தமிழ் அரங்கம்

Sunday, November 5, 2006

நீதி கிடைக்குமா?

மாலேகான் குண்டு வெடிப்பு :

நிவாரணம் கிடைக்கலாம், நீதி கிடைக்குமா?


காராஷ்ரா மாநிலத்திலுள்ள மாலேகான் நகரில், செப்டம்பர் 8 அன்று அடுத்தடுத்து நடந்த நான்கு குண்டு வெடிப்புகளில் 31 பேர் கொல்லப்பட்டனர்; 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். வெள்ளிக்கிழமை தொழுகை முடியும் நேரத்தில், குறிப்பாக, முசுலீம்கள் இறந்து போன தங்களின் உறவினர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் நாளில், ஹமீதியா மசூதி, படா காபரிஸ்தான் (முசுலீம்களின் மயானம்) ஆகிய இடங்களில் இந்தக் குண்டு வெடிப்புகள் நடந்துள்ளதால், இதனை நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையாகவே கருத முடியும்.


ஏற்கெனவே, முசுலீம் பகுதி, இந்து பகுதி என மதரீதியாகப் பிளவுண்டு கிடக்கும் மாலேகான் நகரில் நடந்துள்ள இந்தக் குண்டு வெடிப்புகள், மீண்டுமொரு மதக் கலவரத்தைத் தூண்டிவிடுமோ என்ற பீதி மகாராஷ்டிரா மாநிலத்தையே ஆட்டிப் படைத்தது. அந்நகரைச் சேர்ந்த முசுலீம் மதப் பெரியோர்களின் முன்முயற்சியால் கலவரம் மூளுவது தடுக்கப்பட்டுவிட்டபோதிலும், அந்தப் பீதி மட்டும் இன்றும் அந்த நகரைவிட்டு விலகி விடவில்லை.


குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலையில் அரசு மருத்துவமனை இருந்ததால், படுகாயமடைந்த பலரை மாலேகானில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள துலியா நகருக்குத் தூக்கிக் கொண்டு ஓட நேர்ந்தது. குண்டு வெடிப்பை விட, அதிகார வர்க்கத்தின் இந்த அலட்சியம்தான் மாலேகான் முசுலீம்களை ஆத்திரம் கொள்ள வைத்தது. சோனியா தலைமையில் மாலேகானுக்கு வந்த காங். கும்பல் நட்டஈட்டை வீசியெறிந்து, அவர்களின் கோபத்தைத் தணித்துவிட முயன்றது. ஆனால், பாதிக்கப்பட்ட பலரும் நட்டஈட்டை வாங்க மறுத்து, ஆட்சியாளர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டனர்.


இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யவில்லை என்றும்; இந்தக் குண்டு வெடிப்பை யார் / எந்த அமைப்பு செய்தது என்பது பற்றி சிறிய தடயம் கூட போலீசாருக்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


அதேசமயம் முசுலீம்களைக் குறி வைத்து இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றிருப்பதால், இதற்குப் பின்னணியில் இந்து தீவிரவாத அமைப்புகள் இருக்கலாம் என்ற ஊகம் பொதுமக்களிடையே இருந்து வருகிறது. ஆனால், மகாராஷ்டிரா போலீசோ, ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகளை இயக்கும் அளவிற்கு இந்துமத தீவிரவாத அமைப்புகள் திறன் பெற்றவை அல்ல என நற்சான்றிதழ் வழங்கி, அந்தத் திசையில் விசாரணை நடத்தக் கூட மறுத்து வருகிறது. ஆனால், இந்த ஊகத்தை முன்வைக்கும் பத்திரிகையாளர்கள் கூட, (தி ஹிந்து, 9.9.06,

பக். 13) நந்தேடில் நடந்த குண்டு வெடிப்பையும்; ஜல்னா, பர்பானி ஆகிய சிறு நகரங்களில் மசூதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.


மகாராஷ்டிராவில் நந்தேட் மாவட்டத்திலுள்ள தரோடா கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த ராஜ்கோண்ட்வர் என்பவரது வீட்டில் கடந்த ஏப்ரல் 6 அன்று நடந்த குண்டு வெடிப்பில் ஹிமான்ஷû பான்ஸே, நரேஷ் ராஜ்கோண்ட்வர் என்ற இரு இளைஞர்கள் குண்டு வெடித்த இடத்திலேயே உடல் சிதறி இறந்து போனார்கள். யோகேஷ் தேஷ்பாண்டே, மாருதி வாக், குருராஜ் துப்தேவர் என்ற இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். குண்டு வெடித்த சத்தம் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவிற்குக் கேட்டது.


ஆனால், நந்தேட் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரோ, நடந்தது குண்டு வெடிப்பு அல்ல என்றும்; அந்த வீட்டில் இருந்த பட்டாசுகள் எதிர்பாரதவிதமாக வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட விபத்து என்றும் பூசி மெழுகினார். குண்டு வெடித்த மறுநாள் போலீசாரோடு பொதுமக்களும், பத்திரிகையாளர்களும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றாகச் சென்று, குண்டு வெடிப்பு நடந்த வீட்டைச் சோதனையிட்டபொழுது, ஒரு வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பிறகுதான், மகாராஷ்டிரா மாநில அரசின் சிறப்பு ஐ.ஜி. அந்த வீட்டில் இருந்த இளைஞர்கள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தயாரிக்க முயன்றதை ஒப்புக் கொண்டார்.


காயம் அடைந்தவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அந்த வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிப்பது நீண்ட நாட்களாக நடந்து வருவதும்; பர்பானி, புர்னா, ஜல்னா ஆகிய ஊர்களில் மசூதிகளின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்குத் தொடர்பிருப்பதும் தெரிய வந்தது. மேலும், இறந்து போன இளைஞர்களும்; காயம் அடைந்தவர்களும் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விசுவ இந்து பரிசத்தின் அமைப்புகளின் தீவிர உறுப்பினர்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைமையே ஒப்புக் கொண்டது.


ஆனால், மகாராஷ்டிரா போலீசோ இக்குண்டு வெடிப்பின் பின்னணியில் உள்ள இந்து பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தாமல், அக்குண்டு வெடிப்பை, உள்ளூர் கிரிமினல் சம்பவமாகச் சித்தரித்து மூடிவிட்டது. குறிப்பாக, இக்குண்டு வெடிப்பிற்கும், சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பை மகாராஷ்டிரா போலீசார் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளவில்லை.


முசுலீம் தீவிரவாதிகள் மீது பொடாபோன்ற பாசிசச் சட்டங்களை ஏவிவிடும் ஆளுங்கும்பல், இக்குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது சாதாரண கிரிமினல் சட்டங்களின் கீழ் தான் வழக்குத் தொடர்ந்தது. குறிப்பாக, கைது செய்யப்பட்ட இந்து பயங்கரவாதிகள் மீது, மகாராஷ்டிரா மாஃபியா நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மகாராஷ்டிரத்தை ஆளும் காங்கிரசு கூட்டணி கண்டு கொள்ளவேயில்லை. தனது ""இந்து'' ஓட்டு வங்கியை, பா.ஜ.க. சிவசேனா கும்பல் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகவே, காங்கிரசு கூட்டணி அரசு இந்து பயங்கரவாதிகளிடம் மென்மையாக நடந்து கொண்டது.

முசுலீம் தீவிரவாதம் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவரும் பிரவீண் சுவாமி என்ற பத்திரிகையாளர், ""நந்தேட், பர்பானி, ஜல்னா ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளைப் பார்க்கும்பொழுது, இந்துமதத் தீவிரவாத அமைப்புகளின் குண்டு தயாரிக்கும் திறன் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடுகிறார். ஆனால், மகாராஷ்டிர மாநில அரசின் தீவிரவாத எதிர்ப்பு போலீசு பிரிவோ, மாலேகானைச் சேர்ந்த 20 ""இந்து'' இளைஞர்களைப் பிடித்துப் போய், ஒப்புக்காக ஒரு விசாரணை நடத்திவிட்டு, விடுவித்து விட்டது.


மும்பய் ரயில் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னே, இந்திய முசுலீம் மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த முன் னாள் ஊழியர்களைக் கூட விட்டு வைக்காமல், கைது செய்து விசாரணை நடத்திய மகாராஷ்டிரா போலீசார் மாலேகான் குண்டு வெடிப்பில், எந்தவொரு இந்துமத பயங்கரவாதியின் மீதும் கைகூட வைக்கவில்லை.

இது ஒருபுறமிருக்க, மும்பய் ரயில்களில் வெடித்த குண்டுகளும் மாலேகானில் வெடித்த குண்டுகளும் ஒரே மாதிரியானவை; எனவே, முசுலீம் தீவிரவாத அமைப்புகள் கூட, மதக் கலவரத்தைத் தூண்டிவிடும் எண்ணத்தோடு, இந்தக் குண்டு வெடிப்பை நடத்தியிருக்கக் கூடும் என்ற ஆதாரமற்ற ஊகத்தை பத்திரிகைகள் மூலம் போலீசு பரப்பி வருகிறது.


இப்படி எதிரும், புதிருமான சந்தேகங்களை, ஊகங்களை முறையாக விசாரிக்காமல் இழுத்தடித்தால், மாலேகான் நகரைச் சேர்ந்த இந்துக்களுக்கும், முசுலீம்களுக்கும் இடையே நிலவி வரும் பகையும், வெறுப்பும் அதிகரிக்கத்தான் செய்யும்; அந்நகரைப் பிடித்தாட்டும் மதக்கலவர பீதி அணைந்துவிடாமல் ஊதிவிடப்படும். ஆர்.எஸ்.எஸ். இந்து பயங்கரவாதிகள், முசுலீம் தீவிரவாதிகள் மட்டுமின்றி, "மதச்சார்பற்ற' காங்கிரசும் இந்தப் பிளவைத்தான் விரும்புகிறது.


தனபால்

No comments: