தமிழ் அரங்கம்

Monday, October 15, 2007

யாழ்-மேலாதிக்கம் தான் தமிழ் இனத்தைப் பிளக்கின்றது.

பி.இரயாகரன்

புலிகள் மற்றும் புலிகள் அல்லாத அனைத்து தளத்திலும், யாழ் மேலாதிக்கம் தான் தமிழ் மக்களையே பிளந்து, அவர்களை தனக்குள் அடிமைப்படுத்துகின்றது. சமூகத்தில் காணப்படும் அனைத்து சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராட மறுக்கும் உள்ளடக்கம் தான், யாழ் மேலாதிக்கம். யாழ் மேலாதிக்கம் என்பது தனி நபர்கள் அல்லது குழுக்கள் சார்ந்ததல்ல. மாறாக மேலாதிக்கம் பெற்ற வாழ்வியல் மற்றும் சிந்தனை முறையாகும். அது சமூக பொருளாதார ஆதிக்கம் கொண்டது. இது குறித்த ஒரு மக்கள் பிரிவை அடிப்படையாக கொண்ட போது, இந்த மக்கள் அல்லாத சமூக பிரிவிலும் கூட பிரதிபலிக்கின்றது. இதன் மூலம் முழு மக்களையும் தனக்குள், தனது சிந்தனை வாழ்வியல் முறைக்குள் அடிமைப்படுத்தி சிதைக்கின்றது. யாழ் மேலாதிக்க சிந்தனை முறை என்பது, சமூகத்தின் அனைத்து சமூக இழிவுகளையும் ஒருங்கே கொண்டதே யாழ் மேலாதிக்கமாகும்.



யாழ் மேலாதிக்கம் தமிழ் பேசும் மக்களின் மேலான, மேன்மை பெற்ற அதிகாரத்துடன் கூடிய ஒரு அடக்குமுறை இயந்திரமாக உள்ளது. இன்று இந்த யாழ் மேலாதிக்கம் புலிகள் என்ற பாசிச வடிவில், சமூகத்தை பிளந்து அடக்குகின்றது. இதேபோல் தான் புலியெதிர்ப்பு அணியும் கூட, யாழ் மேலாதிக்க உள்ளடகத்தில் தான் தன்னையும் தனது புலியெதிர்ப்பையும் தகவமைத்துள்ளது. 13.08.2006 ரீ.பீ.சீ அரசியல் அரங்கில் புலியெதிர்ப்பு அணி தனது யாழ்மேலாதிக்க குறுக்குப் புத்தியையே அம்மணமாக்கியது. யாழ்மேலாதிக்க உணர்வுடன், மற்றைய சமூகங்கள் மீதான யாழ் மேலாதிக்க ஒடுக்குமுறையை பற்றி பேசுவதை, ஏன் தமது புலியெதிர்பு அரசியல் கலந்துரையாடலில் பேசுவதற்கு கூட அனுமதிக்க மறுத்து, பேசும் போது அடிக்கடி குறுக்கிட்டு அவர்களின் நேரத்தைக் கூட மட்டுப்படுத்தினர். யாழ் மேலாதிக்கத்தைப் பற்றி பேசுவது, புலிக்கு எதிரான யாழ் மேலாதிக்க நிலையை பலவீனப்படுத்தும் என்றனர். இதை ரீ.பீ.சீ வானொலி நடத்துனரும், யாழ் மேலாதிக்க புலியெதிர்ப்பு எடுபிடிகளும் கூட வந்து இதையே குலைத்தனர். யாழ் மேலாதிக்கம் ஆதிக்கம் பெற்ற ஒன்றாகவே புலி மற்றும் புலியெதிர்ப்பிலும் கூட காணப்படுகின்றது. ஆனால் இதை பலரும் புரிந்துகொள்ளாத நிலையில், இதை சிலர் வடக்கு கிழக்குள் மட்டும் பிரித்து பார்ப்பதும் நிகழ்கின்றது.



யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன? இந்த அடிப்படையான கேள்வி மூலம், இந்த விடையத்தை நாம் ஆராய்வது அவசியமாகின்றது. இது கிழக்கு மக்கள் மேலான யாழ் மக்களின் மேலாதிக்கம் என்று மட்டுப்படுத்தி சுருக்கிப் பார்க்கமுடியாது. யாழ் மேலாதிக்கம் என்பது, சமூகத்தில் உள்ள சகலவிதமான ஒடுக்குமுறையையும், மையப்படுத்தி அதற்கு தலைமை தாங்கியாளும் ஒரு அரசியல் சித்தாந்த பொருளாதாரக் கோட்பாடாகும். இது ஒரு வாழ்வியல் முறை. இது தனது அதிகாரம், பண்பாடு, கலாச்சாரம், சிந்தனை முறை, கோட்பாடு என்று, எங்கும் எதிலும் புரையோடி ஆதிக்கம் செய்யும் ஒரு வாழ்வியல் முறையாகும். சமூகங்களைப் பிளந்து மக்களை இழிவாடி மக்களை அடக்கியாள்வதாகும். இது சமூகத்தில் வெவ்வேறு கட்டத்தில், வெவ்வேறு வடிவத்தில் பிரதிபலிக்கின்றது.



சிங்களப் பேரினவாத மேலாதிக்கம் எப்படி தமிழ் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றதோ, அப்படிப்பட்டதே யாழ் மேலாதிக்கமும். சிங்கள மேலாதிக்கம் மொழி, பண்பாடு, கலாச்சாரம், ஆணாதிக்கம் முதல் இராணுவ வடிவில் கூட தமிழ் மக்களின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது, செலுத்த முனைகின்றது. மேலாதிக்கம் என்பது சமூகத்தின் அனைத்து துறையிலும் பிரதிபலிக்கின்றது.



இது போல் யாழ் மேலாதிக்கம் முஸ்லீம் மக்களை இழிவாடுகின்றது. சிங்கள மக்களை இழிவாடுகின்றது. கிழக்கு வாழ் தமிழ் மக்களை இழிவாடுகின்றது. வன்னி மக்களை இழிவாடுகின்றது. தீவு மக்களை இழிவாடுகின்றது. இப்படி இழிவாடல்களின் மொத்த வடிவம் தான் யாழ் மேலாதிக்கம். மக்களை தன்னையொத்த மக்களாக காணமறுத்து, அவர்களை இழிவாடுவதும் இதன் அடிப்படையாகும். இதற்கு எதிராக போராட மறுப்பது தான் யாழ் மேலாதிகத்தினை மேலும் நெருக்கமாக இனம் காணவுதவுகின்றது.



யாழ் மேலாதிக்கம் என்பது மேலும் பல அம்சத்தை ஒருங்கே கொண்டது. அது பிரதேச வேறுபாட்டை, சாதிய மேலாதிக்கத்தை, ஆணாதிக்கத்தை, இனவாதத்தை, உழைப்பை சுரண்டுவதை, சமூக இழிவாடல்களை என அனைத்தையும் ஒருங்கே சேர்ந்து பல்துறை சார்ந்த ஒன்றாக ஒருமித்துள்ளது. இது மனிதவினத்தைப் பிளந்து ஆதிக்கம் செலுத்துகின்றது. மனித பிளவுகளை களைவதையே மறுக்கின்றது. யாழ் மேலாதிக்கம் என்பது சமூகத்தின் ஒடுக்குமுறைகளுடன் ஒருங்கே ஒன்றையொன்று சார்ந்து உயிர்வாழ்கின்றது. சாதி ஒழிய வேண்டும் என்றால் யாழ் மேலாதிக்கம் ஒழிய வேண்டும். கிழக்கு மக்கள் மேலான யாழ் மேலாதிக்கம் ஒழிய வேண்டும் என்றால், சாதி ஒழியவேண்டும். இதை எல்லாம் மறுப்பவர்கள் தான் புலியாகவும், புலியெதிர்ப்பாகவும் தமது யாழ் மேலாதிக்கவாதிகளாக அரசியலில் உள்ளனர். இதனால் தான் சமூக ஒடுக்குமுறையை ஒழிப்பதை மறுத்து, புலியெதிர்ப்பு அரசியல் பேசுகின்றனர்.



யாழ் மேலாதிக்கம் என்பது மேட்டுக்குடிகளின் பண்பாடு, கலாச்சாரம், மொழி, சாதியம், பிரதேச மேன்மை, பொருளாதார மேலாண்மை, சாதிய மேலாண்மை, யாழ் ஆணாதிக்க பலம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு அடக்கியாள்கின்றது. மொத்த சமூகத்தையும் அதற்குட்படுத்தி, மற்றயவற்றை இழிவாடி, தம்மை மேன்மையான ஒன்றாக காட்டி மக்களையே அடக்கியாள்வது தான் யாழ் மேலாதிக்கம். மற்றைய மக்களை தம்மையொத்த மக்களாக அங்கீகரிப்பதில்லை.



இந்த மேலாதிக்கம் வெளிப்படும் வடிவம் பலவகைப்பட்டது. அது எப்போதும் ஒற்றைப் பரிணாமத்தில் பிரதிபலிக்காது. அது பன்மை முகத்துடன், மற்றொரு ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவுடன் ஒட்டி நின்றும் அல்லது ஒடுக்கும் பிரிவுடன் சேர்ந்தும் பிரதிபலிக்கும். சேர்.பொன் இராமநாதன் காலத்தில் சிங்கள மேலாதிக்க பிரிவுடன் நின்று தான், யாழ் மேலாதிக்கம் ஆட்டம் போட்டது. தாழ்ந்த சாதிகளை ஒடுக்கவும், முஸ்லீம் மக்களை அடக்கியொடுக்கவும் யாழ் மேலாதிக்கம் சிங்கள மேலாதிக்கவாதிகளுடன் சேர்ந்து முனைந்தது. 1960களில் யாழ் பிரதேசத்தில் நடந்த சாதிய போராட்டங்களின் போது, யாழ் மேலாதிக்கம் சிங்கள பேரினவாதத்துடன் கை கோர்த்துக் கொண்டது. இப்படி யாழ் மேலாதிக்கம் நெகிழ்ச்சி தன்மை கொண்டு, தனது ஆதிக்கத்தை மற்றய சமூகங்களின் மீது தகவமைக்கின்றது.



யாழ் மேலாதிக்கம் தனது இழிவாடலை கிழக்கத்தையான், தீவான், வன்னியான், தொப்பி பிரட்டி, பள்ளன், பறையன், கரையான் என்று பல வழிகளில், தன்னையும் தனது மேன்மையையும் ஊர் அறிய பறைசாற்றுகின்றது. சின்னச்சின்ன விடையங்கள் தொடக்கம் மக்களை இழிவாடி புறந்தள்ளி ஒடுக்குகின்றது. உதாரணமாக கிழக்கைச் சேர்ந்த பெண் யாழ் ஆணைத் திருமணம் செய்யும் போது, பாய்விரித்து வசியம் செய்து ஆண்களை மடக்குபவர்கள் தான் மட்டக்கிளப்பான் என்று யாழ் கண்ணோட்டம், கிழக்கு பெண்களைப் பற்றி ஆணாதிக்க யாழ் மேலாதிக்க சிந்தனை முறை மூலம் இழிவாடுகின்றது. யாழ் அல்லாத மக்கள் கதைக்கும் மொழியைப் பற்றி கொச்சைத்தனமான இழிவாடல்கள் முதல் யாழ் மொழிதான் தூய்மையானது என்ற யாழ் மேலாதிக்க வக்கிரத்தையும் நாம் அன்றாடம் சந்திக்கின்றோம். கருணா விவகாரம் அரங்கில் வந்தபோது, யாழ் மேலாதிக்கம் கிழக்கு மக்களை இழிவாடியாதை நாம், பல தளத்தில் பலவடிவில் சந்தித்தோம். இப்படி ஆயிரக்கணக்கான நடைமுறை சார்ந்த யாழ் மேலாதிக்க இழிவாடல்கள் யாழ் மேலாண்மை சார்ந்து காணப்படுகின்றது.



இதன் மேல் தான் யாழ் தலைமைத்துவம் உருவாகின்றது. இந்த யாழ் மையவாதம் என்பது அரசியல் பொருளாதாரம் மட்டுமின்றி, மொழி பண்பாடு கலாச்சார மேலாண்மையையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த சமூக மேலாண்மை சமூகத்தின் ஆதிகம் பெறுவதால், சமூக அதிகாரம் மீது முழுமையான வேரைக் கொண்டது. இந்த வேர் யாழ் மேலாண்மை சார்ந்து, தன்னை உயர் பண்பாடாக காட்டி மற்றையவற்றை இழிவான பண்பாடாக்குகின்றது. மற்றைய பிரிவில் இருந்து அதிகாரத்துக்கு வரக்கூடியவர்களைக் கூட, இந்த யாழ் மேலாதிக்க பண்பாடு உள்வாங்கி தனக்கு இசைவானவராக மாற்றிவிடுகின்றது.



உதாரணமாக இந்து பார்ப்பனியம் தனது உயர் நிலை சாதியத்தையும் அதன் பண்பாட்டையும் தக்கவைக்க, அடிநிலைச் சாதிகளில் கூட பார்ப்பனிய உணர்வுடைய பண்பாட்டு ஆதிக்க மனப்பான்மையை உருவாக்கி எப்படி இயக்குகின்றதோ அதையொத்தது தான் இதுவும். இது போல் தான் ஆணாதிக்க கருத்தியலும் நடைமுறையும். பெண்ணே ஆணாதிக்கவாதியாக இயங்குவது போல் தான், யாழ் மேலாதிக்க உணர்வும், அதிகாரமும் மற்றைய பிரிவுகள் மீதான ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது.



சமூக மேலாதிக்கம் சார்ந்த பொருளாதாரம், கல்வி என அனைத்தும் யாழ் மேலாண்மை பெற்றதாக மாறிவிடுகின்றது. மற்றையவற்றை ஒடுக்குகின்றது. சிங்கள இனவாதிகள் கொண்டு வந்த தரப்படுத்தலை எடுத்தால், யாழ் மேலாதிக்கம் அதை தனது நலனில் மட்டும் நின்று எதிர்த்தது. எதிர்த்த போது தனது நலன் பாதிக்கப்படுவதை மட்டும் முன்னிலைப்படுத்தியது. முன்னிலைப்படுத்தும்போது மொத்த தமிழ் மக்களின் பெயரில் அதைக் காட்டிக் கொண்டது. அதற்கு தமிழ் மக்கள் சார்பாக முழுப் புள்ளிவிபரத்தையும் கேடாகவே, தனது நோக்கத்துக்கு பயன்படுத்திக் கொண்டது. தரப்படுத்தல் கிழக்கிலும், வன்னியிலும் அதிக வாய்ப்பை அந்த மண்ணில் பிறந்தவாகளுக்கு உருவாக்கிய போதும், அதை யாழ் மேலாதிக்கம் கண்டு கொள்ளவேயில்லை. அதையும் சேர்த்து தமிழ் மக்களின் பெயரால் எதிர்த்தது. அதை திசை திருப்பி தனது யாழ் மேலாதிக்க கருத்துக்கு கிழக்கையும் பலியிட்டது. யாழ் மேலாதிக்கம் பாரம்பரியமாக தான் பெற்று வந்த சலுகைகள் மூலம் ஆதிக்கம் பெற்ற ஒன்றாக இருப்பதால், இயல்பாக ஆளுமை பெற்ற ஒன்றாக மாறி தனது சலுகைகளையும் ஆதிக்கத்தையும் முதன்னிலைப் படுத்துகின்றது. தன்னைச் சுற்றி சகல வளத்தையும் தக்கவைக்கின்றது.



யாழ் மேலாதிக்கம் சிங்கள மேலாதிக்கத்துடன் முரண்படுவது, தனது குறுகிய மேலாதிக்க நலனை தக்கவைக்கத்தான். யாழ் மேலாதிக்கம் சிங்கள மேலாதிக்கம் ஆளுமை பெற்றதாக உருவாக முன்னமே, சிங்கள மக்கள் மீது கூட தனது மேலாதிக்க அதிகாரத்தை செலுத்தியது. சிங்கள மக்களைக் கூட ஒடுக்கியது. வெள்ளைக்காரனுக்கு துணை போனதன் மூலம், முழு இலங்கையிலும் யாழ் மேலாதிக்கம் பலம்பொருந்திய ஒன்றாக ஆட்சிபுரிந்தது. அரசு நிர்வாகம் முழுமையாக யாழ் மேலாதிக்கத்தின் கையில் காணப்பட்டது. இதன் எதிர்வினையில் தான், சிங்கள பேரினவாத மேலாதிக்கம் உருவானது. இதுவே இனமோதலாக மாறியது. இன்று நடப்பது யாழ் மேலாதிக்கத்துக்கும் சிங்களமேலாதிகத்துக்குமான மோதல் தான். இதனால் தான் மக்களை தமது யாழ்மேலாதிக்க நலனுக்கு கிழே போட்டு ஏறி மிதிக்கின்றனர். இதையே தான் புலியெதிர்ப்புக் கும்பலும் செய்கின்றது.



இந்த யாழ் மேலாதிக்கம் தன்னை தக்கவைக்க, தமிழ் இன மேலாதிக்கத்தினுள் தன்னை தகமைத்துக் கொண்டு, மொத்த தமிழ்மக்கள் மீதான யாழ் மேலாதிகத்தை தக்கவைக்கின்றது. புலி பாசிசமும் சரி, புலியெதிர்ப்பு கும்பலும் சரி சமூக ஒடுக்குமுறையை எதிர்த்து போராட மறுக்கின்றது. அதைப் பற்றி பேசுவதைக் கூட மறுக்கின்றது. இதை மாற்றுக் கருத்தாகக் கூட அங்கீகரிப்பதில்லை. சமூக முரண்பாடுகளை பேசுவது, அதைக் களையப் போராடுவதை யாழ் மேலாதிக்கம் தனக்கு எதிரானதாகவே பார்க்கின்றது. மக்கள் இதை எதிர்த்துப் போராடாத வரை, தமிழ் மக்களின் விடிவு என்பது சாத்தியமற்றது.

1 comment:

சுகுணாதிவாகர் said...

சரியான நேரத்தில் நல்ல பதிவு தோழர்.