தமிழ் அரங்கம்

Wednesday, November 28, 2007

குப்பை அள்ளுவதிலும் மோசடி தனியார்மயத்தின் மகிமை

ழே கால் ஆண்டுகளுக்கு சென்னையின் குப்பையை அள்ளுவதற்காக மு.க. ஸ்டாலினால் அழைத்து வரப்பட்ட சிங்கப்பூர் நிறுவனமான ஓனிக்ஸின் ஒப்பந்த காலம் ஆகஸ்ட் 2007இல் முடிவடைகின்றது. அதன் பின்னர் குப்பை அள்ள, நீல் மெட்டல் புராடக்ட்ஸ் எனும் கொலம்பிய குப்பை அள்ளும் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மீண்டும் தனக்கே ஒப்பந்தம் கிடைக்கும் என்ற ஓனிக்ஸின் கனவு தகர்ந்து போனதால், தனது ஒப்பந்தம் முடிவதற்கு 3 வாரங்களுக்கு முன்னரே குப்பை அள்ளுவதை ஓனிக்ஸ் நிறுத்திக் கொண்டது. குப்பைத் தொட்டிகளை மீண்டும் பயன்படுத்த முடியாதபடிக்கு உடைத்தும் போட்டது.

இதன் விளைவாக சென்னையின் நவீன அக்ரகாரமான ராஜா அண்ணாமலைபுரமும் அடையாறும் கலாசேத்ரா காலனியும் குப்பைகளால் நாறியது. இது ""தினமணிக்கு'' பொறுக்க முடியவில்லை. தனியார்மய ஆதரவாளர்களை செல்லமாகக் கடிந்து விட்டு, "மாநகராட்சி என்ன செய்துக் கொண்டிருக்கிறது?' எனப் பிரச்சினையை திசை திருப்பிய ""தினமணி'', ஓனிக்சுக்கு பிரித்து விட்டிருந்த இந்த அக்ரகாரக் குப்பைகளை அவசரமாக அள்ள மாநகராட்சி ஊழியர்களைப் பயன்படுத்தக்கோரி தலையங்கமே எழுதியது. ""இந்து''வும் தன் பங்குக்கு யோசனைகளை மாநகராட்சிக்கு அள்ளி வழங்கியது. ஓனிக்ஸின் இந்த சட்டவிரோதச் செயலுக்கு அதன் தலைமை நிர்வாகிகளைப் பிடித்து வந்து நாலு சாத்து சாத்தி, பெருந்தொகையை அபராதமாக வசூலிப்பதுதானே முறை. ஆனால் சிங்காரச் சென்னையின் மேயரோ, ""இந்து'' முதல் ""தினமணி'' வரை ஓலமிட்டவுடன் ஓனிக்ஸ் குப்பை அள்ள வேண்டிய அந்தப் பகுதிகளுக்கு மாநகராட்சி ஊழியர்களை அனுப்பி வைத்தார்.

"மாநகராட்சி ஊழியர்களுக்கு குப்பை கூட சரிவர அள்ள வராது' எனும் பொதுக்கருத்தை நடுத்தர வர்க்க மண்டைக்குள் திணித்து "எல்லாம் தனியார் கிட்ட போனாதான் சார் நல்லா இருக்கும்' என்று அவர்களைப் பேச வைத்தவையும் இதே ஊடகங்கள்தான்.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது, அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் தரக்கூடாது என்று திமிராகப் பேசியது, நீதித்துறை. அதையே வாந்தி எடுத்தன, ஊடகங்கள். ஆனால், ஓனிக்சு செய்த இந்த அராஜகத்திற்கோ இதே ஊடகங்கள் அவர்களைச் சட்டப்படி தண்டிக்காமல், தனியார் செய்து முடித்திருக்க வேண்டிய வேலையை அரசு ஊழியர்களை வரவழைத்து விரைந்து முடிக்க சொல்கின்றன. எந்தவித தர்க்கத்துக்கும் பொருந்தாத இந்த நியாயத்தை (!) எந்த நாட்டிலாவது காண இயலுமா?

கடந்த 7 ஆண்டுகளிலும் ஓனிக்ஸ், குப்பைகளை டன்னுக்கு ரூ. 650 எனும் கணக்கில் அள்ளியது. அதில் கூட இடிக்கப்பட்ட கட்டடக் கழிவுகளைச் சேர்த்து எடையைக் கூட்டிக் காட்டி நமது வரிப்பணத்தை மாநகராட்சியிடமிருந்து கொள்ளையிட்டுள்ளது.

தனது ஊழியர்களை நின்று ஓய்வு எடுக்கக் கூட இடைவேளை கொடுக்காமல் சக்கையாக உறிஞ்சி மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி வரை லாபமாக ஈட்டிய நிறுவனம்தான் ஓனிக்ஸ். முன்பு மாநகராட்சி குப்பையை அகற்றியபோது 3 பேர்கள் செய்த வேலையை ஓனிக்ஸ் தொழிலாளி ஒருவரே செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். இத்தகைய வேலைப்பளு தாங்க முடியால் வேலையை விட்டு ஓடியவர்கள் மட்டும் 4000 பேர்களாவர். எஞ்சியிருந்த ஊழியர்களும், ஒப்பந்தம் முடிந்து விட்டதாகக் கூறி குப்பையைப்போல வேலையிலிருந்து வீசியெறியப்பட்டுள்ளனர்.

ஆனால், ""ஓனிக்ஸ் சென்னைக்கு வந்தபின்னர்தான் குப்பைகூளங்கள் சிறப்பாக அள்ளப்படுகின்றன. அனைவருக்கும் அழகான சீருடை; கை நிறைய சம்பளம்; அனைத்து சாதியினரும் இந்தத் தொழில் செய்ய வந்தனர். இதனால் சாதி ஒழிந்திருக்கிறது'' என்றெல்லாம் புகழ்கிறது வீரமணியின் "உண்மை' ஏடு.

பூலே, பெரியார், அம்பேத்கர் ஆகியோர் இடையறாத போராட்டங்கள் மூலம் சாதியத்தை ஒழிக்க வழிகாட்டும்போது சாதி ஒழிப்பை "தனியார்மயம்' சாதிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறது "உண்மை'ஏடு.

நாறுவது தனியார்மயம் மட்டுமல்ல; ""பகுத்தறிவு'', ""சமூக நீதி'' வேடமணிந்த பிழைப்புவாதிகளின் யோக்கியதையும்தான்!

· கவி

No comments: