Friday, April 11, 2008

தில்லைக் கோவில் தமிழை அரங்கேற்றுவோம்! தீட்சிதர்களை வெளியேற்றுவோம்!


தில்லைக் கோவில் தமிழை அரங்கேற்றுவோம்!
தீட்சிதர்களை வெளியேற்றுவோம்!

தீட்சிதப் பார்ப்பனக் கும்பலின் திரைமறைவுத் தில்லுமுல்லுகள், நீதிமன்றத் தடையாணைகள் ஆகிய அனைத்தையும் மீறி முன்னேறிக் கொண்டிருக்கிறது சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்கும் போராட்டம். ""சிற்றம்பல மேடையில் தமிழ் பாடலாம்'' என்ற இந்து அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசிடம் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள். ஆணை கிடைத்த மறுகணமே பாடத் தயாராகக் காத்து நிற்கிறார் முதியவர் ஆறுமுகசாமி. நீதிமன்றத்தில் மீண்டும் தடையாணை வாங்கத் தயாராக இருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

இந்த நெடிய போராட்டத்தின் இறுதிக் கட்டத்தைக் குறிக்கும் விதமாக ""தில்லைக் கோயிலில் தமிழ் முழங்குவோம்! தீட்சிதர் சொத்தல்ல தில்லைக் கோயில் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம்!'' என்ற முழக்கங்களின் கீழ் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சனவரி 26 அன்று சிதம்பரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியது. கூட்டத்தின் அவசியத்தையும், இதுநாள் வரை நடத்தப்பட்ட போராட்டங்களை விளக்கியும் தலைமையுரை ஆற்றினார், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராஜு. ""தீட்சிதர்களின் எடுபிடிகளாகச் செயல்படும் சிதம்பரம் போலீசு இனி ஆறுமுகசாமியைக் கைது செய்தால், அங்கே தமிழ் ஒலிக்கும் வரை மக்கள் கோயிலை விட்டு அகலக் கூடாது'' என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

""பூணூலும் குடுமியும் அறுபடாமல் இருக்க வேண்டுமானால், தமிழ் பாடுவதைத் தடுக்காதே'' என்று தீட்சிதர்களை எச்சரித்தார், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன்.

""ஏமாளி நந்தன் எரிக்கப்பட்ட காலம் மலையேறி விட்டது. அந்த நந்தன் நுழைந்த தெற்கு வாயிலைத் தகர்க்காமல் ஓயமாட்டோம்'' என்றார் விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட் டச் செயலாளர் காவியச் செல்வன்.

""ஒரு மனித உரிமை அமைப்பு தமிழுக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது, தமிழ் அமைப்புகள் என்று கூறிக் கொள்வோர் முகத்துதியில் மூழ் கிக் கிடக்கிறார்கள்'' என்று சாடினார் கடலூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இராச.குழந்தைவேலனார்.

பு.ஜ.தொ.மு.வின் மாவட்டச் செயலர் காதர் பாஷா, ""இந்தப் போராட்டம் இறுதி வெற்றி பெறும் வரை நாங்கள் முன்னணியில் இருப்போம்'' என்று வலியுறுத்தினார்.

""இது வெறும் ஆத்திகர் பிரச்சினை அல்ல, தமிழ் உரிமை குறித்த பிரச்சினை என்பதால்தான் நாத்திகர்களும் களத்தில் முன் நிற்கிறோம்'' என்றார் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில இணைச்செயலர் பேரா.பு.ச.இளங்கோவன்.

சிறப்புரையாற்றிய ம.க.இ.க. பொதுச் செயலர் மருதையன், ""தில்லைக் கோயிலில் தமிழ் அரங்கேறுவது மட்டுமன்று, தீட்சிதர்கள் வெளியேறவும் வேண்டும். அதுவரை ஓயமாட்டோம்'' என்றார். இந்தக் கோயிலுக்குச் சொந்தம் கொண்டாட அவர்களிடம் துரும்பளவு ஆதாரம் கூட இல்லை என்பதை நிறுவியதுடன், தீட்சிதர்களின் தீண்டாமைக்கு அரசியல் சட்டம் காவல் நிற்பதையும் சுட்டிக் காட்டினார்.

பெரிய புராணத்திலிருந்தும், தேவாரம், திருவாசகத்திலிருந்தும் மேற்கோள் காட்டி தீட்சிதர்களின் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப்படுத்தினார் பேராசிரியர் பெரியார்தாசன். ""பூசலார் நாயனார் போல மானசீகமாகத் தமிழ் பாடச் சொல்லும் திமிர் பிடித்த தீட்சிதப் பார்ப்பனர்களே, கண்ணப்ப நாயனார் போல பன்றிக் கறியைப் படையல் வைக்க வருகிறோம், அல்லது சாக்கிய நாயனார் போல இறைவனைக் கல்லெறிந்து பூசிக்க வருகிறோம். நீங்கள் தயாரா?'' என்று எள்ளி நகையாடினார். வழிபாட்டுரிமை என்ற ஜனநாயக உரிமைக்காகக் குரல் கொடுக்கும்போது அந்தக் குரல் பார்ப்பன எதிர்ப்பையும், சுயமரியாதையையும், நாத்திகத்தையும் தவிர்க்கவியலாமல் ஒலித்துத்தான் தீரும் என்பதைப் பக்தர்களுக்கு மிகவும் இயல்பாக உணர்த்தியது பெரியார்தாசனின் உரை. அந்த நாத்திகரின் உரையை மேடையில் அமர்ந்து ரசித்துச் சிரித்தபடியே கேட்டுக் கொண்டிருந்தார் சிவனடியார் ஆறுமுகசாமி.

நூற்றாண்டுகளாகத் தில்லையைக் கவ்வியிருக்கும் சாதிஇருள் கலைந்து, விடியப்போகும் நேரம் நெருங்கிவிட்டது என்ற நம்பிக்கையை பெற்றார்கள் மக்கள்.

1 comment:

துரை said...

ஆம் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு
தமிழை மதிக்காத பார்பனனை அடித்து விரட்டுவோம்