தமிழ் அரங்கம்

Tuesday, May 22, 2007

பிராஞ்சு தேர்தல் முடிவும் ஏற்படுத்தவுள்ள சமூக அதிர்வுகளும்

பிராஞ்சு தேர்தல் முடிவும் ஏற்படுத்தவுள்ள சமூக அதிர்வுகளும்

பி.இரயாகரன்
22.05.2007


ற்றவனை ஒடுக்கவேண்டும், துன்புறுத்த வேண்டும் என்று விரும்பியோரின் வெற்றி தான், பிரான்சின் புதிய ஜனாதிபதியாகியுள்ள நிக்கோல சார்க்கோசியின் வெற்றியாகும். பிரான்சின் இந்த தேர்தல் முடிவுகள், இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் பல சமூக அதிர்வுகளை உருவாக்கக் கூடியவை. பிரஞ்சு மக்களை மட்டுமல்ல, உலக மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு, படு பிற்போக்காக செல்வாக்கு வகிக்கும்.


தேர்தல் முடிவு தீவிர வலதுசாரிகளின் சமூக ஒடுக்குமுறைகளுக்கு வழிகாட்டியுள்ளது. இனி என்றுமில்லாத அளவுக்கு சுரண்டல் தீவிரமாகும். பெரும் பணக்கார வர்க்கம் மேலும் கொழுக்கவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகி பெருகவும் வழிகாட்டும். இதை செய்வதற்கு ஏற்ற பொலிஸ் ஆட்சி நிறுவப்படும். இந்த வகையில் தொழிலாளிகளுக்கு எதிரான சட்டங்கள், மக்களுக்கு எதிரான சட்டங்கள் மூலம், மக்கள் மீதான சுமை அதிகரிக்கும். சுரண்டலின் தீவிரம் முன்பு இருந்த காலத்தை விட அதிகரிக்கும். உலகளாவிய சந்தையை கைப்பற்றுவதில் மற்றைய ஏகாதிபத்தியத்துடன் போட்டியை உருவாக்கும். ஏகாதிபத்திய முரண்பாட்டை தீவிரமாக்கும் அதேநேரம், இதனடிப்படையில் உலகளாவிய ஆக்கிரமிப்புகளில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தும்.


இதை சாதிக்க, மக்களை திசைதிருப்ப கையாளும் வழி என்பது மிகமிக ஆபத்தானது. உள்ளடக்க ரீதியாக நாசிசத்தின் ஒரு கூறை முன் தள்ளுவதன் மூலம் இது அரங்கேறவுள்ளது. வெளிப்படையாகவே வெளிநாட்டவர்கள் மீதான சட்டங்கள், ஓடுக்குமுறைகள் மற்றும் தண்டனைகள் மூலம், நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வர முடியும் என்று காட்டுகின்ற, இனவாத நிறவாதக் கூறே முன்னிலைக்கு வரவுள்ளது. பிரஞ்சு சமூகத்தை ஏமாற்றுவது, ஆசைகாட்டுவது, மோசடி செய்வதன் மூலம், மூலதனத்தின் செழிப்பை உருவாக்க முனைகின்றனர். செல்வம் உள்ளவன் மேலும் மேலும் கொழுக்க வேண்டும் என்பதே இந்த அரசின் இலட்சியமாகும். இதற்காக சொந்த மக்களை அதிகமாக சுரண்டவும், உலக மக்களை சூறையாடும் வேலைத்திட்டத்துடன் தான் ஆட்சிக்கு வந்துள்ளனர்.


இதன் பின்னணியில் மக்களை ஒடுக்கி சுரண்டுகின்ற வேலைத் திட்டம் என்பது சூக்குமமாக உள்ளது.


1. தொழிலாளி வர்க்கம் கடந்த காலத்தில் போராடிப் பெற்ற உரிமைகளை, படிப்படியாக ஆனால் தீவிரமாக பறித்தல்.


2. தொழிலாளி வர்க்கத்தை வெறும் உழைப்பு பொருளாக, சந்தையில் வாங்கி விற்கும் ஒரு நுகர் பொருளாக, எப்படியும் எந்த வகையிலும் பயன்படுத்தும் 'சுதந்திர" உரிமையை மூலதனத்துக்கு கொடுத்தல்.


3. அரசு சேவையாக உள்ள அனைத்து துறையையும் இல்லாதாக்குதல். அந்த வகையில் மருத்துவம், கல்வி, போக்குவரத்து முதல் கொண்டு அனைத்து சமூக உதவித் திட்டங்களையும் ஒழித்தல். அனைத்தையும் பணம் கொடுத்து வாங்கக் கோரும் சமூக உறவை உருவாக்குதல். மனித உறவை பண உறவாக்குவது. குறிப்பாக அரசு சேவையை ஒழித்து, அரசு என்பது பொலிஸ் பிரிவாகவும், வரி மற்றும் தண்டம் அறவிடும் பிரிவாகவும் மட்டும் மாற்றுதல். அரசு என்பது மூலதனத்தின் கருவி என்பதால், இவற்றை மட்டும் செய்தல் தான், அரசு பற்றிய உலகமயமாதல் கொள்கை. இதையே தீவிரமாக அமுல் செய்யும் பொலிஸ் ஆட்சிக்குள், பிரஞ்சு சமூகம் காலடி எடுத்து வைத்துள்ளது.


முன்பு இவை மெதுவாக நடந்து வந்தது. மக்களைக் கண்டு அஞ்சி, சூக்குமமாக இரகசியமாக பின்பக்க வழிகளில் மூடிமறைக்கப்பட்டு புகுத்தப்பட்டது. நிக்கோல சார்க்கோசி புதிய அரசு பற்றிய பிரமையும், அதன் தாக்கத்தின் உட்சாரமும் என்ன? அதுதான் என்னவென விளக்க முடியாத சூக்குமம். யாராலும் இதுதான் என்று அடையாளப்படுத்த முடியாத, அதை சொல்ல முடியாத ஒரு நிகழ்வை எதிர்பார்க்கின்றனர். இந்த மாற்றத்தை நோக்கிய எதிர்பார்ப்பு. அதை சொந்தமாக தெரிந்துகொள்ள முடியாத பிரமை. அது தனக்கு எதிராக இருக்கப் போவதை அறிந்துகொள்ளாத மயக்கம். அது விரைவில், ஆனால் சொந்த அனுபவத்தின் வாயிலாக தெளிவுபடுவது தடுக்கமுடியாது.


மிகவும் தீவிரமாக மக்களை ஒடுக்கும் நிலையை உருவாக்க, பலியீடுகள் அவசியம். இந்தவகையில் பலியிடப்படுபவர்கள் முதலில் வெளிநாட்டவர்கள் தான். வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல், அவர்களை பிரஞ்சு சமூகத்துக்கு கீழானவராக இழிவுபடுத்தல், பண்பாடற்றவராக காட்டுதல், அவர்களை குற்றவாளிச் சமூகமாக காட்டுதல், அவர்களை ஒதுக்கி ஒடுங்க வைத்தல் மூலம் தான், பிரஞ்சு சமூகம் மீதான மூலதனத் தாக்குதலை தொடங்கவுள்ளனர். வெளிநாட்டு சமூகங்களை இழிவானதாக காட்டவும், அவர்கள் ஈவிரக்கமின்றி ஒடுக்க வேண்டிய சமூகம் என்பதை நிறுவும் முதல்படியான முயற்சியில், பொலிஸ் ஆட்சியும் புதிய சட்டங்களும் அலையலையாக வரவுள்ளது. இவைகள் மூலம் பிரஞ்சு இனவெறி நிறவெறியை வளர்த்து, மூலதனத்துக்காக பிரஞ்சு சமூகம் மீதான தாக்குதல் நடத்தப்படவுள்ளது. பிரஞ்சு சமூகம் மீதான முதல் கண்ணிவெடி, வெளிநாட்டவர் மீதானதே. எல்லா வலதுசாரிகளும், தமது சுரண்டலை தீவிரமாக்க பாசிசத்தை நாடும் போது உள்ள இடைவெளி என்பது, பிரஞ்சு சமூகத்தில் குறைந்து வருகின்றது.


அனைத்து மக்களின் நலன் என்பது வெற்றுப் புரளி


அனைத்து மக்களின் நலனுக்காக உழைக்கப் போவதாக நிக்கோல சார்க்கோசி விடுக்கும் அறிவிப்பு, பொய்யானதும் போலித்தனமானதுமாகும். ஏமாற்றும், மோசடியும், வாய்ச்சவடாலும், இதன் அரசியல் உள்ளடக்கமாகும். (ஜனநாயக) அரசு என்பது பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட போதும், பெரும்பான்மை மக்களின் விருப்பை அது ஒருநாளும் பூர்த்தி செய்வதில்லை. இங்கு பெரும்பான்மை மக்களின் தெரிவு என்பது, ஊடகங்கள் மூலமான விளம்பர பிரச்சார சூதாட்டம் தான். விளம்பர சூதாட்டத்துக்கு தேவையான மோசடிகள், ஏமாற்று வித்தைகள் தான் ஜனநாயக அரசியல். இதுவே தேர்தல் ஜனநாயகமாகும். இந்த ஜனநாயகம் தாம் ஆட்சிக்கு வந்தால், மூலதனத்துக்கு ஆதரவாக மக்களுக்கு எதிராக என்ன சட்டங்களை கொண்டு வரப்போகின்றோம் என்று எதையும் வெளிப்படையாக கூறுவது கிடையாது. அவை இந்த ஜனநாயக அரசியலில், எப்போதும் அரசியலில் சூக்குமாகவே சதியாகவே உள்ளது.


அரசு என்பது பெரும்பான்மை மக்களின் தேவையை, விருப்பை அறிந்து, அதை அமுல்படுத்தும் ஒரு மக்கள் நிறுவனமல்ல. மாறாக சிறுபான்மையினராக உள்ள, சுரண்டல் வர்க்கத்தின் நலனை பூர்த்தி செய்வதே இந்த ஜனநாயக அரசாகும். சட்டகங்கள் முதல் ஜனநாயகம் வரை இதற்குள்தான் வரையறுக்கப்படுகின்றது. இதை மறுத்து, இந்த அரசுகள் ஒரு சட்டத்தைக் கொண்டுவராது. சட்டங்கள் தொழிலாளி வர்க்கத்தை சுரண்டவும், சூறையாடவும் வழிகாட்டும் சட்ட ஒழுங்கு முறையாகும். இதைத் தான் அரசு செய்கின்றது. முதலாளித்துவ அரசு பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்காக ஒரு நாளும் இயங்குவது கிடையாது. இதனால் தான் இந்த அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர். புதிய சட்டங்களை மக்கள் தமக்காக உருவாக்க நிர்ப்பந்திக்கின்றனர். அரசின் பெரும்பான்மை, தானாக மக்களுக்காக சட்டங்களை உருவாக்குவதில்லை, மாறாக மக்கள் அதற்காக போராடுகின்றனர்.


இந்த நிலையில் தான் நிக்கோல சார்க்கோசி அனைத்து மக்களின் நலனுக்காக உழைக்கப் போவதாக கூறுகின்றார். இது வெறும் பித்தலாட்டம். சுரண்டுவதை அடிப்படையாக கொண்ட பொருளாதார எல்லைக்குள், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் எப்படி ஒரு சுபீட்சத்தை தரமுடியும். இரண்டு பேருக்கும் நன்மைகளை உருவாக்க முடியும் என்பது, அரசியல் நகைச்சுவைதான். தொழிலாளியாகிய நீ, வெறும் முட்டாள் என்பதையே சொல்லாமல் சொல்லிவிடுகின்றனர். சுபீட்சம் இரண்டில் ஒன்றுக்குத்தான். முதலாளி தொழிலாளியை சுரண்டும் போது, தொழலாளி சுபீட்சத்தைப் பெறமுடியாது.


தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வை இருட்டாக்கி, முதலாளிக்கு வெளிச்சம் காட்டுவதைத்தான் இப்படி அறிவிக்க முடிகின்றது. முதலாளியும் தொழிலாளியும் பரஸ்பரம் அதிக நன்மையை அடைவது என்ற நிக்கோல சார்க்கோசியின் அறிவிப்பு, பொய்யும் புரட்டுமாகும். முதலாளிக்கு அதிக நன்மையை அடைய உதவும் போது, தொழிலாளி நிச்சயமாக அதிகமாக இழக்க வேண்டும். இதை தவிர அரசியல் பொருளாதாரத்தில் வேறு குறுக்கு வழி கிடையாது. இது முதலாளித்துவ பொருளாதார விதியுமாகும். அவர் வழங்கிய சில வாக்குறுதிகளில் இருந்து இதை துல்லியமாக பார்ப்போம்.


அதிக வேலை அதிக கூலி


நீ அதிகமாக உழைத்தால், நீ அதிகமாக சம்பாதிப்பாய். நீ அதிகமாக உழைக்க, உனது வேலை நேரத்தை அதிகரி. இதை அடிப்படையாக கொண்ட சட்டம் மிக விரைவில் வரவுள்ளது. கடைந்தெடுத்த முதலாளித்துவத்தின் மோசடி. தொழிலாளி வர்க்கத்தின் ஓய்வை திருடுகின்ற மூலதனத்தின் அற்பத்தனம். இது இந்த ஜனநாயகத்தின் வக்கிரமாகும். எட்டு மணி நேர வேலை என்று அரசியல் கோரிக்கையின் அடிப்படையில், தொழிலாளி வர்க்கம் காலாகாலமாக போராடிப் பெற்ற உரிமையை பறிக்கும் உள்ளார்ந்த சதிதான் இது. அந்தளவுக்கு இன்றைய சமூகத்தின் அறிவின்மையை, இந்த ஜனநாயக பாராளுமன்றங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றது. அன்று தொழிலாளி வர்க்கம் பெற்று இருந்த அறிவு, இன்று உழைக்கும் வர்க்கத்திடம் அறவே கிடையாது என்பதை இது வெளிப்படுத்துகின்றது. மக்களின் ஓய்வை விழுங்கும் ஊடகங்களின் ஆக்கிரமிப்பு, மனித அறிவை நுகர்வு அறிவாக்கி அதில் ஆபாசமாக தித்திக்கவைத்துள்ளது.


அதிக வேலை அதிக கூலி, முதலாளித்துவ சமூக அமைப்பில் காலாகாலமாக அம்பலப்பட்டுப் போன ஒன்றுதான். ஆனால் இதை முன்வைக்கும் விதம் சூக்குமானதும், அற்பத்தனமானதும். அதாவது உனது சொந்த சட்டப்படியான வேலை நேரத்துக்கு அதிகமாக வேலை செய்தால், அந்த பணத்துக்கு வரி கிடையாது என்ற சூழ்ச்சியால் திட்டமிடப்பட்ட சிலந்தி வலை. அதேநேரம் முதலாளிக்கு மூலதனத்தைக் குவிக்க, இதன் மூலம் கட்டற்ற வரியற்ற சுதந்திரம். அந்த மேலதிக நேரத்திலான தொழிலாளியின் உழைப்புக்கும், அந்த உழைப்பு உருவாக்கும் உற்பத்திக்கும் முதலாளி வரி கட்டத் தேவையில்லை.


இந்த உத்தி மூலம் இரண்டு பகுதியையும் திருத்திசெய்வதாக காட்டும் முதலாளித்துவ அற்பத்தனங்கள். இதையே ஊடகங்கள் தமது பங்குக்கு ஊதிப்பெருக்கின. இதன் விளைவு என்ன? அதைபற்றி மட்டும் யாரும் பேசுவது கிடையாது. ஆம் நாம் அதைப்பற்றி பேசியே ஆக வேண்டும்


1. 200 பேர் தொழில் செய்கின்ற ஒரு வேலைத்தளத்தை நாம் எடுப்போம். ஒரு தொழிலாளி அல்லது ஊழியர் இரண்டு மணி நேரம் மேலதிகமாக வேலை செய்தால், 400 மணி மேலதிக நேரம் உழைப்பு உருவாகின்றது. இதுவே நாலு மணி நேரம் என்றால், 800 மணி நேரம் உருவாகின்றது.


இதற்கு இரண்டு பகுதிக்கும் வரி இல்லை என்பதன் மூலம், தொழிலாளிக்கு கிடைப்பது சில சில்லறைகள். முதலாளிக்கு கிடைப்பது 50 பேரின் அல்லது 100 பேரின் ஒரு நாள் உழைப்பிலான லாபம். 250 பேரை அல்லது 300 பேரை வேலையில் அமர்த்த வேண்டிய முதலாளி, லாபம் கருதி அதை 200 பேரைக் கொண்டு செய்யம் சூழ்ச்சி தான், வரவுள்ள சட்டத்தின் உள்ளடக்கம். அதாவது 2 மணி மேலதிக நேரம் மூலம், 50 தொழிலாளிகளின் வேலை மறுக்கப்படும். 4 மணி மேலதிக நேரம் மூலம் 100 தொழிலாளிகளின் வேலை மறுக்கப்படும். அந்த தொழிலாளிகளுக்கு முதலாளி கட்டவேண்டிய சமூக உதவிகளை கூட, முதலாளி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது.


இது இயல்பில் புதிய வேலை வாய்ப்பை சமூகத்துக்கு மறுக்கும். புதிய தலைமுறை அதிகளவுக்கு பாதிக்கப்படும். முதல் தலைமுறை இதற்கு இணங்கி செல்லும் குறுகிய அற்பத்தனம், அடுத்த தலைமுறையின் வாழ்வுக்கே வேட்டு வைக்கின்றது. சமூக பொது நிதிக்கு இந்த மேலதிக நேரம் மூலம் வழங்கப்பட வேண்டிய பணத்தை, முதலாளி கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பது, அரசு அதைக் கைவிட்டு செல்வதற்கு ஏற்ற கோட்பாடாகின்றது. 18ம் நூற்றாண்டு காலகட்டத்துக்கு மீண்டும் திரும்புவதை இது குறிக்கின்றது.


உண்மையில் முதலாளிக்கு வழங்கும் உள்ளார்ந்த லாப விதி, ஆட் குறைப்பைக் கோரும். 200 பேர் 400 மணி நேரத்தை மேலதிகமாக உழைக்கும் போது அல்லது 800 மணி நேரத்தை மேலதிகமாக உழைக்கும் போது, ஆள் உருப்படியின்றி 200 பேருக்குள் 50 தொழிலாளி அல்லது 100 தொழிலாளியின் மேலதிகமாக சொந்தத் தொழில்துறையில் இருப்பதைக் காண்பான். மேலதிக உழைப்பு முதலாளிக்கு அதிக லாபம் என்பதால், தனது 200 தொழிலாளிகள் உள்ள இடத்தில் 40 அல்லது 67 தொழிலாளிகள் அவசியமற்றதாகின்றது.


அதாவது 200 பேர் வேலை செய்யும் இடத்தில் சட்டப்படியான 1600 மணி வேலை நேரத்தை, லாபம் கருதி மேலதிக நேரத்தைக் கொண்டு பூர்த்திசெய்யவே மூலதனம் கருதும். இது முதலாளித்துவ பொருளாதார விதி. இது இயல்பில் ஆட் குறைப்பை உருவாக்குகின்றது. இது 40 பேரை அல்லது 67 பேரை வேலையில் இருந்து துரத்தி அடிக்கும். அந்த தொழிற் துறைக்கு தேவையான வேலை நேரம் 1600 மணிகள் என்பதால், 10 மணி நேரப்படி 160 தொழிலாளியும் அல்லது 12 மணி நேரப்படி 133 தொழிலாளியும் போதுமானது. இது 40 பேரை அல்லது 67 பேரை வீட்டுக்கு அனுப்பும். அல்லது 50 முதல் 100 பேரின் வேலையை மறுக்கும். தொழிலாளிகளின் எண்ணிக்கையை குறைத்தலும், வேலைக்கு எடுத்தலை தவிர்த்தலும் முதலாளியின் லாப விதிக்கு அமைய, இந்த சமூகத்தின் துன்பக் கடலில் இறக்கும். நிக்கோல சார்க்கோசியின் பொற்காலம் இப்படித்தான், மனிதர்களுக்கு எதிராக அலைஅலையாக உருவாகும்.


அற்ப இழிவான நுகர்வுச் சலுகையைக் கொண்டு, பெருமளவிலான உழைக்கும் மக்களின் வாழ்வையே சிதைக்கும் கீழ்த்தரமான முதலாளித்துவதற்கே உரிய உத்தி. இதை அற்ப அரசியல் பிரச்சாரத்தின் மூலம், மனித மனங்களை மயங்குகின்ற நிக்கோல சார்க்கோசி பொற்கால வாதங்கள்.


2. அடுத்து இந்த மேலதிக வேலை நேரம் படிப்படியாக, அடிப்படையான வேலை நேரமாக, கட்டாய வேலை நேரமாக மாறிவிடும். மேலதிக வேலை நேரம், இயல்பாகவே தொழிலாளியின் அல்லது ஊழியரின் சுய தன்மையையே அழித்துவிடும. தொழிலாளியின் ஒய்வு திருடப்பட்டுவிடும். உழைப்பிலும், உறக்கத்திலும் முழு வாழ்வையும் ஆழ்த்திவிடும். வாழ்வின் இயந்திரத் தன்மை மேலும் நுட்பமாக அதிகரிக்கும்.


3. தொழிலாளியின் மேலதிக வேலை நேரம், கூலியின் பெறுமதியை இல்லாதாக்கிவிடும். மேலதிகக் கூலி இன்றி வாழ்வை நடத்த முடியாத வகையில், வாழ்க்கைச் செலவின் மட்டம் உயர்ந்துவிடும். முன்பு மேலதிக நேரமின்றி உழைத்து வாழ்ந்த போது வாழ்ந்த வாழ்க்கை, மேலதிக நேரத்தில் உழைத்தும் வாழமுடியாத நிலைக்கு வாழ்க்கைச் செலவு மாறிவிடும். அதாவது பணத்தின் பெறுமதி குறைக்கப்பட்டு விடும். உதாரணமாக அடிப்படைச் சம்பளத்தை 1500 ஈரோக்காக கோருகின்ற இன்றைய நிலையில், அதுவே வாழ்க்கைச் செலவாக கருதப்படுகின்றது. அதை உயர்த்த மறுக்கும் முதலாளியும் அரசும், அதை மேலதிக நேரம் மூலம் ஈடுசெய்யக் கோருகின்றான். இப்படி மேலதிக நேரம் மூலம் இது ஈடுசெய்யப்படும் போது, அந்த 1500 ஈரோக்களைக் கொண்டு வாழமுடியாத நிலை உருவாகிவிடும். தொழிலாளிக்கு வேறு மாற்று வழி இல்லாமல் போய்விடும். 12 மணி கட்டாயம் உழைத்தேயாக வேண்டும். இப்படி தொழிலாளி வர்க்கம் மாற்றப்பட்டுவிடும்.


4 .மேலதிக வேலை நேரம் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என்று சமூகத்தின் ஒரு பகுதியின் அற்ப சுயநலத்தை எழுப்பி, மற்றைய சமூக உறுப்புக்கு எதிராக முன்தள்ளுகின்றது. இதன் மூலம் சமூகத்தின் உள்ளார்ந்த முரண்பாட்டை உருவாக்கி, இலவசமாக மனித உழைப்பை திருடி மூலதனம் கொழுக்க முனைகின்றது.


உழைப்பை சந்தையில் விற்பவன் மேலதிக நேரத்துக்கு வரிச் சலுகையை அனுபவிக்க வேண்டும் என்றால், குழந்தை இல்லாமல் இருத்தல் அவசியமானது. குழந்தைகள் இருந்தால் இயல்பில் வரி கட்ட வாய்ப்பு இருப்பதில்லை. இந்த வகையில் கூட மேலதிக வேலை நேரத்துக்கான சலுகை என்பது முதலாளிக்கானதே.


அத்துடன் குறித்த வயதுடைய உழைக்கும் ஆற்றலுள்ள இளம் பிரிவை அதிதமாக சுரண்டுதல் மூலம், உழைப்பின் ஆற்றலை உறிஞ்சி பின் தூக்கியெறியும் மூலதனத் தத்துவமாகும்.


குடும்ப அலகில் ஓய்வாகவும் சமூகமாகவும் இருத்தல் என்பது மறுக்கப்படுவதன் மூலம், சமூக உறுப்புகள் மேலும் ஆழமாக சிதைவுறும். மேலதிக உழைப்பு, உழைப்புச் சமூகத்தின் உள் நுழைய முனையும் புதிய தலைமுறைக்கு அதை மறுப்பதன் மூலம் செயலாற்றும். அதேபோல் உழைப்பில் ஆற்றலை உடல் ரீதியாக இழந்து போன சமூகப் பிரிவுக்கு எதிராக இது அமையும். மேலதிக உழைப்பில் ஈடுபட முடியாத நிலையில், அவர்கள் மேல் கடுமையான உழைப்பின் சுமையை அழுத்தும். பழைய தலைமுறையை உழைப்பில் அதிமாக ஈடுபடும்படி, இளைய தலைமுறையின் உழைப்பின் ஆற்றல் நிர்ப்பந்திக்கும். பழைய தலைமுறையின் வேலையை இழக்க வைக்கும் அபாயத்தை, நிரந்தரமாக மேலதிக வேலையின் ஆற்றல் உருவாக்கிவிடும்.


5. மேலதிக வேலை செய்ய மறுக்கும் ஒருவன் முதலாளிக்கு அவசியமற்ற உழைப்பாக கருதி, உழைப்பில் இருந்து கழித்துக்கட்டும் தெரிவை இயல்பாக வழங்கும். அதுதானே மூலதனத்தின் ஜனநாயகம் மட்டுமின்றி சுதந்திரமும் கூட.


6. கூலி போதாமையால் ஏற்படும் சமூக நெருக்கடிகளை, மேலதிக வேலை நேரம் மூலம் தற்காலிகமாக பின் போடுவதன் மூலம், சமூகத்தின் புரட்சிகரமான ஆற்றலை, விழிப்புணர்வை ஒரு பகுதியினரிடம் இது தற்காலிகமாக முடக்கமுனையும்.


இப்படி இந்த மேலதிக வேலைக்கு பல பக்கங்கள் உண்டு. இதை மூடிமறைத்து கவர்ச்சியாக, அரசியல் வித்தை காட்டி, மோசடிகள் செய்து, ஊடகவியல் மூலம் வீங்கவைத்து சமூகத்தை நலமடித்தே, மூலதனத்துக்காக தேர்தல் வெற்றிகளைப் பெறுகின்றனர். சமூத்தின் உள்ளார்ந்த உறுப்பையே அழித்து அதை தின்னுவது தான், இந்த மேலாதிக்க நேரக் கனவுகள் பின்னுள்ள மயக்கம்.


பழைய வாகனத்துக்கு அதிக வரி, புதிய வாகனத்துக்கு குறைந்த வரி


சுற்றுச் சூழலுக்கு ஊடாக ஏழைகளுக்கு வலதுசாரிகள் வைக்கும் நஞ்சு தான் இது. சாராம்சத்தில் பணக்காரனுக்கு வரி குறைப்பு, ஏழைக்கு வரி அதிகரிப்பு. ஏழைகள் நுகர்வதை குறை, பணக்காரன் நுகர்வதை அதிகரி என்ற மூலதனத் தத்துவம். இதை சுற்றுச் சுழலுக்குள் நுழைத்த நுட்பம் தான், பலருக்கும் புரியாத புதிர்.


பணக்கார நாடுகள் தான், அதன் நுகர்வு தான், அதன் லாப வெறி தான், சுற்றுச் சூழல் மாசடைதல் அழிப்புக்கான காரணமாகும். ஆனால் கஞ்சிக்கே வழியற்ற ஏழைநாடுகளின் மீது இதை போட முனைகின்ற அமெரிக்காவின் முயற்சியை, ஒரு நாட்டில் உள்ள ஏழைகள் மீது கொண்டு வருவது தான் நிக்கோல சார்க்கோசியின் உத்தி. இது பலருக்கு புரியாத புதிராக இருப்பது தான் வேடிக்கை. மூலதனத்தின் கால்களில் படுத்து கிடந்து குலைக்கும் வலதுசாரிகள், இப்படித்தான் இதைக் கொண்டு வருவார்கள்.


அதிக நுகர்வு தான் சுற்றுச் சூழலுக்கான பிரச்சனைக்கு காரணம். அதிக நுகர்வுக்கு, அதிக வரி என்ற சட்டத்தை வலதுசாரிகள் ஒருநாளும் கொண்டு வரமாட்டார்கள். ஏழைக்கும், அவனின் நுகர்வுக்கும் அதிக வரியை எப்படி அதிகரிப்பது பற்றி சதா அவர்கள் சிந்திப்பவர்கள்.


இன்று புகைத்தால் கிடைக்கும் வருமானத்தை விட, புகைத்ததால் வரும் நோய்க்கு அதிகம் செலவழிக்கப் படுகின்றது. இது உலகளாவிய நிலை. ஆனால் புகைத்தலை ஒழிக்கமாட்டார்கள். அதாவது சிகரட்டை உற்பத்தி செய்பவனும், அது உருவாக்கும் நோய்க்கு மருந்தை உற்பத்தி செய்பவனும் புகைத்தலை தடைசெய்ய அனுமதிக்க மாட்டான். அவன்தான் அரசை நிர்வகிப்பவனான உள்ளான். அவன் இதில் உள்ள வேலை வாய்ப்பு முதல் பலவற்றையும் கூறி இதைப் பாதுகாப்பான்.


இது போல் தான் தனியார் வாகனங்களை வைத்திருப்பதும். இது சுற்றுச் சூழலுக்கு நஞ்சிடுகின்றது. தனியார் வாகனம் வைத்திருப்பால் கிடைக்கும் வருமானத்தைவிட, அது ஏற்படுத்தும் சுற்றுச் சூழலால் ஏற்படும் வருமான இழப்பு அதிகமானது. ஆனால் மூலதனம் தனியார் வாகனத்தை வைத்திருத்தல் தான், சில முதலாளிகளின் இருப்புக்கான அத்திவாரம். அவன்தான் அரசு என்றால், அதன் எடுபிடிகள் தான் தேர்வு செய்யப்படும் உறுப்புகள்.


சுற்றுச்சூழல் பிரச்சனையின் ஒரு அம்சமாக உள்ள வாகனப் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும். இதை செய்வது என்பது, பொதுப்போக்குவரத்தை அதிகரிப்பதாகும். அத்துடன் அதை இலவசமாக விடுவதன் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். இதை மீறி தனியார் வாகனத்தை வைத்திருக்க விரும்பினால், அதன் மீதான அதிக வரி என்ற சட்டம் அவசியமானது.


பொதுவாக சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் செலவைவிட, பொதுப்போக்குவரத்தை இலவசமாக்குவது செலவு குறைவானது. இதவே எதார்த்தம். அதிக லாபம், முதலாளி சுரண்டிக் கொழுக்கும் சுதந்திரம் என்பன இதை அனுமதிக்க மாட்டாது. அரசு முதலாளியின் நலனுக்காகவே இயங்குவதால், இதை கவனத்தில் எடுக்காது. மக்கள் மட்டும் தான், தனக்கு தேவையான உண்மையான ஒன்றை எதார்த்தத்தின் மீது கொண்டு வரமுடியும்.


பிரஞ்சு மக்களை அடையாளப்படுத்தல்


இதுவும் நிக்கோல சார்க்கோசியால் முன்வைக்கப்பட்டதும், அவரின் வெற்றியை தீர்மானித்த காரணிகளில் ஒன்று. தீவிர இனவாத வலதுசாரிய கண்ணோட்டாத்தை, வெளிநாட்டவருக்கு எதிராக இப்படி கிளப்பி விடப்பட்டது.


இதுவே நிக்கோல சார்க்கோசியின் வெற்றியில் முக்கியமான அம்சமாக செயல்பட்டது. ஒரு பிரஞ்சு நாட்டில், அந்த மக்களின் முன், உங்களை அடையாளப்படுத்துவேன் என்றால், அதன் அர்த்தம் என்ன?


பிரஞ்சு மக்கள் யாரிடமோ தமது சொந்த அடையாளத்தை இழந்துள்ளனர் என்பதல்லவா அதன் அர்த்தம். சரி யாரிடமிருந்து இதை மீட்க கோருகின்றனர்.?


இந்த விடையத்தில் உள்ள இனவாதத்தை புரிந்த கொள்ளாத பலர் அவருக்கு வாக்களித்தனர். இதற்காகவே மட்டுமே சிலர் வாக்களித்தனர்.


பிரஞ்சு மக்களை அடையாளப்படுத்தல் என்பது, உண்மையில் வெளிநாட்டவர்கள் மீதான வன்முறை ஏவப்படுவதையும், அவர்கள் ஓடுக்கப்படுவதையும், அவர்கள் சிறைக் கொட்டகைகளில் அடைக்கப்படுவதையும், அவர்கள் நாடு கடத்தப்படுவதையும் தாண்டி இதற்கு வேறு விளக்கம் கிடையாது. இதற்கு ஏற்ற சட்டங்கள், புதிய சட்டங்கள் மூலம் குற்றவாளி சமூகமாக வெளிநாட்டவர் உருவாக்கப்படுவார்கள்.


இதற்கு வெளியில் இந்தக் கோசம் வெற்றி பெறவேண்டும் என்றால், தீவிரமான நாசிய பாசிச கட்சியாக, ஒரு உலக யுத்தத்தை நோக்கி நகரவேண்டும். ஆக்கிரமிப்புக்கள் மூலம் உலகை மறுபங்கீடு செய்தல் என்று தீவிர உலக நெருக்கடிக்குள் புகுந்து, பிரஞ்சு சமூகத்தை அடையாளம் காட்டவேண்டும். இதுவே இதில் இரண்டாவது அம்சமாகும்.


இரண்டாவது அம்சம் ஒருபுறம் இயங்கு தளத்தை பெறுவதற்குரிய சூழல், இனித்தான் அரசியல் ரீதியாக தீவிரமாக தயாரிக்கப்பட வேண்டும். முதலாவதாக பிரஞ்சு மக்களை அடையாளப்படுத்துவதற்கு, வெளிநாட்டவர் மீதான தாக்குதலுக்குரிய உணர்வு மட்டம் தயாராகவே உள்ளது. அதை நாம் சந்திக்கும் காலம் விரைவில் முழுவடிவில் வெளிப்படும். இன்று உள்ளது போல், இனங்களுக்கு ஏற்ற தனிக் குடியிருப்புகள் போல், தீவிரமான வேறுபாட்டை சமூகங்களுக்கு இடையில் உற்பத்தி செய்வதும், தனிமைப்படுத்துவதும் தொடங்கும். மற்றய சமூகங்களை இழிவுபடுத்துவது வரையிலான மனித விரோதக் கூறுகள் பல, நிக்கோல சார்க்கோசியின் வேலைத் திட்டத்தின் உள்ளார்ந்த அம்சமாகும்.


அதிக வாக்களிப்பு எதை உணர்த்துகின்றது.


என்றுமில்லாத அதிக வாக்களிப்பு இம்முறை நடந்துள்ளது. ஆம் சமூகத்தின் அரசியல் மட்டம் விழிப்புற்றதன் விளைவே அதிக வாக்களிப்புக்குள்ளாகியது. நிக்கோல சார்க்கோசியை தோற்கடிக்க வேண்டும் என்ற உணர்வு, சமூகங்களின் கீழ் மட்டங்களில் ஏற்பட்டதன் விளைவு அதிக வாக்களிப்பாகியது.


உண்மையில் நிக்கோல சார்க்கோசி வருகையின் அபாயத்தை உணர்ந்து கொண்டவர்கள் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்பவர்கள் தான். இது அதிகரித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. அராஜக வழிகளுக்கு பதில், அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட்ட வேண்டும் என்ற உந்துதலை இது முதன் முதலாக வழங்கியது. தேர்தலில் நிக்கோல சார்க்கோசிக்கு எதிராக, கீழ் மட்டங்களில் தன்னிச்சையாக தீவிர பிரச்சாரம் நடத்தப்பட்டது. ஆனால் அது அரசியல் ரீதியாக முழுமை பெறாததுடன், அத்துடன் அது மேல் நோக்கி செல்லவில்லை.


உண்மையில கீழ் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி அரசியல் ரீதியாக முழுமை பெற்று இருக்கவில்லை. முதலாளித்துவ எல்லைக்குள்ளாக அது சுருங்கிக் காணப்பட்டது. சமூகங்களை அரசியல் மயமாக்கும் வகையில், அரசியல் மயமாக்கல் நடக்கவில்லை. சுற்றுச் சூழல் அமைப்புகள் முதல், கம்யூனிஸ்ட் கட்சி ரொட்சிய கட்சிகள் வரை புரட்சிகரமான வழிகாட்டலைச் செய்யவில்லை. தமது துரோகத்துக்கு ஏற்ற விபச்சாரத்தை அரசியலாகச் செய்தனர். இவர்கள் சமூகங்களிடையே எந்த நம்பிக்கையுமற்ற பிழைப்புவாத குழுக்களாகிவிட்டன. ஒரு விடையத்தின் சாரத்தை உள்ளார்ந்த அறிவியல் பூர்வமாக எடுத்துச்செல்லக் கூட தகுதியற்ற குழுக்களாகிவிட்டன. வெற்றுக் கோசங்கள் அரசியல் விழிப்புணர்ச்சியை உருவாக்குவதில்லை. அதுவே நிக்கோல சார்க்கோசி வெற்றியை தீர்மானிக்கும் மாற்று காரணியாக கீழ் இருந்து உருவாக்கியது.


மாறாக புரட்சிகரமான வழியில் கற்பதும் கற்றுக் கொடுப்பதுமான புரட்சிகரமான அரசியல் அவசியமானது. சம்பவங்கள் முதல் நிகழ்ச்சி நிரலின் சாதக பாதக அம்சங்களை அரசியல் ரீதியாக புரிந்து, அதை மாற்ற அணிதிரள வேண்டும். நிக்கோல சார்க்கோசியின் வெற்றியும், அவரின் எதிர்காலச் செயல்பாடும், பிரஞ்ச தேசத்தில் புதிய புரட்சிகரமான வழியை நிச்சயமாக வழிகாட்டும். எல்லாவிதமான மக்களுக்கு வெளியில் இயங்கும் புரட்சிகர வெற்றுக் கோசங்களையும் ஓரம் கட்டி, உண்மையான புரட்சிகரமான அறிவியல் ப+ர்வமான விழிப்புணர்வுடன் சமூகம் கொந்தளிப்பதை, நிக்கோல சார்க்கோசி தடுக்க முடியாது. நடக்கப் போவது இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான வர்க்கப் போராட்டம் தான்.


பின் இணைப்பு.


தமிழர்கள் நிக்கோல சார்க்கோசிக்கு வாக்களித்தனரே ஏன்?


பெரும்பாலான தமிழர்கள் நிக்கோல சார்க்கோசிக்கே வாக்களித்தனர். புலிகள் தமது குறுகிய நலனை சார்ந்து, தம் மீதான கைதைத் தொடர்ந்து நிக்கோல சார்க்கோசிக்கு எதிராக வாக்களிக்க கோரியதுக்கு அப்பால் இவை இயல்பாக நிகழ்ந்துள்ளது.


தமிழர்கள் இயல்பாகவே வலதுசாரிகள் என்பதால் அதற்கு வாக்களித்தனர். இந்த வகையில் புலிகள் கூட நிக்கோல சார்க்கோசிக்கே வாக்களித்திருப்பார்கள். ஆனால் கைது முந்திக் கொண்டதால், அதை மறுத்து நின்றனர். இங்கு அரசியல் ரீதியாக அல்ல.


தமிழர்கள் இயல்பாகவே வலதுசாரி சிந்தைனையில் வாழ்வு பற்றி கனவு காண்பவர்கள். சமூக இழி நிலையில் வாழ்ந்தபடி தற்பெருமை பேசுகின்ற வாயாடிகள். இப்படி வலதுசாரிய சிந்தனையைக் கொண்டவர்கள் என்பதால், இயல்பாக வலதுசாரி சிந்தனைகளுக்கு துதிபாடுபவர்கள். அந்த கவர்ச்சியின் பின்னால் தலைகால் தெரியாது ஓடி நக்குபவர்கள். அனைத்தையும் சுயசிந்தனை இழந்து, கிளிப்பிள்ளைகள் போல் உளறுபவர்கள்.


புலிகளின் பாசிச அதிகாரத்துக்கு உட்பட்ட பின், இது மேலும் மூர்க்கமாகி உள்ளது. மற்றவன் கண்ணைக் குத்தி மகிழ்ச்சி அடைவதில் வீரம் பேசுபவர்கள். இந்த வகையில் தம்மை புனிதர்களாக, சட்ட ஒழுங்கை மதிப்பவர்களாக காட்டிக்கொண்டு அதற்கு போலியாக நடிப்பவர்கள். ஆனால் வலதுசாரி ஒழுக்ககேட்டுக்கு ஏற்ப, பல சட்டவிரோத செயல்களை செய்வதில் கைதேர்ந்தவர்கள். இதன் பின் வலதுசாரி சிந்தனை கொண்ட ஒரு மாபியா உலகமே உள்ளது.


இந்த வகையில் தமது போலித்தனமான பகட்டை பிரகடனம் செய்தபடி, வலதுசாரிகளுக்கு வாக்களிப்பதின் மூலம் பெருமை கொண்டனர். அப்படித் தான் வாக்களித்தனர்.



No comments: