தமிழ் அரங்கம்

Wednesday, November 14, 2007

உலகமயமாதலில் : நவீன அடிமைத்தனங்களின்றி சுதந்திரமான சொர்க்கமில்லை

பி.இரயாகரன்

14.11.2007

நான் எமுதிய 'உலகமயமாதலில் : நவீன அடிமைத்தனங்களின்றி சுதந்திரமான சொர்க்கமில்லை" என்ற புதிய நூல் கீழைக்காற்றின் ஊடாக வெளிவர உள்ளது. அநேகமாக சென்னை புத்தக கண்காட்சியில் பெறமுடியும். இதை நான் நேற்றுத் தான் எழுதி முடித்திருந்தேன். அந்த நூலின் முன்னுரை.


முன்னுரை


நீ மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவன் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். இதுவே உலகமயமாதல் என்ற பொருளாதாரத்தின் அடிப்படையான இயங்கு விதி. வெளிப்பார்வைக்கு இது உருத்தெரியாத ஒன்றாக உருத்திரிந்து இயங்குகின்றது. தனிமனித சுதந்திரம், தனிமனித தெரிவு, இருப்பதைக் கொண்டு எப்படியும் வாழ்வென்கின்றது. இதுதான், இப்படித்தான் உலகம் என்கின்றது. இதை மாற்ற முடியாது என்கின்றது. இதை இயற்கையானது என்கின்றது. இதையே மனித ஜனநாயகம் என்கின்றது. மனித சுதந்திரம் என்கின்றது. இதன் உள்ளாhந்த சமூக விதியை கற்றுக்கொள்ளாதே என்பதே, இதன் பொருள்.

நவீன அடிமைத்தனம் என்பது, இப்படி நுட்பமானது. அது சிந்தனை முறையில் திணிக்கப்படுகின்றது. மனித அறிவியல் தற்குறித்தனத்தை புகுத்துகின்றது. சில பொருட்கள், பொருட்களைப் பற்றி கதைத்தல், நுகர்த்தல் என்ற எல்லைக்குள், மனித அறிவை மலடாக்கி நவீன அடிமைத்தனத்தை வாழ்வியலாக மாற்றிவிடுகின்றது. சமூகம் தன்னைச் சுற்றியுள்ள இந்த வட்டத்தை விட்டு, சுயமாக வெளியில் வரமுடியாது. அந்த வகையில், நவீன ஊடகவியல் மனிதனை தனது சொந்த சிறையில் பாதுகாப்பாக வைத்துள்ளது.

அது தன்னைத் தானே இழிவுபடுத்துகின்றது. கற்றல், கற்றுக் கொள்ளுதல் என்பது, அறிவற்றவனின் வேலை என்கின்றது. சமூகத்தின் சாரத்தை தெரிந்து கொள்ளுதல், வாழத் தெரியாதவர்களின் முட்டாள்தனம் என்கின்றது. சமூக அவலத்தில் இருந்து சமூகத்தை விடுவிக்க முனைவதும் போராடுவதும், வேலையற்றவர்களின் கண்டுபிடிப்பு என்கின்றது.

இப்படித்தான் நவீன அடிமைத்தனம் புகுத்தப்பட்டுள்ளது. பொருள் உலகில், மனிதன் தானும் ஒரு உயிருள்ள சடப்பொருளாக மாறிவிடுகின்றான். உணர்வுகளும், உணர்ச்சிகளும் வக்கிரமடைந்து விடுகின்றது. மனிதனோ மனித உணர்ச்சியற்ற, மிருக உணர்ச்சி கொண்ட நுகர்வு வெறியனாகி விடுகின்றான். நான் என்ற எல்லைக்குள், அனைத்தையும் தீர்மானிக்கின்றான். சுயநலமோ அவன் மேல் ஏறி உட்காருகின்றது. அனைத்தையும் இதற்குள்ளாக்கி, இதற்குள்ளாகவே பார்த்து சமூகத்தை இழிவாடுகின்றது.

மனித குலத்தின் சொந்த அவலத்தை கண்கொண்டு பார்க்க மறுக்கின்றது. மனிதனுக்கு எதிரான நடத்தையை, தனது வாழ்வுக்கான கூறாக பார்க்கின்றது. இப்படி உலகளவில் மக்களைச் சுரண்டி சூறையாடி வாழ்கின்ற ஒரு வர்க்கத்தின் சொர்க்கம் தான், உலகமயமாதலின் சுபீட்சம். இப்படி உருவாகும் சிலரின் சுபீட்சமோ, சமூக உயிரியான மனிதனுக்கு நரகத்தை உருவாக்குகின்றது.

நவீன மனித அடிமைத்தனங்களே இன்று உலகமயமாகின்றது. இந்த அடிமைத்தனத்தை நாம் எங்கும் எதிலும் காணமுடியும். மனித அடிமைத்தனம் மீது, மனித இழிவுகள் புகுத்தப்படும் வரைமுறையற்ற தன்மை தான் உலகமயமாதலின் வீக்கம்.

உலகளாவில் உழைப்பு உருவாக்கும் சொத்துடமையை, சிலரின் சொத்தாக மாற்றுகின்றனர். அதை பாதுகாக்கும் சிலர்pன் அதிகாரம் வரை நீண்டு விரிந்தது தான், உலகமயமாதலின் சட்ட ஒழுங்கு. இதற்கு உட்பட்டது தான் அனைத்தும். தனிமனித சுதந்திரம் உட்பட ஜனநாயகம் அனைத்தும் இதற்கு கீழ்பட்டது தான். இதை மீறிய (தனிமனித) சுதந்திரம், ஜனநாயகம் என்று எதுவும், இந்த உலகமயமாதலில் கிடையவே கிடையாது.

தனிமனித சுதந்திரம் என்பது ஒரு வர்க்கத்தைச் சார்ந்தது என்பது, சிலரின் வர்க்க நலன்களுடன் தொடர்புடையதாக மாற்றப்பட்டுவிட்டது. முன்பு தனிமனித சுதந்திரம் என்பது ஒரு வர்க்கத்தின் பொது நலன் என்ற மாயை கலைந்து, அதில் உள்ள சிலர்pன் நலன் என்ற எல்லைக்குள் குவிந்துவிட்டது. விரல்விட்டு எண்ணக் கூடிய சிலருக்காக, உலகம் வேகமாக சுருங்கிச் செல்லுகின்றது.

இதனால் கஞ்சிக்கே வழியில்லாத மக்கள் கூட்டத்தின் வயிறோ, மேலும் மேலும் சுருங்கி வருகின்றது. மனித உழைப்பிலான அனைத்து வகை செல்வத்தையும், ஜனநாயகத்தின் பெயரிலும் சுதந்திரத்தின் பெயரிலும் திருடுவதே உலகமயமாதலின் பிழைப்பாகிவிட்டது.

இந்த தனிமனித நலன் சார்ந்த ஒழுக்கக்கேட்டை பீற்றிக் கொள்கின்ற வக்கிரம் தான், பண்பாடாக கலாச்சாரமாக புணர்ந்து விடப்படுகின்றது. இந்த உலகமயமாதலில் கதாநாயகர்களின் நுகர்வு வக்கிரங்களை பார்த்தும், கேட்டும் ரசிக்கின்ற ரசிகர் கூட்டமாக, ஒரு கற்பனை உலகில் மக்களை சஞ்சரிக்க கோருகின்றனர். இப்படி மக்கள் கூட்டத்தை அற்ப உணர்வுக்குள் திணிப்பதையும், அதை உணர்வதையும் தான் தனிமனிதனின் சுதந்திர உணர்வு என்கின்றனர்.

இவை எல்லாம் எதற்காக? யாருடைய நலனுக்காக? நிச்சயமாக உழைத்து வாழ்கின்ற மக்களுக்காக அல்ல. இந்த வகையில் உலக பொருளாதாரம் என்பது, தேசிய பொருளாதாரம் முதல் ஒரு தனி மனிதனின் பொருளாதாரம் வரையிலான, அதன் சுயேட்சையை அனுமதிப்பதில்லை. தனிமனிதனின் சுயேட்சை முதல் ஒரு மக்கள் கூட்டத்தின் சுயேட்சையான எந்த செயற்பாட்டையும், அதன் இருப்பையும் தகர்ப்பது தான் உலகமயமாதலின் உட்சாரம்.

அதாவது யாரெல்லாம் செல்வத்தை வரைமுறையின்றி மக்களைத் திருடிக் குவிக்கின்றனரோ, அதற்கேற்ற பொருளாதாரக் கொள்கையே உலகமயமாதல். இதுவே உலகப் பொருளாதாரம்.

இந்த உலக பொருளாதாரம் என்பது உயர்வான இலாப நோக்கில், அனைத்தையும் சிலரின் தனிச்சொத்தாக்கும் வகையில் திட்டமிட்டப்படுகின்றது. இதற்கு வெளியில் மக்களின் தேவையையும், அவர்களின் அவசியத்தையும் அடிப்படையாக கொண்டு, எவையும் திட்டமிடப்படுவதில்லை. அப்படி எந்த அரசும் கிடையாது. இந்த சமூக அமைப்பில் அதிகாரத்தை பெற விரும்புகின்ற எந்த கட்சியும், எந்த அரசு சாராத அமைப்பிடம் கூட, மக்கள் நலத்திட்டம் எதுவும் கிடையாது.

இவர்களிடம் முதன்மையான (அரசியல்) நோக்கமாக இருப்பது, உலகமயமாதலின் கொழுக்கின்ற வர்க்கத்தின் நலன்களை பாதுகாத்தபடி, தாம் எப்படி பிழைப்பது என்பது தான். இந்த உலகமயமாதல் என்ற சமூக அமைப்பை ஏற்றுக்கொள்ளும் அனைவரினதும் அரசியல் நலன்களும் கூட, இதற்கு உட்பட்டதே. மக்கள் நலன் என்பது, இவர்களின் அரசியல் வேலைத்திட்டத்தில் ஒரு அரசியல் கூறாகக் கூட இருப்பதில்லை.

மக்கள் கூட்டத்தை ஏமாற்ற, மக்களை பிரித்தாள முனைகின்றன. அரசியல் ரீதியாக இவர்கள் வைக்கின்ற கோசங்கள் முழக்கங்கள், மனிதன் தன்னை உணராத வகையில் வைக்கப்படுகின்றது. கடைந்தெடுத்த அரசியல் பொறுக்கிகளாகத்தான், இந்த சமூக அமைப்பினுள் அரசியல் செய்வோரின் நடத்தைகள் உள்ளன.

இந்த உலகமயமாதலில் யாரெல்லாம் பொருட்களை வாங்கி நுகரும் வசதியும் வாய்ப்பும் உள்ளனரோ, அவர்களுக்கு மட்டும் உற்பத்தி என்பது உலகமயமாதல் சந்தை விதியாகும். பொருட்களை வாங்கி நுகர முடியாத வகையில் சுரண்டப்படும் மனித குலத்தையிட்டு, உலகமயமாதல் சமூக அமைப்பு கவலைப்படுவது கிடையாது. இந்த சமூக அமைப்பை ஏற்றுக்கொண்ட கட்சிகள், கோட்பாடுகள் மற்றும் பொதுநல அமைப்புகள் அனைத்தும், இந்த சந்தை விதியை அனுசரித்து இதற்குள் செயல்படுகின்றது. இதனிடம் எந்த மனித முகமும், சமூக நலனும் இருப்பதில்லை. இது உலகமயமாதல் நோக்கில் நிர்வாணமானது.

இந்த உலகமயமாதல் அறிவியல் நோக்கு என்பது, பொருட்களை வாங்க முடியாதவன், பொருள் உலகில் வாழ தகுதியற்றவனாக பார்க்கின்றது. உலகமயமாதல் பொருட்களினாலானது. இலாபமே குறிக்கோளாக கொண்டது. இதற்குள்ளேயே நுகர்வு என்று தீர்மானிக்கின்றது. சுதந்திரம், ஜனநாயகம் என அனைத்தும் இதற்குள் அடிமையானதே. இதை மீறி பீற்றிக்கொள்ள எதுவும் கிடையாது. அற்ப வக்கிரத்தை கொட்டி, பீற்றுவதையே சுதந்திரம் என்கின்றன.

மனித பண்பாடு, கலாச்சாரம், கல்வி, மருத்துவம் என எதுவாக இருந்தாலும், உலகமயமாதல் என்ற தனிமனித நலனைச் சார்ந்த சந்தை விதிக்கு உட்பட்டதே. யாரெல்லாம் பணம் கொடுத்து இவற்றை பெறமுடியுமோ, அவர்களுக்கு மட்டுமான ஒரு உலகம் தான் உலகமயமாதல். இதற்கு வாழ வழியற்றவராக்கப்பட்டவர்கள், இந்த உலகமயமாதலில் வாழ முடியாது.

இப்படி வாழ முடியாதவர்கள் யார்? உலகமயமாதலில் வாழக் கூடியவன் நுகரும் பொருட்களை, அதன் அடிகட்டுமானங்களை உற்பத்தி செய்பவன் தான். இப்படி வாழ முடியாதவனை உற்பத்திசெய்யும் உலகமயமாதல் என்பது, மனித உழைப்பு அதியுயர் இலாப எல்லைக்குள் வரைமுறையின்றி சுரண்டப்படுவதால் உருவாக்கப்படுகின்றது. உலகமயமாதல் உற்பத்தி செய்பவனுக்கும் கொடுக்கும் அற்ப கூலியில், அவன் உற்பத்தி செய்தவற்றை அவனே நுகர முடியாது போகின்றது. உண்மையில் ஒரு வர்க்கத்தின் நுகர்வுக்குரிய பொருளை உற்பத்தி செய்பவன், அதை நுகர முடியாது பிறிதொரு வர்க்கமாகின்றான். இதனால் மனித வாழ்க்கையே வர்க்கப் போராட்டமாகி விடுகின்றது.

No comments: