தமிழ் அரங்கம்

Tuesday, September 6, 2005

வன்முறை தொடர்பாக ...

வன்முறை (கொலை) தொடர்பாக புலியெதிர்ப்பு, புலிசார்பு நிலைப்பாட்டின் மீதான சமூக எதிர்வினைகள்


தமிழ் மக்களின் நியாயமான ஒரு ஜனநாயக போராட்டத்தின் மீது நடத்தப்படும் அரசியல் விபச்சாரம், ஒட்டுமொத்த சமூக கூறுகளை சிதைத்து அதை நலமடிக்கின்றது. இந்த வகையில் புலிகள் ஒருபுறமென்றால், மறுபுறம் புலியெதிர்ப்பு அணியினர் பரஸ்பரம் போட்டி போட்டு களமிறங்கி நிற்கின்றனர். இவை பல்துறை சாhந்ததாக உள்ளது. தமிழ்மக்களின் சமூக அறியாமையை அடிப்படையாக கொண்டு, அதை தக்கவைப்பதில் இவர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் எதுவும் இருப்பதில்லை.
அறிவியல் பூர்வமற்ற வகையில், தர்க்கவாதமற்ற நிலையில், மக்களின் நலன்களை அடிப்படையாக கொள்ளாத ஒரு நிலையில், கருத்துகளை திரித்து தமது சொந்த தேவைக்கு ஏற்ப கையாளுகின்றனர். உண்மையில் புலிசார்பு, புலிஎதிர்ப்பு அணிகள் பரஸ்பரம் ஒன்றையொன்று குற்றம்சாட்டும் போது, தமது சொந்த அரசியல் நடத்தைகளை கேள்விக்குள்ளாக்காத வகையில், ஒரு ஜனநாயக மறுப்புவாதிகளாக இருப்பதில் தமக்கு இடையிலே ஒரு ஒற்றுமையைப் பேணுகின்றனர்.

தமது சொந்த அரசியல் நடத்தைகளையும், பொதுவான சமூக நடத்தைகளை மீதும் பொது விவாதம் நடத்துவதாக பீற்றுபவர்கள், ஜனாநயகத்தின் அடிநாதமாக தாமே இருப்பதாக கூறுபவர்கள் கூட, தமது சொந்த கருத்தின் பின்தளத்தை கேள்வி கேட்க ஒரு நாளும் அனுமதிப்பதில்லை.

புலிகளை எடுத்தால் கடந்த மூன்று பத்தாண்டுகளில் அவர்களின் அரசியல் நடத்தைநெறிகள் அப்பட்டமாகவே மக்கள் முன் அம்பலமாகி நிற்கின்றது. தமிழ் மக்களின் மூச்சுக்குழாயில் கையை வைத்த படி, புலிகள் கட்டமைத்துள்ள பாசிச சர்வாதிகார அரசியல் நடத்தைநெறிகளை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிவர். இதைப் புரிந்து கொள்வதில் புலி உறுப்பினர்கள் கூட விதிவிலக்கற்றவராகவே உள்ளனர். அவர்களின் சொந்த நடத்தை நெறிகள் கூட, இதற்குள் ஒரு அச்சம் கலந்த இனம்தெரியாத ஒரு பீதிக்குள் தான் அவர்களால் கூட இயங்கமுடிகின்றது. தமிழ்பேசும் மக்கள் இந்த பொது தலைவிதிக்குள், தமது சொந்த கால்களை உணர்ந்தபடி தான் எதிர்வினையாற்றுகின்றனர். இது பெரும்பாலும் மவுனமாகவும், சிலவேளைகளில் ஊனமாகவும் எழுந்தபோதும், சமூகத்தின் உள்ளக் குமுறல் கொந்தளித்த ஒரு கடலலையாகவே எப்போதும் காணப்படுகின்றது.

சிங்கள பேரினவாத இன ஒழுக்குமுறையை தமிழ்மக்கள் மீது எந்த விதத்திலும் தளர்த்த ஒரு நிலையில், தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகள் மிதிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தான் புலிகள் போன்ற அமைப்புகள, தொடர்ந்தும் இந்த சமூகத்தில் உயிர்வாழ முடிகின்றது. சிங்கள பேரினவாதம் தான், புலிகளை தமிழ் சமூகத்தில் தக்கவைக்கும் ஒரேயொரு நெம்புகோலாகவுள்ளது. இதற்கு வெளியில் புலிகள் சமூகத்தில்; தன்னை நிலைநிறுத்தக் கூடிய வகையில், எந்தவிதமான சமூக ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை. பொதுவாக காணப்படும் சமூக பிற்போக்கு கோட்பாட்டின் பிரதிநிதியாக புலிகள் இருந்தபோதும் கூட, சமூக பிடிப்பற்ற வகையில் காணப்படும் புலிகளின் (அரசியல்) நடத்தை நெறிகள் புலிகளை சமூகத்தில் இருந்து அன்னியமாக்கியுள்ளது. புலிகள் மக்களை மக்களாகவே கருதுவதில்லை. தம்மைத்தாம் மேலே உயர்த்தி, மக்களை நாயினும் கீழான தமது அடிமைப் பிறவிகளாக இருக்கவும், தமக்கு வாலாட்டுவதற்கு மட்டும் அனுமதிக்கின்றனர். இந்த ஒரு நிலையில் புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான ஒரு பகை முரண்பாட்டில் இருந்து தப்பிப்பிழைக்க, சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறை பாலம் அமைத்துக் கொடுக்கின்றனது. இந்தநிலை இன்று பொதுவான ஒரு சமூக ஒட்டமாக, உயிருள்ள ஒரு இணைப்பாகவும் நீடிக்கின்றது. புலிகளின் ஆன்மா ஈடேற்றம் இப்படித்தான் சமூகத்தில் நீடிக்கின்றது.

இந்த நிலையில் புலிக்கும் சமூகத்துக்கும் இடையில் உள்ள முரண்பாடு, பலரை புலிக்கு எதிராக பலாத்காரமாகவே அன்றாடம் உந்தித் தள்ளுகின்றது. இது பலதளத்தில் மௌனமாக மாறும் போது, சில இடத்தில் இதுவே புலிக்கு எதிரான ஒரு மாற்றுக் குரலாகவும் மாறுகின்றது. இந்த குரல் வளைகளை அறுப்பதை நியாயப்படுத்துவதில் தான், புலிகளின் தேசியம் இன்று தகவமைந்து நிற்கின்றது. இந்த வக்கிரமான நியாயவாதங்களே, இன்று புலிகளின் சொந்த அரசியலாகிவிட்டது. புலிகள் அல்லாத மாற்றுக் கருத்து சார்ந்தவர்களின் குரல்வளைகளை அறுத்தெறிவதன் மூலம், புலிகள் தமது சொந்த நியாயவாதங்களை முன்வைக்க முனைகின்றனர். இதுமட்டும் தான், இன்று புலிசார்பு ஊடாகவியலாகிவிட்டது. எமது மண்ணில் தொடங்கி புலம்பெயர் நாடுகள் வரை அனைத்து தமிழ் செய்தி ஊடகங்களையும் தமக்கு வாலாட்ட வைக்கின்ற ஒரு நடைமுறையில் தான், புலிகளின் ஒருதலைப்பட்சமான நியாயவாதங்கள் முன்தள்ளப்படுகின்றது. தொடாச்சியாகவே நேர்மையற்ற தமது சொந்தச் செயல்பாடுகளையும், பொய்களையும், புனைவுகளையும் அரசியலாக்கி அதை ஊளையிட்டு பரப்புகின்றனர். இதுவே பொதுவாக சமூக ஆதிக்கமுள்ள ஒரு பொது மொழியாக இன்று அரங்கேறுகின்றது. இதுவே பினாமித் தொழிலாகிவிட்ட ஒரு நிலையில், சமூகத்தின் உயிர்துடிப்புள்ள எவையும் எதிர்நீச்சல் போடமுடியாத வகையில் அள்ளுண்டு செல்லுகின்றது.

இதற்கு மாற்றாக செயற்படுவோர் கூட அதேபாணியில் பின்பற்றுவதன் மூலம், தம்மை இந்த சமூகத்தின் மாற்றாகவே காட்டமுனைகின்றனர். இந்த மாற்று காலத்துக்கு காலம் காணமல் போய்விடுவதும் ஒரு நிகழ்ச்சிப் போக்காகவே இருந்து வந்துள்ளது. அமைதி சமாதானம் என்ற ஒரு அரசியல் நாடகத்தின் பின்பாக, புலியெதிர்ப்பு, அரசுசார்பு குழுவல்லாத ஒரு பிரிவினர் புலம்பெயர் நாடுகளில் திடீரென அரசியல் அரங்குக்கு வந்துள்ளனர். இவர்கள் புலிகள் அல்லாதோருக்கு தாங்களே மாற்று என்கின்றனர். புலி அல்லாதோரை தமது சொந்த அரசியல் வழிகளிலான உள்நோக்குடன் வழிகாட்ட முனைப்பு கொள்கின்றனர்.

இவர்களின் அரசியல் முற்றுமுழுதாகவே புலிகளைச் சார்ந்து காணப்படுகின்றதே ஒழிய மக்களைச் சார்ந்ததல்ல. புலிகள் தாம் செய்தவற்றையே மூடிமறைக்கும் போது அதை அம்பலப்படுத்துவதுடன், சில ஆதாரமற்ற செய்திகளையும் கூட புலிகளைப் போல் மறுதளத்தில் முன்தள்ளுகின்றனர். பொதுவாக யுத்தநிறுத்த காலத்தில் புலிகள் செய்து கொண்ட அவர்களின் சொந்த ஒப்பந்த விதிக்கு மாறாக செயல்படுவதை, புலிகள் தொடர்ச்சியாக மூடிமறைக்கின்றனர். இதை அம்பலப்படுத்தியே புலியெதிர்ப்பு அரசியல் திடீரென சமூக அரங்குக்கு வந்துள்ளனர். இவர்களின் அரசியல் எல்லை, இதற்குள் தான் கட்டமைக்கப்பட்டது. இது புலிகள் அல்லாத ஒரு தளத்தில், ஒரு அரசியல் மாற்றாக தமிழ் மக்கள் முன் உண்மையில் உள்ளதா?

இந்தக் கேள்வியை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் சமூக நோக்கில் எழுப்பும் ஒருவனுக்கு, இதன் பின்னுள்ள அரசியல் பின்புலத்தை அறிந்துகொள்வது சாத்தியமானதே. பலர் பொதுவாகவே தமிழ் பாசிச கட்டமைப்புக்கு வெளியில் சமூகத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றலற்ற வகையில், உலக அனுபவத்தை தெரிந்துகொள்ள முடியாத ஒரு சமூக சூனியத்தில் வாழ்கின்றனர். அவர்கள் முன் புலிகளின் பாசிச நடத்தைகள் மட்டுமே நடைமுறை சார்ந்து இனம் காணும் ஒரு குறுகிய ஒரு செயலாக இருப்பதால், இயல்பாகவே பிழையான இதற்கு ஒத்த மற்றொரு சமூகப் போக்குக்கு பலியாகிவிடுகின்றனர். புலிகளை எதிர்க்கும் வடிவங்களுக்குள் சமூக நியாயம் இருப்பதாக கருதி, அந்த நிலைப்பாட்டை கோட்பாட்டு ரீதியாக ஆதரிப்பது நிகழ்கின்றது. இந்த கோட்பாடுகள் சூழ்ச்சிமிக்கவை. மிகவும் திட்டமிட்ட வகையில், மனித உளவியல் சிக்கல்கள் மீது தகவமைக்கப்படுகின்றது. பொதுவாக இவை ஏகாதிபத்தியம் உலகளாவில் தனது சொந்த உலக ஆதிக்கத்தை தக்கவைக்க முன்வைக்கும் அரசியல் வாதங்களின் உள்ளடகத்தில் இருந்தே, தமது சொந்தக் கோட்பாட்டை முன்தள்ளுகின்றனர். அதாவது புலிக்கு மாற்று ஏகாதிபத்திய அனுசரணையுடன் கூடிய மாற்றைத்தான், தமிழ்மக்களின் மாற்றாக முன்வைக்கின்றனர். புலியெதிர்ப்பு அரசியல் இதை தாண்டி ஒரு அங்குலம் கூட நகர்வதில்லை.

இன்று தமிழ்மக்கள் மத்தியில் நாள்தோறும் தவறாது நடத்தப்படும் கொலைகளை அடிப்படையாக கொண்டு, ஒரு சூழ்ச்சிமிக்க அரசியல் முன் தள்ளப்படுகின்றது. ஒரு மனிதனை ஒரு மனிதன் கொல்லும் உரிமை கிடையாது என்ற, ஒரு அடிப்படையான இயற்கை சார்ந்த சமூக விதியை மிகவும் முறைகேடாகவே தமது உள்நோக்குக்கு ஏற்ப திரித்து பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் ஒரு சமூகவிரோத கோட்பாட்டை முன்தள்ளி, மனித விரோத அரசியலை அரங்கேற்றுகின்றனர். கொலை என்ற ஒரேயொரு விடையத்தை மட்டும் எடுத்து, அதை மட்டும் கொண்டு புலியெதிர்ப்பு அரசியலை செய்யமுனைகின்றனர்.

இங்கு கொல்லப்பட்டவனின் அரசியல் நடத்தைகளை கேள்விக்கு உள்ளாக்குவதை தடுக்கும் அரசியல் உள்ளடக்கம் மூலம், தமது சொந்த அரசியலை தக்கவைக்கின்றனர். கொன்றவனின் அரசியல் நடத்தை நெறிகள் புலிசார்பு, புலியெதிர்ப்பு அரசியல் செல்நெறிக்கு உட்பட்ட வரையறைக்குள் புணரப்பட்டு அது தக்கவைக்கப்படுகின்றது. கொலைகாரர்களின் அரசியல் நெறி கொல்பவனுக்கு இந்த சமூக அமைப்பில் தனது இருப்புக்கு எப்படி தேவைப்படுகின்றதோ, அந்தளவுக்கு புலியெதிர்ப்பு அணியினருக்கும் அது தேவைப்படுகின்றது. இதனால் கொலைகாரனின் அரசியலை சேதமின்றி பாதுகாக்கும் வகையில், கொலைகளை எதிர்க்கும் அரசியல் அரங்கேறுகின்றது.

இன்று எதார்த்தத்தில் அமைதி, சமாதானம் என்ற பெயரில் ஒரு மனிதவிரோத அரசியல் நடத்தைகளே, சமூகம் எங்கும் அரங்கேற்றப்படுகின்றது. இதன் போது குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ஒருவர் வீதம் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை மனித சடலங்களாக அண்ணளவாக 400 அளவில் கிடைத்துள்ளது. மிகுதி கடத்தப்பட்டு காணமல் போன நிலையில், புதைக்கப்படுகின்றது அல்லது எரிக்கப்படுகின்றது. கொலைகள் வரைமுறையின்றி தொடருகின்றன. இந்த கொலைகள் எதிலும், புலிகள் தாம் சம்பந்தப்படவில்லை என்ற அறிவிக்கின்றனர். கதிர்காமர் கொலை உட்பட வடக்குகிழக்கு முதல் இலங்கை முழுக்க நடந்த கொலை எதனுடனும் தாம் எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லை என்கின்றனர் புலிகள். இது வழமைபோல் புலிகளின் அறிக்கைகள் மூலம் அன்றாடம் தொடருகின்றது. ஆனால் இயல்பு வாழ்வில் கொலை செய்யாத புலியையிட்டு, மக்கள் பீதி கலந்த வாழ்நிலையில் அனைத்தையும் புலிகளிடமே இழக்கின்றனர். இந்த நிலை ஏன் என்று தெரியாது, புலியாதரவு அரசியல் பினாமி ஆய்வாளர்களுக்கே புரியாத புதிராகி, மண்டையில் இருந்த மயிர்களெல்லாம் விழுகின்றதாம்.

இந்த நிலையில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற கொலைகளில் 90 சதவிகிதத்துக்கு மேலானவை திட்டவட்டமாக புலிகளால் செய்யப்பட்டவை தான். மிகுதி பெருமளவுக்கு புலிகளில் இருந்து பிரிந்த கருணா தரப்பால் செய்யப்படுகின்றது. இங்கு இனம் காணப்பட்ட சிறிலங்கா இராணுவ துப்பாக்கி சூடுகளை உள்ளடக்கி இதைக் குறிப்பிடவில்லை. பொதுவாக இனம்காணாததும், கண்காணிப்பு குழு யாரையும் குற்றம்சாட்டாத கொலைகள் பற்றியதுமே இக் கருத்து. இந்தக் கொலைகளில் புலிகளுடன் ஏதோ ஒருவிதத்தில் முரண்பட்டவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர்.

22.02.2002 முதல் 30.06.2005 வரையிலான காலத்தில் நடந்த மொத்த கொலைகளில் 12 மட்டும் தான் கண்காணிப்பு குழு புலிகள் செய்ததாக உறுதி செய்து அறிவித்துள்ளது. மற்றைய கொலைகள் யாரும் செய்யாத உயிருள்ள கொலைகளாகவே உள்ளது. இந்த நிலையில் இக்காலத்தில் உறுதி செய்யப்படாத யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்கள் இராணுவதரப்பால் 132 ம், புலிகள் தரப்பால் 3006 ம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும் தொகையான யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்கள் இனம்தெரியாத நபர்களால் செய்யப்பட்ட நிலையில் உறுதி செய்யப்படாதவையாகி உள்ளது. அத்துடன் பெருமளவிலான ஒப்பந்த மீறல்கள் கண்காணிப்பு குழுவின் பதிவுக்கே வருவதில்லை. இதில் கொலைகளும் அடங்கும்.

இங்கு இந்த தொடர் கொலைகளை நாம் எந்த விதத்தில் எப்படிப் புரிந்துகொள்வது. கொல்லப்பட்டவர்களின் அரசியல் நடத்தை நெறிக்கு அப்பால், இன்று இப்படி தொடரும் கொலைகள் எந்தவிதத்திலும் தமிழ்மக்களின் வாழ்வியல் நெறி சார்ந்தவையாக இருப்பதில்லை. தமிழ்மக்களின் வாழ்வை மேலும் அடிமைப்படுத்துகின்ற வகையில் இக்கொலைகள் தொடர்ச்சியாகவே அரங்கேற்றப்படுகின்றது. கொலைகாரனின் நோக்கம் தமிழ் மக்களின் எந்தவிதமாக சமூக உயிர்துடிப்பையும் அனுமதிக்க மறுத்தலாகும். தமிழ் சமூகத்தின் அடிமைத்தனத்தில் ஆன்ம ஈடேற்றத்தையும், இந்த உலகில் சுகபோகமாக வாழ்வதற்கான ஆதாரத்தை தனக்கானதாக மாற்றி அதை தக்கவைப்பதுதான் இந்த கொலைகளின் நோக்கமாகும்.
அவர்களே தாமே விரும்பி செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய, ஒரு யுத்தநிறுத்தமும் அமைதியும் தொடருகின்ற ஒரு சூழலில் இவை அரங்கேறுகின்றது. உண்மையில் இவை அடிப்;படையான அரசியல் நேர்மையின்மையை தொடர்ச்சியாக சந்தேகத்துக்கு இடமின்றி அம்பலப்படுத்தி விடுகின்றது தாம் செய்து கொண்ட ஒரு ஒப்பந்த விதியை மறுத்து செயல்படுவதும், தமிழ்மக்களை ஏமாற்ற கருத்துரைப்பதும் இங்கு அரங்கேறுகின்றது. இந்த ஒப்பந்தம் புலிகள் அல்லாத புலியெதிர்ப்பு குழுக்களின் ஆயுதங்களை களையக் கோரிய பின், அவர்கள் மேலான படுகொலை எந்த வகையிலும்; அரசியல் நேர்மையற்றது. மறுபக்கத்தில் இந்த அரசுசார்பு ஆயுதக் குழுக்களுடன் தொடர்பற்ற மாற்றுக் கருத்துடையவர்கள் மேலான படுகொலைகள் என்று, விரிந்ததளத்தில் நடத்தப்படும் படுகொலைகள் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறையின் தொடர்ச்சி தான்.

கொலை செய்யப்படுபவர்கள் ஏன் எப்படி இந்த குறித்த நிலைக்குச் சென்றார்கள் என்ற அரசியல் கேள்வியை புலிகள் ஆராயாது கொல்லுகின்றனர். இதையே புலியெதிர்ப்பு அணியினரும் செய்ய மறுக்கின்றனர். கொல்லப்பட்டவனின் சொந்த அரசியல் நிலைக்கு இருவருமே ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பதை மூடிமறைக்கவே விரும்புகின்றனர். இதனாலேயே கொலை செய்கின்றனர். இதனாலேயே கொலையை மொட்டையாக கண்டிக்கின்றனர்.

கொலைகளை திட்டமிட்டு அதையே அரசியலாக்கி ஒரு தேசியமாக விளக்கி கொலை செய்பவர்கள், எந்த விதத்திலும் கொல்லப்படுவர்களை பொதுவான சமூக நீரோட்டத்துக்குள் கொண்டுவருவதற்கான எந்த முயற்சியையும் எடுப்பதில்லை. மாறாக பொது சமூக நீரோட்டத்துக்கு வரமுடியாத வகையில் தமது சொந்த நடத்தைகளால் எட்டி உதைக்கின்றனர். சமூக நீரோட்டத்தில் இருந்து தமிழ் மக்களின் எதிரியின் பக்கத்துக்கு தள்ளுவதில் இந்த கொலைகார அரசியல் மற்றும் நடத்தை நெறிகள் அன்றாடம் அரங்கேற்றப்படுகின்றது. நாள் தோறும் எதிரியின் பக்கத்துக்கு நூற்றுக் கணக்கில் புதிதாக ஆட்களை தள்ளிச் செல்வதில் தமது பொது அரசியல் நடத்தை நெறியை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றனர்.
குறுகிய புலியெதிர்ப்பு அரசியலுக்கு உட்பட்டு இக்கொலையைக் கண்டிப்பவன், திட்டவட்டமான உள்நோக்குடன் கொல்லப்பட்டவனின் மக்கள் விரோத அரசியல் நெறியை மூடிமறைப்பதன் மூலம் அந்த அரசியலை ஊக்கப்படுத்துகின்றனர். இந்த வாதம் கொல்லப்படுபவர்கள் அனைவரும் தவறான மக்கள் விரோத அரசியல் நெறியால் கொல்லப்படுகின்றனர் என்ற அடிப்படையை உள்ளடக்கி இது வாதிடவில்லை. கொல்லப்பட்டவனின் சரியான அரசியல் நடத்தை நெறியை உயர்த்தவும், கொல்லப்பட்டவனின் தவறான அரசியல் நெறியை விமர்சிக்க மறுக்கும் புலியெதிர்ப்பு கோசங்களுக்கு பின்னால் காணப்படுவது மக்கள் விரோத போக்காகும். கொலைகாரன் கூட மக்கள் விரோதியாகவே இங்கு செயல்படுகின்றான்.
மக்கள் விரோத போக்கை கொண்ட அரசியல் நடத்தைநெறிகள், அனைத்து சமூக தளத்திலும் அங்கீகரிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. கொலைகாரனின் அரசியல் நடத்தை நெறி எப்படி மக்கள் விரோதத்தால் கட்டமைக்கப்படும் போக்கில், கொல்லப்பட்டவனின் அரசியல் நடத்தை நெறியும் கூட மக்கள் விரோதத்தால் கட்டமைக்கும் ஒரு அரசியல் மேடையைத்தான், கொலையை கண்டிக்கும் புலியெதிர்ப்பு பிரிவினரும் செப்பனிடுகின்றனர். கொலைகாரனின் மக்கள் விரோத அரசியல் நெறியால் வெளிவரும் ஒருவனை, மக்கள் நலன் சார்ந்த ஒரு சமூக அரசியல் நெறிக்குள் செல்வதை புலியெதிர்ப்பு கண்டனங்கள் வழிகாட்டுவதில்லை.

உண்மையில் கொல்லப்பட்டவனின் அரசியல் நெறி எதார்த்தத்தில் பல தளத்தில் காணப்படுகின்றது. இதில் அரசுசார்பு குழுக்களில் இருக்கும் போது கொல்லப்படுபவர்களில் அடிமட்டத்தில் உள்ளவர்கள, தனது உயிரை தற்பாதுகாக்கும் ஒரு நிலையில் தான் இந்த அரசுசார்பு குழுக்களின் அரசியல் நெறியை பின்பற்றுகின்றனர். இதற்கு வெளியில் எந்த விதத்திலும் இலங்கையில் சுதந்திரமாக வாழமுடியாத வகையில் கொலைகார அரசியல் நெறியும், இலங்கையின் பொருளாதார சமூக கூறும், அவர்களின் கழுத்தைப் பிடித்து தவறான அரசியல் ஒன்றின் பின் தள்ளிச் செல்லுகின்றது. மறுதளத்தில் திட்டமிட்டே எதிரி சார்ந்த நிலைப்பாட்டை எடுத்து, அவர்களுடன்; இணங்கி நிற்றல் நிகழ்கின்றது.

இதை சிறப்பாக தெளிவாக புரிந்துகொள்ள புலம்பெயர் நாட்டில் காணப்படும் புலியெதிர்ப்பு அரசியல் நடத்தை நெறி எடுப்பாகவே தன்னைத்தான் வெளிப்படுத்துகின்றது. இவர்களின் சுயாதீனமான சுதந்திரமான செயல்பாட்டுக்கு இலங்கை போன்று பொதுவான சூழல் காணப்படுவதில்லை. இந்த நிலையில் வலிந்து தேர்ந்தெடுக்கும் இவர்களின் சொந்த அரசியல் நடத்தை நெறி, மக்களுக்கு எதிராகவே காணப்படுகின்றது. இந்த நடத்தை நெறி இலங்கை அரசு சார்பாக இயங்கும் குழுக்களின் அரசியல் நிலைக்கு ஏற்ற ஒரு கோட்பாட்டு நெறியை முன்வைக்கின்றது. மக்களின் நலன்கள் எதையும் இவர்கள் முன்வைப்பதில்லை. புலிகள் அல்லாத அனைத்து தரப்பினரினதும் கருத்துக்களை, அதாவது சிங்கள பேரினவாதம் முதல் ஏகாதிபத்தியம் வரை முன்வைக்கும் கருத்துக்களை கோட்பாடுகளை தூக்கி நிறுத்தி, அதையே புலிக்கு மாற்றாக முன்வைக்கின்றனர். இந்த வகையில் தொடரும் கொலையை கண்டித்தல் என்ற பெயரில், ஒரு கொள்கை வழி ஏகாதிபத்திய கோட்பாட்டு அரசியலை முன்வைக்கின்றனர்.

கொலையைக் கண்டிக்கும் பொதுவான சமூக கண்ணோட்டத்தை கொண்டு, கொல்லப்பட்டவனின் அரசியல் நடத்தையை கேள்விக்குள்ளாக்குவதை இவர்களின் ஜனநாயகம் தடுத்து நிறுத்துகின்றது. குறிப்பாக எடுப்பின் ரி.பி.சி கொலை செய்யப்பட்டவனின் அரசியல் நடத்தையை கேள்விக்குள்ளாக்குவதை, கொலைகாரனின் அரசியல் நடத்தை நெறிக்கு ஊடாக திட்டமிட்டே மறுக்கின்றனர். இதன் மூலம் கொல்லப்பட்டவனின் அரசியல் நடத்தைகளை ஆதரித்து பாதுகாக்கும் வகையில், மிகவும் திட்டமிட்ட வகையில் விடையங்களை நகர்த்துகின்றனர். இது ரி;பிசி மட்டுமல்ல பல புலியெதிர்ப்பு அரசியலின் பொதுவான நிலையாகும்.
மனிதனை மனிதன் கொல்லுதல் இயற்கையின் தெரிவு அல்ல. இதை நாம் எமது மனித விரோதக் கோட்பாட்டுக்கு இசைவாக திரித்துபுரட்ட முடியாது. மனித விரோதமும், அது சாhந்த கோட்பாடுகள் கூட இயற்கையின் தெரிவல்ல. மனித விரோதப் போக்குகள் தான், மனிதனை கொன்றொழிக்கின்றது. இது புலிகள் தரப்பில் மட்டும் இருப்பதில்லை. இது அனைத்து மனித விரோதப் போக்குகளிலும், காணப்படும் பொது செல்நெறியாகும்.

உண்மையில் இங்கு மனிதனைக் கொல்லுதல் என்பது ஒரு வன்முறையின் குறிப்பான ஒரு வடிவம் மட்டுமே ஒழிய இது விசேடமானதல்ல. வன்முறை என்பது விரிந்த அடிப்படையைக் கொண்டது. இன்றைய உலகம் தழுவிய சமூக அமைப்பே வன்முறையி;லானவை. பண்பில் மட்டும் ஏற்றவிறக்கம் கொண்ட ஒரு உலகம் காணப்படுகின்றது. இறக்கத்தில நின்று ஏற்றத்தை விமர்சிப்பது வன்முறையை எதிர்ப்பதாக மாறிவிடாது. அதுவே ஒரு அரசியல் மோசடி. உண்மையில் இப்படி செய்வது கூட வன்முறைதான். இன்று ஒரு மனிதனை மற்றொரு மனிதன் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கும் போது, அது வன்முறையாகின்றது. இதன் வேறுபட்ட வடிவத்தில் கொலையும் ஒன்று. வன்முறையின் தோற்றம் என்பது, ஒன்றுபட்ட சமூகச் செயல்பாட்டை மறுத்தல் என்ற கோட்பாட்டில் இருந்து தொடங்குகின்றது. சமூகத்தின் பொதுச் சுதந்திரம், சமூகத்தின் பொது ஜனநாயகம் என்பவற்றை மறுக்கும் போதே வன்முறை உருவாகின்றது. இதன் ஒரு வடிவம் தான் கொலை.
கொலைகளை கண்டிப்பவன் முரணற்ற வகையில் வன்முறை எதிர்ப்பாளனாக இருக்க வேண்டும். அதாவது சமூகத்தின் நலனை அடிப்படையாக கொண்டு, வன்முறையின் வடிவத்தை சமூக நலநோக்கில் அதை முன்னிறுத்தி அணுகவேண்டும். சிலவகை வன்முறைகளையும், சில வகை கொலைகளை மட்டும் கண்டிப்பவன் நிச்சயமாக கொலையை கண்டிப்பவன் அல்ல. மாறாக இந்த சமூக அமைப்பில் தனக்கென ஒரு கோட்பாட்டுடன், உள்நோக்கம் கொண்ட மக்கள் விரோதியாக இருந்தபடி தன்னை மூடிமறைக்க விரும்புபவன் தான். கொலை என்பது சமூகத்தில் காணப்படும் பலவகையான வன்முறைகளில், ஒரு குறித்த வடிவம் சார்ந்த செயல்பாடு மட்டும்தான். ஆனால் புலியெதிர்ப்பு அரசியல் இந்த கொலை வடிவத்தை மட்டும் எதிர்க்கும் போது, சமூகத்தில் புரையோடிப் போயுள்ள பொது வன்முறையை எதிர்ப்பதில்லை. மாறாக பொதுவான சமூக வன்முறையின் தீவிரமான ஆதரவு கோட்பாட்டுடன் சேர்ந்து இயங்குகின்றனர். புலியெதிர்ப்பு அணியினர் எப்போதும் கொல்லப்பட்டவனின் வன்முறையைக் கூட கேள்வி கேட்பதை அனுமதிப்பதில்லை.

இங்கு கொல்லப்பட்டவன், கொல்லுபவன் என இரு வன்முறை சார்ந்த அரசியல் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டுள்ள நிலையில், புலி எதிர்ப்பணியினர் புலிக்கு எதிராக அவர்களின் வன்முறையை மட்டும் எதிர்க்கின்றனர். புலிகள் ஒருவனைக் கொன்றால் அவனின் சமூக நடத்தையையும், அவனின் வன்முறைப் பாத்திரத்தை கேள்விக்குள்ளாக்குவதில்லை. இதில் ஒரு புனிதமான மௌனத்தை பேணியும், கேள்விக்குள்ளாக்குவதை தடுத்தும் ஒரு அரசியல் விபச்சாரத்தை நடத்துகின்றனர்.

கொலைகள் உலகத்தில் இல்லாது ஒழிக்க வேண்டுமென்றால், அதற்குரிய அனைத்து சமூக நடத்தை நெறிகளையும் முரணற்ற வகையில் மறுதலிக்கவேண்டும். இந்த வகையில் சமூக அடிப்படைக் கோட்பாட்டை கொண்டே, கொலைகளை பகுத்தாயவேண்டும். மக்களின் சமூக கூறுகளின் உயர்ந்த செயல் நடைமுறைகள் முழுதுமாக சார்ந்து இருக்கவேண்டும்;. இல்லாதவரை இது போலித்தனமான குறுகிய உள்நோக்கம் கொண்ட ஒன்றாக இருப்பதை தாண்டி வேறொன்றுமாக இது இருப்பதில்லை.

கொலை என்பது வன்முறையின் ஒரு வடிவம் மட்டும் தான். கொலைகளை எதிர்ப்பதாக கூறுவதும் சரி, மரண தண்டனையை அகற்றவேண்டும் என்று ஏகாதிபத்திஙகள் சிலவற்றின் உலகளாவிய கோட்பாடும் சரி உள்நோக்கம் கொண்டவை. மக்களின்; காதுக்கே பூ வைப்பவை. மரணதண்டனை தவிர்ந்த கைது, சிறை, சித்திரவதை என்று தொடரும் நிறுவனப்படுத்தப்பட்ட வன்முறை வடிவங்கள் இன்றி, இந்த சமூக அமைப்பு இயங்குவதில்லை. இப்படி இருக்கும் போது கொலையை மட்டும் எதிர்ப்பது ஏன்? வன்முறைகளில் கொலையும் ஒன்று அந்தளவே. சிறைச்சாலைகள், பொலிஸ், வன்முறையை அடைப்படையாக கொண்ட அதிகாரவர்க்கமின்றி அரசு அதிகாரமே இயங்குவதில்லை. இவை அனைத்தும் நிறுவனப்படுத்தப்பட்ட, சட்டவாக்கம் பெற்ற வன்முறை உறுப்பாக உள்ளது. இதை புலியெதிர்ப்பு பிரிவினர் எதிர்ப்பதில்லை. இதை ஏகாதிபத்தியங்களும் எதிர்ப்பதில்லை. வன்முறை அளவிலும், பண்பிலும், கண்காணிப்பிலும் வேறுபட்ட வடிவங்களில் உலகளவில் எங்கும் எதிலும் காணப்படுகின்றது. பொது அரசியலே கண்காணிப்பு அரசியலாகிவிட்டது.

சமூகத்தைப் பிளந்து கட்டமைக்கப்பட்டுள்ள பொது வன்முறையில், ஒரு சட்டபூர்வமான ஒழுங்குக்கு உட்பட்டு இருக்கும் அனைத்து வடிவமும் வன்முறை கொண்டவையே. ஒரு மனிதனின் உழைப்பை மற்றொருவன் சுரண்டி வாழ்வதே வன்முறைதான். மனிதனின் தேவையை மறுக்கும் இந்த சமூக அமைப்பே, வன்முறையால் கட்டமைக்கப்பட்டவை தான். மனித சமூத் தேவையை மறுத்த வன்முறைக்கு, உலகளாவில் வருடாந்தம் குறைந்தபட்சம் 10 கோடி பேர் பலியாகின்றனர். இதையிட்டு இவர்கள் யாரும் அக்கறைப்படுவதில்லை. ஆனால் நாங்கள் இதையும், புலியின் வன்முறையையும் எதிர்த்து முரணற்ற வகையில் போராடுகின்றோம். இதனால் பிரஞ்சு ஏகாதிபத்திய அரசியல் பொலிஸ் என்னை உத்தியோகபூர்மாக அழைத்து, உத்தியோகபூர்வமற்ற வகையில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு சார்பாகவும் எழுதுவதை நிறுத்தும் படி மிரட்டும் ஒரு அரசியல் வன்முறையை எனக்கு விடுத்துள்ளனர். வன்முறை என்பது சமூக இயக்கத்தில் ஊடுருவி காணப்படும் ஒரு சமூக செயல் நெறியாகவே உள்ளது. இதில் சூழலும், சந்தர்ப்பங்களும், நிலைமைகளும் வேறுபட்ட போதும், எங்கும் வன்முறைக்கு உள்ளாகியபடி சமூக எதார்த்தம் உள்ளது.

வன்முறையை சமூகத்தில் இல்லாது ஒழிக்க விரும்பும் ஒருவன், சமூக செயல்பாட்டின் பொதுத் தன்மைக்குட்பட்ட வகையில் சமூக இருப்பியல் சார்ந்து நின்று கோரவேண்டும். இங்கு வன்முறையை வன்முறையால் மட்டும்தான் இல்லாதொழிக்க முடியும். இது எப்படி என்று சிலர் புறுபுறுக்கலாம். சமூகம் வன்முறையாலான நிலையில், சிலர் இந்த வன்முறையைக் கொண்டு சுபீட்சமாக வாழும் தனிமனித வாழ்க்கை முறைமை வன்முறையால் தகமைக்கப்பட்டுள்ளது. இது இன்றைய உலக நியதியாகவே உள்ளது. சமூகம் இதை மறுதலிக்கும் போது இதற்கு எதிரான வன்முறையை, எதிர் வன்முறையின்றி சமூகத்தால் இதை மாற்றி அமைக்க முடியாது.

உலகம் தழுவிய பொதுக் கோட்பாடு சார்ந்து இதை புரிந்து கொள்வது சிரமம் என்றால், சிறியளவில் சமூகத்தில் இருந்து இதன் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளமுடியும். சிறுகுழந்தைகளை ஒரு கிராமத்தில் தொடர்ச்சியாக கற்பழிக்கும் ஆதிக்கமுள்ள ஒருவனை எப்படி சமூகம் அணுகமுடியும். அரசின் ஆதரவுடன், உள்ளுர் ஆதிக்ககும்பல்களின் துணையுடன் தொடர்ச்சியாக சிறு குழந்தைகளை கற்பழிக்கும் போது, குறித்த நபரின் சமூக விரோத நடத்தையை எப்படி சமூகம் எதிர்கொள்ளும். சமூகமே திரண்டு பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ, அல்லது பாதிக்கப்பட்டவர்கள் அவனை கொன்று விடுவதையே தேர்ந்தெடுக்கும். சமூக விரோத வன்முறைகளுக்கு (செயல்களுக்கு) எதிரான சமூக வன்முறைகளை கையாள்வது இந்த சமூக அமைப்பில் தவிர்க்க முடியாது. இதுவே வாழ்வுக்கான போராட்டமாக உள்ளது.

சமூக நலன், சமூக விரோதம் என்பது புலிகள் கூறுவது போல் அல்ல. புலிகள் சமூக நலன் என்பது தனது சொந்த நலனையும், சமூக விரோதம் என்பது தனக்கு எதிரானதே என விளக்கியே தண்டிக்க முனைகின்றது. சமூகம் இதற்கு வெளியில் இயங்குகின்றது. சமூகம் என்பது சமூக பொருளாதார அரசியல் என மொத்த நலனை உள்ளடக்கியது. இதற்குள் நின்று தான் சமூக நலனையும், சமூக விரோதத்தையும் பிரித்தறிய வேண்டும். புலிகளின் நலன் சமூகத்தின் நலனல்ல. இவை இரண்டும் இரண்டு வெவவேறு திசையில் நேர் எதிராகவே பயணிக்கின்றது. சின்ன ஒரு இலகுவான உதாரணம். புலிகள் மக்களின் ஜனநாயகத்தை இப்போது வழங்கமுடியாது என்கின்றனர். அது தமிழீழம் கிடைத்த பின்தான் வழங்குவோம் என்கின்றனர். இந்தக் கூற்றில் புலிகள் தாம் அனுபவிக்கும் ஜனநாயகத்தை மக்களுக்கு இப்ப வழங்கமுடியாது என்று கூறுவதே, புலிகளினதும் மக்களினதும் நலன்கள் வெவவேறு திசைகளில் செல்வதையே எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்னும் போது, அதை இப்போது இல்லை என்கின்றனர்;. இப்படி பல உதாரணம் உண்டு. புலிகள் சமூக விரோதம் என்பது, சமூக நலனையே. இப்படி எதிர்நிலை சித்தாந்தமே சமூக நலன் பற்றி உள்ளது.

ஒரு சமூக நிறுவனம் மக்களின் நலன்களை அடிப்படையாக கொள்ளாத வரை, கொலைகளும் தண்டனைகளும் இந்த சமூகத்தின் போக்காகவே இருக்கும். ஒவ்வொரு புலியெதிர்ப்பு அணியினரும் எந்த சமூக நலனை மக்கள் சார்ந்து கொண்டுள்ளனர் என்றால், அதற்கு அவர்கள் பதில் தரமாட்டார்கள். நாம் இங்கு சமூக நலனை முன்னிறுத்தும் போது, கொலைகளையும்; தண்டனைகளையும் சமூக நலன் என்ற நோக்கில் இருந்து காணவேண்டும்.

மக்கள் மட்டும் தான் வரலாற்றைப் படைப்பவர்கள். மக்களுக்கு வெளியில், மக்களைப் பற்றி பேசாத எந்தக் கோட்பாடும், சிந்தாந்தமும் போலியானது. அது மக்கள் விரோதத் தன்மை கொண்டவையுமாகும். இந்த வரலாற்றுப் போக்கில் நேர்மையாக மக்களை நேசிக்க மறுப்பவர்களும், அதை கற்க மறுப்பவர்கள் அனைவரும், வரலாற்றில் மக்கள் விரோதிகளாகவே இனம் காணப்படுவர்.

6 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
தமிழரங்கம் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
தமிழரங்கம் said...

நட்புடன்

தூசணங்கால் பெண்களை இழிவுபடுத்தி தூற்றும் பதிவுகள் அகற்றப்பட்டுள்ளது. பெண்ணியம்இ மொழிஇ பண்பாடு.. என்று ஒரு சமூகத்தின் பல்துறையை இது கேவலப்படுத்துகின்றது.
பி.இரயாகரன்
07.09.2005

Anonymous said...
This comment has been removed by a blog administrator.