Thursday, January 24, 2008

வெள்ளை வேட்டி அரசியல்

பி.இரயாகரன்
23.01.2008

ப்படி தமது அரசியல் என்னவென்று சொல்லாது வித்தை காட்டுபவர்கள் தேசம். புலி, புலியெதிர்ப்பு அரசியலில் மிதப்பவர்கள். அரசியல் ரீதியாக எதையும் தெளிவாக முன் வைக்காதவர்கள். மற்றவன் தனிநபர் தாக்குதல் செய்வதாக கூறியபடி, எந்த அரசியலுமின்றி தனிநபர் தாக்குதலை நடாத்துபவர்கள். தேசத்தினதும், அதில் இயங்கும் வெள்ளைவேட்டி தெருப் பொறுக்கிகளினதும், அரசியல் இதுவே ஆகி விடுகின்றது.

எல்லா பொறுக்கிகளைப் போலவும் மரணித்தவரை வைத்து, அரசியல் செய்ய முனைகின்றது. தேசம் கூறுகின்றது 'தனக்குள்ளேயே முரண்பட்டு சமூகத்தை நிந்தித்து திட்டித் தீர்த்து தன்னையொரு இடதுசாரி புத்திஜீவி என அவர் நிரூபிக்க முயல்கின்றார். அவர் மரணித்தவர்களையும் விட்டுவைப்பதில்லை." என்கின்றார். நாம் சமூகத்தை திட்டி தீர்க்கின்றோமாம்! சரி, எங்கே? எப்போது? எப்படி? அதை எடுத்து வைக்க வேண்டியது தானே. சமூகத்தை அணிதிரட்ட முடியாது என்று கூறி, இலங்கை இந்திய அரசுகளுடனும், ஏகாதிபத்தியங்களுடனும் சலசலக்கும் நீங்கள், சமூகம் பற்றிக் கதைப்பதே அரசியல் வேடிக்கை தான்.

இவர்கள் சமூகத்தை என்று கூறுவது எதை? புலியெதிர்ப்பு கும்பலைத் தான். மக்களுக்கு எதிராக, இலங்கை இந்திய முதல் ஏகாதிபத்தியம் வரை கூலிக்கு மாரடிக்கும் ஜாம்பவான்களைத் தான் சமூகம் என்கின்றனர். இவர்களின் அரசியல் வரையறைப்படி, புலியெதிர்ப்பில் எந்த வர்க்க முரண்பாடும், சமூக முரண்பாடுகளும் பிரதிபலிப்பதில்லை. நாங்கள் எல்லாம் ஒன்று தான் என்ற போலி மூகமுடியை அணிந்துகொண்டு, எதிர்புரட்சிக்கு முற்போக்கு முலாம் பூசுவது தான், இதன் பின்னுள்ள அரசியல். புலியை எதிர்த்தால் அது முற்போக்கு. அதை நாம் கேள்விக்குள்ளாகினால் மனநோய், தனிநபர் தாக்குதல் என்கின்றனர்.

இப்படிக் கூறி தேசம் முதற்கொண்டு தமது அரசியலை மூடிமறைக்கின்றனர். தமது அரசியல் பின்புலம் மக்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதில், இப்படி அதிதமான அக்கறை. இதனால் எமது எழுத்து விளங்குவதில்லையாம்! யாரும் வாசிப்பதில்லையாம்! எத்தனை பேர் உள்ளனராம்!

இப்படி கோயபல்ஸ் பாணியில் விடாக்கண்டர் போல் மீளமீளப் புலம்புகின்றனர். இவை எல்லாம் எதற்காக கூறுகின்றனர். உங்கள் அரசியல் என்ன? எப்படி மக்களின் விடுதலைக்கு வழி சொல்லுகின்றீர்கள் என்று நாம் கேள்வியை எழுப்பியதால் கூறுகின்றனர். தம்மை எவரும் இவ்வாறு அம்பலப்படுத்தக் கூடாது என்பதற்காகத் தான் இப்படி அவதூறு செய்கின்றனர்.

நீங்கள் கூறுவது போல் நாம் 'சமூகத்தை நிந்தித்து திட்டித் தீர்த்து" அரசியல் செய்வதாக எடுப்போம். அந்த சமூகத்தை தீட்டித் தீர்ப்பதாக கூறும் நீங்கள், எப்படி சமூகத்துடன் இணைந்து நிற்கின்றீர்கள். அரசியல் ரீதியாக எப்படி சமூகத்தின் அரசியலை பேசுகின்றீர்கள்? அதை முதலில் வையுங்கள். அதை வைக்க, உங்கள் அரசியலால் முடியாது. ஆகையால் தான், எம்மை தாறுமாறாக அவதூறு செய்து திட்டுகின்றீர்கள் அல்லவா!

அடுத்து என்ன சொல்லுகின்றீர்கள். 'மரணித்தவர்களையும் விட்டுவைப்பதில்லை." என்கின்றீர்கள். 'பராவின் மரணம் தொடர்பான இரயாகரனின் கட்டுரையையும் அந்நண்பர் தந்து அவற்றுக்குப் பதிலளிக்கும்படி கேட்டுக் கொண்டார். முதலில் பதிலளிப்பதில்லை என்ற எண்ணமே ஏற்பட்டது." இப்படி வேடிக்கை காட்டுகின்றார். பின் '.. நீங்கள் பராவுக்கு மட்டும் செய்யவில்லை சபாலிங்கத்திற்கும் செய்துள்ளீர்கள் உங்கள் உறவினரான கலைச்செல்வனிற்கும் செய்துள்ளீர்கள்" என்று நண்பரின் மொழியில் கூறுகின்றார். என்ன செய்ய சொல்கின்றார். நாங்கள் மரணத்தை வைத்து அரசியல் செய்வோம், ஆனால் அதை கண்டு கொள்ளக் கூடாது என்கின்றார். தாம் செய்யும் அரசியலோ புனிதமானது. அதை விமர்சிக்க கூடாது என்கின்றார்.

நீங்கள் முரண்பாடாக கூறுவதை பாருங்கள். 'மரணம் என்பது நிரந்தரமான பிரிவு. ஈடுசெய்ய முடியாத இழப்பு. இது வெறுமனே இசங்களுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அதற்கும் அப்பால் மனித நேயத்துடன் சம்பந்தமானது." என்கின்றீர்கள். இதை உங்களால் காப்பாற்ற முடிகின்றதா? மரணத்தை அரசியலாக்கி விலை பேசுவது யார் ? இலாபம் தேடுவது யார்?. நீங்கள் கூறியவாறே மரணத்தை அரசியல் அறுவடைக்காக இல்லாத எல்லைக்குள் அணுகினால், அந்த துயரத்தை அப்படிப் பகிர்ந்து கொண்டால், நாம் சொல்வதற்கும் எதுவுமில்லை. அதே துயரமும், மனக்கவலையும் எமக்கும் உண்டு.

இதைவிடுத்து மரணத்தின் துயரத்தை அரசியலாக்கினால், அதை அரசியலாக பயன்படுத்தினால், அந்த அரசியல் மீது எமக்கு விமர்சனம் உண்டு. உண்மையில் இங்கு துயரம் பகிரப்படுவதில்லை, மாறாக கீழ்த்தரமான அரசியல் செய்யப்படுகின்றது. அந்த போலித்தனத்தை, அந்த போக்கிலித் தனத்தை, அந்த இழிவான கேடுகெட்ட அரசியலை நாம் அம்பலப்படுத்துகின்றோம்.

மரணத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்யவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? உயிருடன் வாழ்ந்த போது முதுகுக்கு பின்னால் மரணித்தவரை தீட்டித் தீர்த்தவர்கள், மரணத்தின் பின்னால் கட்டியழுது அங்கு அரசியல் கோமாளி நாடகங்கள் ஆடவில்லை என்று உங்களால் சொல்ல முடியமா? இப்படி கேடுகெட்டவர்கள் மரணத்தை அரசியல் ஆக்கினால், நாம் அதன் மீது கருத்துக் கூறுவோம்.

நாம் எந்தவிதத்திலும் இந்த அரசியலுடன் சம்பந்தப்படாத, மரணம் அடைந்த குடும்பத்தினரின், உறவினர்களின், நண்பர்களின் துயரத்தை என்றும் கொச்சைப்படுத்தியது கிடையாது. அவர்களின் துயரம் மலையளவானது. பராவின் மரண நிகழ்வில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்து இருப்பின், நாம் கலந்து கொண்டு இருப்போம். ஆனால் அரசியல் செய்வதற்காகவல்ல.

மரணங்கள் சொல்லும் செய்தி வலிமையானது. அதன் துயரமும், கவலைகளும் மனித இனத்துக்கு பொதுவானது. அப்படி நாங்களும், நீங்களும் கலந்து கொள்ளும் வரை, எமக்கு இதையிட்டு விமர்சனம் கிடையாது.

மாறாக மரணத்தை அரசியலாக்கினால், எரிகின்ற வீட்டில் அள்ளியது இலாபம் என அரசியல் ஆதாயம் தேடினால் அதன் மீது விமர்சனம் உண்டு. பொது வாழ்வில் ஈடுபடும் நபரின் நடத்தைகள், அவரின் அரசியல், அதை வைத்து பிழைப்பு நடத்துகின்ற அரசியல் பொறுக்கிகள் மீதான விமர்சனம், இப்படி தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது.

'மரணித்தவர்களையும் விட்டுவைப்பதில்லை." என்று கூறி, சபாலிங்கத்தை, கலைச்செல்வனை மட்டும் நாம் விமர்சிக்கவில்லை. நாம் ராஜீவ், சிவராம், பாலசிங்கம், உமாகாந்தன், புஸ்பராஜா, டயானா, அன்னை தெரேசா, அரபாத் என்ற நீண்ட, எல்லையில், மரணத்தின் பின்னான விமர்சனத்தை செய்துள்ளோம். அப்படியிருக்க சபாலிங்கத்தையும், கலைச்செல்வனையும், பராவையும் சொல்லி, உங்கள் நண்பருடன் சேர்ந்து பிழைப்புவாத பொறுக்கி அரசியலா செய்கின்றீர்கள். பொது வாழ்வின் மீதான விமர்சனமும், சாதாரண மனிதர்கள் மீதான விமர்சனமும் ஒன்றல்ல.

அந்த தாய் பற்றி எனது கருத்து, அப்படிப்பட்டதே. ஒரு சாதாரண பெண் என்ற குறிப்பிட்டுத்தான், அவரின் உயர்வான விதிவிலக்கான சமூகம் சார்ந்த, பொதுவில் மற்றவர்கள் செய்ய முடியாத விடையத்தை அடிப்படையாக கொண்டு அஞ்சலிக் கட்டுரையாக்கினேன். ஒரு சாதாரண பெண் என்பதன் ஊடாக, இந்த சமூகத்தில் உள்ள அனைத்து சமூக குறைபாடுகளின் ஒரு பகுதியை அவர்களும் கொண்டு இருந்தனர். அதுவே சமூக போக்காக காணப்படுகின்றது. எந்த சாதாரண மனிதர்களும் திட்டமிட்டு, உங்களைப் போல் பிழைப்புவாத அரசியலையும் செய்தது கிடையாது. மரணத்தை அப்படி குறுக்கி, அரசியல் உள்நோக்கத்துடன் அணுகுவது கிடையாது. அவர்கள் முன், அதுவோ துயரம் தரும் மரணம், அதாவது மரணம் தான்.

இதை விடுத்து பிணத்தை வைத்து பணம் சம்பாதிப்பது, மக்கள் விரோத அரசியல் செய்வது, எமது இலங்கை அரசியலில் பொதுவான போக்காகிவிட்டது. புலி மட்டுமல்ல, புலியெதிர்ப்பும் அப்படித்தான். ஏனென்றால் எந்த மக்கள் அரசியலும் இவர்களிடம் கிடையாது. பிணத்தை வைத்து, மக்கள் விரோத அரசியல் செய்வதே, இவர்களின் அரசியல் பிழைப்பாகிவிடுகின்றது.

இதனால் தான், விமர்சனம் என்பது இதன் மீது தவிர்க்க முடியாது. ஒரு மரணம், அரசியல் நிகழ்வாக மாற்றப்படும் போது, அது விமர்சனத்தை உள்ளடக்கியது தான். இது எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பம் மீதானதல்ல. மாறாக அரசியல் பொறுக்கிகள் மீதானதே.

இப்படி விமர்சனம் செய்தால் 'உங்கள் உடற்பேழையைத் தாங்கிச் செல்லக் கூட ஒருவரும் இருக்க மாட்டார்கள்" என்கின்றீர்கள். போலிகளும், பொறுக்கிகளும் எனது பிணத்தை வைத்து அரசியல் செய்வதைவிட, அனாதையாக சாவதே மேலானது. அரசியல் நேர்மையற்றவர்கள், சமூக அக்கறையற்றவர்கள், பொதுவாழ்வை கேடாக பயன்படுத்துபவர்களா! எனது பிணத்தை தூக்க வேண்டும். அதையா நான் அரசியல் இலட்சியமாக எதிர்பார்க்கின்றேன். அதை நான் வெறுக்கின்றேன். அதைத் தடுக்கவே, மரணத்தின் பின்பும் எனது கருத்துப் போராடும்.

நாய் கடித்து குதறித் தின்றால் கூட, அது மேன்மையானது. பொறுக்கிகளை விட நாய் மேலானது. முகம் தெரியாத வகையில் எத்தனை மனிதர்களைக் கொன்றவர்கள், அதை ஆதரித்தவர்கள், அந்த அரசியலை இன்றும் கொண்டுள்ளவர்கள், அனாதைப் பிணங்களை விதைக்கும் அரசியலைக் கொண்டவர்கள், பிணங்களை வைத்து அரசியல் செய்கின்றவர்களா, எனது பிணத்தை தூக்க வேண்டும். சீ, வெட்கக் கேடு.

இதைவிட அனாதை மரணம் மேலானது. இதற்காக அரசியல் சமரசம் செய்பவர்கள் அல்ல. அது மூடிமறைக்கப்பட்ட பிழைப்புவாதிகளின் வெள்ளை வேட்டி அரசியல்.


மற்றொரு தலையங்கத்தில் தொடரும்.

1 comment:

Unknown said...

தேசம் ரயாகரனின் மரணம்வரை சென்று எழுதவேண்டிய தேவையை ஒரு அரசியல் விவாதமாக அல்லது கருத்துக்களை எதிர்கொள்ளும் வலிமையாக கொள்ளவா முடியும். இதை தனிநபர் தாக்குதலுக்கு வெளியில் வைத்துப் புரிந்துகொள்ளக் கேட்டால் அதைவிட பலவீனமான கண்ணி இருக்குமென எனக்குப் படவும் இல்லை. „உன்ரை பிணத்தைத் தூக்குறதுக்கு ஒரு நாய்கூட இருக்காது“ என்ற தெருப்பாசையை நல்ல தமிழில் எழுதினால் ஒன்றும் துலங்கித் தெரிந்துவிடாது.

எவருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களில்லை என்பது உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமானதா என்ன?. அந்த விமர்சனங்களில் ஒருவருக்கு ஏற்படும் முரண்பாடு அல்லது உடன்பாடின்மையை அந்த மரணத்தைக் கொச்சைப்படுத்துவதாக அடையாளம் காணும் மனநிலை எமக்கெல்லாம் தோன்றுவது ஒன்றும் அதிசயமான விசயமுமல்ல. ஏனெனில் மரணித்தவர்களை கேள்விக்கிடமின்றி கொண்டாடும் மனநிலை எமது கலாச்சாரம் கற்றுத்தந்த விசயம். குறைகளைச் சொல்லிவிட்டால் கரிப+சுகிறார்கள் என்பது எமது வழமை. அஞ்சலி நிகழ்வுகள் ஒவ்வொரு வருடத்துக்கும் ஒவ்வொரு அடைமொழிகளுடன் மரணித்தவரை வளரச்செய்வதுவரை „வல்லமை“ படைத்தது நாம் மரணத்தைக் கொண்டாடும் விதம்.

புலி புலியெதிர்ப்பு என்ற இருமைப் போக்குகளுக்குள் ஈழத்தமிழர்களை அடக்கும் கோணங்கித்தனமே தோழர் பராவின் மரணத்தையும் மோப்பமிட்டது. அதற்கு தோழர் பராவின் அரசியல் எவ்வாறு இடம்விட்டது என்பதையும் அதைப் பயன்படுத்தியவர்கள் சம்பந்தப்பட்டும் ரயாகரனின் விமர்சனத்தை தேசம் உருப்படியாக எதிர்கொண்டிருக்க வேண்டும். எனவே அதைச் செய்யாமல் தடுத்த தேசத்தின் அரசியல்மீது ரயாகரனின் விமர்சனம் வளர்வது தவிர்க்கமுடியாததாகிறது. அது அவசியமும்கூட. இதை தேசம் உருப்படியான விவாதத்தினூடு எதிர்கொள்வது நல்லது.

ஒரு மரணம் அரசியல் பாதைக்குள் நிகழ்கிறபோது அது தரும் வலி தனிநபர் உறவுமுறையைத் தாண்டி அரசியல் உறவுமுறைகளுக்குள்ளும் ஊடுருவுகின்றது. தனிப்பட்ட ரீதியில் தோழர் பராவுடன் உறவுமுறை கொள்ளாத பலரும்கூட அஞ்சலிச் செய்தியை அனுப்பியதை இங்குவைத்துத்தான் புரிந்துகொள்ள முடியும். அதனால் மரணித்தவர்கள் பற்றிய விமர்சனத்தை ரயாகரன் வைப்பதை மரணித்தவனையும் விட்டுவைப்பதில்லை என்று தேசம் எழுதுவது பொதுப்புத்தி வகைப்பட்டது. ரயாகரனின் விமர்சனம் முழுவதோடு நாமெல்லாம் உடன்படுகிறோம் என்றோ அல்லது ரயாகரனுக்கு வக்காலத்து வாங்குகிறோம் என்றோ இந்தக் குறிப்பைக்கூட மொழிபெயர்க்கும் மனோநிலையைத் தேசம் கடந்துவிடவில்லை என்பதை தேசத்தின் கட்டுரையும் அதன் அங்கீகரிக்கப்பட்ட பின்னூட்டங்களும் காட்டிநிற்கிறது.

ரயாகரனை ஒரு மனநோயாளியாகச் சித்தரிக்கும் அளவிற்கு ரயாகரனின் மரணம்வரை வம்பளக்கும் அளவிற்கு தேசத்தின் பக்கத்தில் இடமிருக்கிறது என்றால் தனிநபர் தாக்குதல்கள் வேண்டாம் என்று அதில் வந்த கட்டுரையையே அது கேலிசெய்வதாகிறது. இந்தவகை கோணங்கித்தனமான விமர்சனக் கலாச்சாரம் தேவைதானா? ரயாகரனின் மொழிப் பிரயோகங்கள் பற்றிய அல்லது கருத்துக்கள் பற்றிய உடன்பாடின்மையை எதிர்கொள்ள தேசத்துக்கு இப்படியொரு தேசக் கட்டுரை ஒருபோதுமே உதவப்போவதில்லை. இது ஒரு வடிகால்வெட்டும் அவதிதான், வேறல்ல!.
-ரவி