தமிழ் அரங்கம்

Monday, June 19, 2006

மிரட்டும் வல்லரசுகள் நெருக்கடியில் புலிகள்

மிரட்டும் வல்லரசுகள் நெருக்கடியில் புலிகள்

மிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று வரையறுத்து, தடைசெய்யப்படும் அமைப்புகளின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்துள்ளது. அதோடு, சிறீலங்காவில் அமைதி முயற்சிகளை ஆதரித்து நிதியளிக்கும் அனைத்து நாடுகளின் கூட்டுத் தலைமை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நார்வே ஆகிய நான்கு நாடுகள் அடங்கியது விடுதலைப் புலிகளுக்கு கடுமையான மற்றும் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்விரு நடவடிக்கைகளும் விடுதலைப் புலிகளுக்கு உண்மையில் முக்கியப் பின்னடைவைக் கொடுத்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.



ஆனால், இராணுவத் துறையில் மட்டுமல்ல, அரசியல் மற்றும் அரசு தந்திரத் துறைகளிலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ""மாமேதை'' என்று புகழ்பாடித் தள்ளும் புலிகளும் அவர்களது துதிபாடிகளும் இதெல்லாம் வழமையானவைதாம்; நேபாளத்திலும் இந்தியாவிலும் உள்ள மாவோயிஸ்டுகளைக் கூட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது என்று வாதிட்டு அலட்சியப்படுத்தக் கூடும்.



ஒரு இயக்கத்தின் அமைப்பின் இலட்சியம், திட்டத்தை ஏற்று ஆதரிப்பது என்பது வேறு; அந்த இயக்கம் அமைப்பு எதிர்கொண்டுள்ள புறநிலை யதார்த்தத்தைப் புரிந்து கொள்வது என்பது வேறு. ஒரு அமைப்பு புறநிலை யதார்த்தத்தை சரியாக மதிப்பீடு செய்து அதற்கேற்றவாறு இயக்கத்தை முன்னெடுக்கும் போது ஆதரிப்பதும், அதற்குப் பொருத்தமற்றவாறு இயக்கத்தைத் தவறாகக் கொண்டு செல்லும்போது விமர்சிப்பதுதான் சரியான அணுகுமுறை. ஆனால் விடுதலைப் புலிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் புலிகள் எந்தச் சமயத்தில் என்ன செய்தாலும் ஏற்றிப் போற்றுவதும், துதிபாடுவதும் நியாயப்படுத்துவதுமாக உள்ளனர். புலிகளுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் அப்படித்தான் அவர்கள் பார்க்கிறார்கள்.



நேபாளத்திலும் இந்தியாவிலும் உள்ள மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஏகாதிபத்திய நாடுகள் ஒடுக்க எத்தணிப்பதற்கும், அந்நாடுகளின்பால் இந்த மாவோயிஸ்டுகள் கொண்டுள்ள அணுகுமுறைக்கும், விடுதலைப் புலிகள் அந்நாடுகளை மதிப்பீடு செய்து அணுகுவதற்கும் அடிப்படையிலேயே வேறுபாடுகள் உள்ளன. ஏகாதிபத்திய நாடுகளை எதிரிகளாகக் கருதும் மாவோயிஸ்டுகள், அவற்றுடன் எப்போதும் நட்பு ரீதியிலான அணுகுமுறை கொண்டிருப்பதில்லை. அதோடு தமது சொந்த நாட்டிலுள்ள மக்கள் ஆதரவைச் சார்ந்தே இயக்கத்தை கட்டியெழுப்பியுள்ளார்கள். தமது இயக்கத்தை அந்நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவும் இல்லை.



இதற்கு மாறாக, அமெரிக்கா உட்பட எந்தவொரு ஏகாதிபத்திய நாட்டையும், தெற்கு ஆசிய துணைக் கண்டத்தில் விரிவாக்கதுணைவல்லரசு நோக்கங் கொண்ட இந்தியாவையே கூட விடுதலைப் புலிகள் தமது எதிரியாக வைக்கவில்லை. மேலும், உலக முதலாளிய நாடுகளின் ஆதரவில்லாவிட்டாலும் அவற்றின் அங்கீகாரத்துக்காகக் காத்து நிற்கிறார்கள். எல்லாவற்றையும் விட முக்கியமாக, பிற நாடுகளுக்குக் குடிபெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களை நிதி, அரசியல் மற்றும் பிற ஆதரவுக்காக விடுதலைப் புலிகள் சார்ந்து நிற்கின்றனர். தற்போது விதிக்கப்படும் தடை காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் பங்கேற்கும் 25 நாடுகளில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் இணைந்துள்ள குறிப்பிட்ட நபர்களின் நிதி வங்கிக் கணக்குகள், பிற சொத்துக்கள் மற்றும் நிதி ஆதாரங்கள் முடக்கப்படும்.



ஈழத்துக்கு வெளியே விடுதலைப் புலிகளின் தலைமையகமாக முன்பு இலண்டனை வைத்துக் கொண்டு இயங்கினார்கள். அங்கு அவர்களின் அரசியல் பிரச்சார மற்றும் நிதி நடவடிக்கைகளுக்குத் தடைசெய்து கிட்டு, லாரன்ஸ் திலகர் போன்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஈழம் திரும்பும் வழியில் கிட்டு மற்றும் பிற முக்கிய புலிகள் இந்தியக் கடற்படையால் தாக்கிக் கொல்லப்பட்டார்கள். அதன்பிறகு லாரன்ஸ் திலகர் தலைமையில் பிரான்சின் தலைநகர் பாரீசை மையமாக வைத்து விடுதலைப் புலிகள் இதுவரை இயங்கி வந்தனர். பிரான்சு தவிர சுவிஸ், சுவீடன், ஜெர்மன், நெதர்லாண்ட் மற்றும் நார்வேயிலும் பெருமளவில் குடியேறியுள்ள ஈழத்தமிழர்களின் ஆதரவோடு புலிகள் தமது நிதி, அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கான பின்புலமாகக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவைத் தொடர்ந்து, புலிகளின் ஆதரவாளர்கள் பெருமளவு குடியேறியுள்ள கனடா மற்றும்ஆஸ்திரேலியாவும் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில், இவ்விரு நாடுகளும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை அடியொற்றியே முடிவுகள் எடுக்கின்றன.



விடுதலைப் புலிகளுக்கு எதிரான நெருக்குதலைதனிமைப்படுத்தி முடக்கும் நடவடிக்கைகளை ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் தற்போது தீவிரப்படுத்தியிருப்பதற்கு அவை சொல்லும் காரணங்களில் முக்கியமானவை, சிறீலங்கா அரசுடனான 2002 பிப்ரவரி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இராணுவத் தாக்குதல்களில் புலிகள் ஈடுபடுவதும், அரசியல் கொலைகள் புரிவதை அதிகரித்து வருகின்றனர் என்பதாகும்.



மேற்கு நாடுகளில் செல்வாக்குப் பெற்றிருந்தவரும், சிறீலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சருமான லட்சுமண் கதிர்காமரை கடந்த அக்டோபரில் விடுதலைப் புலிகள் அழித்தொழித்தனர். கடந்த மாதம் 5ந் தேதி சிறீலங்கா இராணுவத் தலைமையகத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதல் காரணமாக தலைமைத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமுற்றார். இராணுவத்தினர் பலரும் மாண்டு போயினர். அடுத்து வந்த புத்தபூர்ணிமா பண்டிகைக்கு முந்தின நாளன்று சிறீலங்கா கடற்படை கப்பல் மீது பெருந்தாக்குதல் நடத்தினர் கடற்புலிகள். விமானந்தாங்கிக் கப்பல்களின் பாதுகாப்புடன், விடுமுறை முடிந்து ஈழம் திரும்பிய சிறீலங்கா இராணுவ வீரர்கள் எழுநூறு பேரை ஏற்றிக் கொண்டு வந்த கப்பலை 12 விடுதலை புலிகளின் கடற்படை படகுகள் சுற்றிவளைத்தன. இந்தியக் கடற்படையின் தகவல் தலையீடு உதவியுடன் சிறீலங்காவின் விரைவு விமானத் தாக்குதல் நடத்தி சில புலிகளின் படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. மீதி படகுகள் சிதைக்கப்பட்டன. பல கடற்புலிகள் பலியாயினர். பல மணி நேரம் நீடித்த இச்சண்டையில் சிறீலங்காவின் 17 சிப்பாய்களோடு இரண்டு விரைவு தாக்குதல் விமானங்கள் தகர்க்கப்பட்டன. போர்நிறுத்தக் கணிப்பு அதிகாரியோடு, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கொடியுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் விடுதலைப் புலிகள் அத்துமீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.



2002 பிப்ரவரி போர்நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட விடுதலைப் புலிகள் கடந்த ஆண்டு இறுதியில், அதிலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்டனர். கடும் முயற்சிக்குப் பிறகு நடந்த ஜெனிவா பேச்சு வார்த்தையும் முறிந்து போனது. இப்போது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இராணுவத் தாக்குதல்கள் நடத்துவதை புலிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்; அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பவேண்டும் என்று உலக ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் அவர்களை நிர்ப்பந்திக்கின்றன. போர்நிறுத்த ஒப்பந்தப்படி, ஈழத்தை ஒட்டிய வான் மற்றும் கடற் பகுதியில் தமக்கு நடமாடும் உரிமை உள்ளது என்று புலிகள் வாதிடுவதை ஏகாதிபத்திய நாடுகள் ஏற்க மறுக்கின்றன. விடுதலைப் புலிகள் ""அரசு அல்லாத ஒரு உறுப்பு'' என்பதால் அத்தகைய உரிமை கோர முடியாது என்று வாதிடுகின்றன.



விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்த நெருக்குதல்கள் தமக்குக் கிடைத்த வெற்றி என்பதாக சிறீலங்காவின் சிங்கள இனவெறி அரசும் அதன் ஆதரவாளர்களும் (இந்தியாவிலுள்ள சோ, இந்துராம், மற்றும் ஈழ துரோகக் கும்பல்கள்) குதியாட்டம் போடுகிறார்கள். ஆனால் சிறீலங்கா அரசும் இராணுவமும் கூட தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறுவதாகவும், குறிப்பாக வடகிழக்கில் கருணா கும்பலின் கூலிப் படையை வைத்துக் கொண்டு ஈழத் தமிழர்களை கொன்று வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அமைதிப் பேச்சு வார்த்தையில் பாரிய அக்கறை செலுத்தி, இலங்கையில் உள்ள தமிழ் மற்றும் இசுலாமிய சிறுபான்மையினருக்கு அதிகாரப் பகிர்வு செய்து தரவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியமும், இலங்கைக்கு நிதி ஆதரவளிக்கும் நாடுகளின் நான்கு நாட்டு தலைமைக் குழுவும் சிறீலங்கா அரசை எச்சரித்திருக்கின்றன. இருப்பினும், தொடர்ந்து வெறும் எச்சரிக்கை தவிர வேறு பிற நடவடிக்கை நெருக்குதல் எதுவும் இல்லாத நிலையில், ஈழத்தமிழருக்கு எதிராக சிறீலங்கா அரசு சிங்கள பாசிச இனவெறி தாக்குதலை தொடர்வதுதான் நீடிக்கிறது.



ஏற்கெனவே, ஏகாதிபத்திய நாடுகளின் நெருக்குதல்கள் மற்றும் அவற்றின் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கத்திற்கு அடிணிந்துதான் சிறீலங்கா அரசுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு புலிகள் அமைப்பு இணங்கியது. உள்நாட்டில் பரந்துபட்ட மக்களைச் சார்ந்த ஜனநாயக ரீதியிலான விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பத் தவறிய பாசிச இராணுவவாத கண்ணோட்டம் நடைமுறைதான் இதற்குக் காரணம். இப்போது ஏகாதிபத்திய நாடுகளின் நெருக்குதல்களுக்கு மேலும் அடிபணிவதா, தொடர்ந்து ஆயுதபலத்தை நம்பி இராணுவ சாகச சுய அழிவுப் பாதையைத் தெரிவு செய்வதா என்ற கேள்வி விடுதலைப் புலிகள் முன்பு பூதாகரமாக எழுந்து நிற்கிறது.

No comments: