தமிழ் அரங்கம்

Saturday, December 30, 2006

வார்த்தைகளால் நாம் எழுத முடியாதவை

வார்த்தைகளால் நாம் எழுத முடியாதவை

பி.இரயாகரன்
30.12.2006


ரக்கமேயற்ற எமது தமிழ் சமூகம். கண்ணை மூடிக்கொண்டு நித்திரை கொள்கின்ற சமூகம். எல்லாம் நன்றாகவே சிறப்பாகவே நடப்பதாக கூறிக் கொண்டு, குப்பிற வீழ்ந்து தொழுகின்ற சமூகம்.


தமிழ் இனத்தின் பெயரில் பட்டங்கள், பதவிகள், புகழ் உரைகள் ஒருபுறம். மறுபக்கம் தமிழ் இனத்தின் எதிரிகள் என்ற தூற்றும் பட்டங்கள். இவை எல்லாம் எதற்காக? சரி இந்த தமிழ் மக்கள் எப்படி வாழ்கின்றனர்! யாராவது ஒருத்தர் உண்மையாக சிந்திக்கின்றனரா? மனசாட்சியைத் திறந்து ஒருகணம் யோசிக்க நீங்கள் தயாரா? ஏன் மௌனம்? யாருக்கு ஏன் எதற்கு பயப்படுகின்றீர்கள்! பிறகு மக்கள் பற்றி பேச உங்களுக்கு என்னதான் தார்மீகப்பலம் இருக்கின்றது!


மக்களுக்கு வெளியில் நீங்கள் யாருக்காக, எதற்காக கொக்கரிக்கின்றீர்கள்? உங்கள் கொக்கரிப்புக்கள் போதும். தயவு செய்து நிறுத்துங்கள். தமிழ்மக்கள் அழிந்து சிதைந்து போக முன் கையெடுக்காத அனைவரும் இதற்கு துணை போபவர்கள் தான்.. புலிகள் இருப்பார்களா? இல்லையா? என்பதல்ல, புலிகள் என்ன நினைக்கின்றனர் என்பதல்ல பிரச்சனை. மக்கள் இருப்பார்களா? இல்லையா? என்பதை ஒரு கணம் சுயமாக சிந்தியுங்கள்.


தமிழன், தமிழனின் இரத்தம் என்றெல்லாம் விழுந்தெழுந்து மீசையில் உள்ள மண்ணைத் தட்டிவிட்டு புலம்பும் எமது மேதாவித்தனம், ஒரு இனத்தின் அழிவில் நிரந்தரமாக நித்திரை கொள்கின்றது. இந்த வீபூசணன் நித்திரை குழம்பும் போது, தமிழ் உணர்வற்ற கூலிக் குண்டர் படையாகவே கொக்கரிக்கின்றது. தமிழனின் அழிவு தமிழீழ இலட்சியம் என்பதே இந்த குண்டர்களின் இலட்சியமாக இருப்பது, அவர்களின் மலட்டு புத்திக்கு தெரிவதில்லை.


தமிழ் இனம் என்றமில்லாத வகையில் இன்று சந்திக்கின்ற அவலம் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. இதை வார்த்தையால் எழுத முடியாது. இவை தனித்தனி சோகமல்ல, மொத்த சமூகத்தினதும் மீள முடியாத சோகம். மறுபக்கத்தில் இதற்குள்ளாத தமிழினம, அதிகளவில் உறங்கி செயலற்று கிடக்கும் காலமும் இது தான். எல்லாம் புலியாகி கிடக்கும் வரலாற்றின் சதியோ! ஐயோ இந்த புலிச் சதியை என்னவென்பது? புலிகளே தமிழ் மக்களை அழிக்கின்ற, அதற்கு துணை நிற்கின்ற வரலாற்றின் துயரத்தை நாம் என்னவென்பது?


பேரினவாதத்தின் கொடூரமான சதிகளும், சூழ்ச்சிகளும் நிறைந்த காலம் இது. இதற்குள் அமைதி, சமாதானம், யுத்த நிறுத்தம், தீர்வு, மக்களின் தீர்வு என்று எத்தனையோ அரசியல் நாடகங்கள், கூத்துகள். யாரைச் சொல்லி அழுவது? யாரைப் பொறுப்பாக்குவது.


மலட்டுத்தனத்தை தேசியமாக்கியதன் விளைவு. ஆக்கத்தை மறுத்த சமூகம். அழிவை விரும்பி வரவேற்ற சமூகம். சுயநலம் கொண்ட பச்சோந்திச் சமூகம். சமூக அவலத்தைக் கூட சொல்ல வக்கற்ற ஒரு சமூகமாக சீரழிந்து பிணமாகிக் கிடக்கின்றது. இல்லை என்கின்றீர்களா?


தமிழினத்தின் அவலத்தைக் கூட பேசமுடியாது வக்கிழந்து நிற்கின்றது. பேரினவாதம் என்றுமில்லாத வகையில் இராணுவம், அரசியல் வழிகளில் கொடூரமாகவே இயங்குகின்றது. தமிழ் இனத்தின், இன இருப்புக்கே அது வேட்டு வைத்துவருகின்றது. எங்கெல்லாம் செறிவு குறைந்தளவில் தமிழ் இனப் பிரதேசங்களாக இருக்கின்தோ, அங்கிருந்து மக்கள் விரட்டப்படுகின்றனர். இதை புலிகளைப் பயன்படுத்தி செய்கின்றனர் என்ற உண்மை, நெற்றியடியாக எம்முன் இறங்குகின்றது. புலிகளின் யுத்ததந்திரம் மற்றும் நடைமுறைத் தந்திரம் என்ற புலிகளின் வண்டியில் ஏறி நின்றே, தமிழினத்தின் அழிவை பேரினவாதம் வெற்றிகரமாக கொக்கரித்து செய்கின்றது.


தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களை, அமைதியும் சமாதானமும் நிறைந்த யுத்த சூனியத்துக்கு உட்படுத்தி விரட்டியடிக்கின்றனர். அந்த மக்களின் இனத்துவம் சார்ந்த சகல அடிப்படைகளையும் இல்லாதொழிக்கின்றனர். மீள முடியாத, மீட்க முடியாத நிகழ்ச்சிகள் நடந்தேறுகின்றது. நாதியற்ற வாழ்க்கை, கையேந்தி நிற்கும் பரதேசிக் கூட்டமாக தமிழ் மக்களின் ஒருபகுதி நிரந்தரமாக மாற்றப்பட்டுவிட்டனர். இந்தப் பரதேசி மக்களுக்குள் நின்று, அரசின் கூலிப்பட்டாளமான கருணாகும்பல் விளம்பரத்துக்கு படம் கொடுக்கின்றனர். தமிழ்செல்வனின் விளம்பரப் பற்களைப் போல், நிவாரணம் என்ற பெயரில் கருணா என்ற கூலிக் கும்பல் அந்த இழிந்து போன மக்கள் மத்தியில் வக்கரிக்கின்றனர்.


உண்மையில் மொத்த தமிழ் மக்களையும் பரதேசிகளாக்குவதே, பேரினவாத அரசின் சமகால யுத்த தந்திரம். அதை வெற்றிகரமாக செய்கின்றனர். புலிகளின் தவறான ஒவ்வொரு யுத்ததந்திரத்தையும், தனக்கு சார்பாக மாற்றுகின்ற அரசியல் இராணுவ சதி.


புலிகள் தமது சொந்தத்தேவையையொட்டி உருவாக்கிய புலித் தேசிய அரசியல் என்பது, இன்று அவர்களாலேயே நியாயப்படுத்தமுடியாத சொந்தப் படுகுழிக்குள்ளேயே பிணமாக விழுகின்றனர். பணம், தமது அதிகாரம், இதற்கு வெளியில் அவர்களால் எந்த அரசியலையும் சிந்திக்க, செயலாற்ற, நடைமுறைப்படுத்த முடிவதில்லை. சமூகம் பற்றி அனைத்து சமூகக் கூறுகளையும் அறவே அவர்கள் இழந்து விட்டனர்.


ஒரு பாசிச மாபியா குழுவாகி, இன்று குண்டர்படையாக மாறி களத்தில் நிற்கின்றனர். சமூகத்துடனான எல்லா உறவையும் இழந்து, அது வேகமாவே இழிந்து வருகின்றது. சமூகம் பற்றிய அக்கறை, மனிதம் பற்றிய சிந்தனை எதுவுமின்றி, ஒரு இனத்தின் அனைத்து ஆக்கத்தையும் அழித்து நிற்கின்றனர். மக்களுக்காக சிந்தித்து செயலாற்றக் கூடிய யாரையும் வாழவிடாத ஒரு தேசத்தின் அழிவு, மீட்சியற்ற நிரந்தரமாகின்றது. தமிழ்மக்களின் துன்ப துயரத்தை இட்டு அலட்டிக் கொள்ளாத போக்கு. சொந்த தாய் தந்தைகளின், குடும்பங்களின் அவலம் எல்லையற்று போகின்ற நிலையில், அதையிட்டு எந்த எதிர்வினையுமற்ற இரக்கமற்ற கூலி இராணுவ குணமே அரங்கேறுகின்றது. ஓரு சமூகத்தை தமது குறுகிய குதர்க்கமான இராணுவவாத எல்லைக்குள் திணித்து, அதன் அவலங்களை மக்களின் அடிவயிற்றிலே ஒரு குண்டாக கட்டி விடுகின்றனர். குறுகியகால நோக்கில் மக்களையே பணயப் பொருளாக வைத்து, இராணுவ ரீதியாக தப்பிப்பிழைக்க முனைந்து தோற்கின்றனர். இதன் விளைவு நீண்டகால நோக்கில் மக்கள் மத்தியில் மீட்க முடியாத, மீள முடியாத தோல்வியையும் புலிகள் சந்திக்கின்றனர். நிரந்தரமான இராணுவ தோல்விக்கும் இவை காரணமாகின்றது.


இதன் ஒரு பகுதியாக இராணுவ ரீதியாக கிழக்கில் புலிகள் படிப்படியாக ஒழித்துக் கட்டப்படுகின்றனர். அரசியல் ரீதியாக எப்போதோ தோற்கடிக்கப்பட்டு விட்டனர். இதன் விளைவு, மிகக் கொடூரமாக மக்களையே பணயம் வைக்கும் அளவுக்கு இது பண்பு ரீதியாக மாறியது. இதன் விளைவு இராணுவ மற்றும் அரசியல் ரீதியாக கிழக்கில் இருந்து புலிகளை மொத்தமாகவே இல்லாது ஒழிக்கின்ற பேரினவாத சதி வெற்றி பெற்றுவருகின்றது. புலிகள் வழமைக்கு மாறாக மீளமுடியாத பாரிய நெருக்கடியை சந்திக்கின்றனர். கண் மூடித்தனமான ஒரு பாரிய தீடிர் தாக்குதலை நடத்தும் ஒரு உத்தியை நோக்கி ஒடுங்கிச் செல்லுகின்றனர். அதுவும் கிழக்கில் அல்ல. அதற்கான இராணுவ அரசியல் வலு அங்கு கிடையாது. வடக்கில் தான், அவர்களால் நடத்த முடியும் என்ற நிலை. அதுவும் எவ்வளவுக்கு வெற்றி பெறலாம் என்பது சந்தேகம் தான். தமது அழிவுடன் கூடிய இறுதியான தாக்குதலை நடத்த முனையலாம். ஆனால் மக்களிடம் அன்றாடம் தோற்றுவரும் புலிகள், தமது குண்டர்களின் மூலமான அடாவடித்தனம் மூலமான எந்த வெற்றியும், நீட்சியானதாக நிரந்தமானதாக இருக்கமுடியாத நிலைக்கு தாழ்ந்து வீழ்கின்றனர்.


வாகரை மக்களும் பேரினவாதமும்


கொடூரங்களின் மொத்த முகம் வாகரையில் அரங்கேறியது. ஒருபுறம் புலிகள், மறுபுறம் பேரினவாதம். மக்கள் பற்றி சிறிதுமே அக்கறையற்ற வக்கிரம். யாழ்ப்பாணத்தில் இப்படி ஒருநிலை என்றால், யாழ்ப்பாணியம் இப்படி மௌனம் காத்திருக்காது. அந்த மக்கள் சுனாமியை மிஞ்சிய அவலம். செல் மாரிக்குள்ளும், மழை மாரியும் இணைந்து அந்த மக்களை பஞ்சைப் பரதேசிகளாக கையேந்தி நிற்க வைத்துள்ளது. ஒரு நேர சோத்துக்கு வழியில்லை. கடின உழைப்பும், தம்பாடும் என்று இருந்த மக்களின் மேல் நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனம். போர்வெறியர்களை மன்னிக்கவே முடியாத ஒரு குற்றம்.


யாழ் மேலாதிக்கத்தை திணிக்கவும், அவற்றை அறுவடை செய்யவும் முயன்ற புலிகளின் குறுகிய இராணுவவாதம் தோற்கின்றது. அந்த மக்களை பணயம் வைத்ததன் மூலம், நிரந்தரமாகவே தோற்றுவிட்டனர். எஞ்சி நிற்பது இராணுவ ரீதியான இறுதித் தோல்வி தான். ஆனால் அந்த மக்கள் தம்மிடமிருந்த அனைத்தையும் இழந்தது மட்டுமல்ல, இனம் என்ற சொந்த அடையாளத்தையும் இழந்து பரிதவிக்கின்றனர்.


ஒரு நேரக் கஞ்சிக்கு புனர்வாழ்வு கிடையாது. தமிழ் மக்கள் என்று மூக்கால் சிந்தி அழும் தேசியம் வாழாவெட்டியாகி தலைகுனிந்து நிற்கின்றது. இந்த மக்களுக்காக, அவர்களுக்குக்கென்ற எந்த நிவாரணமும் செய்ய வக்கற்று கிடக்கின்றது. தமிழ் இனம் என்று பேத்தவும், வீரம் பேசவும், குண்டர் குணத்தைக் காட்டவும் வரிந்து கிடக்கும் வக்கிரம், அந்த மக்களின் அவலம் மீது ஒரு துளிதன்னும் அக்கறை காட்டியது கிடையாது.


இதற்குள் அந்த மக்களுக்கு நிவாரணம் என்ற பெயரில், புலியெதிர்ப்புக் கும்பல் கடை விரிக்கின்றது. மற்றொரு பாசிட்டான கருணா கும்பல், பேரினவாத கைக்கூலிகளாக சீரழிந்து போன நிலையில், இந்த நிவாரணக் கடைவிரிப்பை செய்கின்றனர். மானம் கெட்ட பிழைப்பும், அரசியலும். கூலிக் கும்பலின் பின்னால் வரிந்து கட்டி நிற்கின்றனர். மக்கள் நிவாரணம் பற்றி புலம்பும் இந்த கூலிக் கும்பலின், மக்கள் அரசியல் என்ன? கைக்கூலித்தனம் என்பதை தவிர வேறு எதுவுமில்லை. தாம் மக்களுக்கு உதவுவதாக காட்ட விளம்பரப் படம் போடுகின்றனர். அண்ணன் பிரபாகரன் புலிகள் அப்படி என்றால், தம்பி கருணா புலிகள் சும்மா விடுவார்களா?


இராணுவ முகாங்களிலும், அவர்களின் பாதுகாப்பிலும் பவனிவருகின்ற கருணாத் தம்பிகள் நோக்கம் என்ன? மக்களை எப்படி ஏமாற்றலாம், எப்படி அதைக் கொண்டு வாழலாம் என்ற வக்கிரம். புலிக்கு நிகர் நாங்கள். வடக்கை நீ பார், கிழக்கை நான் பார்க்கின்றேன் என்ற தத்துவம். மக்கள் என்று குலைக்கும் இந்த நாய்கள், மக்களின் ஊனை தின்றுவிட்டு வந்து சதா ஊளையிடுகின்றனர்.


வடக்கு கிழக்கு பிரிவினை


எல்லாம் ஒருங்கே நடக்கின்றது.ஜே.வி.பி இனவாத சதியைத்தான், பேரினவாத அரசு அமுலாக்குகின்றது. என்ன அரசியல், என்ன ஓற்றுமை. வடக்குகிழக்கு சம்பிரதாய பூர்வமாக இணைக்கப்பட்டு இருந்ததை பிரிப்பது, அதற்கு நீதிமன்றத்தில் நீதியின் பெயரில் ஒரு தீர்ப்பு.


அரசியல் நாடகத்தில் நீதிமன்றங்கள், அவர்களின் இனவாத தீர்ப்புகள். எத்தனையோ மனிதவுரிமை மீறல்கள் முதல் ஒரு இனத்துக்கு எதிரான நடத்தைகள். அப்போது இந்த நீதிமன்றம் எங்கே சென்றது. அண்மையில் திருகோணமலையில் வைக்கப்பட்ட புத்தர்சிலையை அப்படியே நீதிமன்றம் பாதுகாக்கின்றது. இப்படி தமிழினத்துக்கு எதிராக நீதிமன்றம் உறங்கிக் கிடக்கின்றது. இந்த இனவாத Nஐ.வி.பிக்கு அது மட்டும் அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு இனவாதம் என்ற மாலைக்கண் நோய்.


இனவாத வக்கிரத்தின் அனைத்துவிதமான இழிவுகளையும், தமிழ்மக்கள் மீது திணிக்கின்றனர். வடக்கு கிழக்கை பிளந்து, மக்களைப் பிரித்து குளிர் காய பேரினவாதம் முனைப்பு கொண்டுள்ளது. தமிழ்மக்கள் வேறு, புலிகள் வேறு என்று இனவாத நோக்கில் அரசியல் பேசும் பேரினவாதம், இந்த விடையத்தில் புலிகயையே அனைத்துமாக்கி தமிழ் மக்களை பிளந்து போடுகின்றது. இதற்கு புலியின் பிளவு நடவடிக்கையை ஆதரித்து, அதற்கு துணையாக நின்று அதைச் செய்கின்றது. புலிக்கு சார்பாக மக்களை பிளந்து தான் பங்குக்கு பிரிக்கின்றது.


புலிகளின் பாசிசம், மாபியாத்தனம், குண்டர் தனம் அனைத்தையும் கொண்டே வடக்குகிழக்கு பிளவை நிரந்தரமாக்குகின்றனர். அத்துடன் பலகாலமாக நீடித்த, நீடிக்கின்ற யாழ் மேலாதிக்கத்தை துணைகொண்டு, தமிழ் இனத்தில் கூலிக்கும்பல்களின் துணையிலும் தமிழினத்தின் பிளவை அகலமாக்கி அதை நிரந்தரமாக்குகின்றனர்.


இப்படி கூலிக்கும்பல் உருவாக்கம் சதா நிகழ்கின்றது. புலிகளின் பாசிச கொடூரங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள், புலியெதிர்ப்புக் கும்பலாக சீரழிந்து பேரினவாதத்தின் பின்னால் இயல்பாக தொடர்ச்சியாக சரணடைகின்றனர். தமிழ் இனத்தின் ஓட்டுமொத்த பலம் சிதறடிக்கப்பட்ட பல துண்டுகளாக சுக்குநூறாகி கிடக்கின்றது. அது மேலும் மேலும் அகலமாகின்றது.


பட்டங்கள், பதவிகள், மேதைகள் பற்றி பிரமைகள் ஒருபுறம், அதனால் தமிழ் மக்களை காப்பாற்ற, வழிகாட்ட நாதியற்ற சமூகம் ஒருபுறம். இதற்கு தமிழ் தேசியம் என்ற விண்முட்ட கொக்கரிக்கும் ஒரு தலைக் காதல். இப்படி நெருக்கடி உச்சத்தை தொடுகின்றது


வன்னி மண் மக்களின் நிலைமையோ கொடூரமாகின்றது


புலிகள் சந்திக்கின்ற நெருக்கடியும், அதன் எதிர்வினையும் வன்னி மக்களின் மேலாக பிரதிபலிக்கின்றது. ஒருபுறம் தமிழ் மக்களுடனான அனைத்து தொடர்பையும் மிகக் கடுமையாக பேரினவாதம் கட்டுப்படுத்துகின்றது. மறுபுறம் புலிகள் இதை மேலும் இறுக்கியுள்ளனர். தாம் செய்வது வெளியே தெரியக் கூடாது என்பது புலிகள் நிலை.


வன்னியின் உள்ளாக நடக்கும் செய்திகள் மெதுவாக கசிகின்றது. ஒரு கொடூரம் அரங்கேறுகின்றது. பேரினவாதத்தின் கொடூரமான வெற்றிகள், புலிக் குண்டர்களின் தோல்வியாகின்றது. அதன் எதிர்வினை வன்னி மக்கள் மேலானதாக பாய்கின்றது. மக்களை எச்சரிக்கும் புலிகளின் பல அறிவித்தல்கள், வன்னி மண்ணில் ஒட்டப்பட்டுள்ளது. பல புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் புலிகள் அத்துமீறுகின்றனர். அவர்கள் கட்டாயமாக கட்டுப்படுத்தி வைக்கின்றனர். அவர்களின் ஒருபகுதி பயிற்சியின் பெயரில் கடத்தப்படுகின்றனர். மீறினால், எதிர்த்தால் கண்மண் தெரியாத தாக்குதல்களும் மரணங்களும். பல மரணங்கள் தாக்குதல் மூலம் நிகழ்ந்துள்ளது. மருத்துவமே அற்ற பூமியில், இப்படிப்பட்ட தாக்குதலே வீங்கி வெம்பி வதக்குகின்றது.


தொழில் இல்லை, நிவாரணம் இல்லை, வாழ வழியற்ற சமூகம் வெந்து வேதனையில் சிதைகின்றது. யாரும் மூச்சுக் கூட விடமுடியாது. இங்கு தான், தமிழ் இனத்தின் எழுச்சி பற்றியும், வீரம் பற்றியும் பேச்சுகள், உரைகள் நிகழ்த்தப்படுகின்றது. இந்த அழிவு மீது கொண்டாட்டங்கள் ஆடம்பரமாகவே ஊரறிய நடத்தப்படுகின்றது. மக்கள் மௌனமாக, நடைப்பிணமாக, கைகட்டி வாய் பொத்தி நிற்கின்றனர்.


யாராவது மக்கள் பற்றி, அவர்களின் உணர்வுகள் பற்றி நினைத்தார்களா? பாவம் மக்கள் என்பதா? எந்த வகையில் இந்த துன்பங்களை நாம் வார்த்தையால் எழுத முடியும். வார்த்தைக்குள் அடக்க முடியாதவை.


வடக்கில் நிகழும் பரிதாபம்


புலிச் சூறையாடலை பயன்படுத்தி தமிழ் மக்கள் மேலான பாரிய பொருளாதார தடை. புலிகள் வேறு, மக்கள் வேறு என்று பீற்றிக் கொள்ளும் பேரினவாதிகளின் யுத்த தந்திரம் இதிலும் பொருந்துவதில்லை.


வடக்கு முற்றாக பொருளாதார தடைக்குள் சிக்கியுள்ளது. அந்த மக்களின் பரிதாப நிலையை வார்த்தைகளால் சொல்லிமாளாது. யாரையும் நொந்து கொள்ளமுடியாத வகையில், புலிகள் தொடக்கிய கொலைக் கலாச்சாரத்தை பேரினவாதம் கையேற்றுள்ளது. வகை தொகையற்ற கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல். புலிகளையே மிஞ்சும் அழித்தொழிப்பு. இதற்கு பின்னால் செயற்படும் ஜனநாயகம் பேசும் தமிழ்க் கூலிக்குழுக்கள். வவுனியாவில் கூட இராணுவத்துடன் சேர்ந்து, கருணாவின் கூலி கொலைகாரக் கும்பல் செயற்படுகின்றது. புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்ற அடிப்படையில், தமிழ் மக்களுக்காக கூட தமிழ் மக்கள் குரல்கொடுக்க கூடாது என்பதில், கொலைகாரக்கும்பல் கவனமாக தேர்ந்து படுகொலைகளைச் செய்கின்றது.


மறுபக்கம் உணவு இன்றி மக்கள் அல்லற்படுகின்றனர். மறுபுறம் வாழ்வு சார்ந்த இயல்புத்தன்மையை மக்கள் இழந்து நிற்கின்றனர். தமது உறவு சார்ந்த வாழ்வியலை பூர்த்தி செய்ய முடியாத வாழ்க்கையை, மக்களின் மேல் பேரினவாதம் வலிந்து திணித்துள்ளது. இந்த அவலத்தை போக்கும் வகையில், நகர மறக்கும் இரக்கமற்ற இதயமற்ற புலிகள். மனிதம், கருணையற்ற புலிகளின் முன் இவை எதுவும் செல்லுபடியாவதில்லை.


இதைப் பயன்படுத்தி பேரினவாத இராணுவம் உணவு விநியோகத்தை செய்கின்றது. தனது கடைகள் மூலம் மக்களை அணுகுகின்றது. மக்கள் இயல்பாக இராணுவத்துடன் தொடர்பு கொள்கின்ற அவலநிலை. எதிரி பற்றிய படிமானங்கள், புலி எதிர்பார்த்ததை விட, எதிர் நிலையில் பேரினவாதத்துக்கு சார்பாக பரிணமிக்கின்றது. மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில், ஒரு பேரினவாத இயல்பை உருவாக்குகின்றது. உணவுக்காக இராணுவத்திடம் மக்கள் செல்லும் போது, அங்கு ஒரு கூலிப்பட்டாளத்தை உருவாக்கிவிடுகின்றது.


இதை மீறி மக்களின் இயல்பு வாழ்வை பெறமுடியாத வகையில், தனியார் உணவு விநியோகத்தை புலிகள் தடுக்கின்றனர். உண்மையில் வர்த்தக அமைப்பு இதை மீறுகின்ற போது, அதுவும் புலிகளை மேலும் தனிமைப்படுத்தும் என்ற நிலை. எங்கும் அராஜகத்தை சமூகமயமாக்கிவிடுகின்றனர். உணவுக்கு கையேந்தும் மக்கள், தேவை கருதிய வாழ்வை நகர்த்த முடியாத வாழ்வை, நாம் எப்படி வார்த்தைகளால் எழுதமுடியும்.


தன்னைப்பற்றி கற்பனையில் பீற்றிக்கொள்ளும் இனத்தால், என்னதான் செய்யமுடியும், தனது சொந்த சமூகத்தின் பிணத்தை வைத்துக் கொண்டு, போலியாக நடித்து வீம்புக்கு அழமுடிகின்றது. அவ்வளவே.


உங்களுக்கு, உங்கள் மனிதாபிமானத்துக்கு இது உறைக்கவில்லை. நீங்கள் மலடா? உங்கள் செம்மறிக் குணம் மாறாதா? என்ன நடக்கின்றது என்று கண்ணை திறந்து பார். எல்லாம் நன்றாகவே, நிறைவாகவே நடக்கின்றது என்ற உபதேசம் போல் உறங்கிக் கிடவாதே. முடிந்தால், உணர்ச்சியிருந்தால், நீ உன் மக்களைப் பற்றி ஒரு கணம் நினைத்துப் பார்.

1 comment:

Anonymous said...

தோழமையோடு இரயாவுக்கு வணக்கம்!

இந்தக் கட்டுரையை வாசித்ததின் பின்பாக மனதுக்கு மிகக் கஷ்டமாக இருக்கிறுது.


புலிகளின் ஒவ்வொரு தோல்வியும் நமக்கு எவ்வளவு வருத்தமோ அவ்வளவு வருத்தம் உங்களை நினைத்தால்!


இந்த மனிதன் தன் வாழ்நாள் அனைத்தையும் மக்களின் விடிவுக்காச் சிந்தித்துத் தன்னைப் பற்றிக் கவனியாத-தன் குடும்பம் பற்றிக் கவனியாது, பொது நலத்தை தூக்கி நிறுத்தும் மனிதாராக,இந்தவுலகத்தில் இவ்வளவு காலமும் நாம் கற்பனையில் மக்கள் தோழனை யாசித்ததை, நீங்கள் உங்கள் உருவில் நிரூபிக்கின்றீர்கள். புலிகளின் தோல்வியை நம்மால் ஜீரணிக்க முடிந்தாலும், புலிகளின் கீழ்மட்டப் போராளிகள் சிங்களப் பாசிச இராணுவத்திடம் கொலையாகிப் போவதை கனவில்கூட நாம் ஏற்பதற்கில்லை.எங்கள் சிறார்களைப் புலித் தலைமை பலிகொடுப்பதை நாம் விரும்பவில்லை.அவர்களின் ஒவ்வொரு அசைவும் தமிழ்பேசும் மக்குளுக்கு விடிவளிக்காதோ என்ற நப்பாசையோடுதாம் நாம் இதுவரை எழுதுவது.


எங்கள் மழலைகளைப் பலி கொடுப்பதை நாம் விரும்ப வில்லை.அவர்கள் தம்முயிரையே அற்பணஞ் செய்யும் தூய மனிதர்களாக இருக்கிறார்கள்.ஆனால் அவர்களின் தியாகத்தைத் தமது வர்க்க நலனுக்குப் பயன் படுத்தும் புலித் தலைமையை வெறுத்தொதுக்குவதைத் தவிர நம்மால் என்ன செய்ய முடியும்?


இரயா,தங்கள் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அறிவுடையது.


இதை மீறிய இன்றைய அறிவு நாணயம் எவருக்குமில்லை!


நீங்கள் செய்வது மக்களுக்கான மிகப் பெரும் பங்களிப்பு!

இதை என்னால் எப்படி வாழ்த்த முடியும்!

நீங்கள் மக்களின் நன்மைக்காக உங்கள் வாழ்வையே அர்பணித்துள்ளீர்கள்!இது எந்த வகையிலும் முகத் துதியில்லை.உங்கள் உழைப்பை நான் மெச்சுகிறேன்!


ஒரு சண்முகதாசனாலோ அல்லது இரத்தினசபாபதியாலோ அல்லது சிவசேகரம்,சிவத்தம்பியாலோ செய்ய முடியாத தத்துவப் போரை நீங்கள் தமிழ் பேசும் மக்களுக்காக ஆற்றி வருகிறீர்கள்.


காலங்கள் நம்மைத் தொலைக்கலாம்.அடுத்த சந்ததியாவது இந்த உங்கள் முயற்சியின் ஒளியில் தம் இருண்ட வாழ்வுக்கு ஒளியேற்றுவார்கள்.

இதைத்தாம் இப்போது உரைக்க முடிகிறது.

அன்புத் தோழரே தங்களுக்கு எனது அன்பார்ந்த நன்றி,உரித்தாகட்டும்! கூடவே புத்தாண்டு வாழ்த்து.தங்கள் குடும்பத்தையும் கவனிக்கவும்.பொது நலம்,பொது நலமென்று உழைத்துக் கிடக்கும் நீங்கள் உங்கள் வாழ்வையும் கவனிக்கவும்.பொது நலத்தைத் தமது குடும்ப நலனுக்குப் பயன் படுத்தும் தமிழர்களுக்குள் நீங்கள் மக்கள் நலனுக்காக உங்கள் பொன்னான வாழ்வை மறுதலிக்கிறீர்களோவென்று ஐயுறுகிறேன்.மார்க்ஸ் 25 ஆண்டுகளாகத் தனது குடும்பத்தையே மறந்து பொது நலனுக்காக மூலதனத்தைத் தந்தார்.

நீங்களும் அதையே தொடர்கிறீர்கள்!

உங்கள் தனிப்பட்ட வாழ்வையும் சற்றுக் கவனியுங்கள்.உங்களோடு நாம் தோள் சேர்க்கிறோம்.


பிறக்கும் புத்தாண்டில் தொடர்ந்து சந்திப்போம்!


தோழமையுடன்

ப.வி.ஸ்ரீரங்கன: