தமிழ் அரங்கம்

Sunday, October 1, 2006

தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை?

தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை?

பி.இரயாகரன்

ருவனுடைய அறிவு அல்லது கோட்பாடு எத்துணை உண்மை என்பதைத் தீர்மானிப்பதற்கு அவன் அது பற்றி எவ்வாறு அகவயமாக உணர்கிறான் என்பதில் தங்கியிருக்க முடியாது. ஆனால் சமூக நடைமுறையில் புறவயமான அதன் விளைவு என்ன என்பதிலேயே தங்கியிருக்க வேண்டும். நடைமுறை ரீதியான கண்ணோட்டம் தர்க்கவியல் பொருள் முதல் வாதத்தின் முதன்மையானதும் அடிப்படையானதுமான கண்ணோட்டமாகும்"


லெனின் எடுத்துக் காட்டும் இந்த உண்மை, எல்லா சமூக நடைமுறைக்கும் விதிவிலக்கற்று இணைந்து போகின்றது. நமது சமூகக் கண்ணோட்டம் சார்ந்த எண்ணப்பாடுகளை எப்போதும் தர்க்கரீதியான நடைமுறை வாழ்வியலுடன் பொருத்திப் பார்க்கத் தவறுகின்ற போது, உண்மையில் நாம் மிக மோசமாக ஏமாற்றப்படுகின்றோம். இங்கு சமூக அறியாமையே அடித்தளமாகின்றது. இது எல்லாத் துறையிலும் விதிவிலக்கின்றி புரையோடிப்போயுள்ளது. விமர்சனமற்ற மந்தைக் குணமும், சுயவிமர்சனமற்ற வரட்டுத்தனமும் சமுதாயங்களையே அடியோடு புதைக்கின்றன. நிகழ்வுகள் ஏன், எப்படி, எதன் ஊடாக எம் முன் தோன்றுகின்றது என்ற கேள்விகளையும் தர்க்கவியல் வாதங்களையும் விமர்சன, சுயவிமர்சன போக்கில் முன்வைக்க சமுதாயம் தவறுகின்ற போது, அந்த சமுதாயம் தனது சுய அடையாளத்தை இழந்துவிடுவதுடன், அழிந்து போகின்றது. இது தமிழ் சமூகத்துக்கும் சிறப்பாக பொருந்துகின்றது. தமிழ் சமூகம் சிங்கள இனவாதத்தை எதிர்த்து நடத்தும் போராட்டம், இந்த எல்லைக்குள் தன்னை தற்காத்துக் கொள்ளமுடியாது.


தமிழ் மக்களின் சொந்த தேசியத்தை சிங்கள இனவாத அடிப்படை மட்டும் இன்று அழித்துக் கொண்டிருக்கவில்லை என்ற சமூக உண்மையை கிரகிக்க முடியாதவர்களும், அதேநேரம் அதை எதிர்த்துப் போராட முடியாத வரலாற்றுத் தலைமைகள், வரலாற்று ரீதியாக தூக்கி எறியப்படுவார்கள். இதற்கு வெளியில் இந்தக் குறுந்தேசிய அலையில் சிக்கி அதன் பின்னால் வாலை முறுக்கிக் கொண்டு ஓடுபவர்களின் வரலாற்றுப் பிழைப்பு வாதம், இந்த எல்லையைத் தாண்டி குதித்து விடாதபடி சகதியில் சிக்கிவிடுகின்றது. இன்று எம் மண்ணில் குறுந்தேசிய தமிழ் எழுச்சிகள் எல்லாம், மக்களின் அடிப்படையான தேசிய கோரிக்கைக்கு எதிராகவே இருப்பது, தமிழ் மக்களுக்கு வெட்டப்படும் மரணக்குழி தான். இன்று நடத்தப்படும் தமிழ் குறுந்தேசிய எழுச்சி இறுதியானதும் கடைசியானதுமாகும். இன்றைய சமகாலகட்டத்துக்கு பின், இது போன்ற குறுந் தமிழ் தேசிய எழுச்சி என்பது இன்றைய உலகமயமாதல் நிபந்தனையின் கீழ், ஒருக்காலும் சாத்தியமில்லை. இலங்கைத் தேசிய எழுச்சி மட்டுமே இனி வரலாற்றால் சாத்தியமானது. இன்று நடை பெறும் பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டாலும் சரி, இல்லாமல் போய் யுத்தம் தொடர்ந்தாலும் சரி, சர்வதேச நிலமையும் புலிகளின் அரசியல் நிலமையும் இதைத் தாண்ட அனுமதிக்காது.


ஆகவே தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்பதை தெரிந்து கொள்வது, இன்றைய சமகால நிகழ்ச்சிப் போக்கில் முக்கியமான அடிப்படையான விடையமாகும். தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்ற கேள்விக்கு, போராடும் புலிகள் உட்பட யாரும் பதிலளிக்க முடியாத வகையில் அரசியலில் சூனியம் நிலவுகின்றது. தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு என்று உணர்பவர்கள், அவை என்ன என்று விளக்க முடியாத அவலம் நிலவுகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனையை, யுத்தத்தின் பின்னான நடைமுறை விளைவுகளில் இருந்து புரிந்து கொள்வதும் விளக்குவதும் நிகழ்கின்றது. புலிகள் வன்முறை மூலம் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி, ஒரு தலைப்பட்சமாக தம்மைத் தாம் தமிழ் மக்களின் தலைமையாக நிலைநிறுத்திய தனிமனித வழிபாட்டுடன் கூடிய கோரிக்கையில் இருந்தும், தமிழ் மக்களின் பிரச்சனையை விளக்கும் அளவுக்கு தமிழ் மக்களின் தேசிய போராட்டம் பலவீனமடைந்து காணப்படுகின்றது.


புலிகள் தமது அதிகாரத்தை பலாத்காரமாக தமிழ் மக்கள் மேல் நிறுவ முன்பே, இனவாத ஆக்கிரமிப்பு ஒரு இனஅழிப்பு யுத்தமாக வளர்ச்சியுற முன்பே, தமிழ் மக்களின் தேசிய பிரச்சனை என்ற ஒன்று இருந்துள்ளது. குறைந்தபட்சம் அது என்ன என்ற அடிப்படை விடையம் கூட தெரியாத ஒரு தமிழ் சமூகத்தை, தமிழ் குறுந் தேசியத்தை இன்று நாம் காண்கின்றோம். தமிழ் மக்களின் அடிப்படையான தேசியத்தை கோராத தேசியம் தான் குறுந்தேசியமாகின்றது. ஆயுத கலாச்சாரமே குறுந்தேசியமாகி அரசியல் வடிவத்தையே ஒழித்துக் கட்டியதன் மூலம், இராணுவ வாதம் சார்ந்த கோரிக்கை தமிழர் கோரிக்கையாகியது மட்டுமின்றி, அதுவே தமிழ் மக்களின் கோரிக்கையாகிவிடுகின்றது. இதனால் தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயகக் கோரிக்கை முற்றாக மழுங்கடிக்கப்பட்ட நிலையில், இன்று அதை மீளவும் அரசியல் ரீதியாக தெளிவுபடுத்தி முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிவிடுகின்றது.


தமிழ் தேசிய பிரச்சனையை தமிழ் மக்கள் ஒருவிதமாகவும், சிறுபான்மை தேசிய இனப்பிரிவுகள் வேறுவிதமாகவும் புரிந்து கொண்டனர், புரிந்து கொள்கின்றனர். இதுபோல் சிங்கள மக்களும் புரிந்து கொண்டனர், புரிந்து கொள்கின்றனர். இது போன்று வர்க்கம், சாதி, பால் என்ற பிளவுகளில் கூட வெவ்வேறு தளத்திலும் வெவ்வேறு விதமாக புரிந்து கொண்டனர், புரிந்து கொள்கின்றனர். ஆனால் ஆதிக்க தமிழ் பிரிவுகள் தேசியப் பிரச்சனையை தமது நலனில் நின்று அதை பொதுமைப்படுத்தி திரித்து விடுவதன் ஊடாக, தமது நலன்களை தக்க வைக்கின்றனர். இதற்கு இன்றைய தமிழ் மீடியாக்கள் அனைத்தும் ஒரேவிதமாக ஒத்தூதும் பினாமியாகி வக்காலத்து வாங்குகின்றனர். தமிழ் தேசிய மற்றும் அதற்கு வெளியிலும் எங்கும் விமர்சன தன்மையற்ற மந்தைக் குணம் ஒரு நோயாகி, அதுவே ஒரு சமூகத்தை அழிக்கும் அளவுக்கு இன்று தமிழ் பரப்பு காணப்படுகின்றது. ஏன், எதற்கு, எப்படி இவை நிகழ்கின்றன என்று கேள்விகளை கேட்பதை விடுத்து, அரோகரா போடுவதில் தேசியம் மலட்டுத்தனத்தை பண்பாடாக்கியுள்ளது. இதற்கு இன்றைய புத்திஜீவிகள் நடைமுறை ரீதியாக சமூகத்தை மாற்றியமைக்க போராட வேண்டும் என்ற சமூகக் கடமையை கைவிட்டு, மந்தைகளாகி நாய் போல் வாலாட்ட தொடங்கியதில் இருந்து, தேசியத்தை கற்பழிப்பது ஒரு முற்போக்கான செயல் என்ற நடைமுறையை பொதுமைப்படுத்தியுள்ளனர். இந் நிலையில் நாம் பொதுவான தளத்திலும், அதற்கு வெளியில் குறிப்பாகவும் தமிழ் மக்களின் பிரச்சனையை ஆராய்வோம்.

தொடரும்

இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும் என்னும் நூலின் கட்டுரைகளின் தொகுப்பு தொடர்ச்சியாக பகுதியாக பகுதியாக பிரசுரிக்கப்படும்.

No comments: