தமிழ் அரங்கம்

Thursday, August 9, 2007

துப்பாக்கி முனையிலேயே தமிழ் மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படுகின்றது

ஒரு தேசத்தின் வாழ்வியல் விதியைக் குறித்து ராஜனி திராணகம தனது படுகொலைக்குச் சில நாட்களின் முன்பே எழுதினார். "எப்போதெல்லாம் நாம் எழுத நினைக்கின்றோமோ அப்போதெல்லாம் இந்த எதார்த்தத்திற்குள் நாமும் புதைந்து போய் விடுகிறோம். புத்தி சுவாதீனத்தின் மெல்லிழையையும் இழந்து, எந்தவிதமான எதிர்ப்புணர்வுமின்றி இந்தப் பயங்கரவாத வன்முறைப் புதைகுழிக்குச் சமூகம் இடங்கொடுத்துவிடப் போகிறதோ என்றும் நாம் அஞ்சுகின்றோம். மனித ஆளுமைகள், ஆற்றல்களை எல்லாம் பறிகொடுத்துவிட்ட நிலையில் சமூகம் இருக்கின்றது. ஒவ்வொரு புத்தியுள்ள மனிதனும் எரிந்து கொண்டிருக்கும் இந்த தேசத்தைவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறான். எங்கள் மருத்துவமனைகளில் வைத்தியர்கள் இல்லை. பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் இல்லை. எஞ்சினியர்களோ மேசன்மாரோ அல்லது வேறு தொழிலாளர்களோ இல்லாததால்..." அவர் தொடர்ந்து எழுதும் போது

"எமது சமூகத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டவும் அதனை ஒழுங்குறச் செய்வதற்கான சில வழிவகைகளைத் தேடவும் இது முக்கியம் என்பதற்காகத்தான், புறநிலை ஆய்வு என்பதை வெறும் கல்விவளாக ஆராய்ச்சிக்கான ஒரு பயிற்சியாக மட்டும் நாம் கருதவில்லை. புறநிலை நோக்கும், சத்தியத் தேடலும், விமர்சனபூர்வமான நேர்மையான நிலைப்பாடுகளை எடுத்து விளக்குவதும் எமது சமூகத்திற்கு இன்று மிக அவசியமாக உள்ளது. இதற்கு விலையாக எம்மில் சிலரின் உயிரும் பறி போகலாம். இதனை விட்டால் நமது சமூகத்திற்கு வேறு மார்க்கமில்லை என்ற ரீதியில் நாம் இதை கைக் கொண்டுள்ளோம்'' என்றார். எனது இக்கட்டுரைக்கு ராஜனி திராணகமவின் எழுத்தில் இருந்தே ஒரு முன்னுரை எவ்வளவு முக்கியத்துவமுடையதோ, அந்தளவுக்கு அவரின் எழுத்தில் உள்ள உண்மைகள் இக்கட்டுரையின் பின்னுரையிலும் முக்கியத்துவமுடையதாகவே உள்ளது.

திடீரென பலம்பெற்று வரும் புலியெதிர்ப்பு அணிகளின் அரசியல் அடிப்படைகள் என்ன என்ற அடிப்படையான விடயத்தை, ஆய்வு செய்யும் வகையில் சுனாமி அனர்த்தத்துக்கு முன்பே இக்கட்டுரையின் ஒரு பகுதியை எழுதியிருந்தேன். சுனாமியைத் தொடர்ந்து சர்வதேச ரீதியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக இலங்கையிலும் இது நேரடியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புலி எதிர்ப்பு அணிகளின் அரசியல் வழி மேலும் துல்லியமாகத் தம்மை அம்பலப்படுத்தி நிற்கின்றது.

புலி எதிர்ப்பு அணி, புலிகளைப் போலவே மக்கள் நலன் சார்ந்த எந்த அரசியலையும் கொண்டிருக்கவில்லை. மாறாக மக்களின் பொருளாதார அரசியல் வாழ்வியலில் எதிர்நிலைத் தன்மையிலேயே பயணிக்கின்றனர். புலிகள் தமது தலைவரை முன்னிறுத்தியே அரசியல் செய்கின்றனர். மக்களின் அடிப்படை வாழ்வியலை முற்றாக மறுத்து, புலி என்ற குழுவின் நலனைக் குறிப்பாக்கி முன்னிறுத்துகின்றனர். புலி எதிர்ப்பு அணி புலிகள் மேலான ஏகாதிபத்தியக் குற்றச்சாட்டுகளை மட்டும் முன்னிறுத்தி அரசியல் செய்கின்றனர். புலிகளைக் குற்றம் சாட்டுவதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்கின்றனர். தமக்கென்று எந்த அரசியலையும், மக்கள் நலன் சார்ந்து முன்வைப்பதில்லை.

தமிழ் மக்களின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கையைப் புலிகளும், அரசும் தத்தம் அளவில் சிதைக்கின்றனர். அவர்களின் வாழ்வியல் உரிமையை இல்லாததாக்குகின்றனர். இந்த அடிப்படை விடயத்தையிட்டு புலியெதிர்ப்பு அணியினர் அலட்டிக் கொள்வதில்லை. மக்களின் நலன்களில் இருந்து புலிகளும் சரி, புலி எதிர்ப்பு அணியும் போராடவில்லை. புலியெதிர்ப்பு அணிகள் பேச்சுவார்த்தை காலத்திலும், அன்னிய படைகள் இலங்கை வந்துள்ள இன்றைய நிலையிலும் புலிக்கெதிரான பிரச்சாரம் மூலம் ஒருங்கிணைந்த ஒரு பலத்தைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் முன், தம்மைத் தாம் மக்களின் மீட்பாளராகக் காட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் முன் தம்மைத்தாம் புனிதமானவராகக் காட்டி, மற்றொரு புலி அரசியல் நடத்துகின்றனர்.

புலிகள் பரந்த தளத்தில் தமிழ்ச் செய்தி ஊடகங்களை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பொய்களையே தமிழ்த் தேசியமயமாக்குகின்றனர். இங்கு பினாமியம் மூல அச்சாக உள்ளது. மறுதளத்தில் இதே போன்று புலியெதிர்ப்பு இணையத்தளங்களும், வானொலிகளும், பத்திரிகைகளும் செயல்படுகின்றது. புலியெதிர்ப்பு இணையத்தளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அன்றாடம் பெருகி வருகின்றது. புலி எதிர்ப்பு வானொலிகளைக் கேட்போர் எண்ணிக்கையும் பெருகி வருகின்றது. சுனாமியின் பின்பு புலிகளின் பொய்யும் புனைவும், சாவி கொடுத்த பொம்மைகள் உருவாக்கியது. மறுதளத்தில் பொய்யும் புனைவும் அம்பலமாவது அதிகரித்துச் செல்வதால், உண்மையைத் தேடும் ஒரு புதிய மக்கள் கூட்டம் உருவாகியுள்ளது. இதில் ஒருபகுதி புலியெதிர்ப்பு செய்திகளை உள் வாங்குகின்றது. இன்னுமொரு பகுதி புலியாக உள்ள புதியெதிர்ப்பு அரசியல் சார்ந்த பொய்களை உள்வாங்குவது விரிவாகின்றது. உண்மையில் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி செய்திகளை, கருத்துகளை முன்வைக்கின்றனவா என்பதையே இக்கட்டுரை ஆராய்ந்து அம்பலப்படுத்த முனைகின்றது.

ஆயுதங்களும், இயக்கப் பெயரும், தனிமனித வழிபாடுகளுமாக எஞ்சிக் கிடக்கும் எமது தேசிய விடுதலைப் போராட்டம், உண்மையிலேயே மலடுபட்டுவிட்டது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து தேசிய விடுதலைப் போராட்டம், எந்தவிதமான சமூக அடிப்படை கோசத்தையும் கொண்டிருக்கவில்லை. மக்கள் தமது அடிப்படையான சமூக வாழ்வை இழந்து, துன்பதுயரங்களுடன் மந்தைகளாகிவிட்டனர். சூனியத்துடன் கூடிய சுடுகாட்டு அமைதியே, தேசத்தின் சட்டமாகிவிட்டது. பீதியுடன் கூடிய அடிமைத்தனம், மக்களின் நெற்றியில் செதுக்கப்பட்டு விட்டது. இதுவே தமிழ்த் தேசியத்தின் இலட்சியத் தாகமாகிவிட்டது.

""துரோகம்'' ""தியாகம்'' என்ற வறட்டுக் கோசங்களுக்குள் மனிதமும், மனித உயிர்களும் அன்றாடம் பலியிடப்படுகின்றது. பலியிட்டதையும், பலியிடுவதையும் அன்றாடம் கொத்திக் கிளறுவது அரசியலாகிவிட்டது. பொய்யும் புரட்டும் புனைவுகளாகி, அதுவே தேசியத்தின் ஆன்மாவாகிவிட்டது. பந்தம் பிடித்தலும், பினாமியாகி நக்கித் திரிவதும் மனித ஒழுக்கமாகிவிட்டது. பாதங்களில் வீழ்ந்து நக்குவதே, தமிழ்த் தேசியப் பண்பாடாகிவிட்டது. இந்த கோமாளிக் கூத்துகள் உற்சாகமான பாசிசக் களியாட்டமாகிவிட்டது. அறிவியல் என்பது மற்றவரின் முதுகில் சவாரி செய்யும் விளக்கங்கள் என்றாகிவிட்டது. ஆய்வுகள் என்பது மனிதவிரோத செயல்களை நியாயப்படுத்துவதாகி விட்டது.

நம்பிக்கை தரும் கீற்றுகள் எதுவுமற்ற இலங்கையில், நாம் உணர்வுகளற்ற மந்தைகளாக வாழ்வதே வாழ்க்கையாகி விட்டது. அடிவருடித்தனங்களே ஜனநாயகமாகிவிட்டது. இவற்றை நியாயப்படுத்துவதே தேசத்தின் சுதந்திரமாகி விட்டது. நாட்டில் ""அமைதி'', ""சமாதானம்'' என்ற வெற்றுக் கோசங்கள் வானுயர்ந்த முழக்கமாகி விட்டது. தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைச் சொல்லி அரசியலில் பிழைப்பது தொடங்கிவிட்டது. மக்களின் நலன்களில் இருந்து சிந்திப்பது என்பது, அர்த்தமற்ற ஒன்று என்று கருத்துக் கூறுமளவுக்கு நிகழ்ச்சிகள் அலையலையாக உருவாகின்றது.

எதையும் மக்களின் முன்வைத்து, அதை நடைமுறைப்படுத்துவது என்ற அரசியல் முறைமை அவசியமற்ற ஒன்றாகி விட்டது. நேர்மையாக மக்கள் முன் தமது கொள்கை கோட்பாடுகளை முன்வைத்து நடைமுறைப்படுத்துவது என்பது சமகால அரசியல் வரலாற்றில் காண முடியாத ஒன்றாகிவிட்டது. இதற்கு கட்சி பேதம் எதுவும் கிடையாது. பாராளுமன்ற வழிமுறைக்கு மாறாக, வன்முறை மூலம் அதிகாரத்துக்கு வரத்துடிக்கும், மக்களின் வாழ்வியலில் இருந்து அன்னியமான குழுக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒன்றையொன்று எதிர்த்து பாராளுமன்றத்தில் மோதும் குழுக்களும் சரி, ஆயுதங்கள் கொண்டு மோதும் குழுக்களும் சரி, ஒரே அரசியலையே கொண்டு ஒரே மாதிரி தம்மை வெளிப்படுத்தி நிற்கின்றனர். மக்களுக்கு எதிராக ஒரேவிதமான நடைமுறையையே வெளிப்படுத்தி நிற்கின்றனர். மக்களை இட்டு ""துரோகிகள்'' ""தியாகிகள்'' இடையில் கூட எந்த வேறுபாடும் இருப்பதில்லை. இங்கு தமிழ்சிங்கள வேறுபாடின்றி, மக்களின் தலைவிதியைக் கையில் வைத்துள்ளவர்கள் அனைவரும், விதிவிலக்கற்று ஒன்றையே தமது அரசியல் வழியாக கொண்டுள்ளனர். மக்களையிட்டு யாருக்கும் துளியளவு கூட சமூக அக்கறை கிடையாது.

சிங்கள இனவாதிகளோ ஆளும்கட்சிஎதிர்கட்சி என்ற வேறுபாடு இன்றி, ஒன்றையொன்று குற்றம்சாட்டிய படி தமிழ் மக்களின் முதுகில் ஓங்கிக் குத்துகின்றனர். வலதுஇடது என்ற வேறுபாடு இவர்களுக்குள் நூலிழையில் கூட இருப்பதில்லை. தமிழ் மக்களுக்குப் பிரச்சனைகள் உண்டு என்பதைக் கூட பெயரளவில் தான் ஏற்றுக் கொள்கின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினையை வெறும் புலிகள் பிரச்சனையாக மட்டும் காண்பது, இனவாதிகளின் நவீன கூத்தாகி விட்டது.

ஜே.வி.பி. தன்னைத்தான் இடதுசாரி என்று கூறிக் கொண்டு, மிக மோசமான சிங்கள இனவாதிகளாகிக் கூக்குரல் இடுகின்றனர். புலிகளின் பாசிச வன்முறையில், தமது இனவாதப் பாசிச அரசியலைத் தக்கவைக்கின்றனர். தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் கூட வழிகாட்ட தயாரற்ற பச்சோந்திகளாகி பவனி வருகின்றனர். மக்களுக்கு முன்னால் நேர்மையாக வைக்க, இவர்களிடம் எந்த அரசியலும் இருப்பதில்லை. பச்சோந்திகள் போல் நேரத்துக்கும், நிலைமைக்கும் ஏற்ப அரசியல் பேசும் சமூக விரோத இனவாதிகளாகவே பவனி வருகின்றனர். சிவப்பு கொடிகளைக் கையில் ஏந்தி, மார்க்சியத் தலைவர்களின் படங்களின் பின்னால் முகத்தை மறைத்தபடி, மக்களின் முதுகில் தொத்திக் கொண்ட பச்சோந்திகளாகவே கர்ச்சிக்கின்றனர். சுனாமியின் பின்பாக ஏற்பட்ட அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பைப் பூசி மெழுகி, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற அரசியல் காட்சிகளை நாம் காண்கின்றோம்.

தமிழ் மக்களின் பிரச்சனையை வெறும் புலிப் பிரச்சனையாகக் குறுக்கி, தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை மிதித்துவிடும் சிங்கள இனவாதம், இலங்கையின் ஆன்மாவாகிக் கிடக்கின்றது. எந்தச் சிங்களக் கட்சியும் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று சொல்ல வக்கற்றுப் போய்விட்டது. அதாவது எந்தக் கட்சியும் தாம் ஆட்சிக்கு வந்தால், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வை வழங்குவோம் என்று சொல்லக் கூட தயாரற்ற நிலையில், அரசியல் செய்கின்றனர். இந்த நிலையில் தான் "அமைதி' சமாதானம்' என்ற கோசங்களால் தம்மை அலங்காரம் பண்ணி மேடையேறி நடிக்கின்றனர். தமிழ் மக்களை மட்டுமல்ல, சிங்கள மக்களையும் ஏமாற்றியே தமது அரசியல் பொறுக்கித்தனத்தை அரங்கேற்றுகின்றனர்.

மறுபக்கத்தில் தமிழ் அரசியல்வாதிகள் புலிப்பாட்டுக்குத் தாளம் போட்டுக் கொண்டு, தம்மைத்தாம் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக மார்பு தட்டிக் கொள்கின்றனர். இதன் மூலம் ஏக தமிழ் மக்களின் பொருளாதார வாழ்வினையே சூறையாடுகின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினை என்னவென்று சொல்லத் தெரியாத இவர்கள், புலிகளின் மனித விரோதச் செயல்களுக்குக் கொள்கை விளக்கம் வழங்கும் பினாமியாகி விட்டனர். இது பொருத்தமாகவே புலிகளின் அரசியலுடன் பொருந்திப் போய் விடுகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனையை வெறும் புலிப்பிரச்சனையாக மட்டும் காட்டுவதே, தமிழ்த் தேசியத்தின் அடிப்படையான அகராதியாகி விட்டது. அரசியல்வாதிகளை மட்டுமல்ல, தம்மைத்தாம் புத்திஜீவிகள், ஆய்வாளர்கள் என்று கூறிக் கொண்டு திரிபவர்களின் குறைந்தபட்ச அறிவு, இதற்குள் புணர்வதில் இருந்தே பிறக்கின்றது.

சுத்துமாத்து, மோசடி, பொய், புனைவு இவைகளைப் புலிகளின் நடவடிக்கைக்குப் பொருத்தி சாயமிட்டுக் காட்டுவது நவீன தமிழ்த் தேசிய அறிவாகிவிட்டது. சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல, தமிழ்க் குறுந்தேசிய வாதிகளும் ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி ஒரு புள்ளியில் முடித்து விடுகின்றனர். அமைதி சமாதானம் என்பது வரட்டுத்தனமான வெற்று கோசமாகி, புலிகளின் அற்ப நலன்களுக்கு இசைவான வகையில் திரித்துக் காட்டுவது என்றாகி விட்டது.

மறுபக்கத்தில் புலிகளில் ஏற்பட்ட பிளவு, கருணா தலைமையிலும் மறுபக்கம் பிரபா தலைமையிலும் ஒன்றையொன்று முந்த முட்டி மோதி போட்டி போடுகின்றன. ஆர்ப்பாட்டமாகவே தொடங்கிய புலியெதிர்ப்பு இணையங்கள், கருணாவின் பெயரால் சுயவிமர்சனங்கள் என்று நடத்தும் எல்லாவிதமான கூத்துகளுக்கும் தமிழ் மக்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று கேட்டால் எதுவுமில்லை. அண்ணன் தம்பியாக ஒரேவிதமாக களத்தில் இயங்குவதுடன், செய்திகளைப் புனைகின்றனர். தூற்றுகின்றனர். படுகொலைகளை நடத்துகின்றனர். மக்களின் வாழ்வியல் உறவுகளுடன் ஒரே விதமாகவே இயங்குவதுடன், மக்களின் அடிமைத்தனங்களின் மேல் தான் தத்தம் சிம்மாசனங்களை நிறுவுகின்றனர்.

தமிழ் மக்களின் அடிப்படையான வாழ்வியல் பிரச்சனை பற்றி கருணாவுக்கும் சரி, அவரின் தலைமையில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதமான சமூக அக்கறையும் கிடையாது. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் கொள்கைதான், கருணாவுக்கும் உள்ளது. பிரபாகரன் தன்னைத்தான் தலைவர் என்று எப்படிச் சொன்னாரோ, அதேபோல் கருணாவும் தன்னைத்தான் தலைவராகப் பிரகடனப்படுத்தியபடியே அரங்கில் குதித்துள்ளார். பிரபாகரனின் புலிகள் போல் செயல்பட முனைகின்றார்.

யாரும் தமிழ்மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதில்லை. கருணாவைத் துரோகியா? தியாகியா? என்று கேட்டு விவாதம் செய்வது போல், பரஸ்பரம் குற்றம்சாட்டி அவதூறுகளைப் புனைகின்றனர். இதற்குள் விவாதிப்பதும், இதற்கு அப்பால் எதையும் தமிழ்மக்களின் நலனில் இருந்து விளக்க முடியாது போயுள்ளனர்.

இந்த நிலையில் கருணா, புலிகளை ஒழிக்க, ஈ.என்.டி.எல்.எப். என்ற ராஜன் குழுவுடன் உடன்பாடு கண்டதுக்கு அப்பால் வேறு எந்த அரசியலையும் அவர்கள் முன்வைக்கவில்லை. புலிகளை ஒழிப்பதுதான் அவர்களின் இலட்சிய வேட்கையாகிவிட்டது. அவர்களின் தேசியத் தாகம் புலிகளை ஒழிப்பதாகிவிட்டது. இதற்கு கூட்டுச் சேர்த்துவிட்ட விபச்சாரத் தரகு வேலையில் இந்தியா இருந்துள்ளது. இந்தியா தேசவிடுதலை இயக்கங்களைப் புணர்ந்தபோது ஈ.என்.டி.எல்.எப். என்ற கள்ளக் குழந்தை இந்தியாவிலேயே பிறந்தது. இந்தியா அந்தக் கள்ளக் குழந்தையைத் தனது செல்ல வளர்ப்பு நாயாக உருவாக்கி வளர்த்தது. இலங்கையில் சமாதானத் தூதனாக வேடமிட்டு ஆக்கிரமித்த போது, தனது வளர்ப்பு நாயைக் கொண்டு தமிழ் மக்களை வேட்டையாட பின் நிற்கவில்லை. பெண்கள் முதல் குழந்தைகள் வரை குதறி வெறியாட்டம் போட இந்தியாவே தனது வளர்ப்பு நாய்க்கு எஜமானராக இருந்து வழிகாட்டியது.

மக்களை ஒடுக்கி இந்திய நலனுக்காக விசுவாசமாக வாலையாட்டி சேவை செய்த கும்பலே இந்த ஈ.என்.டி.எல்.எப். இந்தியாவின் கள்ளக் கழந்தையான ஈ.என்.டி.எல்.எப். ஆகும். உடன் கருணாவின் தமிழீழ விடுதலை மக்கள் முன்னணிக்கும் இடையிலான திருட்டுத் திருமணம் ஒன்றை இந்தியா செய்து வைத்துள்ளது. இந்தத் திருட்டுத் திருமணம் என்பது, இந்தியாவுக்குச் சேவை செய்யும் அடிவருடித்தனம் என்ற எல்லைக்கு அப்பால் எதுவும் இருப்பதில்லை. தமிழ் மக்களின் நலனின் மேல் எதையும் கொண்டிருக்கவில்லை. மாறாக மக்களின் அடிமைத்தனத்தை மேலும் ஆழமாக்க, இந்த அடிவருடிகளை இந்தியா பயன்படுத்தும்.

புலிகளை ஒழித்துக் கட்டுதல் என்ற இந்தியாவின் வேலைத்திட்டத்துக்கு உட்பட்ட, ஒரு பாசிச முன்னணி தான் இது. புலிகளின் பாசிசம் மக்கள் விரோத நடத்தைகளை இட்டு, இது எந்தவிதத்திலும் அலட்டிக் கொள்வதில்லை. அலட்டிக் கொள்ளப் போவதுமில்லை. தமிழ் மக்களின் அடிப்படையான நியாயமான எந்தக் கோரிக்கைகளையிட்டும், இவர்கள் யாரும் அக்கறைப்படுவதில்லை. வலதுசாரியத்தின் கடைகெட்ட பாசிசத்தின் துணை கொண்டு மக்களை இழிவாடும் இவர்கள், மக்களை மௌனிக்கப் பண்ணிய மந்தைத்தனங்களின் மேலேயே பவனி வருகின்றனர்.

ஏகாதிபத்தியங்களின் எடுபிடிகளாகவும், அவர்களின் நிதி உதவிகளில் நக்கித் திரிய விரும்பும் கடைகெட்ட மனிதவிரோதப் போக்கில் குளிர்காயும் அரசியலையே செய்ய விரும்புகின்றனர். புலிகளை அழிக்கும் மக்கள் விரோத ஏகாதிபத்திய நடவடிக்கைகளின் போது, ஆட்சிபீடம் ஏறத்துடிக்கும் கயவாளிகளாகவே தமது அரசியலைத் தக்கவைக்கின்றனர்.

தமிழ் மக்களின் உற்பத்தியும், அவர்களின் உழைப்பு சார்ந்த தேசியம் என்ற தேசியப் பொருளாதாரக் கொள்கை மேல், அது உருவாக்கும் பண்பாட்டு அடிப்படைகள் மேல் ஒரு தேசத்தை நிர்மாணிக்கும் எந்தச் சமூக அக்கறையும் இவர்களிடம் கிடையாது. இது புலிகளுக்கும் பொருந்தும். மாறாகத் தேசியப் பொருளாதாரக் கூறுகளை அழித்து, அதன் மேல் உலகமயமாதலை நிறுவும் ஏகாதிபத்தியக் கைக்கூலிக் கனவுடன், புலிகள் முதல் கருணா வரையிலான அனைத்துக் குழுக்களும் பொருந்தும் இவர்கள் முரண்பாடின்றி ஒரு நேர்கோட்டிலேயே செயல்படுகின்றனர். சிங்கள இனவாதிகளே தோற்றுப் போகும் அளவுக்கு, தமிழ்த் தேசியத்தை ஏலம் விடுவதில் கொள்கை ரீதியாக எந்த மாற்றுக் கருத்தும் இவர்களிடம் இருப்பதில்லை. யாருடைய தலைமை என்பதில் தான் இவர்களுக்கு இடையிலும், சிங்கள அரசுடனும் முட்டி மோதுகின்றனர். இதற்கு வெளியில் எதையும் யாரும் மாற்றாக முன்வைக்க முடியாது.

உலகமயமாதல் எல்லைக்குள் தத்தம் பங்குக்கு நியாயம் கூறி, தமக்கு இடையில் மோதும் வெறியாட்டத்தையே நடத்துகின்றனர். மக்களின் உயிர்களைப் பலியிட்டு, அதில் குளிர்காய விரும்பும் ஒரு சதியைத் தத்தம் போக்கில் உருவாக்குகின்றனர். அன்னியருக்கு வாலாட்டி குலைக்கும் இவர்கள், மக்களுக்காக எதுவும் சொல்ல இருப்பதில்லை. சுயவிமர்சனம், விமர்சனம் என மக்களின் நலனில் நின்று எதுவும் சொல்ல முடியாத இவர்கள்தான், தமிழ் மக்களின் தலைவிதியைத் தமது கையில் வைத்திருப்பது, தமிழ் மக்களின் அழிவுக்கு வழிகாட்டுகின்றது.

19.1 புலியெதிர்ப்பு அரசியல் எதைத்தான் மக்களுக்குப் பரிசளிக்கினறது

""அமைதி'' ""சமாதானம்'' என்ற ஒரு அரங்கேற்றம் தொடங்கியது முதல் சுனாமி பேரலை தேசத்தை மூழ்கடித்த நிலை வரை புலியெதிர்ப்பு அரசியல் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. வானொலிகள், பற்பல இணையங்கள், பத்திரிகைகள் பல புலியெதிர்ப்பு கோசத்துடன் கடைவிரித்துள்ளது. அதாவது எப்படி புலி ஆதரவு தளம் பினாமியாகி விரிவாகியதோ, அதே போல் புலியெதிர்ப்பு தளமும் பினாமியாகி விரிவாகியுள்ளது. இந்த புலியெதிர்ப்பு வக்கிரம் புலிகளைப் போல், தமிழ் மக்களின் அடிப்படையான பொருளாதார அரசியல் நலனுக்கு எதிராகத்தான் தன்னைக் கட்டமைத்துள்ளது.

உள்ளடக்க ரீதியாகப் புலியெதிர்ப்பு தளங்களை ஆராய்ந்தால், தமிழ் மக்கள் சமன் புலிகள் என்ற கோட்பாட்டில் நின்று தமிழ் மக்களின் அடிப்படையான கோரிக்கையை நிராகரிக்கும் போக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. பொதுவாகவே சிங்கள இனவாதிகள் தமிழ் மக்களின் பிரச்சினையைப் புலிப்பிரச்சினையாகக் காட்டுவது போல், தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் பினாமியமும் கூட தமிழ் மக்களின் பிரச்சினையைப் புலிகளின் எல்லைக்குள்ளான பிரச்சனையாகவே விளக்குகின்றனர். இதன் வழியில் தான் புலியெதிர்ப்பு தளங்கள் தமிழ் மக்களின் பிரச்சினையைப் புலிப் பிரச்சனையாகப் பார்க்கின்றனர். தமிழ் மக்களின் பிரச்சனையைப் புலிப்பிரச்சனையாகவே அரசு மட்டுமின்றி புலிகளும் பார்க்கின்றன. இதற்கு வெளியில் யாரும் செயற்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனை வேறு, புலிகளின் பிரச்சனை வேறு என்பதை யாரும் பிரித்துப் பார்ப்பதில்லை. இதனால் தமிழ் மக்களுக்கு எதிரான அரசியலை அனைத்து தரப்பும் கொண்டுள்ளதுடன் தமிழ் மக்களை அடக்கியொடுக்குகின்றனர்.

புலி எதிர்ப்பு பிரச்சாரத் தளங்கள் அனைத்தும் புலிகள் எதை ஆதரிக்கின்றனரோ, அதை எதிர்ப்பது அவர்களின் அரசியலாகியுள்ளது. ஏகாதிபத்தியம் முதல் சிங்கள இனவாதிகள் வரை புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் தங்கி நிற்பது, இதன் உள்ளடக்கமாக உள்ளது. புலிகள் தாம் செய்ததை மறைத்து செய்திகளையே திரிப்பது போல், இவர்கள் புலிகள் செய்து மறைப்பதை கொண்டு வருவதற்கு முனைகின்றனர். மறுபக்கம் இனவாத அரசின் இனவாத முகத்தை மறைப்பதும் திரிப்பதும் இவர்களின் நோக்கமாக உள்ளது. இனவாத அரசு மற்றும் புலிகள் தமிழ் மக்களுக்கு எதிராக எப்படி செயல்படுகின்றனர் என்ற அடிப்படையில், செய்திகளைத் தொகுப்பதில்லை. கருத்துகளை முன்வைப்பதில்லை. புலிகள் அரசை அம்பலப்படுத்தி தமது சொந்தப் பாசிசத்தை மூடிமறைக்கின்றனர். புலியெதிர்ப்பு அணியினர் புலியை அம்பலப்படுத்தி அரசின் பாசிச முகத்தை மூடிமறைக்கின்றனர். மக்களின் நலன்களில் இருந்து எதையும் இவர்கள் அம்பலப்படுத்துவதில்லை அல்லது மக்களுக்குச் சொல்ல நினைப்பதில்லை.

புலியெதிர்ப்பின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கம் இலங்கையின் பிரதான எதிரியாகப் புலிகளைக் காட்டுவதும், அரசை மென்மையானதாக காட்டுவதுமே. இதற்கு வெளியில் இவர்களுக்கு என்று எந்த ஒரு மக்கள் அரசியலும் கிடையாது. புலிகளை அரசு மற்றும் ஏகாதிபத்தியங்களால் அழிக்கப்டும் போது, அவர்களின் தயவில் தமிழ் மக்களை அடக்கியொடுக்கி ஆள விரும்புகின்றனர்.
இந்த வகையில் புலியெதிர்ப்பு தளங்கள் எதைத் தமது அரசியலாகக் கொள்கின்றனர் எனப் பார்ப்போம்.

1.பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்களைப் புலிகள் தமது
இராணுவத்தில் இணைத்தலுக்கு எதிராக,

2.தொடர்ச்சியாகவே மாற்றுக் கருத்து கொண்டோர் மற்றும் மாற்றுக் குழுக்களின் மேலான புலிகளின் படுகொலைகளுக்கு எதிராக,

3. புலிகள் கடைப்பிடிக்கும் வரி அறவிடுதல் முறைக்கு எதிராக,

4. பலாத்காரமான வகையில் ஆள் திரட்டும் நடவடிக்கைகளுக்கு எதிராக,

5. மனித கடத்தல்கள், சொத்துகளை அபகரித்தலுக்கு எதிராக,

6. பொய்யும் புனைவுகளும் புரட்டல்களையும் ஆதாரமாகக் கொண்ட புலிப்பினாமி செய்திகளுக்கு எதிராக,

7.கருணா தரப்பு செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுதல்.

8. ஏகாதிபத்தியமும், இந்தியாவும் சிங்கள இனவாதிகளும் புலிகள் பற்றி கூறும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுதல்.

9. சுனாமி நிதி திரட்டல்களை எதிர்த்த எதிர்வினையாற்றல்.

10. ஏகாதிபத்தியம் மற்றும் இந்தியா பற்றி மூடிமறைக்கப்பட்ட ஆதரவைத் திட்டமிட்டே வழங்குதல்.

11.அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம், இந்தியா மற்றும் இலங்கை அரசே புலிகளிடமிருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்கும் ஒரேயொரு மாற்றுவழி என்ற கருத்துப் போக்கைத் திட்டமிட்டு உருவாக்குகின்றனர்.

12. தமிழ் மக்களின் அடிப்படை சமூகப் பொருளாதார நலன்கள் என்ன என்பதை, மக்கள் தெரிந்து கொள்ளாத வகையில் மக்களின் மந்தைத்தனத்தைத் தக்கவைத்தல்.


13. மக்கள் தமது சொந்த அதிகாரத்தைக் கையில் எடுக்கும் போராட்டங்களையும், கோட்பாடுகளையும் இயன்றவரை கொச்சைப்படுத்தல்.

இந்த எல்லைக்குள், இது போன்றவற்றுக்கு அப்பால், புலியெதிர்ப்பு அரசியல் எதையும் மக்களுக்குச் சொல்வதில்லை. உண்மையில் புலிகள் மறைக்கின்ற சில பக்கங்களைக் கொண்டு வருவதற்கு அப்பால், மக்களுக்கு எதிரான எதிர்புரட்சிகர அரசியலைச் செய்கின்றனர். தமிழ் மக்களுக்கும், புலிகளுக்கும் எதிராகச் செயல்படும் அரசு முதல் ஏகாதிபத்தியம் வரையிலான ஆக்கிரமிப்பாளர்களின் செய்திகளைத் திட்டமிட்டு மறைக்கின்றனர். ஒரு எதிர் நிலையான தளத்தில் தத்தம் வக்கிரங்களையே புலிகளும், புலியெதிர்ப்பு இணையத் தளங்களும் செயல்படுத்துகின்றன.

இந்த வகையில் ஐரோப்பாவில் இயங்கிய இலக்கியச் சந்திப்பு என்ற கோட்பாடற்ற கதம்பத் தொடரை, சென்ற சந்திப்பு ஊடாகக் கோட்பாடு கொண்ட புலியெதிர்ப்பு அரசியல் சந்திப்பாக மாற்றப்பட்டது. இதைத் தொடங்கி பலர் காணாமல் போயுள்ள நிலையில் புதிதாகப் பலர் வந்ததுடன் அதைக் கைப்பற்றியுள்ளனர். இந்த இலக்கியச் சந்திப்பு ஆரம்பத்தில் இயக்க உள்முரண்பாட்டில் எழுந்த மக்கள் சார்பு அரசியலையும், இயக்கங்களின் மக்கள் விரோத அரசியலுக்கு எதிரான அரசியலையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்த அரசியல் முற்போக்கு திசையில், வர்க்கப் போராட்டத்தை ஆதரித்து நின்றது. ஆனால் படிப்படியாக இந்த அரசியலை எதிர்த்து, பிழைப்புவாதப் பிரமுகர்கள் மொத்த இலக்கியச் சந்திப்பையே மாற்றி அமைத்தனர். இது தொடங்கிய போது இருந்த அரசியல் போக்கிற்கு எதிராக இலக்கியச் சந்திப்பை மாற்றியமைத்ததுடன், மக்கள் சார்பு அரசியலை எதிர்ப்பதே தமது அரசியலாகச் கொண்டு செயல்பட்டனர்.

பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பது போல், இவர்களின் அரசியல் வங்குரோதத்துடன் இலக்கியச் சந்திப்பு அர்த்தமிழந்து போனது. கதம்பச் சந்திப்பில், தம்மைத்தாம் பிரமுகராக்கியவர்கள் பலர் சமூகத்தில் இழிந்த பிறவிகளாக மாறினர். இந்த இலக்கியச் சந்திப்பைப் பயன்படுத்தி பெண்களின் விடுதலை என்ற பெயரில் பாலியல் ரீதியாக நுகர்ந்தது முதல் பல வக்கிரங்களைச் சாதனையாகப் படைத்தனர். சிலர் தத்தம் வாழ்க்கை என்ற வட்டத்தில் மற்றவர்களின் முதுகில் வாழும் வாழ்க்கை வரை சீரழிந்துள்ளனர். இந்த இலக்கியச் சந்திப்பு யாருக்கு எதிராகத் தொடங்கப்பட்டதோ, அவர்களே இன்று இதைக் கைப்பற்றியுள்ளனர். எந்த அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்டதோ, அந்த அரசியலே சென்ற சந்திப்பில் கோலோச்சியுள்ளது. புலிகளுக்கு நிகரான புலியெதிர்ப்பு அரசியலே சென்ற இலக்கியச் சந்திப்பைத் தம் வசப்படுத்தியுள்ளது. வலதுசாரியத்தின் கடைகெட்ட அரசியல் இலக்கியச் சந்திப்பின் ஆன்மாவாகிவிட்டது. புலிக்கு மாற்றான மக்கள் சார்பான அனைத்து கருத்து மையங்களும், புலி அரசியலையே கொண்டுள்ள மக்கள் விரோத புலியெதிர்ப்பு அரசியல் கோலாச்சுகின்றது.

இந்த இடத்தில் புலியும் சரி, புலியெதிர்ப்பு தளங்களும் சரி மக்களுக்காக எதையும் முன்வைப்பதில்லை. மக்களின் நலனில் இருந்து செய்திகளை, கருத்துகளை, நடைமுறைகளை முன்வைப்பதில்லை. மக்களுக்காக ஒரு துளிதன்னும் நேர்மையாகப் போராடவில்லை. இவர்கள் புலிகளுடன் முரண்படும் விடையங்களுக்கு அப்பால், இவர்களின் சமூகம் பற்றிய பார்வையை எடுத்தால், இரண்டு பகுதியினரும் ஒரேவிதமாகவே உலகை பற்றி மதிப்பிடுகின்றனர். ஒரே விதமாகவே செயலாற்ற விரும்புகின்றனர். இதற்கு வெளியில் எதையும் இவர்களால் காட்ட முடியாது. இவர்கள் கோரும் ஜனநாயகத்தைக் கூட அனைவருக்கும் வழங்கமாட்டார்கள்.

புலியெதிர்ப்பு அரசியலின் மிக முக்கியமான அடிப்படைகளை மக்களின் நலனில் இருந்து ஆராய்வதன் மூலம், இரண்டு பிரிவினரும் மக்களுக்கு எதிராக எப்படி உள்ளனர் என்பதை இனம் காண்பது இலகுவான ஒன்றாகி விடுகின்றது.

19.2 புலிகளின் வரி அறவீடு பற்றி

வரி அறவிடுவதற்கு எதிராகப் புலியெதிர்ப்பு தளங்கள் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்கின்றன. உண்மையில் சிங்கள இனவாத அரசு, தன்னார்வக் குழுக்கள் மற்றும் ஏகாதிபத்தியம் இது பற்றி என்ன நினைக்கின்றதோ, அதை அப்படியே வாந்தியெடுக்கின்றனர். சுரண்டும் சமூக அமைப்பில் அரசு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவுள்ளது. அரசு என்ற சுரண்டல் கட்டமைப்பு ஒன்று இருக்கும்போது, வரி அறவிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. ஏற்றத்தாழ்வான பொருளாதாரச் சமூக அமைப்பில், அரசு வரிகளை அறவிடுவது அவசியமானதாக உள்ளது. சுரண்டல் அமைப்பில் வரி இன்றி, சமூகம் இயங்க முடியாது. அரசு தன்னைப் பாதுகாக்கும் இராணுவமாக முதல் மக்களின் அடிப்படையான மருத்துவ உதவிகள் வரை, அனைத்தும் வரி மூலம்தான் அவை கட்டமைக்கப்படுகின்றது. இதற்கு வெளியில் அல்ல.

புலியெதிர்ப்பு அரசியல் என்ன செய்கின்றது என்றால், உலகின் பொது நடைமுறையை முதலில் மூடி மறைக்கின்றது. அதாவது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மூடி மறைப்பது போல் மறைக்க முயல்கின்றது. உலகில் சுரண்டும் எல்லா அரசு கட்டமைப்பும் வரி அறவிடும் உண்மையை மூடிமறைத்தபடி, தனது கண்ணைத் தானே மூடிக் கொண்டு புலிகளை மட்டும் எதிர்க்கின்றனர். புலிகள் ஒரு பிரதேசத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் என்ற வகையில், அவர்கள் வரி அறவிடுவதை எதிர்ப்பது என்பது உள்நோக்கம் கொண்ட சந்தர்ப்பவாதமாகும். உண்மையில் இலங்கையில் வரி அறவிடும் ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசு வரையிலான அனைத்துப் பிரிவினரையும் இவர்கள் எதிர்ப்பதில்லை. இதேபோல் ஒட்டு மொத்தமாக உலகளவில் வரி அறவிடும் முறைக்கு எதிராகவும் இவர்கள் போராடவில்லை. இவர்களின் புலியெதிர்ப்பு அரசியல், புலியின் வரியறவீட்டை மட்டும் எதிர்க்கின்றது. இந்த அரசியல் என்பது படுபிற்போக்கானது. உள்நோக்கம் கொண்டது. மக்கள் விரோதத்தை அடிப்படையாகக் கொண்டது.

நாம் மக்களின் நலனில் இருந்து இதை எப்படிப் பார்க்க முடியும்? சுரண்டும் இந்தச் சமூக அமைப்பில் புலிகள் வரியறவிடுவதை நாம் எதிர்க்கவில்லை. மாறாக வரியறவிடும் முறையையும், வரி செலவு செய்யப்படும் வடிவத்தையும் எதிர்க்கின்றோம். வரியை மக்கள் நலனில் இருந்து அறவிடக் கோருகின்றோம். வரியை மக்களின் நலனில் இருந்து செலவு செய்யக் கோருகின்றோம். பொருட்கள் மீதான வரி, தேசிய உற்பத்திக்குச் சாதகமானதாக இருக்க வேண்டும் என்கின்றோம்.

தேசத்தையும், தேசியத்தையும் அழிக்கும் ஏகாதிபத்தியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் மீது, அதிக வரியைப் போடக் கோருகின்றோம். தேசிய உற்பத்தியை வளர்க்கும் வகையில், வரியில் சலுகை வழங்க கோருகின்றோம். அறவிடும் வரியை மக்களுக்காகச் செலவு செய்யக் கோருகின்றோம். ஒரு பொருளின் உற்பத்தியில் உள்ள சங்கிலித் தொடரில், ஒருமுறை தான் வரியை அறவிடக் கோருகின்றோம். வரியின் பன்மைத் தன்மையை நீக்கக் கோருகின்றோம். தேசிய உற்பத்திகள் தம்மைத் தற்காக்கவும், அதில் இருந்து முன்னேறும் வகையிலும் வரியறவீட்டை மாற்றக் கோருகின்றோம். ஒரு பொருளின் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஒரேயொருமுறை மட்டும் வரிவிதிக்கும் முறைமையைக் கோருகின்றோம். உற்பத்தி சார்ந்த விற்பனையில் காணப்படும் பன்மைத் தன்மையில் உள்ள பல வரிகள், தேசிய உற்பத்தியைச் செயலிழக்கப் பண்ணி தேசத்தையும், தேசிய உற்பத்திகளையும் அழிக்கின்றது என்கின்றோம். அறவிடப்படும் வரியை மக்களின் அடிப்படை சமூகத் தேவைகள் மீது திருப்பக் கோருகின்றோம். அடிமட்ட மக்களுக்கு வரிவிலக்கை வழங்கக் கோரும் அதேநேரம், அறவிடும் வரியை அவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தக் கோருகின்றோம். மக்களின் அடிப்படையான சமூகப் பொருளாதார அரசியலைப் பாதுகாக்க, அதைப் பலப்படுத்த வரியைப் பயன்படுத்தக் கோருகின்றோம்.

மாறாகப் புலிகள் வரியைத் தமக்கும், தமது இராணுவ கட்டமைப்புக்கும் பயன்படுத்துவதையே நாம் எதிர்க்கின்றோம். அதை மக்களுக்குப் பயன்படுத்துவதன் மூலம், தேசத்தின் தற்காப்பைப் பேணும் வரிமுறைமையே, மக்கள் நலன் சார்ந்த வரிக் கொள்கையாகும். அடிமட்ட மக்களின் வாழ்வியலுக்கு எதிராகப் புலிகள் செயல்படுவதையே எதிர்க்கின்றோம். தேசியப் பொருளாதார, அரசியல் கூறுகளை அழிக்கும் வகையில் செயல்படும் புலிகளின் வரி அறவிடும் முறைமையை எதிர்க்கின்றோம். அதாவது தேசத்தையும் தேசியப் பொருளாதாரத்தையும் அழிக்கும் புலிகளின் உலகமயமாதல் சார்புக் கொள்கையை எதிர்க்கின்றோம். புலிகளின் வரி அறவிடும் கொள்கை, ஏகாதிபத்தியப் பொருட்களின் அதிகரித்த ஊடுருவலுக்கு இயல்பானதாக இருக்கின்றது. இதனால் தேசத்தின் வாழ்வியல் முறைமையே மாற்றமடைகின்றது.

ஆடம்பரத்தின் உச்சத்தைத் தமிழ்ச் சமூகம் அடையும் வகையில், மேற்கத்திய வக்கிரங்கள் தமிழ்த் தேசிய மோகமாகின்றது. இதற்குப் புலிகளின் வரிக்கொள்கை பச்சைக் கொடி காட்டுகின்றது. புலிகளுக்குத் தேவை பணம் என்பதாகின்றது. இது தேசியத்தை விபச்சாரம் செய்து கிடைக்குமாயின் அதையே அனுமதிக்கும் வரிக்கொள்கை அமுலில் உள்ளது. வரிமுறைமை எழுந்தமானமாகக் கண்மூடித்தனமானதாகக் காணப்படுகின்றது. இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் வேகமாக வீழ்ச்சி காண்கின்றது. பணம் கொடுப்பவன் அதை மீட்க, மக்களின் தலையில் சுமத்துகின்றான். இதன் மூலம் தேசியப் பொருளாதாரம் அன்றாடம் சிதைந்து சீரழிகின்றது.

வரிமுறைமையை ஒட்டி எமது விமர்சனம் தேசத்தின் நலன்களைச் சார்ந்தது. மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடையது. புலிகள் மக்களின் வாழ்வியல் முறைமைக்கு எதிராக வரிமுறைமையைக் கொண்டிருப்பதையே நாம் எதிர்க்கின்றோம். புலியெதிர்ப்பு பிரிவினர் வரிமுறைமையை, புலி அழிப்புக்கு உதவும் வகையில் மட்டும் எதிர்க்கின்றனர். சிங்கள இனவாத அரசு மற்றும் ஏகாதிபத்தியக் கைக்கூலிக் கும்பல் ஒன்று, தமிழ் மக்களைச் சூறையாடவும், கொள்ளையிடவும் உதவும் வரியறவிடும் பாதைக்கே தமது இந்த எதிர்ப்பின் மூலம் செப்பனிடுகின்றனர். மக்களைச் சூறையாடுவது புலிகளாக இருக்காத எல்லாவற்றையும் புலியெதிர்ப்புத் தளங்கள் ஆதரிக்கின்றன. வரியறவிடுவது தாமாக இருத்தல் வேண்டும் என்பதே, இவர்களின் தணியாத தாகம் இப்படி வெளிப்படுகின்றது அவ்வளவே. இந்தச் சுரண்டல் அமைப்பில் புலிகளாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, வரி அறவிடுவது இருக்குமல்லவா! இதை மறுத்து புலியெதிர்ப்பு அரசியல் வரி அறவீட்டை எதிர்க்கவில்லை.

19.3 சிறுவர்களைப் படைக்குத் திரட்டல்

மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இதன் மேல் புலியெதிர்ப்பு பிரிவினர் பிரச்சாரம் செய்கின்றனர். வரலாற்றில் இதை முன்பு செய்தவர்கள், தமது கடந்த காலத்தை மூடி மறைத்தபடி இன்று எதிர்ப்பதைக் காண முடிகின்றது. ஐ.நா. முதல் ஏகாதிபத்தியம் வரை சிறுவர் பற்றிய நிலைப்பாடுகள், போலியான நோக்கத்துடன் முன்னெடுக்கின்றனர். இது இலங்கை விவகாரத்தில் மட்டுமல்ல. உலகளாவிய நிகழ்ச்சி நிரலிலும் இதைக் கையாளுகின்றனர்.

குழந்தை உழைப்புக்கு எதிராக ஐ.நா. மூக்கால் அழும் அதே தளத்தில், இராணுவத்தில் இணைந்துள்ள சிறுவர்களுக்காகவும் ஐ.நா. புலம்புகின்றது. மனித வரலாற்றின் அவலங்களை எல்லாம் பாதுகாக்கும் ஐ.நா. அதன் விளைவுக்காகக் கண்ணீர் வடிப்பது மக்களின் அறியாமை மீதுதான். மனித அவலங்களுக்குக் காரணமாக உள்ள ஏகாதிபத்தியச் சுரண்டல் அமைப்பையே பாதுகாக்கும் ஒரு நிறுவனம் தான் ஐ.நா. ஆகும். இந்தக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் ஐ.நா. கோட்பாட்டில், சிறுவர் உழைப்பு முதல் சிறுவர் இராணுவமயமாக்கல் என்பது வரை ஏகாதிபத்திய அமைப்புக்குச் சவால்விடுவதாக உள்ளன. இதனால் ஐ.நா.வும் மற்றைய அரசு சாராத நிறுவனங்களும் மூக்கால் அழுகின்றன. ஏகாதிபத்திய நிதியைப் பெற்றே, இந்த அரசு சாராத நிறுவனங்கள் அவர்களின் தாளத்துக்கு ஏற்ப சதிராட்டம் போடுகின்றனர்.

எந்தக் குழந்தையும் இயல்பாக வாழக்கூடிய சூழ்நிலை, உலகில் எந்தப் பாகத்திலும் கிடையாது. மாறாக தத்தம் அரசியல் பொருளாதாரச் சூழலுக்கு உட்பட்ட எல்லைக்குள் தான் குழந்தைகள் வாழ்கின்றனர். எந்தக் குழந்தையும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. இன்று உலகமயமாதல் சந்தை எதை எப்படி செய்ய விரும்புகின்றதோ, அதன் ஒரு பிம்பமாகவோ அல்லது எதிர் விளைவாகவோ குழந்தைகள் உற்பத்தி செய்யப்படுகின்றனர். எந்தக் குழந்தையும், இயற்கை சார்ந்த மனிதச் சமூக உணர்வுடன் சுயமாக உருவாகவில்லை. சூழவுள்ள சமூகப் பொருளாதார அரசியல் சூழலுக்குள் நஞ்சிடப்பட்டே உருவாக்கப்படுகின்றனர்.

அதாவது குழந்தை நிறம், பால், இனம், சாதி, வர்க்கம் என்று பன்மைத்துவப் பிளவு மனப்பான்மையுடன் வக்கிரமடைகின்றது. மற்றைய குழந்தையை எதிரியாகக் காணும் தனிமனித கதாநாயக உணர்வுடன் தான், சமூக அங்கீகாரத்தைக் கோருகின்றது.

இன்று ஏகாதிபத்தியங்கள் முதல் அரசு சாராத நிறுவனங்கள் வரை ஏகாதிபத்தியச் சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் குழந்தைகள் ஒரு பிம்பமாக, உயிருள்ள சதைத் துண்டங்களாக உதிப்பதையிட்டுப் புலம்புவதில்லை. மாறாக இந்தச் சந்தை உருவாக்கும் வக்கிரத்தில் குழந்தைகள் சிக்கி சிதம்புகின்றன. இந்த மனித அவலங்களை எதிர்கொள்ள முடியாத குழந்தைகள் தங்கள் ஒரு சாண் வயிற்றுக்காக உழைப்பதையும், தமது விடுதலை என நம்பும் ஒன்றுக்காக இராணுவத்தில் இணைவதையும் மூக்கால் சிணுங்கிக் காட்டி அழுகின்றனர்.

உலகில் உள்ள அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்ற குறைந்தபட்சத் திட்டத்தை ஐ.நா. 100 வருடத்தில் கூட பூர்த்தி செய்ய முடியாது என்று அண்மையில் அறிவித்துள்ளது. இந்த நவீன மனிதவிரோதத் திட்டமிடலாளர்கள் தான், சிறுவரைப் பற்றி புலம்புகின்றனர். ஆனால் கம்யூனிஸ்டுகள் மனித நோக்கில் மக்கள் அரசுகளை உருவாக்கிய போது அடிப்படைக் கல்வியை மிகக் குறுகிய காலத்தில் சாதித்துக் காட்டினார்கள். 1917ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த சோவியத் புரட்சியின் போது 90 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாடசாலைக்குச் செல்லாத நிலையில் இருந்தனர். ஆனால் 1936 வரையான காலத்தில் ரசியாவில் எந்தக் குழந்தையும் கல்வி கற்காது இருக்கவில்லை. எந்தக் குழந்தையும் உழைப்பில் இருக்கவில்லை. 1949ஆம் ஆண்டு சீனப் புரட்சியும், 1967இல் நடந்த கலாச்சாரப் புரட்சியும் சீனாவில் அனைத்து குழந்தைகளையும் உழைப்பில் இருந்து விடுவித்ததுடன், அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்கியது. இது ஒன்றும் கற்பனையல்ல. புனைவுமல்ல. இது அந்த மண்ணின் நிஜமான வரலாறுகள்.

இந்த ஏகாதிபத்தியங்களும், தன்னார்வக் குழுக்களும் விரும்பும் இன்றைய சீனாவிலும் சரி, ரசியாவிலும் சரி குழந்தைகள் பாடசாலைக்குச் செல்வது குறைந்து வருகின்றது. குழந்தைகள் கடும் உழைப்பில் மீண்டும் அடிமைப்பட்டுவிட்டனர். இவர்கள் தான் சிறுவர் உழைப்பு பற்றியும், இராணுவமயமாக்கல் பற்றியும் புலம்புகின்றனர். இதை விசுவாசமாக வாலாட்டிக் கௌவிக் கொள்ளும் புலியெதிர்ப்பு அணியினர், அதற்காகக் குலைக்கின்றனர். இவர்கள் இப்படி என்றால் புலிகள் இந்தக் கொள்கைக்காக வாலாட்டுகின்றனர்.

ஏகாதிபத்திய நாடுகளிலும் சரி, மூன்றாம் உலக நாடுகளிலும் சரி, வசதியும், வாய்ப்பும், கல்வியும் பெறும் குழந்தை, சந்தையில் கேடுகெட்ட பொருட்களின் அடிமையாக இருப்பதை எதிர்ப்பதில்லை. குழந்தைகள் மேலான இந்தத் திணிப்பை இவர்கள் எதிர்ப்பதில்லை. சந்தையில் ""மார்க்'' பொருட்களின் அடிமையாகக் குழந்தைகளை மாற்றும், உலகளாவிய பொதுவான சிந்தனை திணிப்பை இவர்கள் எதிர்ப்பதில்லை.

குழந்தைகள் இயற்கையான இயல்பான அறிவின் மேலான தாகத்தையும், இயல்பான உணர்ச்சி சார்ந்த விழிப்புணர்வையும் மலடாக்கும் இன்றைய நவீன அமைப்பு சார்ந்த வர்த்தக உலகின் போக்கை இவர்கள் எதிர்ப்பதில்லை. குழந்தைகள் அடைத்து வளர்க்கும் மந்தைகள் போல், வர்த்தகச் சந்தையில் அடிமையாக்கும் உலகப் போக்கை எதிர்ப்பதில்லை. ஒரே உணவு, ஒரேயொரு மார்க் என்று விலங்கிடப்படும் குழந்தைகளின் நலனை இட்டு ஐ.நா. இறுகவே கண்ணை மூடிக் கொள்கின்றது. இந்த வர்த்தகச் சமூக அமைப்பில், குழந்தைகள் வளர்க்கப்பட்ட மந்தைகளாக உருவாக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் ஐ.நா. எவற்றை எதிர்க்கின்றது? குழந்தை உழைப்பை எதிர்க்கின்றது. அதுவும் உலகமயமாதலில் முன்பு அதைப் பற்றி புள்ளி விபர அறிக்கையுடன் காலம் தள்ளிய ஐ.நா. தற்போது குழந்தை உழைப்பைப் பற்றி புலம்புகின்றது. ஏன் புலம்புகின்றது?

உலகமயமாதல் சந்தையில் குழந்தை உழைப்பு மிகப் பெரிய தடையாக உலகமயமாதலுக்கு உள்ளது. தேசிய உற்பத்தி குழந்தை உழைப்பில் உயிர்வாழ முனைகின்றது. அதாவது மிக மலிந்த கூலி, தேசிய உற்பத்தி பொருட்களின் விலையை மிகவும் கீழ் மட்டத்தில் வைத்திருக்க உதவுகின்றது. இதனால் அதிக விலையுள்ள ஏகாதிபத்தியப் பொருட்களுடன் போட்டியிட்டு உயிர்வாழ்வதை ஏகாதிபத்தியங்களால் சகிக்க முடியவில்லை. தனது பொருளால் சந்தையை மூழ்கடிக்க வரும் ஏகாதிபத்திய நலன்கள், குழந்தை உழைப்பை ஒழிக்க கோரும் நிபந்தனையை உலகமயமாக்குகின்றது. ஆனால் அந்தக் குழந்தைகள் தங்கள் உழைப்பு மூலம் கஞ்சி குடித்து வாழ்கின்றனர். இந்த ஏகாதிபத்தியம் இதற்கு மாற்றாக எந்த மாற்றுத் திட்டத்தையும் வைக்கவில்லை. அதாவது குழந்தைகளுடைய பெற்றோரின் வேலை பாதுகாப்பையும், குழந்தைகளைப் பராமரித்து வாழ்வதற்கான உயர்ந்த கூலியையும் வழங்க மறுக்கின்றது. மாறாக வேலை பாதுகாப்பு இன்மையையும், மேலும் கூலிக் குறைவையும் உருவாக்கும் விதியை மறுபக்கம் உலகமயமாதல் திணிக்கின்றது. இப்படி இரட்டைச் சுமையில் குழந்தைகளைக் கொன்று போடும் திட்டம் தான் ஐ.நா.வினுடையது.

இதேபோன்று உலகளவில் ஆயுதம் ஏந்தும் குழந்தைகளை இட்டு ஐ.நா. புலம்புகின்றது. ஆயுதம் ஏந்துபவர்கள் எதை எதிர்க்கின்றனர். உலகமயமாதலை ஏற்று செயல்படுத்தும் அரசுகளை எதிர்த்துப் போராடும் குழுக்களில் தான், குழந்தைகள் ஆயுதம் ஏந்திப் போராடுகின்றனர். இந்தக் குழுக்கள் உலகமயமாதலை எதிர்த்து அல்ல, இனம், மொழி, மதம் என்று ஏதோ ஒரு அடையாளம் சார்ந்து ஆயுதம் ஏந்தி நிற்கின்றனர். இது நேரடியாக உலகமயமாதலை எதிர்க்காவிட்டாலும், மறைமுகமாக உலகமயமாதல் நடைமுறைகள் உலகளவில் செயல்படுத்தும் வழிமுறைகளில் தடையை ஏற்படுத்துகின்றது. இதனால் ஐ.நா. எதிர்க்கின்றது. குறிப்பாக இன்று நவகாலனித்துவம், மறுகாலனித்துவம், காலனித்துவம் என்ற கட்டங்களின் ஊடாக, ஏகாதிபத்தியத் தலையீடுகள் நேரடி ஆக்கிரமிப்பாக உலகெங்கும் ஏற்பட்டு வருகின்றது. இதன் போது உள்ளான மோதல்களை, எதிர் கொண்டேயாக வேண்டிய நிலையை ஏகாதிபத்தியம் எதிர்கொள்கின்றது. இதன்போது குழந்தைப் படையணிகள் மூர்க்கமான குறிக்கோளற்ற எதிர்த் தாக்குதலை நடத்துவதால், ஏகாதிபத்தியம் பீதியில் உறைகின்றது.

உலகமயமாதல் ஏற்படுத்தும் பொருளாதாரக் கட்டமைப்பு வறுமையை மேலும் அகலமாக்க, நாடுகளில் ஏற்படும் தன்னெழுச்சியான கிளர்ச்சிகளில் சிறுவர்களின் பங்கு என்றுமில்லாத அதிகரிப்பை அடைந்து வருகின்றது. இதில் இருந்தே ஏகாதிபத்தியம் சிறுவர்கள் ஆயுதம் ஏந்தும் நடவடிக்கையை முழுமூச்சாக எதிர்க்கின்றது. இதை எதிர்ப்பவர்கள் சிறுவர்கள் ஆயுதம் ஏந்தும் சூழலை மாற்ற, எந்த ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடுவதில்லை. குறிப்பாக ஆயுதம் ஏந்துவதைத் தூண்டுகின்ற மனிதவிரோதச் சூழலை மாற்றுவதில்லை. மாறாகச் சூழலை மேலும் கடுமையான வகையில் நெருக்கடிக்குள்ளாக்கி, ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளிச் செல்லுகின்றனர்.

இந்த நிலையில் தான் புலிகளில் சிறுவர்கள் ஆயுதம் ஏந்துவதை ஏகாதிபத்தியங்கள் எதிர்க்கின்றன. புலிகளும் தங்கள் அமைப்பில் சிறுவர்களைச் சேர்க்கமாட்டோம் என்று விசுவாசமாகவே கையெழுத்திட்டனர். இதை அவர்களே மீறுவது மற்றொரு விடையம். இந்த விடையத்தைக் கொண்டு புலியெதிர்ப்பு அணி செய்ய நினைக்கும் அரசியல் தான் என்ன? உலகில் உள்ள சிறுவர்கள் பற்றிய கொள்கையா? அல்லது வேறு ஒன்றா? இந்த விடையத்தில் புலிகளை அழிப்பதற்காக ஏகாதிபத்தியத்துக்குத் துணை போவதைத் தாண்டி, சிறுவர்கள் பற்றிய எந்தவிதமான சமூக அக்கறையும் இந்த புலியெதிர்ப்பின் பின்னால் கிடையாது. இதை யாரும் எடுத்துக் காட்டவும் முடியாது. இவர்கள் தங்கள் தலைக்கு மேல் தூக்கி போற்றும் கருணா, இவர்களின் ஆதரவைப் பெற்ற ஈ.என்.டி.எல்.எப். ராஜன், ஈ.பி.ஆர்.எல்.எப். எல்லாம் புலிக்கு நிகராகவே குழந்தைகளை ஆயுதபாணியாக்கவில்லையா? ஏன் இவர்கள் புலிகளை மட்டும் எதிர்க்கின்றனர்.

நாங்கள் சிறுவர்கள் இராணுவமயமாக்கலை எப்படிப் பார்க்கின்றோம். மனிதச் சமூகம் என்பது உலகம் தழுவியதொன்று. இதில் குழந்தைகள் இந்தச் சமூகப் பொருளாதார அமைப்புக்கு வெளியில் சுதந்திரமானவராக, நாம் ஒருநாளுமே பார்ப்பதில்லை. ஒவ்வொரு குழந்தையும் இந்தச் சமூகப் பொருளாதார அமைப்பில் செயலாற்றும் போது, குழந்தை அதற்கு விதிவிலக்காக இயங்குபவர்கள் அல்ல என்பதே எமது நிலைப்பாடு. ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போல்தான் குழந்தைகளும். இதில் விதிவிலக்கு இருப்பதில்லை. இங்கு வயது அறிவின் விருத்தியின்மை போன்ற ஏற்றத்தாழ்வான வேறுபாடுகளைக் கடந்தும் இதை நாம் பார்க்கின்றோம்.

வக்கிரமடைந்துள்ள உலக மனித வாழ்வில், ஒவ்வொரு மனிதப் போராட்டத்திலும் சரி, மனித ஒடுக்குதலிலும் சரி குழந்தைகள் விரும்பியோ, விரும்பாமலோ இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் குழந்தை எதிர்வினையாற்றலை, ஒருதலைப்பட்சமாக ஒரு பிரிவினருக்கு நலமடிப்பதை நாம் எதிர்க்கின்றோம். மாறாகக் குழந்தையின் ஆரோக்கியமான வாழ்வுக்குரிய ஒரு சமூக அமைப்புக்கான போராட்டத்தில் குழந்தையின் பங்கு முதன்மையானது. அது விதிவிலக்கானதல்ல.

உலகைப் பகுத்தாயும் முறைமையை, சிறு குழந்தையில் இருந்தே சமூக நல நோக்கில் மாற்றியமைக்கப் போராட வேண்டியது ஒவ்வொரு பெற்றோரினதும் சமூகத்தினதும் கடமையாகும். மொத்தச் சமூகமே ஆயுதம் ஏந்த வேண்டி வந்தால் குழந்தையும் ஆயுதம் ஏந்துவது எந்தவிதத்திலும் குற்றமல்ல. இயற்கைக்கு இது விரோதமானதல்ல. குழந்தைகள் சமூகப் பொறுப்புள்ள குழந்தையாக, பெற்றோரின் மற்றும் சமூகத்தின் உழைப்புடன் இணங்கி, குழந்தைகள் போராடும் போது இதை நாம் பாதுகாக்கவும், அதற்காகப் போராடவும் வேண்டும்.

இதை விடுத்து குழந்தையில் உள்ள அறிவின் விருத்திக் குறைவைப் பயன்படுத்தி, வெறும் ஆயுதம் ஏந்தும் கருவியாகக் குழந்தைகளைப் பயன்படுத்துவதை நாம் எதிர்க்கின்றோம். இதையே புலிகள் செய்கின்றனர். குழந்தைகளின் சமூக அக்கறையின்மையைப் பயன்படுத்தி, வெறும் ஆயுதம் ஏந்தும் லும்பன் கருவிகளாக வெறியூட்டப்பட்ட நிலையில் பயன்படுத்துவதையே நாம் எதிர்க்கின்றோம். மக்களின் வாழ்வுடன் தொடர்பற்ற வகையில், தமது குறுகிய நலனுக்காகப் பலியிடுவதை நாம் எதிர்க்கின்றோம். மக்களுடன் தொடர்பற்ற புலிகள் இயக்கம், மக்களுக்கு எதிராக அவர்களின் குழந்தைகளைப் பயன்படுத்துவதையே நாம் எதிர்க்கின்றோம். அதேசமயம் ஏகாதிபத்திய மற்றும் புலியெதிர்ப்பு அணி ஆகியோர் புலிகளை எதிர்க்கும் அரசியல் உள்ளடக்கத்தையும் நாம் எதிர்க்கின்றோம். மக்கள் நல நோக்கில் நின்று சிறுவர்களை மக்களுக்கு எதிராகவே ஆயுதப் பாணியாக்குவதை நாம் எதிர்க்கின்றோம்.

எந்தப் போராட்டமும், எந்தத் தியாகமும், எந்த ஆயுதமேந்தலும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். குறுகிய சிலர் நலன் சார்ந்ததாக இருப்பதை நாம் எதிர்க்கின்றோம். இது பெண்கள் ஆயுதம் ஏந்தினாலும் சரி, குழந்தைகள் ஆயுதம் ஏந்தினாலும் சரி, மக்கள் நலனே முதன்மையானதாகும். அனைத்துக்குமான அளவுகோல் இது மட்டும்தான். இங்கு ஆயுதம் ஏந்தல் என்பது அரசியல்மயமாதலின் ஒரு வடிவம் மட்டும்தான். இங்கு ஆயுதம் ஏந்தல் என்பது, ஒவ்வொரு மனிதனும் அரசியல் உணர்வைப் பெறும் உரிமை உண்டா? இல்லையா? என்பதை உள்ளடக்கியது. இங்கு அரசியல் உணர்வு என்பது சொந்த உற்பத்தி மற்றும் உழைப்பு சார்ந்த உணர்வை ஒழுங்குபடுத்தி பெறுவதுதான் அரசியல். சமகாலத்தில் இதன் வளர்ச்சி பெற்ற ஒரு வடிவம்தான், ஆயுதம் ஏந்தி தன்னைப் பாதுகாக்கும் உரிமை. இதற்கு வெளியில் அல்ல. இதற்கு வெளியிலான அரசியல் முதல் ஆயுதம் ஏந்தல் வரை அனைத்தும் பிற்போக்கான சமூகப் பாத்திரத்தையே எப்போதும் வகிக்கின்றன.

19.4 புலிப் படுகொலைகளை எதிர்ப்பதை அடிப்படையாகக் கொண்ட, புலியெதிர்ப்பு அரசியல் தான் என்ன?

எமது தேசிய வரலாறு என்பது தனிமனிதப் படுகொலைகள் மற்றும் கூட்டுப் படுகொலைகளைப் பற்றியதே. இதற்கு வெளியில் மக்களின் சமூகப் பொருளாதார உள்ளடக்கம் சார்ந்த தேசிய வரலாறு என்பது கிடையாது. அப்படியொன்று இருப்பதாகக் கூறுவதற்கு கூட, யாரும் தயாராகவில்லை. இந்த நிலையில் புலிகளின் உயிர் வாழ்வு என்பதே, இந்தப் படுகொலை அரசியலில் தத்தளிக்கின்றது. நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு கொலை தன்னும் இன்றி தேசியம் வக்கரிக்கவில்லை. பகிரங்கமாகவும், இரகசியமாகவும் அன்றாடம் கொலைகள் அரங்கேறி வருகின்றது. தமிழ்ச் செய்தி பத்திரிகைகள் இதை மூடிமறைப்பது அல்லது இனம் தெரியாத கொலையாகப் போகிறபோக்கில் மூட்டைகட்டி எறிந்துவிடுவது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. மறுபுறம் புலிகளைச் சேர்ந்த ஒருவரின் சட்டையைப் பிடித்து இழுத்தால், அதுவே உலகச் செய்தியாக்கி கொஞ்ச காலத்துக்கு ஊடகவியலே அதைச் சொல்லி பிழைக்கும். இப்படி ஒரு படுகொலை அரசியல் வரலாறு வக்கிரமாகவே அரங்கேறுகின்றது.

இப்படி அன்றாடம் நடக்கும் கொலைகளின் பெயரால், புலியெதிர்ப்பு அரசியல் அரங்கேறுகின்றது. புலிப்பினாமியம் முழுப் பூசணிக்காயையே மூடிமறைத்துவிட, அதைக் கிண்டி எடுத்து சந்தைப்படுத்துவதே புலியெதிர்ப்பு அரசியலாகிவிடுகின்றது. மறுபுறம் புலிகள் கொல்லப்பட்டால், அதைச் சந்தையில் ஒளித்துவைத்து வியாபாரம் செய்வது அன்றாடக் காட்சி ஆகும். புலிகள் அதிகம் கொன்றால், இவர்கள் சந்தையில் கொண்டாட்டம். இந்தச் செய்தியைக் கொண்டு அரசியல் விபச்சாரத்தை நடத்துகின்றனர். ஏகாதிபத்தியத்துக்குப் பட்டியலிட்டு பெட்டிசன் போட்டு, புலிப்பயங்கரவாதிகளை ஒடுக்கவேண்டும் என்று ஒப்பாரி வைக்கின்றனர்.

புலிகள் தமது அன்றாடக் கொலைகளைத் தற்காலிகமாக ஒத்திவைத்தால், புலியெதிர்ப்பு அணி அரசியல் பேச எதுவுமற்ற நிலையில் சோகமாகவே முகத்தைத் தொங்க விடுகின்றனர். அதாவது சுனாமி அதிக தமிழ் மக்களைக் கொன்றால், புலிக்கு அதிக காசு என்ற தத்துவத்தை எப்படி நடைமுறைப்படுத்திக் காட்டினரோ, அப்படியே புலிகள் அதிகம் பேரைக் கொன்றால் புலியெதிர்ப்பு அணிக்குக் கொண்டாட்டம். இதன்போது இவர்களின் அரசியல் பல்லிளித்து காட்சியளிக்கின்றது. புலிகள் படுகொலையை நிறுத்தினால் அரசியலில் அஸ்தமனமாகிப் போவார்கள். அதுபோல் புலியெதிர்ப்பு அணியினரும் அஸ்தமனமாகி காணாமல் போய்விடுவார்கள். இருவரும் இந்தப் படுகொலை அரசியலில் தான் உயிர் வாழ்கின்றனர்.

இங்கு படுகொலை அரசியல் பிரச்சினை என்ன என்றால் சுட்டவனின் அரசியலையும், சுடப்பட்டவனின் அரசியலையும் குறித்து யாரும் பேசுவதில்லை. சுட்டவன் மற்றும் சுடப்பட்டவனுக்கு வெளியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும், இவர்களுக்கு இடையில் என்ன அரசியல் உறவு நீடிக்கின்றது என்பதையிட்டும் யாரும் பேசுவதில்லை. புலிகள் துரோகி, தியாகி என்று ஒற்றைப் பரிணாமத்தில் எப்படி அரசியல் செய்கின்றார்களோ அப்படியே புலியெதிர்ப்பு அரசியல் அணியானது, படுகொலையைப் புலி செய்ததா? இல்லையா? என்ற அடிப்படையில் மட்டும் அரசியல் செய்கின்றனர்.

புலிகளால் கொல்லப்படும் பட்டியல் விரிவானவை. அது இனம், சாதி, பால், வர்க்கம் என்ற உள்ளடக்கத்தில் தொடங்கி பரந்த தளத்தில் நடத்துகின்றனர். தம்முடன் முரண்பட்டவர்கள், மக்களின் நலனில் அக்கறைப்பட்டவர்கள், திருப்பிக் கதைத்தவர்கள், மாற்று இயக்கம், மாற்று அரசியல் கட்சிகள், கப்பம் வழங்க மறுத்தமை, வரி தராமல் முரண்பட்டவர்கள், முஸ்லீம்கள், சிங்களவர், அரசுடன் சேர்ந்துள்ள குழுக்கள், தனது தலைமைக்குச் சவால் விடக் கூடியவர்கள் என்று யார் வேண்டுமானாலும் புலிகளின் துப்பாக்கிக்கு இரையாகின்றனர் அல்லது சித்திரவதைகளிலும், இரகசியப் படுகொலைகளிலும் கொல்லப்படுகின்றனர். இது சமாதான காலத்தைக் கூட விட்டுவிடவில்லை. புலிகளின் பாசிசக் கட்டமைப்பின் கட்டுமானமே இந்தப் படுகொலைகளிலும் சித்திரவதைகளிலும் தான் தங்கிக் கிடக்கின்றது.

புலிகள் எதிரிகளைத் தாமாகவே அன்றாடம் உற்பத்தி செய்கின்றனர். புலிகளின் கொள்கையாக உள்ள புலிமயமாக்கும் பினாமியம் புலியெதிர்ப்பு அணியை நாள்தோறும் உருவாக்குகின்றது. சிறிய முரண்பாடுகள் கூட சித்திரவதை அல்லது படுகொலை என்ற எல்லையைத் தொடும்போது, அன்றாடம் மனிதர்களைத் தப்பியோட வைக்கின்றது. இந்த நிலையில் எந்தவிதமான உள் நோக்கமும் அற்ற இயல்பான சமூக முரண்பாடுகளை, புலியெதிர்ப்பு அரசியல் அறுவடை செய்கின்றது. புலிகளிடம் இருந்து தப்பியோடும் ஒருவன், தனக்கு பாதுகாப்பான பிரதேசமாக சிங்கள பகுதியையும் அல்லது அன்னிய நாட்டையும் நோக்கி ஓட வைக்கின்றது. அன்னியநாடு என்பது இன்று மிகப் பெரிய செலவு கொண்ட, கடுமையான ஒரு விடயமாக மாறிவிட்டது. இதற்கான வசதியும் வாய்ப்பற்ற ஒரு நிலையில், பெரும்பான்மை நடுத்தெருவுக்கு வருகின்றது. எந்த உள்நோக்கமுமற்ற சாதாரண வாழ்வை வாழ இவை தடுக்கின்றது.

மறுபுறம் கொழும்பைச் சுற்றிய நகர்ப்புற வாழ்க்கை, மேற்கு ஐரோப்பிய நகருக்குச் சமமான வாழ்க்கைச் செலவைக் கொண்டதாகவுள்ளது. கொழும்பு போன்ற பிரதேசங்கள் தமிழ்ப் பிரதேசத்தில் இருந்து ஏதோ ஒரு காரணத்தினால் தப்பி வந்தவர்களின், அடர்த்தியான பிரதேசமாக உள்ளதுடன், உயர்ந்த வாழ்க்கைச் செலவு கொண்ட ஒரு பிரதேசமாகவும் மாறிவிட்டது.

இந்த நிலையில் புலிகளுடன் உள்நோக்கமற்ற முரண்பாடுகளுடன் தப்பி வருபவன், குறைந்த பட்சம் தங்க இடமும், ஒரு நேர உணவுக்குத் தள்ளாடும் நிலைமையும் மிகவும் பரிதாபகரமானதாகக் காணப்படுகின்றது. இவர்களை இலகுவாகவே புலியெதிர்ப்பு குழுக்கள் மற்றும் சிங்கள இனவாத புலனாய்வுப் பிரிவு தமது தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றது. சூழல் அவர்களை அதற்குள் இட்டுச் செல்கின்றது. தமது சொந்தப் பிரதேசத்தில் சொந்தச் சமூகத்துடன் ஜனநாயகப்பூர்வமாக வாழ முடியாத நிலைமை, எதிரிக்குப் படையணியாக மாறும் நிலைக்கு வழிகாட்டுகின்றது. புலிகளைப் போல் உலகில் எந்த விடுதலைப் போராட்டமும் துரோகத்தின் பெயரில் இந்தளவுக்குப் படுகொலைகளை நடத்தியதில்லை. துரோகிகளை உற்பத்தி செய்யும் புலிக் கொள்கை அதை ஒழிப்பதாகப் பாசாங்கு செய்து படுகொலைகளை நடத்துகின்றது. இந்தப் படுகொலை அரசியலே, புலிகளின் சமகாலத் தேசிய அரசியலாகிவிட்டது.

இந்தப் படுகொலைகளை வெறுமனே கண்டிப்பதன் மூலம் ஒரு மாற்று அரசியலை மக்களுக்கு வைத்துவிட முடியாது. புலிகளுடன் முரண்படும் சிங்கள இனவாத அரசும், ஏகாதிபத்தியமும் கூட இப்படுகொலைகளைக் கண்டிக்கின்றது. இதனால் சிங்கள அரசும், ஏகாதிபத்தியமும் மக்கள் நலனுடன் இணங்கி நிற்பதாக ஏற்றுக் கொள்ள முடியுமா? இல்லையென்பதும் சமூகத்தைக் குறைந்தபட்சம் புரிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் புலியெதிர்ப்பு அணியினர் என்ன செய்கின்றார்கள் என்றால், அரசுடனும் ஏகாதிபத்தியக் கோட்பாட்டுடனும் கைகோர்த்துக் கொண்டே இதைக் கண்டிக்கின்றனர். ஏகாதிபத்திய மற்றும் இனவாத நோக்கில் இருந்து வேறுபட்ட வகையில், மக்களின் நலன் சார்ந்து இதைக் கண்டிப்பதில்லை. ஏகாதிபத்தியமும், அரசுகளும் கூட படுகொலை அரசியலில் தன் தன்னைத் தகவமைத்துள்ளது. சிறைக் கூடங்களில் படுகொலை அரசியலை ஆணையில் வைத்துக் கொண்டுதான், உலக மக்களை அடக்கியாளுகின்றனர். இதை மூடிமறைத்தபடி புலிகளை மட்டும் கண்டிப்பதன் நோக்கம், அந்தத் தொழிலைச் செய்யும் அதிகாரத்தைத் தமக்குப் பெற்றுத் தரும்படி கோருவதே. இங்கு புலிகள் இடத்தில் தாம் (புலியெதிர்ப்பு அணி) இருந்தபடி, விசுவாசமாக ஏகாதிபத்தியத்துக்குச் சேவை செய்யத் தயாராக இருப்பதை மட்டும் இவர்கள் சொல்வதில்லை.

ஒரு அடிப்படையான விவாதமாகச் சிலர் முன்வைக்கும் விடையத்தைப் பார்ப்போம். இலங்கை அரசுடன் புலிகளை ஒப்பிட்டால், கூடியளவுக்கு ஜனநாயக விரோதிகளாக இருப்பது யார் என்ற கேள்வியை அண்மையில் நண்பர் ஒருவர் கேட்டு, அதைப் புலிகள் என்றார். அதனால் புலிகளை எதிர்ப்பதே முதன்மையான கூறு என்றார். கருத்துச் சொல்கின்ற, முன்வைக்கின்ற சுதந்திரத்தைப் பொறுத்தவரையில், இலங்கையில் புலிகளின் பிரதேசத்தைவிட மற்றைய பிரதேசத்தில் சாத்தியமானதே. இதனால் புலிகள் அரசைவிட மோசமான ஜனநாயக விரோதிகளாகத் தெரிகின்றனர். ஆனால் இது கருத்து சொல்ல முனையும் ஒரு சிறிய பிரிவு சந்திக்கும் பிரச்சனை மட்டும் தான். பரந்துபட்ட மக்கள் இப்படி உணர்வதில்லை. ஏனெனின் பரந்துபட்ட மக்கள் சொல்வதற்கும், முன்வைப்பதற்கும் என்று எந்த அடிப்படை ஜனநாயக உரிமையையும் புரிந்து கொள்ளாத நிலையில் உள்ளனர். அத்துடன் போதிய வலுவான சமூகப் பொருளாதார அடிப்படைகளையே கொண்டிராத நிலையில், அவர்களின் பிரச்சனை வேறு ஒன்றாகவே உள்ளது.

அவர்கள் சமூகப் பொருளாதார வாழ்வியல் கூறுகளில் தான் முரண்படுகின்றனர். இது புலிகளை விடவும் சிங்கள இனவாதிகளுடான முரண்பாடே கூர்மையானதாக உள்ளது. சிங்கள இனவாதம் அரசியல் கட்டமைப்பின் அச்சாக உள்ளவரை, சிறுபான்மை தேசிய இனமக்கள் தொடர்ச்சியாகவே பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பாதிப்பு புலிகள் உணர்வது போல் மக்கள் உணர்வதில்லை. இரண்டுக்கும் தெளிவான வேறுபாடுகள் உண்டு. புலிகளுக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள அடிப்படை முரண்பாடு, இனவாதத்தைப் புரிவதிலும் எதிர் கொள்வதிலும் பிரிந்தே காணப்படுகின்றது.

ஆனால் கருத்துச் சொல்பவனும், முன்வைப்பவனும் சமூகத்தில் இருந்து அன்னியமாகி, தனித்துவமாகத் தன் வட்டத்தில் இருந்து புலிகளையும் உலகையும் மதிப்பிடும் அவலம் நேருகின்றது. மக்களின் எதிரியைக் கூட நண்பனாகக் கருதும் அளவுக்கு இது இட்டுச் செல்லுகின்றது. மக்களிடம் அன்னியமாகித் தன்னைச் சுற்றி வேலியிட்டுக் கொள்ளும் ஒருவன், படிப்படியாக உலகைப் பற்றிய மதிப்பீட்டைக் கூட புலிகளின் இருந்து தொடங்கி விடுகின்றõன். உலக நிகழ்ச்சிகளில்ஒன்று தான் புலிகள் விவகாரம் என்ற உண்மையை காண்பதில்லை. புலிகளே உலகமாகக் கருதும் அளவுக்கு மாறி, புலிகளில் இருந்து உலகை மதிப்பிடும் போக்கு புலியெதிர்ப்பு அரசியலின் மையமான விடையமாகியுள்ளது.

அவர்கள் காண்பதெல்லாம் புலிக் கனவாகி விடுவதால், புலிக்கு வெளியில் மிகப் பிரமாண்டமான உலகமும், அதில் மக்கள் கூட்டமும் உண்டு என்பதைக் கூட காண்பதில்லை. சொந்த மக்கள் கூட்டம் புலிகளுடன் முரண்பட்டபடியே புலிகளுடன் சேர்ந்து வாழ்கின்றனர் என்பதைக் கூட கண்டு கொள்வதில்லை. மாறாகப் புலிகளைவிட அதிக ஆயுதங்களைக் கொண்டுள்ளவர்களையும், மிக மோசமாகப் புலிகளை அடக்கியாளக் கூடிய மனித விரோதிகளையும் பார்த்து கைகூப்பி வழிபடுகின்றனர் அந்த வழிபாட்டுக்கு ஏற்ற கோட்பாடுகளைப் புலியெதிர்ப்பு அணியினர் உருவாக்குகின்றனர்.

புலியெதிர்ப்பு அரசியல், எதிரியின் கால்களில் மிதிபட தேவைப்படும் தூசுகளாகவே மாறிவிடும் காட்சியை நாம் காண்கின்றோம். உண்மையில் மக்களுக்கு எதிராகத் தம்மை வரிந்து கொண்டு, மக்களையும் புலியாக வருணிக்கும் காட்சிகளை நாம் காண்கின்றோம். மக்களைப் புலிகளாகக் கருதாத வரை, மக்களுக்காகப் போராடுபவர்கள் அவர்களின் அரசியலை முன்வைப்பார்கள். மாறாக மக்களைப் புலியாகக் கருதும் போக்கு புலியெதிர்ப்பு அணியின் கோசமாகி விடுகின்றது. புலிகளோ, மக்கள் வேறு, தாம் வேறு என்பதை மறுக்கின்றனர். தாம் ஒன்று என்று கூறும் கூற்றுகளை நாம் இங்கே காண்கின்றோம். இதையே புலியெதிர்ப்பு அணி ஏற்றுக் கொண்டு மக்களுக்கு என்று வேறு எந்த மாற்று அரசியலையும் முன்வைப்பதில்லை. மாறாக மக்களின் மேலான தாக்குதலுக்கு ஏற்ற சர்வதேச ஆக்கிரமிப்புக் கொள்கைக்குப் பச்சைக் கொடி காட்டுகின்றனர்.

இதன் அங்கமாகவே அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான தலையீட்டை இவர்கள் எதிர்ப்பதில்லை. அவர்களுக்குச் சேவை செய்வதுதான், புலியெதிர்ப்பின் வரலாற்றுக் கடமை என்பதைச் சொல்லாமல் சொல்லி வருகின்றனர். அமெரிக்கா உலகெங்கும் நடத்தும் ஆக்கிரமிப்பு வரலாற்றின் உண்மைகளை இட்டு, இவர்களுக்குத் துளியளவுக்குக் கூட அக்கறையில்லை. இலங்கை அன்னியரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே புலியெதிர்ப்பு அரசியலின் மையமான உள்ளடக்கமாகும். புலிகளை ஒடுக்க இவை அவசியமானது என்பது இவர்களின் சித்தாந்தம். இதற்குள் தான் புலியெதிர்ப்பு அரசியல் அரங்கேறுகின்றது.

19.5 மாற்றுப் பாதை என்பது எப்போதும் மக்களைச் சார்ந்து இருப்பது மட்டும்தான்

மக்களின் நலன்களை உயர்த்திப் பிடிப்பதே மாற்றுப் பாதையாகும். உலகில் மக்கள் தமது சொந்த உழைப்பு, சொந்த உற்பத்தியுடன் வாழ்வுக்காகவே போராடுகின்றனர். இதில் இருந்துதான் நியாயமான போராட்டம் நடைபெறமுடியும். மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வுடன் தொடர்பற்ற அனைத்துச் செயல்பாடுகளும் பிற்போக்கானவையே. மக்களுக்கு எதிராக உள்ள அனைத்தையும், முரணற்ற வகையில் விமர்சிப்பதே முற்போக்கானது. மக்களின் நலனுக்கு உகந்த அனைத்தையும் ஆதரிப்பது தான் சரியானது. இதில் இருந்து புலிகள், அரசு மற்றும் ஏகாதிபத்திய நலன்களைத் தனிமைப்படுத்தி, மக்களின் நலனைத் தனித்துவமாக எடுத்துக் காட்டிப் போராடுவதுதான் முற்போக்கானது. இதைவிடுத்து புலியெதிர்ப்பு அரசியல் புலிகளை மட்டும் விமர்சிக்கின்றது. இதில் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தவில்லை. மாறாக ஏகாதிபத்தியம் மற்றும் அரசைச் சார்ந்து நின்று புலிகளை விமர்சிக்கின்றது.

காலங்காலமாக உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களையிட்டு எந்தவிதமான சமூக அக்கறையும் கிடையாது. கடந்தகாலப் போராட்ட இயக்கத் தலைமைகள் எப்படி மக்களுக்கு எதிராக இருந்தனவோ, அதையே இவர்கள் தூக்கி நிறுத்துகின்றனர். இயக்கங்களின் மக்கள் விரோத நடத்தைகளுக்கு எதிராக இயக்கத்தின் உள்ளும் இயக்கத்தின் வெளியிலும் இருந்து போராடி மடிந்தவர்கள் எதற்காகப் போராடினார்களோ, அந்த வரலாற்று சுவடுகளில் தான் மக்கள் நலன்கள் காணப்பட்டது, காணப்படுகின்றது. இந்தப் பாதை மட்டும் தான் சரியானது.

இந்த வகையில் ராஜனி திராணகம படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களின் முன்பாக எழுதிய கட்டுரையில் ".... மக்களைப் பொறுத்தவரையில் கொடூரமான தீர்க்கமான இந்த வன்முறைக்கான தீர்வு சமூகத்திற்குள் இருந்து தான் வரவேண்டுமே தவிர, வெளியிலிருந்து திணிப்பதால் வராது. இத்தகைய உள்ளக அமைப்புகளை விருத்தியுறச் செய்வதென்பது நீண்ட கடினமான பணியாகும்'' என்றார். இதைத்தாம் நாம் மீண்டும் கூற விரும்புகின்றோம். ராஜனி திராணகமவின் நினைவுக்காகப் படத்தைப் போட்டுவிட்டு, அவரின் பெயராலேயே அவருக்கு எதிராகப் புலியெதிர்ப்பு பிரிவினர் இயங்குகின்றனர். மாறாக அவரை உள்வாங்கி அதன்படி சமூகத்தைப் புரிந்து கொண்டு சமூகத்துடன் இணங்கி நிற்பது இன்று அவசியமாகின்றது.

புலியெதிர்ப்பு அரசியல் பிரிவினர் மக்களுக்காக எதுவும் செய்ய விரும்பினால் அல்லது அவர்களைப் புரிந்து கொள்ள விரும்பினால் பின்வருவனவற்றுக்குத் தெளிவாகப் பதிலளிக்க வேண்டும்.
1. புலிகளுக்கு மாறாக நீங்கள் முன்வைக்கும் மாற்றுத் தலைமையின் வடிவம் தான் என்ன?
2. புலிகளை எதிர்க்கும் உங்கள் பொருளாதார வடிவம் தான் என்ன?
3. சிங்கள இனவாத அரசு பற்றிய உங்கள் நிலைப்பாடு தான் என்ன?
4. ஏகாதிபத்தியம் பற்றி உங்கள் நிலைப்பாடுதான் என்ன?
5. அரசுசாராத தன்னார்வக் குழுக்கள் ஏகாதிபத்திய நலன்களைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் தான். இதைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் தான் என்ன?
6. மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வு என்னவாக இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள்?
7. உங்கள் அரசியல் மற்றும் கருத்துகள் மக்கள் நலனுடன் எப்படி எந்த வகையில் இணங்கிப் போகின்றது?
8. நீங்கள் எதைத்தான் செய்ய விரும்புகின்றீர்கள்?
9.மாற்றுக் கருத்து என்ன என்பது? அதனுடன் நீங்கள் எப்படி இணங்கி அல்லது விலகிப் போகிறீர்கள்?
10.ஏகாதிபத்திய அரசுகள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் உடனான உங்கள் உறவுகள் என்ன? உலகளாவிய மக்களுடனான உங்கள் உறவு என்ன? இரண்டுடனும் ஒரேவிதமான உறவு இருக்க முடியுமா?
இது போன்று எதார்த்தம் சார்ந்த விடையங்களில் உங்கள் கருத்துக்கள் தான் என்ன? இதற்கும் மக்களுக்கும் என்ன உறவு உள்ளது என்பதை, உரசிப் பார்க்க வேண்டுகோள் விடுகின்றோம்.


04.02.2005

No comments: