தமிழ் அரங்கம்

Thursday, August 2, 2007

தமிழ் மக்களின் சொந்த தீர்வு எது?

பி.இரயாகரன்
03.07.2007



இந்த விடையில் எமது நிலை என்பது தெளிவானதும், வெளிப்படையானதுமாகும். தமிழ் மக்களுக்கு வெளியில், எமக்கு என்று தனியான சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது. ஆனால் இதை புரியாத மாதிரி குழப்புவதில் தான், பிற்போக்கு சக்திகளின் சொந்த வர்க்க அரசியலே அடங்கிக் கிடக்கின்றது.


தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக, பொதுவாக இரண்டு வழிகள் தமிழர் தரப்பில் வைக்கப்படுகின்றது. இவ்விரண்டும் மக்களின் சொந்த நிலைப்பாட்டுக்கே எதிரானவை. இப்படி


1.புலிகளால் புலித் தமிழீழம் வைக்கப்படுகின்றது.


2. புலியெதிர்ப்பு அணியால் புலியொழிப்பு வைக்கப்படுகின்றது.


இப்படி ஆதிக்கம் பெற்ற இந்த இரண்டு அரசியல் போக்கும், தத்தம் இந்த வழிகள் மூலமே, தமிழ் மக்களின் பிரச்சனையை தாம் தீர்க்க முடியும் என்கின்றனர்.


சரி தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ன என்றால், அதை வரட்டுத்தனமாக ஒருமையில் திணிக்கின்றனர். அதை வெறும் பேரினவாதமாகவும், வெறும் புலியாகவும் காட்டுகின்றனர். இதற்கு அப்பால் சிந்திக்க, செயல்பட யாரையும் அனுமதிப்பதில்லை. குறிப்பாக அதன் அரசியல் சாரத்தை முன்வைக்க மறுப்பவர்கள். முன்வைக்க முனைபவர்களை ஒடுக்குவதே, இவர்களின் வர்க்க அரசியல் நிலையாகும். வலதுசாரிய அரசியலின் கடைந்தெடுத்த கேடுகெட்ட போக்கிரிகளே இந்தக் கோட்பாட்டின் பிரதிநிதிகள்.


இதனால் இதை சாதிப்பதில் பேதம் எதுவுமற்ற மனித விரோதிகள். இதனால் பேய்களுடனும் பிசாசுகளுடனும் கூடி இதை சாதிக்க முனைவதாக பிரகடனம் செய்கின்றனர். கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்த இரண்டு வழியில் பயணிக்கின்றனர். ஆயிரம் ஆயிரம் மக்களை இந்த வழியில் இவர்கள் கொன்று போட்டுள்ளனர்.


இந்த இரண்டு வழியை முன்வைப்பவர்கள், தெளிவாகவே மக்களை அணிதிரட்டுவதை நிராகரிக்கின்றனர். மக்களை அணிதிரட்டுது சாத்தியமற்றதொன்று என்று, தமது சொந்த சுத்துமாத்து வழிகளில் கூறியே, அனைத்து மக்கள் விரோத செயலையும் செய்கின்றனர்.


நாம் இந்த இரண்டு வழியையும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் நிராகரிக்கின்றோம். நாம் முன்மொழிவது இந்த இரண்டு வழிக்கும் முற்றிலும் நேர்மாறானது. நாம் முன்வைப்பது புலியொழிப்போ, புலித்தமிழீழமோ அல்ல. மாறாக மக்கள் தமது சொந்த விடுதலைக்காக, தாம் போராடுவதே தான். இதை இந்த இரண்டு தரப்பும் தெளிவாக நிராகரிக்கின்றனர். இந்த வழியை, இன்று வரை சாத்தியமற்றதே என்று இருதரப்பும் கூறுகின்றனர். குறுக்கு வழியில் குறுக்காக ஓடி இதைச் சாதிக்க முடியும் என்கின்றனர் அவர்கள். மக்கள் இதை சாதிக்க முடியாது என்பதால், அவர்கள் ஒதுங்கி வாழமுனைகின்றனர்.


இப்படித்தான் அன்று இந்தியா உதவியில்லாத தமிழீழமா என்றனர். இப்படி மக்களை நிராகரித்த படி, அன்னிய சக்திகளின் தயவில் இயங்கத் தொடங்கியவர்கள், படிப்படியாக மக்களையே எட்டி உதைக்கத் தொடங்கினர். மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் தமது இந்த இலட்சியத்துக்கு எதிரானதாகவும், துரோகத்தனமானதாகவும் சித்தரித்தனர். அதை முன்வைத்தவர்களை துரோகிகளாக காட்டிக் கொன்றனர். இப்படி உள்ளியக்க வெளியியக்க படுகொலைகள் மூலம், அன்னிய சக்திகளின் தயவில் நின்று தமிழீழம் என்றனர்.


இப்படித் தாம் மக்களுக்காக போராடி, மக்களின் விடுதலையை பெற்றுத் தரப்போவதாக கூறிக்கொண்டு, மக்களை ஒடுக்குவதன் மூலம் அரசியல் செய்தனர். இன்றும் அதைச் செய்கின்றனர். 1970 களிலும், 1980 களிலும் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இயங்கிய காலத்தில் கூட, இவர்கள் மக்கள் தாம் தமது சொந்த விடுதலைக்காக போராட வேண்டும் என்பதை தெளிவாக நிராகரித்தவர்கள். இப்படி அன்று முதல் அந்த மக்களுக்கு எதிராக இயங்கத் தொடங்கியவர்கள். மக்கள் தமக்காக தாம் போராட முடியாதவர்கள் என்றனர். மக்கள் போராட்டம் என்பது சாத்தியமற்றது என்றனர். இதை மீறிய போது, யார் சாத்தியமற்றது என்றனரோ, அவர்கள் மக்கள் போராட்டங்களையும் அக்கருத்துக்களையும் ஈவிரக்கமின்றி ஒடுக்கினர். மக்கள் மத்தியில் தமது சொந்த விடுதலை சார்ந்து போராடிய போது அல்லது மக்கள் பிரச்சனை முன்னுக்கு வந்த போதெல்லாம் அதை ஒடுக்கத் தொடங்கினர்.


வெறும் இளைஞர்கள் போராட்டம், மக்களின் வாழும் உரிமையை மறுக்கத் தொடங்கினர். அதாவது மக்கள் உழைத்து வாழ்ந்த வாழ்வு சார்ந்த அன்றாட போராட்டம் ஒருபுறம், மறுபுறம் உழையாது பெற்றோரில் தங்கி வாழ்ந்த இளைஞர்களின் போராட்டம். இப்படி இரண்டு போராட்டம், இரண்டு திசையில் நேர் முரணாக விலகிச்சென்றது. உழைத்து வாழ்பவர்கள் மக்களாக தமது வாழ்வுக்காக போராடி வாழ, உழையாது வாழ்பவன் போராடுவதாக கூறிக்கொண்டு சுரண்டி வாழும் முரண்நிலை உருவானது. இதுவே இன்று வரை தொடருகின்றது. இரண்டு வர்க்க உள்ளடகத்தில் பிரிந்து, ஒட்டமுடியாத சமூக உறவுகளை கொண்டதாகிவிட்டது. இப்படி மக்கள் சார்ந்த கருத்தை, மக்கள் செயல்பாட்டை ஒடுக்கினர்.


இந்த அரசியலைக் கொண்டவர்கள், இன்று வரை அந்த அரசியலை சுயவிமர்சனம் செய்தது கிடையாது. ஏன் புலியொழிப்புவாதிகளான புலியெதிர்ப்பு அணி, புலியின் அரசியலை விமர்சித்து அரசியல் செய்ய விரும்பாத அரசியல் மர்மம், இந்த அரசியல் சூக்குமத்தில் அடங்கிக் கிடக்கின்றது.


மக்கள் பற்றிப் புலி என்ன கருத்து கொண்டு உள்ளதோ, அதே கருத்தைத் தான் புலியொழிப்புவாதிகளும் கொண்டுள்ளனர். மக்கள் போராடுவதற்கு உதவாதவர்கள் என்பதே, இவர்களின் அரசியல் வர்க்க நிலைப்பாடாகும். இவர்களின் பார்வையில் மக்கள் பணத்தைத் தமக்கு தரவும், தமது வர்க்க நோக்கத்துக்கு பின்னால் கைதட்டவும், தம் பின்னால் வால் பிடிக்க வேண்டும் என்பதைத் தாண்டி இவர்கள் சிந்திப்பதுமில்லை. உண்மையில் அதை அனுமதிப்பதுமில்லை. இதன் அடிப்படையில், மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக வைத்திருக்க முனைகின்றனர். இதைத் தான் புலியும் சரி, புலியொழிப்பும் சரி, தமது சொந்த அரசியலாக முன்வைக்கின்றது.


புலியை ஒழிப்பதன் மூலம் அல்லது தமிழீழம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா?


இல்லை. இந்த வகையில் புலியெதிர்ப்பு கும்பல் புலியொழிப்பை முன்வைக்கின்றது. இதற்கு புலியின் பாசிச நடத்தைகளைக் காட்டி, இந்தக் கேடுகெட்ட இழிவான அரசியலை முன்வைக்கின்றனர். புலியை ஒழித்தால், தமிழ் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற்றுவிடுவார்கள் என்று கூறவும் கூட செய்கின்றனர்.


புலிகள் என்ன சொல்லுகின்றார்கள். புலிக்கு எதிரானவர்களை அழித்தால், தமிழீழத்தை பெற்று தமிழ் மக்கள் சுபீட்சத்தை அடைவார்கள் என்றார்கள்.


இப்படி ஒரு அரசியல் மாயையை விதைப்பதன் மூலம், தமிழ் மக்களை ஏமாற்றுவதில் தான், இவர்களின் நாய்ப் பிழைப்பே நடக்கின்றது. தமிழ் மக்களை இந்த எல்லைக்குள் முடக்கி, தமக்குள் இதன் அடிப்படையில் எதிர்ரெதிர் முகாம்களாக பிரிந்து, வம்பளப்பதையே இரு தரப்பும் விரும்புகின்றனர்.


புலியெதிர்ப்புக் கும்பல் விரும்புவது போல் புலியை ஒழித்தால், தமிழ் மக்கள் வாழ்வில் பாலும் தேனும் ஓடுமா? எப்படி? புலியெதிர்ப்பு முன்வைக்கும் புலியொழிப்புக் கும்பல் இதற்கு பதிலளிக்காது. மக்கள் இதைப் புரிந்துகொள்ள முடியாத வகையில், ஒரு அரசியல் சூனியத்தில் இதை ஏற்க வைக்க முனைகின்றனர்.


ஆனால் மக்கள் இதற்கு எதிராக, தமது சொந்த வாழ்வுரிமைக்காக தனித்தனியாக தன்னளவில் போராடுவது அன்றாடம் நிகழ்கின்றது. இல்லையெனின் அவர்களுக்கு உயிர் வாழ்வில்லை. இதற்கு வெளியில் தான் புலித் தமிழீழமும், புலியொழிப்பும் மக்கள் விரோதமாக இயங்குகின்றது. மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைக்கு வெளியில், இவை அன்றாடம் பூதாகரப்படுத்தப்படுகின்றது.


இந்த வகையில் புலியின் அரசியல் சரி, புலியொழிப்பு அரசியல் சரி, வர்க்க உள்ளடகத்தில் ஒன்றே. மக்களின் சமூக பொருளாதார பிரச்சனையை முன்னெடுப்பதற்கு எதிரானவர்கள். இப்படி மக்களின் சொந்த வாழ்வியல் பிரச்சனைகளில் இருந்து, இருதரப்புமே அன்னியமானவர்கள்.


அதாவது மக்கள் தாம் தமக்காக சொந்த சமூக பொருளாதார கோரிக்கையுடன் போராடுவதை எதிர்ப்பவர்கள் இவர்கள். இதை சாத்தியமற்ற ஒன்றாகவே எப்போதும் எங்கும் காட்டுகின்றனர், காட்ட முனைகின்றனர்.


நாம் இதை எதிர்ப்பதால், நாம் அவர்களின முதன்மை எதிரியாக உள்ளோம். மக்கள் தாம் தமக்காக போராடுவதே உண்மையான விடுதலை என்ற நிலைப்பாட்டை நாம் கொண்டவர்கள் என்பதால், அவர்களில் இருந்து தெளிவாக அரசியல் ரீதியாக வேறுபட்டவர்கள். அதாவது இதற்கு வெளியில் எந்த நிலைப்பாட்டையும், அது சார்ந்த நடைமுறையையும் கடுமையாக எதிர்ப்பவர்களாக நாம் உள்ளோம். புலித் தமிழீழம் மற்றும் புலியொழிப்பு பேர் வழிகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்ப்பதனால், அதனை எதிர்கொண்டு தனித்து போராட வேண்டியுள்ளது.


எப்படி மக்கள் அரசியல் அனாதைகளாக வாழ்கின்றனரோ, அப்படித் தான் எமது கருத்தும். மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகள் சமூகத்தில் கேட்பாரின்றி அனாதையாகி ஒடுக்குமுறைக்கு எப்படி உள்ளாகின்றதோ, அது சார்ந்த எமது கருத்தும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றது. இப்படி மக்களின் சொந்த வாழ்க்கை எப்படி ஊடகவியலால் இருட்டடிப்பு செய்யப்படுகிறதோ, அப்படி மக்கள் கருத்தும் இருட்டடிப்பு செய்யப்படுகின்றது.


புலித்தமிழீழம், புலியொழிப்பு என்ற இரண்டு கருத்தும் முன்மைபெற்ற ஒன்றாக உள்ளது. அதாவது ஆதிக்கம் பெற்ற ஊடகவியல் மூலமும், பண ஆதிக்கம் மூலமும், பேரினவாத துணை கொண்டும், ஏகாதிபத்திய துணை கொண்டும் தமிழ் மக்களை இக்கருத்துக்கள் ஆக்கிரமித்து நிற்கின்றது. இந்த இரண்டு பிரதான மக்கள் விரோத நிலைக்கு எதிராக எமது போராட்டம் தனித்துவமானது. இதற்குள் மட்டும் உலகைப் பார்க்கும் சிலருக்கு, இவை அன்றாட கொசிப்பாக இருக்கின்றது. ஆனால் எமது போராட்டம் கடுமையானது. அநேகமாக தன்னம் தனியாகவே, கடுமையான பல நெருக்கடிகள் ஊடாகவே நகருகின்றது. ஆனால் எமது இந்தப் போராட்டம் மக்கள் உள்ள வரை, அரசியல ரீதியாக யாராலும் வெல்லப்பட முடியாதது.


தமிழீழமா! புலியொழிப்பா! அல்லது இரண்டுமா! என அனைத்தையும் தீர்மானிப்பது யார்? தமிழ் மக்கள் தாம் தம் மீதான சொந்த ஒடுக்குமுறையை இனம் கண்டு, தமது சொந்த விடுதலைக்கான தமது சொந்த போராட்டம் மூலம் தாமே போராட வேண்டும். இதைவிடுத்து புலித் தமிழீழம் என்று புலிகளோ அல்லது புலியொழிப்பு என்று புலியெதிர்ப்பு கும்பலோ, தான் தீர்மானித்த ஒன்றை தமிழ் மக்களுக்கு திணிப்பது மக்கள் போராட்டமல்ல. இது தமிழ் மக்கள் மீதான பாரிய ஒரு அரசியல் வன்முறையாகும்.


மக்கள் தாமே தமக்காக போராட வேண்டும் என்பதை மறுக்கின்றதும், அதை வழிகாட்ட முனையாத அனைத்துமே, மக்கள் விரோதத் தன்மை கொண்டவை. மக்கள் போராட்டம் சாத்தியமற்றது என்று கூறிக்கொண்டு, இப்படி மக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கடைந்தெடுத்த மகா அயோக்கியர்கள். மக்களின் பிரச்சனைகளை விடுத்து, அதை பின்போட்டு, புலித்தமிழீழம் அல்லது புலியொழிப்பே இன்று முதன்மையானது என்று கூறுவர்கள் அனைவரும், மக்களின் முதுகில் குத்தும் முதன்மைத் துரோகிகளாவர்.

No comments: