து போராடுவது அவசியம். ரவுடிகள் போல், மாபியா போல் திணிப்பது போராட்டமாகாது. மனித தர்மமும், மனித நேயமுமற்ற எவையும், நியாயப்படுத்த முடியாதவையாக மாறிவிடுகின்றது.இன்று அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இராணுவ ரீதியாக புலிகள் வென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கைக்குரிய வாதங்களை விதைக்க முனைகின்றனர். இது பொய்மையிலான ஒரு கானல் நீராகும். அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையில் புலிகள் தோற்றது என்பது, பேரினவாதத்தின் அரசியலால் சூழ்ச்சியால் அல்ல. மாறாக புலிகளின் தவறான அரசியலால் தான், அவர்களை இலகுவாக பேரினவாதிகள் தோற்கடிக்கமுடிந்தது. இதே நிபந்தனை யுத்தத்துக்கும் பொருந்துகின்றது. யுத்ததந்திரத்தில் பலர் கருதுவது போல் அரசியல் பேச்சுவார்த்தை வேறு, யுத்தம் வேறு என்பது முற்றிலும் தவறானதாகும். இரண்டும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை வென்று எடுப்பதில், இவ்விரண்டு கட்டங்களும் நிச்சயமாக வந்து போகின்றன.சமாதானம் அதையொட்டிய பேச்சுவார்த்தைகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக நடத்தப்படுகின்றன என்ற ஒற்றைப்பரிமாண வாதம், உண்மையில் ஒரு தலைப்பட்சமானது. சமாதானம் பேச்சுவார்த்தை எதிரியை அம்பலப்படுத்தும், ஒரு புரட்சிகரமான ஒரு யுத்ததந்திரம் கூட. எதிரி பற்றி பரந்துபட்ட மக்களின் சுயாதீனமான சொந்த அனுபவத்தை உருவாக்கிக் கொடுக்கவும், யுத்தத்துக்கான முன்தயாரிப்பாகவும் கூட பேச்சுகளை பயன்படுத்தமுடியும். இதற்கு உலகில் பற்பல உதாரணங்கள் உண்டு. எதிரியை இராணுவ ரீதியாக வெற்றிகொள்ள, மேலும் அவர்களை அரசியல் ரீதியாக பெரும்பான்மை மக்கள் முன் அம்பலப்படுத்த, பேச்சுவார்த்தைகள் உதவுகின்றன. இதை நாங்கள் தவறாக கையாளும் போது, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்வைக்காத போது, அதுவே போராட்டத்தை சிதைத்து சின்னபின்னாமாக்கிவிடுகின்றது. ஒரு பேச்சுவார்த்தையை எப்படி கையாள்வது என்பது எதிரி தீர்மானிக்க முடியாத வகையில், மக்களின் அரசியல் அபிலாசைகள் தீர்மானிக்கும் வகையில் நகர்த்துவது அவசியம். இது மக்களின் எதிரியை மண் குப்பிற கவிழ்க்கும். உண்மையான ஒடுக்கப்பட்ட விடுதலை சக்திகளால் தான், பேச்சவார்த்தை எந்த வழியூடாக எப்படி நகரவேண்டும் என்பதை தீர்மானிக்கமுடியும். மாறாக ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து இருப்பதற்கு பதில், எமது குறுகிய நோக்கில் தவறாக கையாளும் போது, அதுவே எமக்கு சுமையாக விலங்காகிவிடும். இதுவே புலிகள் விடையத்தில் நடக்கின்றது. இது நேபாளத்தில் நடக்காது.ஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறைக்கான அரசியல் அடிப்படைஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறைக்கான அரசியல் அடிப்படை, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் கோரிக்கையில் அடங்கியுள்ளது. இதை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கமுடியாது. பேச்சுவார்த்தை, யுத்தம் இரண்டிலும் இது அக்கம்பக்கமாக, ஒன்றில் இருந்து ஒன்றுக்கு முன்னேறிச் செல்லுகின்றது. ஒன்றில் சறுக்கி மற்றொன்றில் முன்னேறிச் செல்லவே முடியாது. அது வெற்று கானல் நீராகவே வெளிப்படும்.இதை நிராகரிக்கும் புலிகள், முன்முயற்சி கொண்ட இராணுவ நடவடிக்கையை ஒருதலைப்பட்சமாக நியாயப்படுத்துகின்றனர். பேரினவாதத்துக்கு எதிராக யுத்தம் தவிர்க்க முடியாதது என்கின்றனர். பேரினவாதத்துக்கு எதிராக யுத்தம் எப்படி தவிர்க்க முடியாதோ, அதேபோல் பேச்சுவார்த்தையும் தவிர்க்கமுடியாது. ஒன்றை நிராகரித்து, ஒன்றை செய்ய முடியாது. அக்கபக்கமாக இரண்டையும் சரியான யுத்ததந்திரத்துடன் பயன்படுத்த தெரிந்து இருக்க வேண்டும். அது தான் மக்கள் தலைமையின் கடமை. மக்கள் எதை முதன்மைப்படுத்தி நிற்கின்றனரோ, அதில் ஊன்றி நின்று எதிரியை அதற்குள் இழுத்து தனிமைப்படுத்தவேண்டும். தமிழ் மக்கள், சிங்கள மக்கள் உள்ளிட, இலங்கை வாழ் அனைத்து மக்களும் சமாதானத்தையும் அமைதியையும் கோருகின்றனர். இதை நிராகரித்துவிட்டு நாம் மட்டும் தனித்து யுத்தத்தை நடத்த முடியாது. இது மாபெரும் மற்றொரு அரசியல் தவறாகவும், அழிவாகவும் முடியும். இந்த மனநிலை இரண்டு படைகளினுள்ளும் காணப்படும். அமைதி சமாதானம் என்பதில் நேர்மையான உளச்சுத்தியான செயற்பாடு மூலம், மக்கள் விரும்பும் அமைதியை சமாதானத்தை எதிரி தரமாட்டான் என்பதை நடைமுறையில் அரசியல் ரீதியாக நிறுவவேண்டும். இதைவிட்டு விட்டு நாங்களே சமாதானத்தினதும் அமைதியினதும் எதிரியாக மாறினால், அதன் விழைவு பாரதூரமானது. வரலாறு மன்னிக்க மாட்டாது.இந்த நிலையில் தான், புலிகள் ஒடுக்கப்பட்ட முழு இலங்கை மக்களும் விரும்பிய அமைதி சமாதானத்துக்கு எதிராக செயற்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, நீட்சியாக யுத்தம் உடன் வேண்டும் என்று வலிந்து தொடங்குகின்றனர். விடுதலை போராட்டத்துக்கு உடனடியாக இராணுவ ரீதியான செயற்பாடு அவசியம் என்கின்றனர். முன்முயற்றி கொண்ட புலிகளின் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி பொருத்தமற்ற வகையில் முரண்பாடாகவே ஓலமிடுகின்றனர். புலிகளின் உத்தியோகப+ர்வ இராணுவப் பேச்சாளர், இராணுவமே ஒரு தலைப்பட்சமாக தம்மைத் தாக்குவதாக கூறுகின்றார். இதற்கு எதிர்வினையைத் தான் புலிகள் செய்வதாக கூறுகின்றார். மறுபக்கத்தில் புலிப் பினாமி இணையங்கள், செய்திச் சேவைகள், அனைத்தும் இராணுவ தாக்குதலின் அவசியம் பற்றி சூழுரைத்தனர். மக்கள் விரும்பிய சமாதானம் அமைதிக்கு புறம்பாக, புலிகள் வலிந்து ஒருதலைபட்சமான தாக்குதலை அரசுபடைகள் மீது நடத்தினர். எப்படி ஒரு தலைப்பட்சமாக பேச்சுவார்த்தையில் இருந்து விலகினரோ, அப்படியே யுத்தநிறுத்தையும் ஒருதலைபட்சமாக மீறினார். இன்று இரண்டையும் முழுமையாக செய்யமுடியாத ஒரு அரசியல் நெருக்கடிக்குள் புலிகள் சிக்கித் திணறுகின்றனர்.புலிகளின் முரண்பாடாக இராணுவ தாக்குதல் பற்றி கருத்துரைகளை முன்வைத்தபடி தான், இராணுவ தாக்குதல்கள் தவிர்க்க முடியாது என்கின்றனர். மக்கள் விரும்பும் சமாதானம், அமைதியை இராணுவ தாக்குதல் ஊடாகவே அடையமுடியும் என்று ஒரு தலைப்பட்சமாக கூறுகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு நிம்மதியான வாழ்வை பெற்றுத் தரமுடியும் என்கின்றனர். பேரினவாதத்தை எதிர்கொள்ள மாற்றுவழிகள் இல்லையென்கின்றனர். ஆனால் இலங்கையில் வாழும் எந்த இன மக்களும், இந்த முடிவுக்கு வரவில்லை. ஒரு இராணுவ கும்பல்களும், யுத்தத்தினால் இலாபமடையும் பொறுக்கிகளும் தான் யுத்தத்தை நோக்கி ஆகாகா என்று ஓடுகின்றனர்.யுத்த ஆதரவுக் கருத்தை மக்கள் மேல் திணிக்க முடியாதுயுத்த ஆதரவுக் கருத்தை மக்கள் மேல் திணிக்க முடியாது. யுத்தத்தின் அவலத்தை மக்கள் எதார்த்தமாக சந்திப்பதால், அதற்கு ஆதரவு கொடுத்துவிட மாட்டார்கள். யுத்த வெறியர்கள் வேறு, பரந்துபட்ட மக்கள் வேறு. யுத்த வெறியர்களின் நலன்கள் வேறு, மக்களின் நலன்கள் வேறு.2002 முதலாக உருவாக்கிய அமைதி சமாதானம் நோக்கிய அமைதி ஒப்பந்தம், எப்போது யாரால் ஏன் தூக்கி வீசப்பட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்ள முடியாத ஒரு சூனிய நிலையில் தான் யுத்தம் திணிக்கப்பட்டது. அமைதி சமாதான ஒப்பந்தம் கையெழுத்திட்ட மை காய முன்பே, அதை மீறுவதும் தொடங்கியது. புலிகள் அதிகளவில் படுகொலைகளைச் செய்து, தமது பாசிச நடவடிக்கையை அமைதிக்கால செயற்பாடாக்கினர்.அமைதி சமாதானம் நோக்கிய பேச்சுவார்த்தையில், தமிழ்மக்களின் பிரச்சனைகள் எவையும் பேசப்படவேயில்லை. அரசியல் ரீதியான பேச்சு வார்த்தைக்குப் பதில், தமது குறுகிய இராணுவ நலன்களை முதன்மைப்படுத்திய இராணுவ கோரிக்கைக்குள் தான் பேச்சு வார்த்தைகள் நடந்தன. இராணுவ நலன் சார்ந்த சலுகைகள் பலவற்றை பெற்று அவற்றை புலிகள் அனுபவித்தனர். சிலவற்றில் தொங்கிக் கொண்டு அங்குமிங்கும் இழுக்கப்பட்டனர். இப்படி பேச்சுவார்த்தையை நெருக்கடிக்குள் இட்டுச்சென்றனர்.பிரச்சனை எங்கே என்பதை புரிந்துகொள்ள முடியாத வகையில், பேச்சுவார்த்தையின் விளைவுகள் அமைந்தன. சில பேச்சுகள் என்ன நடந்தது என்பதே, யாருக்கும் தெரியாத ஒரு விடையமாகியது. இந்த பேச்சுவாhத்தையின் முடிவுகள் என்ன? என்ன நடந்தது? என்று யாரும் திரும்பிப் பார்த்தால் எதையும் புரிந்துகொள்ள முடியாத அரசியல் சூனியம் தான் எச்சமாக எஞ்சிக்கிடக்கின்றது.கருணா விவகாரம் வந்த போது, இது மேலும் சிக்கலுக்குள்ளாகியது. கருணா குழுவை அழிக்க புலிக்கு உதவிய அரசு, தொடர்ந்தும் புலிகளின் கூலிப்பட்டாளமாக இயங்க மறுத்தனர். புலிகள் இராணுவத்தை தமது கூலிப்பட்டாளமாக இயங்க கோரும் நிபந்தனைகளுடன் தான், பேச்சுவார்த்தை மேலும் நெருக்கடிக்குள்ளாகியது.இப்படி பேச்சுவார்த்தை வலிந்த நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டது. அமைதி சமாதானம் கொலைக்களமாக மாறி, அன்றாடம் கொலை செய்வதே அரசியலாகியிருந்தது. இதில் இருந்து இராணுவ ரீதியான தாக்குதலை நடத்த கூடிய அரசியல் வெற்றியை புலிகளால் முன்வைக்க முடியாது, வெற்றிடத்தில் புலிகள் திகைத்தனர். அரசியல் ரீதியான ஒரு பேச்சுவார்த்தை மூலம், இராணுவ ரீதியான போராட்டம் தவிர்க்க முடியாது என்பதை நிறுவ முடியாது அரசியல் சூனியத்தில், சதிகளை அடிப்படையாக கொண்டு பேச்சுவார்த்தையை வெற்றிகொள்ள முனைந்தனர்.சதிகளையும், சூழ்ச்சியையும் அடிப்படையாக கொண்ட இராணுவ நெருக்கடியை திணித்து, அதன் மூலம் தமது இராணுவ ரீதியான செயற்பாடுகள் அவசியம் என்று நிறுவ முனைந்தனர். ஆனால் எல்லாம் தொடர்ச்சியாக பிசுபிசுத்துப் போனது. தமது முன்முயற்சி கொண்ட இராணுவ ரீதியான தாக்குதல், பேச்சுவார்த்தையின் தோல்வியால் ஏற்பட்டது என்பதை நிறுவமுடியாது போனது. வலிந்த முன்முயற்சி கொண்ட தாக்குதல் மூலம், நீடித்த ஒரு இராணுவ நெருக்கடியை உருவாக்கினர். ஆனால் இதுவும் புலிகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. மட்டுப்படுத்தப்பட்டதாக, அதேநேரம் புலிகள் தொடர்ச்சியாக தம்மைத் தாம் வலிந்து அம்பலப்படுத்துவதாக அமைந்தது.நிலைமையை மாற்ற பாரிய தாக்குதலை குறுகிய அரசியல் நோக்கில் நடத்தினர். குறிப்பாக தண்ணீரைக் கட்டுப்படுத்தியதன் மூலம் சண்டையை வலிந்துகோரினர். அதேநேரம் இதைப் பயன்படுத்தி, முன்கூட்டியே திட்டமிட்ட வகையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒரு இனச் சுத்திகரிப்பு தாக்குதலை நடத்தினர். இப்படி குறுகிய தமது இலாபம், இராணுவ நலன்கள் என்ற அரசியல் எல்லைக்குள், இராணுவ தாக்குதல்கள், புலிகளின் அரசியல் பேச்சவார்த்தை போல் தொடர்ச்சியாக அம்பலமாகியது.அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாதவர்கள் என்பதை, மறுபடியம் ஒருதலைப்பட்சமான இராணுவ நடவடிக்கை மூலம் நிறுவினர். தமது தோல்வியை மூடிமறைக்க, இராணுவ தாக்குதலை சதிகள் மூலமும் பொய்கள் மூலமும் இட்டுக்கட்டி வீங்கவைத்தனர். இராணுவ தாக்குதல் தொடங்கியவர்களின் குறுகிய நோக்கும், மிக குறுகிய காலத்திலேயே இயல்பாக மீண்டும் தாமாகவே அம்பலமாகி விடுவதை அவர்கள் தவிர்க்க முடிவதில்லை.பேரினவாதத்தின் நிலையில் வைத்தோ, புலியின் நிலையில் வைத்தோ நாம் பேச்சவார்த்தையை அணுகக் கூடாதுமக்களின் நிலையை வைத்தே பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும். அமைதி சமாதானத்தை பேச்சுவார்த்தை மூலம் அடையமுடியுமா என்பதை, பேரினவாதத்தின் நிலையில் வைத்து மட்டும் மதிப்பிடக் கூடாது. அதேபோல் புலிகளின் நிலையில் வைத்தும் பார்க்கக்கூடாது. மக்களின் நிலையில் நின்று, இன்று இந்தப் பேச்சுவார்த்தையின் வெற்றி தோல்வியை நாம் கற்றுக் கொள்ளவேண்டும். புலிகள் ஒடுக்கப்பட்டோருக்கான ஒரு மக்கள் இயக்கமல்ல. அது மக்களை அடிமைப்படுத்தி, தனது சொந்த குறுகிய நலனை அடிப்படையாக கொண்ட ஒரு பாசிச இயக்கம். பேச்சுவார்த்தை சார்ந்து, அமைதி சமாதானம் நோக்கி அவர்களால் மக்கள் நலன் நோக்கில் நகரவே முடியாது. குறுகிய நலனை அடிப்படையாக கொண்டே நகரும் என்பதால், இயல்பாகவே நெருக்கடிக்குள் புகுந்துவிடுகின்றது.இதன் நீட்சியில் அரசியல் ரீதியான தோல்வியை மறைக்க, இராணுவ ரீதியான வழிமுறையை பிரயோகிப்பதும், அதை கோருவதும் தொடங்குகின்றது. இராணுவ ரீதியான அணுகுமுறையும், அதேபோன்று மீண்டும் தோல்வியடையும். காலநீடிப்பை இது உருவாக்குகின்றது. இதற்கு வெளியில் மனித இழப்புகள், அகதி வாழ்வு, சொத்திழப்புகள் மூலம், தமது குதர்க்கமான நியாயமற்ற யுத்ததைத் மூடிமறைக்க முடியாது.பொதுவாக பேரினவாதத்தின் கொடூரத்தை எதிர்கொள்ள, மக்களின் பெயரில் சண்டையைத் தொடங்குவதாக கூறுவதும், கருத்துரைப்பதும் அழுகிப் போன புலி அரசியலின் மொத்த வினையாகும். மிக மோசமான அரசியல் பிழைப்புவாதிகளும், வாய்வீச்சுக் கொலைகாரர்களும் மக்களின் பெயரில் சண்டையை திணிக்கின்றனர். வடக்குக் கிழக்கில் வாழும் மக்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் கூட சண்டையை விரும்பவில்லை என்ற உண்மையை யாரும் கண்டு கொள்வதில்லை.யார் இதைத் கோருகின்றனர். அரசியல் ரீதியாக அம்பலப்பட்டுள்ள புலிகளும், புலிப் பினாமிகளும், புலியைக் காட்டி வியாபாரம் செய்யும் வர்த்தகக் கூட்டமும் தான் யுத்தம் யுத்தம் என்று கூக்கூரல் இடுகின்றது. இதை தொடங்கிய பின், அதை நியாயப்படுத்தும் கூட்டம் புலம் பெயர் நாட்டில் வாழ்பவர்களின் ஒரு பகுதியினர்தான். வயதுபோய் எந்த பொழுதுபோக்கு மற்றவர்கள் கதைப்பதற்கும், பொழுதுபோக்குக்கும் தமது வாய்வீச்சை விரும்பியவாறு பினாற்றவும், புலம்பெயர் புலி வர்த்தக கும்பலும், வானொலி தொலைக்காட்சிகளில் மைக்கை விழுங்கும் ஊத்தைவாளி பிழைப்புவாதிகளும், எல்லாவிதமான ஓட்டுண்ணிகளும், புலியைச் சொல்லிப் பணம் வசூலித்த ஏதோ ஒரு வகையில் இலாபம் பெறுபவர்களும், ஏதோ இணையம் ஒன்று நடத்த வெளிக்கிட்டவர்களும் தான், யுத்தம் வேண்டும் என்கின்றனர். மக்கள் விரும்பும் மக்கள் யுத்தம் என்கின்றனர். செத்தவீட்டில் ஓப்பாரி வைப்பது போல், இந்த கும்பல் தமக்காக யுத்தம் வேண்டும் என்ற ஒப்பாரி வைக்கின்றது.யுத்தத்தில் பாதிக்கப்படும் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. பேரினவாதத்தின் கொடூரமான அரசியல் திட்டத்தைக் கூட இனம் காணமுடியாதவராக, அரசியலற்ற மந்தைக் கூட்டமாக மக்கள் நாயிலும் கீழாக அடிமைப்பட்டு வாழுகின்றனர். நவீன சந்தை சார்ந்த இலக்ரோனிக் பொருட்களுடன் தமது கனவுகளை எல்லைப்படுத்தி மக்கள் கிடக்கின்றனர். பொருள் உலக நுகர்வில் சொக்கிக் கிடக்கும் ஒரு சமூக அமைப்பில், சமூக பண்பாட்டு கலாச்சார சிதைவுகளின் அம்மணமாகி வீழ்ந்து கிடக்கும் மக்களுக்கு, யுத்தம் ஏன் என்ற கேள்விக்கு விடைதெரியாது ஒரு நிலையில் யுத்தம் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிக செல்தொலைபேசிகளை உபயோகிக்கும் யாழ் பிரதேசம், அதிக மோட்டார் சைக்கிளை உபயோகிக்கும் யாழ் மக்கள், இது போன்ற அனைத்து நவீன பொருள் உலகத்தில் மட்டும் வாழ்கின்றனர். இதுவே கிளிநொச்சி முதல் கிழக்கு வரையில் செல்வாக்கு செலுத்துகின்றது. புலிகள் கொக்கோகோலா யாழ் பிரதிநிதியாக இருந்தபோதே, இந்த பொருள் உலக அழுகல் உருவாகியது. யுத்தம் கோக்கோகோலாவை குளிர்சாதன பெட்டியில் இருந்து வழங்க மறுத்தால், அதன் விளைவு என்ன? மின்சாரமின்றி குளிர்சாதன பெட்டியே இயங்காது. இப்படி உருவாக்கிய புலிப் பொருளாதாரம், யுத்தத்தை எப்படி ஆதரிக்கவைக்கும். அனைத்து பொருளுக்கும் வர்த்தக சந்தைசார்ந்து, புலிகள் வரி ஊடாக தேசிய உற்பத்தியை அழித்தே அதை ஊக்குவித்தனர். இந்த சமூகத்தின் முன் யுத்தத்தை திணிக்கும் போது, பொருள் உலகம் சார்ந்தே புலியின் மீதான வெறுப்பாக மாறுகின்றது. இப்படி யுத்த வெறுப்பு பலவடிவமாக பரிணாமமாகின்றது.தமிழ்மக்கள் தமது உரிமைப் போர் என்னவெனத் தெரியாத நிலை. இந்த மக்கள் கூட்டம் எப்படித்தான் இந்த யுத்தத்தைப் புரிந்து கொள்ளும். நாங்கள் அவர்களை விடுவோம், யுத்தத்தை நியாயப்படுத்தும் புலிப்பினாமி எழுத்தாளர்கள் முதல் செய்திகளை சேகரித்து திரிக்கும் புலிப்பினாமிகளுக்கு கூட, தமிழரின் உரிமைப் போராட்டம் பற்றி எதுவும் தெரியாதவர்களாக உள்ளனர்.மக்களின் உரிமை பற்றி பேசுபவர்களை, தமிழ்மக்களின் உரிமையுடன் சேர்த்தே கொன்று போடுகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதே தெரியாத அவலநிலை. மாறாக பேரினவாத இராணுவ முகாம்கள் மட்டும் பேரினவாதமாக காட்சி அளிக்கின்றது என்பது உண்மையாக இருந்தபோதும், அதை அரசியல் ரீதியாக புரிந்துகொள்ள முடியாத அரசியல் வறுமையில் மக்கள் மந்தைக்கூட்டமாக வாழ்கின்றனர். அவர்களுக்கு தம்மை யார் மேயந்தாலும் ஒன்றுதான். இது அவர்களின் பரிதாபமான அரசியல் நிலை. பேரினவாதம் இல்லை என்றால் புலி இராணுவம் நிற்கும். எந்த மாற்றமுமின்றி நிற்கும். ஆனால் அது மக்களின் வீட்டினுள் புகுந்து புடுங்குவதை மக்கள் சதா காண்கின்றனர். ஆகவே இராணுவங்கள் மாறவேண்டும் என்று, சிங்கள இராணுவத்துக்குப் பதில் தமிழ் இராணுவம் வரவேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. இப்படி நிலைமை படுமோசமாக, அரசியலற்ற மந்தைக் கூட்டத்தின் மீது எந்த அடிப்படையுமற்ற யுத்தம் திணிக்கப்படுகின்றது.இப்படி பல கேள்விக்கு பதில் தரமுடியாத மாயையில், உலகைக் தலைகீழாக காட்டி சிலர் மக்களை கொன்றும் கொள்ளையிட்டும் பிழைக்கின்றனர். ஏன் தமிழீழம் தேவை என்று நீங்களே உங்களைக் கேட்டுப் பாருங்கள். அது உங்களுக்கே தெரியாது இருப்பது புரியும். ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று கேட்டுப்பாருங்கள். பதில் எதுவும் இருப்பதில்லை. சிங்கள பேரினவாத அரசிடம் இருந்து, எதை அவர்களில் இருந்து மாறுபட கோருகின்றீhகள் என்றால் அதுவும் தெரியாது. அந்தளவுக்கு மந்தைக் கூட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, கப்பம், கடத்தல், அடிதடி, தியாகி, துரோகி, சிங்களவன் என்ற சில சொற்களுக்குள் புலித் தேசியம் மலடாகி வக்கிரமாகி புளுக்கின்றது. இதனால் நியாயமான மக்கள் யுத்தத்தை ஒரு நாளும் நடத்த முடியாது. அநியாயமான மக்கள் விரோத யுத்ததையே நடத்தமுடியும்.Monday, August 21, 2006

அன்னிய தலையீட்டை இலங்கையில் தவிர்க்க முடியுமா?

அன்னிய தலையீட்டை இலங்கையில் தவிர்க்க முடியுமா?

பி.இரயாகரன்
21.08.2006

ந்த கேள்வி இலங்கையின் இன்றைய சூழலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. அன்னிய தலையீடு தவிர்க்க முடியாத ஒன்றாகவே, இன்றைய அரசியல் போக்கு வலிந்திழுக்கின்றது. எப்படி யுத்த வெறியர்களின் யுத்தத்தை இன்று மக்களால் தடுத்து நிறுத்த முடியாதிருக்கின்றதோ, அதேபோல் இந்த அன்னிய தலையீட்டையும் தடுத்து நிறுத்தும் நிலையில் மக்கள் இல்லை. அன்னிய தலையீடு நிகழும் போது மக்களின் சமூக பொருளாதார எதிர்காலம், இன்று உள்ளதைவிடவும் மிக மோசமாகும். இன்று நிகழவுள்ள அன்னிய தலையீட்டை தீர்மானிப்பதில், புலிகள் மற்றும் பேரினவாதத்தின் குறிப்பான நடவடிக்கைகளே தீர்மானகரமான ஒன்றாக மாறியுள்ளது. நாளாந்த மக்கள் மீதான பாரிய படுகொலைகள் முதல் பெரியளவில் அகதியாகும் நிகழ்ச்சிகள் மூலம் இந்த அன்னிய தலையீட்டுக்கான சூழல் சிருஸ்டிக்கப்படுகின்றது. இந்த வகையில் இலங்கை விவகாரத்தில் அன்றாடம் அன்னிய நாடுகளின் தொடர்ச்சியான அரசியல் எதிர்வினைகள் அனைத்தும், சமகாலத்தில் தீர்க்கமான ஒரு தலையீடடுக்கான அரசியல் முடிவை நோக்கி நகர்த்துகின்றது.


இலங்கைப் பிரச்சனையை புலிகளும் இலங்கை அரசும், தமக்கிடையில் சுமுகமாக தாமே பேசித் தீர்க்கத் தவறுகின்ற ஒவ்வொரு நிமிடமும், அன்னிய தலையீடு எதார்த்தமான ஒன்றாக மாறி வருகின்றது. இந்த தலையீடு பேரினவாதத்தின் விட்டுக்கொடுப்புக்கு எதிரானதாகவும், புலிப்பாசிசத்துக்கு எதிரானதாகவும் அமையும். ஆனால் இது மக்கள் சார்பானதாக அமையாது ஏகாதிபத்தியம் சார்பானதாக அமையும். அதாவது இது தமிழ்மக்கள் பெயரில், ஏகாதிபத்தியம் தாம் விரும்பும் ஒரு தீர்வை முன்வைப்பர். இது புலியின் விருப்பத்தையும், பேரினவாதத்தின் பேரினவாத நிலையையும் மறுதலிக்கும். மிகச் சிறந்த உதாரணமாக இந்திய ஆக்கிரமிப்பு 1987 இல் நடந்த போது, இந்தியா தாம் விரும்பிய ஒரு தீர்வை எப்படி முன்வைத்ததோ, அப்படியான ஒரு நிலையில் நிகழும். ஆனால் இந்த தலையீட்டுக்கான சூழல், முன்பு இந்தியா தலையிட்டது போல் அல்லாது, உலகம் தழுவியதாகவே அமையும்.


ஏன் அன்னிய தலையீடு இன்னமும் இலங்கையில் நடக்கவில்லை


இலங்கையில் இன்றுவரை ஒரு அன்னியத் தலையீடு நடக்கவில்லை என்றால், அதற்கு காரணம் பேரினவாதத்தின் பேரினவாத நிலையே ஒழிய, புலிகள் நிலையல்ல. புலிகளின் அன்றாட நடவடிக்கைகள், அன்னிய தலையீட்டை நடத்தும் வகையில், அதை தூண்டும் வகையில் தொடர்ச்சியாக காணப்படுகின்றது. அன்னிய தலையீட்டை நியாயப்படுத்தும் வகையில், அதற்கு பக்கபலமாகவே புலி நடவடிக்கைகள் அமைகின்றது. அதேநேரம் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு தாம் விரும்பிய ஒரு தீர்வைக் கூட முன்வைக்க மறுக்கின்ற ஒரு சூழல் தான், அன்னிய தலையீட்டை பின் போடவைக்கின்றது. இந்த அரசியல் எதார்த்தம் சார்ந்த உண்மை ஊடாகத்தான், நாம் அன்னிய தலையீட்டை எதிர்கொள்ளும் அரசியல் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.


பேரினவாதம் தமிழ் மக்களுக்கு தான் விரும்பும் ஒரு அரசியல் தீர்வை வைத்தாலே, அன்னிய தலையீடு உடனடியாக நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. இந்த தீர்வை பேரினவாதம் புலிகளுக்கு வைக்க வேண்டிய அவசியத்தை அடிப்படையாக கொண்டதல்ல. அது போல் தமிழ்மக்கள் முன் வைப்பதையும் அது கோரவில்லை. மாறாக ஏகாதிபத்தியத்தின் முன் இதை வைக்க கோருகின்றது. இந்தத் தீர்வை புலிகளுக்கு அல்ல, தமிழ் மக்களுக்கு அவர்களின் பெயரில் வைப்பதன் மூலம், புலிகளை தனிமைப்படுத்தி அதை அமுல்படுத்த அன்னிய தலையீடு நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் அன்னிய தலையீடு பேரினவாதத்தின் நிலையால் தடைப்பட்டுள்ளதே ஓழிய, புலியின் நடவடிக்கையால் அல்ல.


பேரினவாதம் தமிழ் மக்களுக்கு ஏதோ ஒரு தீர்வைத்தன்னும் வைக்க மறுக்கின்ற நிலையில் தான், புலிகளின் அரசியல் இருப்பு தப்பிப் பிழைக்கின்றது. இதுவே அன்னிய தலையீட்டை பின்போடுகின்றது. இதுவே சர்வதேச ரீதியாக புலித்தடையை மென்மையானதாக்குகின்றது. இதற்கு வெளியில் எதுவுமல்ல.


புலிகளின் உப்புச்சப்பற்ற பாசிச அரசியல் இதை தடுத்து நிறுத்தாது. அதனால் ஊளையிடவும், பொய்யையும் புரட்டையும் வக்கிரமாக புனையவும் முடியும். அவையும் உடனுக்கு உடன் அம்பலமாகி தலைவிரி கோலமாகிவிடுவதே நிகழும்.


அன்னிய தலையீட்டை வலிந்திழுக்கும் புலி நடவடிக்கை


அன்னிய தலையீட்டை வலிந்திழுக்கும் வகையில், புலி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. அரசியல் ரீதியாக ஒரு பேச்சுவார்த்தையைக் கூட வெற்றிகரமாக நடத்த தெரியாதவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிறுவியபடி தாமாகவே அம்பலமாகின்றனர். இராணுவ நடிவடிக்கையை மட்டும் நம்பி ஓடுபவர்கள், அதன் மூலம் அன்னிய தலையீட்டை வலிந்து கோருகின்றனர். அதற்கு ஏற்றாற் போல் நடவடிக்கைகளை தொடருகின்றனர்.


தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையை பேச புறப்பட்டவர்கள், பேச்சுவார்த்தையில் தமிழர்களின் நியாயமான ஜனநாயக உரிமையையே பேசமறுத்து, தமது குறுகிய சொந்த நலன்களைப் பேசியதன் மூலம், மூக்கு அடிபட விழுந்து மண்ணைக் கவ்வினர். புலியின் நலன்கள் மக்களின் நலன்கள் அல்ல என்ற உண்மையைக் கூட, தமது சொந்த நடத்தை மூலம் நிறுபவர்கள் தான் புலிகள். இந்த நிலையில் மக்களை ஏமாற்றி மக்கள் நலன் பேசுவதாக காட்டும் பிழைப்புவாத கட்சிகளின் நிலையில் நின்று கூட, அரசியல் பேசத்தெரியாதவர்கள் என்பதையும் கூட நிறுவிவருகின்றனர்.


இந்த அவலமான படுதோல்வியான அரசியல் நிலையில், தமிழ் மக்கள் சார்பாக அரசியல் பேச அருகதையற்றவர்கள் தான் புலிகள் என தாமாகவே நிறுவினார்கள். புலிகள் மீதான இன்றைய சர்வதேசத் தடைகள், அமைதிக்கான காலத்தில் பேச்சு வார்த்தையையொட்டி வந்ததே ஒழிய யுத்த காலத்தில் அல்ல. சர்வதேச ரீதியான ஏகாதிபத்திய தலையீட்டுக்கு கம்பளம் விரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பதில், அதை தீவிரமாக ஆணையில் வைத்து செயற்படுகின்றனர். கொலை, கடத்தல், பலாத்காரமாக பணம்திரட்டல்கள், அடாவடித்தனங்கள், இதைத் தவிர வேறு எதையும் புலிகள் அரசியலாக பேசுவதோ செய்வதோ கிடையாது. உலக மக்களை வென்று எடுக்கும் வகையில், ஏகாதிபத்தியத்தை தனிமைப்படுத்தும் வகையில் புலி நடவடிக்கைகள் எவையும் அமையவில்லை. மாறாக இதற்கு எதிரிடையாக ஏகாதிபத்திய தர்க்கத்தை உலக மக்கள் ஏற்கும் நிலைமைக்கு ஏற்ற, புலி நடவடிக்கை தொடர்ச்சியாக அமைந்துள்ளது.


தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைக் கோரும் ஏகாதிபத்தியம்


இதை தமிழ் மக்கள் சார்பாக புலிகள் கோரவில்லை. ஏகாதிபத்தியம் திடீரென இதை முன்னிலைப்படுத்தி கோரத் தொடங்கியுள்ளது. ஆச்சரியம் ஆனால் இதுவே உண்மை. உண்மையில் தீர்வுத் திட்டம் ஒன்றுக்கான மாதிரியை, ஏகாதிபத்தியம் இலங்கை பேரினவாத அரசாங்கத்திடம் முன்மொழிந்துவிட்டது. அதை இலங்கை பேரினவாத அரசாங்கம் தானாக முன்மொழிந்து, அதை பகிரங்கமாக வைப்பதையே ஏகாதிபத்தியம் எதிர்பார்த்து கிடக்கின்றது. கொத்தி கிழித்து குதறித் தின்னும் கழுகாக காத்துகிடக்கும் ஏகாதிபத்தியம், போடும் தமது திட்டத்தின் அடிப்படையில் னெற இலங்கையில் செயல்படுகின்றது. இந்த வகையில் தான் அரசுடனும் எதிர் கட்சியுடனும் சந்திப்புகளை தொடர்ச்சியாக நடத்துகின்றன. இந்தியாவுக்கு அடிக்கடி அழைக்கப்பட்டு திட்டங்கள் திட்டப்படுகின்றன. இதனடிப்படையில் தான் சர்வகட்சி மாநாடு ஊடாக, தீர்வை நோக்கி காய் நகர்த்தப்படுகின்றது.


ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரையான வல்லூறுகள், தமது இராணுவ தலையீட்டை அடிப்படையாக கொண்டே பேரினவாதத்திடம் தீர்வை முன்வைக்க கோருகின்றனர். இதுதான் உடனடியான தலையீட்டின் மையப்புள்ளி. இதற்கு வெளியிலும் உண்டு என்பதை மறுபதற்கில்லை. பேரினவாதம் தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதை வலியுறுத்துகின்ற போது, புலிகளை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்துகின்ற வகையில் இந்த விடையம் தெளிவாக வலியுறுத்தப்படுகின்றது. புலிகள் வேறு மக்கள் வேறு என்பதை, அரசுக்கு ஏகாதிபத்தியம் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்த தொடங்கியுள்ளது. அந்தளவுக்கு தமிழ் மக்களுக்கு எதிரான புலி நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு, ஏகாதிபத்திய சதித்திட்டங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளது.


அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க கோரும் போது, இந்த விடையத்தை நாம் கவனத்தில் எடுக்கத் தவறினால், அன்னிய தலையீட்டுக்கான வலையில் அரசியல் ரீதியாக நாம் சிக்கிவிடுவது நிகழும். பேரினவாதத்துக்கு எதிரான அரசியல் ரீதியான யுத்ததந்திர கோசம் என்ற அடிப்படையில், தீர்வை முன்வைக்கக் கோரும் போது பேரினவாதத்தின் விட்டுக் கொடுப்புக்கு எதிரான ஒரு சூழலில் மட்டும் சரியானது. அதாவது பேரினவாதத்துக்கு எதிராக இதை முன்னிறுத்தம் போது, பேரினவாதத்தை அம்பலப்படுத்தும் எல்லைக்குள் மட்டும் இது ஒரு பொதுக் கோரிக்கையாகின்றது. பேரினவாதம் புலியின் பாசிச சூழலைப் பயன்படுத்தி, தனது பேரினவாத முகத்தை மூடிமறைக்க இனவாதத் தீர்வை புலியின் பாசிச இராணுவவாதத்தின் பின்னால் முன்வைக்கும் போது, அதை தனிமைப்படுத்த வேண்டியது சமூக அக்கறையுள்ளவர்களின் அரசியல் கடமையாகவுள்ளது. இதை புலிகளால் ஒரு நாளும் செய்யமுடியாது.


புலிகள் வேறு மக்கள் வேறு என்பதை, ஏகாதிபத்தியம் தனது கோசமாக்கியுள்ளது


இன்று இதை ஏகாதிபத்தியம் முன்வைக்கின்ற அளவுக்கு, ஏகாதிபத்தியம் புலிப்பாசிசத்தை பயன்படுத்தி முன்னேறிச் செல்லுகின்றது. இதை முன்வைத்து, தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வைக்கக் கோருகின்றது. தீர்வு புலிகளுக்கு அல்ல என்பதை மீண்டும் தெளிவாக்குகின்றது. புலிகள் வேறு, மக்கள் வேறு என்ற அரசியல் உண்மையை, நாங்கள் மட்டுமே (சமரும் தமிழ் சேக்கிள் மட்டுமே இதனடிப்படையில் தொடர்ச்சியாக கருத்தை முன்வைத்து எழுதி வந்தது) கடந்தகாலத்தில் கூறிவந்தோம். புலியெதிர்ப்பு தேசியத்தை எதிர்த்து, தேசியமும் புலியும் ஒன்று என்றனர். தமிழ் மக்களின் தேசியத்தை புலிக்கு மாற்றாக முன்னெடுக்க மறுத்தனர். இதன் மூலம் தமிழ் மக்கள் வேறு, புலிகள் வேறு என்பதை மறுத்தனர்.


இதையே பேரினவாத அரசும் கூறியது. புலிகள் தமிழ் மக்களும் தாமும் ஒன்றென்றனர். ஆனால் புலிகள் தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் அவசியமற்றது என்று கூறி அதை மறுத்தனர். தமக்கு மட்டும் தான் ஜனநாயகம் என்றனர். இப்படி தமிழ் மக்களையும் புலியையும் அனைவரும் ஒன்றாக பார்த்தனர். கடந்த காலத்தில் மக்கள் விரோத அரசியல் பலம் பெற்றது இப்படித்தான். மக்கள் சார்பாக இதை வேறுபடுத்தி பார்க்க யாரும் முன்வரவில்லை.


நாங்கள் மட்டும் இதை மறுத்து, அரசியல் ரீதியாக இரண்டையும் வேறுபடுத்தி அரசியல் ரீதியாக கருத்துக் கூறி வந்தோம். அரசியல் ரீதியாக ஜனநாயகம் தேசியம் இரண்டையும் கோரிய பிரிவுகள், புலி வேறு தமிழ் மக்கள் வேறு என்பதை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டனர். இதற்கு வெளியில் பொதுத்தளத்தில் இந்த உண்மையை அனைவரும் மறுத்து நின்றனர். இந்த நிலையில் பொதுத்தளத்தில் மக்கள் வேறு புலிகள் வேறு என்ற அரசியல் அடிப்படை, எமக்கு ஒரு அரசியல் வழியை வழிகாட்டலை வழங்கியது. இதனடிப்படையிலான அரசியல் கருத்தினை முன்னிலைப்படுத்தினோம்.


ஆனால் இன்று நிலைமைகள் அப்படியல்ல. ஏகாதிபத்தியமும் இந்தியாவும் கூட புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று கூறத் தொடங்கிவிட்டது. இதை பின்பற்றி புலியெதிர்ப்புக் கும்பலும் கூட, அதை கூறத் தொடங்கிவிட்டது. அரசும் அதை கொள்கை அளவில் ஏற்று, அதுவும் புலியை தனிமைப்படுத்துவதில் முன்னேறுகின்றது. புலிகளும் புலிப் பினாமிகளும் மட்டும், தமிழ் மக்களும் புலிகளும் ஒன்று என்கின்றனர். புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மை அவர்களுக்கு புரிந்ததே. ஆனால் அதைக் களைய எந்த அரசியல் முன்முயற்சியுமின்றி, தமது சொந்த அரசியல் அழிவுக்கு செங்கம்பளம் விரித்த வண்ணமுள்ளனர். இந்த நிலையில் அன்னிய தலையீட்டுக்கான சூழலை தயாரிப்பதில், புலிகள் வேறு மக்கள் வேறு என்ற அரசியல் உண்மையை, தனக்கு சார்பாக அன்னிய தலையீட்டுக்கு ஏற்ற ஒன்றாக புலிகள் அல்லாத அனைத்து தளமும் வரிந்து கொண்டுள்ளது.


புலி வேறு தமிழ் மக்கள் வேறு என்று நாங்கள் கூறுவதும், அவர்கள் சொல்வதும் ஒன்றா?


இல்லை. யாருமே இந்த உண்மையை சொல்லாத ஒரு அரசியல் நிலையில், நாங்கள் மக்கள் கூறியது அரசியல் பதம் ஜனரஞ்சமாக பொருந்துகின்றது. இதை மக்களின் எதிரிகளும் புலிக்கு எதிராக பயன்படுத்தத் தொடங்கியவுடன், மக்கள் யார் என்ற கேள்வியூடாக எதிரியை தனிமைப்படுத்தி, அரசியல் யுத்ததந்திரத்தை குறிப்பாக்க வேண்டியுள்ளது. மக்கள் வேறு புலிகள் வேறு என்று ஏகாதிபத்தியம் இன்று கூறுவது கூட, மக்களுக்கு எதிரானதே.


நாங்கள் இதை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தும் வகையில், அரசியல் கோரிக்கையின் உள்ளடகத்தில் மிக நுட்பமாக இதை எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது. அரசியல் மட்டத்தில் தமிழ்சமூகம் வழிபாட்டு முறைக்கும் வால் பிடிப்பதற்கும் அப்பால், எதையும் சுயமாக சிந்திக்கவும் செயலாற்றவும் முடியாத முடக்குவாதத்தில் சிக்கி மந்தைக் கூட்டமாக உள்ளது. இந்த நிலையில் இந்த வேறுபாட்டை விளங்க வைப்பதில் மேலும் கடினமான ஒரு பணியாக மாறிநிற்கின்றது. சிந்திக்கத் தெரிந்தவர்கள் கூட நிகழும் மாற்றத்தை இலகுவாக சுயாதீனமாக இனம் கண்டு, அதை அம்பலப்படுத்தும் வகையில் ஆளுமையற்றவராக உள்ள இன்றைய எமது சமூக நிலைமை, எமது அரசியல் பணியை மேலும் கடினமாக்குகின்றது.


ஏகாதிபத்தியம் இன்று மக்கள் வேறு புலிகள் வேறு என்று கூறுவதை, நடைமுறை ரீதியாக புரிந்து கொள்வதற்கு, காலமும் சொந்த அனுபவமும் பெரும்பான்மை மக்களுக்கு தேவைப்படலாம். ஆனால் அரசியல் ரீதியாக சமூக நல நோக்கில் பார்ப்பவர்களுக்கு, சிந்திப்பவர்களுக்கு, செயற்படுபவர்களுக்கு முன் இதைத் தெளிவுபடுத்துவது அவசரமான அவசியமான பணியாக எம்முன்னுள்ளது.


நிலைமை மிக வேகமாக அதிரடியாக மாறுகின்றது. எதிரி பல தளத்தில் தனது முந்தைய வழிமுறையை கைவிட்டு, புதிய அணுகுமுறையை கையாளுகின்றான். புலிக்கும் மக்களுக்கும் இடையிலான வெளிப்படையான முரண்பாட்டை, தனக்கு சார்பானதாக இயல்பானதாக மாற்றுகின்றான். இதன் மூலம் புலியை மட்டுமல்ல, தமிழ் மக்களை ஒடுக்கிவிட முனைகின்றான். இந்த எதார்த்தம் சார்ந்த அரசியல் உண்மையையும், இதையொட்டிய வேகமான மாற்றங்களையும் நாம் எதிர்கொண்டு செயலாற்ற வேண்டியவராக உள்ளோம். புலிகள் மாறமுடியாத பாசிசக் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு, செயலற்ற முடக்குவாதத்தில் மலடாகி நிற்கின்றனர். புலிகள் தமது இராணுவவாத வக்கிரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு, உலகமே கண்ணை மூடி பால் குடிப்பதாக நம்புகின்றனர்.


இந்த நிலையில் நாங்கள் எந்த மாற்றத்தையும் தீர்மானிக்கக் கூடிய நிலையில் இல்லாதவர்கள். ஆனால் அரசியல் ரீதியான முன்முயற்சி உள்ளவர்கள் என்ற வகையில், முன்பு நாங்கள் வைத்த அரசியல் கோசங்களை அப்படியே தொடர்ந்தும் முன்வைக்க முடியாமல் போகின்றது. மக்களின் எதிரிகள் அரசியல் சதிகளை கையாள்வதில் மிகவும் நுட்பமாக வேகமாக முன்னேறுகின்றான். இங்கு எதிரி என்பது ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசு வரையிலான அனைவரையும் நாங்கள் குறிப்பிடுகின்றோம்.


மாற்றம் வேகமாக விரைவாக நடக்கின்றது. புலிகளை தனிமைப்படுத்தி அழிக்கும் எல்லாவிதமான அரசியல் தந்திரத்தையும், உத்தியையும் அரசியல் ரீதியாகவே நகர்த்திய வண்ணம் உள்ளான். இந்த நிலையில் புலிகள் வேறு, மக்கள் வேறு என்று நாம் எதை எப்படிக் கூறுகின்றோம் என்று பார்ப்போம்.


நாங்கள் மக்கள் என்று கூறுவது ஒடுக்கப்பட்ட மக்களைத் தான். ஒடுக்கும் மக்களை அல்ல. ஒடுக்கபட்ட மக்களின் அதிகாரத்தைத் தான் முன்னிலைப்படுத்துகின்றோம். சமூக ஒடுக்குமுறைகளை அங்கீகரிக்கின்ற எந்தப் பிரிவையும், அதன் அரசியல் அபிலாசைகளையும் நாங்கள் மக்கள் என்ற வரையறைக்குள் உள்ளடக்குவதில்லை. அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் களைகின்ற அரசியலைத் தான், அதை தலைமை தாங்க முனைகின்ற மக்களைத் தான் மக்கள் என்கின்றோம்.


ஒடுக்குமுறைகளை களைய மறுக்கின்ற, புலிகள் அல்லாத எந்த அரசியலையும், அதை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மக்களையும் கூட்டத்தையும் நாங்கள் மக்கள் என்று கூறுவதில்லை. ஏகாதிபத்தியம் தமிழ்மக்கள் என்று கூறுவது, சமூக ஓடுக்குமுறையை அப்படியே பாதுகாக்கக் கூடிய, புலிகள் அல்லாத இன்னுமொரு ஆளும் மக்கள் விரோதக் கூட்டத்தைத் தான் அவர்கள் தமிழ்மக்கள் என்கின்றனர். அவர்களின் மக்கள் விரோத தலைமையை, புலிக்கு மாற்றாக முன்வைக்கத் தான், தமிழ்மக்கள் வேறு புலிகள் வேறு என்கின்றனர். இது டக்கிளஸ்சோ, கருணாவோ, ஆனந்தசங்கரியோ, புதிதாக ஒரு கும்பலோ அல்லது புலியில் இருந்து உருவாகும் மக்கள் விரோத மாற்றுக் கும்பலைத்தான், அவர்கள் தமிழ்மக்கள் என்கின்றனர்.


இன்று நிலவுகின்ற பிற்போக்கான சமூக ஓடுக்குமுறையை இயல்பாக கொண்ட மக்கள் கூட்டத்தைத் தான், ஏகாதிபத்தியம் தமிழ்மக்கள் என்கின்றனர். அதை அப்படியே தலைமை தாங்கக் கூடிய ஒரு மக்கள் விரோதப் பிரிவையே தமிழ்மக்கள் என்கின்றனர். தமிழ் மக்களின் சமூக பொருளாதார அமைப்பில் மாற்றங்கள் எதுவுமற்ற, புலியல்லாத மாற்றுத் தலைமை உருவாக்குவதற்கான அரசியல் அடிப்படையில், தமிழ்மக்கள் வேறு புலிகள் வேறு என்கின்றனர். இது புலியின் அரசியல் அடிப்படையில் இருந்து எந்தவிதத்திலும் வேறுபடாது. ஏகாதிபத்தியம் மக்கள் என்று கூறுவது, புலிகளுக்கு எந்த விதத்திலும் மேன்மையானதல்ல. புலிகள் நிலவுகின்ற இந்த பிற்போகான சமூக அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்க முனைகின்றனர் என்றால், அதையே ஏகாதிபத்தியம் மற்றொரு தலைமையூடாக அடைய புலிகளிடம் இருந்து பிரித்துக் காட்டுகின்றனர். புலியின் பாசிசத்துடன் கூடிய மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்ட இராணுவவாதம் முதன்மைக் கூறாகி, உலகளாவிய ஏகாதிபத்திய போக்கு இணக்கமற்றதாகி விட்டமையால் தான், புதிய தலைமையை மாற்றாக முனவைக்கின்றது. இதனடிப்படையில் தான் தீர்வை ஏகாதிபத்தியம் கோருகின்றனர். நாங்கள் இருக்கின்ற புலிகளின் பிற்போக்கு சமூக அமைப்புக்கு பதில், ஒடுக்கப்பட்ட மக்கள் தமது கையில் அதிகாரத்தை கோருவதை அடிப்படையாக கொண்டு அதை முன்னிலைப்படுத்துகின்றோம். மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி ஒடுக்குமுறையை களைகின்ற, அரசியல் அடிப்படையில் தான் நாங்கள் மக்கள் என்கின்றோம்.


இந்த நிலையில் நாங்கள் மக்கள் என்ற பொதுவான அரசியல் கோசத்தை மேலும் நுட்பமாக்கி, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் என்று அரசியல் கோசத்தை முன்னிலைப்படுத்த வேண்டியுள்ளது. புலிகள் வேறு, ஏகாதிபத்தியம் கூறும் மக்கள் வேறு, ஒடுக்கப்பட்ட மக்கள் வேறு என்று தெளிவாக கூறவேண்டியுள்ளது. மக்கள் தமது சொந்த அதிகாரத்தை நிறுவவும், அவர்களின் சொந்த அரசியல் தலைமைத்துவத்தை முன்னிறுத்தி வலியுறுத்துவது இன்று அவசியமாகிவிட்டது. புலித் தலைமைக்கு மாற்றாகவும், ஏகாதிபத்திய தலைமைக்கு மாற்றாகவும் இதை முன்னிலைப்படுத்தி கோரவேண்டியுள்ளது. இதன் மூலம் தான் உண்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை சாத்தியம். உண்மையான விடுதலைப் போராட்டமும் நடக்கமுடியும்.


இந்த அரசியல் உள்ளடகத்தையும், அதன் அரசியல் நோக்கத்தையும் துல்லியமாக முன்னிலைப்படுத்தி, மற்றய போக்குகளை வேறுபடுத்தி அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. இந்த வகையில் தான் ஏகாதிபத்தியம் இந்தியாவும் முன்வைக்கும் தீர்வை இனம் காட்டி அம்பலப்படுத்த வேண்டும். நாம் தமிழ் மக்களுக்கு தீர்வை முன்வைக்க கோரி இலங்கை அரசை நாம் அம்பலப்படுத்தி வந்தோம். இந்தக் கோரிக்கை பொது அரசியல் தளத்தில், புலிகள் உட்பட யாரும் கோராத ஒரு நிலையில் சரியானதாக இருந்தது. ஆனால் ஏகாதிபத்தியமே இன்று அதைக் கோருகின்ற நிலையில், பொதுக் கோரிக்கையாக அதை தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக கையாள முடியாது. நாங்கள் அரசியல் கோரிக்கையை சுயநிர்ணய அடிப்படையில், ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் குறைந்தபட்சம் முன்வைக்க வேண்டும் என கோரவேண்டும். புலிகள் தெளிவாக தீர்வு என எதையும் கோரவில்லை. இருந்தபோதும் அவர்களின் குறுகிய புலித் தீர்வு வேறு. ஏகாதிபத்தியம் கோரும் தீர்வு வேறு, நாங்கள் கோரும் சுயநிர்ணயம் சார்ந்த தீர்வு வேறு. இந்த சுயநிர்ணயம் என்பதை யாரும் தமக்கு விரும்பியவாறு கொச்சைப்படுத்தி விளக்கமுடியாது. அது அடிப்படையில் தேசிய பொருளாதாரம் என்ற மையமான அரசியல் உள்ளடகத்தை அடிப்படையாக கொண்டது. உலகமயமாதலை சுயநிர்ணயம் தனது கோரிக்கையின் ஊடாக அனுமதிக்காது. அனுமதித்தால் அங்கு அது சுயநிர்ணயமாக இருப்பதில்லை.


ஒடுக்கப்பட்ட மக்கள் தமது சொந்த அதிகாரத்தையும், தமது சொந்த விடுதலையையும் அடிப்படையாகக் கொண்டு போராடுவதை மறுக்கின்ற அனைத்தும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதுடன், மக்கள் விரோதத் தன்மை கொண்டவையுமாகும். இதைப் புரிந்து இதன் அடிப்படையில் நாம் முன்முயற்சி கொண்ட அரசியல் போராட்டத்தை நடத்துவது, இன்றைய சமகாலத்தில் முதன்மை பெற்ற ஒன்றாகவுள்ளது.