தமிழ் அரங்கம்

Monday, March 17, 2008

இன்னொரு கொசோவா உருவாகிறது!

இன்னொரு கொசோவா உருவாகிறது!

ப.வி.ஸ்ரீரங்கன்
16.03.2008

ன்றைய தினம்வரை திபேத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், கொலைகள், கைதுகள் குறித்துரைக்கும் அரசியலைப் புரிந்துகொள்வது மிகக்கடினமாகவே இருக்கிறது. உலகத்தின் பெரும் பகுதிகளிலும் சீனத் தூதுவரலாயங்கள் முன் அணி திரண்டு வரும் திபேத்தியப் புலம் பெயர்ந்தவர்களின் பின்னே உலக மூலதனவாதிகள் மறைந்திருந்து சீனாவுக்கு அம்பு விடுகிறார்கள். இதற்கு அகிம்சை-காந்திக் குறியீடுகள் வேற துணையாகின்றன. அன்றுஞ்சரி இன்றுஞ்சரி காந்தியைச் சரிவரப் புரிந்தவர்கள் ஐரோப்பியர்களே!

இதுவரையிலான திபேத்தின் பௌத்தமடாலயங்களின் அரசியல்-ஆர்ப்பாட்ட முன்னெடுப்புகளுக்குத் தலைமை வகிப்பவர் தலாய் இலாமா என்பது எல்லோராலும் கூறப்படும் ஒரு மாதிரிப் பதில்கள்தாம். எனினும், இன்றைய பிக்குகளின் ஆர்ப்பாட்டத்திலும், அதன்வாயிலான அரச படைகளின் எதிர்த் தாக்குதல்களாலும் சிலர் இறந்துள்ளார்கள். திபெத்துக்கான எக்ஸில் பாராளுமன்றம் இந்தியாவில் கூறுகிறது கிட்டத்தட்ட 100 பொதுமக்கள் வரை சீனாவால் கொல்லப்பட்டதாக, மேற்குலகம் சீனாவுடன் இன்னொரு அடுக்கு மொழியையும் கூடவே இணைக்கிறது, அது கொம்யூனிசச் சீனா என்பதாக இருக்கிறது. சீனாவோ உலகத்தில் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இது ஜேர்மனிக்குப் பின்னால் உள்ள ரேஞ்சாக இருந்தும் அங்கே இன்னும் கொம்யூனிசம் இருப்பதாகக் கயிறுவிடும் மேற்குலகம்-காரணத்தோடுதாம் இந்த இத்த கயிற்றை ஒப்புவித்து வருகிறது!



கிட்டத்தட்ட மேற்குலக நாடுகள் பலவற்றின் பெரும் கம்பனிகள் சீனாவில் தமது தொழிற்சாலைகளை இயங்க வைத்துச் சீனத்துத் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டியபடி சீனாவையும் கொம்யூனிசத்தையும் இணைத்தபடியே தத்தமது வேட்டையை ஆரம்பித்துள்ளார்கள். தமது தேவைக்கேற்ற சீனாவை உருவாக்கும் வரையும் தெபேத்தியத் தலாய் இலமா புனித மனிதவாதியாகவும் அவரது சொல் மந்திரமாகவும் இருக்கவே செய்யும். என்றபோதும், இன்றைய தெபேத்திய அரசியல் வன் முறைகளுக்கும் அதுசார்ந்த புலம்பெயர்ந்த தெபேத்தின் பாராளுமன்றத்தினதும் கருத்துகள் மற்றும் அந்நியத் தொடர்புகளுக்குமுள்ள இணைவுத் தொடர் நிகழ்வுகள் இன்னொரு கொசோவோவை ஞாபகப்படுத்துகிறது. இந்நிலையில்,இந்த அரசியலுக்கும் சீன ஆதிக்கத்துக்கும் இருக்கும் பிணக்குகள் வெறுமனவேயான திபேத்தின் சுதந்திரத்துக்கான அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்துக்குமானதாக இருக்குமுடியும்h? கடந்த 49 ஆண்டுகளாக அரசியல் தஞ்சத்தில் இந்தியாவிலிருந்தபடி மேற்குலகத்துக்கு விசுவாசமாக அரசியல் நடாத்திவரும் தலாய் இலாமாவுக்கு மீளவும் திபேத்தின் மீதான அகிம்சை அரசியல் அரங்குக்கு வருகிறது-இன்னொரு காந்தி உதயமாகி வருகிறார்!

இன்றைய நிலவரப்படி சிட்னி முதல் பேர்ளின் வரையிலான உலகத்தின் பல பாகங்களிலும் தெபேத்தியவர்கள் ஆர்பாட்டங்களைச் செய்கிறார்கள், கைதாகிறார்கள்.தலாய் இலாமா தரப்பிலிருந்து, ஐ.நா.சபை திபேத்துக்கானவொரு பிரத்தியேகக் கண்காணிப்பாளர்களை அனுப்பும்படி கோரிக்கை முன்வைகப்படுகிறது. கடந்த 49 ஆண்டுகளாக நடந்துவரும் சீன-திபேத்திய இழுபறிக்கான அரசியல் காரணங்கள் மேற்குலகத்தின் சீனா மீதான அழுத்தத்திலிருந்தே தொடங்குகிறது. இத்தகைய அழுத்தம் சீனாவின் முழு மொத்தப் பொருளாதார நகர்வோடு சம்பந்தப்பட்டு இன்றுவரையும் சீனாவின் அதிவேக வளர்ச்சியின் உந்துதலால் உள்வாங்கப்படும் முலப்பொருள்களின் சந்தைப் பங்கீட்டோடு முரண்பாடாக எழுகிறது. சீனாவின் தொழிற்சாலைகளுக்கான எரிபொருள் மற்றும் மூலவளத் தேவைகளின் அதீத முனைப்பு மேற்குலக அரச வியூகத்தோடும் அமெரிக்கப் பொருளாதாரத்தோடும் போட்டியைச் சந்திக்கிறது.



கடந்த ஆண்டிலிருந்து சீனாவானது எண்ணை மற்றும் மூலவளத் தேவைக்காக ஆபிரிக்கக்கண்டத்தைப் பங்கு போடுவதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் முட்டிமோதுகிறது. இரும்புத் தேவையானது என்றுமில்லாதவாறு சீனாவை உலகத்தோடு போட்டியிடவைத்ததால் இரும்புவிலை மிகமிக உச்சத்துக்போனது. அவ்வண்ணமே மசகு எண்ணையின் மிகப்பெரும் அழிவு சீனாவின் பொருளாதார வளர்சியால் மேலும் பல மடங்கு உயர்ந்தது. சீனாவும் தனது பொருளாதாரத் தேவைகளோடு மிகுதியாத் தேவையாகும் எண்ணைக்காக ஈரான் முதல் ஆபிரிக்கக் கண்டம் வரைத் தனது வியூகத்தை விரித்து வைத்து மேற்குலகுக்கு இடைஞ்சலாகவே இருப்பதால் அமெரிக்க மற்றும் மேற்குலகம் சீனாவைத் தடுத்து, ஒரு சிறு தேக்கத்தை ஏற்படுத்தவே முயற்சித்து வருகின்றன. சீனாவின் எரிபொருள் தேவையானது எண்ணைவள நாடுகளின் கூட்டின்(ஒபெக்)ஆதிகத்தை மேலும் விருத்தியாக்கி வருவதால் உலகச் சந்தையில் ஒரு பெறல் மசகு எண்ணை 108 டொலராக உயர்கிறது. இது ஐரோப்பாவுக்கு எந்த வகையிலும் பாதிப்பில்லாதிருந்தும் ஐரோப்பாவில் எண்ணை விலையை அமெரிக்க எண்ணைக் கம்பனிகள் கிடுகிடுவென உயர்த்தியே வருகின்றன. ஒரு யூரோ நாணயத்தின் பெறுமதி இரண்டு டொலராக இருந்தும் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி ஐரோப்பாவைப்போட்டு ஆட்டுகிறது. இதன் தொடர்ச்சியில் ஒரு பொறியாக மேலெழும் திபேத்தியச் சுயநிர்ணயப் போராட்டம் மேலுமொரு கொசோவோவின் அரசியல் வித்தையாக நகரும் போது அங்கேயும் சீனத்துருப்புகளின் கைகள் பல பொதுமக்களை வேட்டையாடுகிறது.



சீன முதலாளித்துவத்தை இன்னும் கொம்யூனிசமெனப் பறைசாற்றியபடி மேற்குலக அதிதீவிரத் தனியார் துறை மேலும் தனது வலுக்கரத்தை மறைத்துச் சீனாவை உலகத்திலிருந்து தனிமைப்படுத்த முனைதல் மேற்குலக-அமெரிக்கப் பொருளாதார முரண்பாட்டின் அப்பட்டமான சதியாகவே நகர்கிறது. இது வளர்ந்துவரும் மேற்குலக முதலாளித்துவத்தின் அதிபயங்கர அராஜகத்தை மறைப்பதற்கும் இந்தப் பயங்கரவாதத்துக்கெதிரான தொழிலாள வர்க்கத்தின் அணித்திரட்சியைத் தகர்ப்பதற்காகவும் சீனாவை வலிந்து கம்யூனிசத் தேசமாகக்காட்டிப் பயங்கரவாதச் செயற்பாட்டை கம்யூனிசத்துக்கும் பொதுமையாக்கி மக்களைத் திசை திருப்பும் ஒரு யுக்தியாகவே ஏகாதிபத்தியம் பொய்யுரைத்துவருகிறது. சீனாவென்பது மேற்குலகத்துக்கு இணையானவொரு ஒடுக்குமுறைத் தேசமாகவே இருக்கிறது. அங்கே கொம்யூனிசம் மருந்துக்கும் கிடையாது. சீனாவை நேரடியான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீன ஆளும் வர்க்கமானது உலகத்து மாபியாக்களோடு தமது உறவை வளர்த்துச் சீனாவையும் அதன் கடந்த காலப்பாரம்பரியத்தையும் கடந்த முப்பதாண்டுக்கு முன்பே குழி தோண்டிப் புதைத்தாகிவிட்டது. இதற்கு டெங்கு கும்பலுக்கு நன்றியை மேற்குலகஞ் சொல்லியாக வேண்டும்.எனினும், பொருளாதார முரண்பாடுகள் அந்த நன்றியை இப்படிச் செய்து தென்கிழக்காசியத் தொழிலாளரை மொட்டையடிக்க ஒரு தலாய் இலாமாவைத் தயார்படுத்தி வருகிறது. இதற்கு ஜேர்மனியே நல்ல உதாரணமாக இருக்கிறது.



தொட்டிலையும் ஆட்டிக் குழந்தையையும் கிள்ளி வைக்கும் ஜேர்மனியோ "பலாத்தகாரத்தால் எந்தப்தரப்பும் எந்தப் பிரச்சனைகளையும் தீர்த்துவிட முடியாது"என்று ஒப்பாரி வைத்தபடி தலாய் இலாமாவுக்கு மேலும் ஒரு உந்துதலைக் கொடுக்கிறது.பலாத்தகாரத்தால் எந்தப் பிரச்சனையையும் தீர்த்துவிட முடியாதென்று கூறும் ஜேர்மனியோ அவ்கானிஸ்தானில் பலாத்காரத்தை பயன்படுத்தி அங்குள்ள எரிவாயுவைக் கொள்ளையிடுகிறது. இன்றைய உலக நடப்புகள் யாவும் மூலவளத் தேவைகளைக் கையகப்படுத்தும் போராட்டமாகவே விரிகிறது. ஆங்காங்கே சுயநிர்ணயத்தைக் கோரும் சிறுபான்மை இனங்களின் அனைத்து வழிப் போராட்டங்களையும் இத்தேவையை மையப்படுத்தியே உலகம் பயன்படுத்தி வருகிறது. எமது தேசத்தில் நடந்தேறும் அரசியலும் அதன் வாயிலான போராட்டத்தையும் இதே உலகம் தத்தமது தேவைக்கேற்றபடி உபயோகப்படுத்தி வந்த இன்றைய பொழுதுவரை நாம் இலட்சம் உயிர்களைப் பறிகொடுத்துள்ளோம். இன்று உலகத்தின் மூலதனச் சுற்றோட்டம் தேவைகருதித் தேசங்களைப் பிரித்தெடுத்துத் தமது மூலதனத்தைப் பெருக்கும் உற்பத்திப் பொறிமுறையைத் திறம்பட விருத்தியாக்கி வருவதற்கு ஆங்காங்கே அப்பாவி மக்கள் பலியாவது தொடருகிறது.1949 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றங் கண்ட சீனா தனது மக்கள் விடுதலை இராணுவத்தூடாக 1950 இல் திபேத்தைச் சீனக் கட்டுப்பாட்டுக்குள்கொணர்ந்தது. அன்றுதொட்டு இன்றுவரையும் கம்யூனிசத்தின் பேரால் கூட்டிப் பெருக்குகிறது மேற்குலகம் திபேத்தியப் பிரச்சனையை.

மடாலயங்களாலும் மகிமையுடைய சுதந்திரத் தாயகம் அமைக்க முடியுமெனவொரு அரசியல் நகருகிறது. இதுள் வெற்றியுறும் தருணங்கள் மெல்லத் திபேத்தின் பக்கம் கனிந்து வருகிறது. அமெரிக்க-ஐரோப்பிய-சீனாவின் முரண்பாடுகள் திபேத்தில் சுயநிர்ணயப் போராட்டமாக வெடிக்கிறது. இதில் வெற்றிபெறும் தரப்பு நிச்சியமாக சீனாவாக இருப்பதற்கில்லை.

No comments: