தமிழ் அரங்கம்

Saturday, March 8, 2008

பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது.

பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது.

ரிநிகர் 112 113 இல், ராதிகா குமாரசாமியின் "பெண்புலிகளும் பெண்விடுதலைப் பிரச்சினைகளும்" என்ற தலைப்பிலான தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. இந்தகருத்துக்களை மறுதலித்துக் பல கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன.

ராதிகா குமாரசாமியின் அடிப்படை அரசியலைக் கேள்விக்குட்படுத்தி விமர்சித்து அம்பலப்படுத்துவதற்குப் பதில் பல குறைபாட்டுடன், தமிழ் மக்களின் போராடும் உரிமையின் பெயரால் எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் பல வெளிவந்தன. நான் இக்கட்டுரை மீது, தொடர்ச்சியாக இரு கட்டுரைகள் எழுதியிருந்தபோதும், சரிநிகர் அவற்றை இருட்டடிப்புச் செய்திருந்தது. ராதிகா குமாரசாமியின் அடிப்படை அரசியலைக் கேள்விக்குட்படுத்துவதன் மூலம் நாம் இன்றுள்ள பூர்சுவாப் பெண்ணிலைவாத பிரமிப்புக்களை உடைத்தெறிய முடியும்.

"எந்த வடிவத்திலான முரண்பாட்டையும் தீர்ப்பதற்குப் பதிலாக பலாத்காரத்தை வழி முறையாகப் பயன்படுத்துவதற்கு நான் உடன்பாடில்லை" என ராதிகா குமாரசாமி திட்டவட்டமாக தனது அரசியல் எது என்பதைத் தெளிவாக்குகின்றார். "துயரம் மலையளவு தான் ஆனால் மௌனத்தைக் காத்தல் சாத்தியமில்லை" எனப் பதில் அளித்த கட்டுரை வரிகள் முந்திய கூற்றுக்கு எதிராக அமைகின்ற போதே, வர்க்க முரண்பாட்டில் ஒரு பிரிவுக்காக வாதிடுவதை, பாதுகாப்பதை காட்டுகின்றது. இன்றைய உலகமயமாதல் சார்ந்த ஆணாதிக்க இனவாதத்தை வன்முறை மூலம் தகர்ப்பதை எதிர்த்து நிற்கும் அதே நேரம், இதை அம்பலப்படுத்தி போராடும் போது மௌனத்தை காத்தல் முடியாது உள்ளது என மீள் வன்முறையை பிரகடனம் செய்கின்றார். முதலாளித்துவ எல்லா பாராளுமன்ற ஜனநாயகவாதிகளும், எதை தமது அரசியல் அகராதியில் செய்கின்றனரோ, அதையே இவரும் அசகுபிசகாது வெளிப்படுத்துகின்றார். போராட்டம் அற்ற ஜனநாயகத்தை பாதுகாக்க, சுரண்டும் வர்க்க அமைதி, சமாதானம், வன்முறையற்ற பிரகடனம் எல்லாம் பேசுகின்றனர். ஆனால் சுரண்டல் வடிவம் கேள்விக்குள்ளாகும் போது சமாதானம், ஜனநாயகம், வன்முறை என எல்லா பிரகடனத்தையும் மறுத்து, எதிர் நிலையில் வன்முறையை பரிசளிக்கின்றனர். இது மனித வரலாற்றின் வர்க்க வரலாறாகும.

ஏனோ தெரியாது, இவர் ஜக்கியநாடுகள் சபையில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான விஷேச அறிக்கையாளராக இருப்பதோ என்னவோ, அனைத்து வன்முறைக்கும் எதிராக, குறிப்பாக பெண்களுக்கு எதிராகத் தொடரும் வன்முறைக்கு உலகளவில் தலைமை தாங்கும் ஜக்கியநாடுகள் சபையைப் பாதுகாக்கத்தான் வன்முறையை நிராகரிக்கின்றார். ஈராக்குக்கு எதிரான மனிதப்படுகொலை வன்முறையில் ஜ.நா ஈடுபட்டதன் மூலம், 15 இலட்சத்துக்கு மேற்பட்ட ஏழை மக்கள் இன்று வரை இறந்துள்ளதுடன், தொடர்ந்தும் இறந்து வருகின்றனர். சேர்பியாவில் குண்டு மழையில் மக்கள் குடியிருப்புகள் மற்றும் அனைத்து பொருளாதார அடிப்படைகளையும் தகர்த்த போதும், அது பற்றி மௌனம் சாதித்து அங்கீகரித்தபடி, அதே ஜ.நாவின் கைக்கூலியாக, கூலிக்கு மாரடித்து அவ் வன்முறைக்கு பாதுகாக்க வெட்கப்படவில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறை, தனிச்சொத்துரிமை வடிவில் சுரண்டல் அமைப்பின் விளைவாகும். ஜக்கிய நாட்டுச்சபை சுரண்டல் அமைப்பின் ஜனநாயக காவல்நாயாக திகழும் எல்லா நிலையிலும், பெண்களுக்கு எதிரான வன்முறையின் காவலனாக இருப்பது நிர்வாணமானது. வன்முறை பற்றிய அறிக்கைகள் சுரண்டல் அமைப்பை பாதுகாக்க, தனிமனிதனை குற்றவாளியாக்கும், இந்த சுரண்டல் அமைப்பினை நியாயப்படுத்த, எடுக்கும் புள்ளிவிபரத் தொகுப்புக்கே பயன்படுகின்றது.

ஆணாதிக்கம், சாதி ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை, நிற ஒடுக்குமுறை சுரண்டல் என அனைத்தும் வன்முறைசார்ந்ததே. உலகத்தின் அனைத்து இயக்கமும் வன்முறைக்கு ஊடாக கட்டியமைக்கப்பட்டுள்ளது. பொதுவில் அமைதி என்பது இருக்கும் வன்முறையைப் பாதுகாக்கும் நியாயப்படுத்தும் கோட்பாடுகளாகும்.. சமுதாயத்தில் இருக்கும் முரண்பாடுகளை தீர்க்க வன்முறை அரசியல் அவசியமில்லை என அடித்துக் கூறும் ராதிகா வர்க்க வன்முறையாளனின் காலில் விழுந்து கெஞ்சக் கோருகிறார்.

ஒரு முதலாளியிடம் கூலியைக் கெஞ்சியும் காலைப்பிடித்தும் கோரக் கோருகின்றார். சிங்கள இனவாதிகளிடம் தமிழீழ மக்கள் பணிந்து நின்று கேட்கக் கோருகின்றார். ஆண்களிடம் பெண்கள் அமைதியாகத் தலைகுனிந்தபடி கெஞ்சக் கோருகின்றார். இதுதான் ஜக்கிய நாட்டுச்சபை அவருக்கூடாக வழிகாட்டும் பெண்ணிய வழியாகும். அதாவது ஒரு பெண்ணை ஆண் பாலியல் வன்முறைக்குட்படுத்தும் போது எதிர்த்துப் போராடாது அமைதியாக வன்முறையை ஏற்று, பின் பேரம் பேசி, அதே ஆணைத் திருமணம் செய்ய வேண்டும் என்கிறார். இதுதான் பலாத்காரத்திற்கு உடன்பாடு இல்லை என்று கூறியபடி செய்ய நினைப்பதாகும்.

இன்று நடைபெறும் உலகமயமாதல் சூறையாடலை கைக்கு விலங்கிட்டபடி மௌனமாக அமைதியாக ஏற்றபடி, மூன்றாம் உலக நாடுகளுக்கு அதிக பிச்சையாக நிதி உதவி வழங்க கோரி இரங்கி கோரவேண்டும். இதுதான் ராதிகாவின் அரசியல் அகராதி. ஏகாதிபத்திய நவகாலனித்துவ ஆக்கிரமிப்பை எதிர்த்து வன்முறை வேண்டாம் என்கிறார். மாறாக, மாற்று வழி பொலிசாக நின்று சேவை செய்ய கோருகின்றார். இவர்களின் நோக்கமும் பூர்சுவாப் பெண்ணிலைவாதம் பற்றி புதிய உலகமயமாதலைப்பற்றியும் புரிந்து, அதற்கு இவர்கள் சார்பாகக் கதைக்கப் பழகவேண்டும் என்கிறார். அது சரி பெண்கள் காலம் காலமாக ஆயுதம் ஏந்தி போராடவில்லை என்பது, ஆணாதிக்கம் மட்டுமின்றி மதக்கோட்பாடுகளின் தொடர்ச்சியும் ஆகும். மனித சமுகம் காட்டுமிராண்டிச் சமுகமாக இருந்த போது, பெண்கள் தமது உணவுக்கும் தமது குழுவைப் பாதுகாப்பதற்கும் ஆயுதம் ஏந்தி ஆண்களைப்போல் போராடினார்கள் என்பது உண்மையானது என, எல்லாப் பெண்ணிலைவாதிகளுக்கும் தெரியும். ஆனால் இவர்களுக்கு அவை கசப்பானவை.

சங்க இலக்கியத்தில் ஆதாராமாய் கேட்பதும் பார்ப்பனிய இந்து மதத் தலைவர்களிடம் கேட்பதும் ஒன்றே. ஆணுக்குப் பெண் அடிமையான பின் தான் சங்க இலக்கியம் உருவானது. சங்க இலக்கியத்துக்கு முந்திய தொல்காப்பியத்தில் வெட்சித் திணையில் துறைகளில் ஒன்று கொற்றவை நிலை (தொல்: நூ.59) இல் மன்னன் போருக்குப் போகும் முன், பெண் தெய்வமான கொற்றவைக்கு முன் வாள், வேல் முதலியவற்றை வைத்து வணங்கிச் செல்வதன் மூலம், பெண்ணைத் தலைவியாக கொண்டு மதித்து வழிபடும் முறை பழைய சமுதாயத்தின் எச்சமாகும். ரிக் வேதத்தில் "இரவிலே நடந்த போரிலே கேலனுடைய மனைவியான விச்பலையின் கால், பறவையின் சிறகைப்போல் துண்டிக்கப்பட்டது. உடனே நீங்கள் அவள் நடந்து செல்ல அவளுக்கு இரும்புக் காலை தந்தீர்கள். அந்தப் போர் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைப் பற்றுவதற்காக நடந்தது."122 பெண் யுத்தத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, அதன் நோக்கம் மற்றும் பெண் தன்னை எப்படி பாதுகாத்தாள் என்பதை எல்லாம் இது காட்டுகின்றது. "சந்திரகுப்த மவுரியரின் காலத்தில் (கி.மு 323-300) பெண்கள் படையிலும் பணியாற்றி வந்தனர். அவர் வேட்டைக்குப் போகின்றபோது பெண்கள் குழு ஒன்று அவருடைய மெய்க்காப்பாளராக"133 தேர்களிலும், குதிரைகளிலும், யானைகளிலும் ஆயுதம் ஏந்திச் சென்றனர். அன்றைய பாண்டிய நாட்டை பெண்கள் ஆண்டனர். வன்னிப்பகுதியில் நடைபெறும் "நாச்சிமார் கோயில் வழிபாடுகள்,"132 பெண்கள் தலைமையில் ஒல்லாந்தரோடு போராடி மடிந்த ஏழு பெண்களின் நினைவாக நடப்பது, பெண்களின் போராட்ட வரலாற்றையும், மக்களின் பங்குபற்றலையும் காட்டுகின்றது. ஆனால் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யப் புறப்பட்ட கைக்கூலிகள் வரலாற்று ஆதாரம் இல்லை என்று கூறி, பெண்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்துவது பெண்ணியமாகின்ற போதே, ஆணாதிக்கத்தின் ஆழமான பெண்ணிய திரிபுகளையும் புரிந்து கொள்ளமுடியும்.

சங்க இலக்கியத்திற்கு சற்று முன் சென்றால், பெண் ஆயுதம் ஏந்திப் போராடியதும் தலைமை தாங்கியதும் ஆவணமாகவுள்ளது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பெண் யுத்தத்தில் ஈடுபட்டதை உள்ளடக்கிய செங்கலை நூல் திரட்டு பெண்ணின் நிலையைத் தெளிவாக்கியுள்ளது. இந்தச் செங்கல் கல் வெட்டை இப்படியே தொகுத்த நூல் தான் "சிந்துமுதல் கங்கைவரை" என்ற ராகுல்ஜி நூலைப் படித்தால் ஓரளவுக்கு உண்மையான விபரங்களைப் பெறலாம். இது போல் அல்லியின் கதை போன்ற பல பெண்களின் வீரவரலாறுகள் எமக்கு முன்னுள்ளது.

பெண்கள் சுதந்திரமாக வாழ்ந்ததும் தனது சமுகத்தை பாதுகாக்கப் போராடிய மனித வரலாற்றை, ஆதாரங்களின்றி பெண்விடுதலையை நோக்கிச் சிந்திப்பவர்களுக்கு கூட இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில், மனித வரலாற்றுத் தொடக்கம் ஆண் பெண்ணை அடக்கியதல்ல. ஆண் சமுதாயத்தில் பெண் அடங்கி அவன் தயவில் வாழ்ந்தவளும் அல்ல. இருவரும் சமுகமாக பெண் உள்ளிட்ட வாழ்வுப் போராட்டமாகவே இருந்துள்ளது. ஏன் மனிதகுல வரலாற்றில் பெண்கள் தான் போராட்டத்திற்கு தலைமைதாங்கி போராடிய வரலாறும், ஒரு சரியான பெண்ணிலைவாதிக்கு தெரிந்துதான் இருக்கும். ஆனால், ராதிகா போன்றோருக்கு தமது ஆணாதிக்க தலைமையைப் பாதுகாக்க, பெண்ணின் உரிமையை பறித்ததைக் கோட்பாட்டுத்தளத்தில் கொச்சைப்படுத்துவது அவசியமாகவுள்ளது.

"இரண்டாவதாக புலிகளின் ஆண் பெண், ஒருமை நிலைத்தன்மையைக் குறிப்பிடலாம். அதாவது ஆணையும் பெண்ணையும் ஒரே விதமாக செயலாற்றுவித்தல். இது பெண்மைக்கான சாவுமணி என்று கூறலாம்'' என ராதிகா கூறுகின்றார். ஆண் பெண் சமத்துவத்தை மறுக்கும் போது புலிகளின் மீதான செயற்தளத்தில் மட்டுமல்ல, எல்லாத் தளத்திலும் இது கருக்கொள்கிறது. நாம் புலியின் அரசியல் போராட்டவடிவம், ஒழுங்கமைப்பை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். ஆனால், பெண் ஆண் இடையில் உள்ள இடைவெளி குறைக்கப்படும் போது, முரணற்ற ஜனநாயக நிலையில் நின்று அதை நாம் வரவேற்போம். அதன் அடிப்படையில் பெண்கள் ஆயுதம் ஏந்தும் உரிமையை பாதுகாப்போம். பெண்கள் இன்று ஆண்களைப்போல் உள்ளனர் எனில் (ஆணாதிக்கத்தை அல்ல, அறிவு, வீரம், உடை ... என்று பல துறையில்) நாம் பெருமைப்படவேண்டும். அதற்காக ஒப்பாரி வைக்கக் கூடாது. ஒரு பெண் தலைமயிரை வெட்டி நகையின்றி உள்ளபோது பெண்மைக்கு சாவுமணி அடிக்கின்றது எனக்கூறுவது நகைப்புக்குரியது. ஏன் ஆண்கள் கூட முன்பு தலைவளர்த்தும் நகையணிந்தும் இருந்தனர். ஆண் பெண்ணுக்கிடையில் இது ஒர் அடிப்படை வேறுபாடாக முன்னைய சமுகத்தில் இருந்தது இல்லை. ஆனால், இன்று பெண்ணைக் கல்லாக்கியபோதும், அழகியல் பதுமையாக்கும் போதும் தான், இதைப் பெண்மை என்ற பெயரில் தொடரும் உண்மையான நோக்கம் என்ன என்று பார்ப்பதற்கு முன், இம் மாற்றம் விடுதலையாகிவிடாது. ஏனெனின், பெண்ணின் விடுதலை என்பது, பெண் ஆண் நிலைக்கு வருவதில்லை, மாறாக ஆண் பெண் இருவரும் மூன்றாவது நிலையை அதாவது, ஆணாதிக்கமும் பெண்ணடிமையுமற்ற நிலையை வந்தடைவதாகும். நகையணிதல், தலை வளர்த்தல் பெண்மை என்ற பெயரில், பெண்ணை ஏகாதிபத்தியம் எப்படி அழகிய கவர்ச்சி பதுமையாக்கி சந்தையை விரிவாக்குகின்றதோ, அதில் இதை மறுக்கும் போது ஏற்படுத்தும் சிதைவை எதிர்த்தே இது எழுகின்றது. பெண் இந்த பெண்ணின் அணிகலன்களை கைவிடுவது யாருக்கு நட்டம். ஆணாதிக்க அமைப்புக்கு அதிலும் தனிச் சொத்துரிமை பொருளாதார அமைப்புக்கு பாரிய சிதைவைக் கொடுக்கும். அதாவது சந்தையை பெண்ணின் அங்கம் மீது, பெண்ணின் பண்பாட்டு வடிவங்கள் மீது, அழகுபடுத்திக் காட்டி, கட்டமைக்க முடியாது. அழகு சாதன வர்த்தகம் முற்றாக சிதைந்து போகும். இதனால் ஆணாதிக்கம் பெண்ணை மரபாக அடையாளப்படுத்திய வடிவம் சிதைகின்ற போது, அது ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தின் அங்கமாகி, உலக ஏகாதிபத்தியமும், அதன் தொங்கு சதையான ஜ.நாவும் தகர்ந்து போகும்.

பெண் முடிவளர்த்து, காதல் உணர்வு ததும்ப ஆண்களுடன் கூடியுள்ளவரை, இந்த உலக ஒழுங்கு மாறாது என்பது தான் ராதிகா முதல் ஏகாதிபத்தியத்தினதும் கொள்கை. அதுதான் பெண்களுக்கு அழகியல் சாதனங்களை உற்பத்தி செய்தும், விளம்பரம் செய்தும் பெண்கள் அதைப்பற்றிச் சிந்திக்கவும் கோருகின்றனர். பண்பாட்டு கலாச்சார தளத்தில் பெண்ணின் வருணனைகள் எல்லாம் பாலியலில் பதுமையாக்கும் அல்லது வக்கிரத்தை கொட்டும் வகையில் எல்லா உறுப்புகளும் காட்டப்படுகின்றது, அழகுபடுத்தப்படுகின்றது.

பெண்மைக்கான ராதிகாவின் இன்னுமொரு விளக்கம் தருவதைப் பார்ப்போம். "இரக்க சுபாவம், சகிப்புத் தன்மை, சமூக உறவு பேணல், சாந்தம் இது போன்ற குணங்கள் எல்லாம் மனிதர்களுடன் இணைந்து செயற்படும் போது அவர்கள் பாவித்திருக்கிறார்கள். இந்தப் பண்புகள் குணங்கள் எல்லாம் நீண்ட காலமாக பெண்களின் நற்பண்புகளாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டவை. இவை எல்லா நிலைமைகளிலும் மாறுபடாமையாகத் திகழவேண்டிய முக்கிய பண்புகளாகும்."

இவைக்கு வர்க்கம் கிடையாதா? ஏன் இந்தப் பெண்கள் இரக்கம், சகிப்பு, சமுகஉறவு, சாந்தம் போன்றவற்றை பொதுவில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு, உயர்சாதிப் பெண்கள் வழங்கவில்லை. தமிழ் பெண்களுக்குள் உயர்சாதிப் பெண்கள் ஏன் வழங்கவில்லை? தமிழ் பெண்களுக்கு சிங்களப் பெண்கள் ஏன் வழங்கவில்லை? கறுப்பு பெண்களுக்கு வெள்ளையினப் பெண்கள் ஏன் வழங்கவில்லை? மூன்றாம் உலக நாட்டுப் பெண்களுக்கு மேற்கு நாட்டுப்பெண்கள் ஏன் வழங்கவில்லை? ஏன் சொந்த மருமகளுக்கு மாமி ஏன் வழங்கவில்லை? இப்படி எத்தனையோ உண்டு.

ஏன் இவைகளை வழங்க மறுத்தபடி, கோட்பாட்டளவிலும் நடைமுறையில் வன்முறை எனக் கூறி ஒப்பாரி வைக்கும் போது, மற்றைய பெண்ணுக்கு இந்தப் பண்புகளை மறுத்து வன்முறையை கையாளும் போது கேள்வியே இல்லையா?

இவை ஆணாதிக்கத்தால் பெண்கள் மீது திணிக்கப்பட்டவை. ஆணின் தேவையைப் பூர்த்தி செய்ய பெண் அடங்கிப் போகவும், பெண்கள் மூலம் சமுக ஒழுங்கை ஏற்படுத்த திணிக்கப்பட்டவையே. இது பெண்ணின் இயல்பான குணமல்ல. மாறாக வீரம், செயல், ஆற்றல், பரஸ்பர மதிப்பு என்பனவற்றை ஆண்பெண் சமத்துவ நிலையில் தேடவேண்டும்.

இவைகளை எல்லா நிலைமைகளிலும் மானுட ஆளுமையாகக் காணவேண்டும் என்பது, வர்க்கப் போர் நடக்கும் போது, ஒரு முதலாளியை இரக்கம், சகிப்பு, சமூகஉறவு, சாந்தப்படி பாதுகாத்து, வர்க்கப்போருக்கு எதிராக இருக்கக் கோரும் ராதிகாவின் அரசியல், இன்றைய உலக ஒழுங்கைத் தொடர்வது எப்படி என்பதை மையமிட்டுள்ளது.

மேலும் அவர் "பெண்கள் இராணுவ மயப்படுகின்ற நிலைமை முன்பைவிட அதிக அச்சுறுத்தலான ஒன்றாகும்." எனக் கூறும் போது சிங்கள இனவாதத்தையும், ஏகாதிபத்திய உலகமயமாதலையும் பாதுகாக்க முனைகின்றார். இராணுவவாதம் மட்டுமல்ல பெண்கள் அரசியல் முதல் சகலதுறையிலும் முன்வருவது அச்சுறுத்தல் எனின், அது ஆணாதிக்கத்துக்கே என்பது தெளிவானது. இது அடிப்படையில் சுரண்டல் அமைப்புக்கு அச்சுறுத்தல் ஆகின்றது. புலிகளின் அரசியல் மக்கள் போராட்டத்திற்குப் பதில் இனப் பிரிவுகளின், இனப் போராட்டமாக சீரழிந்தபோது, அது இனவாத சிங்கள அடிப்படைவாதத்துக்குச் சாதகமாக இருந்தது, இருக்கின்றது. இந்நிலையில் புதிய படைப்பிரிவுகளை உருவாக்கி பெண்களை வீட்டுக்கு வெளியில் புலிகள் கொண்டு வந்தபோது, பெண்கள் படைப்பிரிவுகள் சிங்கள இனவாதத்திற்கு சவால் விடுகின்றன. இந்தப் பெண்கள் அணிதிரள்வது என்பது, இந்திய துணைக் கண்டத்தின் சமூகக் கட்டமைப்பின் பெண்ணின் அடங்கிப் போகும் போக்கை, அதன் அடிப்படை உரிமையை (ஆணாதிக்க) கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இது எதிர்காலத்தில் இந்திய சமூகப் பெண்ணின் விழிப்புணர்வுக்கு ஊன்று கோலாகியுள்ளது. இது எதிர்காலத்தில் ஏகாதிபத்தியத்திற்கும், அது சார்ந்த தரகு அமைப்புகளுக்கும் விடப்படும் ஒரு சவாலாக எழுந்துள்ளது. சனத்தொகையில் பாதிப்பிரிவு அடங்கியுள்ளவரை (இது சுரண்டும் வர்க்க ஆதிக்கத்தில் அமைதி காத்தலாகும்), சுரண்டும் வர்க்கம் தனது நிலையை இட்டு அலட்டிக் கொள்ளப் போவதில்லை. அதை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கீழ் அணிதிரண்ட பெண்கள், (புலிகளின் நடவடிக்கை பிழையாக இருந்த போதிலும்) இந்திய துணைக் கண்டத்தின் பண்பாட்டுக்கு சவாலாக உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் இதன் விளைவுகள் தெளிவாகப் பிரதிபலிக்கும்.

இதையிட்டு அச்சுறுத்துவதாக கூறும் ராதிகா சரி, சிங்கள இனவாத அரசு சரி, சுரண்டல்பிரிவு சரி சொல்ல வருவது பெண்ணே நீ மீளவும் அடுப்படிக்குப் போ என்றுதான். பெண் வீதிக்கு வந்தால் பயப்படுகின்றார்கள் என்றால் அவர்கள் ஆணாதிக்கவாதிகளும் அதைச் சார்பவர்களுமே ஆவர்.

ஆண் பெண் வேறுபாடு இன்றி பெண் போராடவும், ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்யவும் கோருவது, ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையாகும். சமூகம் வன்முறையில் உள்ளவரை, வன்முறை திணிக்கப்படும் வரை அதற்கு எதிராக வன்முறையைக் கையாளும் உரிமை பெண்களுக்கு அவசியமும் அடிப்படையுமான உரிமையாகும்.

ஓர் இனம், ஒருமதம், ஒரு தேசியம், ஒரு சாதி மீது வன்முறையை ஒரு பிரிவு கட்டவிழ்த்து விடுமாயின், அதை எதிர்த்துப் போராடுவதும், சொந்த சனநாயகத்தை மனித உரிமையை மீட்கப்போராடுவதும் பெண்ணின் அடிப்படையுரிமையாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் பெண்களின் உரிமை நிலை நாட்டப்படுதல், பெண்விடுதலையை அடிப்படையாகக் கொள்ளாமை என்பன, அரசியல் ரீதியில் விமர்சனத்திற்குரியவையே தவிர, போராடும் உரிமையை மறுப்பதில் மையப்படவில்லை.

ஒரு பெண் ஆணைப்போல் போராடும் சமூக கடமையின் மீது நின்றபடி தான் தனது விடுதலை நோக்கியும் போராட வேண்டும். அதற்கு வெளியில் ஒருபோதும் சாத்தியமில்லை. பெண் தனது உரிமையை மீள வென்றெடுக்க போராட சகிப்பு, அமைதி, சாந்தம், சமுகஉறவுகளைபை பின்பற்றுவதால் ஒருபோதும் பெறமுடியாது. பெண் தனக்காகப் போராடவும், இதற்கு வன்முறை பரிசாக கிடைப்பின், தற்பாதுகாப்புக்காக வன்முறையை முன்னெடுக்கும் உரிமையை தனதாக கொண்டு தான் பெண்விடுதலையை அடையமுடியும். ஏகாதிபத்திய பெண்கள் அமைப்புக்கள் தமது பூர்சுவா கண்டுபிடித்தல்களில் நின்று அமைதி, சாந்தம் பற்றி கூறும் போது எல்லாவிதமான சொற்பதங்களும் உண்மையில் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க சார்பானவை என்பதில் சந்தேகமில்லை.

ராதிகா மேலும் "இலங்கையை நோக்கினாலும் சரி, முழு உலகை நோக்கினாலும் சரி முழு உலகையும் எடுத்துக் கொண்டாலும் சரி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மனிதஉரிமைகளை ஈட்டிக் கொள்வதற்கு எதிராகப் பெருந் தடைக்கற்களாகவுள்ளவை, மத இன மற்றும் தேசியவாதத் தத்துவார்த்தங்களுமே. இந்த யதார்த்தநிலையை... எதிர்நோக்க விரும்பவில்லை" என ராதிகா தனது அங்கலாய்ப்பை வெளிப்படுத்துகிறார்.

உலக மனித உரிமைகளுக்கு சவால் விடுபவைகள் இவையா, அல்லது வேறு ஒன்றா எனப் பார்ப்போம். இன்று மனித உரிமைக்கு சவால் விடுபவை ஏகாதிபத்தியமும், சுரண்டல் அமைப்புமே. அப்படியிருக்க மத, இன தேசியவாதம் எப்படி சவாலாக இருக்கமுடியும். மத, இன தேசியவாத எழுச்சி என்பது மனித உரிமைகள் மறுக்கப்படுதல் என்பதிலிருந்தே தோற்றம் பெறுகிறது. மனிதர்களை அடிமைப்படுத்தும் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள்தான், மத, தேசிய மற்றும் இனவாதமாக வெளிப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்வன்முறையை நிராகரிப்பதன் மூலம் அந்த மக்கள் ஒடுக்கப்பட்டபடி வாழும் அமைதிதான், மனித உரிமையின் சனநாயகம் என வாதிட முனைகின்றார். அதாவது, இன்றைய உலகப் பொருளாதார சூறையாடும் அமைப்பு வடிவை குலைக்க முனையும் போராட்டங்களை தான், மனித உரிமைக்குச் சவால விடுகின்றது என்கிறார். அதாவது மனிதனை மனிதன் சுரண்டும் உரிமைதான் ஜனநாயகம் என்கின்றார். ஒரு முதலாளி சுரண்டும் உரிமையையும், ஒரு தொழிலாளி சுரண்டப்படும் உரிமையையும் ஏற்றுக் கொள்ளும் மனித உரிமைதான் உன்னதமான ஜனநாயகத்தின் சின்னம் என்கிறார்.

இன்று சிங்கள இனவாதத்தை எதிர்த்துப் போராடுவதுதான் இலங்கையில் மனித உரிமைக்கு சவாலாக இருக்கிறது என்கிறார். சிங்கள இனவாதத்துடன் இணைந்து சலுகைகோரிப் பெறுவது தான் தமிழ்பிரிவின் கடமையே ஒழிய, எதிர்த்துப் போராடுவது அல்ல என்கிறார். பெரும்பான்மை இனத்தின் இன வன்முறை அரசு ஆதிக்கத்தை எதிர்க்காத, தமிழின அமைதி தான் இலங்கையில் மனித உரிமையைப் பேண அடிப்படையாகும் என்கிறார். அதுதான் தமிழ் மக்களுக்கு "சமஷ்டித் தீர்வு" தான் சரி எனக் கூறுவதன் மூலம், சிங்கள இனவாதத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் அடக்குமுறையின் கோட்பாட்டை அப்படியே எடுத்து, தமிழ் மக்களுக்கான ஜனநாயகமாக சமாதானத்தின் பெயரால் திணிக்க முனைகின்றார்.

தமிழ்மக்களுக்கு உண்மையான சமாதானம், ஜனநாயகம் மனித உரிமை என்பது சுயநிர்ணய உரிமையில் தங்கியுள்ளது. சுயநிர்ணயத்தை நிராகரித்த சமஷ்டி என்பது சிங்கள இனவாதத்திற்குட்பட்ட இனவாதத் தீர்வுகளே எம்மீது திணிக்க முயல்வதாகும்.

"சங்ககால இலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்ற இராகவன் (விமர்சகர்) அவர்கள் கன்னிப் பெண்கள் எதிரியுடன் போர் புரிவதற்கென உண்மையில் ஒருமுறை ரீதியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஒரு முன் நிகழ்வைக் கூறமுடியுமா?" என வினா எழுப்பும்போது, இவர் ஒரு பெண்ணிலைவாதியா? என்ற கேள்வியே எஞ்சிநிற்கிறது. தொப்பிக்கு ஏற்ற தலையை செய்ய எண்ணிய இவர் உலக மற்றும் தமிழ் மரபை விபச்சாரம் செய்து ஆணாதிக்கத்துக்கு முண்டு கொடுக்கின்றார்.

1 comment:

தமிழச்சி said...

ராதிகா குமாரசாமி யார் என்று இதுவரையில் எனக்கு தெரியாது. ஆனால் அவரின் இன்றைய உலகமயமாதல் சார்ந்த ஆணாதிக்க இனவாதத்தை வன்முறை மூலம் தகர்ப்பதை எதிர்த்து நிற்கும் அதே நேரம், இதை அம்பலப்படுத்தி போராடும் போது மௌனத்தை காத்தல் முடியாது உள்ளது என மீள் வன்முறையை பிரகடனம் செய்யும் பாங்கு உண்மையில் பாராட்டுக்குரியது. மகளிர் தினமன்று நல்லதொரு பதிவை வெளியிட்டுள்ளீர்கள். "பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது". அருமையான தலைப்பு அனேக பெண்கள் இன்னும் உணரவில்லை என்பதே உண்மை.


"மீள் வன்முறை" என்றால் என்ன?