தமிழ் அரங்கம்

Tuesday, September 12, 2006

அரசியல் படுகொலைகளை சாதியமாக்கும் வலதுசாரியம் (3)

அரசியல் படுகொலைகளை சாதியமாக்கும் வலதுசாரியம் (3)


பி.இரயாகரன்
12.09.2006

1960 களில் எழுந்த தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள், யாழ் சாதிய கலாச்சாரத்தின் மூலவேரை அசைத்து பலவற்றை உதிரவைத்து. இதனால் சில சாதிய அடிமை உறவுகள் தகர்ந்தது அல்லது நெகிழ்ச்சி கொள்ளவைத்தது. இந்த எல்லைக்குள் இணங்கிப் போகும் அரசியல் போக்குகள், தாம் சாதி பார்ப்பதில்லை என்று காட்டிக் கொள்வது சாதியத்தின் தொடர்ச்சியான அதே வக்கிரம் தான்.

இங்கு யாழ் கலாச்சாரம் வெள்ளாடிச்சி வெள்ளாளனை இனம் கண்டு தேடிக் காதலிக்க முடிகின்றது. இது புறநானூறு கண்ட காதலோ! சாதியம் பார்ப்பதில்லை என்று தம்மைத்தாம் விளம்பரம் செய்பவர்கள், அகமண முறைக்குள் திருமணத்தையும் அதன் நீட்சியையும் தக்கவைக்க முடிகின்றது. இதை தமிழ் கலாச்சாரமாக உயர்த்திப் பீற்றிக் காட்ட முடிகின்றது. இந்த நாவலில் வரும் அமிர் முதலில் காதலித்த பெண் சாதி குறைந்தவள் என்பதால், மற்றொரு சாதி குறைந்த ஒருவனால் கொல்லப்பட்டு விடுகின்றாள். இது யாழ் சாதிய வழக்குக்கு உட்பட்டதே. இது யாழப்பாண சாதிக் கலாச்சாரத்தின் அகமணமுறையில் சர்வசாதாரணமானவை. வேறுசாதியை காதலிக்கலாம், வைப்பாட்டியாக வைத்திருக்கலாம், ஆனால் குடும்பமாக அகமணமுறைக்குள் வைத்திருக்க முடியாது.

இந்த முன்னாள் காதலி கரையாடிச்சி நர்த்தனா பற்றி வெள்ளாளன் அமிர் 'நான் உயர் சாதி. அவள் பெற்றோர் கடற்றொழிலாளர். அவர்கள் அதை விரும்பவில்லை." என்கின்றான். வெள்ளாடிச்சி காதலி ஜீவிதா கேட்கின்றாள் அப்படியாயின் 'உங்கள் பெற்றோர் குறைந்த குலப் பெண்ணை விரும்பமாட்டார்கள் என்ற காரணத்துக்காகவா?" என்று கேட்க 'ஆம்" என்கின்றான் வெள்ளாளன் அமிர் அதே உணர்வுடன். இங்கு அவளைக் கொன்றதன் மூலம், அமிருக்கும் பெற்றோருக்குமிடையிலான சாதிய போராட்டம் பேசப்படாது தவிர்க்கப்படுகின்றது. இங்கு அவளைக் கொன்றதைப்பற்றி நாவல் எதைச் சொன்னாலும், உயர் சாதிய அகமண முறைதான் அவளைக் கொல்கின்றது. இதன் மூலம் கூட்டணியின் அகிம்சை அரசியல், சாதி பார்ப்பதில்லை என்ற அரசியல் எல்லாம் பாதுகாக்கப்படுகின்றது. பெற்றோருடனான சாதிய வாதம், அமிரின் மறுவாதம் இங்கு சாதிபற்றி இடம்பெறவேயில்லை. கோமணக் குண்டி வெள்ளாளன் பற்றி பேசும் அமிரின் சாதியம், அதைப் பேசி அம்பலமாவதை தடுக்கின்றது. புலிகள் தாம் மட்டும், தாம் விரும்பியவாறு தேசியம் பேசுவது போல், அமிர் தான் வரையறுத்த எல்லைக்குள் சாதியம் பற்றி கதைக்க முடிகின்றது.

அமிரின் தந்தை தமிழரின் அரசியல் ஆதிக்கம் பெற்ற கூட்டணியின் சார்பான யாழ் மேயர். இவர் சாதிய அகமணத்தை தாண்டி திருமணத்தை ஏற்கவில்லை என்ற சூக்குமம் தெளிவாக உணர்த்தப்படுகின்றது. அதனால் நர்த்தனா கொல்லப்பட, வெள்ளாடிச்சி ஜீவிதா காதலியாகின்றாள். இதைக் கூட்டணியைச் சேர்ந்தவரான தாழ்ந்த சாதியைச் சேர்ந்த செல்லன் கந்தையா யாழ் மேயராக முனைந்த போது, அண்மையில் நடந்த உண்மைக் கதையும் எம் எதார்த்ததில் உள்ளது.

மகனின் இந்த நிலையை ஏற்க மறுக்கின்ற யாழ்ப்பாணத்து சாதி அரசியலே இது. யாழ்ப்பாணத்து சாதிய அகமணமுறை கலாச்சாரத்துக்கு விலக்காக வரும் காதல், சினிமா பாணியில் அவளை கொன்றுவிடுவதன் மூலம், சாதி அரசியல் அத்துடன் முடிந்து விடுகின்றது. இதன் மூலம் தான் சாதிபார்ப்பதில்லை என்ற, சாதி அரசியலைச் செய்ய முடிகின்றது.

வெள்ளாளனின் கோமணத்தைப் பற்றி அரசியல் பேசி சாதியைப் பாதுகாக்க முடிகின்றது. புலி வெள்ளாடிச்சியான ஜீவிதாவின் சாதியம், சாதியமாகவே இருப்பதை இந்த வாதம் தெளிவாக உறுதிசெய்கின்றது. 'உங்கள் பெற்றோர் குறைந்த குலப் பெண்ணை விரும்பமாட்டார்கள் என்ற காரணத்துக்காகவா?" என வினவியதற்கு 'ஆம்" என்றதன் ஊடாக, என்னை உங்கள் குடும்பமும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை அவள் தெளிவாக உணர்த்திவிடுகின்றாள். இங்கு அமிர் அவளின் சாதியையும் சேர்த்தே காதலிக்கின்றான். இந்த சாதிய அரசியல், இதற்கு மேல் சாதியம் தகர முடியாது என்பதை தெளிவாக சொல்லுகின்றது.

அமிர் காதலியான வெள்ளாடிச்சி ஐPவிதா பள்ளி நதியா பற்றி 'புருசன் இருக்க கள்ளப் புருசன் பிடிக்கப் பார்க்கிறாள் தேவடியாள். சமூகவிரோத சின்னம். தந்திக் கம்பத்தில் கட்டிச் சுடவேண்டியவள்." இங்கு ஐPவிதா ஒரு புலியாக, கொலைகாரியாக, யாழ்ப்பாணியமாக, சாதியமாக எல்லாம் வெளிப்படையாகவே உறுமுகின்றது. வெள்ளாடிச்சியான ஆவரங்கால் அன்ரி 'அந்த பெட்டை நாய்க்கு அழகான பெரியசாதி மாப்பிள்ளை தேவைப்படுகின்றது" என்கின்றாள். இந்தளவுக்கும் நதியா அமிருடன் கதைப்பதால் ஏற்படும் சாதிய எரிச்சலே இப்படி வெளிப்படுத்துகின்றது. வெள்ளாடிச்சியான ஆவரங்கால் அன்ரி 'தம்பி அமிர், வாவன் தம்பி உண்டியல் குலுக்குவம். பாவம் கறுப்புநரிப் பெடியள் சிங்கள ஆமியோடு அடிப்பட்டுச் சாகுதுகள். இப்படிச் சேர்த்து அனுப்பினால்தானே. பெடியள் விட்டுக்கொடுக்கமால் போர்புரியுங்கள்" என்ற போது மௌனமாக அதை அங்கீகரிக்கின்ற அரசியல் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. இப்படி வெள்ளாளத்தனம், தனது சொந்த சாதிப்புத்தியைக் காட்டுகின்றது.

இந்த பொறாமை வெள்ளாடிச்சி ஐPவிதாவை உளறவைக்கின்றது. 'நீங்கள் அந்த எழிய சாதி பக்கந்தான். சொந்த பந்தங்கள் அறிந்தால் காறித் துப்பும்" என்கின்றாள். யாழ் கலாச்சாரமே அப்பத்தமாகிவிடும் என்ற சாதிய அச்சம், இப்படி கூச்சலிடவைக்கின்றது. இதற்கு துணையாக மற்றொரு வெள்ளாடிச்சி பூமா '.. அவள் சின்ன பெட்டை. பிறகு உங்களுக்கு மட்டுமில்லை எங்கள் சாதிசனம் எல்லாத்துக்கும் கெட்டபெயர்தான் வரும். நீங்கள் இனிமேலும் கில்லாடி வீட்டில் வசிப்பதை நான் விரும்பவில்லை." எப்படி இருக்கின்றது இந்த சாதிய வக்கிரம். இவர்கள் தான் நீதி கோரி போராடுகின்றார்கள். எந்த நீதிக்காக? இதை ஏற்றுக்கொண்டு அமிர் வீடு மாறுகின்றான். இவர் தான் சாதி பார்ப்பதில்லை என்கின்றான். சாதிய சுத்துமாத்தைத் தவிர இது வேறு எதுவுமல்ல.

இங்கு ஜீவிதா கடைசியில் புலியைவிட்டு வெளிவந்த போதும் கூட தான் வெள்ளாடிச்சி என்ற அடையாளத்தை அவள் மாற்றிவிடவில்லை. வெள்ளாளர் சமூக இருப்பு சரியானது என்பதால், வெள்ளாளர் அகமணமுறையில் அவர்கள் இணைகின்றனர். இந்த சாதிய அகிம்சைவாதிகள், இவர்கள் தங்கி வாழ்ந்த வெள்ளாடிச்சியான ஆவரங்கால அன்ரியுடனும் சாதிபற்றி உரையாடுகின்றனர். ஆவரங்கால் அன்ரி 'தம்பி அமிர், உம்மைப் பற்றி எனக்கு நல்லாகத் தெரியும். நல்ல குலம் கோத்திரத்திலே வந்தனீர்." என்கின்றார். இந்த சாதிய பெருமையும் அது சார்ந்த யாழ்ப்பாணிய சாதிய வறட்டு வக்கிரம் சார்ந்து வெளிப்படும் வெள்ளாள மதிப்பீடு பற்றி 'அமிருக்கு அன்ரியின் வார்த்தைகள் சுவைத்தன" எப்படி இருக்கின்றது. இவர் வெள்ளாளனின் கோமணக் குண்டி பற்றி கதை சொல்லுகின்றார். இப்படி வெள்ளாளனாகவே வாழும் இந்த கதாநாயகன் மூலமாக, சாதி இருப்பை தக்கவைக்கும் அரசியல் உள்ளடக்கம் நுணுக்கமானது, நுட்பமானது.

அமிரின் மதிப்புக்குரிய காதலியாகிய வெள்ளாடிச்சி ஜீவிதாவிடம் அமிர் 'ஜீவிதா உயர்சாதி என்றால் கொம்பா? லண்டனிலே வெள்ளைக்காரன் எங்கள் ஆட்களுக்குத் துப்புகிறது தெரியுமெல்லே. உயர்சாதி தாழ்ந்த சாதி என்றா பார்த்துத் துப்புகிறான்?" என்று வாதிடும் அமிரின் சாதி அரசியல், மிகமிக நுட்பமானது. சாதியை ஒழித்துக்கட்ட விரும்பாத, காலத்துக்கு ஏற்ப நெகிழ்சிப் போக்கை அடிப்படையாக கொண்டே இங்கு சாதி பாதுகாக்கப்படுகின்றது. முன்னம் நாம் பார்த்ததுபோல், வெள்ளாளனின் கோவணத்தை பேசி சாதியை பாதுகாத்ததைப் பார்த்தோம்.

இந்த வாதத்துக்கு பதிலளித்த ஜீவிதா 'தமிழ் கட்சி கோமான் வன்னியசிங்கம் தான் முதலில் சமபந்தி போசனம் வைத்து, அந்தச் சாதிக்கு பரிந்து பேசியவர். நீங்களும் அவர்கள் கொடியில் வந்த அரசியல் சாதிதானே? அந்த எழியவளோடு சிநேகிதம் வைக்கிறதென்றால் நான் பிரிந்து போகிறதைவிட வேறுவழி எனக்கு இல்லை" இந்த வாதத்தின் எல்லைக்குள் தான் அமிரின் சாதியம் எல்லைப்படுகின்றது. அவள் தான் தனது சாதிய அடையாளத்துடன் அமிரை திருமணம் செய்கின்றாள். அகமணமுறைக்குள் வெள்ளாளராகவே அவர்கள் வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர். இவர்கள் தான் நீதிக்காக போராட வந்ததாக கூறுகின்றனர். மீண்டும் யாழ்ப்பாணம் செல்லுகின்றனர். எதற்காக?

சமபந்தி போசனம் என்ற கோரிக்கை கூட்டணியால் முதலில் வைக்கப்பட்டது என்பதே அப்பட்டமான அரசியல் பொய். சமபந்திபோசனம், சம ஆசனத்துக்கான போராட்டம் 1930 இல் தமிழ் அரசியல் கட்சிகளை எதிர்த்து இதே யாழ் மண்ணில் நடைபெற்றது. இதை நாம் மேலே பார்த்தோம். சமபந்தி போசனம் என்ற எல்லைக்குள் சாதியத்தை எப்படிக் கையாண்டனரோ, அந்த எல்லைக்குள் சாதியம் மட்டுப்படுத்தப்படுகின்றது. இதுவும் சாதிய ஜீவிதாவுக்கு உடன்பாடானதல்ல. 1960 களில் நடந்த சாதியப் போராட்டம் தமிழரசுக் கட்சியியினாலும், தமிழ் காங்கிரஸ்சாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இதை சீர்செய்யவும், சாதிய போராட்டத்தைப் பிளக்கவும் மட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள் காலத்துக்கு ஏற்ற சாதி சீர்திருத்தத்தை ஏற்படுத்தினர். இந்த எல்லைக்குள் சாதிய அரசியல் பாதுகாக்கப்படுகின்றது. தமிழ்தேசிய வலதுசாரிய அரசியல் வக்கிரமான வன்முறையூடாக கையாளும் கொலை வெறியாட்டத்தை, அதன் சீரழிந்த பக்கத்தை தாழ்ந்த சாதியமாக காட்டுவது சுத்துமாத்து அரசியலாகும்.

இங்கு ஒடுக்கப்பட்ட சாதிகள் இணக்கமாக இணங்கிப் போகும் போக்கையும், அடங்கிப் போகும் பண்பாட்டையே 'யாழ்ப்பாண தர்மத்தின் நாதம்" என்கின்றான் வெள்ளாள அமிர். அமிர் முதலில் தங்கி வாழ்ந்த வீட்டுக்காரனின் மனைவியான பள்ளி நதியா, யாழ் வெள்ளாளன் அமிருக்கு உதவுவதையே 'யாழ்ப்பாண தர்மத்தின் நாதம்" என்கின்றான். இதை அமிர் 'உங்கள் இருவரிலும் நதியா வயதில் குறைந்தவள். படிப்பில் குறைந்தவள் அனுபவத்தில் குறைந்தவள். ஏன் சாதியில் கூடக் குறைந்தவள். ஆனால் உலகத்தை உணர்ந்தவள். நியாய அநியாயம் புரிந்தவள். கலாச்சாரத்தின் குறியீடூ அவள். வாழ்க்கையின் பெருமை சிறுமைகளைத் தெரிந்தவள். ஆபத்தில் உதவத் தெரிந்தவள். யாழ்ப்பாண தர்மத்தின் நாதம் அவள்."

யாழ்ப்பாண கலாச்சார குறியீடு தான் என்ன? யாழ்ப்பாண தர்மம் தான் என்ன? சாதிய அவலத்தால் கையேந்தி வாழ்வதை தானாக அதை சாகா நடைமுறையாக ஏற்றுக் கொள்வது தான் அவள் யாழ்ப்பாண தர்மத்தின் நாமமாகின்றாள். வெள்ளாளனுக்கு இது ரசனைக்குரிய ஓன்றாகவுள்ளது.
யாழ்ப்பாண தர்மத்தின் நாதமாக உள்ள நதியா, தான் இந்தியா தப்பிச் செல்ல உதவியை அமிரிடம் கோரிய போது 'மன்னித்துக்கொள் நதியா. கில்லாடி மட்டுமல்ல எங்கள் சாதி சனம்கூட என்மீது வசைபாடும்." எப்படி இருக்கின்றது. சாதிக்குள் வாழும் வெள்ளாள நரிகள் தான், தர்மம் பற்றி பேசுகின்றனர். நீதி பற்றி புலம்புகின்றனர்.

யாழ் கலாச்சாரம் என்பது, தர்மம் என்பது சாதியம் தான். இதற்கு வெளியில் ஆதிக்கம் பெற்ற மாற்றுக் கலாச்சாரம், தர்மம் கிடையாது. இந்த கலாச்சாரத்தின் பெருமைகளை அங்கீகரித்து, தனது சிறுமைகளுக்குள் ஒடுங்கி ஒதுங்கி வாழ்வதைத்தான் யாழ்ப்பாணத்து தர்மம் என்கின்றனர். வெள்ளாளர் சாதிய மேன்மையை ஏற்றுக்கொண்டு வாழ்வதைத்தான், அமிர் தனது சாதியக் கண்ணோட்டத்தில் நியாய அநியாயம் தெரிந்த பெருமை சிறுமைகளைத் தெரிந்தவள் என்கின்றான். ஆபத்தில் உதவத் தெரிந்தவள் என்பதன் ஊடாக, சாதி உயர் அதிகாரத்தில் இருப்பவனுக்கு, கீழ் சாதிகள் உதவுவதன் அவசியத்தை மனுதர்மப்படி விளக்கிவிடுகின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் தனது சொந்த காதலியை விடவும், மற்றொரு வெள்ளாடிச்சியான நீதிக்கும் நியாயத்துக்குமாக போராட லண்டன் வந்த பூமாவை விடவும், அதிலும் ஒரு இளம் அழகான பெண்ணை உயர்த்திக் காட்டுவது இங்கே நிகழ்கின்றது. எங்கே என்றால் சாதிய அமைப்புக்கு அவள் கட்டுப்பட்ட ஒரு நிலையில் உயர்த்தப்படுகின்றாள். அந்தப் பள்ளியின் சாதிய அவலத்தை எங்குமே அமிர் பேச முற்படவேயில்லை. நதியா என்ற பள்ளி யாழ்ப்பாணிய வெள்ளாளரின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு வாழ்வதால் தான், அந்த பெண்ணை தனது சாதிப் பெண்ணை விட புகழ்கின்றான்.

இந்த வெள்ளாளக் கோமாளிகள் அடிக்கும் கூத்துக்கு அளவேயில்லை. நதியா தனது சொந்த ஊரில் சாதிய அடிமைத்தனத்தில் சிக்கிக் கிடந்த வாழ்வைப்பற்றி குறிப்பிடும் போது 'அது வீடில்லை, அது ஒரு ஒற்றை அறை ஒலைக் குடிசை. படுக்கை, படிப்பு, சமையல், ஓய்வு எல்லாம் அந்த ஓரே அறையில்தான். அந்தக் குடிசை அமைந்திருந்த நிலங்கூட ஒரு கமக்காரனுக்குத்தான் சொந்தம். அரசினால் கைவிடப்பட்ட சாதி நாங்கள். அது தெரியுமோ உங்களுக்கு" என்று நதியா கேட்க அமிர் 'அதைவிடு நதியா.." என்கின்றான். இது தான் வெள்ளாள அரசியல். சாதி பார்ப்பதில்லை என்பதும், ஏதோ தமிழ் மக்களுக்கு கிழிப்பதாக புடுங்குவதும், நீதி நியாயத்துக்காக புலம்புவதும், உண்மையில் ஊரையும் உலகத்தையும் நடிப்பதற்கும் ஏமாற்றவதற்கும் வெளியில் எதுவுமல்ல. இதில் ஒரு சூக்குமத்தை வெள்ளாளர் புகுத்திவிடுகின்றனர். அரசினால் கைவிடப்பட்ட சாதி நாங்கள்" நல்ல நகைச் சுவை தான். ஏதோ சிங்கள அரசுதான் சாதியை பாதுகாப்பதாக வெள்ளாளன் வலிந்து கூறமுனையும் கோமளித்தனம் நிகழ்கின்றது. அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சில அடிப்படைகளை ஏற்படுத்த முனைந்த போதும் சரி, அந்த மக்கள் போராடிய போதும் சரி, அதை முன்னிலையில் நின்று எதிர்த்தவர்கள் தமிழ் தலைவர்கள் தான். வரலாற்றை இருட்டில் யாரும் மறைக்கமுடியாது.

அடிநிலைச் சாதிகள் இருப்பதை உயர்சாதியிடம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உயர்சாதிகள் அதை எடுத்துக்கொள்ளலாம். இது இந்து மனுதர்ம விதி. பள்ளி நதியா வெள்ளாளனின் சமூக இருப்பை ஏற்று, அந்தக் கலாச்சாரத்தை பேணிவாழ்வதால் தன்னிடம் இருப்பதை இல்லாத உயர்சாதி வெள்ளாளன் அமிருக்கு கொடுக்க வேண்டும். அதை அவளே சாதி கலாச்சார அடிப்படையில் விரும்பிச் செய்ய வேண்டும். அதை அவள் செய்கின்றாள்.

அதை அவளைக் கொண்டு விளக்க வைக்கப்படுகின்றது 'இல்லாத போது கை ஏந்திப் பழகிய நான், இருக்கும் போது கொடுப்பது தான் முறைமை" இது தான் மனுதர்மம். இதுவல்லவோ யாழ்ப்பாண சாதிய தர்மம். கையேந்தி வாழ்ந்த நாம், சொத்து சேர்க்கக் கூடாது. இது வெள்ளாளன் விதித்த சாதிய விதி கூட. அப்படி உள்ள நிலையில் இருப்பதை, இல்லாத வெள்ளாளனுக்கு கொடுத்துவிட வேண்டும். சொந்த சாதி சனத்துக்கு கூட கொடுக்கக்கூடாது. 'கை ஏந்திப் பழகிய" என்கின்றாளே, அப்படியென்றால் அவர்கள் உழைக்கவில்லையா? உழைப்புக்கு ஏற்ற கூலி ஏன் கிடைக்கவில்லையா? வெள்ளாளன் தானதர்மம் செய்ய, வானத்தில் இருந்து செல்வம் வீழ்ந்ததா? இல்லை சாதியைச் சுரண்டி வாழ்ந்தவன் வெள்ளாளன். அதனால் அவர்களிடம் அவர்கள் கையேந்தினர், கையேந்துகின்றனர்.

இந்த பள்ளி நதியா மூலம் தமது சாதிய பெருமையை சொல்ல வைக்கும் வெள்ளாளப் புத்தி சும்மா சூம்பிக் கிடக்கவில்லை. 'அமிர் எங்களின் இழிய யாழ்ப்பாணத்துப் பெடியள் மாதிரியில்லை. கெட்டபழக்கம் எதுவுமில்லை. வீட்டிலே இருந்தால் ஏதோ வாசித்தபடி இருப்பார் அல்லது ஆங்கிலச் செய்தி கேட்பார். வீட்டை விட்டு வெளியேறினால் நூல்நிலயத்துக்கு மட்டும் போவார். அவருக்கு என்னுடைய சமையலிலே நல்ல விருப்பம். என்னிலையும் அப்படித்தான்" என்கின்றாள். 'எங்களின் இழிய யாழ்ப்பாணத்துப் பெடியள்" மாதிரி இல்லை, அது என்ன? இது யாழ்ப்பாணத்து படித்த உயர்மேட்டுக் குடிகளின் சாதிய சமூகப் பார்வை. நல்ல பெடியன், கூடாத பெடியன் பற்றி அருவருக்கத்தக்க சாதிய மதிப்பீடு. இங்கு இழிய என்பது, தாழ்ந்த சாதியைக் குறித்து மையப்படுகின்றது. அந்த வகையில் வெள்ளாளப் பெடியள் உயர்வானவர்கள், தாழ்ந்த சாதிப் பெடியள் இழிவானவர்கள் என்ற அடிப்படை இதற்கு மறைமுகமாகவும் குத்தலாகவும் சொல்லப்படுகின்றது.
நதியாவை பார்க்கிலும் இரண்டு மடங்கு மூத்த ஒருவனான கில்லாடி, அவளை ஏமாற்றி திருமணம் செய்கின்றான். அவன் முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் ஒரு பிரதேசப் பொறுப்பாளன். இப்படி அசிங்கப்படுத்திய பின், அந்த கில்லாடி லண்டனில் வசித்த வீட்டு முகவரியை, புரட்சி வீதியாக காட்டி இழிவுபடுத்தப்படுகின்றது. அந்தளவுக்கு வலதுசாரிய வக்கிரம், சாதியமாகவே தொங்குகின்றது. மார்க்சியம் முடுக்கியது என்கின்றனர். இந்த கில்லாடி நாட்டில் வெள்ளாளர்களை தேடித்தேடி கொலை செய்ததாக இழிவுபடுத்தி காட்டப்படுகின்றது. இந்த பள்ளன் கில்லாடியை பள்ளி நதியா ஏன் வெறுக்கின்றாள் என்றால், வெள்ளாளரை அவன் கொலை செய்தபடியால் தான். இப்படி ஒரு சாதி வெள்ளாளன் மட்டும் தான், கற்பனை பண்ணமுடியும். இதனால் தான் வெள்ளாளன் அமிர் 'யாழ்ப்பாண கலாச்சார குறியீடு" இதுவல்லோ என்கின்றான். அவளைப் புகழ்ந்து 'யாழ்ப்பாண தர்மத்தின் நாதம்" என்கின்றான்.

இந்தளவுக்கு தனது கணவன் தூள் வியாபாரம் செய்து இலட்சக்கணக்கில் பணம் வைத்திருந்ததையோ, தூளை வீட்டில் வைத்திருந்ததையோ, அந்த சமூகவிரோதச் செயலையோ நதியா வெறுக்கவில்லை. மாறாக யாழ் சாதியக் கலாச்சாரத்தை மீறியதால், உயர்சாதிகளை கொன்றதற்காகவே வெறுக்கின்றாள். சாதி அரசியல் தலைவிரி கோலமாகி, நடுவீட்டில் நின்று ஆடுகின்றது. ஒரு கிரிமினலாக துணை போய் வாழ்வதோ, அவன் மனைவியாக வாழ்வதும் கூட அவளுக்கு பிரச்சனையில்லை. கடந்த காலத்தில் இயக்க மோதலாக நடந்ததாக கூறும் உயர்சாதிக் கொலைகள் தான், அவளுக்கு பிரச்சனை. அதுவும் உயர்சாதி வெள்ளாளரை கொல்லலாமோ? மனுதர்மம் படி பார்ப்பானைக் கொல்வது பாவம் என்ற விதி உள்ளடங்கியுள்ளது. இப்படி உயர்சாதியம் புளுத்து, தனது ஒழுக்கத்தை தனது இழிவை பறைசாற்ற முனைகின்றது.

அவள் கில்லாடியை வெறுக்கின்றாள், பிரிகின்றாள். அதை அவள் எப்படி வெளிப்படுத்துகின்றாள் என்பதே, மற்றொரு சாதியம் தான். அவள் தனது கணவனுக்குத் தெரியாமல், வெள்ளாளன் அமிரின் துணையுடன் நாட்டைவிட்டு துறவறம் பூண இந்தியாவுக்கு ஒடுகின்றாள். அதற்கு உயர்சாதி வெள்ளாளன் தனது அப்பளுக்கற்ற சாதிய நேர்மையுடன் உதவுகின்றான். இது சாதியத்தின் எல்லைக்குள் உயிர்வாழும், யாழ் சாதிய வழக்காகும். அவள் மறுமணம் செய்வதைப் பற்றியோ, ஒரு மோசமான ஒருவனுடன் வாழ்வதைவிடுத்து மற்றொருவனுடன் வாழ்வதையோ, உயர்சாதிய ஆணாதிக்கவாதம் சார்ந்த யாழ் கலாச்சாரம் அங்கீகரிக்கவில்லை. மாறாக இப்படிப்பட்ட பெண்களுக்கு துறவறமே மேலானது என்பதே, யாழ் சாதிய ஆணாதிக்க கலாச்சாரத்தின் எல்லைப்பாடாகும். மற்றொரு திருமணத்தை அதே சாதியில் அல்லது உயர் சாதியிலும் கூட யாழ் கலாச்சாரம் அனுமதிக்காது. எனவே சாதிய ஆணாதிக்க துறவறம் புகுத்தப்படுகின்றது. துறவறத்தை இந்தியாவில் உள்ள அன்னை திரேசாவின் மடத்துக்கு அனுப்பிவிடுவதன் மூலம், சாதியமும் அதற்குள் ஒளித்துக் கொள்கின்றது. அன்னை திரேசா மடம் சாதி பார்க்காத தூயமடமோ! அன்னை திரேசாவின் சேவையும், அவரின் புனிதமும் உண்மையில் போலியானதும் இழிவானவையுமாகும். இந்த விமர்சனத்தில் அதை விட்டுவிடுவோம்.

நதியாவை துறவறம் செய்வித்ததன் மூலம், அவளை சாதிய அடிப்படை உள்ளடகத்தில் இருந்து புனிதப்படுத்திவிடுவது நிகழ்கின்றது. மறுமணம் மறுப்பு, சாதிய அகமணம் என்ற எல்லைக்குள் மனித உணர்வுகள், யாழ் கலாச்சாரமாக சிதைந்து மலடாகிப் போகின்றது. எதார்த்தம் சார்ந்த இயல்பு வாழ்க்கை என்பது, யாழ் கலாச்சாரத்துக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகின்றது.

இந்த நதியா பற்றி வெள்ளாடிச்சி ஆவரங்கால அன்ரி 'நாட்டுப் பீத்தல் நாய்க்குக்கூட, நல்ல சாதிச் சடை நாய் தேவைப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் கூலிப் பிழைப்புச் செய்ததுகள் லண்டன் வந்ததும் அவைக்கு எங்கள் சாதிசனத்தின் நடுப்பந்தி தேவைப்படுகிறது" என்று வெள்ளாடிச்சி வெகுண்டு எழுந்த போது, வெள்ளாளன் அமிருக்கும் சரி, நீதி நியாயத்துக்காக போராடும் இரண்டு வெள்ளாடிச்சிகளும் மௌனமாக, யாழ் கலாச்சார மரபுக்கு இணங்க அதை இயல்பாக ஏற்றுக் கொள்கின்றனர். யாரும் இந்த அநியாயத்தை கண்டு குமுறி வெடிக்கவில்லை. இந்த ஆவரங்கால் அன்ரி அமிரின் உயர்சாதி மிதப்பை கூறிய போது, அது அமிருக்கு சுவைத்ததல்லவா. இப்படி சாதியம் ஒன்று கூடி யாழ் கலாச்சாரத்தை பாதுகாக்கின்றது. இந்த ஆவரங்கால் அன்ரியின் மகனை ஒரு இயக்கம் கழுத்தை வெட்டிப் போட்ட நிகழ்வை கூறிய அன்ரி, அதைச் செய்தவன் 'லண்டனில்தான் பெரிய வீடு. புதுக் கார். யாழ்ப்பாணத்தில் கொள்ளையடித்த தங்க நகை அணிய உலாவுகின்றான். கடத்தி வந்த வேறுசாதி வடிவான பொதுநிறப் பொம்பிளை, பிள்ளைகுட்டி எல்லாத்தோடும் பெரிய மனிதனாக வாழ்கிறான்." என்ற போது அமிருக்கு கோபம் வருகின்றது. இதே அன்ரி சாதியை இழுத்து, யாழ் கலாச்சாரத்தின் சின்னமான அமிர் கருதிய பள்ளி நதியாவை அவமானப்படுத்திய போது வராத கோபம், அன்ரியின் மகனுக்கு நடந்ததையிட்டு வருகின்றது.

அமிர் கூறுகின்றான் 'மண்ணின் மைந்தன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்" என்கின்றான் ... 'நீதி, நியாயங்கள், தர்மங்கள் செத்து மடிந்த பூமியாக்கப்பட்டுள்ளது. அது கொடியவர்களின் சித்திரவதைக் கூடமாக, கொலைக்கூடமாக, சுடலைமண்ணாக மாறியுள்ளது." என்கிறார். அன்ரியின் சாதிய இழிவாடல்களுக்கு வராத கோபம், சாதிய கொலையாக காட்டிய போது வருகின்றது. இங்கு அன்ரியின் மகனைக் கொன்றவன் குறைந்த சாதிக்காரன் என்பதும், அவன் அழகான வேறு சாதிப் பெண்ணை கடத்தி வந்ததாக கூறப்படுகின்றது. அவர்கள் ஆடம்பரமாக வாழ்வதாக வேறு சாதிய வெப்பாரம் கொட்டி தீர்க்கப்படுகின்றது. யாழ் கலாச்சாரத்தின் இழிவாடல்கள் எல்லாத் தளத்திலும் பொதுவானவை. பொதுவாக இன்று நாட்டில் நடக்கும் கொலை கொள்ளை பாலியல் வன்முறையை, புலி அல்லாத மற்றைய இயக்கம் மீது கூறுவதே யாழ் பண்பாடாக கலாச்சாரமாக அறிவாகவுள்ளது. அதேபோல் குறைந்த சாதிகள் மேல் இழிவாடுவது, குற்றம் சாட்டுவது வெள்ளாள இயல்பாக வழக்காக உள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளின் தாழ்ந்தசாதிகள் வாழும் வாழ்வை இழிவுபடுத்துவது இந்த நாவலின் மற்றொரு நோக்கமாகின்றது. நதியா பள்ளி என்பதால் அவள் பற்றிய அன்ரியின் மதிப்பீடும், அவள் பற்றிய குற்றச்சாட்டுகள் எல்லாம் எப்படி பொய்யானவையோ, அப்படித் தான் மகனின் கொலைக்கு சாதி குறைந்த ஒருவனை குற்றம்சாட்டுவது யாழ் மரபின் சாதியச் தொடர்ச்சிதான். தாழ்ந்த சாதிகள் உயர் சாதியைக் கொன்றதாக கற்பிக்கும் அரசியல், யாழ் வெள்ளாள உயர்வர்க்கங்களின் வலதுசாரிய சுத்துமாத்துதான்.

அமிரின் வெள்ளாளக் கோபம் அதை தர்க்கிக்கும் வாழ்வியல் இருப்பிடமே, ஒடுக்கப்படும் சாதிகள் வாழும் இடமாகின்றது. இந்த சுடலைமண்ணில் தான், தாழ்ந்த சாதிகள் வாழ வெள்ளாளர் அனுமதித்துள்ள இடமாகும். வெள்ளாளர் ஆக்கிரமித்து வைத்துள்ள பூமிகளில் தான், அதுவும் வளமற்ற வறண்ட கல்லு பூமிகளில் தான் ஒடுக்கப்பட்ட சாதிகள் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாழ அனுமதித்தமைக்காக, உயர் சாதியினருக்கு இலவசமாக சேவை செய்யவேண்டும். இங்கு சாதிய ஒடுக்குமுறையாகவே ஒருபுறம் அந்த மக்கள் மேல் ஏறி நின்று கொண்டு, தம் மீதான ஒடுக்குமுறையைக் கண்டு குமுறுகின்றனர். ஆனால் அதை சாதியமாக, சாதியக் கொலையாக திரித்து சிறுமைப்படுத்தி, சாதியத்தை பாதுகாக்கும் போராட்டமாக எதிர்நிலையில் மாற்றுகின்றனர்.

சாதியங்கள் உயிருடன் முரண்பாடின்றி நாவல் முழுக்க தன்னைத்தான் நிலை நிறுத்துகின்றது. நீதி கோரி லண்டன் வந்த பூமா என்ற வெள்ளாடிச்சியிடம், ஆவரங்கால அன்ரி முறையிடும் போது 'அந்தத் தேவடியாள் நதியாதான். அவளைக் கூட்டிவந்து நடு வீட்டுக்குள்ளே வைத்து நான் வந்த நேரம் - அவை சினிமா நடத்துகினம். நாங்கள் உந்த எழிய சாதிகளை வீட்டுத் திண்ணையில் கூட ஏறவிடுவதில்லை. அது உனக்கு தெரியுமில்லே பூமா" என்கின்றாள். ஆணாதிக்கம், உயர்சாதி ஆதிக்கம் அனைத்தும் எந்த வெட்க நாணமின்றி கொப்பளிக்கின்றது. இதற்கு பதிலடியாக பதிலளிக்க முற்படும் ப+மா, சாதியத்தையே அவாவுக்கு எதிராக பயன்படுத்துகின்றாள். 'அன்ரி நீங்கள் எழிய சாதி, எழிய சாதி என்று கத்துகிறீர்கள். உங்கள் கூடப்பிறந்த தங்கையின் மகன் ஒரு தொண்டைமானாறு கரையாரப் பெட்டையைக் கிட்டடியிலே காதல் பண்ணிக் கலியாணம் பண்ணினவராம். லண்டன் சனம் எல்லோருக்கும் தெரிந்து குசுகுசுத்து காறித் துப்புகினம். ..." என்ற பதில், மீண்டும் சாதியாகவே கொப்பளிக்கின்றது. இது சாதியத்தை, சாதிய எல்லையைக் கடந்து வெளிவரவில்லை. நீங்கள் என்ன திறமான சாதியா என்று கேட்கின்ற, சாதியத்தை மேம்படுத்தி காட்டும் போக்குத் தான் இங்கு வெளிப்படுகின்றது. இது யாழ் கலாச்சார மரபில் இயல்பான ஒன்று. மற்றவரை மட்டம்தட்ட சாதிய கலப்பை அல்லது சாதியை இழுப்பது யாழ் கலாச்சார உயர்சாதிய மரபாகும். உங்கடை ஆட்களுக்கை இப்படி அப்படி என்று, இழிவாடிக் சீண்டிக் கதைப்பது சாதாரணமான ஒன்றாகவே உள்ளது. இரண்டு உயர் சாதி நபர்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாட்டில் இது சர்வசாதாரணமானது.

ஒருவர் சார்ந்த பெண்ணை ஆணாதிக்க அடிப்படையில் இழிவாடுவது போல், நீ தாழ்ந்தவன் நான் உயாந்தவன் என்ற சாதிய தர்க்கவாதம், உயர்சாதிய எல்லைக்குள் சர்வ சாதாரணமானது. உயர்சாதி வெட்டிப் பேச்சிலும், இந்த யாழ் கலாச்சார சாதிய வாதங்கள் உண்டு. ஏன் இந்த வெள்ளாடிச்சி பூமா அமிரை நதியா வீட்டில் தங்க வைக்காமல் தடுக்க, ஜீவிதாவுடனான உரையாடலில் இந்த சாதியம் சர்வசாதாரணமாக கொலுவேறுகின்றது. உண்மையில் சாதியம் தொடர்ந்தும், பல சாதிய பாத்திரங்கள் ஊடாக பாதுகாக்கப்படுகின்றது.

No comments: