தமிழ் அரங்கம்

Saturday, March 3, 2007

தேனீ எமக்கு சொல்ல முனைவது என்ன?

புலியெதிர்ப்பை அரசியலாக கொண்டவர்கள் சார்பாக, தேனீ எமக்கு சொல்ல முனைவது என்ன?

பி.இரயாகரன்
03.03.2007


ங்களைப் போல் எப்படி அரசியல் விபச்சாரத்தை செய்வது என்பதை, எமக்கு விளக்க முனைகின்றனர். தேனீ தனது ஏழாவது வருட நிறைவை ஓட்டிய இணையச் செய்தியில், எமக்கு பதில் சொல்ல முனைவதன் மூலம், தமது சொந்த விபச்சார அரசியல் என்ன என்பதையும் எடுத்துக்காட்ட முனைகின்றனர். மக்களின் முதுகில் எப்படி தாங்களும், தங்கள் வழி வந்தவர்களும் சவாரி செய்கின்றனர் என்பதை சொல்லி, அதை எமக்கும் கற்றுத்தர முனைகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், எமது கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்கின்றனர். அதாவது "திரும்பத்திரும்ப ஒரே விடயத்தை வெவ்வேறு வசனங்களில் கூறுவது, சும்மா கிறுக்குவதுபோன்று எழுதுவது, திட்டு எழுத்துகள் போன்றவற்றுக்கு தேனீ ஒருபோதும் மதிப்பளியாது." என்றவர்கள், அதே செய்தியில் எமக்கு எதிராக நீண்ட ஒரு பதிலை முன்வைக்கின்றனர். அவர்களின் ஏழாவது வருட அறிக்கை, எமக்கு எதிராக அமைந்ததன் மூலம், புலிகளையல்ல எம்மை எதிர்கொள்வதே அவர்களுக்கு இன்று சவாலாகவுள்ளது. அவர்கள் அதை சவாலாக கொண்டு, முன்வைத்த நீண்ட கருத்தைப் பார்ப்போம்.


"ஜனநாயகத்தின் குரல்களான ரி.பி.சி. வானொலி மற்றும் தேனீ இணையத்தளத்தின் வருகையின் பின்னர் இன்று தமிழிலும் ஆங்கிலத்திலும் குறிப்பாக பல புதிய இணையத்தளங்கள் வெளிவந்துள்ளன. இவ்விணையத்தளங்களில் பெரும்பாலானவற்றை தேனீயின் இணைப்புகளில் பார்வையிடலாம். இவ்விணையத்தளங்களின் பல்வேறு பரிமாணங்களையும் பிரித்தறிந்து தனித்தனியே உற்றுநோக்காது கண்மூடித்தனமாக அனைத்துமே வெறும் புலி எதிர்ப்பு இணையத்தளங்களென முத்திரை குத்துபவர்களும் எம்மிடையே இருக்கத்தான் செய்கின்றார்கள். தமிழ் சமூகத்தினை புலி எதிர்ப்பு, புலி ஆதரவென இரண்டாகப்பிரித்துவிட்டு தாங்கள் இரண்டு பிரிவினரையும் ஒப்புநோக்கும் திறனாய்வாளர்களாக (அதுவும் தாங்கள் மாத்திரம்தான் ஏதோ அங்கீகாரம் பெற்ற "இடது" என்கின்ற நினைப்புடன்) இவர்கள் வலம் வருகின்றார்கள். புலிப்பாசிசத்திற்கெதிராகவும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடுபவர்களை புலி எதிர்ப்பென்ற வகையறாக்களாக வர்ணிக்கும் இவர்களின் நோக்கம் எமக்கு புரியாதல்ல. ""புலிகளை முற்று முழுதாக அழிப்பது என்பது தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தை முற்றுமுழுதாக அழிப்பதாகிவிடும்" என்ற தமிழ்த்தேசியத்தின் மீதான அளவற்ற காதலால் (தீவிர தேசிய வாதம்) புலிகளை திருத்த வேண்டுமென்று கருதும் இவர்கள், தமிழ் ஊடகங்களின் புலிப்பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை புலி எதிர்ப்பென குறுக்கிவிடப் பார்க்கின்றார்கள். இதன் மூலம் நேரடியாவே புலி எதிர்ப்பென்ற வகைக்குள் தங்களை அடக்க வேண்டாம் என்றும் கோருகின்றார்கள். அப்படியானால் இவர்கள் யார்? புலி எதிர்ப்புக்கும் புலி ஆதரவுக்கும் இடையிலிருப்பதாக கூறும் இவர்கள் யார்? புலி எதிர்ப்புக்கும் புலி ஆதரவுக்கும் இடையில் என்ன இருப்பதாக இவர்கள் கூற முற்படுகின்றனர்? ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் நடுவில் எந்தக்கருத்தோட்டத்தை புகுத்த விளைகின்றனர்? கடந்த இரு தசாப்தகால புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் வரிசைப்படுத்துவதன் மூலம் புலிகளை ஒரு பாசிஸ இயக்கமென பகிரங்கமாக அறிவிக்க முன்வருவார்களா? அல்லது புலிகள் ஒரு ""தேசிய விடுதலை இயக்கம்" என்பதையாவது பகிரங்கமாக தெரிவிப்பார்களா? ""மக்கள் நலன், மக்கள் நலன்" எனக்கூறிவிட்டு, முழு இலங்கை மக்களினதும் விரோத இயக்கமான வேலுப்பிள்ளை பிரபாகரனை தலைமையாகக் கொண்ட புலிகளின் பிடிகளிலிருந்து மக்களை விடுவிக்கப்போராடும் ஜனநாயக சக்திகளைப் பார்த்து புலியெதிர்ப்பென்றும், இன்னும் சொல்லப்போனால் ஆதாரங்கள் எதுமில்லாமல் இலங்கை அரசு ஆதரவென்றும் பொய்க்கதைகள் புனைகின்றார்கள். புலியெதிர்ப்பென்பதே புலியென்ற இருத்தலை அங்கீகரிக்காதவர்கள். பாசிசத்திற்கென்ன அங்கீகாரம்? பாசிசத்தை நிர்மூலமல்லவா செய்யவேண்டும்.


இந்த மக்கள் நலன் அதிகாரிகள் வெறும் குழப்பல்வாதிகள். புலிகள் தொடர்பாகவும் இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனை தொடர்பாகவும் சரியான நிலைப்பாடு எடுக்கத்தெரியாதவர்கள். 1972 ஆண்டின் பின்னர் உருவாகிய தமிழ்த்துரோகிகள் ஒழிப்பு அலை, 1980களில் ஆயுதமேந்திய தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டமென வர்ணிக்கப்பட்டு, 1986 ஆண்டு ரெலோ அழிப்பின் பின்னர் தமிழ்த்துரோகிகள் ஒழிப்பு போராட்டமாகவே தொடர்ந்தது. ""புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்" என்பது ""புலிகளின் தாகம் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் குருதி" என்பதாக மாற்றங்கொண்டுள்ளது. இதனால் இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனையென்பது புலிப்பாசிஸ்டுகளால் முற்றுமுழுதாக உருமாற்றப்பட்டுள்ளது. (இதைப்பற்றி மிகவும் விரிவாக எழுதப்பட வேண்டும், பரந்தளவில் விவாதிக்கப்பட வேண்டும்) இப்போது பாசிஸம் என்ற தடையை அகற்றாமல் இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனை முற்றுமுழுதாக தீர்க்க முடியாது என்ற நிலைக்கு நாங்கள் வந்தடைந்துள்ளோம் என்பதே யதார்த்தம். கடந்த இரு தசாப்த காலத்தில் இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனை தொடர்பாக தென்னிலங்கை ஆளும்வர்க்கங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஓரளவிற்கேனும் சாதகமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது. தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள இச்சாதகமான சூழலை, இலங்கையிலுள்ள தேசிய இனங்கள் நுகர முடியாமல் இருப்பதற்கும் புலிகளே காரணம். எந்தவொரு சமூகத்திலும் பிரதானமாக நிலவும் ஒரு கருத்தோட்டத்திற்கு எதிராக ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்தோட்டங்களும், அவ்வாறான பல்வேறு வகைப்பட்ட கருத்தோட்டங்களை சீர்தூக்கிப்பார்க்கும் மேலும் பல கருத்தோட்டங்கள் நிலவுவது சர்வசாதாரணமானதே. ஆனால் தமிழ் சமூகத்தில் பிரதானமாக புலி எதிர்ப்பு, புலி ஆதரவென இரண்டு பிரதான கருத்தோட்டங்கள்தான் நிலவுவதாக இந்த மூன்றாம் பாதையாளர்களுக்குத் தெரிகின்றது. புலி எதிர்ப்பு, புலி ஆதரவு என்ற இரண்டையும் நிராகரித்து தமது மூன்றாம்பாதையை கவனத்திற்கொள்ளுமாறு, அவரவர்கள் தம்பாணியில் வேண்டுகோள் விடுக்கின்றார்கள். மூன்றாம்பாதையை நிராகரிக்கும் நாலாம் பாதையும், நாலாம்பாதையை நிராகரிக்கும் மேலும் பல நூறு, ஆயிரம் கருத்தோட்டங்களினூடாகவே சரியான கருத்தென்பதை நாம் வந்தடைய முடியும் என்பதை இந்த சித்தம் கலங்கியவர்கள் மறந்து விடுகின்றனர்.


தேனீ இணையத்தளத்தின் அபரீதமான வளர்ச்சியையும் கடந்த ஆறு வருட காலத்தில் தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினையும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தொடர்ச்சியாக தேனீ மீது அவதூறுகளையும் வசைகளையும் பொழிந்து வருகின்றனர். புலிகளிலிருந்து புலி அல்லதாவர்களென தங்களைக் கூறிக்கொள்பவர்கள்வரை அவதூறுகளையும் வசைகளையும் பொழிவதில் முன்னிற்கின்றார்கள். தேனீயை வம்புக்கிழுத்து ஜனநாயகக்குரலினை மழுங்கடிக்கும் திட்ட அட்டவணையைக் கொண்டவர்களின் சூழ்ச்சிகளுக்கு தேனீ ஒருபோதும் பலியாகாது. தேனீயைப்போன்றே, தேனீயின் பல இலட்சம் வாசகர்களும் பண்பாடற்றவர்களின் கூச்சல்களை எளிதில் அசட்டை செய்துவிடுகின்றார்கள். தேனீயில் வெளியாகும் கருத்துகளுக்கு விமர்சனப்பண்புடன் தெரிவிக்கப்படும் எதிர்வினைகளுக்கு மாத்திரமே தேனீ பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது. திரும்பத்திரும்ப ஒரே விடயத்ததை வௌவேறு வசனங்களில் கூறுவது, சும்மா கிறுக்குவதுபோன்று எழுதுவது, திட்டு எழுத்துகள் போன்றவற்றுக்கு தேனீ ஒருபோதும் மதிப்பளியாது."


இப்படி முதன் முதலாக, முக்கி முனங்கி, அதுவும் பெயர் குறிப்பிடாது, (நாங்கள் மட்டும்தான், அதாவது தமிழ் அரங்கமும் ஒருசில எழுத்தாளர்களும் தான், இக்கருத்து சார்ந்த எழுத்துலகில் உள்ளனர்.) எமக்கு எதிராக தேனீ முன்வைத்த கருத்து. தேனீ தனது ஏழாண்டு நினைவையொட்டி வெளியிட்ட அறிக்கையில், தமிழரங்கம் அவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது. எமது கருத்தை எதிர்கொள்ள முடியாது, அவர்கள் பாணியில் பல கேள்விகளை எழுப்புகின்றனர். முத்திரை குத்துகின்றனர். பல விளக்கத்தை, பரிதாபகரமாக எமக்கு எதிராக முன்வைக்கின்றனர்.


எம்மிடம் இப்படிக் கேட்கின்றனர் "கடந்த இரு தசாப்தகால புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் வரிசைப்படுத்துவதன் மூலம், புலிகளை ஒரு பாசிஸ இயக்கமென பகிரங்கமாக அறிவிக்க முன்வருவார்களா?" இப்படி கேட்கும் இவர்கள், எமது கருத்துகள் தெரியாத வண்ணம், ஊர் உலகத்தின் கண்ணையே புலியைப் போல் கட்டி வைத்துவிட்டு, மற்றவன் கேனயன் என்ற நினைப்பில் இப்படி உளறுகின்றனர். எமது புலம்பெயர் சமூக செயல்பாடாக வெளிவந்த சமர் முதல் முதலிலேயே, புலிப்பாசிசத்தை அம்பலப்படுத்த தொடங்கியவர்கள் நாங்கள். நீங்கள் இலக்கியம் என்ற பெயரில், வம்பளந்து கொசுறு அடித்த காலத்தில் எல்லாம், தன்னந் தனியாக பாசிசத்தக்கு எதிராக போராடியவர்கள். புலம்பெயர முன்பு, புலிக்கும் மற்றைய இயங்கங்களுக்கும் எதிரான போராட்டங்கள் பலவற்றை நடத்தியவர்கள் மட்டுமல்லாது தலைமை தாங்கியவர்கள். அனைத்து இயக்க பாசிசத்தையும் எதிர்த்து, அந்த மண்ணில் மக்களுடன் மக்களாக நின்று முன்னெடுத்தவர்கள். எந்த மாற்று இயக்கமும் இதற்காக போராடவில்லை. நாங்கள் சுயாதீனமாகவும், அமைப்பு ரீதியாகவும் தலைமை தாங்கி போராடியவர்கள். இதனால் மக்களுக்காக மட்டும் போராடிய எம்மில், பலர் கொல்லப்பட்டனர்.


நாங்கள் சந்ததியார் நடத்திய போராட்டத்தின் பின்னணியில், தீப்பொறி நடத்திய போராட்டத்தின் பின்னணியில், புளாட் நடத்திய பின்தளமகாநாட்டின் உள்ளேயும், ரெலோவில் நேரு (நேரு பின் எம்முடன் இணைந்த போது ரெலோவால் கொல்லப்பட்டவர். இதற்கு எதிராக ஒரு இலட்சம் துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தோம். இதன் போது பலர் தாக்கப்பட்டனர்.) போன்றவர்கள் நடத்திய போராட்டத்தில், ரெலோ தாஸ்சுக்கு அரசியல் ரீதியாக வழிகாட்டும் பின்னணியில், ஈ.பி.ஆர்.எல்.எப் செழியன் தாஸ் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் எல்லாம், இப்படி பல நூறு போராட்டங்களின் மக்கள் நலனை முன்னிலைப்படுத்திய போராட்டத்தில், நாம் அவர்களுக்கு துணை நின்று அக்கம்பக்கமாக மக்கள் நலனை முன்னிறுத்தி போராடியவர்கள்.


புலிப்பாசிசம் என்பதை நீங்கள் சொல்லும் முன்னமே, நாம் தான் கோட்பாட்டு ரீதியாக முன்வைத்தவர்கள். எம்மிடமிருந்து இந்த புலிப்பாசிசம் என்ற சொல்லை இரவல் எடுத்தவர்கள், இன்று அதைத் தாமே முதன் முதலாக முன்வைத்ததாக கரடி விடுகின்றனர். அத்துடன் எம்மிடமே பாசிசத்தை பற்றி கதைக்க முடியுமா, என்று எதிர்க்கேள்வி கேட்கின்றனர். வரலாற்றை இருட்டடிப்பு செய்து மிதக்கின்ற இந்தப் பொறுக்கி அரசியல் பிழைப்புவாதிகள், கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் பூனைகளுக்கு வேண்டுமானால் கதை சொல்லலாம். ஆனால் உண்மை அதுவாகிவிடாது.


இவை எல்லாம் அரசியல் வேடிக்கைதான். புலிப் பாசிசத்தை தொடர்ச்சியாக எதிர்த்து போராடியதில் நாங்கள் மட்டும் தான் தனித்துவமானவர்கள். புலிப் பாசிசத்தின் கடந்தகால நிகழ்வுகள் மீது, வேறு யாரும் எதிர்வினையாற்றியதை விட, நாங்கள் தான் முழுமையான அதன் வரலாறு முழுக்க எதிர்வினையாற்றியவர்கள். புலிகளை மட்டுமல்ல, அனைத்து இயக்கத்துக்கும் எதிராக நாம் போராடியுள்ளோம். புலி இயக்கம் இன்று வெறும் பாசிச இயக்கம் மட்டுமல்ல. அது கொள்ளைக்கார, கொலைகார, மாபியா இயக்கம் கூட. இதை வெறும் சம்பவ ரீதியாக நாங்கள் வகைப்படுத்தவில்லை. அரசியல் ரீதியாக, உங்களிடமிருந்து வேறுபட்ட வகையில் அறிவித்தவர்கள்.


பாசிச இயக்கமாக அறிவிக்க முடியுமா? என்று கேட்கின்றனர். எமது போராட்ட வரலாறு நீண்டு கிடக்கும் போது, புலியைப் போல் புலியெதிர்ப்பை மட்டும் தான் படிப்பவரா? என்ற சந்தேகத்தை நாம் முன்வைக்கமுடியும். புலிகள் ஒரு பாசிச இயக்கம் என்பதை, அனைத்து புலியெதிர்ப்புக் கும்பலையும் விட தெளிவாக முதன்முதலாக முன்வைத்தவர்கள் நாங்கள். இவர்களின் புலியெதிர்ப்பு, புலியின் பாசிசத்தை அது கொண்டுள்ள சமூக பொருளாதார கொள்கை அடிப்படையின் கூறியதேயில்லை. எம்மிடம் இருந்து அதை வெறும் சொல்லாக பொறுக்கி அதை ஒப்புக்கு புலம்புகின்றனர். புலி கொண்டுள்ள சமூக பொருளாதார பாசிச கொள்கையைத் தான், புலியெதிர்ப்பும் கொண்டுள்ளது. இதை மீறி புலி அரசியலுக்கு வெளியில் புலியெதிர்ப்பிடம் வித்தியாசங்கள் எதுவும் கிடையாது.


".. "மக்கள் நலன், மக்கள் நலன்" எனக்கூறிவிட்டு, முழு இலங்கை மக்களினதும் விரோத இயக்கமான வேலுப்பிள்ளை பிரபாகரனை தலைமையாகக் கொண்ட புலிகளின் பிடிகளிலிருந்து மக்களை விடுவிக்கப்போராடும் ஜனநாயக சக்திகளைப்பார்த்து புலியெதிர்ப்பென்றும், இன்னும் சொல்லப்போனால் ஆதாரங்கள் எதுவுமில்லாமல் இலங்கை அரசு ஆதரவென்றும் பொய்க்கதைகள் புனைகின்றார்கள். புலியெதிர்ப்பென்பதே புலியென்ற இருத்தலை அங்கீகரிக்காதவர்கள். பாசிசத்திற்கென்ன அங்கீகாரம்? பாசிசத்தை நிர்மூலமல்லவா செய்யவேண்டும்." என்கின்றனர்.


மக்கள் நலனை தூக்கினால் புலியெதிர்ப்பு என்கின்றனர்.


எம்மைப் பார்த்து இவ்வாறு கேட்கின்றனர். புலியை நிர்மூலமல்லவா செய்ய வேண்டும். பாசிசத்தை எப்படி அங்கீகாரம் செய்யமுடியும்? நல்லதொரு வேடிக்கை. தேனீ ஆசிரியர் நித்திரை கொள்கின்றார் போலும். புலி அரசியலை ஒழிக்க வேண்டும், பாசிசத்தை எதிர்த்து போராட வேண்டும் என்பதை, புலியெதிர்ப்புக் கும்பல் கும்பகர்ணன் நித்திரையில் கனவு கண்டு எழ முன்னமே, அதற்கு எதிராக போராடியவர்கள் நாங்கள். வரலாற்றை இருட்டடிப்பு செய்து, திரித்து உண்மைக்கு மாறாக அனைத்தையும் புனையலாம்.


பொய்யர்களாக, புரட்டுப் பேர்வழிகளாக கடந்தகால போராட்டத்தையே திரிப்பதைப் பார்ப்போம்.


"புலிப்பாசிஸ்டுகளால் மாற்றுக்கருத்துக்கொண்ட பல்லாயிரக்கணக்கானவர்களின் குரல்வளைகள் அறுத்தெறியப்பட்டு, ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் மாற்றுக்கருத்துக்களின் ஒரேயொரு குரலாக தேனீ இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது." என்கின்றனர்.


இதில் இரண்டு அப்பட்டமான பொய்களை இந்த புரட்டுப் பேர்வழிகள் முன்வைக்கின்றனர்.


1."மாற்றுக்கருத்துக்களின் ஒரேயொரு குரலாக" தாம் தான் போராட்டத்தை தொடங்கியதாக ஊருக்கும் உலகத்துக்கும் கதைவிடுகின்றனர்.


2."மாற்றுக்கருத்துக்களின் ஒரேயொரு குரலாக" முதல் இணையத்தை தொடங்கியதும், தாமே என்கின்றனர்.


இரண்டுமே அப்பட்டமான வெளிப்படையான பொய். மாற்றுக் கருத்துக்கான எமது மக்களின் போராட்டம் தொடர்ச்சியானது. பல்வேறு வகையில் பலதரப்பினர் அதற்காக போராடியுள்ளனர். எமது மண்ணிலும் சரி, புலம்பெயர் சமூகத்திலும் சரி, தேனீயின் கூற்று அப்பட்டமான புரட்டை அடிப்படையாக கொண்ட பொய்யாகும். இதை நாங்கள் நிருபிக்க வேண்டிய அவசியம் கிடையாது.


இரண்டாவது மாற்றுக் கருத்துக்கான இணையத்தில் தேனீயினதே முதலாவது என்பது அடுத்த பொய். இதற்கு முன்னமே எமது இணையம் இருந்து வந்தது. தேனீயின் இணைய தோற்றத்துக்கு முந்தைய சமர் இதழ்களில், இந்த இணைய வரவு பதிவாகியுள்ளது.


இப்படி பொய்யும் புரட்டுமாகவே போராடி வந்தவர்களின் வரலாற்றை திரித்து, சொந்த மக்கள் விரோத வரலாற்றை இட்டுக் கட்டுகின்றனர். பின் "தமிழ் பேசும் மக்களின் ஜனநாயகக்குரல் தேனீ இணையத்தளம்" என்கின்றனர். தாம் மட்டுமே, அதாவது புலியெதிர்ப்பு மட்டுமே புலிப்பாசிசத்தை எதிர்த்து போராடியதாக காட்டமுனைகின்றனர். அதைத் தான் முக்கி முனங்கி பேசுகின்றனர். இவர்கள் "ஜனநாயகக்குரல்" என்று சொல்வது என்ன?


1. புலியை எதிர்க்கின்ற கருத்துக்கள். ஆனால் அது


2. புலியெதிர்ப்பு கருத்தாக இருக்க வேண்டும்.


3. இந்த அசிங்கங்களை அம்பலப்படுத்தாததாக இருக்க வேண்டும்.


இதைத்தான் இவர்கள் தமிழ் மக்களின் "ஜனநாயகக்குரல்" என்கின்றனர். தமிழ் மக்களின் ஜனநாயகத்தை, இப்படி புலிக்கு எதிராக மட்டும் சுருக்குகின்றனர். தமிழ் மக்களின் பிரச்சனைகள் அனைத்தும், புலிப்பிரச்சனையாக காட்டி விடுகின்றனர். இதற்கு அப்பால் எதையும், இவர்கள் வெளியிட்டதாக கூறும் 1500 கட்டுரைகளும் வெளிக் கொண்டு வந்தது கிடையாது. அதை நாம் தான், எமது கருத்துநிலை மட்டும் தான் வெளிக்கொண்டு வருகின்றது.


"வேலுப்பிள்ளை பிரபாகரனை தலைமையாகக் கொண்ட புலிகளின்.." என்கிறீர்களே. வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையால் தான் பாசிசம் என்று கூறுகின்ற அரசியல் வக்கிரம் வெளிப்படுகின்றது. புலிகளின் பாசிசம், அது கொண்டுள்ள சமூக பொருளாதார உள்ளடகத்தில் இருந்து தோன்றுவதே. இதற்கு பிரபாகரன் தலைமை தாங்க வேண்டிய அவசியம் கிடையாது, கருணாவும், தேனீயும் கூட இந்த சமூக பொருளாதார அரசியலில் பாசிசத்தையே முன்வைப்பர். இந்த நியதி இவர்கள் எவருக்கும் விதிவிலக்கல்ல.


நீங்கள் கூறுகின்றீர்கள் "பாசிசத்தை நிர்மூலமல்லவா செய்யவேண்டும்." என்று. ஆம் நிச்சயமாக, ஆனால் எப்படி? இதற்கு எங்களதும் உங்களதும் வழிமுறைகள் முற்றிலும் வேறு வேறானது. இந்தக் கேள்விக்கு நீங்கள் நேரடியாக பதிலளிப்பது கிடையாது. தமிழ் மக்களுக்கு இதை சூக்குமமாக ஒளித்து ஓதி, அதை மறைத்து சதித்தனமாகத்தான் புகுத்துபவர்கள் நீங்கள். எப்படி இந்த புலிப்பாசிசத்தை நிர்மூலம் செய்வது என்று நீங்கள் பார்க்கின்றீர்கள் என்பதை முதலில் பார்ப்போம்.


இந்த வகையில் புலியை யார் அழித்தாலும், அழிக்க முயலுகின்ற அனைத்தையும் ஆதரிக்க வேண்டும் என்கின்றீர்கள். இந்தவகையில் புலியை அழிக்கும்


1. ஏகாதிபத்தியம்


2. இந்தியா


3. சிங்களப் பேரினவாதம்


4. இவற்றுக்கு கூலிக் குழுக்களாக செயல்படுவர்கள்


என அனைவரையும் ஆதரித்து, பாசிசத்தை ஒழிப்பதைப்பற்றி பேசுகின்றீர்கள்.


இதைத் தவிர உங்களிடம் சுயாதீனமாக பாசிசத்தை நிர்மூலம் செய்யும் வேறு எந்த அரசியல் வழியும் கிடையாது. இதுவே புலியெதிர்ப்பு கும்பலின் ஒரேயொரு அரசியல் சாரமாகும். இதில் இருந்து நாங்கள் முற்றிலும் வேறுபட்ட மாற்று வழியை வைக்கின்றோம்.


நாங்கள் புலிப் பாசிசத்தை நிர்முலமாக்க முன்வைக்கும் வழியென்ன? மக்கள் மட்டும்தான் புலியை தோற்கடிக்க முடியும் என்கின்றோம். மக்களுக்கு எதிரான, மக்கள் அல்லாத எந்த சக்திக்கு பின்னாலும் நாம் பாசிச ஒழிப்பில் ஒன்றுபடுவதை நாம் மறுதலிக்கின்றோம். அதுவே மற்றொரு பாசிசமாகவே இருக்கின்றது. மக்கள் தான் பாசிசத்தை ஒழிக்க முடியும் என்பது, பலருக்கு ஆச்சரியமான, அருவருப்பூட்டும் ஒரு விடையமாக உள்ளது. இது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று என்பதே, இவர்கள் சொல்ல முனையும் வாதங்களில் ஒன்று. இதனால் புலியை ஒழிக்க மக்கள் அல்லாத வழியை ஆதரிக்க வேண்டும் என்பதே, புலியெதிர்ப்பு கும்பலின் அரசியல் சாரமாக உள்ளது. இந்த வகையில் மக்களை சார்ந்து நின்று புலியை அழிப்பதை கோரும் அரசியலை, புலிகள் சார்பு என்று முத்திரை குத்த புலியெதிர்ப்பு கும்பல் முனைகின்றனர்.


புலிகள் முதல் புலியெதிர்ப்புக் கும்பல் வரை மக்கள் பற்றி கதைப்பதும், மக்களின் நலனில் இருந்து அவர்களை சிந்திக்க தூண்டுவது, வெறுப்புக்குரிய ஒன்றாக அவர்கள் முன் உள்ளது. மக்கள் தமது பிரச்சனைக்கூடாக, தமது சொந்த அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற விடையம் வெறுப்புக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதனால் இதற்கு எதிரான வகையிலும், மக்களின் எதிரிகளுடன் சேர்ந்தும், தத்தம் அரசியலை முன்வைக்கின்றனர். இதுவே விடுதலைக்குரிய வழி என்கின்றனர். இதையே முற்போக்கு, மாற்றுக் கருத்து, ஜனநாயகத்தின் குரல் என பலவிதமாக புலம்புகின்றனர். மக்களைச் சார்ந்து நிற்காத இவர்களின் அரசியல், யாருடைய எந்த மக்களுடைய விடுதலையை பெற்றுத்தரும்?


மக்கள் மட்டும் தான் புலிகளை தோற்கடிக்க முடியும் என்ற எமது நிலைப்பாடு, உங்கள் நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் வேறானது. புலிகளை மக்கள் தோற்கடிக்காமல், ஒரு நாளுமே ஏகாதிபத்தியமோ, பேரினவாதமோ அல்லது எந்த புலியெதிர்ப்பு சக்தியும் புலிகளை தோற்கடிக்க முடியாது. மக்கள் தான் புலிகளை தோற்கடிக்க வேண்டும். இந்த வகையில் தான், இன்று மக்கள் புலியை தோற்கடிக்கின்றனர். இது நாங்கள் வைத்த கருத்துக்களால் அல்லது உங்களுடைய புலியெதிர்ப்பு குதர்க்கங்களால் இவை நடக்கவில்லை. மாறாக புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு, முற்றிலும் முரணிலைத் தன்மையை அடைந்துள்ளதால், புலிகளை மக்கள் தோற்கடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது தன்னியல்பாக, அன்றாட புலி நிகழ்ச்சி நிரலின் மீது நிகழ்கின்றது. இங்கு கருணா முதல் பேரினவாதச் சக்திகளின் வெற்றி என்று பலராலும் கூறப்பட்டு, நம்பப்படும் அனைத்தும் மக்கள் தோற்கடித்த வெற்றிடத்தில் நிகழ்கின்றது. இதை மக்கள் விரோத பிற்போக்குவாதிகளின் ஆயுதங்களோ, கூலி கும்பல்களோ தீர்மானிக்கவில்லை. மாறாக மக்கள் புலிகளை தோற்கடித்துவிட்டதால், புலிகளின் இறுதி கிரிகைகள் நடக்கின்றது.


மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்றால், மக்களுக்கும் புலிக்குமான உறவில் உள்ள பாரிய இடைவெளியால் நிகழ்கின்றது. இது தன்னியல்பாக நிகழ்வதால், மக்கள் தமது சொந்த அதிகாரத்தை பெறமுடிவதில்லை. இதனால் படுபிற்போக்கான புலியெதிர்ப்பு சக்திகள், இதைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். உண்மையில் மக்களின் மற்றொரு எதிரி, புதிதாக மக்களை அடக்கியாள புலிக்கு பதிலாக வருகின்றனர். இதைத்தான் நீங்கள் ஜனநாயகம் என்று கூறி, நாயாக வாலாட்டி நக்குகின்றீர்கள். மக்கள் சந்திப்பது மறுபடியும் உங்கள் புதிய பாசிசத்தைத் தான்.


இந்த வகையில் மக்கள் தோற்கடிக்கும் புலிக்கு மாறாக, அந்த வெற்றிடத்தில் புகுந்து கொள்ளும் மக்கள் விரோத கும்பல்கள் புலியைப் போன்ற அல்லது புலியை விட மோசமான மற்றொரு பாசிட்டுக்களே.


தேனீ முதல் அனைத்து புலியெதிர்ப்புக் கும்பலும் பாசிச ஒழிப்பில் ஆதரிக்கும் பேரினவாத பாசிச அரசு, இலங்கையில் நடத்திய மனிதப்படுகொலை புலியை விட பலபத்து மடங்கு அதிகமானது. 1971 இல் 30000 சிங்கள இளைஞர்களை கொன்றது இந்த அரசு, 1989-1990 இல் 60 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் சிங்கள இளைஞர்களைக் கொன்றதும் இதே அரசு தான். இவை எல்லாம் யுத்த முனையில் கூட அல்ல. புலியைப் போன்ற படுகொலைகளே. இதே பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய படுகொலை, 20000 முதல் 40000 பேரைக் காவுகொன்றது. இப்படி ஒரு கொலைகார பாசிசக் கும்பல், புலிப் பாசிசத்தை ஒழிப்பது என்று கூறுவதும், அதை ஆதரிப்பதும் புலியெதிர்ப்பு அரசியல் விபச்சாரமாக உள்ளது.


உதாரணமாக அமைதி சமாதான காலத்தில் (கடந்த ஒரு வருடத்துக்கு முன்னமாக) புலிகள் 300 முதல் 1000 பேரைக் கொன்றனர் அல்லது கடத்திச் சென்றனர். இதன் பின்பான அமைதியும் சமாதானமும் கொண்ட யுத்த சூழல் காலத்தில், கடந்த ஒரு வருடத்தில் சிங்கள பேரினவாத பாசிசம் கடத்தி காணாமல் போனோர் தொகை 1000கும் மேலாகும். மோதலற்ற சூழலில், இனம் காணப்பட்டு பேரினவாத பாசிசத்தால் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேலாக உள்ளது. இதை எல்லாம் இன்று பேரினவாதம் தான் செய்கின்றது. இதை புலியெதிர்ப்புக் கும்பல் எதிர்ப்பதில்லை, மாறாக ஆதரிக்கின்றது. பாசிச ஒழிப்பின் நட்பு சக்தியின், இச் செயல்கள் தான் பாசிசத்தை ஒழிப்பதற்கான இவர்கள் முன் உள்ள ஒரே வழியாகும்.


புலியெதிர்ப்புக் கும்பலின் எந்த இணையம், அண்மைக்காலமாக நடக்கும் கடத்தல், மற்றும் கொலைக்காக அரசைக் குற்றம் சாட்டினர்? அரசின் கூலிக்கும்பலாக திரியும் கருணா முதல் பலரும் நடத்தும் கொலைகள், ஆள் கடத்தல்கள் கப்பம் போன்றவற்றை யார் சுட்டிக்காட்டி கண்டித்தனர்? இவர்கள் அதைக் கண்டிக்கவும், சுட்டிக்காட்டவும் மாட்டார்கள். இந்த பாசிச கொலைகார கும்பல்கள் நடத்தும் அரசியல் கொலை வெறியாட்டம், புலிப் பாசிசத்தை ஒழிக்கும் போராட்டத்தின் ஒரு அம்சமாக இவர்கள் முன் உள்ளது. இவர்கள் தான், இவர்களின் பாசிச ஒழிப்பில் துணை நிற்கும் சக்திகள் என்ற வகையில், அதை பாதுகாப்பது இவர்களின் அரசில் சாரமாகும்.


புலிப் பாசிசத்தை எப்படி ஒழிப்பது என்றால், இது போன்ற இனம் தெரியாத படுகொலைகள் மூலமும், புலிகளை கொல்லும் அரசையும் அதையொத்த கும்பல்களின் நடவடிக்கையை ஆதரிப்பதிலும் தான் இவர்களின் அரசியல் உள்ளது. இதை விட மாற்றாக என்னதான், புலிப் பாசிச ஒழிப்பு வேலைத்திட்டம் என்று இவர்களிடம் தனியாக உள்ளது?


புலிப்பாசிச ஒழிப்பில் உங்களுடைய இந்த அரசியல் வழியை நாங்கள் அங்கீகரிப்பது கிடையாது. அதேபோல் புலிக்கு பதில் மற்றொரு பாசிட்டுகள் வருவதையும் நாம் அங்கீகரிப்பதில்லை. இதை புலி ஆதரவாக அல்லது புலி சார்புள்ளதாக காட்ட முனைவது நகைப்புக்குரியது. கடந்த 25 வருடத்தில், 1980 முதலாகவே நாம் அல்லது நான் இந்த புலிப்பாசிசத்தை தொடர்ச்சியாக விமர்சித்தளவுக்கு, யாரும் இது வரை விமர்சித்தது கிடையாது. இந்த விடையம் தொடர்பாக 1990 க்கு பின் அண்ணளவாக 1000 கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளேன். முக்கிய அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சனத்ததுக்கு உள்ளாக்கியுள்ளோம். நாங்கள் உங்களைப் போல் கனவு கண்டு திடீரென எழுந்தவர்கள் அல்ல.


திடீர் கனவு கண்டு எழுபவன் தான், மக்களை கண்டு கொள்வதில்லை. வாயில் வந்த மாதிரி உளறுவதே, இவர்களின் அரசியலாகும். இந்த அரசியல் உளறலைப் பார்ப்போம் "இதன் மூலம் நேரடியாகவே புலி எதிர்ப்பென்ற வகைக்குள் தங்களை அடக்க வேண்டாம் என்றும் கோருகின்றார்கள். அப்படியானால் இவர்கள் யார்? புலி எதிர்ப்புக்கும் புலி ஆதரவுக்கும் இடையிலிருப்பதாக கூறும் இவர்கள் யார்? புலி எதிர்ப்புக்கும் புலி ஆதரவுக்கும் இடையில் என்ன இருப்பதாக இவர்கள் கூற முற்படுகின்றனர்? ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் நடுவில் எந்தக்கருத்தோட்டத்தை புகுத்த விளைகின்றனர்?" ஏதோ புத்திசாலித்தனமாகவும், தர்க்கமாக விவாதிப்பதாகவும் எண்ணிக் கொண்டு, இப்படி உளற முடிகின்றது. சொந்த பாசிசக் கோட்பாட்டை இதைவிடவும் அழகாக யாரும் வைக்க முடியாது. இந்த பாசிசத்தை, இந்த மக்கள் விரோத நிலையை நாம் புரிந்து கொள்ள முனைவோம்.


"புலி எதிர்ப்புக்கும் புலி ஆதரவுக்கும் இடையில் என்ன இருப்பதாக" கேட்கின்றனர்? இதை இப்படியும் கூறலாம். புலி எதிர்ப்புக்கும் சிங்கள பேரினவாதத்துக்கும் இடையில் என்ன இருப்பதாக கருதுகின்றீர்கள்? உள்ளடக்க ரீதியாக இதைத்தான் வெளிப்படுத்துகின்றது. இந்தக் கேள்வியை புலியும் கேட்கமுடியும், புலி எதிர்ப்பும் கேட்க முடியும். பாவம் பரிதாபத்துக்குரியவர்கள். "புலி எதிர்ப்புக்கும் புலி ஆதரவுக்கும் இடையில் என்ன இருப்பதாக" கருதுகின்றனர் என்று கேட்பவர்கள் , அங்கு மக்கள் இருக்கின்றனர் என்பதை இவர்கள் காண்பதில்லை.


புலி எப்படி மக்களுக்கு எதிராக இருக்கின்றது என்பதை முதலில் இவர்கள் காண்பதில்லை. அந்த வகையில் மக்களின் நலனை உயர்த்தத் தவறுவதன் மூலம், இவர்கள் மக்களுக்கு எதிராக இருக்கின்றனர். இதனால் இடையில் என்ன இருக்கின்றது என்று தெரியாதது போல் கேட்கின்றனர். இடையில் மக்கள் இருக்கின்றனர் என்பதுவும், மக்களுக்காக போராடுவதையே நாங்கள் முன்னிலைப்படுத்தியும் நிற்கின்றோம்.


புலி ஆதரவு எப்படி மக்களுக்கு எதிராக இருக்கின்றதோ, அது போல் புலியெதிர்ப்பும் மக்களுக்கு எதிராக எதார்த்ததில் இருக்கின்றது. புலியெதிர்ப்பு மக்களுக்கு எந்த வகையில், எப்படி ஆதரவாக இருக்கின்றது என்பதைக் காட்டமுடியாது. அதனால் மக்கள் பிரச்சனையை அவர்கள் விவாதிக்க மாட்டார்கள். அதே புலி அரசியல், புலிக் கொள்கை, புலிக் கோட்பாடுகள், இதை விட வேறு எதுவும் இவர்களிடம் கிடையாது. இதை மேலும் விளங்கிக் கொள்ள, புலியெதிர்ப்பு என்பது, புலிக்கு எதிரான அனைத்தையும் சார்ந்து நிற்றலை குறிக்கின்றது. ஏகாதிபத்தியம் முதல் இலங்கை பேரினவாதம் வரையான அவர்களின் அரசியல் பொருளாதார பாசிச செயல்பாட்டை ஆதரிப்பதும், அதை நியாயப்படுத்துவதும், அதற்கு மண்டியிட்டு வாலாட்டுவதும் தான் புலியெதிர்ப்பு. இதற்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு?


மக்கள் நலனை முன்வைப்பதே எங்கள் கருத்துக்கள். இவ்விரண்டுக்கும் எதிராக உள்ளது. மக்கள் நலன் என்னவென்று சில மக்கள் விரோத புல்லுருவிகள் ஆச்சரியமாகவும், அதே நேரம் இது ஒரு அதிசயமானதாகவும் கேட்கின்றனர். மக்கள் நலன் என்பது என்ன? நான் எழுதிவரும் மற்றொரு கட்டுரையான, கருணா எப்படி மக்கள் விரோதி என்ற கட்டுரை, அதை தனியாக ஆராய்கின்றது. அப்போது அங்கு அதை அம்பலப்படுத்துவோம்.


"பாசிசத்தை நிர்மூலமல்லவா செய்யவேண்டும்." என்ற உங்கள் வாதத்தை எடுத்தால், ஏன் எதற்கு நிர்மூலம் செய்யவேண்டும்? இந்த கேள்விக்கான பதிலை நீங்கள் தர முடியாது. புலிப் பாசிசத்தை எதிர்கொள்வது என்பது, உங்கள் வீட்டுச் சொத்தல்ல. புலிப்பாசிசம் தமிழ் மக்களின் வாழ்வை அழிக்கின்றது. அது எப்படி அழிக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் பொருளாதாரம் என அனைத்தையும் அழிக்கின்றது. இந்த வகையில் இந்த பாசிசத்தை எதிர்கொள்வது என்பது, மக்களின் வாழ்வுக்கான அடிப்படையாகும். பாசிசத்தை மக்கள் தான் எதிர்கொள்ள முடியும். தனிமனிதர்கள் இதில் ஒரு அங்கமே ஒழிய, இதற்கு வெளியில் மற்றொரு பாசிட்டுகளுடன் சேர்ந்து இதைக் களையப் போவதாக கூறுவதும், கட்டுரைகளை எழுதுவதும் மக்களுக்கு எதிரான ஒரு பாசிச எதிர்ப்புரட்சிதான்.


மக்களை விட்டுவிட்டு, மக்களை அவர்களின் வாழ்வு சார்ந்த விடையங்கள் மீது அணிதிரட்ட முயலாது, எப்படித்தான் இந்த புலியெதிர்ப்புக் கும்பல் பாசிசத்தை ஒழிக்கமுடியும். உண்மையில் மற்றொரு பாசிட்டுகளின் விபச்சாரத்துக்கு பாய் தான் விரிக்கமுடியும். கருணா என்ற பாசிச கும்பலுக்கும், ஜே.வி.பியின் இனவாதத்துக்கும், இது போன்ற மக்கள் விரோத செயல்கள் அனைத்துக்கும், அதாவது புலிகள் அல்லாத அனைத்துக்கும் மக்கள் அல்லாத அனைத்துக்கும் பாய்விரித்து விபச்சாரம் செய்வதைத் தான், பாசிச ஒழிப்பாக, ஜனநாயக குரலாக, மாற்றுக் கருத்தாக காட்ட முனைகின்றனர். மக்களுக்கு இதற்கு வெளியில் எதையும் இவர்கள் சொல்ல இருப்பதில்லை. இதனால் நாங்கள் தனித்துவமாக மக்கள் வாழ்வியல் பிரச்சனையை முன்வைக்கின்றோம்.


எமது பாசிச ஒழிப்பு என்பது, மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனை ஊடாக அதைக் களைவதை முன்வைக்கின்றது. இந்த பாசிச ஒழிப்பு என்பது புலிப் பாசிசத்தை மட்டுமல்ல, அதற்குப் பதிலீடாக வர முனையும் புலியெதிர்ப்பு பாசிசத்தையும் ஒழிப்பதையும் கோருகின்றது.


"ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் நடுவில் எந்தக்கருத்தோட்டத்தை புகுத்த விளைகின்றனர்?" இது ஒரு நல்ல எடுப்பான தர்க்கம் தான். ஜனநாயகம் என்றால் என்ன? பாசிசம் என்றால் என்ன? என்ற கேள்வி இங்கு அடிப்படையாது. பாசிசம் என்பதை வெளிப்படையான ஒடுக்குமுறையைக் குறித்து மட்டும் காண்பது, அரசியல் தெரியாத அப்பாவித்தனமாகும். மக்களை அடக்கியாள பாசிசம் ஏன் எதற்கு ஒரு ஆளும் வாக்கத்துக்கு அவசியமாகின்றதோ, அதேபோல் இந்த "ஜனநாயகம்" ஆளும் வர்க்கத்துக்கு தேவைப்படுகின்றது.


"ஜனநாயகம்" ஒரு சமூக அமைப்பில் இருப்பதாக கூறும் போது, அங்கு "ஜனநாயகம்" மறுக்கப்படுவதாகவே அர்த்தம். அனைவருக்கும் "ஜனநாயகம்" இருந்தால், ஜனநாயகம் என்ற சொல் அர்த்தமிழந்து விடும். அதாவது "ஜனநாயகவாதி", "ஜனநாயக அரசு" என்று கூறுவது பைத்தியக்கார செயலாகிவிடும். "ஜனநாயகம்" மறுக்கப்படும் போது தான், "ஜனநாயகம்" இருப்பதாக பீற்றப்படுகின்றது. உண்மையில் "ஜனநாயகத்தை" அனைவருக்கும் மறுத்தல் தான் "ஜனநாயகம்" எனப்படுகின்றது . "ஜனநாயகம்" மீதான நெருக்கடி தான் பாசிசமாக மாறுகின்றது. "ஜனநாயகத்தை" பாதுகாப்பதாக கூறிக் கொண்டு அதை மறுக்கும் சமூக அமைப்பின் நெருக்கடிதான் பாசிசம். போலியான "ஜனநாயகத்தைக்" கொண்டு மக்களை சுரண்டி ஆளமுடியாது என்ற நிலையில் தான், பாசிசமாக வெளிப்படுகின்றது.


பாசிசம், "ஜனநாயகம்" பற்றி ஒரு தெளிவான உண்மை இது. இந்த இடத்தில் புலியெதிர்ப்புக் கும்பல் "ஜனநாயகத்தை" கொண்டுள்ளதா எனின் அதுவும் கிடையாது. அதுவும் பாசிசம் தான். புலியை பாசிசமாக இருப்பதாக கூறிக் கொண்ட, மற்றொரு பாசிசக் கும்பல் தான் புலியெதிர்ப்பு. புலியின் மக்கள் விரோத அரசியலையும், அதன் பொருளாதார கொள்கையையும் விமர்சிக்காது அதை முன்னெடுக்கும் யாரும், பாசிசத்தின் எடுபிடிகள் தான். புலியின் அதே கொள்கையைக் கொண்ட கும்பல் தான் புலியெதிர்ப்பும். புலிபாசிசத்தின் அனைத்துக்கும் தோற்றுவாயாக இருப்பது, அதன் அரசியல் பொருளாதார கொள்கை தான். இதையே கொண்டுள்ள மற்றவர்களுக்கு அதிகாரம் இல்லாமையால், அவர்களின் பாசிசம் அப்பட்டமாக வெளிப்படுவதில்லை. ஆனால் கருணா கும்பல் முதல் இந்தியாவின் கூலிப்படையாக இயங்கிய ஈ.என்.டி.எல்.எல், ஈ.பி.ஆர்.எல்.எப் முதல் பலரும் இதை ஏற்கனவே நிறுவியவர்கள். மக்களின் அன்றாட வாழ்வியல் போராட்டத்தில் இணங்கி நிற்காத யாரும், ஆயுதத்தை ஏந்தும் போது அவர்கள் பாசிட்டுகளாக இருப்பது அதன் சிறப்பு பண்பாகும்.


"தாங்கள் மாத்திரம்தான் ஏதோ அங்கீகாரம் பெற்ற "இடது" என்கின்ற நினைப்புடன்" என்ற வாதம், உள்ளடகத்தில் எம்மீது அதை ஏற்றுக்கொள்கின்றது. நாங்கள் விளக்கம் தரவேண்டிய அவசியம் கிடையாது. "இடது" குறைந்தபட்சம் ஏகாதிபத்திய மற்றும் அரசை எதிர்ப்பதை அடிப்படையாக கொண்டு, மக்களை சார்ந்து நிற்க முயல்தலாகும். இதைக் கொண்டிராத யாரும், தம்மை இடது என்று கருத முனைவது, கருதுவதும் மக்களின் முதுகில் குத்தும் கயவாளிப் பயல்களின் இழிந்த நடத்தையாகும்.


"புலிகளை திருத்த வேண்டுமென்று கருதும் இவர்கள்," என்கின்றனர். நாங்கள் உங்களைப் போன்ற சீர்திருத்த வாதிகள் அல்ல. மாறாக புரட்சியாளர்கள், அதாவது கம்யூனிஸ்ட்டுகள். இந்த அமைப்பினை முழுவதையும் மாற்றி அமைக்க விரும்புவர்கள். இதில் புலிகள் என்ன, யாராக இருந்தாலும், அனைத்து மக்கள் விரோதக் கருத்துகளையும் மறுப்பவர்கள். மக்கள் அதிகாரம், அதாவது உழைப்பவனுக்கு தான் அதிகாரம் என்ற அடிப்படையில், அனைத்து சமூகக் கொடுமைகளையும் மறுப்பவர்கள்.


புலிகள் திருந்த வேண்டும் என்று நாம் தவம் இருப்பதில்லை. உங்களைப் போல் புலிகள் அல்லாத பன்றிகளுக்கு நாய்களைப் போல் வாலைக் குழைப்பவர்கள் அல்ல. நாங்கள் புலிகளை விமர்சனம் செய்கின்ற போது, அந்த அமைப்பில் இணைந்துள்ள, அந்த கருத்தின் செல்வாக்குக்கு உட்பட்ட ஒவ்வொரு மனிதனின் சிந்தனையையும், மக்கள் நலனில் இருந்து பார்க்க கோருகின்றோம். மக்களை சமூக நோக்கில் இருந்து சிந்திக்கத் தூண்டுவதன் மூலம், அவர்களை மக்களின் பக்கம் வென்று எடுத்தல், மக்கள் சார்ந்து நிற்கும் உள் முரண்பாட்டை வளர்த்தல் போன்ற அரசியல் வழி மூலம், சரியான அரசியலுக்கு புலியை அல்ல அதன் ஒவ்வொரு உறுப்பினரையும் வென்று எடுக்க முனைகின்றோம். இதை சீர்திருத்தம் என்பதும், திருத்த முனைவதாக கூறுவதும் அரசியல் அபத்தம். இந்த வழியைத் தான் புலியெதிர்ப்பு மீதும் செய்கின்றோம். சமூகத்தின் அனைத்துக் கூறுகளிலும், அனைத்து முரண்பாடுகளிலும் ஒரு போராட்டத்தை நடத்துவதன் மூலம் தான், ஒரு மக்கள் இயக்கத்தை கட்டமுடியும்.


புலிகளை திருத்தவே இதை முன்வைப்பதாக நீங்கள் கூறுவதும் கருதுவதும், உள்ளடகத்தில் மக்கள் மீதும் சமூக உறுப்புகள் மீதான உங்கள் நம்பிக்கையீனத்தில் இருந்தும் பிறப்பதாகும். இன்று பாசிச ஒழிப்பின் பெயரில் பேரினவாதம், கடத்திச் செல்வதையும் கொன்று போடுவதையும் கண்டும் காணாது ஆதரிக்கின்ற நீங்கள், புலியில் 20000 உறுப்பினர்களை கொன்று ஒழிக்கும் பாசிச ஓழிப்பையே மறைமுகமாக முன்வைக்கின்றீர்கள். 20000 புலிகள் இறக்க வேண்டும் என்றால், குறைந்த பட்சம் ஒரு இலட்சம் தமிழ் மக்கள் இறக்க வேண்டும். இது உங்கள் பாசிச ஒழிப்பு வழி. நாங்கள் பாசிச ஒழிப்பில் புலி உறுப்பினர்களை அரசியல் ரீதியாக தெளிவுபடுத்தி வென்று எடுத்தல் என்ற வழியில், மக்களை அதிகாரத்துக்காக போராடுவதன் மூலம், தமது குழந்தைகளை பாசிசத்துக்கு எதிராக போராட வைப்பதன் மூலம் தான் பாசிசத்தை ஒழிக்கமுடியும்.


உங்களைப் போல் மக்களின் எதிரிகளான அரசிடமோ, அன்னிய சக்திகளிடமோ பாசிச ஒழிப்பை நாங்கள் முன்வைப்பவர்கள் அல்ல. சமூக இயக்கத்தின் அனைத்துப் போக்குகளையும் விமர்சிப்பதன் மூலம், அதில் சமூகத்தை சிந்திக்க வைப்பதன் மூலம், நடைமுறைப் போராட்டத்துக்கு வழிகாட்டுகின்றோம்.


"" "புலிகளை முற்று முழுதாக அழிப்பது என்பது தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தை முற்றுமுழுதாக அழிப்பதாகிவிடும்".. " என்ற வாதம், இதன் முன்பின் பகுதியை வெட்டிவிட்டு எடுத்துக்காட்டுவதாகும். புலிகளை அழிப்பது என்பது, பேரினவாதத்தை அழிப்பதுடன் தொடர்புடையது. ஒன்றை மட்டும் அழித்தல் என்பது, நடைமுறையில் சாத்தியமற்றது. இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றது. இரண்டையும் அழிக்காது, ஒன்றை மட்டும் அழித்தல் என்பது, புலி மற்றும் புலியெதிர்ப்பின் அரசியலாக உள்ளது. புலி பேரினவாதத்தை அழிப்பதைப் பற்றி மட்டும் பேசுகின்றது. புலியெதிர்ப்பு புலியை அழிப்பதைப் பற்றி மட்டும் பேசுகின்றது. இவர்கள் பேச மறுப்பது, மக்களின் நலன்களுக்கு எதிரான அனைத்தையும் அழிப்பதைப் பற்றி. நாங்கள் இரண்டையும் பற்றியும், மக்களுக்கு எதிரான அனைத்தையும் அழிப்பது பற்றி பேசுகின்றோம்.


சரி இங்கு புலியை மட்டும் அழித்தல் என்பதில் கூட, தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையை கையிலெடுக்காது, அதை மறுத்து நிற்றல் என்பது புலியெதிர்ப்பு அரசியல் சாரமாகும். பேரினவாதத்தை அழித்தலை முன்னெடுக்காது, அந்த அரசியல் உள்ளடகத்தில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை மறுத்து முதுகில் குத்துவதாகும். இந்த வகையில் தமிழ் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை அழித்தலாகும். புலிகள் அழிகின்ற போது, அந்த இடத்தில் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை முன்னெடுக்காதிருப்பதன் மூலம் , மக்கள் அதிகாரத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்காத நிலையில், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழித்தலாகும். இதைத்தான் புலியெதிர்ப்பு செய்கின்றது. மக்கள் மேல் புலிக்குப் பதிலாக புதிய ஒடுக்குமுறையை உருவாக்குகின்ற அரசியல் செயலைத் தான் புலியெதிர்ப்பு செய்கின்றது.


இதை நியாயப்படுத்தும் நீங்கள் "தமிழ்த்தேசியத்தின் மீதான அளவற்ற காதலால் (தீவிர தேசிய வாதம்)" என்றால், அதை நாங்கள் மறுபவர்கள் அல்ல. புலிகள் தேசியத்தை என்றும் முன்னெடுத்தது கிடையாது. உங்களைப் போல், மற்றைய இயக்கங்களும் அதை முன்னெடுத்தது கிடையாது. தேசியவாதம் என்பது தமிழ் தேசியமாக இருந்தாலும் சரி, இலங்கைக்கான தேசியமாக இருந்தாலும் சரி, உள்ளடக்கத்தில் அது ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு ஆதரவான சக்திகளை எதிர்ப்பதாக உள்ளது. இந்த வகையில் அந்த தேசியத்தை நாம் முன் வைப்பதில் தீவிரமானவர்கள் தான். இதை புலியென்று முத்திரை குத்துவது, அப்படி இட்டுக்கட்டுவது, உங்களுக்கே உரிய அரசியல் இழிதனமாகும்.


புலிப் பாசிசம் தேசியத்தின் எந்த சமூக கூறையும் கொண்டு இருக்கவில்லை. அதேபோல் புலியெதிர்ப்பு கும்பலிடமும் அது கிடையாது. அதாவது மக்களின் நலன் சார்ந்த கூறுகள் எதுவும் கிடையாது. அதேபோல் இந்த இரண்டு கும்பலிடமும், முரணற்ற ஜனநாயக பண்பும், அந்த அரசியலும் கூட கிடையாது. மாறாக ஏகாதிபத்திய சார்பு நிலையே இவர்களின் அரசியலாக உள்ளது. துரதிஸ்ட்டவசமாக இந்த ஏகாதிபத்திய கும்பல்களுடன், நாம் அரசியல் வாதம் நடத்த வேண்டியளவுக்கு, சமூக நலன் சார்ந்த அறிவுத் தளத்தில் அரசியல் தரம் தாழ்ந்து வீழ்ந்து மண்டியிட்டு கிடக்கின்றது.


இவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு வாதம் " "மக்கள் நலன், மக்கள் நலன்" எனக்கூறிவிட்டு, முழு இலங்கை மக்களினதும் விரோத இயக்கமான வேலுப்பிள்ளை பிரபாகரனை தலைமையாகக் கொண்ட புலிகளின் பிடிகளிலிருந்து மக்களை விடுவிக்கப்போராடும் ஜனநாயக சக்திகளைப்பார்த்து புலியெதிர்ப்பென்றும், இன்னும் சொல்லப்போனால் ஆதாரங்கள் எதுமில்லாமல் இலங்கை அரசு ஆதரவென்றும் பொய்க்கதைகள் புனைகின்றார்கள்." புலியெதிர்ப்பு கும்பல் "பிரபாகரனை தலைமையாகக் கொண்ட புலிகளின் பிடிகளிலிருந்து மக்களை விடுவிக்கப்போராடும் ஜனநாயக சக்திகளைப்பார்த்து" என்று தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்ட, கற்பனையில் இதைக் கட்டமைக்கின்றனர். புலியெதிர்ப்பு அணி மக்கள் நலன் கொண்ட சக்தியாக தம்மைக் கூறிக்கொள்வது வேடிக்கையானது. புலியைப் போன்ற அதே அரசியலைக் கொண்டதும், பல் இழந்ததுமான கிழட்டுப் புலிகள். அதே புலி அதிகாரத்துக்காக அலைகின்ற மக்கள் விரோதிகளே, இந்த புலியெதிர்ப்புக் கும்பல். "மக்களை விடுவிக்கப்போராடும் ஜனநாயக சக்திகளைப்பார்த்து" என்கின்றனர். எப்படி என்கின்றீர்களா? ஏகாதிபத்தியத்தினதும், பேரினவாதத்தினதும் கால்களை நக்கி மக்களை விடுவிக்கப் போகின்றார்களாம்.


நாங்கள் இதற்கு எதிரானவர்கள். ஒடுக்கப்பட்ட எந்த மக்கள் நலனை முன்னெடுக்கும் யாருடனும், அதில் எமக்கு முரண்பாடுகள் இருந்தாலும், அதை அங்கீகரிக்கத் தயாராகவுள்ளோம். மக்கள் நலன் என்ன என்று ஏகாதிபத்தியம் கூறுவதை கவ்விக் கொண்டு குலைக்கும், எந்த நாய்களுடனும் சமரசம் செய்துகொள்ள நாம் தயாராகவில்லை. மக்களின் எதிரிகள் தான், புலியெதிர்ப்பின் பின் உள்ள ஏகாதிபத்திய வேட்டை நாய்கள். மக்களின் எதிரிகளுடன் கூடிக் கும்மாளம் அடிக்கும் நீங்கள், எப்படி மக்கள் நலனுக்காக போராடமுடியும்? ஏகாதிபத்தியம் மக்கள் நலன் கொண்ட ஒன்றா என்ற கேள்விகளுக்கு முதலில் பதிலளியுங்கள். எல்லாவற்றையும் புலியாக பார்த்து, அதற்குள் அனைத்தையும் வகைப்படுத்துவது தான், உங்களது இழிந்து கந்தலாகிப் போன அரசியல். தமிழ் மக்களின் போராட்டம் வேறு, புலிகளினது போராட்டம் வேறு என்பதை இனம்பிரிக்க முடியாத புலியெதிர்ப்புக் கும்பல் எப்படித்தான் மக்களுக்காக போராடமுடியும். புலிக்கு எதிராக மக்களின் போராட்டத்தை முன்னெடுக்காத வரை, ஜனநாயகத்தின் கடைந்தெடுத்த எதிரிகள் தான் புலிஎதிர்ப்புக் கும்பலும்.


அடுத்த இந்தக் கும்பல் கண்டுபிடிக்கின்றது "ஆதாரங்கள் ஏதுமில்லாமல் இலங்கை அரசு ஆதரவென்றும் பொய்க்கதைகள் புனைகின்றார்கள்."ஆதாரம் உங்கள் கருத்துக்கள், செயல்கள், உங்கள் அரசியல் நடவடிக்கைகள் தான். பாசிச ஒழிப்பில் ஈடுபடுவதாக கூறும் இலங்கை அரசு மற்றும் ஏகாதிபத்தியத்தின் பின்னால், நீங்கள் அணிகட்டி நிற்பது மட்டும் போதுமானது. அவர்களின் கருத்தை முன்னிலைப்படுத்தி, அது சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது போதுமானது. உங்களுக்கும் அவர்களுக்கும் ஏதாவது நேரடி தொடர்புகள் உண்டா என்பது, இங்கு இரண்டாம் பட்சமானது. உங்கள் கருத்துத் தளம், பாசிச ஒழிப்பை முன்வைக்கும் உங்கள் வழிமுறை மட்டும் போதுமானது. மக்களை அணிதிரட்டி, அவர்களின் அதிகாரத்துக்காக போராடாத அரசியல் செயல்பாடுகள் உங்களையும் உங்கள் கும்பலையும் இனம் காட்டிவிடுகின்றது.


"இந்த மக்கள் நலன் அதிகாரிகள் வெறும் குழப்பல்வாதிகள். புலிகள் தொடர்பாகவும் இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனை தொடர்பாகவும் சரியான நிலைப்பாடு எடுக்கத்தெரியாதவர்கள்." நல்ல வேடிக்கையான வாதம். குழப்பல்வாதிகள் என்பது, உங்கள் பார்வையில் சரியானதே. எதைக் குழப்புகின்றோம்? புலியெதிர்ப்பின் பெயரில் மக்கள் விரோத செயற்பாடுகளை விமர்சித்து அதை சிந்திக்கத் தூண்டுவதன் மூலம், பிற்போக்குத் தளங்கள் நொருங்குகின்றது. இதன் எதிர்வினைதான் இப்படி கூற வைக்கின்றது. புலியெதிர்ப்பின் பெயரில் கட்டப்படும் பொய்யை, அதன் மக்கள் விரோத கூறுகளை அம்பலப்படுத்தும் எமது சரியான நிலையைத் தான் இவர்கள் "வெறும் குழப்பல்வாதிகள்" என்று கூறுவதால், எமது சரியான நிலை தெளிவுபடுகின்றது.


"இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனை தொடர்பாகவும் சரியான நிலைப்பாடு எடுக்கத்தெரியாதவர்கள்." என்கின்றனர். இதில் புலியெதிர்ப்பு நிலைப்பாட்டை நீங்கள் முதல் வையுங்கள். யார் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காதவர்கள் என்பது தெளிவாகும். எமது நிலைப்பாடு தெளிவானது. இது எமது எழுத்து முழுக்க செறிந்து காணப்படுகின்றது. உங்களைப் போல் இதை வெறும் வார்த்தையில் அலட்டி, மக்களின் முதுகில் குத்தி, காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் அல்ல.


"இப்போது பாசிஸம் என்ற தடையை அகற்றாமல் இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனை முற்றுமுழுதாக தீர்க்க முடியாது என்ற நிலைக்கு நாங்கள் வந்தடைந்துள்ளோம் என்பதே யதார்த்தம்."பாசிச தடையை மட்டுமல்ல, பேரினவாத தடையை அகற்றாமல் தேசிய இனப்பிரச்னையை தீர்க்கமுடியாது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது. ஒன்றையொன்று சார்ந்து, ஒன்றில் மற்றொன்று தங்கி செயல்படுகின்றது. பேரினவாதமே மற்றொரு பாசிசம் தான். புலியெதிர்ப்பு அதனை இல்லை என்பதே அதன் அரசியலாகும். இலங்கையில் அதிகாரத்தில் பிரதானமாக இரண்டு பாசிச சக்திகள் உள்ளனர். ஒன்று அரசு, மற்றொன்று புலி. அரசுக்கு பின்னால் பல சிறிய குட்டி பாசிசப் புலிகள் உள்ளனர். அதிகாரப் பிரிவுகளாக இரண்டு பாசிச கூறுகளும், அதைவிட கருத்துத் தளத்தில் பாசிச கருத்துகளும், புலி, புலியெதிர்ப்புப் பேரினவாதம் என்று புளுத்துக் கிடக்கின்றது. இவை அனைத்தையும் ஒழிக்காது, தேசிய இனப்பிரச்சனையை முற்றுமுழுதாக தீர்க்க முடியாது. இதற்கு எதிரான போராட்டத்தை மறுப்பது, பாசிசத்தை பாதுகாப்பது தான்.


கொல்லைப்புறமாக பாசிசத்தை பாதுகாக்கும் வகையில் "இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஓரளவிற்கேனும் சாதகமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது. தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள இச்சாதகமான சூழலை, இலங்கையிலுள்ள தேசிய இனங்கள் நுகர முடியாமல் இருப்பதற்கும் புலிகளே காரணம்." என்கின்றனர்.


மக்களை ஏமாற்றுகின்ற, அதே நேரம் மோசடி செய்கின்ற ஒரு அரசியல் வாதம். பேரினவாத நிலையை தக்கவைக்க, முன்வைக்கின்ற குதர்க்கமான தர்க்கவாதம். புலிகள் இதற்கு தடையாக இருப்பதாக கூறுவது கடைந்தெடுத்த பேரினவாத மோசடி. புலிகளுக்கு வெளியில், ஏன் அந்த பாசிச பேரினவாதக் கும்பலால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை, ஒரு தலைப்பட்சமாக முன்வைக்கமுடியாது யாரை ஏமாற்றுகின்றீர்கள்! உங்களுடைய விசுவாசமான நக்கிப்பிழைப்புக்கு ஏற்ப கதை சொல்வது, மிக மோசடித்தனமானது. தமிழ் மக்களுக்கு வெளியில், அவர்களுக்கு எதிராக எத்தனையோ ஒடுக்குமுறைகளை ஒருதலைப்பட்சமாக பேரினவாத அரசு கொண்டு வந்துள்ள்து இன்று தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வை முன்வைப்பதை புலிகள் எப்படி தடுக்கமுடியும். உங்களைப் போன்ற புல்லுருவிகள் வாழ்வதற்காக, இதையும் புலிகளின் பெயரில் சொல்லி நாயாக நக்குகின்றீர்கள் அவ்வளவு தான்.


"எந்தவொரு சமூகத்திலும் பிரதானமாக நிலவும் ஒரு கருத்தோட்டத்திற்கு எதிராக ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்தோட்டங்களும், அவ்வாறான பல்வேறு வகைப்பட்ட கருத்தோட்டங்களை சீர்தூக்கிப்பார்க்கும் மேலும் பல கருத்தோட்டங்கள் நிலவுவது சர்வசாதாரணமானதே. ஆனால் தமிழ் சமூகத்தில் பிரதானமாக புலி எதிர்ப்பு, புலி ஆதரவென இரண்டு பிரதான கருத்தோட்டங்கள்தான் நிலவுவதாக இந்த மூன்றாம் பாதையாளர்களுக்குத் தெரிகின்றது. புலி எதிர்ப்பு, புலி ஆதரவு என்ற இரண்டையும் நிராகரித்து தமது மூன்றாம்பாதையை கவனத்திற்கொள்ளுமாறு, அவரவர்கள் தம்பாணியில் வேண்டுகோள் விடுக்கின்றார்கள். மூன்றாம்பாதையை நிராகரிக்கும் நாலாம் பாதையும், நாலாம்பாதையை நிராகரிக்கும் மேலும் பல நூறு, ஆயிரம் கருத்தோட்டங்களினூடாகவே சரியான கருத்தென்பதை நாம் வந்தடைய முடியும் என்பதை இந்த சித்தம் கலங்கியவர்கள் மறந்து விடுகின்றனர்." இந்த உங்களுடைய வாதம் உங்களுக்கு எதிராகவே மாறுகின்றது. எம்மை புலியென்று முத்திரை குத்தி செயல்படும் உங்கள் அரசியல், இதை மறுபடியும் உங்களுக்கு எதிராக நிறுவுகின்றது. புலி, புலியெதிர்ப்பு என்ற போக்கு, சில அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டு வரையறுக்கப்பட்டது. நாம் மூன்றாவது பாதை இதற்கு வெளியில் வைக்கும் பொது, நாலாவது பாதையைiயும் அதற்கு மேற்பட்ட பாதையையும் நாம் மறுக்கவில்லையே! வர்க்கங்கள் பலவாக உள்ள சமூக அமைப்பில், சமூக முரண்பாடுகள் பலவாக உள்ள அமைப்பில், பல்வேறு கருத்துகளும், அமைப்புகளும் நிலவுவது இயல்பானது. இதில் எந்த சந்தேகமும் எமக்கு கிடையாது. ஆனால் புலி, புலியெதிர்ப்பு என்ற இரண்டு பாதையும் மக்களுக்கு எதிரான அரசியலைக் கொண்டது என்பதும், அதுவே ஆதிக்கம் பெற்று மக்களுக்கு எதிராக உள்ளது என்பதுவும் சந்தேகத்துக்கு இடமற்றது.


"தேனீ இணையத்தளத்தின் அபரீதமான வளர்ச்சியையும் கடந்த ஆறு வருட காலத்தில் தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினையும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தொடர்ச்சியாக தேனீ மீது அவதூறுகளையும் வசைகளையும் பொழிந்து வருகின்றனர். புலிகளிலிருந்து புலி அல்லதாவர்களென தங்களைக் கூறிக்கொள்பவர்கள்வரை அவதூறுகளையும் வசைகளையும் பொழிவதில் முன்னிற்கின்றார்கள். தேனீயை வம்புக்கிழுத்து ஜனநாயகக்குரலினை மழுங்கடிக்கும் திட்ட அட்டவணையைக் கொண்டவர்களின் சூழ்ச்சிகளுக்கு தேனீ ஒருபோதும் பலியாகாது. தேனீயைப்போன்றே, தேனீயின் பல இலட்சம் வாசகர்களும் பண்பாடற்றவர்களின் கூச்சல்களை எளிதில் அசட்டை செய்துவிடுகின்றார்கள். தேனீயில் வெளியாகும் கருத்துகளுக்கு விமர்சனப்பண்புடன் தெரிவிக்கப்படும் எதிர்வினைகளுக்கு மாத்திரமே தேனீ பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது. திரும்பத்திரும்ப ஒரே விடயத்ததை வௌவேறு வசனங்களில் கூறுவது, சும்மா கிறுக்குவதுபோன்று எழுதுவது, திட்டு எழுத்துகள் போன்றவற்றுக்கு தேனீ ஒருபோதும் மதிப்பளியாது." இதுவும் உங்களுக்கு எதிராக மாறுகின்றது. புலியும் இதைத்தான் கூறுகின்றது. புலி இணையங்களும் இலட்சக்கணக்கான வாசகர்களும் உண்டு. இதில் இருந்து நீங்கள் எப்படி தர்க்க ரீதியாக வேறுபடுகின்றீர்கள். மக்களை மந்தைகளாக, அடிப்படை வாழ்வை சாராது உணர்வற்ற செம்மறிகளாக மாற்றி, அவர்கள் மீது செல்வாக்கு செலுத்தி இணையத்தை நடத்துவது, புலி மற்றும் புலியெதிர்ப்பின் அரசியலாகவுள்ளது. புலியைத் திட்டுவது, புலி அல்லாதவர்களை திட்டுவது இந்த இணையங்களின் அரசியலாக உள்ளது.


இவர்கள் கூறுவது போல் "தமிழ் மக்களுக்கு வெறுமனே இலங்கை அரசியல் நிலவரங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவது என்பதற்கும் அப்பால் இலங்கை அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக ஆழமான கருத்துக்களையும் கொண்டுசெல்ல வேண்டுமெனபதிலும் தேனீ முனைப்பாக செயற்பட்டு வருகின்றது. இலங்கையிலிருந்து புலம்பெயர் சமூகம்வரை மாற்றுக்கருத்துக் கொண்ட அனைவருக்குமே தேனீ களம் அமைத்துக் கொடுத்துள்ளது." இப்படி கூறும் இவர்கள், என்ன அரசியலை மாற்றாக முன்வைக்கின்றனர். புலிகளின் அரசியலை விமர்சிப்பது கிடையாது. புலிகளின் அரசியலை ஒத்த புலியெதிர்ப்பு அரசியல், எதையும் கேள்விக்குள்ளாகி விமர்சிப்பது கிடையாது. புலியெதிர்ப்பு அரசியலை முன்னிலைப் படுத்துகின்றது. புலியெதிர்ப்பு அரசியல் எது, அதுவல்லாதது ஏது என்பதை இவர்கள் முன் கேள்வியாக எழுப்புவோமாயின், இவர்களின் பூசி மொழுகிய அலட்டல் அம்பலமாகிவிடுகின்றது.


புலி, புலி சார்பு கருத்துக்கு கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படையில் எப்படி இயங்குகின்றதோ, அதேபோல் புலியெதிர்ப்பு கருத்துக்கே கருத்துச் சுதந்திரம் என்பதையே புலியெதிர்ப்பு கொண்டுள்ளது. இதைத் தவிர, மாற்றுக் கருத்துக்களுக்கல்ல. மாற்றுக் கருத்து என்பது, பல வர்க்கங்களின் வேறுபட்ட கருத்தாகும். ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் கருத்துகளே, உண்மையான சமூகம் சார்ந்த கருத்தாகும். இந்த வகையில் நாம் எமது போராட்டத்தை தொடர்வது தான், மக்களின் உண்மையான விடுதலைக்கான ஒரேயொரு அத்திவாரமாகும்.


1 comment:

ஜூலியன் said...

தேனீயின் பல இலட்சம் வாசகர்களும்

Is it a joke?