தமிழ் அரங்கம்

Tuesday, May 6, 2008

பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறும் உலகம்


பட்டினிக் கொடுமையால் தன்னையும் கடவுளையும் நொந்து கொண்டு, இறைவன் தமக்குக் ""கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?'' என்று பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பாடல் ஒன்றில் தமிழ்ப் புலவர் ஒருவர் கேட்டிருந்தார். அப்புலவரின் வேதனைமிக்க இந்த வரிகள் இன்று ஹெய்தி நாட்டில் யதார்த்த உண்மையாகியுள்ளது.

அந்நாட்டு ஏழை மக்கள் இப்போது மண்ணைத் தின்றால்தான் உயிர் வாழ முடியும் என்று கற்பிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவ்வாறு கற்றுத் தந்திருப்பது எல்லாம்வல்ல இறைவனல்ல, ஏகாதிபத்தியம்!
வெளிறிய மஞ்சள் நிறக் களிமண்; அதைக் குழைத்து அச்சில் வார்த்து காயவைத்து, சிறிது உப்பு சேர்த்து உண்கின்றனர் ஹெய்தி நாட்டின் ஏழை மக்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் குமட்டலைத் தணிக்க இக்களிமண்ணைச் சிறிதளவு மருந்து போல உட்கொள்வதென்பது அந்நாட்டு வழக்கம். இப்போது இக்களிமண்ணே ஏழைகளின் முழுமையான உணவாகி விட்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தெற்கு வாசலில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் கியூபாவுக்கு அருகிலுள்ள சின்னஞ்சிறு நாடுதான் ஹெய்தி. ஏறத்தாழ ஒரு கோடி கருப்பின மக்களைக் கொண்டுள்ள இந்நாடு, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தாலும் பின்னர் அமெரிக்க மேலாதிக்க வல்லரசாலும் சூறையாடப்பட்டு, இன்று உலகின் ஏழ்மை சூழ்ந்த நாடுகளில் ஒன்றாகிப் பரிதவித்து நிற்கிறது. ஏகாதிபத்தியவாதிகளால் திணிக்கப்பட்டு ஹெய்தியின் கைக்கூலி ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மறுகாலனியாதிக்கக் கொள்ளையால், அந்நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் வேலையிழந்து வாழ்விழந்து பட்டினியில் பரிதவிக்கிறார்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏழைகளால் வாங்க முடியாத அளவுக்கு விலையேற்றம் பலமடங்கு அதிகரித்து விட்டது.

இந்நிலையில் ""ரஸ்க்'' ரொட்டியைப் போல, அச்சில் வார்த்து காய வைக்கப்பட்ட களிமண்ணைத் தின்று பசியைப் போக்கிக் கொள்கின்றனர், அந்நாட்டு ஏழைகள். இக்களிமண் ரொட்டி வாயில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடுவதால், வாய்ப்புண், வயிற்றுப்புண் ஏற்பட்டு தீராத நோய்களுக்கு இம்மக்கள் பலியாகி வருகிறார்கள். ஹெய்தியின் அவலம் மெதுவாகக் கசிந்து உலகையே அதிர்ச்சியுறச் செய்ததும், ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் விவசாயக் கழகம் அவசர நிலைப் பிரகடனம் செய்து, அந்நாட்டுக்கு உடனடியாக உணவுப் பொருட்களை அனுப்புமாறு உலக நாடுகளைக் கோரியுள்ளது.

இது ஏதோ ஹெய்தி நாட்டில் மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. ஏகாதிபத்தியவாதிகளால் உலகின் சிவப்பு விளக்குப் பகுதியாகச் சீரழிக்கப்பட்டு விட்ட தாய்லாந்து நாட்டில், ஏழை விவசாயிகள் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பட்டினியில் பரிதவிக்கின்றனர். பசிக் கொடுமையிலிருந்து மீள, அவர்கள் மூங்கில் புழுக்கள், ஈசல்விட்டில் பூச்சிகள், காட்டெறும்புகள் முதலானவற்றைப் பிடித்து வறுத்துத் தின்னும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வல்லரசு கனவு காணும் இந்தியாவின் உ.பி.மாநிலத்தில் முஷாகர் எனப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர், பட்டினியிலிருந்து மீள எலிகளையும் நத்தைகளையுமே உணவாக உட்கொள்கின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் உணவுப் பஞ்சத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் உலகின் பல ஏழை நாடுகளில் இத்தகைய அவலங்கள் தொடரும் அதேநேரத்தில், மாரிடானியா, செனகல், கினியா, பர்கினா பாசோ, மொராக்கோ முதலான ஆப்பிரிக்க நாடுகளிலும், உஸ்பெகிஸ்தான், யேமன் முதலான ஆசிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலுள்ள மெக்சிகோ நாட்டிலும் உணவுக் கலகங்கள் வெடித்துப் பரவுகின்றன.

இந்தியா உள்ளிட்டு இந்த ஏழை நாடுகளை மட்டுமின்றி, உலகையே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் என்னும் கொள்ளைநோய் கவ்வியுள்ளது. கடந்த ஓராண்டுக்குள் மக்காசோளத்தின் விலை 50 சதவீதமும், அரிசியின் விலை 25 சதவீதமும், கோதுமையின் விலை இருமடங்காகவும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடும் ஐ.நா. மன்றம், உலக அளவில் தானியக் கையிருப்பு 57 நாட்களுக்கு மட்டுமே உள்ளதாகவும், கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்றதொரு படுமோசமான நிலைமை ஏற்பட்டதில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

கடந்த ஈராண்டுகளாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கிடுகிடு விலையேற்றத்துக்கு ""உயிரி எரிபொருள்'' எனும் ஏகாதிபத்திய திட்டமே முதன்மையான காரணமாகும். உயிரி எரிபொருள் தயாரிப்புக்காக மக்காச்சோளம், சோயா, கரும்பு, சிலவகையான கிழங்குகள், எண்ணெய் வித்துக்கள் முதலான விவசாய விளைபொருட்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாலேயே இந்த விலையேற்றமும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன.

உலகின் எரிபொருள் தேவையை ஈடுகட்டவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும், புவி வெப்பம் உயர்ந்து வருவதைத் தடுக்கவும்தான் உயிரி எரிபொருள் திட்டம் என்று ஏகாதிபத்தியங்கள் வாதிட்டாலும், இது ஏழை மக்களைப் பட்டினி போட்டுக் கொல்லும் வக்கிரத் திட்டமாகவே உள்ளது. மேலும், பெட்ரோல், நிலக்கரி போன்ற மரபு சார்ந்த எரிபொருளுக்கு மாற்றீடாக உயிரி எரிபொருள் அமைந்து விடாது என்றும் இதனால் விபரீத விளைவுகளே ஏற்படும் என்றும் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துக் காட்டியுள்ளன.

இதுதவிர, ஏகாதிபத்திய உலகின் மேட்டுக்குடி கும்பல்களது உணவில் இறைச்சியானது முக்கிய இடம் பெறுகிறது. வகைவகையான இறைச்சி உணவின் தேவையை நிறைவு செய்யக் கூடுதலாக இறைச்சி உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக கணிசமான அளவுக்கு உணவு தானியங்கள் கால்நடைகளுக்குத் தீனியாகத் திருப்பிவிடப்பட்டுக் கொழுக்க வைக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு கிலோ இறைச்சிக்காக 8 கிலோ உணவு தானியம் கால்நடைகளுக்குக் கொட்டப்படுகிறது. இதனாலும் உணவு தானியப் பற்றாக்குறையும் விலையேற்றமும் ஏற்படுகிறது.

மேலும், ஏகாதிபத்திய அராஜக உற்பத்தியால் புவி வெப்பம் அதிகரித்து, இயற்கைச் சீற்றங்களால் உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதாலும், மக்கட்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப விவசாய உற்பத்தி நவீனப்படுத்தப்படாமல் ஏகாதிபத்தியங்களால் நாசமாக்கப்பட்டு வருவதாலும், ஏகாதிபத்திய உலகின் நிதியாதிக்கக் கும்பல்கள் ஊக வணிகத்தின் மூலம் உணவுப் பொருட்களைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செய்து வருவதாலும் உலகெங்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடும் விலையேற்றமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஏகாதிபத்தியம் உலகம் மிகக் கொடியது. மனித இனம் பட்டினியால் மாண்டு போனாலும் பரவாயில்லை, எமக்கு இலாபம்தான் வேண்டும் என வெறியோடு அலையும் ஏகாதிபத்தியவாதிகள் உலகில் நீடிக்கும்வரை, உலகைக் கவ்வியுள்ள பட்டினிப் பேராயத்திலிருந்து மனித இனம் மீள முடியாது. ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறியும் அரசியல் புரட்சிகள் நடக்காமல், சுயசார்பான தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்காமல் மனித இனம் இனிச் சுதந்திரமாக உயிர் வாழவும் முடியாது.

இம்மாபெரும் புரட்சிப் போருக்கு நாம் அணிதிரளப் போகிறோமா? அல்லது விதியை நொந்து கொண்டு ஹெய்தி மக்களைப் போல களிமண்ணைத் தின்றுச் சாகப் போகிறோமா?
· குமார்

அவலத்திலும் இலாபவெறி! ஏகாதிபத்தியவாதிகளின் வக்கிரம்!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பட்டினியால் சிக்கித் தவிக்கும் தாய்லாந்து நாட்டின் ஏழைகள் மூங்கில் புழுக்களைப் பிடித்து வறுத்து உண்கிறார்கள். இப்போது அதையும் பறித்துக் கொண்டு அம்மக்களைப் பட்டினிச் சாவுக்குத் தள்ளிவிட ஏகாதிபத்திய நிறுவனங்கள் கிளம்பியுள்ளன.

தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில், ஏழைகள் உண்ணும் புழு, பூச்சிகளைத் தரம் உயர்த்தி அவற்றை டப்பாக்களில் அடைத்து விற்கும் வழிமுறைகளை ஆராய்வதற்காக, தாய்லாந்தில் உள்ள சியாங்மை நகரில் கடந்த பிப்ரவரி 18ஆம் நாளன்று, ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் வேளாண் கழகம் ஒரு ஆய்வரங்கத்தை நடத்தியுள்ளது. உலகெங்கும் 1400 வகை புழுபூச்சிகளை மனிதர்கள் மருந்தாக உண்பதாகவும், அவற்றில் புரதச் சத்து மிகுந்துள்ளதாகவும், இவற்றை சுகாதாரமான முறையில் தயாரிப்பதன் மூலம் புதிய வியாபாரச் சந்தையை உருவாக்க முடியும் என்றும் அந்த ஆய்வரங்கில் விவாதிக்கப்பட்டுள்ளது.

உடனே பல்வேறு ஏகாதிபத்திய நிறுவனங்கள், புழுபூச்சிகளைப் பிடித்து வறுத்து டப்பாக்களில் அடைத்து வியாபாரம் செய்ய களத்தில் இறங்கிவிட்டன. முதலாளித்துவ செய்தி ஊடகங்களோ ""இயற்கையான புரதச் சத்து நிறைந்த புழுபூச்சிகளின்'' அருமை பெருமைகளை அடுக்கத் தொடங்கி விட்டன. ஈசல் வறுவலும், எலிக்கறியும் இனி டப்பாக்களில் விற்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கிரிக்கெட் போட்டி ஏலம்: சூதாட்டமே விளையாட்டாக…

கிரிக்கெட் போட்டி ஏலம்: சூதாட்டமே விளையாட்டாக…
புதிய ஜனநாயகம் - 2008

ஏகாதிபத்தியத்தின் கீழ் எதுவுமே புனிதமானதல்ல : எல்லாமே பணம் பண்ணும் சரக்குதான் என்பதையே ஏலம் விடப்பட்ட கிரிக்கெட் போட்டி எடுத்துக்காட்டுகிறது.

ஒருமுறை மறைந்த கவர்ச்சி நடிகை ""சில்க்'' சுமிதா கடித்த எச்சில் ஆப்பிளை ரசிகர் ஒருவர் 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். கிரிக்கெட் விளையாட்டிலும் அண்மையில் இதுபோன்றதொரு ஏலம் நடந்திருக்கிறது. ஏலம் எடுக்கப்பட்டது இந்திய கிரிக்கெட் வீரர்கள் தின்று போட்ட எச்சில் இலைகளையல்ல.

மாறாக, கிரிக்கெட் வீரர்களையே ஏலம் எடுத்திருக்கிறார்கள், இந்தியப் பெருமுதலாளிகள்.

""சில்க்'' சுமிதாவின் எச்சில் ஆப்பிளை ஏலத்துக்கு எடுத்தவரின் செயலை, பைத்தியக்காரத்தனம் என்று எவரும் எளிதில் கூறிவிட முடியும். ஆனால், கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கும் முதலாளிகள் நிச்சயம் பைத்தியக்காரர்கள் அல்ல. ""இது ஒரு இலாபம் தரும் வியாபாரம்'' என்று பேட்டியளிக்கிறார், கொல்கத்தா அணியை ஏலம் எடுத்திருக்கும் இந்தி நடிகர் ஷாருக்கான்.

ஏப்ரல் ஜூன் மாதங்களில் இருபதுக்கு இருபது (20/20) என்ற பெயரில் இந்தியன் பிரீமியர் லீக் என்ற அமைப்பு கிரிக்கெட் போட்டிகளை நடத்தவிருக்கிறது. இந்தப் போட்டிகளில் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி, மொஹாலி, ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு என இந்தியாவின் எட்டு மாநில நகரங்களின் பெயரில் அணிகள் மோதவிருக்கின்றன. இந்த அணிகளை யார் வேண்டுமானாலும் ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம் என 200 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் புள்ளி அறிக்கை (டெண்டர்) வெளியிட்டது, இந்திய கிரிக்கெட் வாரியம். இதன்படி, சாராய அதிபர் விஜய் மல்லையா, திரு(ட்டு) பாய் அம்பானி, ஜி.எம்.ஆர். எனும் வீட்டுமனை கொள்ளைக்கார நிறுவனம், டெக்கான் கிரானிக்கல் எனும் ஆங்கில நாளேடு, பெருமுதலாளி நெஸ் வாடியா, இந்தி சினிமா நடிகர் ஷாருக்கான், கவர்ச்சி நடிகை பிரீத்தி ஜிந்தா ஆகியோர் பல நூறு கோடிகளுக்கு ஒவ்வொரு அணியையும் ஏலம் எடுத்துள்ளனர்.

இந்த அணிகள் இந்தியாவின் மாநிலங்களைச் சேர்ந்த நகரங்களின் பெயர்களில் அமைந்திருந்தாலும், அதில் விளையாடுபவர்களெல்லாம் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இன்னும் சொல்லப் போனால், இதில் பலர் இந்தியாவைச் சேர்ந்தவர்களே அல்ல. ஒவ்வொரு அணியிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த 4 கிரிக்கெட் வீரர்கள் இடம் பெறுவார்கள். எஞ்சியிருப்பவர்களில், எந்த மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் இடம் பெறுவார்கள். இப்படி உள்நாட்டுவெளிநாட்டு வீரர்களைக் கலந்து வீரிய ஒட்டுரகமாக அணிகள் அமைந்திருக்கும்.

அணிகளை ஏலத்துக்கு எடுத்ததைப் போலவே, அதற்கான ஆட்டக்காரர்களையும் ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள் இந்திய முதலாளிகள். இதன்படி, சென்னை அணியில் விளையாடவுள்ள மகேந்திரசிங் டோனியை 6 கோடி ரூபாய்க்கு ஏலமெடுத்திருக்கிறார், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முதலாளி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆட்டக்காரர் சைமண்ட்சை 5.4 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணிக்காக ஏலம் எடுத்திருக்கிறது, டெக்கான் கிரானிக்கல் நாளேடு. இதேபோல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை இந்த ஏலமுறைக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியம். இவர்களில் தங்களுக்கு விருப்பமானவர்களைத் தெரிவு செய்து, தாங்கள் ஏலம் எடுத்துள்ள அணிகளில் அவர்களை ஆட வைக்க முதலாளிகளால் முடியும்.

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை ஏலம் போட்டு முதலாளிகளிடம் விற்றதன் மூலம் 7,000 கோடி ரூபாய்க்கு கல்லா கட்டியிருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியம். செய்தி ஊடகங்களால் இந்த தேசத்தின் நாயகர்களாகச் சித்தரிக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், தாங்கள் அடிமைகளைப் போல ஏலம் போட்டு விற்கப்பட்டதற்கு அவமானப்படவில்லை. இப்படி தங்களுக்கு ""ரேட்'' பேசப்பட்டிருப்பதைக் கண்டு பூரித்துப் போயுள்ளார்கள். ""இந்த ஏலத்தின் மூலம் கிரிக்கெட் வீரர்கள் குறுகிய காலத்தில் அதிக இலாபமீட்ட முடியும்'' என்று மகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார், நட்சத்திர ஆட்டக்காரரான யுவராஜ்சிங். விலை போகாத சில "வீரர்கள்' மட்டும், ""எனக்கு இது தகுந்த ரேட் இல்லை'' என்று விலைமகளிர் போல பேட்டியளித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்பட்ட கேவலத்தைக் கண்டு வெறுப்பை உமிழாமல், இந்த ஆட்டக்காரருக்கு இவ்வளவு தொகை கொடுத்திருக்கலாம்; இது குறைவானது, கூடுதலானது என்றெல்லாம் செய்தி ஊடகங்கள் பரபரப்பாக பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றன. டோனிக்கு ஆறு கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டதைக் கண்டு தேசியப் பெருமிதம் கொள்கின்றன. இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கைக் காட்டிலும் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பதை சந்தைப் பொருளாதாரத்தின் விளைவு என்று அங்கலாய்த்து, இந்தப் பட்டிமன்றத்தில் "தேச பக்தி'யோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது, "மார்க்சிஸ்டு'களின் புரட்சிகர ""தீக்கதிர்'' நாளேடு.

ஆங்கிலேய பிரபுக்குலத்தின் மேட்டுக்குடி சீமான்களின் பொழுதுபோக்கு விளையாட்டாகத் தொடங்கிய கிரிக்கெட், இன்று பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் விளம்பர வியாபார ஊடகமாகவும், தரகுப் பெருமுதலாளிகள் கருப்புப் பணச் சூதாடிகளின் விளையாட்டாகவும் வளர்ந்து விட்டது. சினிமாவுக்கு அடுத்த கவர்ச்சிகரமானதாக கிரிக்கெட் மாற்றப்பட்டிருக்கும் அதேசமயம், சினிமாவைவிட அதிகமாகப் பணம் புரளும், பணம் கொழிக்கும் மையமாக கிரிக்கெட் விளையாட்டு மாறியிருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் வெவ்வேறு நாடுகளின் ஊழல்மிக்க வாரியங்கள் ஆண்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் சம்பாதிக்கின்றன. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் பல லட்ச ரூபாய் சம்பளமாகப் பெறுவதோடு, கூடுதலாக விளம்பரங்களில் தோன்றி கோடிக்கணக்கில் ஊதியம் பெறுகிறார்கள். இவை மட்டுமின்றி, கிரிக்கெட் சூதாடிகளுடனும் தரகர்களுடனும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை நடத்துகிறார்கள்.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பால் உல்மரின் கொலைச் சம்பவம், சர்வதேச கிரிக்கெட்டின் இருண்டஅசிங்கமான பகுதியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டியது. இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணிகளின் வீரர்கள், வர்த்தகச் சூதாடிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஊழலில் ஈடுபட்ட விவகாரம் ஏற்கெனவே அம்பலமாகியுள்ளது. இருப்பினும் உள்நாட்டுவெளிநாட்டு முதலாளிகளால் பல்லாயிரம் கோடிகள் வாரியிறைக்கப்பட்டு இந்த கிரிக்கெட் சூதாட்டம் வெறியோடு நடத்தப்படுகிறது. ஆங்கிலேய காலனிய நாடுகளாக இருந்த நாடுகளில் மட்டுமே, அவமான அடிமைச் சின்னமாக கிரிக்கெட் விளையாட்டு தொடர்கிறது. விடுதலைப் போராட்ட உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு அமெரிக்கஆங்கில மோகம் ஊட்டி வளர்க்கப்படுவதைப் போலவே கிரிக்கெட் மோகம் "தேசபக்தி'யாக வளர்க்கப்படுகிறது.

கிரிக்கெட்டையே தனித்தொழிலாகக் கொண்ட ஆட்டக்காரர்களும், கிரிக்கெட்டை பந்தயம்சூதாட்டமாகவும் வியாபாரம்விளம்பரமாகவும் நடத்தும் கருப்புப் பண கும்பலும் சமுதாயத்தின் மிகப் பெரிய ஒட்டுண்ணிகளாக வளர்ந்து விட்டதை, தற்போதைய ஏல விவகாரம் மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது. குதிரைப் பந்தயம், லாட்டரி, ஆபாச களிவெறியாட்ட விடுதிகள் போன்றவை எவ்வாறு ஒழிக்கப்பட வேண்டியவையோ, அதைப் போலவே மிகப்பெரிய சமூகக் கேடான கிரிக்கெட் விளையாட்டும் ஒழிக்கப்பட வேண்டும். உழைக்கும் மக்களின் புரட்சிகரப் போராட்டங்களே, இச்சூதாட்ட வெறியாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும்.

· பாலன்

Sunday, May 4, 2008

சாயம் வெளுத்துப் போகும் ஓநாய் கூட்டங்கள்

தமிழ் பேசும் மக்களின் மீட்பாளர்கள் எல்லாம் தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். 'விடுதலை" பேசிய புலிகள் முதல் 'ஜனநாயகம்" பேசிய புலியெதிர்ப்பு ஒநாய்கள் வரை, தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். தமிழ் மக்களின் தேசிய விடுதலை என்றும், தமிழ் மக்களின் ஜனநாயகம் என்று கூறிக்கொண்டவர்கள் எல்லாம், கேடுகெட்ட மனித விரோதிகள் என்பதை, அவர்களின் அரசியலையும் நடத்தையையும் அடிப்படையாக கொண்டு கடந்த காலத்தில் கூறிவந்தோம்.

இன்று அவர்களில் பலர் தமது செய்கைகள் மூலம் அம்பலமாகிவருகின்றனர். புலிகள் அரசு பேசுசுவார்த்தையின் போது, புலிகள் தாம் படுமோசமான மக்கள் விரோதிகள் என்பதை ஊர் உலகம் அறிய தம்மை அம்பலமாக்கினர். இதே காலத்தில் ஜனநாயகம் பேசும் கூட்டம் புளுத்து, திடீர் மிதப்பாகினர். ஆனால் அரசு புலியின் யுத்த தொடங்கியவுடன், தாங்கள் புலிகளை மிஞ்சிய மக்கள் விரோதிகள் என்பதை, தமது சொந்த அரசியல் நாற்றத்துடனேயே எடுப்பாக அவர்கள் அம்பலமாக்கி வருகின்றனர்.

'ஜனநாயகத்தின்" பெயரில் ரீ.பீ.சீயையும், தேனீயையும் மையமாக வைத்து ஜனநாயகம் பேசியவர்கள, இலங்கையின் இந்தியாவின் அரசியல் எடுபிடிகளாக இன்று பலர் தாமாக வெளிவருகின்றனர். அன்று 'ஜனநாயக" மாநாடுகள், சமூக விழுமியங்கள், தீர்வுப் பொதிகள் என்ற வேஷத்தில் கொட்டமடித்தவர்கள் எல்லாம், இலங்கை அரசின் கோமணங்களாக இருப்பது அம்பலமாகி வருகின்றது.

ரீ.பீ.சீக் கும்பலோ ஈ.என்.டீ.எல்.எவ் என்ற இந்தியக் கூலிக் கும்பலில் எடுபிடிகளே தாங்கள், என்பதை வெளிப்படை அம்மணமாக்கி நிற்கின்றனர். கருணாவின் பிளவுடன் ஈ.என்.டீ.எல்.எவ் கும்பலும் நடத்திய (இந்தியா) அரசியல் தேன் நிலவு வரை நீடித்த, அவர்களின் ஜனநாயக கூத்து இன்று நொருங்கிப்போய்விட்டது. அக்காலத்தில் கருணா ஊர் உலகத்தை கொள்ளையடித்த கொள்ளைப் பணத்தின் ஒருபகுதியைப் பெற்றே, ரீ.பீ.சீ 'ஜனநாயகம்" பேசியதை இன்று கருணா-பிள்ளையான் கும்பல் அம்பலமாக்கியுள்ளது. இன்று ஒருவரை ஒருவர் பரம எதிரியாகவும், பரஸ்பரம் அவதூறை கட்டமைக்கும் 'ஜனநாயகத்தை"யே அவர்கள் தமது அரசியலாக செய்கின்றனர்.

தேனீக் கும்பல, ஆனந்தசங்கரி முதல் புளட் கும்பல் வரையிலான எடுபிடி 'ஜனநாயகம்' பேசி நாறுகின்றது. எல்லாம் இலங்கையில் இயங்கும் கூலிக் கும்பல்களின் பினாமிகள் என்பது, இந்திய இலங்கை ஏகாதிபத்திய அரசியல் ஏஜண்டுகள் என்பது வெளிப்படையானது. மக்களுக்கென்ற ஒரு சுயாதீனமான மக்கள் அரசியலை என்றும் இவர்கள் வைத்தது கிடையாது. இவர்கள் பேசிய 'ஜனநாயகம்" என்பது, இலங்கை இந்திய கூலிக் குழுக்களைச் சார்ந்து, தாம் பிழைத்துக்கொள்ளும் சுயநலத்தை தாண்டியதல்ல என்பது இன்று வெளிப்படையாகி நிற்கின்றது.

இந்த வேஷதாரிகள் வெளிப்படையாக வெளுத்துப் போக, தேசம் நெற் இந்த கும்பலின் பின்னணியில் தனிமனித வக்கிரங்களை அள்ளிக் கொட்டுகின்ற அற்ப கொசிப்புத் தளமாகியது. இலங்கை மக்களின் சொந்த விடுதலை பற்றி யாரும் பேசிவிடக் கூடாது என்ற அடிப்படையில், அன்னிய உளவுத்துறைகளின் திட்டமிட்ட அரசியல் தேவையுடன் தேசம் நெற் களமிறங்கியது.

தமக்கு கருத்து கிடையாது, அரசியல் கிடையாது என்று அறிவித்துக்கொண்டு, மக்களுக்கு எதிரான அரசியலுடன் விபச்சாரம் செய்தனர். இதையே கடந்தகால கருத்தற்ற இலக்கிய சந்திப்பும், கருத்தற்ற புலம்பெயர் சஞ்சிகைகளும் செய்துவந்தன. இதன் மூலம் அவர்கள் கருத்தின்றியே செத்து மடிந்தன.

இன்று தேசம்நெற் மக்களின் உரிமைகள் மீதும் கூட தமக்கு கருத்துக் கிடையாது என்று கூறிக்கொண்டு, அது தனிமனித காழ்ப்புக்களை கொட்டி ஆட்டம் போட்டது, போடுகின்றது. புலி, புலியெதிர்ப்பு அரசியல் வக்கரித்துப் போன சமூக விரோதிகளின், சொந்த ஆடுகளமாக கொண்ட வாசகர் தளத்தை அடிப்படையாகக் கொண்ட தேசம் நெற் அரசியல் செய்தது, செய்கின்றது. இப்படி இரண்டு சமூக விரோதிகளின் அரசியலைக் கொண்டு, மக்களுக்கு எதிராகவே தன்னை மிதப்பாக்க முனைந்தது.

மக்களை நேர்மையாக அணுகவும் நேசிக்கவும் வக்கற்ற கும்பலினை வளைத்துப்பிடித்துக் கொண்டு, தமிழ் மக்களை வழிகாட்டப் போவதாக பீற்றிக்கொண்டது. கொசிப்பு, அரிப்பு, வம்பளப்பு மூலம், தன்னை பிரபல்யமாக்க முனைந்தது. இதைச் செய்த பலர், முடிவற்ற இந்த சூதில் சிக்கி களைத்துப் போய்விட்டனர்.

இப்படி எங்கும் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்று விதம் விதமாக பேசியவர்கள் எல்லாம், இன்று அம்பலமாகிவிட்டனர். அண்மையில் ஞானம் கிழக்கில் பிள்ளையான் அருகில் அமர்ந்து மதியுரைஞனாக கருத்துரைத்ததன் மூலம், அதன் அரசியல் குருவானார். இது எமக்கு நன்கு தெரிந்த ஞானத்தின் சொந்தக் கதையல்ல. ஞானம் போன்றவர்கள் இன்று ஒரு உதாரணம், ஆனால் புலி எதிர்ப்பு பேசும் பலரின் சொந்த நிலை இது. கிழக்கு தேர்தலில் வேறு (புலம்பெயர்ந்தவர்கள்) சிலர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் பின்னணியில் பணம் முதல் அவர்களின் அரசியல் வரை, தாராளமாக அரசியல் விபச்சாரம் செய்கின்றது. சந்தர்ப்பம், சூழல், துணிவும் இருந்தால் 'ஜனநாயகம்" பேசும் பலர், தமிழ் மக்களுக்கு எதிராக, புலிகளின் பெயரில் இலங்கை - இந்திய அரசின் ஏஜண்டுகளாக செயல்பட தயாராகவே உள்ளனர் என்பதே எதார்த்த உண்மை.

ஞானத்தை அம்பலப்படுத்துவது எமது இலக்கல்ல

ஞானம் போன்றவர்கள் தான், புலியெதிர்ப்பு அரசியல் பிதாமக்கள். ஞானத்தின் அரசியல் என்ன? இன்று அல்ல, நேற்று அல்ல, அவரின் அரசியல் கதை நீண்டது, நெடியது. அவர்கள் புலம்பெயர் இலக்கியம் பேசிய முதல், இலக்கிய சந்திப்பின் பிதாமகனாகவும், 'ஜனநாயகத்தின்" கொம்பாக ரீ.பீ.சீ உளறியது வரை, இந்த துரோக அரசியல் தான் காணப்பட்டது. தலித் முன்னணி ஏற்பாட்டாளராக இருந்த போதும் கூட, இந்த அரசியல் தான் அவரின் முதுகெலும்பாக இருந்தது. தலித்தியம், உயிர்நிழல், எக்சில் பின் முகிழ்ந்த அரசியல் எல்லாம், மக்கள் விரோத அரசியல் தான். இப்படிப்பட்டவர்களின் அரசியல் கூட்டுத்தான், இந்த புலம்பெயர் புலியல்லாத தளத்தில் பொதுவான அரசியல். இவர்களுக்கு இடையிலான முரண்பாட்டிலும் கூட.

இன்று ரவுடி பிள்ளையானின் அரசியல் ஆலோசகர். அன்று எதை புலம்பெயர் இலக்கியத்திலும் அரசியலிலும் அவர் உளறினாரோ, அதை பிள்ளையானுக்காக இன்று உளறுகின்றார். ஒரே குட்டை தான் எங்கும். அதை ஞானத்தின் அன்றைய இன்றைய செய்கைகள் மெய்ப்பிக்கின்றது. இங்கும் பல பிள்ளையான்கள் பல வேஷத்தில் உள்ளனர் என்பது, வெளிப்படையானது. அது ஞானம் வடிவில் வெளிவந்தது தற்செயலானது.

அவருடன் கடந்த காலத்தில் இருந்த பலரும், சமகாலத்தில் நீPடிப்பவர்களும், அவருடன் முரண்பட்டவர்களும் கொண்டிருக்கும் அரசியல், ஞானத்தின் இன்றைய அதே அரசியல் தான். வேறுபாடும் முரண்பாடும், எந்த கொம்பை பிடித்து மேலே ஏறுவது என்பது தான். இவர்கள் அனைவரும் புலம்பெயர் இலக்கியம், அரசியல் ஊடாக செய்ததும், செய்வதும் படுகேவலமான மக்கள் விரோத அரசியல் தான்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை மறுப்பதும், அனைத்தையும் புலியாக காட்டுவதும் இவர்களின் அரசியல் முகமூடி. தமிழ் மக்களுக்கு புலிகள் மறுக்கும் ஜனநாயக உரிமையைப் பற்றி தமக்கு ஏற்ப தாளம் போட்டு பேசுவதும், அதேநேரம் அந்த மக்களின் அரசியல் உரிமைகளை மறுப்பதும், இவர்களின் மொத்த இழிவான அரசியலாகும். இந்த அரசியல் அடிப்படையில் இலங்கை இந்திய அரசின் ஏஜண்டுகளாக செயலாற்றுகின்றனர். கூலிக் குழுக்களை ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொண்டு, நேரடி மற்றும் மறைமுக அரசியல் தொடர்புகளை கொண்டவராக, புலியெதிர்ப்பு அரசியல் பொதுவாக மூடிமறைத்துக் காணப்படுகின்றது.

பேரினவாத அரசு தமிழ் மக்களின் அரசியல் உரிமையை மறுப்பதை கண்டும் காணாது நியாயப்படுத்திக்கொண்டு, அவர்களின் பின்னால் குலைப்பதே இவர்களின் அரசியல். மக்களின் அடிப்படை அரசியல் உரிமையை நிராகரிப்பதில் இருந்து தான், இவர்களின் அரசியல் தொடங்கி முடிகின்றது. புலியை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அரசியல் வித்தை காட்டுவதே, இவர்களின் எதிர்ப்புரட்சி அரசியலாகும். இதற்காக மார்க்சியம் முதல் தலித்தியம் வரை, ஏன் இவர்கள் பேசாத பொருள் கிடையாது.

இவர்கள் மக்களுக்கு வழிகாட்டியதும் வழிகாட்டுவதும் எதை? அவர்கள் சொந்த அடிமைத் தனத்தையும் அற்பத்தனத்தையும் தான். பிள்ளையானின் வாலைப் பிடித்தோ அல்லது டக்கிளஸ்சின் வாலைப் பிடித்தோ, இது போன்றவர்களில் தொங்கிக்கொண்டு தான் தமிழ் மக்கள் தமது விடுதலையைப் பெறமுடியும் என்கின்றனர். தமது சொந்த அடிமைப் புத்தியை நியாயப்படுத்த, தமிழ்மக்கள் ஒடுக்கும் புலிகளின் பாசிசம் இவர்களுக்கு உதவுகின்றது. இதைக் காட்டிக் கொண்டு, இலங்கை அரசின் அடிமைகளாக தமிழ் மக்கள் வாழ்வது தான், தமிழ் மக்களின் விடுதலை என்கின்றனர். புலியின் அடிமைத் தனத்தில் இருந்து, பேரினவாத அரசின் அடிமைகளாக தமிழ் மக்கள் வாழ்வது தான், தமிழ் மக்களின் விடுதலை என்பதே புலியெதிர்ப்பு அரசியலாகும். இதற்கு வெளியில் யார் எதை தான் முன்வைக்கின்றனர்?

பிள்ளையானோ ஒரு அரசியல் ரவுடி

கருணாவின் அதிகாரத்தை கைப்பற்றிய வழிமுறையே, அந்த அரசியல் ரவுடிசத்தைக் காட்டுகின்றது. இலங்கை அரசின் படுகேவலமான ஒரு எடுபிடியாக, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு லும்பன் தான் பின்ளையான். இப்படித் தான் கிழக்கில் திடீரென உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவன் தான் பிள்ளையான். கூலிக்கு மாரடிப்பதும், கொலை கொள்ளை கற்பழிப்பு என்று எல்லாவற்றையும் அரசியல் பெயரில் செய்த ஒரு ரவுடி தான், கிழக்கின் விடிவெள்ளி. அவனுக்கு ஏற்ற அரசியல் ஆலோசகர் உயிர்நிழல்-எக்சில் ஞானம். பெண்ணியம் தலித்தியம், மார்க்சியம், பின்நவீனத்துவம், யாழ் மேலாதிக்கம் எதிர்ப்பு என்று, எத்தனை எத்தனை முகம்.

இந்த அரசியல் வழிகாட்டியின் தலைவனோ, விதவிதமாக ரையைக் கட்டி படம் போடுவதன் மூலம், தன்னை நம்பிக்கையான கவுரவ அரசியல்வாதியாக காட்டிக்கொள்ள விரும்புகின்ற பக்காத் திருடன். இவரின் அரசியல் ஆலோசகர் ஞானமும், ஸ்ராலின் என்ற பெயரில், சின்னமாஸ்ட்டர் என்ற பல பெயரிலும் இயங்கியவர்.

புலம் பெயர் 'முற்போக்கு" இலக்கியம், அரசியல் எல்லாம் இப்படி ஒரு ரவுடியின் அரசியல் பின்னால் முகிழ்வது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இவர்களுடன் எமது நீண்ட போராட்டம், மிகச்சரியானது என்பதை இவை நிறுவியுள்ளது. உண்மையில் ஞானம் போல் பலர் உள்ளனர்.

இலங்கை - இந்திய அரசுடன் இயங்குகின்ற கூலிக் கும்பல்களின் தலைவர்களுடன் தொடர்பு கொள்ளாத, அவர்களுடன் தொலைபேசி உரையாடலைக் கொள்ளாத, அவர்களின் சந்திப்புகளில் கலந்த கொள்ளாத எத்தனையோ பேர், புலியெதிர்ப்பு அரசியலில் உள்ளனர். எபப்டித்தான் இவர்கள் மக்களின் அரசியலுக்காக போராடுகின்றனர். மக்கள் விரோதிகளுடன் உறவை வைத்துக்கொண்ட பலரையே நாம், எம்மைச் சுற்றிய புலியெதிர்ப்பு 'முற்போக்கில்" காண்கின்றோம். படுகேவலமான அரசியல் சூழலை தக்கவைத்தபடி, அதை 'முற்போக்கு" என்று சொல்லுகின்ற அரசியல் வக்கிரமே அரங்கேறுகின்றது.

ஞானம் வெளிப்படையாக பிள்ளையானின் மடியில் அமர்ந்து பிழைப்பதே, தமிழ் மக்களின் அரசியல் என்றவுடன், அந்த ரவுடியின் அரசியல் ஆலோசகராகி விடுகின்றார். இப்படி பலர் வெளிப்படையற்ற வகையில் உலாவுகின்றனர். இந்த விமர்சனத்தையே, பலர் தனிநபர் அவதூறு எனகின்றனர். எங்களுக்கு இதுபற்றிக் கவலை கிடையாது. கேடுகெட்ட வகையில், மக்களுக்கு எதிராக யார் எந்த வேஷத்தில் இருந்தாலும், அதை நாம் அம்பலப்படுத்தினோம், அம்பலப்படுத்துவோம்.

ஞானம் போன்றவர்கள் சாதிக்கப் போவது எதை?

இலங்கை அரசின் கூலிக் குழுவாக இருப்பது எப்படி, என்பதை வழிகாட்டுவது தான். அதற்கு ஒரு தத்துவ முலாம் பூசுவது. அதை மக்கள் அரசியலாக சோடிப்பது, அதை 'ஜனநாயகம்" என்று காட்டுவதும் தான். வெறும் புலியெதிர்ப்பை லாடமாக கொண்டு, தாமும் பிழைத்துக் கொள்வது. தம்மைத் தாம் 'முற்போக்கு" என்று கூறிக்கொண்டு, மேலும் மக்களை அடிமைப்படுத்தி தாம் மட்டும் பொறுக்கி வாழ்வது.

மக்களின் சொந்த விடுதலை என்பதை அடையாளம் காணவிடாது தடுப்பதே இவர்களின் அரசியல். இதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பது. பேரினவாதிகளின் திட்டமிட்ட சதித்தன்மையான தேர்தலை, 'ஜனநாயகம்" என்று கூறி, ஊர் உலகத்தை ஏமாற்றி பிழைப்பது, அதற்கு ஏற்ற அரசியல் ஆலோசனைகளை வழங்குவது, இதற்கு ஏற்ப பிழைத்துக் கொண்டு, சொந்த வாழ்வை வளப்படுத்துவது. சட்டவிரோத கடத்தல், கப்பம், கொலைகளை நடத்த உதவுவது. வடக்கு மக்களுக்கு எதிராக, கிழக்கு மக்களை உருவேற்றுவது, முஸ்லீம் மக்களை எதிரியாக்கி, கிழக்கு அரசியல் பேசி அரசியல் பிழைப்பு நடத்துவது, சிறுவர்களை ஆயுதபாணியாக்கி, தம்மைப் பாதுகாப்பது. அவர்களின் பாதுகாப்பில் அரசியல் ஆலோசனை வழங்குவது.

(வடக்கு – கிழக்கு) மக்கள், இவர்களின் அடிமைகளாக வாய் பொத்திக் கிடப்பதுதான் இந்த 'ஜனநாயக"த்தின் உச்சம். இனவாதம், பிரதேசவாதம், சாதிவாதம் என்று பல வகையில் தம்மை நியாயப்படுத்திக் கொள்ள, மக்களை பிளப்பதே இவர்களின் அரசியல் உத்தி.

ஞானம் வழிநடத்திய புலம்பெயர் தலித்தியம்

புலம்பெயர் தலித்தியம் இன்று சந்திக்கு வந்துள்ளது. தலித் ஏற்பாட்டாளர்களில் இந்த ஞானம் முக்கியமானவர். பாவம் தலித் மக்கள். தலித் மக்களின் பெயரில் அரசியல் பிழைப்பு நடத்தப்பட்டதை, ஞானத்தின் இன்றைய நிலை எடுத்துக்காட்டுகின்றது. தலித்திய மற்றைய ஏற்பாட்டாளர்களின் கள்ள மௌனம், இதற்கு எதிராக கருத்துரைக்காத அவர்களின் தலித்தியமும், இதை மேலும் அம்பலமாக்குகின்றது.

தலித் மக்களைக் கொண்டு பிளக்கும், இலங்கை அரசின் ஏற்பாடா தலித்தியம் என்ற கேள்வியை எம்முன் இது எழுப்புகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத அரசின் ஒரு அரசியல் ஏஜண்டாக ஞானம் வெளிவந்த பின்பு, தலித் ஏற்பாட்டாளர்கள் எந்த எதிர்வினையுமின்றி இருப்பது ஏன்? தலித் மக்களின் விடுதலை இவர்களின் நோக்கமல்ல என்பதையே, இது தெளிவாக காட்டுகின்றது. இலங்கை அரசும் இது போன்ற சமூக பிளவுகளை தனது அரசியல் நோக்கில், நேரடியாகவும் மறைமுகமாகவும், சுற்று வழிகளிலும் தொடர்ச்சியாக செய்து வருகின்றது. தலித்தியம் பற்றிய தெளிவற்ற வளவளப்பு கோட்பாட்டை, தலித் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்த போது, அதை நாம் அம்பலப்படுத்தினோம்.

தலித் பேசுவோர்கள், இலங்கை அரசாங்கத்தை இதன் பெயரில் கண்டிப்பது கிடையாது. ஏன் இவர்கள் கூட, இலங்கை அரசின் ஊடாக தலித் விடுதலை பற்றியே கனவு காண்கின்றனர். புலியொழிப்பு போல் இதுவும், இலங்கை அரசின் ஊடாக தீர்வு என்று, அதே சக்கரத்தைத் தான் உருட்டுகின்றனர்.

இப்படி தமிழ் மக்கள், தலித் மக்கள், கிழக்கு மக்களின் விடுதலை எல்லாம், இலங்கை அரசின் கையைக் காலைப் பிடித்து சாதிக்கும் அரசியல் விடையமாகிவிட்டது. அதை 'ஜனநாயக" மாக காட்டி செய்யும் அரசியலோ, மொத்தத்தில் மக்கள் விரோத அரசியல் தான்.

பி.இரயாகரன்
04.05.2008

அழுகி நாறும் கூழ் முட்டையை அடைகாக்கும் அரசியல்

அழுகி நாறும் கூழ் முட்டையை அடைகாக்கும் அரசியல்


புரியாத புதிருடன் புலம்பும் பிழைப்புவாத வழிபாடு. இது பகுத்தறிவற்றது. நேபாள மாவோயிஸ்ட்டுக்களின் இன்றைய சர்வதேச நிலையை வைத்து, பாசிசப் புலிகள் தம்மை நியாயப்படுத்த முனையும் வாதங்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் இதையே இந்திய போலி கம்யூனிஸ்ட்டுக்கள், தம்மை தாம் நியாயப்படுத்த வைக்கும் வாதங்கள். அனைத்தும் யாருக்கு எதிராக என்றால், உண்மையான புரட்சியாளர்களுக்கு எதிராகத்தான். மக்களின் அடிப்படைப் பிரச்சனையை பேசாதே என்கின்ற உள்ளடக்கத்துடன், இவ்வாறு அவதூறு பொழிகின்றனர்.


அந்த வகையில் அற்புதன் என்பவர் 'நேபாள மாவோக்கள், ஏகாதிபத்திய நலன் சார் அரசியல் முதல் முகட்டைப் பார்த்து எழுதும் வலையுலகப் புரட்சீ'யாளர் வரை.." என்று புலிப் பாசிசத்தை நியாயப்படுத்த எழுதுகின்றார். http://aatputhan.blogspot.com/2008/05/blog-post.html

இந்திய போலி கம்யூனிஸ்டான சந்திப்பு "இந்திய மாவோயிஸ்ட்டுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாதை!" என்று இதை எழுதுகின்றது. http://santhipu.blogspot.com/2008/04/blog-post_29.html

ஒன்று புலிப் பாசிசத்தை ஆதரி என்கின்றது. மற்றது போலிக் கம்யூனிசத்தை புரட்சிகர வழி என்கின்றது.

இந்தக் கூழ்முட்டைகள் ஒன்றை மட்டும் கண்டு கொள்வதில்லை. மாவோயிஸ்ட்டுகள் நேபாள மக்களுடன் கொண்டுள்ள அரசியல் உறவை. அந்த வழியை தமது சொந்த வழியாக தேர்ந்தெடுப்பதை திட்டமிட்டு நிராகரித்தபடி, நேபாள கம்யூனிஸ்ட்டுக்களை மறைமுகமாக அவதூறு பொழிந்தபடி திரித்துக் காட்டமுனைகின்றனர். இவை மக்களின் புரட்சிகர அக்கறையின் பால் அல்ல. தமது சொந்த எதிர்ப் புரட்சிகர நிலைக்கு செங்கம்பளம் விரிக்கத் தான் இந்த ஏற்பாடுகள்.

நேபாள மாவோயிஸ்டுக்கள் மக்களை மக்களாகவே நேசித்து, அவர்களுக்காக போராடிய, போராடுகின்ற மறுபக்க உண்மையை கண்டு கொள்ளாமல், அரசியல் அவதூறு பொழிகின்றனர். அவர்கள் வெறுமனே மன்னரைத் துக்கியெறியவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ ஆட்சியேறவில்லை. அதற்காக மக்கள் அவர்களை தெரிவு செய்யவுமில்லை.

மக்களின் விருப்பை, அவர்களின் புரட்சியை தலைமையெற்று செய்தேயாக வேண்டும். சந்தர்ப்ப சூழலில் அவர்கள் அமைத்துள்ள அரசு, முரண்பட்ட வர்க்கங்களையும் சர்வதேச சூழலையும் எதிர்கொண்டு, தமது வர்க்கப் புரட்சியைச் செய்ய வேண்டியுள்ளது. இதை எதிர்கொள்கின்ற போக்கில், அவர்கள் பலதரப்புடன் கொண்டுள்ள உறவை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, தங்களது சொந்த மக்கள் விரோத அரசியலை நியாயப்படுத்த முனைகின்றவர்கள் அரசியலில் நேர்மையற்றவர்கள். கடைந்தெடுத்த போக்கிரிகள்.

நேபாள மாவோயிஸ்ட்டுக்கள் இருக்கட்டும், உங்களால் ஏன் மக்களுக்காக போராட முடியவில்லை. இந்த அடிப்படையான அரசியல் விடையத்தை விடுத்து, அதோ பார் அவர்கள் தேர்தலில் நிற்கின்றனர், அமெரிக்காவுடன் கைகுலுக்குகின்றனர். நாங்களும் அதையே செய்கின்றோம் என்ற நியாயவாதமோ கபடத்தனமானது. தேர்தலில் நிற்கின்றனர், அமெரிக்காவுடன் கைகுலுக்குகின்றனர் எல்லாம் சரி, ஆனால் அவர்கள் மக்களின் புரட்சிகர கடமைகளுடன் சேர்ந்து நிற்கின்றனர். மக்களைச் சார்ந்து நிற்கின்றனரே ஒழிய, பாராளுமன்றத்தையோ ஏகாதிபத்தியத்தையோ சார்ந்தல்ல.

மக்களுக்கு துரோகம் இழைப்பவர்களும், அவர்களை அடக்கியொடுக்குபவர்களும், நேபாள மாவோயிஸ்ட்டுக்கள் மக்களுடன் கொண்டுள்ள அடிப்படையான அரசியல் உறவு தான் என்ன என்பதையிட்டு அவர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

தாம் அடைகாக்கும் சொந்தக் கூழ் முட்டைகளை பொரிப்போம் என்று கொக்கரிக்கும் அடைக்கோழிகள், வேறு எதைத்தான் சொந்த அரசியலில் எதிர்வாதமாக முன்வைக்க முடியும்.

நேபாள கம்யூனிட்ஸ்டுக்களை நாம் எந்த வகையில் ஏன் ஆதரிக்கின்றோம்
நேபாள மக்களின் புரட்சிக்கு அவர்கள் தலைமை தாங்குவதால், நாம் அதை ஆதரிக்கின்றோம். நேபாள மக்கள் விரும்பும் புரட்சியை, அவர்கள் செய்யும் எல்லை வரை தான், எமது ஆதரவு. அதை அவர்கள் செய்யத் தவறினால், அவர்களும் வரலாற்றில் துரோகிகள் தான். மக்கள் தமது வாழ்வுக்காக புரட்சியை விரும்புகின்றனர். நேபாள மக்கள் தமது ஆயுதப் போராட்டம் மூலமும், வாக்குப் பலம் மூலமும் கூட, தமது புரட்சிகர செய்தியை தெளிவாக கூறியுள்ளனர். புரட்சியை நடத்தும் அரசியல் அதிகாரத்தை, அவர்கள் தமது சொந்த தலைமைக்கு வழங்கியுள்ளனர்.

இதை எந்த விதத்திலும் மாவோயிஸ்ட்டுகள் நிராகரித்தால், துரோகம் இழைத்தால், வரலாற்றில் அவர்களையும் மக்கள் குப்பைத் தொட்டியில் தான் போடுவார்கள்.

நேபாள மக்களின் புரட்சியைச் செய்ய அவர்கள் கையாளும் நடைமுறைகள் மக்களுக்கு எதிராக அமைந்தால், கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் மட்டும் தான் அதை விமர்சிப்போம், அம்பலப்படுத்துவோம்.

சர்வதேச வர்க்கங்களின் அணிச் சேர்க்கையிலும், உள்நாட்டு வர்க்க நிலையிலும், வர்க்கப் போராட்டத்தைக் கையாளுவதில் எதிரியுடன் புரட்சியாளர் கொண்ட உறவுகள், வரலாற்றில் பல முறை நிகழ்ந்துள்ளது.

இதை மாவோயிஸ்ட்டுகளும் நேபாளத்தில் கையாண்டனர். இன்றைய நிலைக்கு சற்று முந்தைய காலத்தில், அதிகாரத்தில் பங்கு கொண்டிருந்த ஒட்டுக்கட்சிகளுடன் நேபாள மாவோயிஸ்ட்டுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் கையாண்ட அணுகுமுறைகள் நடைமுறைகள், புரட்சியை மேலும் நடத்தவே உதவியது. பேச்சுவார்த்தை, தேர்தல் உட்பட அனைத்தும், மிக நுட்பமாக கையை குலுக்கியபடி புரட்சிகரமாக அவர்களை அம்பலப்படுத்தி தூக்கியெறிந்துள்ளனர். இன்று இந்தியா முதல் அமெரிக்கா வரை அவர்கள் கையாளும் சர்வதேச அணுகுமுறை, அவர்கள் மக்கள் விரும்பும் புரட்சிக்காக வெற்றிகரமாக கையாள்வார்கள் என்பதை அவர்களின் சொந்த அனுபவமும் நடைமுறையும் காட்டுகின்றது.

மாவோயிஸ்ட்டுகள் வெளிப்படையாக கையாளும் நடைமுறைகளும், ஏகாதிபத்தியம் வெளிப்படையாக கையாளும் அணுகுமுறைகளும், தத்தம் சொந்த வர்க்க நலனை அடிப்படையாக கொண்டது. மாவோயிஸ்ட்டுகள் பொதுவான ஜனநாயகத்தை முரணற்ற வகையில் வெளிப்படையாக கையாள, ஏகாதிபத்தியம் சதியை சொந்த அணுகுமுறையாக கொள்கின்றது. இது நேபாள வர்க்கப்போராட்டத்தில் தெளிவாக மறுபடியும் உறுதியாகும்.

நேபாள மக்கள், ஜனநாயகப் புரட்சியை நடத்தும்படி மாவோயிஸ்ட்டுகளைக் கோரி நிற்கின்றனர். மக்களுக்கு வழங்கிய இந்த வாக்குறுதியை, அவர்கள் நடைமுறையில் செய்வார்கள். அது மட்டும் தான், அவர்களின நீடித்த புரட்சிக்கான அவர்களின் சொந்த வர்க்கத்தின் செயல் தந்திரமாக அமையும்.

இதைப் புரிந்துகொள்ள முடியாத கூழ்முட்டைகள், தத்தம் அரசியல் இழிநிலைக்கும் இருப்பு நிலைக்கும் ஏற்ப, நேபாள மாவோயிஸ்ட்டுகளை மக்களுக்கு வெளியில் பிரித்து வைத்து கதைசொல்ல முடிகின்றது. தமது கூழ் முட்டைக்கு ஏற்ப விளக்கம் சொல்லி, அடைகாக்க முடிகின்றது.

சந்திப்பு நடத்துகின்ற பிழைப்புவாத போலி மார்க்சிய புரட்டலை, நாம் தனிக்கட்டுரை ஊடாக விரைவில் சந்திப்போம். அற்புதன் என்பவர், புலிப் பாசிச கூழ்முட்டையைப் பாதுகாக்க, தமது சொந்த ஏகாதிபத்திய நியாயப்படுத்தலை எப்படி செய்கின்றார் என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

'நேபாள மாவோயிஸ்டுகளிடம் அமெரிக்க அரசு பேசுகிறது, மாவோக்களும் பேசுகிறார்கள், கைகுலுக்குகிறார்கள். நேபாள மாவோக்களும் தாம் கலப்புப் பொருளாதாரத்தையும், பல் கட்சி ஜனநாயகத் தேர்தல் முறைமையையும் அடிப்படையாகக் கொண்டு இந்த உலக ஒழுங்கிற்கு ஏற்ப ஆட்சி அமைப்பதாகவும் கூறி உள்ளார்கள்." என்கின்றார். இதனால் அவர்கள் கம்யூனிசத்தை கைவிட்டுவிட்டனர் என்று கூறுகின்ற அற்பத்தனம் அறியாமையும் வெளிப்படுகின்றது. இங்கு மாவோயிஸ்டுகளிடம் தெளிவான வேறுபட்ட பொருளாதார கொள்கை உண்டு என்பது உண்மையல்லவா. அவர்கள் அதற்காக போராடுவார்கள் என்பது வெளிப்படையானது.

மறுபக்கத்தில் இதைச் சொன்ன அவர்கள், ஜனநாயகப் புரட்சியை நடத்த மாட்டோம் என்று சொன்னார்களா? மக்களுக்கு தாங்கள் வழங்கிய வாக்குறுதியை கைவிட்டுவிட்டனர் என்று சொன்னார்களா? இல்லை. அவர்கள் சரியாக செல்லுகின்றனர் என்றே கருதுகின்றோம்.

'இந்த முரண்பாடு பற்றி இவர்கள் எவருமே இதுவரை எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை," என்கின்றீர்கள் எங்களுக்கு இதில் முரண்பாடே கிடையாது. அவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை, அவர்கள் தெரிவு செய்த மக்களின் விருப்பை இது வரை நிராகரிக்கவில்லை, கைவிடவில்லை. அதை அவர்கள் அமுல் செய்வார்கள் என்பதால், எமக்கு இதில் எந்த முரண்பாடும் கிடையாது.

வரலாற்றில் லெனின் சர்வதேச சந்தைக்கு ஏற்ப பொருளாதாரத்தை திறந்துவிட்டது உட்பட சிறு உற்பத்தியை ஊக்குவித்த வரலாறும் உண்டு. ஏன் சோசலிச நாடுகள் முதலாளித்துவ நாடுகளுடன் உறவைக்கொண்டு இயங்கியது. ஸ்ராலின் இரண்டாம் உலக யுத்தத்தின் போது கையாண்ட வடிவமும் இதை ஒத்தது தான். சீனக் கம்யூனிஸ்ட்டுக்கள், தமது படைத் தலைமையைக் கூட கலைத்து, சியாங்கே சேக்கின் அதிகாரத்தில் விட்ட வரலாறும் உண்டு. புரட்சியை நெளிவு சுழிவாக மக்களுடன் சேர்ந்து எப்படி நடத்துவது என்பதில், கம்யூனிஸ்டுக்கள் தேர்வுகள் நிலைமைக்கு ஏற்ப அமைகின்றன. நெளிவு சுழிவான வழிகள், மக்களின் புரட்சிகர நலன்களை அடிப்படையாக கொண்டது. இதுவல்ல என்று நிறுவப்படாத வரை, அதை நாம் நிராகரிப்பது கிடையாது. இந்திய அமெரிக்க அரசுடன் கொண்டுள்ள உறவுகளையிட்டு, புரட்சிக்கு எதிரானது என்று எந்த முரண்பாடும் எம்முன் இருப்பதில்லை.

இதைவிடுத்து மக்களுக்கு எதிரான பாசிச அரசியலில் மிதப்பவர்களுக்கு, தம்மை நியாயப்படுத்த, இது எப்படி தெரிகின்றது. 'இவர்கள் ஏகாதிபத்தியங்களுடன் சமரசம் செய்து கைகுலுக்க வில்லையா?" என்று கேட்க வைக்கின்றது. புலிகள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடும் சொந்த அக்கறையின் பாலானா கேள்வியா இது. இல்லை. மாறாக தமது ஏகாதிபத்திய தன்மையை, எதார்த்தமானதாக காட்ட வைக்கும் குதர்க்க வாதம் இது.

அடுத்து அவரின் ஏகாதிபத்திய சார்பு வாதத்தைப் பாருங்கள். 'அப்படியாயின் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றி, அது ஏகாதிபத்திய சார்பு நிலைப்பட்டது என்றெல்லாம் எழுதிக் குவிக்கும் இவர்களின் எழுத்துக்கள் எவ்வகையில் நேர்மையானவை?" இதன் மூலம் என்ன சொல்ல முனைகின்றார். அதை ஆதரிக்கும் நீங்கள், எங்கள் ஏகாதிபத்திய சார்பு பாசிசப் போராட்டத்தை ஆதரியுங்கள் என்கின்றார். இப்படியும் மானம் கெட்ட அரசியல் பிழைப்பு.

ஐயோ பாவம். நேபாள மாவோயிஸ்ட்டுகள் மக்களை சார்ந்து புரட்சி செய்கின்றனர். மக்களின் சமூக பொருளாதார உறவை அரசியலாக கொண்டு, அவர்களின் சொந்த விடுதலைக்காக போராடுகின்றனர். இந்த வகையில் அவர்கள் சர்வதேச சமூகத்துடன் உறவுகொள்கின்றனர். மக்களின் சமூக பொருளாதார அரசியல் நலனை முதன்மையாக வைக்கின்றனர்.

புலிப் போராட்டம் மக்களின் தேசிய சமூக பொருளாதார உறவுக்காக போராடவில்லை. மாறாக ஏகாதிபத்திய சமூக பொருளாதார உறவை முன்வைத்து, மக்களை எதிரியாக்கி நிற்கின்றது. அடிப்படையில் மக்கள் சார்ந்து நிற்பதில் மாவோயிஸ்டுகளின் அரசியல் நிலை ஒருபுறம், மக்களை எதிரியாக்கி நிற்கும் புலிகள் தலைகீழாய் மறுபுறம். இப்படி இரண்டும் ஏகாதிபத்தியத்தை அணுகுகின்ற விதமே, முற்றிலும் நேர்மாறானது.

இப்படி இருக்க, அற்புதன் தனது பெயருக்கு ஏற்ப அற்புதம் செய்ய விரும்புகின்றார். 'நேபாள மார்க்ஸிஸ்ட்டுக்கள், மாக்ஸிஸ்டுக்கள் என்றால் இந்த வலையுலகப் புரட்சியாளர்கள் சொல்லும் மார்க்சிசம் என்ன? சிவப்புக் கொடியும், சுத்தியலும் அரிவாளும் போட்டுக் கோசம் போட்டா அவை தான் மார்சியர்களா? அப்படி போடாதவை மக்கள் நலன் சார்ந்து போராடினால் அவர்கள் ஏகாதிபத்திய அடிவருடிகளா?" என்கின்றார். திருகுதாளம் போட்டு, உண்மையை திரித்து புரட்டி கதை சொல்வது பாசிட்டுகளுக்கு ஏற்ற தர்க்கம் தான்.

மாவோயிஸ்ட்டுக்கள் மக்களைச் சார்ந்து நிற்க, அதை இல்லை என்கின்றனர். அதை அவர் 'சிவப்புக் கொடியும், சுத்தியலும் அரிவாளும் போட்டுக் கோசம் போட்டா" என்கின்றார். மறுபக்கத்தில் பாசிட்டுகளான தம்மை மக்கள் இயக்கம் என்கின்றார். அதை அவர் 'அப்படி போடாதவை மக்கள் நலன் சார்ந்து போராடினால் அவர்கள் ஏகாதிபத்திய அடிவருடிகளா?" என்கின்றார். மக்கள் நலன் எதையும் வைக்காத மக்களுக்கு எதிரான புலிகள் எங்கே! மக்கள் நலனை வைத்து அவர்களுக்காக போராடும் மாவோயிஸ்ட்டுகள் எங்கே

மக்களை எதிரியாக்கி, அவர்களைத் துன்புறுத்தி பாசிசத்தை அரசியலாக கொண்டது புலிகள் ஏகாதிபத்திய அரசியல். இந்த நிலைக்காக வக்காளத்து வாங்க, மாவோயிஸ்டுக்களின் மக்கள் அரசியல் நடைமுறைகள் உதவப்போவதில்லை.

அடை காப்பது கூழ்முட்டை என்பது தெரியாது, கொக்கரிக்கும் கோழியால் மனித வாழ்வு என்றும் விடியாது. தமது இழிவான மக்கள் விரோத ஏகாதிபத்திய நிலையைப் பாதுகாக்க 'ஏகாதிபத்திய எதிர்ப்பை விட இன்று மக்கள் முன்னால் இருக்கும் பிரதான முரண்பாட்டிற்கான தீர்வே முதன்மையானது" என்கின்றனர். இதைத் தான் ஏகாதிபத்தியமும் சொல்லுகின்றது. இதைத்தான் புலிகளும் ஏற்றுக்கொள்கின்றனர். இப்படி வாதிடும் புலிகளை, நாங்கள் ஏகாதிபத்திய அடிவருடிகள் என்று சொல்வதில் என்ன தவறு?

'இன்று மக்கள் முன்னால் இருக்கும் பிரதான முரண்பாட்டிற்கான தீர்வே முதன்மையானது" நல்லது. மக்கள் அமைதி மூலம் இதை தீர்க்க விரும்பினர். புலிகள் சண்டை மூலம் தீர்க்க விரும்பி சண்டையைத் தொடங்கினர். 'இன்று மக்கள் முன்னால் இருக்கும் பிரதான முரண்பாட்டிற்கான தீர்வே முதன்மையானது" என்று எமக்கு சொல்லாது, புலிக்கு சொல்லுங்கள்.

'பிரதான முரண்பாட்டிற்கான தீர்"வில் கூட ஏகாதிபத்தியம் தான், அதை தடுக்கின்றது. சமூகங்களுக்கு இடையிலான அனைத்து முரண்பாட்டின் நெம்புகோலும், ஏகாதிபத்திய சமூக பொருளாதார அடிப்படையைக் கொண்டது. அதன் நலனுக்கு உட்பட்டது. இதற்கு வெளியில் அல்ல. மக்கள் நலன் இதற்கு வெளியிலானது. புலியின் நலன் என்பது, மக்கள் நலன் அல்ல என்பதால் 'ஏகாதிபத்திய எதிர்ப்பை விட" முதன்மையானது புலிகளின் சொந்த நலன் என்பது தெளிவானது.

அரசியலை புலியின் நலனுக்கு ஏற்ப வடிகட்டுவது நிகழ்கின்றது. 'நேபாளத்தில் அது இந்துத்துவா அடிப்படையிலான முடியாட்சியாகவும் தமிழீழத்தில் அது சிங்களப் பேரினவாதமுமாக இருக்கிறது" என்ன அரசியல் திரிபு.

'நேபாளத்தில் அது இந்துத்துவா அடிப்படையிலான முடியாட்சி" என்பது திரிபு. அது நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய தரகுமுதலாளித்துவ முடியாட்சி. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடாமல் இதை ஒழிக்க முடியாது. அது ஒருபுறம். 'தமிழீழத்தில் அது சிங்களப் பேரினவாதமுமாக இருக்கிறது" இது ஒரு திரிபு. சிங்கள பேரினவாத தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய ஆட்சியாக உள்ளது. இதை விடுதலைப்புலிகள் அரசியல் அறிக்கை கூட தெளிவாகக் கூறுகின்றது. விடுதலைப்புலிகளின் ஆரம்பப் பத்திரிகைகள் கூட இதைக் கூறுகின்றது. இன்று அதை மறுக்கும் நீங்கள், ஊர் உலகத்தையே ஏமாற்றுகின்றீர்கள்.

தமிழ் தேசியமாக இருப்பது ஏகாதிபத்திய எதிர்ப்பை அடிப்படையாக கொண்டது தான். தேசியம் என்பது சமூக பொருளாதார உறவை அடிப்படையாக கொண்டது. அது சிங்கள பேரினவாதத்தை மட்டுமல்ல, அதை ஆதரிக்கின்ற ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து போராடுவதை அடிப்படையாக கொண்டது.

'மக்களை உண்மையாக நேசிப்பவர்கள் மக்களின் விடுதலையை விரும்புபவர்கள் முன் இன்றிருக்க கூடிய ஒரே தெரிவு தமிழ்த் தேசிய விடுதலை ஒன்றே." இது உண்மையான மக்களின் சொந்த தேசியமாக, மக்களை நேசிக்கின்ற, அவர்களே தமது விடுதலைக்காகப் போராடுகின்ற, அவர்களின் சொந்த சமூக பொருளாதார விடுதலையை முன்னிறுத்துவதாக அமைவது மட்டும் தான் தேசியம். இந்த வகையில் புலிப் பாசிசம் தேசியமாகாது. அது தேசியத்தின் பெயரிலான பாசிசம்.

பி.இரயாகரன்
03.05.2008

Saturday, May 3, 2008

வன்னிய கிறித்தவர்களின் சாதி வெறியாட்டம்: தேவனின் ராஜ்ஜியத்திலும் தீண்டாமை



வன்னிய கிறித்தவர்களின் சாதி வெறியாட்டம் : தேவனின் ராஜ்ஜியத்திலும் தீண்டாமை

பார்ப்பன இந்து மதத்தைப் போலவே, இந்தியாவில் கிறித்துவ மதத்திலும் சாதிய தீண்டாமைக் கொடுமைகள் நீடித்திருப்பதை எறையூரில் வன்னிய கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மீது நடத்திய வெறியாட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள எறையூரில் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த ஜெபமாலை அன்னை தேவாலயம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வன்னிய கிறித்தவர்கள் பெரும்பான்மையாகவும்; தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் சிறுபான்மையாகவும் உள்ளனர். சாதிதீண்டாமையைக் கோட்பாட்டளவில் கிறித்துவ மதம் ஏற்காத போதிலும், இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மீது வன்னிய கிறித்தவர்களின் ஆதிக்கமும் அடக்குமுறையும் நீண்டகாலமாகப் பங்குத் தந்தையின் ஆசியோடு நீடித்து வருகிறது.

தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்குத் தனிக் கல்லறை, தனிசவஊர்தி (தூம்பா), தேவாலயத்தின் பொதுவழியைப் பயன்படுத்த அனுமதி மறுப்பு, ஆலயத்திற்குள் நுழையவிடாமல் தடை, ஊர்ப் பஞ்சாயத்து என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிப்பது, சாதிவெறியோடு தாழ்த்தப்பட்டோரைக் கிண்டல்கேலி செய்து அவமதிப்பது என வன்னிய கிறித்தவர்களின் சாதிவெறிக் கொட்டம் கேள்விமுறையின்றித் தொடர்ந்து வருகிறது.

கடந்த 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் நாளன்று, முகையூரில் பாதிரியாராக இருந்த எறையூரைச் சேர்ந்த தலித் கிறித்தவரான ஃபாதர் இருதயநாதனின் தாயாரது இறுதி ஊர்வலத்தைத் தேவாலயத்தின் பொதுவழியாகச் செல்லத் தடைவிதித்து, ஆயுதங்கள் வெடிகுண்டுகளுடன் சாலையை மறித்து வன்னிய கிறித்தவ சாதிவெறியர்கள் எச்சரிக்கை விடுத்தனர். புதுச்சேரி கடலூர் மறை மாவட்டப் பேராயர் வந்து கெஞ்சியும் கூட இச்சாதிவெறியர்கள் அசைந்து கொடுக்கவில்லை. வேறு வழியின்றி ஃபாதர் இருதயநாதன் தாழ்த்தப்பட்டோருக்கென விதிக்கப்பட்ட குறுகிய சந்தின் வழியாகத் தனது தாயாரின் உடலை எடுத்துச் சென்று, தலித்துகளுக்கான தனிக் கல்லறையில் அடக்கம் செய்தார். பாதிரியாருக்கே இந்தக் கதி என்றால், சாமானிய தலித் கிறித்தவர்களின் மீதான வன்னிய கிறித்தவ சாதிவெறியர்களின் அடக்குமுறை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

எறையூரில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த திருவிழாவின் போது தேவாலயத்திற்கு வழிபடச் சென்ற தாழ்த்தப்பட்ட கிறித்தவப் பெண்களை செல்போனில் படம் பிடித்த வன்னிய கிறித்தவ இளைஞர்களைத் தட்டி கேட்டதற்காக வன்னிய சாதிவெறியர்கள் அடிதடி கைகலப்பில் இறங்கினர். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் தீண்டாமை வழக்கின் கீழ் புகார் கொடுத்ததும், மளிகைக் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்குப் பலசரக்குகளைக் கொடுக்கக் கூடாது, ஓட்டல்களில் சாப்பாடு கொடுக்கக் கூடாது என்று தடைவிதித்தனர். இந்த அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் கண்டு குமுறிய தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள், தங்களுக்கென தனியாக சகாயமேரி மாதா ஆலயம் என்ற பெயரில் தனி தேவாலயத்தை கடந்த டிசம்பரில் கட்டியமைத்துக் கொண்டனர். இத்தேவாலயத்திற்கு புதுச்சேரிகடலூர் மறை மாவட்ட அங்கீகாரத்தையும் தனி பாதிரியாரையும் கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால், சாதி அடிப்படையிலான தனி தேவாலயத்தை அனுமதிக்க முடியாது என்று நிராகரித்தது கிறித்தவ பேராயம்.

தாங்கள் கட்டிய தேவாலயமும் முழுமையடையாமல், ஜெபமாலை அன்னை தேவாலயத்திலும் வழிபட முடியாமல் தத்தளித்த தாழ்த்தப்பட்ட மக்கள், கடந்த மார்ச் முதல் வாரத்தில் ""சாதிப் பாகுபாட்டை நீக்கு; இல்லாவிட்டால் சாதிப் பாகுபாடு காட்டும் தேவாலயத்தைப் பூட்டு'' என்று முழக்கத்துடன் சுவரொட்டிகளை ஒட்டி, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். ஆனாலும் உள்ளூர் தேவாலயப் பாதிரியாரோ, மாவட்ட முதன்மை குருவோ, பேராயரோ, மூன்றாவது நாள் உண்ணாவிரதத்தில் சிலர் மயங்கி விழுந்த பின்னரும் எட்டிக் கூடப் பார்க்காமல் அலட்சியப்படுத்தினர்.

மதகுருபீடமே தாழ்த்தப்பட்டோரை அலட்சியப்படுத்திப் புறக்கணிப்பதைக் கண்ட வன்னிய சாதிவெறியர்கள் சும்மா இருப்பார்களா? ""தேவாலயத்தைப் பூட்டுவோம்னு போஸ்டராடா ஒட்டுறீங்க?'' என்று அரிவாள், தடிகளோடு மார்ச் 9ஆம் தேதியன்று நூற்றுக்கணக்கில் திரண்ட சாதிவெறியர்கள், தாழ்த்தப்பட்டோரை மிருகத்தனமாகத் தாக்கி அவர்களது வீடுகளை இடித்து நாசப்படுத்தி, அற்ப உடைமைகளைச் சூறையாடி வெறியாட்டம் போட்டனர். தேவாலய விவகாரத்தையொட்டி பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த போலீசாரையும் இச்சாதிவெறியர்கள் தாக்கியதால் ஆத்திரமடைந்த போலீசு கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரைக் கொன்று பலரைப் படுகாயப்படுத்தியது.

இத்துப்பாக்கிச் சூட்டில் இறந்த இரு வன்னிய கிறித்தவர்களின் உயிருக்குப் பழிக்குப் பழியாக இருபது தலித்துகளைக் கொன்று பதிலடி கொடுப்போம் என்று வெளிப்படையாக ஆதிக்க சாதியினர் அச்சுறுத்தி வருகின்றனர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.எஸ்.ஆசீர்வாதம் (தி.மு.க), இந்நாள் தலைவர் எம்.சி. ஆரோக்கியதாஸ் (அ.தி.மு.க.) மற்றும் பாதிரியார் இலியாஸ் ஆகிய மூவரும் கூட்டணி சேர்ந்து கொண்டு வன்னிய சாதிவெறியர்களை வழிநடத்துகின்றனர். இம்மூவர் கூட்டணியோ, வன்னிய சாதி வெறியர்களோ இன்றுவரை கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் பாயவில்லை.

பானை சோற்றைப் பதம் பார்த்தாற்போல, தமிழகமெங்கும் பல தேவாலயங்களில் நிலவும் சாதிப்பாகுபாடு தீண்டாமைக்கு எறையூர் ஓர் உதாரணம். பல பகுதிகளில் தாழ்த்தப்பட்டோருக்குத் தனிக் கல்லறை, வழிபாட்டு உரிமை மறுப்பு, தாழ்த்தப்பட்ட பாதிரியாரை அவமதித்தல் எனத் தீண்டாமைக் கொடுமைகள் பரவலாக தொடர்ந்து நீடிக்கின்றன. கிறித்தவ மதம் இந்தியாவில் நுழையும் போதே, பார்ப்பன இந்து மதத்தின் சாதியதீண்டாமைகளோடு சமரசம் செய்து கொண்டுதான் படிப்படியாகக் காலூன்றியது. இன்று அது ஆதிக்க சாதியினருடன் கூட்டுச் சேர்ந்து தாழ்த்தப்பட்டோரை ஒடுக்குமளவுக்கு மாறிவிட்டது.

இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு பெயரளவிலாவது சட்டப் பாதுகாப்பு உள்ளது. ஆனால், கிறித்தவ மதத்தில் அதுகூடக் கிடைப்பதில்லை. மதச் சிறுபான்மையினர் விவகாரம் என்பதால், தொடரும் இச்சாதிவெறித் திமிரையும் தீண்டாமைக் கொடுமையையும் தமிழக அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. சாதிப் பாகுபாட்டை ஒழிக்கச் சட்டரீதியாக நெருக்கடி கொடுக்கக் கூட அது தயங்குகிறது.

இருப்பினும், விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் தமது செல்வாக்குள்ள பகுதிகளில் தாழ்த்தப்பட்ட பாதிரியார்களும் கிறித்தவ தன்னார்வக் குழுக்களும் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களை அணிதிரட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் துணையுடன் ஈஸ்டர் பண்டிகையைப் புறக்கணிக்கும் போராட்டத்தை அறிவித்து, 21 தேவாலயங்களைப் பூட்டி கருப்புக் கொடியேற்றும் போராட்டத்தை கடந்த மார்ச் 16 அன்று நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, இப்பாதிரியார்களும் தன்னார்வக் குழுக்களும் தாழ்த்தப்பட்டோரைத் திரட்டி வந்து திருமாவளவன் தலைமையில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஈஸ்டர் பண்டிகை நேரத்தில் இவ்வளவு தேவாயலங்களிலும் வழிபாடு நடக்காததை வைத்துப் பேராயரின் பதவியே பறிக்கப்பட்டு விடும் என்பதால், அரண்டு போன கடலூர்புதுவை மறைமாவட்டப் பேராயரான ஆனந்தராயர், ""இனி சாதிப் பாகுபாடே இருக்காது; அனைவரும் தேவாலயத்தில் வழிபடலாம்'' என்று வாக்குறுதி அளித்துள்ளார். சாதிவெறியர்களுடன் கூடிக் குலாவிக் கொண்டு இதை எப்படிச் செயல்படுத்த முடியும் என்பது அவருக்கே வெளிச்சம்.

மறுபுறம், எறையூர் வன்னிய கிறித்தவர்களோ பேராயரின் முடிவை ஏற்க மறுத்து, தங்களுக்கும், தலித்துகளுக்கும் தனித்தனியே பங்கு கொடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் மதம் மாறப் போவதாகவும் கொக்கரிக்கின்றனர். அவர்களது சாதிய அடக்குமுறையை அங்கீகரிக்கும் இந்து மதத்துக்கு அவர்கள் மாறினாலும், சொத்துரிமை வாக்குரிமையையோ, இடஒதுக்கீட்டு சலுகைகள் பதவிகளையோ அவர்கள் இழக்கப் போவதில்லை. இதனாலேயே இன்னமும் சாதியத் திமிரோடு அவர்ளால் மிரட்டி எச்சரிக்கை விடுக்க முடிகிறது.

இந்நிலையில் இச்சாதிவெறியர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் வாக்குரிமை ஜனநாயக உரிமை, இடஒதுக்கீடு உரிமை உள்ளிட்டு அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் ரத்து செய்யக்கோரி போராட்டங்களைத் தொடர வேண்டும். எறையூர் மற்றும் கடலூர் விழுப்புரம் மாவட்டத் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் தொடங்கியுள்ள தீண்டாமைக்கெதிரான இப்போராட்டத்தை ஆதரித்து, அனைத்து மதங்களிலும் நீடிக்கும் சாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் பெரும் போராட்டமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும். இது மதச்சார்பற்ற புரட்சிகரஜனநாயக சக்திகளின் முன்னுள்ள மாபெரும் கடமை; நமது கடமை.

· தனபால்

Friday, May 2, 2008

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?


பி.இரயாகரன்

புலிகள் விசுவாசிகளோ, கண்ணை மூடிக்கொண்டு வழிபடும் போது தாம் தோற்கவில்லை என்று கருதுகின்றனர். அது அவர்களின் வெறுமையான வரட்டு நம்பிகை தான். வேறு சிலரோ புலிகள் செல்லும் பாதை இன்னமும் சரியானது என்கின்றனர். எந்த சுய விமர்சனத்துக்கும் புலிகள் உள்ளாகத் தேவையில்லை என்கின்றனர்.எல்லாம் சரியாக உள்ளதாக வரட்டுத்தனமாக கூறமுனைகின்றனர்.

புலிகள் தோற்று வருகின்றனர் என்று நாம் கூறுவதை, துரோகமாக, எட்டப்பத்தனமாக வழமைபோல் காட்டுகின்றனர். இது எப்படி தோற்காமல் முன்னேறுகின்றது என்று அவர்களால், காட்ட முடியாதுள்ளது. புலிகள் எதைத்தான், தமிழ் மக்களுக்கு பெற்று தருவார்கள் எனக் கூட அவர்களால் கூற முடிவதில்லை.

இப்படிப்பட்ட புலிப்போராட்டம் பல பத்தாயிரம் மக்களின் மனித உயிர்களை காவு கொண்டது. போராட்டத்தின் பெயரில், இரண்டு பத்தாயிரம் இளமையும் துடிப்பும் தியாக உணர்வும் கொண்டவர்களை பெயரில் பலியிட்டுள்ளனர். புலியுடன் முரண்பட்டதால் இதேயளவு எண்ணிக்கை கொண்ட துடிப்பும் ஆர்வமும் தியாக உணர்வும் கொண்டவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தி கொன்றனர்.

இப்படி ஒரு சமூகமே புலியின் சொந்த நலன் சார் அரசியலுக்குள்ளான மதிப்பீட்டுக்குள்ளாகியது. துரோகி அல்லது தியாகி என்ற அரசியல் வரையறைக்குள் அனைத்தையும் வரட்டுத்தனமாக உள்ளடக்கினர். அதற்குள் தான் அவர்கள் போராட்டம் நடத்தினர். புலிகளின் குறுகிய அறிவுக்கு ஏற்ப, அவை மிக எளிய அரசியல் சமன்பாடாகியது. இப்படி அதன் அரசியலே குறுகிப்போனது.

இதுவே பின்னால் பணம் தர மறுத்ததால் துரோகியாகியது. போராட வர மறுத்தால் துரோகியாகியது. கேள்வி கேட்டால் துரோகியாகியது. கட்டாய இராணுவ பயிற்சிக்கு வரமறுத்தால் துரோகியாக்கியது. இப்படி அரசியல் மாபியாத்தனமாகி, துரோக தியாகி என்ற குறுகிய அரசியலுக்கு மேலும் வக்கிரமாகி வழிகாட்டியது.

இப்படி புலிகள் எதை விரும்பினரோ, அதற்கு மாற்றான அனைத்தையும் துரோகமாக்கினர். இதற்கு மரண தண்டனை வரை பரிசாக வழங்கினர். இப்படித் தான் இப்போராட்டம் படிப்படியாக தன்னைச் குறுக்கிய வட்டத்துக்குள் சுருங்கி வந்தது.

இதில் இருந்து மீள்வதன் மூலம் தான், தமிழ் மக்களுக்கு விமர்சனம் கிடைக்கும் என்பதே எமது ஆதங்கமான விமர்சனங்கள். இதைத்தான் இவர்கள் துரோகத்தனமாக காட்டுகின்றனர். இதன் மூலம் அரசியல் ரீதியாக தாம் நீடித்து விடலாம் என்று, மெய்யாகவே இவர்கள் நம்புகின்றனர்.

இது இயல்பாக புலிகளை ஆதரித்தால் அது தியாகம், புலிகளை எதிர்த்தால் அது துரோகமாகி விடுகின்றது. இது சமூகத்தின் மீதான, கொடுமையிலும் கொடுமையாகியது. புலிகள் கண் அசைவுக்கு இசையாத எதுவும், உயிர்வாழ முடியாத அவல நிலை. இப்படி இலகுவான அரசியல் வரையறை சார்ந்த வரட்டுக் கொடுமை. இப்படித் தான், தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு புலிப்போராட்டம் வழிநடத்தப்பட்டது. இதற்குள் தான், புலிகளின் மொத்த அரசியல் வடிவமும் இயக்கப்படுகின்றது.

புலிகளின் சொந்த விருப்பங்கள் தான், தமிழ் தேசியமாக காட்டப்பட்டது. இதற்கு உட்படாத அனைத்தும் துரோகமாகியது. இப்படித் தான், இதற்குள் தான் புலிகளின் வரலாறு உருண்டது. இதை கண்காணிக்க, இதை நடைமுறைப்படுத்த படுகொலைகள், புலியில் நடைமுறை அரசியலாகியது. இதை நியாயப்படுத்தவே சொந்தப் பலியிடல். இதையே புலிகள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்றனர்.

இதற்கு ஆதரவை பெறுவதும், ஆட்களை திரட்டுவது என்பதும், இயல்பான சமூகத்தின் போராட்ட உணர்வில் செய்யப்படவில்லை. தேச மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளில் இருந்து செய்யப்படவில்லை. மாறாக தமது சொந்தக் கருத்தை ஒற்றைப் பரிணாமத்தில் திணித்து, தமது சொந்த புலி நலனை சாதிக்க முனைந்தனர்.

இப்படி மக்கள் நலன்கள் புலிகளின் நலன்களில் இருந்து வேறுபட்டதால் தான், கருத்து தளத்தை குறுக்கி கட்டுப்படுத்த வேண்டிய நிலை புலிக்கு ஏற்பட்டது. மக்களின் போராட்டத்தில் இருந்த புலிகள் அன்னியமாகிச் செல்ல, மக்களின் கருத்துச் சுதந்திரத்தை வெட்டியெறிந்தனர். மக்களோ கருத்துகளற்ற நடைப்பிணமாகினர்.

இப்படி சமூகத்தின் பன்மைத் தன்மையை அழித்து, ஒற்றைப் பரிணாமத்தில் மக்கள் முன் கருத்தைத் வரட்டுத்தனமாவே திணித்தனர். இப்படி மூளைச்சலவை செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தை தம் பின்னால் வைத்துக்கொண்டு, வெம்பிய பிஞ்சுகளை உள்வாங்கினர். அறிவியல் ரீதியாக சமூகத்தில் சிந்தித்து செயலாற்ற முடியாத, கடைநிலையில் உள்ள சமூகப் பிரிவையே புலிகள் உள்வாங்க முடிந்தது. இதை வைத்து பிழைத்துக் கொள்ள விரும்பிய ஒரு அறிவுப் பகுதி இதை தனக்காக பயன்படுத்தியது.

இப்படி போராட்டம் மக்களில் இருந்து அன்னியமாகிய, படிப்படியாக ஒரு பிரிவின் குறுகிய சொந்த நலன் சார்ந்த போராட்டமாகியது. இதன் யுத்த தந்திரமும், பிரச்சாரத் தந்திரமும் என்பது, குறுகிய தமது இருப்பு சார்ந்த ஒன்றாகியது. இதுவே மிகமிக மலிவான அரசியலாகியது.

எதிரிகளைத் தாக்குவதும், எதிரி திருப்பி மக்களை தாக்குகின்ற போது அதை வைத்து அரசியல் செய்வதுமாக மாறியது. மக்களின் அரசியல் கோரிக்கைகள் எதுவும் இதற்குள் இல்லாத வகையில், போராட்டம் ஆழமாகவே ஒரு குறுகிய வழியில் குறுக்கப்பட்டது.

இப்படி மக்கள் தாம் போராடாத வகையில், புலிகள் அவர்களை கண்காணித்தக் கொண்டனர். மக்களை புலிகளின் வெறும் மந்தைக் கூட்டமாக்கினர். மேயவிட்டால் அதில் ஓடி மேயும் வகையில், மக்களின் உணர்வை உணர்ச்சியை மலடாக்கினர். மக்களின் உணர்ச்சியை தூண்ட எதிரி மீது தாக்குதலை நடத்தி, எதிரி மக்கள் மேல் தாக்குதலை நடத்துவதை உருவாக்கும் புலிகளின் குறுகிய யுத்த தந்திரம் அரசியலாகியது.

மக்களை அணிதிரட்டாத புரட்சி பற்றி பேசும், சேகுவேராவின் கோட்பாடுகளில் ஒன்றுதான் இது. இப்படித்தான், இதற்குள் தான் புலிகள் மக்களின் உணர்வை, உணர்ச்சியை அறுவடை செய்தனர். இப்படி புலிகள் மக்களை போராட்டத்தில் இருந்து அன்னியமாக்கினர். புலியின் செயலுக்கு ஏற்ப உணர்வும் உணர்ச்சியும் என்ற எல்லைக்குள், போராட்டம் கீழ் இறங்கியது.

மக்களை தமக்கு வாலாட்டவும், குலைக்கவும் பழக்கப்படுத்தினர். எந்த சுயமுமற்ற மக்கள் கூட்டத்துக்கு, வேடிக்கையும் வித்தையும் (இராணுவ சாகசங்களையும்) காட்ட வேண்டியிருந்தது. இராணுவம் மீதான தாக்குதல்கள் மூலம், ஊதிவிட்ட பலூன் போல் உணாச்சிவசப்படுத்தும் வித்தையை புலிகள் நடைமுறைப்படுத்தினர். மறுபக்கத்தில் தாக்குதல் இல்லாத போது, காற்றுப் போன பலூன் போல் உணர்ச்சியை இழந்து அது புலியை விராண்டுகின்றது.

இதில் உள்ள சோகம் என்னவென்றால், மக்கள் மட்டுமல்ல சொந்த புலிப் படையே இந்த நிலைக்குள் சோர்ந்து துவண்டு போவதுதான். புலியின் முன்னணி தளபதிகளுக்கும் இந்த கதி ஏற்பட்டுவிடுகின்றது. தலைவர் புலிகளின் தளபதிகளுக்கே எல்லாளன் படையைக் காட்ட வேண்டிய அளவுக்கு, நிலைமை நெருக்கடிக்குள்ளாhகியுள்ளது. தலைவர் தாக்குதலை நடத்தி தம் மீது நம்பிக்கையை உருவாக்க வேண்டியுள்ளது. இப்படி சொந்த புலித் தளபதிகளினதும், அணிகளினதும் நம்பிக்கையைப் பெற வேண்டிய அளவுக்கு அவலம். இதானாலேயே தாக்குதல்களை செய்து காட்ட வேண்டிய கட்டாய நிலை.

இப்படி புலிகளின் அரசியலே, இராணுவ தாக்குதல் தான். அதைச் சுற்றித்தான் புலிகள் உருவாக்கப்பட்டனர். அமைப்பையும், தன்னையும் பாதுகாக்க இராணுவத் தாக்குதல் என்ற குறுகிய எல்லைக்குள், இப்படி புலிகள் முடங்கிவிட்டனர். போராட்டம் இப்படி குறுகிய எல்லைக்குள் சிதைந்தது. இப்படியான நெருக்கடிக்குள் புலிகளும், புலிகளின் தலைவரும் சிக்கியுள்ளனர்.

மீள்வதற்கான தமது பாதைகள் குறுகி, அவற்றை தாமே மூடிவிட்டனர். இனி புலிகள் அரசியல் பேச முடியாது. இராணுவத்தைக் கொன்றும், மற்றவனைக் கொன்றும், அதையே அரசியலாக செய்யப் பழக்கப்பட்ட ஒரு இயக்கம், இயல்பாகவே தனிமைப்பட்டு விடுகின்றது. குறுகிய எல்லைக்குள் சுருங்கி, வெளிவர முடியாது தானாகவே மரணிக்கத் தொடங்குகிறது.

மக்களில் இருந்து அன்னியமாக, அது பணக்கார இயக்கமாகியது. பணத்தை குவிப்பதே, அதன் சொந்த அரசியல் இலட்சியமாகியது. இதனால் தன்னை ஒரு மாபியா இயக்கமாக வளர்த்துக் கொண்டது. இதன் மூலம் மக்களை சார்ந்து இருத்தல் என்பதற்குப் பதில், பணத்தை சார்ந்து இயங்குதல் என்ற வகையிலும் தன்னை மாற்றிக் கொண்டது.

இதற்கு ஏற்ப நவீன ஆயுதங்கள் புரட்சி செய்யும் என்பது புலிகளின் மற்றொரு அரசியல் சித்தாந்தம். இப்படி நவீன ஆயுதங்கள் கொண்ட தேசியத்தைக் கட்டினர். இதன் முன் மக்களோ அந்த நவீன ஆயதங்களை வேடிக்கை பார்த்தனர். அதைப்பற்றி கதைத்தனர். நவீன ஆயதங்கள் புரட்சி செய்ய, மக்களை வேடிக்கை பார்ப்பதன் மூலம் போராட்டத்தில் இருந்து அவர்களை ஒதுக்கி வைத்தனர்.

இப்படி குறுகிப்போன புலிகளின் அரசியல் மற்றும் யுத்த தந்திரத்ததை வரையறுத்துவிட முடியும். இதற்குப் பின்னால் மக்களின் அரசியல் உணர்வும், உணர்ச்சியும் கிடையாது. மக்கள் மந்தைகளாக, வேடிக்கை பார்ப்பவர்களாக வைத்துக் கொண்ட அடக்குமுறை தான், புலிப் போராட்டம். தமிழ் மக்களுக்கும் புலிக்குமான அரசியல் உறவு இதற்கு உட்பட்டது தான்

இப்படி கூனிக் குறுகிக் போன போராட்டமாகியது. இதற்கு மக்கள் அரசியல் கிடையாது. மக்கள் சார்ந்த நோக்கம் கிடையாது. இதுவே கடந்து போனதும், இன்றும் ஒரு சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.

இதுவல்லாத சமூகத்தின் இருந்த அனைத்துக் குரல்களையும் வெட்டிச்சாய்த்தனர். கண்மூடித்தனமான அரசியல் படுகொலைகள் மூலம், சமூகத்தை இருண்ட சூனியத்துக்குள் தாழ்த்தி அடிமைப்படுத்தினர். தம்மை தாம், தமிழரின் ஏகப்பிரதிநிதிகளாக்கிக் கொண்டனர். இந்த கொடுமை என்பது சமூகத்தில் உயிர் உள்ள அனைத்து சமூகக் கூறுகளையும் பிடுங்கி எறிந்தது. சமூகமோ மூச்சுத்திணறி தானாக மடியத் தொடங்கியது.

புலிகளின் இந்த பாசிசத்தை எதிர்கொள்ளமுடியாது திணறிய மற்றைய குழுக்கள், வேட்டையாடப்பட்டனர். ஆயிரம் ஆயிரமாக கொல்லப்பட்டனர். இப்படி போராட்டம் என்பது சமூகத்தில் இருந்து அன்னியமாகி, தன்னைக் குறுக்கி அழிக்கத் தொடங்கியது.

புலிப் பாசிசத்தின் கோரப்பிடியில் இருந்து தப்பியவர்கள் கண்மண் தெரியாத திசையில் ஓடினர். அதில் ஒரு பகுதியை இந்திய இலங்கை அரசுகள், தமது சொந்த அரசியல் இராணுவ கூலிக் குழுக்களாக மாற்றின. இப்படி புலிகள் தமக்கு எதிரான எதிரியை பலப்படுத்தினர். எதிரியின் பக்கத்தில், தமிழரின் ஒரு பிரிவை செல்லுமாறு எட்டி உதைத்தனர்.

இப்படி தொடர்ச்சியாகவே புலிகள் சமுகத்தினுள் எதிரிகளை உற்பத்தி செய்தனர். ஒரு பாசிச சூழலை சமூகத்தின் முன் வித்திட்டனர். புலிகளின் கொடுமைகள் பலவாகப் பெருகியது. இதனால் தமிழ்ச் சமூகம் தானாகவே தப்பியோடத் தொடங்கியது. எதிரியின் பிரதேசம் பாதுகாப்பானதாக கருதும் அளவுக்கு, புலிப் பாசிசம் அவர்களை விரட்டியது. இதுவே சமூக எதாhத்தமாகியது. மக்கள் தப்பியோடாதவாறான புலிகளின் பாஸ் மற்றும் தடைகள் இதை தடுத்து நிறுத்திவிடவில்லை.

தப்பியோட முனைந்தவர்கள் கதியோ, தமது பொருளாதார வாழ்வையே இழந்தனர். கொழும்பு என்பது சுயமாக வாழமுடியாத எல்லைக்குள் பொருளாதார சுமைக்குள் மக்களை அன்னியமாக்கியது. வாழ வழியற்று அதை தேடியவர்கள், அரச கூலிக் குழுக்களின் வலையில் இலகுவாக சிக்கிக்கொள்ளத் தொடங்கினர். இப்படி புலிகள் போராட்டம், எதிரியை பலப்படுத்தும் வகையில் மக்கள் விரோதத்தை அரசியலாக்கியது. இப்படி வரலாற்றில் நம்ப முடியாத ஒன்று தான், நம்பும்படியாக நடந்தது.

இப்படி புலிகள் தம்மைச் சுற்றி, சதா எதிரியை உற்பத்தி செய்தனர். நம்பமுடியாத வேகத்தில் அது பெருகியது. அது பல தளம் கொண்ட, பல முனைப்புக் கொண்ட ஒன்றாகியது. உண்மையில் அவர்களாக அதில் ஓடிச் சென்றது கிடையாது. மாறாக புலிகள் தான் எதிரியை பலப்படுத்தும்படி, தமது பாசிசத்தை சமூகம் மீது நிறுவினர். இப்படி தம்மைத்தாம் குறுக்கி வந்தனர்.

இப்படி புலிப் போராட்டம் என்பது ஆக்கத்துக்கு பதில், அழிவைக் கொண்ட ஒன்றாக மாறியது. புதிது புதிதாக எதிரியை உற்பத்தி செய்யும் போராட்டம் தான், புலித் தேசியமாகியது. சமூகத்தின் பல்வேறு கூறுகளை உண்மையான தமிழ் தேசியமாக்க அதனால் முடியவில்லை. மாறாக தமிழ் தேசியத்துக்கு பதில், புலித்தேசியத்தை வைத்த, ஒரு குறும் கும்பலாகவே சீரழிந்து வந்தனர். அது தனக்குள் தானே ஒரு கிணற்றுத் தவளையாக முடங்கிக் கொண்டது. பரந்து விரிந்த மனித சமூகத்துடன் எப்படி இணைவது என்பதை, அதனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு அதன் அரசியல் குறுகியது.

அவர்கள் தமது குறுகிய புலி அரசியலைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தை மேலும் ஒடுக்கினர். இப்படி உண்மையான தேசியத்துக்கு தலைமை தாங்க வேண்டிய புரட்சிகரமான மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். இப்படி தேசியத்துக்கு தலைமை தாங்கும் தகுதியை புலிகள் இழந்தனர். புலிகளின் இராணுவ பொம்மைகளின் ஆட்சியை, மொத்த மக்கள் மேல் திணித்தனர். அனைத்தும் இராணுவ வகைப்பட்ட இராணுவ ஆட்சியாகியது. தமிழ்த் தேசியப் போராட்டத்தின் நியாயமான தன்மை என்பது, இராணுவத் தன்மையாகி, அதையே அது மறுக்கத் தொடங்கியது. ஒரு இராணுவ சூனியம் தோற்றுவிக்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் ஆழமாக ஒடுக்கப்பட்டனர். சமூக உள் முரண்பாடுகளான ஒடுக்குமுறை ஒருபுறம். அதன் மேல் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை மறுபுறம். புலிகள் ஒடுக்குமுறை, மக்கள் தமது வாழ்வையே தாங்கிக் கொள்ளமுடியாத அவலமான வாழ்வுக்குள் வீழ்ந்தனர். சமூகம் தப்பிப் பிழைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

புலிகள் இதை எதிரியின் நடவடிக்கையாக முத்திரை குத்தினர். இப்படி புலிகள் அரசியல் என்பது குறுகிவந்தது. தன்னை நியாயப்படுத்த, சமூகத்தில் எதிரியை உற்பத்தி செய்வதே புலி அரசியலாகியது. சமூக முரண்பாடுகளையே புலிகள் தமது எதிரிக்குரிய அடையாளமாக்கினர். தமது எதிரிகளின் அடையாளம், இந்த முரண்பாடுகளினான அடையாளமாக மாற்றினர். இப்படி தமிழ் மக்களின் எதிரிகள் என்று, ஆயிரமாயிரமாக புலிகள் உருவாக்கினர். இப்படி சமூகமே புலிக்கு எதிராக மாறியது. தமிழ்த் தேசியமே புலிக்கு எதிராக மாறியது. தமழ் மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்து, புலி உரிமையை அதனிடத்தில் திணித்துவிட்டனர். இதை கண்காணிக்க மக்கள் மேல் வன்முறையை ஏவினர்.

உண்மையில் இப்படி தமிழ்ச் சமூகம் சொல்லவும் மெல்லவும் முடியாத பாரிய அவலத்தையும், சோகத்தையும் சந்தித்தனர். மக்கள் புலிகளுடன் வாழமுடியாத ஒரு நிலையை அடைந்தனர். புலிகளுடன் இருப்பதில் இருந்தும் தப்பியோடவே விரும்பினர். இப்படி போராட்டம் மக்களிடம் இருந்து விலகிச்சென்றது.

இலட்சம் இலட்சமாக தமிழ் சமூகம் பிறந்து வளர்ந்த மண்ணைவிட்டு அன்னிய நாட்டுக்கு தப்பி ஓடினர். புலிகளின் பாசிசமே தேசிய மொழியாகி, அது மட்டும் தான் தேசமென்னும் நிலையில் மக்கள் அங்கு வாழமுடியவில்லை. புலியின் பொருளாதார கொள்கையால், தமிழ் தேசிய பொருளாதாரம் அழிக்கப்பட்டது. மக்கள் எப்படியும் புலிகளுடன் வாழமுடியாத நிலை.

இப்படி மேற்கு நோக்கி புலம் பெயர்ந்த ஓடியவர்கள் 10 இலட்சத்தை தாண்டிவிட்டது. இது மட்டுமா இல்லை. மேற்கு நோக்கி புலம்பெயர முடியாதவர்கள், சிங்களப் பகுதிகளை நோக்கி ஓடினர். அதுவும் பத்து இலட்சமாகி விட்டது. இதைவிட இந்தியாவில் ஒன்றில் இருந்து இரண்டு இலட்சம் மக்கள் புலம் பெயர்ந்தனர். மத்திய கிழக்கு நோக்கி புலம்பெயர்வு என்று, ஒரு தேசிய இனமே புலம் பெயர்ந்தது. புலிகள் வைத்த தேசியத்துடன் மக்கள் நிற்க முடியவில்லை. அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து வாழ முடியவில்லை.

இப்படி புலிப்போராட்டம் மக்களையே சொந்த மண்ணில் இருந்து விரட்டி அடித்தது. அது மக்களை தலைமை தாங்கும் தகுதியையும், மக்களுக்காக போராடும் தகுதியையும் இழந்தது. மக்களைப் போராட்டத்தில் இருந்து விரட்டி அடிக்கும் பாசிசத்தை விசிறி அடித்தனர்.

புலிப் பாசிசம் சொந்த மக்களை மட்டும் ஓடு என்று துரத்தவில்லை. தமிழ் மக்களுடன் சேர்ந்து போராடிய முஸ்லீம் மக்களை, கூட்டாகவே அடித்து விரட்டினர். வாழ்ந்த ப+மியை விட்டே அவர்களை துரத்தினர். புலிகளின் குறுகிய புலிப்போராட்டம், அனைத்து மக்களையும் துரத்தி அடித்தது. மக்கள் தமது வாழ்வுக்காக போராட வேண்டியவர்கள், தமது வாழ்வை இழந்தனர். குறைந்தது மக்களுக்காக போராட வேண்டியவர்களால், மக்கள் வாழ்வை இழந்த அவலம். இப்படி இந்தப் போராட்டம், தமிழ் மக்களுக்கு எதிராக மாறியது. இதை தவறு என்றவர்களை துரோகி என்றனர். வெட்டியும், கொத்தியும், சுட்டும் போட்டனர்.

இப்படி போராட்டம் என்ற பெயரில் மக்கள் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக சிதறியோடிய அவர்கள் உதைப்பட்ட நிலையில், ஐயோ போராட்டமே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். போராட்டம் என்பது வெறுமனே, புலிகளின் அபிலாசைக்குள் சுருங்கி வெம்பியது.

இந்த வெம்பிப்போன அரசியல் சமூகத்தின் இழிவான ஆதிக்கத்தை சார்ந்த தன்னை நிலை நிறுத்த முனைந்தது. யாழ் மையவாதம் தலைக்கேற, பிரதேசவாத உணர்வுகளை கொண்டு முழு தமிழ் சமூகத்தையும் இதற்குள் ஒடுக்கினர். பிரதேசவாத உணர்வுகளையும், அது சார்ந்த ஒடுக்குமுறையை தக்கவைத்தபடி, பிரதேச ரீதியாக மக்களைப் பிரித்தாளுவதை கையாண்டனர். இன்று இதன் விளைவால் பிரதேசங்கையே விட்டு ஓட வேண்டிய அளவுக்கு, புலிகள் பிரதேசவாத அரசியல் இருண்டு போனது. வெளிச்சதுக்கு பதில் இருட்டு என்பதே புலி அரசியல்.

எங்கும் எதிலும் சூனியவாதம். புலிப் போராட்டம் அறநெறியற்ற ஒன்றாகியது. பொதுவாக இந்த சமூக அமைப்பில் நிலவும் தந்தைக்குரிய வழிகாட்டல் கிடையாது. தாய்க்குரிய கனிவு கிடையாது. தலைமைக்குரிய சமூகப் பொறுப்பு கிடையாது. அடி உதை, வெட்டுக் கொத்து, போட்டுத் தள்ளுதல், சதியும் சூதும், பொய்யும் புரட்டும், இதுவன்றி புலியில்லை என்றாகிவிட்டது.

இப்படி சர்வதேச ரீதியாக, தமது இழிசெயல்களால் அம்மணமானார்கள். சர்வதேச மக்களைச் சார்ந்து இருப்பதற்கு பதில், அந்த மக்களை ஒடுக்கிய அரசுகளின் தயவுகளை வேண்டி நிற்குமாறு தள்ளிவிட்டனர். அவர்களோ புலிகளின் மக்கள் விரோத செயல்களை பட்டியலிட்டு, அவர்களைத் தனிமைப்படுத்தி தடை செய்து ஒடுக்குகின்றனர். இப்படி புலிகள் உலகளவில் தனிமைக்குள் சிக்கிச் சிதைகின்றனர்.

இந்தியாவில் ராஐPவை வெறும் தனிமனித பழிவாங்கும் உணர்வுடன் கொன்றதன் மூலம், இந்தியாவிலும் தமக்கான அரசியல் கிறுக்குத்தனம் கொண்ட சூனியத்தை நிறுவிக் கொண்டனர். எங்கும் எதிலும் தனிமைப்பட்டு, ஒரு சிறிய கிணற்றுக்குள் நின்று கத்தும் தவளையாக மாறினர்.

இவர்கள் ஒரு அரசியல் பேச்சுவார்த்தையைக் கூட நடத்தும் தகுதி தமக்கு கிடையாது என்பதை நிறுவினர். அரசியல் சூனியமாகிவிட்ட நிலையில், தமது நலன் என்ற எல்லைக்குள் நின்று அதிலும் தம்மை அம்மணமாக்கினர். தமிழ் மக்களின் அரசியல் உரிமை என்பதற்குப் பதிலாக அவர்கள் பேசியதோ அற்பத்தனமானவை. இப்படி ஒரு அரசியல் இராஜதந்திரமே கிடையாது. தமிழ் மக்களை தலைமைதாங்கி வழிநடத்திச் செல்லும் தகுதி தங்களுக்கு கிடையாது. என்பதை, பேச்சுவார்த்தையிலும் மீள நிறுவினர்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமையை பேச்சுவார்த்தையில் கோருவது தான் அடிப்படையானது. பேரினவாதத்தின் அரசியல் இருப்பில் கைவைத்து, அரசியல் பேசத்தெரியாத முட்டாள்கள் என்பதை நிறுவினர். சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கு வைக்கும் அரசியல் தீர்வை அல்லவா அவர்கள் கோரியிருக்க வேண்டும். இது கூட தெரியாமல் புலிகள் அரசியல் நடத்தினர். இப்படி புலி அரசியல் பேரினவாத அரசை பாதுகாக்கும் அரசியலாகிப் போனது. தமிழ் மக்களின் அரசியல் உரிமையை மறுக்கும் புலிகள், எப்படி அதை அரசிடம் கோருவர் என்பதே இங்கு நிதர்சனமாகியது.

இந்தியாவை நிர்ப்பந்திக்கும் வகையில், இந்தியா வாலாட்டாத வகையிலும், இந்திய மாநிலங்களுக்கு குறைந்த எதையும் நாம் பேச முடியாது என்று அழகாகவும் ஆணித்தரமாகவும் இராஜதந்திரமாகவும் கூறியிருக்க முடியும். இப்படி உலகை வெல்வதற்கு எத்தனையோ இராஜதந்திர அரசியல் வழிகள் இருந்தது. எல்லாவற்றையும் புலிகள் நாசமாக்கினர்.

எங்கும் எதிலும் இருட்டு. தமிழ் மக்கள் வெளிச்சத்தைப் பார்க்க எந்த வழியுமில்லை. இந்த நிலை தொடர்ந்தால், இன்னும் பத்து வருடத்தில் தமிழ் மக்கள் எம்மண்ணில் வாழ்ந்தார்கள் என்று சொல்லும் வகையில் எதுவும் எஞ்சாது. தமிழ் இனமே இன்று குறுகி சிறுத்துவிட்டது. இலங்கையில் இரண்டாவது பெரிய இனம், நாலாவது சிறிய இனமாக எப்போதே மாறிவிட்டது. மக்கள் சொந்த வாழ்வைத் துறந்தோடுகின்றனர். தமிழ் மக்கள் அங்கு வாழவ்தற்காக இருக்கமாட்டார்கள் என்ற நிலைக்கு, புலிகள் தமிழ் மக்களின் வாழ்வுக்கான சூழலை அழித்துவிட்டனர்.

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது இப்படித் தான். எங்கும் எதிலும் தோல்வி. அவர்களை வாழ வைத்த, இராணுவ சாகசங்கள் கூட பெரும் தோல்வியில் முடிகின்றது. மீள்வதற்கான மீட்சிக்கான பாதை கிடையாது. சுயவிமர்சனம் என்ற மீள்வதற்கான பாதையை, எல்லாம் சரியாக சிறப்பாக நடப்பதாக நம்பும் கொங்கிரீட்டைப் போட்டு அடைத்து வைத்துள்ளனர்.

இப்படி கடந்து வந்த வரலாறு எங்கும் பாரிய மனித விரோதத்துடன் அரங்கேறியது. மனித விரோதமல்லாத எதையும், அவர்கள் உருவாக்கியது கிடையாது. தமிழத் தேசிய விடுதலைப் போராட்டம் மக்களுடையது என்பதையே மறுத்தனர். அனைத்தையும் புலியாக்கி, புலிப் போராட்டமாக்கி குறுக்கினர். வெறும் வரட்டுத்தனமான நம்பிக்கையைக் கொண்டு, உயிராற்றல் உள்ளவற்றை கருக்கினர். குறுகி குறுகி, வன்னிக்குள் முடங்கிய நிலைக்குள் சென்றுவிட்டனர்.

அங்கு வாழ்ந்த மக்களை தப்பியோடாத வண்ணம் சிறைப்பிடித்தனர். தம்மைச் சுற்றி தமது பாதுகாப்புக்காக அவர்களை நிறுத்தியுள்ளனர். மக்கள் வெளியேறாத வண்ணம், ஒரு திறந்த வெளிச் சிறையில் மக்களை அடைத்துள்ளனர். புலிகள் தமது குறுகிய வட்டத்தை சுற்றி நடக்கின்றனர். அவர்களுக்கு மனித கேடயங்களாகவே வன்னி மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இப்படி வன்னியில் ஒரு லட்சம் மக்கள் புலிகளால் சிறைவைக்கபட்டுள்ளனர். அவர்களை பலாத்காரமாக ஆயுதபாணியாக்குகின்றனர். இந்த மக்களைக் கொண்டு தான், மீட்சிக்கான புலிகளின் இறுதி தற்கொலைக்கு ஒப்பான தமது தாக்குதலை நடத்த முனைகின்றனர்.

ஆனால் புலிகளின் ஆயுதம் ஏந்திய படைப்பிரிவும், அவர்களால் கட்டாயப்படுத்தப்பட்ட மக்களின் உளவியல் என்பதும், போராடும் ஆற்றலை இழந்துவிட்டது. யுத்தத்தை விரும்பாத மக்கள் முன், யுத்தம் வலிந்து திணிக்கப்படுகின்றது. இது எண்ணிக்கையற்ற மனித இழப்பையும், தமிழ் தாய்மையையுமே தொப்புள் கொடியுடன் அறுத்தெறிகின்றது. மனித அவலமும், மனிதத் துயரமும், வன்னி மேல் கவிழ்ந்து கிடக்கின்றது. மனித வாழ்வே பிணமாகி நாற, மக்கள் நடைப்பிணமாகி விட்டனர். தாம் எதற்கு உயிருடன் வாழ்கின்றோம், ஏன் வாழ்கின்றோம் என்று தெரியாத ஒரு நரக வாழ்க்கை.

புலிகள் என்ற குறுகிய சூனியத்தில், எல்லாமே பூச்சியமாகிவிட்டது. இவை இன்று இராணுவத்தின் வெற்றியாக மாறுகின்றது. புலிகளின் பாரிய மனித இழப்புகளாக மாறி வருகின்றது. தமிழ் மக்களின் சூறையாடிய பொருட் செல்வம், எதிரியிடம் அன்றாடம் சென்றுவிடுகின்றது அல்லது அழிந்து விடுகின்றது. தமிழ் மக்கள் பெறப் போவது என்ன? இறுதியில் எதுவுமில்லை. இழப்புகளைத் தவிர எதுவுமில்லை. தமிழர்கள் வாழ்ந்த ப+மியில், தமிழர்கள் வாழ்வார்களா என்ற நிலை கூட இன்று உருவாகியுள்ளது. இது தான் இன்றைய உண்மையான எதார்த்தம். தமிழ் மக்கள் எப்போதோ யார் யாரிடமெல்லாமோ இழிந்து நலிந்து தோற்றுவிட்டார்கள். இப்படி தமிழ் மக்களை உருவாக்கி, அதற்கு தலைமை தாங்கியவர்கள், இன்று தாங்கமுடியாது அதற்குள் தோற்றுப் போகின்றனர்.

பி.இரயாகரன்
08.12.2007

>

மாஓ வாதிகள்...

மாஓ வாதிகள்...

//எவ்வாறாயினும் தேசிய வாதிகளும்,தலித்தியவாதிகளும் பெண்ணியவாதிகளும் பிரிந்து நின்று எல்லாரையும் பிளவு படுத்திச் சாதிக்க இயலாத விடயங்கள் பலவற்றை எல்லா முரண்பாடுகளையும் ஒரு முழுமையின் பகுதியாகவர்க்கப் போராட்டத்தினுடன் தொடர்பு படுத்திய ஒரு போராட்டப் பாதை பத்தே ஆண்டுகளிற்சாதித்துள்ளது. அதன் பாடங்கள் உன்னதமானவை. //

மறுபக்கம்:

''மாஓ வாதிகள் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஆனால், இது ஒரு முக்கியமான திருப்பு முனையே ஒழிய இறுதி வெற்றி அல்ல. ''

நேபாளத்தில் அதி முக்கியமான அரசியல் நிகழ்வென்று கூறக் கூடிய விதமாக முடியாட்சியின் ஒழிப்பை அதன் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளது. நேபாள மாஓ வாதிகளின் வெற்றி, வெறும் தேர்தல் வெற்றியல்ல. பாராளுமன்றத்தின் மூலம் வர்க்கம், இனம், மதம், சாதி, பால் என்ற அடிப்படைகளில் ஒடுக்கப்பட்ட மக்களது உரிமைகளை வென்றெடுக்க இயலாது என்பது ஒரு புறம் இருக்க ஒரு சனநாயக நாட்டில் பாராளுமன்றத்தின் மூலம் செய்யக் கூடியதைக் கூடச் செய்ய இயலாதளவுக்கு உண்மையான அரசியல் அதிகாரம் நேபாள மன்னராட்சியின் கையில் இருந்தது. நேபாள இராணுவம் அந்த அரசியல் அதிகாரத்தின் உத்தரவாதமாக இருந்தது.

1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த பாராளுமன்ற இடதுசாரிக் கட்சியால் எதையுமே செய்ய இயலாதது போக அந்த ஆட்சி கூடக் கலைக்கப்பட்டு மன்னராட்சிக்கு உடன்பாடான நேபாள காங்கிரஸ் அரசாங்கம் அமைத்தது. இத்தகையதொரு பின்னணியிலேயே மாஓ வாதக் கம்யூனிஸ்ட்டுக்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளியேறி 1996 ஆம் ஆண்டு மக்கள் யுத்தத்தைத் தொடுத்தனர்.

அப்போது அவர்கள் வலுவான ஒரு சக்தியாக இருக்கவில்லை. அவர்கள் ஒரு புறம் அரசுடன் போர் தொடுத்தனர். மறுபுறம் தங்கள் ஆதரவுப் பிரதேசங்களில் மாற்று அரசியல் அதிகாரம் ஒன்றைக் கட்சியெழுப்பினர். இந்த அதிகாரத்திற்கு ஆயுதங்களை விட அரசியல் முக்கியமானதாக இருந்தது. காணிச் சீர்திருத்தம், பண்ணையடிமை முறை ஒழிப்பு, சாதி, மதப் பாகுபாட்டுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள், பெண்கள் சமத்துவம் என்று ஒவ்வொரு துறையிலும் அவர்களது அக்கறை இருந்தது. அதை அவர்கள் செயலிலும் காட்டினர். கொள்கைகளை மக்களுக்கு விளக்கினர். அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றி மக்களுடன் கலந்தாலோசித்தனர். மக்கள் மூலமே அவற்றை நடைமுறைப்படுத்தினர்.

கட்சியிலும் மக்கள் படையிலும் தலைமைப் பொறுப்புகளிலும் பல்வேறு மட்டங்களிலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினர் இருந்தனர். யாரையும் கட்டாயப்படுத்திக் கட்சியிலோ படையிலோ சேர்க்கும் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. மக்கள் அரச படைகளதும் ஒடுக்கும் வர்க்கத்தின் அடியாட்களதும் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்த வேண்டியிருந்தது. தாங்கள் வென்றெடுத்த உரிமைகளைக் காத்து விருத்தி செய்ய அவர்களுக்கு அரசியல் தேவைப்பட்டது. அரசியற் தளத்திலும் சமூகத் தளத்திலும் ஆயுதப் போராட்டத்திலும் மக்களை நெறிப்படுத்தியது. வெகுசன அரசியல், வெகுசனப் போராட்டம், மக்கள் யுத்தம் என்பவற்றை முதன்மைப்படுத்தியது. ஒரு அரசியல் சிந்தனையே.

நேபாளத்தின் சனத்தொகை இலங்கையுடன் ஒப்பிடத்தக்கது. அங்கு பத்தாண்டுகளாக நாடு தழுவிய ஒரு ஆயுதப் போராட்டம் நடந்தது. அப் போராட்டத்தின் போக்கில் நாட்டின் 80 முதல் 90 சதவீதம் வரையிலான நிலப்பரப்பு மாஓ வாதக் கம்யூனிஸ்ற்றுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மாஓ வாதிகள் மக்கள் யுத்தத்தின் மூலம் ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்த எத்தனையோ தருணங்கள் இருந்தன. அவர்கள் அதேவேகத்தில் தொடர்ந்திருந்தால் தலை நகரமான காத்மண்டு உட்பட முழு நாட்டிலும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட ஓரிரு ஆண்டுகளே போதுமாயிருந்திருக்கும். இதை அப்போது ஒத்துக் கொள்ளத் தயங்கியவர்கள் இப்போது ஒத்துக் கொள்கின்றனர்.

"வேறுமனே பாராளுமன்ற அதிகாரத்தின் மீது நேபாள மாஓவாதிகள் தங்கியிருப்பார்களேயானால் அவர்கள் இரத்தம் சிந்திப் பெற்ற வெற்றியைப் பாராளுமன்ற விவாதங்களின் சுடு காற்று அள்ளிச் சென்று விடும். மக்கள் அதிகாரத்தை மாஓவாதிகள் எவ்வாறு வலுப்படுத்தப் போகிறார்கள் என்பது தான் நேபாளத்தின் சுபிட்சத்தைமுடிவு செய்யும். "

மாஓ வாதிகள் தமது போராட்டத்தின் மூலம் பலமுறை தலைநகரைச் சுற்றி வளைத்து ஸ்தம்பிக்கச் செய்ய முடிந்ததென்றால் அவர்கள் தலைநகரைக் கைப்பற்ற முயலாதது ஏன்? பத்து வருடப் போர் பதின்மூவாயிரம் பேர்களின் உரைப் பறித்தது. அதில் பத்தாயிரம் உயிர்கள் அரச இராணுவத்தினரால் பறிக்கப்பட்டவை. போர் மூலம் தலை நகரைப் பிடிப்பதனால் மேலும் பல ஆயிரம் உயிர்கள் பலியாக நேரும் என்பது போக, சீர்குலைந்த ஒரு பொருளாதாரச் சூழலில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைப்படுவதால் இலட்சக்கணக்கான மக்கள் அல்லற்படுவர். அதற்கும் மேலாக நேபாளத்தில் குறுக்கிடுவதற்குத் தருணம் பார்த்திருந்த இந்தியாவும் அமெரிக்காவும் அங்கு சனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற பேரில் குறுக்கிடும் வாய்ப்பும் இருந்தது. எனவே, விடுவிக்கப்பட்ட நேபாளம் தொடர்ந்தும் பல ஆண்கட்கு உள்நாட்டுக் கலவரங்கட்கு முகம் கொடுக்க நேரும்.

நேபாளத்தின் வறுமையும் பொருளாதாரப் பின்னடைவும் அரசியல் குழப்பமும் நேபாளத்தில் அந்தியக் குறுக்கீட்டை மட்டுமன்றி நிரந்தரமான அந்நிய ஆக்கிரமிப்பையும் சாத்தியமாக்கும் வாய்ப்புகள் அதிகம் எனுபதற்குக் கடந்த பத்தாண்டுக்கால உலக நிகழ்வுகள் சான்று கூறும். அதைவிட நேபாளம் சீனாவுடனும் இந்தியாவுடனும் கொண்டுள்ள நீண்ட எல்லை அதை உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவுக்கு முக்கியமான ஒரு பிரதேசமாக ஆக்கியுள்ளது.

நேபாள முடியாட்சி தன் இயலாமையை மூடி மறைக்கப் பாராளுமன்றத்தைக் கலைத்து முழு அதிகாரத்தையும் தன் வாசமாக்கிய போது பாராளுமன்றக் கட்சிகள் இயங்குவதற்கான வாய்ப்பே இல்லாது போயிற்று. மன்னராட்சிக்கு எதிராக அவை ஒன்றிணைந்த போதும் அவற்றால் மன்னராட்சியின் அடாவடித்தனங்கட்கு முன் தாக்குப் பிடிக்க இயலவில்லை. இச் சூழலில் மாஓ வாதிகளின் குறுக்கீடு அவர்கட்கு உதவியாக அமைந்தது. அவர்களால் மன்னராட்சிக்கு எதிராகத் தைரியமாக ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிந்தது. சுருங்கச் சொன்னால் ஆயுதமேந்திய புரட்சி மூலம் மாஓ வாதிகள் ஒரு சனநாயக ஆட்சியை இயலுமாக்கினர். வேறு விதமாக நேபாளத்திற்கு எவ்விதமான சனநாயக ஆட்சியும் மீண்டிருக்க இயலாது.

//மாஓ வாதிகள் தமது போராட்டத்தின் மூலம் பலமுறை தலைநகரைச் சுற்றி வளைத்து ஸ்தம்பிக்கச் செய்ய முடிந்ததென்றால் அவர்கள் தலைநகரைக் கைப்பற்ற முயலாதது ஏன்? பத்து வருடப் போர் பதின்மூவாயிரம் பேர்களின் உரைப் பறித்தது. அதில் பத்தாயிரம் உயிர்கள் அரச இராணுவத்தினரால் பறிக்கப்பட்டவை. போர் மூலம் தலை நகரைப் பிடிப்பதனால் மேலும் பல ஆயிரம் உயிர்கள் பலியாக நேரும் என்பது போக, சீர்குலைந்த ஒரு பொருளாதாரச் சூழலில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைப்படுவதால் இலட்சக்கணக்கான மக்கள் அல்லற்படுவர். அதற்கும் மேலாக நேபாளத்தில் குறுக்கிடுவதற்குத் தருணம் பார்த்திருந்த இந்தியாவும் அமெரிக்காவும் அங்குசனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற பேரில் குறுக்கிடும் வாய்ப்பும் இருந்தது. எனவே,விடுவிக்கப்பட்ட நேபாளம் தொடர்ந்தும் பல ஆண்கட்கு உள்நாட்டுக் கலவரங்கட்கு முகம்கொடுக்க நேரும்.
நேபாளத்தின் வறுமையும் பொருளாதாரப் பின்னடைவும் அரசியல்குழப்பமும் நேபாளத்தில் அந்தியக் குறுக்கீட்டை மட்டுமன்றி நிரந்தரமான அந்நியஆக்கிரமிப்பையும் சாத்தியமாக்கும் வாய்ப்புகள் அதிகம் எனுபதற்குக் கடந்தபத்தாண்டுக்கால உலக நிகழ்வுகள் சான்று கூறும். அதைவிட நேபாளம் சீனாவுடனும்இந்தியாவுடனும் கொண்டுள்ள நீண்ட எல்லை அதை உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவுக்குமுக்கியமான ஒரு பிரதேசமாக ஆக்கியுள்ளது. //

மன்னர் பணித்த பின்பு ஏழு பாராளுமன்றக் கட்சிகளிடையிலும் பழைய பாராளுமன்ற விளையாட்டுக்கு மீளுகிற நோக்கம் வந்து விட்டது. குறிப்பாக நேபாள காங்கிரஸ், ஐக்கிய மாக்சிச லெனினிசக் கம்யூனிஸ்ற் கட்சி என்பன தமது பாராளுமன்ற அரசியல் ஆதிக்கம் பற்றிய சிந்தனையிலே இருந்தன. மாஓ வாதிகள் அதற்கு உடன் படவில்லை. ஒரு அரசியல் நிர்ணய சபையைச் சனநாயக முறைப்படி தெரிந்தெடுத்துப் புதிய அரசியல் யாப்பொன்றை வகுத்து மக்களின் சனநாயக, அரசியல், சமூக உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியம் என்று வற்புறுத்தினர். வேறு வழியின்றி ஏழு கட்சிக் கூட்டணி அதற்கு உடன் பட்டது. அதன் பின்பும் மாஓ வாதிகள் அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மை வலிமை பெற இயலாத விதமாகப் பல்வேறு சூழ்ச்சிகள் செய்யப்பட்டன.

தென் கிழக்கு நேபாளத்தின் மாதேஸி சமூகத்தினரிடையே இந்திய இந்துத்துவ விஷமிகள் கலவரங்களைத் தூண்டி விட்டனர். அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை இழுத்தடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான பல `கண்டங்கள் தாண்டி' மாஓ வாதிகள் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஆனால், இது ஒரு முக்கியமான திருப்பு முனையே ஒழிய இறுதி வெற்றி அல்ல.

பத்தாண்டுக்கால ஆயுதப் போராட்டத்தின் மூலம் பால் அடிப்படையிலும் இன,மத,மொழி அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் இருந்து வந்த ஒடுக்கு முறைகட்கெதிரான மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. பழைய நிலவுடைமையாளர்கள் தங்களது இழந்த ஆதிக்கத்திற்கு மீளப் பலவாறும் முயல்வார்கள். அது தொடர்ச்சியாக எதிர்க்கப்பட வேண்டும். அதை விட முக்கியமாக நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புகிற பேரில் அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்த முயலும். ஏற்கனவே நேபாளத்தில் நிலை கொண்டுள்ள என்.ஜீ.ஓ. முகவர்கள் மூலம் பல குழிபறிப்பு வேலைகள் நடைபெறும். இதனிடையே கம்யூனிஸ்ட்டுகள் தம்மைத் திரும்பத்திரும்பப் புடமிட வேண்டும்.
வேறுமனே பாராளுமன்ற அதிகாரத்தின் மீது நேபாள மாஓ வாதிகள் தங்கியிருப்பார்களேயானால் அவர்கள் இரத்தம் சிந்திப் பெற்ற வெற்றியைப் பாராளுமன்ற விவாதங்களின் சுடு காற்று அள்ளிச் சென்று விடும். மக்கள் அதிகாரத்தை மாஓ வாதிகள் எவ்வாறு வலுப்படுத்தப் போகிறார்கள் என்பது தான் நேபாளத்தின் சுபிட்சத்தை முடிவு செய்யும்.

எவ்வாறாயினும் தேசிய வாதிகளும், தலித்தியவாதிகளும் பெண்ணியவாதிகளும் பிரிந்து நின்று எல்லாரையும் பிளவு படுத்திச் சாதிக்க இயலாத விடயங்கள் பலவற்றை எல்லா முரண்பாடுகளையும் ஒரு முழுமையின் பகுதியாக வர்க்கப் போராட்டத்தினுடன் தொடர்பு படுத்திய ஒரு போராட்டப் பாதை பத்தே ஆண்டுகளிற் சாதித்துள்ளது. அதன் பாடங்கள் உன்னதமானவை.

-பேராசிரியர் கோகர்ணன்
நன்றி:தினக்குரல்

Thursday, May 1, 2008

""பார்ப்பன கிரிமினல் வேதாந்தியைத் தூக்கிலிடு! பார்ப்பன இந்துவெறி அமைப்புகளைத் தடைசெய்!'' தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் "


""பார்ப்பன கிரிமினல் வேதாந்தியைத் தூக்கிலிடு!
பார்ப்பன இந்துவெறி அமைப்புகளைத் தடைசெய்!''
தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்



இந்துவெறியர்களின் தேசிய நாயகன் ராமனை இழிவுபடுத்திப் பேசியதற்காக, தி.மு.க. தலைவர் கருணாநிதியைக் கொல்ல உத்தரவிட்ட தலைவெட்டி வேதாந்தியின் பார்ப்பனத் திமிரை எதிர்த்தும், ராமன் பாலத்தை வைத்து தமிழகத்தை குஜராத்தாக்கத் துடிக்கும் பார்ப்பன இந்துவெறி அமைப்புகளைத் தடைசெய்யக் கோரியும் தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த 27.9.07 அன்று தாங்கள் செயல்படும் பகுதிகளில் விரிவான பிரச்சாரத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. கிரிமினல் வேதாந்தியின் உருவப் பொம்மையைத் தூக்கிலிட்டும், அவனது உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்தும் மேற்கொள்ளப்பட்ட இப்பிரச்சார இயக்கம் உழைக்கும் மக்களிடம் உற்சாகமான வரவேற்பைப் பெற்று, பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான புரட்சிகர அரசியலை அவர்களின் நெஞ்சிலே பதிய வைத்தது.

ஓசூரில் 27.9.07 அன்று பு.ஜ.தொ.மு.வினர் ராம்நகர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது அங்கு அடியாட்களுடன் வந்த இந்துவெறியர்கள், தோழர்களுடன் தகராறு செய்ததோடு, கிரிமினல் வேதாந்தியைத் தூக்கிலிடு என்று எழுதப்பட்டிருந்த தட்டியைக் கிழித்து தீ வைத்து கொளுத்தினர். இதுபற்றி போலீசுக்குத் தகவல் தெரிவித்ததும், அங்கு வந்த போலீசு அதிகாரிகள் இந்துவெறி குண்டர்களைக் கைது செய்யாமல், சட்டம்ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி ஆர்ப்பாட்டத்துக்கு திடீர் தடை விதித்தனர். இதை ஏற்கமறுத்த தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதும், அனைவரையும் கைது செய்த போலீசு, பின்னர் இரவு விடுதலை செய்தது.

கடந்த ஆண்டில் பெரியார் சிலையை உடைத்து அவமதித்த இந்துவெறியர்களுக்கு எதிராக வருணாசிரமக் கிரிமினல் ராமன் படத்தை எரித்து ஓசூரில் பு.ஜ.தொ.மு.வினர் ஆர்ப்பாட்டம் செய்ததைக் கண்டு ஆத்திரமடைந்த இந்துவெறி குண்டர்கள், ஓசூர் பு.ஜ.தொ.மு. செயலர் தோழர் பரசுராமனின் மண்டையை உடைத்து மிருகத்தனமாகத் தாக்கினர். ஓசூர் போலீசு இக்கொலைவெறிக் கும்பலைக் கைது செய்யாமல், தோழர் மீதே பொய் வழக்குப் போட்டது. இப்போது மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ள இந்துவெறி கும்பல் மீது ஓசூர் போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சுதந்திரமாகத் திரிய விட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி ராமனின் யோக்கியதையை அம்பலப்படுத்தி பேசினாலும், அதிகார வர்க்கம் போலீசு நீதித்துறை அடங்கிய அரசு எந்திரம் காவிமயமாகியிருப்பதை அம்பலப்படுத்தியும், இந்துவெறி பாசிசத்துக்கு எதிராகவும் பு.ஜ.தொ.மு.வினர் தொடர்ந்து வீச்சாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பு.ஜ. செய்தியாளர்கள்

Wednesday, April 30, 2008

பார்ப்பன ஜெயாவின் 'நீதி வாதம்"!

பார்ப்பன ஜெயாவின் 'நீதி வாதம்"!


நீதிபதிகளை மிரட்டுவதையும், விலைக்கு வாங்குவதையும் வாடிக்கையாகக் கொண்ட ஜெயா, நீதிமன்ற அவமதிப்பு பற்றிப் பேசுவது வேடிக்கையானது

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி, தி.மு.க.வும், அதன் தோழமைக் கட்சிகளும் அக்.1 அன்று தமிழகம் தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின. இந்த உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்படாத, ""பந்த்'' ஆக நடந்து முடிந்தது.

பொழுது விடிந்து பொழுது போனால், ""தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும்'' என அறிக்கை விட்டு, வெறும் வாயை மென்று கொண்டிருந்த ஜெயாவிற்கு இந்த உண்ணாவிரதப் போராட்டம் அவலாக மாறியது. ""தி.மு.க. நடத்தத் திட்டமிட்டிருந்த பந்த் மட்டுமல்ல, இந்த உண்ணாவிரதப் போராட்டமும் நீதிமன்ற அவமதிப்புதான்'' என அறிக்கைவிட்டு, தி.மு.க. அரசிற்கு எதிராக உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்குக் கொம்பு சீவிவிட்டார், ஜெயா.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக மனு செய்யுமாறு அ.தி.மு.க.விற்கு ஆலோசனை வழங்கிய உச்சநீதி மன்ற நீதிபதிகள் அகர்வாலும், நவலேகரும் ""தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலுக்குக் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டியிருக்கும்'' என அ.தி.மு.க.வின் கொள்கைப்பரப்புச் செயலாளர்களாக மாறிக் கருத்துத் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக தி.மு.க. அரசைக் கலைக்கலாம் என்றால், நீதிபதிகளையும், நீதிமன்ற நடைமுறைகளையும், அதனின் தீர்ப்புகளையும் தனது வீட்டு நாயைவிடக் கேவலமாக நடத்தி வருவதற்காக ஜெயாவைச் சிரச் சேதமே செய்யலாம். ஜெயா, சமயத்திற்கு ஏற்றபடி, மாண்புமிகு நீதிபதிகளை மிரட்டவும் செய்திருக்கிறார்; அவர்களுக்கு பிஸ்கெட்டும் போட்டிருக்கிறார் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. இவையாவும், ராமன் பாலம் போல பதினெழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்த புனைவு அல்ல; கடந்த பதினைந்து ஆண்டுகளாக நம் கண்முன் நடந்துவரும் உண்மை.

ஜெயாவின் முதல் தவணை ஆட்சியின் பொழுது (199196) தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில், 100 கோடி ரூபாய்க்கு மேல் ஜெயா சசி கும்பல் இலஞ்சம் வாங்கியது, ஜெயா பதவியில் இருந்தபொழுதே அம்பலமாகியது. மறைந்த தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தி இந்த ஊழலை விசாரிக்க தொடுத்த வழக்கில், உயர்நீதி மன்ற நீதிபதி இலட்சுமணன், நிலக்கரியை இறக்குமதி செய்யக்கூடாது என இடைக்காலத் தடை விதித்தார்.

ஜெயா, இந்த இடைக்காலத் தடையை சட்டத்தின் பொந்துகளில் புகுந்து உடனடியாக உடைத்துவிட்டாலும், தனக்கு எதிரான இந்த ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு விடும் என பீதியடைந்து போயிருந்தார்; நீதிபதி இலட்சுமணன் வேறு சில வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியிருந்ததால், அவரை மிரட்டிப் பணிய வைப்பது அல்லது வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவது அதன் மூலம் வழக்கை இழுத்தடிப்பது என்ற சூழ்ச்சியை மேற்கொண்டது, ஜெயாசசி கும்பல்.

இச்சதியின்படி, நீதிபதி இலட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா கள்ளச்சாராயம் வியாபாரத்தில் ஈடுபட்டதாக பொய் வழக்கு சோடிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது, பொய் வழக்கு என்பது விரைவிலேயே அம்பலமாகி, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டாலும், ஜெயா கும்பலின் நோக்கம் நிறைவேறியது. ""நீதிமன்றத்துக்கு வெளியே நடக்கும் சில சம்பவங்கள் தன்னைப் பாதிப்பதாக''க் கூறி, நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி இலட்சுமணன் விலகிக் கொண்டார்.

1996இல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய தி.மு.க.; ஜெயா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தது. இச்சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதை எதிர்த்து ஜெயா தொடர்ந்த வழக்கில், அப்பொழுது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த லிபரான், ""சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது சட்டப்படி செல்லும்'' எனத் தீர்ப்பளித்தார். இதனால் ஆத்திரமடைந்திருந்த ஜெயா, தனது ஆதரவோடு நடந்துவந்த பா.ஜ.க. கூட்டணி அரசில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, லிபரானை சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்குத் தூக்கியடித்து பழி தீர்த்துக் கொண்டார். ஜெயாவின் பொருளாதாரக் குற்றங்களை விசாரித்து வந்த மற்றொரு நீதிபதி, ஜெயாவின் நிர்பந்தங்களுக்குப் பணிய மறுத்ததால், அசாமுக்கு மாற்றப்பட்டார்.

சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தது செல்லும் என்ற உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் ஜெயா போட்ட வழக்கில் தீர்ப்புச் சொல்லப்படும் நேரத்தில், ஜெயாவின் ஆதரவோடு நடந்துவந்த ""உத்தமர்'' வாஜ்பாயின் ஆட்சி, ""சிறப்பு நீதிமன்றங்களைக் கலைத்துவிட்டு, ஜெயாவின் வழக்குகளை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றும்'' உத்திரவைப் போட்டு, ""நீதி''யைப் பலியிட்டு, ஜெயாவைக் காப்பாற்றியது. ஜெயாவின் ஊழல் வழக்குகளை விசாரணை மட்டத்திலேயே நீர்த்துப் போகச் செய்வதற்காக, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில், அ.தி.மு.க.வின் தம்பிதுரை சட்ட மந்திரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

கொடைக்கானல் ""ப்ளஸண்ட் ஸ்டே'' விடுதி ஊழல் வழக்கில், ஜெயாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்காக கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி ஆகிய மூவரும் அ.தி.மு.க. காலிகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். 2000ஆம் ஆண்டு நடந்த இந்தக் கொலை குற்றத்திற்கான தீர்ப்பு, ஏழு ஆண்டுகள் கழித்துதான் கிடைத்தது. இந்தத் தாமதத்திற்குக் காரணமே, சட்டத்தையும், நீதியையும் மயிரளவிற்குக் கூட மதிக்காத ஜெயாவின் பாசிசத் திமிர்தான்.

2001இல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பின்பு இந்த வழக்கின் போக்கே தலைகீழாக மாறியது. அ.தி.மு.க. குண்டர்களின் மிரட்டலுக்குப் பயந்து, 22 அரசு சாட்சிகளும், குற்றவாளிகளுக்குச் சாதகமாகப் பல்டியடித்தனர். அ.தி.மு.க. ஆட்சியில் இந்த வழக்கை நடத்த நியமிக்கப்பட்ட கூடுதல் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரும், சிறப்பு அரசு வழக்குரைஞரும் சாட்சிகள் மிரட்டப்பட்டதற்குத் துணை நின்றனர்.

இதனால் கொல்லப்பட்ட கோகிலவாணியின் தந்தை வீராச்சாமி, இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2001 இறுதியில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கின் விசாரணை, அ.தி.மு.க. அரசின் இழுத்தடிப்புகளால் ஒன்றரை ஆண்டுகள் நடந்தது. ""இவ்வழக்கை சேலத்திற்கு மாற்றியும், சீனிவாசன் என்ற குற்றவியல் வழக்குரைஞரை அரசு வழக்குரைஞராக நியமித்தும்'' சென்னை உயர்நீதி மன்றம் 22.08.03 அன்று தீர்ப்பளித்தது.

எனினும், வழக்குரைஞர் சீனிவாசனுக்கு பணி நியமன உத்தரவு வழங்காமல் இழுத்தடித்ததன் மூலம், சேலம் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற முடியாமல் முடக்கி வைத்தது, அ.தி.மு.க. அரசு. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியாகி 14 மாதங்கள் ஆன பிறகும் கூட வழக்குரைஞர் சீனிவாசனுக்குப் பணி நியமன உத்தரவு வழங்கப்படாததை எதிர்த்து, கோகிலவாணியின் தந்தை மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு விசாரணையின் பொழுது, மூன்று மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட மூல வழக்கைக் குழி தோண்டிப் புதைத்துவிடும் நோக்கத்தோடு, ""மூல வழக்கின் கேஸ் கட்டு காணாமல் போய்விட்டது; அதனை டிச. 2003இலிருந்து தேடிக் கொண்டிருக்கிறோம். புதிதாகக் கேஸ் கட்டுத் தயாரிக்கக் கால அவகாசம் வேண்டும்'' எனக் குண்டைத் தூக்கிப் போட்டது தமிழக அரசு.

இப்படி அ.தி.மு.க.வால் அரசு அதிகாரத்தோடு உருவாக்கப்பட்ட எல்லாத் தடைகளையும் மீறி, அக்கட்சியைச் சேர்ந்த 28 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகும் கூட, ஜெயா ""நீதி''க்குத் தலை வணங்கவில்லை. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் குடும்பங்களுக்குப் பல இலட்ச ரூபாய் கருணைத் தொகை ஏற்பாடு செய்து கொடுத்ததன் மூலம், நீதிமன்றத் தீர்ப்பை எள்ளி நகையாடி விட்டார்.

தமிழக முதல்வர் என்ற பதவியைப் பயன்படுத்தித் தான் அடித்த கொள்ளையைப் பகிரங்கமாகக் காட்டிக் கொள்ளும்விதமாக, தனது வளர்ப்புப் ""பிராணி'' சுதாகரனின் திருமணத்தை 1995ஆம் ஆண்டின் இறுதியில் நடத்தினார் ஜெயா. அந்தத் திருமணம் தொடர்பாக நடந்து வந்த அதிகார முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தும்படி கோரி, பல வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கு விசாரணையின்பொழுது, ""வழக்குத் தொடுத்தவர்களுக்கு மட்டுமல்ல, தனக்கே என்ன பாதுகாப்பு?'' என நீதிபதி புலம்பியதில் இருந்தே, நீதிபதிகள் நீதிமன்றங்கள் மீதான ஜெயாவின் "பாசத்தை'ப் புரிந்து கொள்ள முடியும். ""அதிகார முறைகேடுகள் நடந்திருந்தாலும், அவற்றுக்கு முதல்வர் ஜெயா பொறுப்பல்ல'' எனத் தீர்ப்பெழுதி, தனது தோலைப் பாதுகாத்துக் கொண்டார், நீதிபதி.

டான்சி, நில பேர ஊழல் வழக்கு விசாரணையில் ஜெயாவுக்கு சாதகமாக உயர்உச்சநீதி மன்றங்கள் நடந்து கொண்டதை வைத்துத் தனி ஊழல் புராணமே எழுதலாம். டான்சி நில பேர ஊழல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தபொழுது, அவ்வழக்கையே ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார், ஜெயா.

""சந்தை விலையைக் காட்டிலும் நிலத்தின் விலை திட்டமிட்டே குறைக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டிருந்த போதிலும்; டான்சி நிலத்தை விற்பதற்காக நடத்தப்பட்ட பொது ஏலம் பித்தலாட்டமானது எனத் தெளிவாக்கப்பட்டிருந்த போதிலும்; அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் அவர்கள் பதவியில் இருக்கும் காலத்தில் அரசு சொத்துக்களை வாங்கக் கூடாது என்ற விதிமுறை இருந்த போதிலும், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி தங்கராசு, ஜெயாவைக் குற்றமற்றவர் எனக் கூறி விடுதலை செய்தார்.

""டான்சி நிலத்தை வாங்கியதில் ஜெயா எவ்வித மோசடியிலும் ஈடுபடவில்லை; மாறாக, வழக்குதான் மோசடியானது'' என்பதுதான் நீதிபதி தங்கராசு அளித்த தீர்ப்பின் சாரம். நீதிபதி தங்கராசு, அ.தி.மு.க.வின் மந்திரி ஒருவரின் சிபாரிசின் பின்னணியில்தான் நீதிபதி பதவியைப் பெற்றார் என்பதும்; டான்சி நிலபேர வழக்கில் தீர்ப்புக் கொடுக்கும் முன் உல்லாசச் சுற்றுலாவாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதும் பின்னர் அம்பலமாகியது.

நீதிபதி தங்கராசின் தீர்ப்பை எதிர்த்த வழக்கு உச்சநீதி மன்றத்திற்கு வந்தபொழுது ""தனி நீதிமன்றத்தில் 80 சதவீத அளவு விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில், அதில் உயர்நீதி மன்றம் தலையிட்டிருக்க வேண்டாம் என்று நாங்கள் கருதுகிறோம். இது எங்கள் தீர்ப்பு அல்ல; கருத்துதான். உங்கள் கட்சிக்காரர் (ஜெயா) மீண்டும் சிறப்பு நீதிமன்ற விசாரணையைச் சந்திக்க விரும்புகிறாரா?'' எனக் குற்றவாளியிடமே தீர்ப்பைச் சொல்லும் உரிமையை வழங்கினார்கள் நீதிபதிகள்.

டான்சி நில பேர ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப் பெற்ற ஜெயா, அத்தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தினகர், ""டான்சி நிலம், அரசு சொத்தே அல்ல; அரசு ஊழியர், அரசு சொத்தை வாங்கக் கூடாது என்பது நன்னடத்தைக் குறித்த விதிமுறை தானே தவிர, சட்டமல்ல'' எனச் சட்டத்தையே வளைத்து, புதிய விளக்கம் கொடுத்து, ஜெயாவை வழக்கில் இருந்தும், தண்டனையில் இருந்தும் விடுதலை செய்தார். நீதிபதி தங்கராசு தீர்ப்புக்கு முன் சிங்கப்பூர் சென்று வந்தார்; நீதிபதி தினகர் தீர்ப்புக்குப் பின் ஒரு மாத ஓய்வில் போனார்.

நீதிபதி தினகரின் தீர்ப்பை எதிர்த்த வழக்கில், உச்சநீதி மன்றத்தில் நடந்த விசாரணையும், அதனின் தீர்ப்பும் மிகவும் விநோதமாக அமைந்தன. சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த ""பந்த்''ஐத் தடை செய்து, ஞாயிற்றுகிழமை கூடி தீர்ப்பு அளித்த உச்சநீதி மன்றம், டான்சி நில பேர வழக்கில் விசாரணை முடிந்த பிறகும், தீர்ப்பு வழங்காமல் 14 மாதங்கள் இழுத்தடித்தது. அதன் பின் வந்த தீர்ப்போ, ஜெயாவின் விடுதலையை உறுதி செய்ததோடு அவரின் மனசாட்சியிடம் மண்டியிட்டது.

""முதல் குற்றவாளியான ஜெயலலிதா குற்றமிழைத்திருக்கிறாரா இல்லையா என்கிற உண்மைக்கு அப்பாற்பட்டு, அவர் தமது மனசாட்சிக்குப் பதில் அளிக்கும் வகையில் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும். எவ்வித நிபந்தனையும் இன்றி டான்சி நிலத்தைத் திருப்பிக் கொடுப்பதே பரிகாரமாக அமையும்'' — இப்படிப்பட்ட தீர்ப்பை எழுதிய வெங்கடராம ரெட்டி, ராஜேந்திரபாபு என்ற இரு நீதிபதிகளுக்கு ஜெயாவிடமிருந்து என்ன பரிகாரம் கிடைத்ததோ, அது அந்த ""ராமனுக்கு''த்தான் தெரியும்!

""டான்சி வழக்கு ஜெயாவைப் பழி வாங்குவதற்காகப் போடப்பட்ட வழக்கு அல்ல;'' ""டான்சி வழக்கில் குற்றம் நடந்திருப்பதற்கான பூர்வாங்க ஆதாரம் (கணூடிட்ச் ஊச்ஞிடிஞு) உள்ளது'' என உயர்உச்சநீதி மன்றங்களே தீர்ப்பளித்துள்ளன. அப்படியிருந்தும், அதே உயர்உச்சநீதி மன்றங்கள், டான்சி நில பேர ஊழல் வழக்கில் இருந்து ஜெயாவை நிரபராதியாக விடுதலை செய்திருப்பதை ""நீதி தேவதையின் மயக்கம்'' எனச் சொல்லலாமா? இல்லை, பார்ப்பன பாசம் எனக் குற்றஞ் சுமத்தலாமா?

ஜெயாசசிதினகரன் கும்பல் மீது வருமானத்தை மீறி சொத்துக் குவித்துள்ள வழக்கும்; அக்கும்பல் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் இலண்டன் நகரில் விடுதி வாங்கிய வழக்கும், பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வழக்குகள் தமிழ்நாட்டில் நடந்தால், ஜெயா கும்பல் வழக்கு விசாரணையைச் சீர்குலைத்து விடும் என்ற காரணத்தினால்தான், அண்டை மாநிலத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட, ஜெயா கும்பல் சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து கொண்டு, இவ்வழக்ககளை, விசாரணைக் கட்டத்தைத் தாண்டவிடாமல் தில்லுமுல்லுகளில் ஈடுபட்டு வருகின்றது. நீதிமன்றமும், இக்கும்பல் இழுத்த இழுப்புக்கெல்லாம் தலையாட்டிக் கொண்டே செல்கிறது.

ஜெயாவின் அன்புச் சகோதரி சசிகலா மீது 1996ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட அந்நியச் செலாவணி மோசடி வழக்கிலும் கூட, கடந்த 11 ஆண்டுகளாக ""விசாரணை''தான் நடந்து வருகிறது. ""சசிகலா, திட்டமிட்டே வழக்கு விசாரணையை தாமதப்படுத்தி வருவதாக'' மைய அரசு உயர் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட பிறகும், சசிகலாவைக் கண்டிக்கக் கூட நீதிமன்றம் தயாராக இல்லை. மாறாக, சென்னை உயர்நீதி மன்றம், ""இந்த தாமதத்தைக் காரணமாகக் காட்டி, அதன் அடிப்படையில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்'' என சசிகலா போட்டுள்ள மனுவை விசாரித்து வருகிறது.

மேலும்,

ஜெயாசசிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 2 லட்சம் டாலர் வழக்கு;

ஜெயா வருமானவரி தாக்கல் செய்யத் தவறிய வழக்கு;

ஜெ.ஜெ. டி.வி. அந்நியச் செலாவணி மோசடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளும், கடந்த 10 ஆண்டுகளாக ""விசாரணை'' என்ற ஊறுகாய் பானைக்குள்ளே சட்டப்பூர்வமாகவே முடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஜெயாவிற்கும், நீதித்துறைக்கும் இடையேயான உறவை விளங்கிக் கொள்ள இந்த நீதிமன்ற இழுத்தடிப்புகளும், அதிரடி தீர்ப்புகளும் வாசகர்களுக்கு நிச்சயம் உதவும்.

அக்.1 அன்று தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ""பந்த்'' நடத்தியதாகக் குற்றஞ்சுமத்தி அ.தி.மு.க.வால் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும், நீதிபதி அகர்வால்தான் விசாரிக்க வேண்டும் என ஜெயா ஒற்றைக் காலில் நின்றுள்ளார். ஜெயாவின் இந்தப் பிடிவாதத்துக்குப் பின்னுள்ள காரணம், ""தமிழக அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தடை செய்து, ஜெயா கொண்டு வந்த டெஸ்மா சட்டத்தை ஆதரித்தும்; ஜெயா மீது தொடரப்பட்ட வருமான வரி வழக்கில் அவருக்குச் சாதகமாகவும் தீர்ப்பளித்தவர் நீதிபதி அகர்வால் (ஆதாரம்: நக்கீரன்: அக்.6, பக்: 56) என்பதுதான்.

ஜெயாவைப் போலவே நீதிபதி அகர்வால் சிந்திக்கிறார் என நீங்கள் கருதினால், உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயக் கூடும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ""பந்த்''தைத் தடை செய்து நீதிபதிகள் அகர்வாலும், நவலேõகரும் தீர்ப்பு அளித்தவுடனேயே, ""இனி எந்த மாநில அரசும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்க முடியாது. இந்தத் தீர்ப்பு மூலம் அ.தி.மு.க. புதிய வரலாறு படைத்துள்ளது'' எனப் பெருமையோடு குறிப்பிட்டுள்ளார், ஜெயா. அவர் ஊழல்கிரிமினல் மேர்வழி மட்டுமல்ல; ஜனநாயக விரோத பாசிசக் கும்பலைச் சேர்ந்தவர் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரமா வேண்டும்?

· ரஹீம்


""உச்சநீதி மன்றமா,

உச்சிக் குடுமி மன்றமா?''



மனித உரிமை பாதுகாப்பு

மையத்தின் (HRPC) ஆர்ப்பாட்டங்கள்

தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அறிவித்திருந்த பொது வேலை நிறுத்தத்திற்கு உச்சநீதி மன்றம் விதித்த தடையானது, அதன் அதிகார வரம்பை மீறிய செயலாகும். மேலும், "இராமன் பாலம்' என்ற கட்டுக் கதைக்கு ஆதாரமாக சுப்பிரமணியசாமி காட்டிய வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக வைத்து சேது சமுத்திர திட்டத்தை முடக்கிய உச்சநீதி மன்றத்தின் உத்தரவானது, அதன் பார்ப்பன மதவெறி பாசிசத் திமிரையே காட்டுகிறது. பா.ஜ.க.அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இராமன் பாலம் பிரச்சினையைக் கிளறி, மதவெறியைத் தூண்டி அரசியல் ஆதாயமடையத் துடிக்கும் முயற்சிக்கு உச்சநீதி மன்ற பார்ப்பன நீதிபதிகள் வெளிப்படையாகவே ஆதரவாக நிற்கின்றனர்.

இந்த உண்மைகளை விளக்கியும், மக்களின் பெயரைச் சொல்லி போராட்ட உரிமையைத் தடை செய்யும் அதிகாரமும் அருகதையும் உச்சநீதி மன்றத்துக்கு இல்லை என்பதை உணர்த்தியும், உச்சநீதி மன்றத்தின் பார்ப்பனபாசிசத் திமிரை எதிர்த்தும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளை உச்சநீதி மன்றத்தின் பார்ப்பனபாசிச உத்தரவுகளை அம்பலப்படுத்தி விரிவாக சுவரொட்டி பிரச்சாரத்தை மேற்கொண்டு, அதன் தொடர்ச்சியாக 1.10.07 அன்று காலை 10.30 மணியளவில் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழக சட்டத்துறை மாநில அமைப்பாளரான வழக்குரைஞர் கி.மகேந்திரன், தமிழ்நாடு வழக்கறிஞர் தமிழ்ச் சங்க செயலாளரான மனோகரன், தி.மு.க. வழக்குரைஞர் மோகன்தாஸ், சி.பி.எம். வழக்குரைஞர் பாஸ்கரன் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் கண்டன உரையாற்றினர்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் கடலூர் மாவட்டக் கிளை சார்பில், உச்சநீதி மன்றத்தின் பார்ப்பனபாசிச உத்தரவுகளை அம்பலப்படுத்தி துண்டுப் பிரசுரம் வெளியிட்டு பிரச்சாரம் செய்த இவ்வமைப்பினர், அதன் தொடர்ச்சியாக 6.10.07 அன்று மாலை விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பந்த்க்கு எதிரான உச்சநீதி மன்றத் தடையும் அதற்கான நீதிபதிகளின் கருத்தும் நீதித்துறை சர்வாதிகாரமே என்று முழங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்குரைஞர் சி.ராஜு, வழக்குரைஞர்கள் வே.அம்பேத்கர், பட்டி சு.முருகன், திருமார்பன் மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் திரு.செழியன், சிவனடியார் திரு.ஆறுமுகசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஜனநாயக உரிமைகளையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்கவும், பார்ப்பனபாசிசத்தை வீழ்த்தவும் அறைகூவிய இந்த ஆர்ப்பாட்டங்கள், உழைக்கும் மக்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தின.

பு.ஜ. செய்தியாளர்கள்

Tuesday, April 29, 2008

முக்கிய அறிவித்தல்

முக்கிய அறிவித்தல்


தோழர்களே, நண்பர்களே, வாசகர்களே.. சமூக அக்கறையுள்ள அனைவருக்கும் எமது வணக்கங்கள்.

www.tamilcircle.net என்ற எமது இணையத்தளம், மே மாதம் முதலாம் திகதி முதல், எந்த இடைத் தடங்கல் எதுவுமின்றி ஒரு வடிவ மாற்றத்தைப் பெறுகின்றது. அத்துடன் இது இரண்டு பெயர்களில் இயங்கவுள்ளது

1. http://www.tamilcircle.net/


2. http://www.tamilmanram.net/

புதிய வடிமைப்பில் இந்த தளம் இயங்கும் சம காலத்தில், தளத்தின் பழைய வடிவம் தற்காலிகமாக புதிய தளத்தினூடான இணைப்பின் வழி அப்படியே இயங்கவுள்ளது. ஆயிரக்கணக்கான கட்டுரைகளை இடமாற்ற எடுக்கும் எமக்குத் தேவையான கால இடைவெளி வரை, அதுவும் இயங்கும்.

முக்கியமாக கட்டுரைகளுக்கு இணைப்புகளைக் கொடுத்தவர்கள், இணைய இணைப்புக் கொடுத்தவர்கள், அவ்விணைப்புகளில் மாற்றங்கள் செய்ய வேண்டி எற்படலாம். இதை தொடர்ச்சியாக கவனத்தில் கொள்ளவும். பழைய தளம் சிறிது காலத்தில் முற்றாக செயலிழக்கும்.

இதன் மூலம் உங்களுக்கு ஏற்படுத்தும் சிரமத்தைப் பொருட்படுத்தாது ஓத்துழைப்பையும், வேண்டும் அதேவேளை உதவி தேவைபட்டால் நாம் உதவவும் தயாராகவுள்ளோம்.

புதிய தளம் பல வசதிகளைக் கொண்டது. இது தமிழில் தேடுதல் வசதியைக் கொண்டது. இலகுபடுத்தப்பட்டுள்ளது. கருத்துகளைக் கூறவும், ஈமெயில் அனுப்பவும், பி.டி.எவ் ஆக்கும் வசதியும் (இது தற்காலிகமாக தமிழ் எழுத்துருவில் செயல்படுவதில் ) உள்ளது. கட்டுரைகளை வகைப்படுத்தலும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. புதிய பல விடையங்களை இது உள்ளடக்குகின்றது.

இது தவிர புதிய பலரின் எழுத்துகளை அன்றாடம் சேர்க்கவுள்ளோம். எதிர்காலத்தில் அன்றாட செய்தி கொண்டுவரும் வகையில், நாம் சிந்திக்கின்றோம்.

இதில் முக்கியமாக ஆவணப்பகுதி ஒன்றை தொடங்கியுள்ளோம். இலங்கைப் போராட்டம் தொடர்பான முழுத் தகவலையும் ஆவணப்படுத்தும் ஆரம்பமாக இது இருக்கும். எம்மிடம் உள்ள ஆயிரக்கணக்கான பக்கங்களை இதில் நாம் இணைக்கின்றோம். மிகுதியை நீங்கள் தான், தந்து அதனை பூரணப்படுத்த உதவ வேண்டுகின்றோம். உங்கள் பங்களிப்பு இதில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது கருத்து முரண்பாட்டுக்கு அப்பாற்பட்டது. அவை தொலைந்து போன, தொலைகின்ற ஆவணங்கள். இதை இலகுவாக நீங்கள் பார்க்கும் வகையில், பிரதி எடுக்கும் வகையில், உங்களிடமும், அவை ஒரு ஆவணமாக பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்யூட்டர் உள்ள ஒவ்வொருவரும் ஆவண காப்பகத்தை தனக்குள் கொண்டு இயங்கும் உணர்வை இது உருவாக்கும். இதற்கு உங்கள் ஒத்துழைப்பை பல வழிகளில் எதிர்பார்க்கின்றோம்.

அறிவியல் பகுதி ஒன்றை தொடங்கியுள்ளோம். இது விஞ்ஞானம், தொழில் நுட்பம், மருத்துவம், கம்யூட்டர், சமையல் கலை, தையற்கலை என்று, பல விடையங்களை உள்ளடக்கவுள்ளது. பலரின் கட்டுரைகளை, இதில் இலகுவாக பார்க்கும் வகையில் இதைத் தரவுள்ளோம்.

ஆவணப்பகுதி, அறிவியல் பகுதி இணையவேற்றம் முழுமையான பின்பு, அது தனக்குள் தகவல்களை பாரியளவில் கொள்ளத் தொடங்கும். பலரின் பல அரிய கட்டுரைகள், தகவல்கள் உங்களுக்கு இலகுவாக கிடைக்கும். இதற்கு உங்கள் ஒத்துழைப்பை நாம் பல வழிகளிலும், உங்களிடம் கோருகின்றோம்.

ஆனால் இவை முன்பக்கத்துக்கு கட்டுரை நிரலாக வராது. முன்பக்கத்தில் உள்ள இணைப்பின் ஊடாக தேடிச் சென்று, இப்குதியை இலகுவாக பார்க்க முடியும்.

இந்தத் தளத்தில் உள்ள குறைபாடுகள், சேர்ப்புக்களை, தேவைகளைச் சுட்டிக்காட்டும் படியும், சமூக பொறுப்புள்ள உங்கள் ஒத்துழைப்பையும் நாம் கோருகின்றோம்.

உங்கள் பங்களிப்பு எதுவாக இருந்தாலும், அதை நாம் பொறுப்புணர்வுடன் அணுகத் தயாராக உள்ளோம்.


தமிழரங்கம்
29.04.2007

Monday, April 28, 2008

பீகார்: பயங்கரவாத போலீசின் மிருகவெறி! கொலைவெறி!


பீகார்:
பயங்கரவாத போலீசின் மிருகவெறி! கொலைவெறி
!



இறந்து போன மிருகத்தைக் கூட கைகால்களைக் கட்டி தெருவிலே இழுத்துச் செல்ல எந்தவொரு மனிதனுக்கும் மனம் ஒப்பாது. ஆனால் மிருகத்தை அல்ல, மனிதனை; நம்மைப் போல நினைவும் கனவும் கொண்ட உயிருள்ள மனிதனை இப்படி கைகால்களை மோட்டார் சைக்கிளில் கட்டி தரதரவென இழுத்துச் சென்றுள்ளது பீகார் போலீசு.

1980இல் பாகல்பூரில் 31 விசாரணைக் கைதிகளின் கண்களில் திராவகத்தை ஊற்றி அவர்களைக் குருடர்களாக்கிய பீகார் போலீசின் கொடுஞ்செயலை நாட்டு மக்கள் மறந்திருக்க முடியாது. அதே பாகல்பூரில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று 20 வயதான சலீம் இலியாஸ் என்ற இளைஞரை, ஒரு பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டி ஒரு கும்பல் மிருகத்தனமாகத் தாக்கியது. அங்கு வந்த நாத்நகர் போலீசு நிலையத்தைச் சேர்ந்த இரண்டு போலீசார், அழுக்கடைந்த ஆடைகளுடன் பலநாள் பட்டினி கிடந்த தோற்றத்தில் இருந்த அந்த இளைஞரை, கொடூரமாக பொதுமக்கள் முன்னிலையில் தாக்கியதோடு, கைகால்களைக் கட்டி தமது மோட்டார் சைக்கிளில் பிணைத்து கதறக் கதற தெருவிலே இழுத்துச் சென்றனர். சதைகள் கிழிந்து தெருவெங்கும் இரத்தம் வழிந்தோடி நினைவிழந்து கிடந்த அவரை போலீசு நிலையம்வரை இழுத்துச் சென்று, பின்னர் பொதுமக்கள் திரண்டு கண்டனம் தெரிவித்ததும் மருத்துவமனையில் சேர்த்தனர். முதுகெலும்பு பல இடங்களில் முறிந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு குற்றுயிராகக் கிடக்கும் அந்த இளைஞர், இனி உடல்நிலை தேறி நடமாடுவாரா என்றே தெரியவில்லை.

விசாரணை இல்லை; குற்றம் நிரூபிக்கப்படவில்லை. வழக்கும் வாய்தாவுமில்லை. போலீசாரே நீதிபதிகளாக மாறி தீர்ப்பளித்து தண்டனையும் விதிக்கின்றனர். இக்கொடுஞ்செயலை பொதுமக்கள் பார்ப்பதையோ, தொலைக்காட்சிகள் படம் பிடிப்பதையோ பற்றி அப்போலீசு மிருகங்களுக்குக் கவலையுமில்லை. கொட்டடிகளில் தங்களது குரூரமானவக்கிரமான சித்திரவதைகளை ஏவி வெறியாட்டம் போட்டு வரும் போலீசு மிருகங்களின் அதிகாரத் திமிர் இப்போது நட்டநடு வீதிகளிலும் வழிந்தோடத் தொடங்கி விட்டது.

இந்தக் கொடுஞ்செயலின் அதிர்ச்சியிலிருந்து நாட்டு மக்கள் மீள்வதற்குள், அதே பீகாரின் வைஷாலி மாவட்டத்திலுள்ள தேல்புர்வாரா கிராமத்தில் கடந்த செப்டம்பர் 13ஆம் நாளன்று பின்னிரவில் 10 பேர் திருடர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு அடித்தே கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ""நாட்'' எனும் தாழ்த்தப்பட்ட நாடோடிச் சாதியினர். இவர்கள் அருகிலுள்ள கிராமத்தில் நடந்த விருந்துக்குச் சென்றுவிட்டு இரவில் கூட்டமாகத் திரும்பிக் கொண்டிருந்தனர். தேல்புர்வாரா கிராமத்தில் அடிக்கடி திருட்டு நடந்து வந்ததால், சந்தேகத்தின் பேரில் இவர்களைப் பிடித்த அக்கிராம மக்கள், காட்டுமிராண்டித்தனமாக அடித்தே கொன்றுள்ளனர்; இல்லையில்லை; கிராம மக்கள் பிடித்து வைத்திருந்த இவர்களை அருகிலுள்ள ராஜ்பகார் போலீசு நிலையத்தைச் சேர்ந்த போலீசார்தான் அடித்தே கொன்றனர் என்றும் செய்திகள் மெதுவாகக் கசிந்துள்ளன.

இப்படுகொலைகளுக்குப் பின்னர், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கவோ, பிணங்களை முறைப்படி அடக்கம் செய்யவோ கூட முன்வராமல், ஹாஜிபூர் அருகே கங்கையும் கந்தோக் ஆறும் சங்கமிக்கும் கொனாரா சதுக்கம் அருகே, போலீசு மிருகங்கள் அப்பிணங்களை ஆற்றிலே வீசியெறிந்துள்ளன. அவற்றிலே ஏழு பிணங்கள் வீங்கி வெடித்து அலங்கோலமாக ஆற்றிலே மிதந்து கரை ஒதுங்கின; அவற்றை நாய்களும் கழுகுகளும் குதறித் தின்றன.

மாடோ, நாயோ செத்தால் கூட அவற்றைக் குழிதோண்டிப் புதைக்கும்போது, இறந்துபோன மனிதர்களின் பிணங்களை நாயைவிட கேவலமாக ஆற்றிலே வீசியெறிந்துள்ளதே பீகார் போலீசு, அது நாகரீக மனித இனத்தைச் சேர்ந்ததா? அல்லது வெறிபிடித்த மிருக இனத்தைச் சேர்ந்ததா?

""அவர்கள் நாயைவிடக் கேவலமான ""நாட்'' சாதியினர்; பரம்பரைத் திருடர்கள்; அவர்களிடம் இரக்கம் காட்டினால் குற்றங்கள் பெருகிவிடும்'' என்று நியாயவாதம் பேசுகிறது பீகார் போலீசு. வெள்ளைக்காரன் ஆட்சியில் குற்றப் பரம்பரையினர் எனப் பட்டியலிடப்பட்டு வதைக்கப்பட்ட எண்ணற்ற தாழ்த்தப்பட்டபழங்குடியினரில் ஒரு பிரிவினர்தான் ""நாட்'' சாதியினர். திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அதனால் சமூகத்தில் வெறுத்தொதுக்கப்பட்ட, இவர்கள், காடுகளில் தேன் சேகரித்தும் பறவைகளைப் பிடித்தும் தமது பிழைப்பை நடத்துகின்றனர். காலனியாதிக்கவாதிகளை எதிர்த்துப் போரிட்ட பழங்குடியினரைக் ""குற்றப் பரம்பரை'' என்று பட்டியலிட்ட பிரிட்டிஷ் அரசும், அதன் பின்னர் அப்பெயரை மட்டும் ""சீர்மரபினர்'' என மாற்றிய இன்றைய அரசும் இம்மக்களை இன்னமும் பரம்பரைக் குற்றவாளிகளாகவே பார்க்கிறது. செய்யாத குற்றத்துக்கும் விசாரணை ஏதுமின்றி தண்டனை கொடுக்கிறது. எங்காவது திருட்டு நடந்தால் இம்மக்களையே குற்றவாளிகளாக அறிவித்து வதைக்கிறது. அவர்களை மிருகத்தனமாக அடித்தே கொன்று விட்டு, பிணங்களை ஆற்றிலே வீசியெறிந்து இழிவுபடுத்துகிறது.

தேல்புர்வாராவில் நடந்துள்ள கொலைகள், உணர்ச்சிவசப்பட்டு ஏதோ விதிவிலக்காக நடந்துவிட்ட சம்பவம் அல்ல. அதே பீகாரின் நவடாவில், கடந்த அக்டோபரில் திருடியதாகச் சந்தேகிக்கப்பட்ட ஒருவர் கிராம மக்களால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார்; சைக்கிள் திருடியதாகக் குற்றம் சாட்டி மூன்று இளைஞர்களைப் பிடித்த கிராம மக்கள், அவர்களில் ஒருவரின் கண்களைத் தோண்டியெடுத்துள்ளனர். இத்தகைய கும்பல் பயங்கரவாதமும் போலீசின் வெறியாட்டங்களும் அங்கே கேள்விமுறையின்றித் தொடர்கின்றன.

ஜனநாயகம் மனித உரிமை பற்றிய வாசனையைக் கூட அறிய விடாமல் இன்னமும் பழமைவாதத்திலேயே ஒடுக்கி வைக்கப்பட்டுள்ள மக்கள், குற்றப் பரம்பரையினராக இழிவுபடுத்தப்பட்டுள்ள பழங்குடியின உழைப்பாளிகளிடம் கும்பல் பயங்கரவாதத்தை ஏவும் சாதியக் கட்டுமானப் பிடியிலுள்ள கிராமங்கள், அக்கிராமங்களை நடுநடுங்க வைக்கும் நிலப்பிரபுக்களின் சாதிவெறி குண்டர் படைகள், ஒட்டு மொத்த சமூகத்தையே அச்சுறுத்தும் அரசு பயங்கரவாத போலீசு மிருகங்கள் என பீகார் இன்னமும் காட்டுமிராண்டி நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டுள்ளதால், போலீசின் பயங்ரவாதமும் கொட்டமும் இன்னமும் அங்கே கேள்விமுறையின்றித் தொடர்கிறது. நிலப்பிரபுக்கள், தரகுப் பெருமுதலாளிகள், ஓட்டுப் பொறுக்கிகள், அதிகார வர்க்கம், நீதித்துறை, போலீசு, இராணுவம் என "குற்றப் பரம்பரை'யினரின் ஆதிக்கமும் ஒடுக்குமுறையும் அங்கு நீண்ட நெடுங்காலமாகத் தொடர்கிறது. இந்த அநீதியும் பயங்கரமும் தொடர வேண்டுமென்பதற்காகவே, அப்பாவிகள் மீது தனது காட்டுமிராண்டித்தனத்தை ஏவி, இதர பிரிவு உழைக்கும் மக்களை அஞ்சி நடுங்க வைக்கிறது பீகார் போலீசு.

செய்யாத குற்றத்திற்காக விசாரணை ஏதுமின்றி அடித்தே கொல்லப்பட்டு, செத்த பிறகும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் அந்த 10 ""நாட்''கள். ஆனால் தாம் செய்த ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டும், தண்டனை அனுபவிக்காமலேயே மேல்முறையீடு செய்து தப்பித்து, பின்னர் செத்துப் போனதும் அரசு மரியாதையுடன் எரிந்து சாம்பலானார், "குற்றப் பரம்பரையை'ச் சேர்ந்த ஒருவர். அவர், முன்னாள் பிரதமர்; அவரது பெயர் நரசிம்மராவ்!