தமிழ் அரங்கம்

Saturday, January 14, 2006

வாழ்வின் மீதான நம்பிக்கையை இழப்பவன்

வாழ்வின் மீதான நம்பிக்கையை
இழப்பவன் வெறும் சடலம் தான்.


பி.இரயாகரன்
14.1.2006

பொதுவாக இன்றைய பாசிச சூழலிலும், சீரழிந்த மாற்றுக் கருத்து தளத்தையும் எதிர் கொள்ளமுடியாத நிலையில், வாழ்வின் மீதான மனித நம்பிக்கையை இழந்து சிலர் கருத்துக் கூற முனைகின்றனர். நம்பிக்கையாக மக்களின் வாழ்வு சார்ந்து கருத்து கூறுவது, பின் அந்த முயற்சிக்கு எதிராகவே கருத்து கூறுவது என்பது, மக்களின் முதுகில் குத்துவதாகும்.

உதாரணத்துக்கு அண்மையில் தமிழ்மணம் விவாதத் தளம் ஒன்றில் பதிவாகிய கருத்தில் "பெயரிலி, உங்களைப் புரிந்து கொள்கிறேன். உங்கள் நிலைமைதான் எனக்கும்! புலம்பெயர் படைப்பாளிகள் பலருக்கும் இதே நிலைதான். குறிப்பாகப் பார்த்திபன், அம்மா மனோ, தூண்டில் பத்திரிகைக் கடலோடிகள், மனிதம் பத்திரிகைக் குழு, போன்றவர்களிடமும் இதே கேள்வியும் விரக்தியுமே எஞ்சியுள்ளது. இரயா மட்டுமே தன்னளவில் பலதை அம்பலப்படுத்துகிறார். அவர் தனிமனிதன். என்ன செய்ய? என்னால் முடிந்தவரை குறைந்த பட்சம் மக்களின் அமைதிக்காகவாவது (ஜனநாயகச் சூழல்) எழுதுகிறேன். எம்மால் எதுவும் முடியாது! ஆனால் அரச ஆயுதக் குழுக்களின் அராஜகத்துக்கெதிராகவாவது குரல் கொடுப்போமேவென ஏதோ எழுதுகிறேன். இதுவொன்றுமே சரிவராது. பிறகெதற்கு எழுதி?." என்ற கருத்து பல தளத்தில் இன்று காணப்படுகின்றது.

தனிமனித அதிருப்திகள், எத்தனை நாளைக்கு இவை என்ற அங்கலாய்புகள். தனிமனிதர்களாக புளுங்கிப் போகும் அவலம். இந்த தர்க்கம் கூட சொந்த பூர்சுவா வாழ்வியல் நிலையில் இருந்து, தமது சொந்த நிலையை தக்கவைக்கும் ஒரு தர்க்கமாக சிந்தனைச் சிதைவாக ஏற்படுகின்றது. சுதந்திரம் ஜனநாயகத்தின் பெயரில் வாழ்வையே மிக கேவலமாக வாழவைக்கும் இந்த சமூக அமைப்பில், தமது சொந்த வாழ்வையே இதற்குள் வாழ்கின்ற மனிதர்கள் கூட இப்படி புலம்பவது கிடையாது. கையால் மலம் அள்ளும் தொழிலாளி, பலக்காரமாக பாலியல் ரீதியாக அன்றாடம் சுரண்டப்படும் ஒரு பெண், அன்றாடம் வாழவழியின்றி கையேந்தி பிச்சை எடுக்கும் ஒருவன், அடுத்த நேரத்துக்கு உண்பதற்கு வழி தெரியாத மனிதர்கள், தன் குழந்தைக்கு பால் இன்றி விழிக்கும் தாய்மை என்று மனித இனத்தின் சகல அவலத்தை சந்திப்பவர்கள் யாரும், இப்படி அவநம்பிக்கையுடன் சமூகத்தை அணுகுவது கிடையாது. ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு கணமும் போராடுகின்றான். இதில் இருந்து மாறுபட்டு, அவநம்பிக்கையுடன் சமூக தற்கொலையை ஊக்குவிக்கும் விதைகளை ஊன்றுகின்றோமே, அப்படியானல் நாம் யார்? நாம் எங்கே இருக்கின்றோம்? எமது சிந்தனை தான் என்ன? இப்படி வெளிப்படும் மனநிலை, அடிப்படையில் தனிமனித நலனை அடிப்படையாகக் கொண்ட பூர்சுவா குணாம்சத்தின் பிரதிபலிப்பு. இதில் இருந்து எமது சொந்த நிலையை தக்கவைக்க, அதை நியாயப்படுத்தி விடுகின்றோம்.

இப்படிச் சமூகத்தின் முன்னோடிகள் அழுது புலம்பும் போது, மக்கள் என்னதான் செய்வார்கள்! தாம் அழுது புலம்புவதற்கு நியாயம் கற்பிக்க, மக்களின் கையாலாகாத்தனத்தை பற்றி கருத்துரைப்பது அன்றாடம் நிகழ்கின்றது. மக்களினால் தான் தமக்கு இந்தக் கதி என்று கூறிக்கொள்வது நிகழ்கின்றது. இந்த நிலைக்கு நீங்களே காரணம் என்பதை, அவர்கள் கண்டு கொள்வது கிடையாது. மக்களின் இன்றைய அவலமான நிலைக்கு, நாங்கள் தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்வது கிடையாது. இந்த சமூகத்தின் அவல நிலைக்கான குற்றத்தை, எதிர்நிலைக்கு மாற்றுகின்றனர். இதன் மூலம் தமது சொந்த பூர்சுவா குணாம்சம் சார்ந்த வாழ்க்கைக் கண்ணோட்டத்தை தக்கவைக்கின்றனர்.

இவர்களை நம்பி காலைத் தூக்கி ஒரு அடி எடுத்து வைப்பவர்களுக்கு, பொறிக் கிடங்கை முன்னாள் காட்டுகின்றார்கள். இப்படி செய்யும் நீங்கள் யார்? அதை நீங்கள் ஒரு முறை திரும்பி பாருங்கள்! கண்ணாடி முன் நின்று உங்களைப் பாருங்கள். நீங்கள் என்ன செய்ய முனைகின்றீர்கள் என்பதையும் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் செய்வதில் திருப்தியில்லை என்றால், என்ன தவறு செய்கின்றீர்கள் என்று பாருங்கள். அதைவிடுத்து சமூகத்தை குற்றம் சாட்டுவது அபத்தம். ஒரு செயல்பற்றிய தெளிவான நோக்கம் இருக்கவேண்டும். அது சமூகத்தில் என்ன விளைவை விளைவிக்கின்றது என்று பார்க்கவேண்டும். குடுகுடுப்பைக்காரன் போல் அவசரமாக உலகம் மாறிவிட வேண்டும் என்று நம்புவதும், கூறுவதும் பூர்சுவா குணவியல்பாகும். இதுவே கடந்தகால மற்றும் நிகழ்கால இயக்க அரசியலாகும்;.

நீங்கள் குறிப்பிட்ட பார்த்திபனை எடுங்கள். எல்லாவிதமான நம்பிக்கையையும் இழந்த பார்த்திபன், எதைத்தான் தான் வாழ்வில் அதற்கு பதிலாக சாதித்தார். மற்றொரு நம்பிக்கையை பெற்றாரா. இல்லையே. என்? என்ன நடந்தது? கடந்த இலக்கிய அரசியல் எல்லாம் எதற்காக இவைகள் என்று புளுங்கிய பார்த்திபன், அதைக் கைவிட்ட பின் எதைச் சாதித்தார்? அப்போதும் ஒன்றுமில்லை? இங்கு என்ன நடந்ததென அவர் கூட அதை தேடியது கிடையாது? இன்றைய தமிழ் மக்களின் அவலமான நிலை, இப்படித் தான் உருவானது. குற்றவாளிகள் நாங்கள்! எதிரிகள் அல்ல! மக்களின் எதிரிகள் எப்படி இருப்பார்களோ, அப்படித் தான் அவர்கள் இருக்கின்றார்கள்;. ஆனால் நாங்கள் எப்படி இருக்கக் கூடாதோ, அப்படி மிக மோசமாக இருக்கின்றோம். இதன் மூலம் எதிரிக்கு அன்றாடம் துணை செய்கின்றோம்;. ஒரு பினாமியைப் போல், எம்மை அறியாமால் எதிரிக்கு கம்பளம் விரிக்கும் வேலையைச் செய்கின்றோம். மக்களின் எதிரி பல தளத்தில் உள்ளான். அது எமக்குள்ளும் கருத்தியல் தளத்தில் ஊடுருவுகின்றது.

மக்களின் விடுதலை என்பது அமைதியும் சமாதானமும் நிறைந்த உணர்வுடன் மக்களின் எதிரிகள் அனைவரும் வழங்கிவிடமாட்டார்கள். மக்கள் போராடும் ஜனநாயகத்தை எதிரி தங்கத்தட்டில் வைத்து வழங்குவதில்லை. இப்படி நினைப்பது பூர்சுவா மனப்பாங்காகும். இதுவே பூர்சுவா உளவியலாகும். நெருக்கடிகள் பலதளத்தில் பலவடிவில் வரும். இதை எதிர் கொள்ள முடியாது அங்கலாய்ப்பதே, பூர்சுவாவின் அற்ப சிந்தனையாகின்றது. இதுவே நிலைமையையிட்டு புலம்பத் தொடங்குகின்றது. அதை எதிர்கொள்ள வக்கற்று பினாற்றத் தொடங்குகின்றனர். இன்றைய நிலைமைக்கு நாங்கள் தான் காரணம் என்பதை, ஒவ்வொருவரும் சுயவிமர்சனம் செய்தேயாகவேண்டும். செய்ய வேண்டிய, செய்யக் கூடிய நீண்டபணி உள்ளது. ஆனால் அதை மட்டும் நாம் செய்வதில்லை. மாறாக நாம் ஒரு கோட்டைக் கீறி வைத்துக் கொண்டு அதற்குள் நின்று ஊளையிடவே முனைகின்றோம்.

இப்படி கருத்தியல் ரீதியாக சிதைந்து சின்னாபின்னமாகிப் போகும் போது என்ன தான் நடக்கின்றது. தன்னுடன் சிலரையும் அழைத்துச் செல்வது நிகழ்கின்றது. தற்கொலை செய்பவன்(ள்) என்ன மனநிலையில் என்ன மாதிரியான முடிவை எடுக்கின்றரோ, அதே முடிவைத்தான் இவர்களும் எடுக்கின்றனர். இங்கு இதற்கு இடையில் வேறுபாடு கிடையாது.

நீங்கள் கூறிய பாhத்திபன் இலக்கிய உலகில் அவர் இயங்க முடிந்த ஒரு தளத்தில், அவர் உயிருடன் இருந்தாரே ஒழிய நடைப்பிணமாகவல்ல. அன்று உயிருள்ள ஒரு மனிதனாக வாழ்ந்தார். பார்த்திபன் இப்படி தன்னையே அழித்து உயிருள்ள சமூகத்தில் இருந்து ஒதுங்கி "தற்கொலை" செய்திருக்காவிட்டால், சமகாலத்தில் மிகச் சிறந்த ஒரு எழுத்தாளனாக இருந்திருப்பார்.

இன்று இலக்கியம் செய்வோரை விட சமூகத்தின் உயிரோட்டத்தை உணர்வதில் மிகவும் துல்லியமாக புரிந்து செயல்பட முனைந்தவர். அவரின் சமூகத் தேடுதல் மூலம் அதை செய்திருக்கக் கூடிய சூழல் இருந்தது. ஆனால் என்ன நடந்தது. சொந்த பூர்சுவா மனநிலையில், அனைத்தையும் மீறி தனிமனித எல்லைக்குள் முடங்கி, தனக்குத்தானே "கயிற்றை" மாட்டிக் கொண்டு தொங்குகின்றார். ஒருபுறம் பாசிசம், மறுபுறம் இலக்கிய சீரழிவும் அது விதைத்த கருத்தும் மெதுவாக ஊடுருவி, இந்த பூர்சுவா மனநிலைக்கு இசைவாகி சமூகத்தின் போக்குக்கு ஏற்ப "தற்கொலைக்கு" இட்டுச் சென்றது. என்னத்தை சொல்லி, என்னத்தை எழுதி, யாருக்கு இவை பிரயோசனப்படுகின்றது என்ற பூர்சுவா குணாம்சமே புலம்பத் தொடங்கும் போது, அதிருப்தி நம்பிக்கையீனங்கள் முதுகைப்பிராண்டி பின்னால் இழுத்து வீழ்த்துகின்றது.

சுற்றி இருந்த இலக்கிய வட்டத்தின் சமூகச் சீரழிவு, அவர்கள் தமது சொந்த சீரழிவுக்கு ஏற்ப விதைத்த கோட்பாடுகள், தனிமனித வக்கிரங்கள், அவர்களை நம்பிய முயற்சிகள் என்று பலவும் இதற்கு துணைபோனது என்பது உண்மைதான்;. புலிபாசிசம் எதை ஒரு தளத்தில் செய்ததோ, அதை மறுதளத்தில் இலக்கிய சீரழிவுக் கோஸ்டியும் அதையே செய்தது. இதற்கு பலியாகிக் கொண்டிருப்பவர்கள் தான், தமது சொந்த அவநம்பிக்கையை ஒரு கருத்தாக கூறமுனைகின்றனர். ஒரு தனிமனிதனாக, ஒரு படைப்பாளியாக, ஒரு சமூக விஞ்ஞானியாக இருப்பதைத் துறப்பதே ஒரு சமூகத் துரோகத்தனமாகும். இன்றும் பார்த்திபனுடன் நேரடியாக உறவை வைத்திருப்பதால், அவர் மீதான விமர்சனத்தை செய்வதன் மூலம், பலரின் இன்றைய நிலையை நான் நேரடியாக விமர்சிக்க முனைகின்றேன்.

ஒரு கலிலியோ இந்த சமூகத்தின் உண்மைக்காக தனிமனிதனாக போராடவில்லையா? ஒரு டார்வின் தனிமனிதனாக போராடவில்லையா? இப்படி பலர் போராடவில்லையா? இந்த போராட்டத்தில் மரணிக்கவில்லையா? எவ்வளவு நெருக்கடிகள். தனிமனிதனான அவர்களைச் சுற்றி நடத்திய வன்மம் மிக்கத் தாக்குதல்கள். இப்படி வரலாற்றில் பதிவான பலரை நாம் காண்கின்றோம். ஆனால் நாம் மட்டும் அப்படி வாழமறுக்கின்றோம். ஏன் அப்படி பார்த்திபனால் போராடி வாழமுடியவில்லை.

எம்மைச் சுற்றியிருக்கும் சூழல் பாசிசமாக, இலக்கிய சீரழிவாக, பண்பாட்டுச் சிதைவாக, பற்பலவாக இருந்தன, இருக்கின்றன என்பது உண்மை. ஆனால் இதை எதிர்த்து குறைந்த பட்சம் தனிமனிதனும் போராடமுடியும். எதை நோக்கிப் போராடுவது? என்ற தெளிவை அடைவதில் இருந்து இது தொடங்குகின்றது. மார்க்ஸ் சாப்பிடவே உணவின்றி சொந்தக் குழந்தைகள் மரணித்த போதும் கூட, பட்டினியுடன் எதைப் படைக்க முனைந்தார்? அவரின் முன்னால் இந்த பூர்சுவா வாழ்வியல் முறையே சிறந்த வாழ்வு என்ற ஒன்றை காட்டிய போதும் கூட, அவர் சமூகத்தில் உள்ள துன்பங்களைச் சுமந்தபடி போராடினரே ஏன்? மனித சமூதாயத்தின் விடுதலைக்காக அவர் போராடினார். உண்மையான நேர்மையான மனிதனின் கடமை இப்படி போராடுவது தானே ஒழிய, கோழையைப் போல் ஒடி ஒழிவதல்ல.

நாங்கள் சந்திக்கும் எமது நிலைமைகளை விட மோசமான கொடூரமான நிலைமைகள் ஊடாகவே, உலகில் பல ஆயிரம் மனிதர்கள் போராடினார்கள். நாங்கள் மட்டும் ஏன், இப்படி எமது பூர்சுவா மனநிலையை சமூக நிலையாக மாற்ற முனைகின்றோம்.

உங்கள் கருத்துகளைக் கண்டு யார் பயப்படுகின்றான்? நீங்கள் எப்போதாவது இதைப் பற்றி சிந்தித்ததுண்டா! மக்களின் எதிரியல்லவா பயந்து நடுங்குகின்றான். துப்பாக்கியும் கையுமாக அலையும் அந்த வெறிபிடித்த கும்பல் தான், உங்கள் கருத்தைக் கண்டு நடுங்குகின்றது. உங்கள் கருத்துகள் உண்மையாகும் போது, பொய்யர்கள் இப்படி வெறிபிடித்து அலைவார்கள். எத்தனை திட்டல்கள், எத்தனை தூசணங்கள், எத்தனை முத்திரைகள் முதல் மரணதண்டனை வரை பரிசளிக்கும் இந்த அமைப்பில், நாங்கள் நாங்களாகவே அவனுக்கு பணிந்துவிடுவது ஏன்? ஒரு பினாமியைப் போல், ஒரு கோழையைப் போல் நாங்கள் சிதைந்து போவது ஏன்? மக்கள் எதிரி எதைச் செய்ய விரும்புகின்றானோ, அதை நாங்களாகவே நிறுத்தி தற்கொலை செய்துகொள்வது ஏன்? குறைந்தபட்சம் உன் எல்லைக்குள் மக்களுக்காக போராடு! போராடி மடி. மக்கள் துன்பப்படும் போது, அதைக் கண்டுகொள்ளாது மலசலகூடத்தை நிரப்பும் வாழ்வை வாழ்ந்து என்ன தான் கிழிக்கின்றாய்? நாயைவிட கேவலமான இழிந்த வாழ்க்கை!

இன்று ஒரு கருத்தைச் சொல்லும் போது, அதைக் கண்டு கொதித்து பதிலளிக்கும் எதிரிகள் உண்மையில் யாரைக் கண்டு பயப்படுகின்றனர். கருத்தைச் சொல்பவனைக் கண்டு அல்ல, மக்களைக் கண்டு தான் பயப்படுகின்றார்கள். மக்கள் தெரிந்த உண்மைகளை ஒரு அரசியலாக புரிவதை தடுப்பதற்காக கருத்துச் சொல்பவனை அழிக்கின்றனர். அமெரிக்கா ஜனாதிபதி புஸ் முதல், புலி பிரபாகரன் வரை இதுதான் இவர்களின் நிலை. மக்களுக்காக போராடுவனை அழிப்பது, மக்களுக்கு உண்மை தெரியக் கூடாது என்பதற்காகவே. எதிர்கட்சியில் உள்ளவனை அழிப்பது, தனிப்பட்ட சொந்த அதிகாரத்துக்காகவே .நாங்கள் எம்மை நிறுத்திக் கொள்வது எதற்காக!

இங்கு தான் உனது போராட்டத்தின் சரியான தன்மை உறுதி செய்யப்படுகின்றது. நாம் மக்களுக்காக, அவர்களின் சொந்த விடுதலைக்காக சொல்ல வருவதை தடுத்து நிறுத்த முனையும் போது, நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை எதிரி தெளிவாக்குகின்றான். நாம் முன்னே கால்களை தூக்கி வைத்துள்ளோம் என்ற அரசியல் உண்மையை புரிந்து கொண்டு, செயல்பாட்டை மேலும் ஆழமாக்க வேண்டும்.

நாங்கள் ஒரு விடையத்தை மிகத் தெளிவாக புரிந்து கொண்டேயாக வேண்டும். மக்கள் தங்கள் சொந்த எதிரிகைளை, தமது சொந்த வாழ்க்கை அனுபவத்தின் ஊடாக தெளிவாக புரிந்துள்ளனர் என்பதை நாம் கண்டு கொள்வதில்லை. இது மிக முக்கிய தவறுக்கு எம்மை இட்டுச் செல்லுகின்றது. மக்கள் ஒவ்வொருவரும் யாரைக் கண்டு பீதியடைகின்றனர். யாரைக் கண்டு கதைக்க அஞ்சி நடுங்குகின்றனர். அதன் விளைவு எப்படிப்பட்டது என்பதை சொந்த வாழ்வில் புரிந்து செயலாற்றுகின்றனர். நாம் புரிந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு மக்களும், யாரையெல்லாம் கண்டு அஞ்சுகின்றனர் என்பதையே. அவர்கள் தான் மக்களின் எதிரி. மக்கள் பீதியினால் மனதுக்குள் புளுங்குகின்றனர். மக்களுக்குத் தெரியும் எதிரியின் ஒவ்வொரு கால்களையும். இதைப் பற்றி மக்களுக்கு நாங்கள் புதிதாக ஒன்றும் சொல்லவேண்டிய அவசியமில்லை. மக்களுக்கு எதிரிகள் பற்றி புரியவைக்கவேண்டிய அவசியம் கிடையாது.

அப்படியாயின் பிரச்சனை எங்கே உள்ளது. இங்கு மக்கள் அங்கும் இங்குமாக நம்பிக்கையுடன் வாக்களிக்கும் மனநிலையில் ஊசலாடுகின்றனர். தப்பிச் செல்ல வழி தேடுகின்றனர். இதற்கான பாதை தெரியாது தனிமைப்பட்டு நிற்கின்றனர். செய்ய வேண்டிய பணி என்ன? மக்களின் வாழ்வுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்துக் காட்டுவதன் மூலம், மக்களை வழிகாட்டும் வகையில் அவர்களின் சொந்த அரசியல் அதிகாரத்துக்கான போராட்டத்தை நடத்தும் வகையில் உதவுவது. அதாவது அவர்களின் ஒரு அங்கமாக நாம் மாறுவதைத் தான் செய்ய வேண்டியுள்ளது. இது தான் எமது வரலாற்றுப் பணி.

மக்களை நாம் புரிந்து கொண்டு, நேசிக்க கற்றுக் கொள்ளவேண்டும்;. அவர்களின் உணர்ச்சிகளை, சிந்தனைகளை, விருப்பத்தை உயர்த்தி, அவர்களை ஒன்றுபடுத்தும் வகையில் நாம் நிகழ்ச்சியின் சாரத்தைப் பிழிந்து கொடுக்க வேண்டும். அந்த மக்களின் தேவை நோக்கம் ஒன்றாக இருக்கும் போது, நாம் அதற்கு வெளியில் நின்று மற்றொன்றை பற்றி வம்பளக்க முடியாது. எமக்கு, மக்கள் முன்னால் வழிகாட்டி நிற்கின்றனர். மக்களை பின்பற்றி முன்னேறிச் செல்லவேண்டும். இன்று சொந்த தேவைக்காக தேசியத்தை பயன்படுத்துவதை, மக்களை பயன்படுத்துவதையும் கண்டிப்பாக இனம் கண்டு, அதை மக்கள் முன் போட்டுடைக்க வேண்டும்.

மக்கள் அடைந்த துன்பமோ, எங்களை விட அதிகமானது. சொந்த இரத்தத்தைக் கொட்டி, சொந்த உயிரைக் கொட்டி, சொந்த தொப்புள் கொடியை பலியிட்டு, சொந்த உழைப்பை இழந்து அவர்கள் பெற்று இருப்பது ஒரு அடிமை விலங்கைத் தான். அவர்கள் கண்ணீர் துளிகள் வெளிவரமுடியாத அளவுக்கு வற்றிவிட்டது. அந்த மக்களை நாயிலும் கீழாக மிதிக்கும் ஒரு பாசிசம், எம் மண்ணில் கொலுவீற்றுள்ளது. பேரினவாதம் ஒருபுறம், மறுபுறம் புலிப் பாசிட்டுகள். மறுபக்கம் மக்களின் மீட்பாளர்கள் என்று சொல்லிக் கொண்டு மதபீடங்கள் தொடக்கம், கைக்கூலிகள், தன்னார்வக் குழுக்கள் இறுதியாக ஏகாதிபத்தியம் வரை மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்கின்றனர். நாங்கள் வாய்மூடி மௌனவிரதம் இருக்கின்றோம். இதில் சிலவற்றை மட்டும் பேசியே வம்பளக்கின்றோம்.

இவர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தரப்போகிறார்கள். அடிமைத்தனத்தையும், ஆறு அடி சவப்பெட்டியில் மரணித்துப் போகும் அஸ்தமத்தையும் விரைவாக்குகின்றனர். மக்கள் தமக்கு நன்கு தெரிந்த எதிரியை எதிர்கொள்ளத் தெரியாது நிற்கும் நிலையில், அதை வழிகாட்டி அழைத்துச் செல்வதுதான் எம்முன்னுள்ள ஒரேயொரு பணியாகும்.

Saturday, January 7, 2006

மக்கள் படையும் புலிகளும்

மக்கள் படையும் புலிகளும் :
மக்களின் பெயரிலான சமூக விரோதக் காடையர்களின் வன்முறைகள்


பி.இரயாகரன்
06.01.2006


நாம் ஏன் இவர்களை காடையர்கள் என்கின்றோம்? மக்களின் சமூக பொருளாதார உறவுகளுடன், எந்த சமூக உறவுமற்றவர்கள் நடத்துவது காடைத்தனம் தான். இதை யாரும் தேசியம் என்று கூறமுடியாது. தமது அரசியல் என்ன, தமது நோக்கமென்ன எனக் எதுவும் கூறத் தெரியாதவர்கள், மக்களின் பெயரில் நடத்தும் அனைத்தும் சமூகவிரோதத் தன்மை கொண்டவையே. இவை காடைத்தனமாகவே எப்போதும் சமூக உள்ளரங்கில் அரங்கேற்றப்படுகின்றது.

இந்த நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பெயரில் அரங்கேறும் வன்முறைகளும், படுகொலைகளும் மிகவும் இழிந்துபோன ஒரு சமூக பாத்திரத்தையே வகிக்கின்றன. மக்களின் பெயரில் நடத்தப்படும் தீயிடல், மனித கழுத்தை அறுத்தல் முதல் கிளைமோர் தாக்குதல் வரை அனைத்தும், காடைத்தனத்துக்கென பயிற்றப்பட்ட புலிகளால் தான் செய்யப்படுகின்றது. ஆனால் இதை புலிகள் மறுப்பதும், விதண்டாவாதமாக அறிக்கைகள் விடுவதும் அன்றாடச் செய்திகளாகின்றன. சமூகத்தையே பொய்களால் கற்பழிக்கின்றனர். சரி, ஏன் இந்த நடவடிக்கை எதையும் புலிகள் கண்டிப்பதில்லை. கருணாவுக்கு எதிராக படையெடுத்துச் சென்றவர்கள், ஆனால் இவர்களை ஒழிக்க "ஏகபிரதிநிதிகள்" முற்படவேயில்லை. இப்படி அம்பலமாகின்றது புலியின் அரசியல். இந்த நிலையில் உண்மையில் இதை மக்கள் தான் செய்கின்றனர் என்பதை, உலகில் யாரும் நம்புவது கிடையாது. புலிகள் கூட அதை நம்புவது கிடையாது. அப்படியானால் யாரை நம்பவைக்க முனைகின்றனர். இங்கு அரசியல் சூனியம் நிலவுகின்றது.

சர்வதேச சமூகம், இலங்கை அரசு, ஏன் தமிழ் மக்கள் கூட இதை மக்கள் செய்வதாக நம்புவது கிடையாது. யாருமே நம்பாத ஒரு செய்தியை சொல்லி, இந்த வன்முறைகளை நடைமுறைப்படுத்துகின்றனர் புலிகள். செய்திப் பத்திரிகை பொய்களால் நிறைந்து விற்பனையாகின்றது. முழுச்செய்தி அமைப்பைபும் பொய்களால் புணருகின்றனர். பொய், பித்தலாட்டம், மோசடி, முடிச்சுமாற்றி என, மனித குலத்தில் இழிந்து போன சமூக வடிவங்கள் மூலம் இவை அனைத்தும் நியாயப்படுத்தப்படுகின்றது. இது எடுத்துக் காட்டுவது, அரசியல் ரீதியான தொடர்ச்சியான புலியின் வங்குரோத்தைத் தான். இன்று மக்கள் தான் இதனைச் செய்கின்றனர் என்று யாரும் நம்பாத போது, இது ஒரு ஆய்வுக்குரிய விடயமல்லத்தான். எம்முன் இங்கு ஆய்வுக்குரிய விடையமாக இருப்பது, இதை மக்கள் போராட்டம் என்பது தான். இதன் மூலம் மக்கள் போராட்டம் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கேடுகெட்ட மனிதவிரோத வன்முறைகளின் அரசியல் பண்பைத்தான்.

தாமே வலிந்து உருவாக்கிய தமது சொந்த அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது, வக்கற்றுப் போன குறுகிய புத்தி கொண்ட தலைவர்கள், மக்களின் பெயரிலான நேர்மையற்ற வகையில் ஒரு அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். தாம் வலிந்து உருவாக்கிய குறுகிய நலன்கள் சார்ந்த அரசியல் நலன்கள் நெருக்கடியில் சிக்கிவிடவே, மக்களை அதற்குள் மக்களின் பெயரில் பலியிட முனைகின்னர். நயவஞ்சகத்தின் ஒரு எடுத்துக்காட்டாக மாறி, மனிதத்துவத்தை புதைகுழியாக்குகின்றனர். மக்கள் எந்தளவுக்கு இழிநிலைக்கு தாழ்த்தப்படுகின்றார்களோ, எந்தளவுக்கு அடிமைப்படுத்தப்படுகின்றார்களோ, அந்தளவுக்கு அவர்களின் பெயரால் எதையும் செய்துவிடுகின்றனர். ஒரு அராஜக சூழல் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்படுகின்றது. தமிழ்த் தலைவர்களின் சின்னத்தனங்களை, வக்கிரமாகவே சமூகத்தின் மீது புகுத்துகின்றனர்.

மக்கள் போராட்டம் என்ற பெயரில் வெளியில் இருந்து வரும் ஒரு சிறுகுழுவால், சிலவேளைகளில் 25, 50 பேர் கொண்ட குழுவால் முழு சமூகத்தையுமே அதிரவைக்கும் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடுகின்றர். கொலைவெறி கொண்டதும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயல்பாடுகளை, மக்கள் போராட்டம் என்ற பெயரில் நடத்துகின்றனர். இந்த அராஜகத்தின் போது ஒருவர் கொல்லப்படும் போது, மக்கள் பெறுவது என்ன? மக்கள் தமக்குத் தானே விலங்கை பூட்டிக் கொள்வது தான். இது தான் மக்கள் போராட்டத்தின் முடிவாகின்றது.

வடக்குகிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்கள் நடவடிக்கை என்ற பெயரில், சிறுகும்பல் மக்களின் உள்ளார்ந்த சமூக நடவடிக்கைக்குள் பதுங்கிக் கொள்கின்றது. பின் அதற்குள் இருந்து அராஜகத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர். எதிரியால் சூழப்பட்டதும் மிகவும் நெருக்கமான அவர்களில் கால்களில் மிதிபடாமால் வாழும் மக்கள், தாமுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்கின்றனர். இதைத்தான் இன்றைய தமிழ் தேசிய தலைவர்கள் என்று கருதப்படும் ஆயுதமேந்திய ஏகப்பிரதிநிதிகள், இதை மட்டும் தான் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேச தமிழ் மக்களுக்கு விட்டு வைத்திருந்தனர். மக்கள் அவர்கள் சம்பந்தப்படாத இந்தப் போராட்டங்களில் இருந்து, அன்னியமாகி ஊமைகளாக நடைப்பிணமாக வாழ்கின்றனர். புலிகள் மக்களை கண்டு அஞ்சுவதால், அவர்களுக்கு வாய்பூட்டு போட்டு துப்பாக்கியால் தமிழ் மக்களை வேட்டையாடியும் கண்காணிக்கின்றனர். உண்மையில் மக்கள் புலிகளையும், புலிப் போராட்டங்களையும் வெறுக்கின்றனர். அந்தளவுக்கு மக்கள் நலனை முன்னெடுக்காத இப்போராட்டம், அவர்களின் வாழ்வை நாசமாக்கி வருகின்றது. யுத்த சூழலிலும், யுத்தமற்ற சூழலிலும் கூட, மக்களின் அன்றாட வாழ்வு அச்சத்துடனும், பீதியுடனும் மற்றவர்களைக் கண்டு அஞ்சி பயந்து வாழவேண்டிய அவலமான ஒரு நிலையில் வாழ்கின்றனர். கடவுளுக்கு பயந்து கையெடுத்து இரந்துவேண்டி காணிக்கையிட்டு கும்பிடுவது போன்று, ஆயுதம் ஏந்திய "ஏகபிரதிநிதி" புலிகளை இரந்து கையெடுத்துக் கும்பிடுவதுடன், அவர்கள் கேட்கும் காணிக்கைகளை கொடுக்க வேண்டிய ஒரு நிலையில் தமது வாழ்வையே அவர்களுக்காக அழித்து வருகின்றனர். மக்களின் உழைப்பை புடுங்குவதன் மூலம், சமூகத்தின் ஒரு பகுதி உழையாது வன்முறை கொண்ட கும்பலாகவே வாழத் தொடங்கியுள்ளது. இது இன்று மக்களுக்குள் புகுந்துகொண்டு கட்டவிழ்த்துவிடும் அராஜகத்தையே, மக்கள் போராட்டம் என்கின்றனர். உண்மையில் இந்த அராஜகம் மக்கள் மேல் தான் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. சிறிலங்கா இராணுவம் மீதான தாக்குதல் என்ற போர்வையில், மக்கள் மேலான அராஜகமாகவே இது திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. பொதுவாக இத்தாக்குதல்கள் சிறிலங்கா இராணுவம் மேலானதாக காட்டப்பட்ட போதும், உண்மையில் பரந்துபட்ட மக்களின் மேல்தான் இந்த அராஜகம் கொடிய விலங்கிட்டுள்ளது. அராஜகம் சுற்றுவழிப் பாதையைக் கொண்டது. மக்களின் வாழ்வுடன் சம்பந்தப்படாத ஒரு சிறு கும்பல் நடத்தும் கண்மூடித்தனமான வன்முறையினால், மக்களின் துன்பம் என்றுமில்லாத வகையில் பெருக்கெடுக்கின்றது. மனிதத்துவம் சிதிலமடைகின்றது.

மக்களின் துன்பம் தான் புலிப் போராட்டத்தின் ஆன்மா என்பதே பிரபானிச சித்தாந்தமாகும். இதனால் மக்களை துன்பப்படுத்தும் வகையில், புலிகள் திட்டமிட்ட செயல்பாடுகளை எப்போதும் அமைத்துக் கொள்கின்றனர். இதற்கு ஈவிரக்கமற்ற எந்தவிதமான இழிந்துபோன காட்டுமிராண்டித்தனத்தையும் கூட செய்துவிடுகின்றனர். எதிரியிடம் மக்கள் துன்பப்பட்டால் தான், அவர்களுக்கு தேசிய போராட்ட உணர்வு வரும் என்பது பிரபானிச சித்தாந்தமாகும். மக்களை வதைத்து துன்பப்படுத்தும் வகையில், நடவடிக்கையை திட்டமிடுவதே புலியின் அன்றாட வழிமுறையாகும். பின் தயாரிக்கப்பட்டு தயாராக வைத்துள்ள சரக்கை காட்டி, பார் எதிரியை என்று கூறுவது அன்றாடச் செய்திகளாகின்றன. இதை ஆய்வு செய்து நியாயப்படுத்துபவர்கள் தமிழ் தேசிய ஆய்வாளராகின்றனர். மாமனிதனுக்குரிய தகுதியையும், தேசப்பற்றாளர் என்ற தகுதியையும் பொறுக்கித் தின்றே பெறுகின்றனர். இதன் மூலம் மக்களிடம் அன்னியமாகிய தமது குண்டர் படைச் செயல்பாட்டுக்குரிய ஆட்கள் கிடைப்பார்கள் என்ற தேசிய சித்தாந்தம், மக்களுக்கு கொடுப்பது துன்பத்தையும் அடிமைத்தனத்தையும் தான்.

உண்மையில் மக்களின் வாழ்வுடன் சாராத இந்த வன்முறையை யார், எப்படி நடத்துகின்றனர்? காடையர்களுக்கே உரிய உதிரி கும்பல்கள் நடத்தும் ஒரு காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை மூலம், சூழலை வன்முறைக்குள்ளாக்குகின்றனர். வன்முறையைத் தொடங்கும் போது, விடுப்பு பார்க்கும் பார்வையாளர் கூட்டம் கும்பலாக கூடுகின்றது. அதை மக்கள் என்று காட்டியபடி, கும்பலில் இருந்தே கல் எறிந்து வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இதற்கென தயராக உள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர், குறித்த அந்தச் சூழலில் கொலைவரை செய்து விடுகின்றனர்.

பொதுவாக பாடசாலைகளில் புகுந்து கொள்ளும் இந்த பயிற்றப்பட்ட வன்முறை கும்பல், மாணவர்களின் பெயரில் அனைத்தையும் செய்துவிடுகின்றனர். அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட இராசதுரை படுகொலையை இந்தப் பின்னனியில் வைத்து பார்க்க வேண்டியுள்ளது. இராசதுரை கொலைக்கு எந்தக் காரணத்தையும் கொலையாளிகளும் சரி, அவர்களின் பினாமிகளும் கூட முன்வைக்க முடியாது போயுள்ளது. இந்த நிலையில் கொலைக்கான காரணம் என்ன என்று பார்த்தால், இன்றைய வன்முறையுடன் தொடர்புபடுத்தியே இதைக் காணமுடியும்.

அதிக உயர்தர மாணவர்களைக் கொண்ட, மிக முக்கியமான மையத்தில் உள்ள ஒரு பிரதான பாடசாலையினுள், வன்முறைக் குண்டர்களை இணைத்துக் கொள்வதற்கு அவர் அனுமதிக்கவில்லை என்பது மிக முக்கியமான காரணமாகும். மாணவர்கள் பெயரில் வன்முறைக் குண்டர்களை பதிவுசெய்ய மறுத்ததும், வன்முறையாளர்கள் பாடசாலையை மாணவர் உடையில் பயன்படுத்த மறுத்தமையும், இக் கொலைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

மக்கள்படை என்ற பெயரில் செயல்படும் காடையர்களை, மக்களுடன் கலந்துவிட மறுக்கும் அனைத்தையும், சமூக விரோதமாக கருதிக் கொன்று விடுவதும் நிகழ்கின்றது. இதற்கு உரிமைகோராத மரணதண்டனைகள் விதிக்கப்படுகின்றன. பின் அதற்கு கடிவாளம் பூட்டி, பினாமிகள் மூலம் தூற்றப்படுவது நிகழ்கின்றது. கொலையாளிகள் தாம் ஏன் சுட்டோம் என்று, எந்த சுயவிளக்கத்தையும் கூறுவது கிடையாது. இதன் பின்னால் நக்கித் திரியும் லும்பன் வாழ்வு கொண்ட கும்பல் தான், நக்கியதுக்கு ஏற்ப தாம் விரும்பிய விளக்கங்களைத் தருகின்றனர்.

பேரினவாதம் தமிழ் மக்களின் பிரச்சனையையே, வெறும் புலிப் பிரச்சனையாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டது. இதை இனி தமிழ் மக்களின் பிரச்சனையாக, புலிகள் உள்ளவரை கொண்டுவரவே முடியாது. இந்த நிலையில் மக்களின் பெயரில் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள், வெறும் புலிப்பிரச்சனையாக இருப்பதையும், மீண்டும் உலகை நம்பவைக்கும் மற்றொரு எடுத்துக்காட்டாக மாறிவருகின்றது. உண்மையில் இன்று இது ஒரு புலிப்பிரச்சனையாக மட்டும் இருப்பதைத் தான், அவர்களின் சொந்த நடவடிக்கைகள் எடுத்தக் காட்டுகின்றது. புலி நடத்தைகள், பேச்சவார்த்தை நிபந்தனைகள் என அனைத்தும் இதற்குள் மீண்டும் மீண்டும் புணரப்படுகின்றது.

மக்களின் பெயரில் புலிகள் நடத்தும் அராஜக வன்முறை நடத்தைகள், அரசியல் நேர்மையீனத்தில் இருந்தே எழுகின்றது. எதிரியை நேர்மையாக எதிர் கொண்டு, அதை மக்களுக்கு விளங்கப்படுத்தி, அவனை எதிர்க்க வக்கற்ற கோழைத்தனத்தின் விளைவே இவை. எப்போதும் எங்கும் பொய்யும் புரட்டும் அரசியலாகிவிடுகின்றது. உங்கள் மனச்சாட்சியிலேயே இதுவே எதிரொலிக்கின்ற போது, இதை உண்மையென்று உலகில் யாரும் நம்புவது கிடையாது. எந்தச் செய்தியும் பலத்த சந்தேகத்துக்கு உள்ளாகின்றது. கொலையை செய்துவிட்டு, அதற்கு தமது பக்க நியாயத்தைக் கூட கூறுவது கிடையாது. மாறாக கொல்லப்பட்டவன் தரப்பே கொன்றதாக கூறும் அத்திவாரமேயற்ற பொய் மூட்டைகளில் ஏறி நின்று, தமிழ் தேசியத்தை யாராலும் பாதுகாக்க முடியாது.

இவர்கள் செய்ததைக் கூட நியாயப்படுத்த முடியாத வகையில், அரசியல் வங்குரோத்து காணப்படுகின்றது. எங்கும் எதிலும் நேர்மையீனம் காணப்படுகின்றது. இன்று நடக்கும் பரஸ்பர எதிர் நடவடிக்கையில் மக்களுக்கு எதிராக எதிரி எதைச் செய்கின்றான் என்பதை கூட, கண்டறிய முடியாத நிலையை அடைந்துள்ளது. இதனால் எதிரி லாபம் அடைகின்றான். நடக்கும் கொலை யாரால் ஏன் என்ற கேள்வியும், காணமல் போவோர் யாரால் ஏன் என்ற சந்தேகமும் சமூகத்தில் ஏற்பட்டுவிட்டது. இரத்தக் கறைபடிந்த பினாமிகளும், அதையே கறந்து குடிக்கும் செய்தி ஊடகங்களும் பொய்யை ஆயிரம்தரம் மீண்டும் மீண்டும் சொன்னாலும், அதை நம்பவதற்கு என்று யாரும் கிடையாது. இதை பினாமிகளும், விசுவாசிகளும் கூட விதண்டாவாதத்துக்கு வம்பளப்பதே ஒழிய, இதை உண்மையாக அவர்கள் கூட நம்புவது கிடையாது.

அண்மையில் புங்குடுதீவில் நடந்த தர்சினி படுகொலை கூட, ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த உதிரிக் கும்பல் நடவடிக்கைக்கு உள்ளாகியது. 18.12.2005 இது அன்றாடச் செய்தியில் (17.12.2005 அல்லது 16.12.2005 அன்று சம்பவம் நடந்தது.) வெளியாகிய போதே, ஆச்சரியப்படத்தக்க வகையில் கற்பழிக்கப்பட்டதாகவும், அதன் பின் கொலை செய்து இராணுவம் வீசியதாகவும் அவசர அவசரமாக புலிகள் செய்தியாக்கினர். அவர்கள் சார்பு இணையமான நிதர்சனம் கொம் ஞாயிற்றுக்கிழமை -18 டிசெம்பர் 2005 "றாஜபக்ச பதவிக்கு வந்து 1 மாதத்தில் முதலாவது தமிழ் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார் " என எழுதியது. மீண்டும் புதன்கிழமை- 21 டிசெம்பர் 2005 "ஸ்ரீலங்கா கடற்படையினரின் வெறியாட்டத்தில் உயிரிழந்த தர்மினி இளையதம்பியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று யாழ்ப்பாணம் ஸ்ரீ லங்கா காவற்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை மருத்து பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது." என்ற செய்தி வெளியாகியது. இந்த அடிப்படையில் தான் தமிழ் ஊடகவியல் செய்திகள் கட்டமைக்கப்பட்டதும், வன்முறைகள் சிலரால் நடத்தப்பட்டதும், அறிக்கைள் கண்டணங்கள் என அனைத்தும் விடப்பட்டன.

இதில் பலத்த சந்தேகம், நம்பகத் தன்மை ஊகங்கள் என பலவுண்டு.

1. மருத்துவ அறிக்கை வரமுன்னமே கற்பழிப்பு நடந்தாக கூறியது எப்படி?


2. இரண்டாவது இராணுவம் மற்றும் கடற்படை மட்டும் தான் இதைச் செய்தது என எப்படி கூற முடியும்?


3. ஏன் தனிப்பட்ட பழிவாங்கலாக, இப்படி நடக்கமுடியாது?


4. வன்முறையைத் தூண்ட மக்கள் படை இதை ஏன் செய்திருக்க முடியாது?


இராணுவம் முதல் மக்கள் படை வரை இது போன்ற காடைத்தனங்களில் ஈடுபடும், ஆணாதிக்க மக்கள் விரோதத் தன்மை கொண்டவை தான். இங்கு இராணுவ கற்பழிப்புகள் ஒருபுறம் நிகழ்கின்றது என்றால், மறுபுறம் இது போன்றவை புலிகளாலும் செய்யப்பட்டுள்ளன. இன்று வன்முறையைத் தூண்டக் கூடிய வகையில், இது போன்ற நடவடிக்கைகளை திட்டமிட்டு செய்யக் கூடியவர்கள் யார் என்ற கேள்வியில், விடை அனைவருக்கும் தெரிந்ததுதான். வன்முறையைத் தூண்டக் கூடிய வகையில், இது போன்ற காடைத்தனங்களை திட்டமிட்டு தேசியத்தின் பெயரில் செய்யக் கூடியவர்கள் தான். இந்த விடையத்தில் பல தளத்தில் கேள்விகள் உள்ளன. அடிப்படையில் நேர்மையற்ற நடவடிக்கைகள் பெருகும் போது, அதுவே அரசியலாகின்ற போது, இது போன்றவற்றில் சந்தேகங்களை பல தளத்தில் விட்டுச் செல்லுகின்றது.

சடலமாக மீட்கப்பட்ட படங்களில் கொலை செய்யப்பட்ட தரிசினியின் உடலில் உடுப்புகள் நேர்த்தியாக இருக்கின்றன. இது எப்படி சாத்தியம்? பின்தங்கிய ஒரு கிராமம் ஒன்றில் கிணற்றில் இருந்து எடுக்கும் உடலைக் கூட படமெடுத்து, அதுவே புலியின் சொந்த அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது! ஆச்சரியப்படத்தக்கவகையில் இது திட்டமிடப்பட்டதா என்ற கேள்வியை இவைகள் விட்டுச் செல்லுகின்றது.

இந்த தரிசினியின் பின் வேறு பல அபிப்பிராயங்கள் புலிகள் அல்லாத தளத்தில் வெளியாகின்றன. அதில் கடற்படை ஒருவரிடம் நட்பு கொண்டிருந்ததாகவும் கூட செய்திகள் உள்ளன. அதுபோல் கடற்படையினருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின்றன. அவர்கள் வழமை போல் தேசத்தின் பெயரில் மக்களின் பெயரில் கொல்லும் நபர்கள், இதை ஏன் செய்திருக்கமுடியாது? அண்மையில் யாழ்பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட "விபச்சாரி" யின் கதையை இது ஒத்தது. விடைதெரியாத கேள்விகள், சந்தேகங்கள் பல உண்டு.

உண்மைக்கும் நேர்மைக்கும் அருகதையற்ற நிலையில் எமது சமூக உள்ளது. எனக்கு நடந்த ஒரு உதாரணத்தை நான் இங்கு கூறமுடியும்;. நான் 1987ம் ஆண்டு உரிமை கோராத ஒரு நிலையில் கடத்தப்பட்டு, புலிகளின் வதைமுகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தேன். காணமல் போன என் விடையத்தில், புலிகள் தாம் சம்பந்தப்படவில்லை என்று பல்கலைக்கழகத்தில் கூட அறிவித்தனர். இந்த நிலையில் காணாமல் போன என்னை, நான் சென்றுவரும் ஒரு வீட்டுக்கு அவர்கள் கொண்டு செல்ல வேண்டிய நிலையேற்பட்டது. புலிகள் தான் தாம், என்று உரிமைகோர முடியாத இவர்கள் என்ன செய்தார்கள். கை,கால், கண், வாய் என அனைத்தையும் கட்டி இரவு 12 மணிக்கு என்னை எடுத்துச் சென்றனர். தம்மை இனம் காணாத வகையில் மூகமூடிகளை, பொய்த் தலைமுடிகளை போட்டுக் கொண்டனர். அத்துடன் கறள் பிடித்த வாள் கத்தியுடன், இடுப்பில் ஆயுதத்தை மறைத்து வைத்தபடி என்னைக் கொண்டு சென்றனர். 10 மைல் தூரம் பிரயாணம் செய்த அவர்கள் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு அன்று அகதிகளாக பல பத்து மக்கள் தங்கியிருந்தனர். அங்கு அவர்கள் தம்மை எனது இயக்கத்தின் பெயரில் அறிமுகப்படுத்தியதுடன், இயக்கத்தை நான் மோசடி செய்தாக கூறி அனைத்தையும் நடத்தி முடித்தனர்.

அடுத்த நாள் அச்சுற்றுவட்டாரத்தில் இச் செய்தி கதையாக பரவியது. மக்கள் மத்தியில் நான் காணமால் போனதற்காக எனது இயக்கமே காரணம் என்று புனையப்பட்டது. இதை மறுத்தவர்களுக்கு அவர்களே பதில் கூறினர். புலிகள் நவீன ஆயுதத்துடன் தான் வருவார்கள், வாள் கத்தியுடன் முகமூடியுடன் வரமாட்டார்கள் என்றனர். அத்துடன் இப்படி வரக் கூடியவர்கள் எமது இயக்கமே என்றனர். என்ன வக்கிரம். இப்படித்தான் அன்று முதல் இன்றுவரை நிகழ்கின்றது. நான் தப்பும் வரை இதுவே புலிப் பினாமியத்தின் செய்தியாகவும், நம்பகமான ஒன்றாகவும் கூட காட்டப்பட்டு இருந்தது. (இவைகளை உள்ளடக்கிய வகையில், வதைமுகாமில் எனக்கு என்ன நடந்தது என்பதை 300 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக "வதை முகாமில் இருந்து தப்பிய தூக்கு மேடைக் கைதியின் நினைவுகள் அழிவதில்லை" என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். இன்றைய நிலையில் இந்த நூல் எனது மரணத்தின் பின் வெளிவரும் வகையில் பாதுகாத்து வைத்துள்ளேன்.) இப்படி புலிகளின் செயல்கள் எல்லாவகையான இழிவான மனித விரோதத் தன்மை கொண்டவை. எதையும் எப்படியும் செய்யக் கூடியவர்கள். இதற்கு ஒரு எடுத்துக் காட்டுத் தான் இது. இதற்கு அண்மையில் நடந்த மற்றொரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம்.

இது அவர்களின் நேர்மையீனத்தையும், செய்திவெளியிடும் வக்கிரத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. புலியின் மக்கள்படையைச் சோந்த பொங்கு தமிழ் பினாமி பேராசிரியர் கணேசலிங்கம் 13 வயது குழந்தையை தொடர்ச்சியாக கற்பழித்த போது, இதே புலி நிதர்சனம் கொம் முதல் செய்தியை தந்தது. பின் தமது குண்டர் படையாள் என்று தெரிந்தவுடன் குத்துக்கரணம் அடித்து என்ன சொன்னது என்று பாருங்கள்.

"தமிழ் ஊடகங்களுடன் சேர்ந்து நிதர்சனம் விட்ட தவறுக்கு மனம் வருந்துகின்றது. வெள்ளிக்கிழமை 9 செப்ரெம்பர் 2005 - சிறுமி தற்கொலை முயற்சி பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது என்று எமது செய்தித் தளத்தில் வெளியான செய்தி தொடர்பாக மனம் வருந்துகின்றோம். திட்டமிட்ட முறையில் முதல் தடவையாக யாழ் மாவட்டத்தில் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் வெளிநாட்டு உளவுச் சக்திகளினால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாகப் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள போதும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் சில நகர்வுகள் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக அவதானிப்போரின் நலன்கருதியும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதும், ஒரு சில விடயங்கள் ஊடாக ஏனையவர்களுக்கும் ஒரு அவசர விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விரும்புகின்றோம்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி ஏற்கனவே 3 ஆண்களுடன் நீண்டகால பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்று ஆரம்பகட்ட மருத்துவரின் தகவல்கள் தெரிவிக்கின்றது."

" நீண்ட கால உறவு" என்றால் கணேசலிங்கம் தானே தொடர்ச்சியாக கற்பழித்து வந்தவன். " வெளிநாட்டு உளவுச் சக்தி" சதி, "பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் சில நகர்வுகள் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக அவதானிப்போரின் நலன்கருதியும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று பலவாக கூறும் நேர்மையற்ற வக்கிரம் வெளிப்படுகின்றது. இப்படி உண்மையை மூடிமறைத்து பொய்களால் புணர்ந்த போது, இந்த செய்தியின் உண்மைத் தன்மை என்ன. முன்பு மூன்று ஆணுடன் தொடர்பு கொண்டவர் என்று புலிகள் ரோச்சடித்து தொழில் செய்தவர்கள் போல் கூறுகின்றனர். இங்கு தரிசனி கற்பழிப்பு பற்றியும் ரோச்சடித்து நின்ற வகையில்தான் கருத்துக் கூறுகின்றனர்.

ஒரு 13 வயது சிறுமையைப்பற்றி எழுதும் இந்த சமூக விரோதக் ஆணாதிக்க காடையர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. பல வருடமாக அந்த வீட்டில் வேலைகாரியாக மட்டுமின்றி, பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானவர் அக் குழந்தை. 13 வயதை அடைந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற அக் குழந்தை, சிறு வயதிலேயே அந்த வீட்டில் அடிமையாக்கப்பட்டவர். கல்வி மறுக்கப்பட்டு அந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டவர். அந்த சிறு குழந்தையைத் தான் புலிகள் மறுபடியும் தமது சொந்த வக்கிரத்தால் புணர்ந்தனர். புலிகளா மற்றைய மூன்று ஆண் தொடர்பாளர்கள்? செய்தியை புணர்ந்த விதம் இப்படித் தான் இதைக் காட்டுகின்றது. இது தான் புங்குடுதீவு தரிசினிக்கும் நிகழ்ந்தது. ஏன் அந்தக் குழந்தை தற்கொலை செய்ய முயன்றது. ஆண்கள் பலர் கிடைக்காமையாலா! அந்தக் குழந்தை கற்பழிக்கப்பட்டவுடன், பூதக்கண்ணாடி கொண்டு தேடிய புலிகள், மூன்று ஆண்களுடன் தொடர்பு என்று எழுதுகின்றது. அந்த மருத்துவ அறிக்கை எங்கே? என்ன வக்கிரம். இப்படித் தான் அனைத்து செய்திகளும். கற்பழிக்கப்பட்ட தரிசினிக்காக புலம்பும் இதே செய்தி ஊடகம் தான், இதையும் செய்தியாக வெளியிட்டு தமிழ் மக்களையே புணர்ந்தது.

சரி சிறு குழந்தையை வீட்டில் வேலைக்கு வைத்திருப்பது எப்படி சரியாகும்?. தமிழீழத்தில் பிரபாகரனின் ஆட்சியில் ஏழைக் குழந்தைகளை வீட்டு வேலைக்காக வைத்திருப்பீர்கள். கற்பழித்துவிட்டு முன்னமே ஆண்களுடன் தொடர்பு என்று சொல்லுவீர்களோ! இப்படித் தான் புலிச் சட்டம் உள்ளது. உங்கள் தமிழீழத்தில் குழந்தைகளை பாலியல் பண்டமாக பயன்படுத்துவீர்கள். சரி நீங்கள் கூறுவது போல் அந்த குழந்தை மூன்று ஆண்களுடன் உறவு கொண்டது என்று வைத்துக் கொள்வோம், அப்படியாயின் தமிழ் தேசிய உணர்வாளர்கள் இப்படியான பெண்களுடன் உறவு கொள்ளாலாமோ! அதைத்தான் பிரபாகரனின் பிரபானிசம் வழிகாட்டுகின்றது. அதனால் தான் புலிப் பினாமித் தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தம் வெட்கத்தை விட்டு, கோவணத்துடன் நீதிமன்றத்தில் படியேறி நின்று வழக்குரைத்தனர்.

இப்படி புணர்ந்து செய்திகளையும், தேசியத்தையும் வக்கிரப்படுத்தியவர்கள், நியாயப்படுத்தியவர்கள், அதையே வழக்காடியவர்கள், தரிசினியின் விடையத்தில் எப்படி நேர்மையாக செயல்படமுடியும். எல்லாவிதமான சந்தேகத்தையும் விட்டுச் செல்வதை, இது எந்தவித்திலும் தடுத்துவிடவில்லை. இதுபோன்றே மக்களின் பெயரில் நடத்தும் காடைத்தனங்கள் அனைத்தும், சிலர் மட்டுமே செய்கின்றனர். காடைத்தனத்தை செய்வதற்கு என பயிற்றப்பட்ட புலிகள், மக்களின் பெயரில் ஒரு காடையர் கும்பல் போல் மக்களுக்குள் நின்று வக்கரிக்கினர். உண்மை, நீதி, நியாயம் என எதுவுமற்ற வகையில், மக்களின் வாழ்வை நாசமாக்குகின்றனர்.


எதிரியின் அரசியல் ஆளுமைக்கு முன்னால், தலைகுனிந்து மண்டியிட்டு செல்லும் அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. எதிரியின் போலியான நயவஞ்சகமான அரசியலை எதிர்த்து, சரியான அரசியலை முன்வைத்து நேர்மையாக அவன் மண்கவ்வும் வண்ணம் போராடமுடியும். சமூக அறிவும் கல்வி அறிவுமற்ற ஒரு குறுகிய புத்திகொண்ட போராட்ட தலைமையினால் இதைச் செய்யமுடியாது. மக்களை மிக இழிவான வகையில், முரட்டுத்தனமாகவும், பலாத்காரமாகவும் தமக்கு பயன்படுத்தம் வகையில் அரஜாக சூழலுக்குள் தள்ளிச் செல்லுகின்றனர். இது அல்லாத வகையில் ஒரு போராட்ட சூழலை ஏற்படுத்த முடியாத ஒரு அரசியல் வறுமை கொண்ட தலைமை, இப்படித் தான் எம்மை வழிகாட்டுகின்றது.

ஒரு கட்டத்தில் மக்கள் படை என்ற பெயரிலான அறிவிப்பில், நாங்கள் 250 பேர் எதற்கும் தயாராக இருப்பதாக கூறியது. மக்கள் போராட்டம் என்ற பெயரில் யாழ்குடாவையே ஆட்டிபடைப்பவர்கள் 250 மக்கள் மட்டும் தான் என்பதை ஒத்துக் கொண்டனர். இந்த 250 குண்டர்களும், அராஜக வழியில் மக்களுக்குள் நின்று நடத்தும் வன்முறைக்கு தான் புலிகள் மக்கள் படை என்கின்றனர். இப்படித் தான் தாங்களே தமக்குள் பல பத்து படைகள். மக்களை அச்சுறுத்தவும், பீதியில் மக்களை உறையவைக்கவும் இந்த குண்டர் படைகள் தேவைப்படுகின்றது.

உண்மையில் புலிகள் என்ன செய்ய நினைக்கின்னர். மக்களின் இயல்பான வாழ்வை முடக்க விரும்புகின்றனர். கடந்த பத்துவருடமாக யாழ்குடாவில் இராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நிலவிய இணக்கமாக இணங்கி வாழும் சூழலை தகர்க்க விரும்புகின்றனர். இராணுவத்தை சீண்டுவதன் மூலம், இராணுவத்துக்கே உரிய மிருக வெறியை வன்முறையாக்கி, அதை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட விரும்புகின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை என்றால், இராணுவ வன்முறைதான் என்று கூற காரணங்களை தேடி வன்முறையை தூண்டுகின்றனர். இதில் சமாதானம், அமைதி ஒப்பந்தம் வேறு. அதற்கு தாம் விசுவாசமாக இருப்பதாக விளக்கம் வேறு வழங்குகின்றனர்.

இப்படிச் சொன்னபடி இராணுவ கெடுபிடியை உருவாக்கும் வகையில், வன்முறையைத் தூண்டும் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இந்த நேர்மையிPமே சமாதான காலம் முழுக்க இருந்தது. ஆரம்பம் முதலே சில நூறு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டடனர். இதை என்றும் எங்கும் யுத்த நிறுத்த மீறலாக புலிகள் கூறுவது கிடையாது. மனிதவுயிர்கள் கொல்லப்பட்ட வரலாற்றில், கடத்தல் கைது என்று வன்முறை எகிறிக் குதித்தது. இராணுவம் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தது. இராணுவ புலனாய்வாளர்கள் சில பத்து பேர் கொல்லப்பட்டனர். புலிகள் கொலைகளை மாபியாத்தனத்தில் செய்து வந்தனர். இந்த பேரினவாத சிங்கள இராணுவம், வன்முறையற்ற ஒரு பொது சூழலை தக்கவைத்தது. மக்கள் புலியைத் தான், தமது சொந்த இயல்பு வாழ்வுக்கு தடையானதாக எதார்த்தம் சார்ந்து கருதத் தொடங்கினார். புலிகள் தொடர்ச்சியாகவே கொலைகளைச் செய்து வந்தனர்.

இதன் பின்பாக புலியில் ஏற்பட்ட கருணா பிளவே, புலியின் மீதான எதிர்தாக்குதலை உருவாக்கியது. இதுவே கொலைகளை பரஸ்பரமாக்கியது. அது வரை (அமைதி சமாதானத்தின் பின்பாக) புலிகள் மட்டுமே கொலைகளை ஒருதலைப்பட்சமாக செய்து வந்தனர். அதுவரை எந்த புலி உறுப்பினரோ அல்லாத ஆதாரவாளரோ கொல்லப்பட்டனரா எனின், இல்லையென்று சொல்லுமளவுக்கு நிலைமை இருந்தது. புலிகள் மீதான கைதுகள் முதல் அனைத்தும் சமாதான ஒப்பந்த விதிக்கு புறம்பாக ஆயதங்களுடன் நடமாடியது போதே நிகழ்ந்தது. தாமே செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு புறம்பாக, கடல் மூலம் கப்பல்களில் ஆயுதம் கடத்திய போதே நிகழ்ந்தது. நிலைமை பொதுவாக இப்படித்தான் இருந்தன. இராணுவம் செய்த அனைத்தும் மக்களுக்கு பகிரங்கமாக தெரியக் கூடியதாக இருந்தது. புலிகள் செய்த அனைத்தும் இனம் தெரியாத நபர்களின் செயலாக கூறப்பட்டது. அவை அனைத்தும் புலிகளே செய்தமையால் தான், அவை அனைத்தும் இனம் தெரியாத நடவடிக்கையாகின. பின்னால் புலிகள் மீதான தாக்குதலை கருணா தரப்பு தொடங்கிய போது, புலிகள் அதை இனம் தெரியாத நடவடிக்கையாக கூறவில்லை. மாறாக ஒட்டுபடையின் நடவடிக்கையாக அதைக் கூறத் தொடங்கியது. உண்மையில் இனம் தெரியாதவை அனேகமாக அனைத்தும் புலிகள் செய்தவையே. மற்றவை புலியில் இருந்து பிரிந்த அதே அமைப்பைச் சேர்ந்த கருணா தரப்பு செய்தது. மிகப் பிந்தியவை (பெரும்பாலும் 2005 நவம்பர் டிசம்பரில் செய்தவை) இராணுவ தரப்பும், புலிகளும் போட்டிபோட்டு செய்கின்றன. பெரும்பாலானவை கொலைகள் பற்றிய அபிப்பிராயம் மற்றும் எதிர்வினை யார் செய்தது என்பதை தெளிவாக்குகின்றது. ஏன் கொலைக்கு எதிர்வினையாற்றிய வடிவம் கூட அதை பிரதிபலிக்கின்றது. இன்று தாம் செய்ததை எதிரி செய்ததாக காட்டுவது கூட நிகழ்கின்றது. பொதுவாக யுத்த நிறுத்த மீறல் என்று புகாரிட்ட போதும் கூட, யார் கொலையாளி என்பது உறுதி செய்தது. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூறும் புலிகள், தொடர்ச்சியான தம் தரப்பல்லாத கொலைகளை யுத்தநிறுத்த மீறலாகவோ, அதை கண்டிக்கவோ முன்வரவில்லை. கொலையை ஆதாரித்தே நின்றனர் என்றால், உண்மையில் அதை அவர்களே செய்தனர். இதுவே இன்று மக்கள் படை என்ற பெயரிலும், ஊர்பெயர் தெரியாத அனாதைப் படைகளின் பெயரிலும் புலிகள் தான் செயல்படுகின்றனர்.

அமைதி சமாதானம் என்ற ஒன்றைத் தாமே தெரிந்தெடுத்து கையெழுத்திட்டுவிட்டு, தொடர்ச்சியாக கொலைகளை செய்து வந்தனர். கடத்திச் சென்றனர். சித்திரவதைகளைச் செய்தனர். அச்சறுத்தல்கள் பலவற்றை செய்தனர். இவை யுத்தநிறுத்த மீறலாக இருந்த போதும் கூட, புலிகள் அதைச் செய்தனர். இந்த யுத்த நிறுத்தத்தை பதிவு செய்வதை தொழிலாக கொண்ட கண்காணிப்பக் குழுவிடம், இதைக் கூட பதிவு செய்ய முடியாத வகையில் பதிவிடங்களில் புலிகள் தமது சொந்த ஆட்களையே நிறுத்தியிருந்தனர். பின்னால் இதையும் கண்காணிப்பு குழு புரிந்து கொண்ட நிலையில், சில ஆயிரம் சம்பவங்கள் யுத்தநிறுத்த மீறலாக பதிவாகின. இவை பெருமளவில் (சில ஆயிரம்) புலிகளால் மீறப்பட்டவை. இதையும் தமிழ் மக்கள் தான் துணிச்சலுடன் முறையிட்டனர். ஆனால் எவையும் முழுமையாக (பல பத்தாயிரம்) பதிவாகவில்லை. பல நூறு கொலைகளில் குற்றவாளிகள் புலிகள் என்ற பதிவாகவில்லை. இப்படி மனிதவிரோத குற்றங்கள் அரங்கேறின. அமைதி சமாதானம் என்ற பெயரில், மக்களின் இயல்பு வாழ்வை நாசமாக்கிய யுத்த நிறுத்த மீறல்களை புலிகளே பெருமளவில் செய்தனர். நடத்த யுத்தநிறுத்த மீறல்களில் இனம்காணப்பட்டு உறுதிபடுத்தப்பட்டவைகளில், 90 சதவிகிதத்துக்கு மேலானவை புலிகளால் மீறப்பட்டவையே. மக்களின் இயல்புவாழ்வை இதுவே நாசமாக்கியது. இதைக் கண்காணிப்பு குழு அறிக்கைகள் உறுதி செய்கின்றன. இந்த அறிக்கையை தமிழ் மீடியாக்கள் வெளியிடுவதில்லை. உறுதிப்படுத்தப்படாத யுத்த நிறுத்த மீறல்களில் 99 சதவீதமானவை புலிகளால் செய்யப்பட்டவை. இதில் 300 மேற்பட்ட கொலைகளும் அடங்கும். கடத்தல் சித்திரவதைகள் எனறு நீளமான பட்டியல் உண்டு. இதைவிட பயத்தின் காரணமாக புகார் இடப்படாத யுத்த நிறுத்த மீறல்களில், 100 சதவீதம் புலிகளால் செய்யப்பட்டது. இது பல பத்தாயிரத்தைத் தாண்டும்.

புலிகளில் ஏற்பட்ட கருணா பிளவு, நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. புலிகள் மேலான தாக்குதல் என்ற புதிய நிலை உருவாகியது. இதையே புலிகள் அரசு செய்ததாக, முதன்முதலாக குற்றம் சாட்டியது. இப்படி புலிக்குள் ஏற்பட்ட பிளவு நிலைமையை மாற்றியமைத்தது. மட்டக்களப்பு கருணா அணி மீது, புலிகள் இராணுவத் தாக்குதலை நடத்தியிருக்காவிட்டால், புலி மீதான வன்முறையும் நடந்து இருக்காது. இதில் வேடிக்கை என்னவென்றால் கருணா அணி மீது புலிகள் தாக்குதலை நடத்த, சிறிலங்கா இராணுவத்தின் உதவியை புலிகள் பெற்றுக் கொண்டது என்பதும் உண்மை. ஆனால் கருணா அணியின் மீதான அழித்தொழிக்கும் இராணுவ ரீதியான நடவடிக்கையில், சிறிலங்கா இராணுவத்தின் ஒத்துழைப்பு இருந்தபோதும் கூட புலிகள் அதில் வெற்றி பெறமுடியவில்லை. இது எதிர்தாக்குதலை புலிக்கு மேலானதாக உருவாக்கியது. புலிகளின் வலிந்த தாக்குதல் தான், தம் மீதான எதிர் தாக்குதலாக மாறியது. புலிகள் ஒரு தலைப்பட்டசமாக கொன்று வந்ததன் விளைவு, எதிர் தாக்குதலாக மாறியது. புலியில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள், கருணா குழுவால் தான் கொல்லப்பட்டனர். அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்தேறியது. கருணா அணிக்கு என்று சுயாதீனமான செயல்பாட்டு வடிவம் காணப்படுகின்றது. கருணா தரப்பை இராணுவம் கைது செய்த சம்பவங்கள், சுட்டுக் கொன்ற சம்பவங்கள் கூட நடந்துள்ளன. ஏன் இன்று புலிகளால் தேடி அழிக்கப்படும் கருணா தரப்பைச் சேர்ந்தோர் பலர், சாதாரணமாக வீடுகளில் சொந்த உழைப்பில் இருக்கும் போது நிகழ்ந்து வருவது இதற்கொரு சான்றாகும்.

மறுபக்கம் இராணுவம் மீது புலிகள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த நிலையில், அரசியல் ரீதியாக புலிகள் அடிசறுக்கிய படி இருந்தனர். புலிகள் இராணுவ நோக்கில் அனைத்தையும் எதிர்கொண்ட நிலையில், அரசியல் ரீதியாக பேரினவாதம் புலிகளை மண்கவ்வ வைத்தனர். புலிகளின் ஒவ்வொரு யுத்தநிறுத்த மீறலையும், பேரினவாதம் தனது வெற்றியாக கருதியது. அதை நடைமுறையில் வென்று காட்டியது. புலிகள் குறுகிய சுயநலத் தீர்வுகளை மையப்படுத்தி, முட்டையில் மயிர் புடுங்கிக் கொண்டிருந்த போது, எதிரி அரசியல் ரீதியாக பலமடைந்த வண்ணம் இருந்தான். உண்மையில் தமிழ் மக்களையும், சிறுபான்மை இனங்களையும் குறிப்பாக முஸ்லீம் மக்களையும் அரசியல் ரீதியாக பேரினவாதம் வெற்றி கொண்டுள்ளது. ஆட்சியேறிய தீவிர பேரினவாதம் முஸ்லீம் மற்றும் மலையக மக்களையும் கூட வெற்றி கொள்ளத் தொடங்கியுள்ளது. இதனால் தான் மக்களை திண்டு ஏப்பமிட்டு வந்த மலையகத் தலைமைகள், புலியின் வால்களை நக்கத் தொடங்கியுள்ளனர். முஸ்லீம் தலைமைகள் செய்வதறியாது அரசியல் அனாதையாகின்றனர்.

பேரினவாதம் அரசியல் சூழச்சியால் முன்பைவிட பலமடைகின்றது. புலிகளின் குறுகிய இராணுவ பொருளாதார நலன்களுக்கு இடையில் பேரம் பேசுவதன் மூலம், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை பேரினவாதம் தட்டிக்கழிக்கின்றது. உண்மையில் மொத்த நிலைமையிலும் மக்கள் சார்பான நிலையை எடுப்பதன் மூலம் மட்டுமே, நிலமையை மாற்றி அமைக்கமுடியும். ஆனால் இந்த நிலையில் புலிகள், அனைத்தையும் தமது இராணுவ சப்பாத்துகளால் மிதிக்கின்றனர். குறுகிய இராணுவ குதர்க்க வாதத்தில் சமூகத்தையே சிதைத்து, அதில் தீர்வைக் காணமுடியும் என்பது பகற்கனவாகிக் கொண்டிருக்கின்றது. நேர்மையாக யுத்தத்தைக் கூட தொடங்க முடியாது வக்கற்றுப் போன அரசியல் சூனியத்தில் நின்று, கொக்கரிக்க முனைகின்றனர். அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலம், யுத்தத்தைத் இராணுவம் தொடங்கும் என்று பகற்கனவே காண்கின்றனர்.

உண்மையில் பேரினவாத அரசு இதையும் அரசியல் ரீதியாக எதிர்கொண்டு புலியை வெற்றி கொள்கின்றது. கண்காணிப்பு குழு கூறிய படி "இவர்கள் கிரிமினல்கள், இவர்களை பொலீசார் கைதுசெய்ய வேண்டும்" என்ற அடிப்படையில் இது தனிமைப்படுத்தப்படுகின்றது. கண்காணிப்புக் குழு நடக்கும் கண்ணிவெடித் தாக்குதலை "ஒரு கோழைத்தனமான செயல்" என்றும், பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை "ஒரு சாத்வீகமான போராட்டம்" என கருதப்படமுடியாது எனவும், "இதன்போது அரச படைகள் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டது" என்று குற்றம் சாட்டினர். இந்த காடையர்கள் தமக்கு குண்டெறிந்த நிலையைக் கூட கண்காணிப்புக் குழு சுட்டிக் காட்டியது. இவை எல்லாம் மக்களுக்கு எதிராக மாறிவிடுகின்றது. தமிழ் தேசியம் சிதைக்கபட்டுவிடுவதற்கு இட்டுச் செல்லுகின்றது. இதன் விளைவு என்ன? இது வெறும் கும்பல் நடவடிக்கை தான் என்பதை ஏகாதிபத்தியம் புரிந்துள்ளதுடன், இதை ஒடுக்க கோருகின்றது. இந்த நடவடிக்கைகள் மக்கள் விரோத நடவடிக்கைகள் என்பதால், இலகுவாக ஒடுக்க ஏகாதிபத்தியம் உத்தரவிடுகின்றது. இதன் மூலம் புலிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இவை இனம் காணப்பட்ட சில உதிரி நடவடிக்கை என்பதால், இலகுவாக பேரினவாதம் கட்டுப்படுத்திவிடுவார்கள். கைது, துப்பாக்கிச் சூடுகள் மற்றும் காணாமல் போதல் மூலம் இதை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள். இங்கு காணாமல் போதல் என்பது அனேகமாக வெளித்தெரிவதில்லை. சமூகத்துடன் நேரடியாக உறவின்மையால், அவர்கள் எப்போது எங்கு காணாமல் போனார்கள் என்பதே மர்மமாகிவிடுகின்றது. புலிகள் காணாமல் போன தனது உறுப்பினரை தேடி உறவினரை அனுப்பும் வரை இது நிகழ்கின்றது. அண்மையில் யாழ் கோட்டை அருகில் கொல்லப்பட்ட 5 புலி உறுப்பினர்களின் பிணம் கூட அனாதையாகவே கிடந்த நிலையில், மக்கள் அதை தகனம் செய்யவில்லை. இந்த உதிரிக்குழுகள் தான், அதை பொறுப்பேற்க வேண்டி ஏற்பட்டது. நிலைமை தெளிவாக புலிக்கு எதிராக மாறி வருகின்றது.

இந்த நிலையில் புலிகளின் விருப்புக்கு மாறாகவே, இராணுவ நடவடிக்கையின் மூலம் கட்டுப்படுத்திவிடுவார்கள். இதன் மூலம் புலிகளை மீண்டும் புதிய அரசியல் நெருக்கடிக்கு பேரினவாதம் இட்டுச் செல்லும். சண்டையை தொடங்க முடியாத நிலை மீண்டும் உருவாகும். உண்மையில் மக்களிடம் அன்னியமான உதிரியான மக்கள் படை இப்படிச் சிதைந்து போவார்கள். உதிரியான குண்டுகளை வெடிக்கவைக்கவே முடியும். கைது, காணாமல் போதல், துப்பாக்கிச் சூடுகள் இதையே உறுதி செய்கின்றன.

பேரினவாதம் அரசியல் ரீதியாகவே இதை அணுகி வெல்லுகின்றது. புலிகள் மீண்டும் புதைகுழியில் வீழ்கின்றனர். இந்த இடத்தில் மக்கள் பொங்கியெழுவதை தம்மால் கட்டுப்படுத்த முடியாது என்று தமிழ்ச்செல்வன் கருத்துரைப்பது நிகழ்கின்றது. மக்களின் துன்பம் பற்றி மீண்டும் மூக்கால் சிணுங்கி அழுகின்றனர். இயல்பு வாழ்வு சிதைந்து போனதாக மீண்டும் புலம்புகின்றனர். இயல்பு வாழ்வை சிதைத்தவர்கள் (இயல்பு வாழ்வை சிதைத்த யுத்த நிறுத்த மீறல் எண்ணிக்கை ஒரு உதாரணம்), அதை மேலும் ஆழமாக சிதைக்க எடுத்த முன்முயற்சி இப்படித்தான் ஆகும். யுத்த சூழலையும் உருவாக்கி கெடுபிடியை எதார்த்தமாக்கி பின், இதை இயல்பு வாழ்வுக்கு பாதகமானதாக காட்டுவதே நிகழ்கின்றது. உண்மையில் அரசியல் செய்ய என்று வந்தவர்கள், அராஜகத்தை உருவாக்கியபின் பின்வாங்கினர். பின் சில உதிரிகளைக் கொண்டு காடைத்தனத்தை கட்டவிழ்த்துவிட்டனர். முடிவாக அந்த காடைத்தனம் ஒழிக்கப்படும் போது, மீண்டும் நிகழப் போவது அரசியல் சூனியம் தான்.

இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் அரசியல் செய்ய சென்றவர்கள் என்ன அரசியலை செய்தார்கள். யாருக்காவது தெரியுமா! அராஜகமான சூழலை உருவாக்கி நிர்ப்பந்தம் கொடுத்து பணம் வசூலித்தவர்கள், மக்களை கண்காணித்ததும், தண்டித்ததுக்கும் அப்பால் எதையும் அரசியல் ரீதியாக செய்யவில்லை. இதன் போது ஒரு சில உதிரிகளை தமது அராஜக செயலுக்கு இணைத்துக் கொண்டதற்கு அப்பால், மக்களை எதிர்நிலைக்கு இட்டுச் சென்றனர். பத்து வருடமாக இராணுவத்துக்குள் வாழ்ந்த மக்களின் மனநிலைவை விட, புலிகளின் மூன்று அல்லது நான்கு வருட கால ~புலி அரசியல் நடவடிக்கையில் வாழ்ந்த மக்களின் மனநிலை சார்ந்த அனுபவம் மிகவும் துயரமானது. இது எதிரி சார்பாக மாற்றப்பட்டுவிட்டது. புலிகள் இதைத்தான் அரசியல் என்கின்றனர். மக்களை துன்புறுத்துவது தான் அரசியல் என்கின்றனர். இராணுவத்தை வலிந்து சீண்டுவதன் மூலம், மக்கள் மேல் பேரினவாத இராணுவத்தை பாய்ந்து குதறவைப்பதன் மூலம், மக்களை மீண்டும் தம்பக்கம் வென்றெடுக்கும் உத்தி வெற்றிபெற முடியாத முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது.

கடந்த இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களின் ஆதரவுடன் பேசி இணக்கம் காணப்பட்ட சகல ஒப்பந்தங்களையும் கிழத்தெறிந்தது பேரினவாதம் தான். அதே போல் புலிகளுடன் கடந்த வரலாற்றில் நடத்த பேச்சவார்த்தை அனைத்தையும் முதலில் முறித்தவர்கள் புலிகள் தான். இம்முறையும் அதை நோக்கியே முன்னேறுகின்றனர். எதிரியை எதிர்கொள்ள முடியாத தமது சிறுபிள்ளைத்தனமாக குறுகிய அரசியலால் தான் இந்த நிலை ஏற்படுகின்றது. எதிரி பேரினவாதியாக இருக்கும் வரை, அவனை பேச்சுவார்த்தையில் அரசியல் ரீதியாக வெற்றி கொள்வது இலகுவானது. ஆனால் பேரினவாதி ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒவ்வொரு விடையத்திலும் வெற்றி கொள்கின்றான். தமிழ் மக்களின் பாதுகாவலனாக கூறி வேஷம் போட முடிகின்றது. போராட்டம் மக்கள் விரோதத் தன்மை பெற்று அதுவே கூர்மையாகும் போது, எதிரி அதில் குளிர்காய்கின்றான்.

இந்த நிலையில் புலிகள் தாமே வலிந்து உருவாக்கிய நெருக்கடியில் இருந்து மீள, யுத்தத்தை வலிந்து திணிக்கின்றனர். இந்த வகையில் புலிகள் மிகப் பெரிய இராணுவத் தாக்குதலை நடத்திய போது கூட, இராணுவம் வரையறுத்த எதிர் வன்முறைக்கு அப்பால் நகரவில்லை. ஏன் புலிகள் கூறுவது போல், இராணுவ கட்டுப்பாட்டு பிரதேச சட்ட ஒழுங்கை, இராணுவம் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட முனைகின்றது. இராணுவத்தை கொல்லும் போது, படுகொலைகளை நடத்தும் போது சட்ட எல்லைக்குள் இராணுவம் சுட்டுக் கொல்லும் உரிமையை இயல்பாக புலிகள் அங்கீகரித்துவிடுகின்றனர். கொலைகளுடன் தம்மை தொடர்பு படுத்துவதை மறுக்கும் புலிகள், அதை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சனையாக கூறுவது இதைத் தான். ஆயத வன்முறையின் போது, மக்கள் ஒடி விடுகின்றனர். இராணுவம் சுலபமாகவே இன்று வேட்டையாடுகின்றனர்.

இராணுவம் ஆயுதம் ஏந்தியவர்களை (புலிகளை) மட்டுமல்ல, அப்பாவி மக்களையும் ஆயுதம் ஏந்தியவராக (புலிகளாக) காட்டி கொல்வது நிகழ்கின்றது. புலிகள் பாணியில் இராணுவமும் அரசியல் செய்கின்றது. புலிகள் பாணியில், புலிக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இனம் தெரியாத கொலைகள் இரண்டு பகுதியாலும் செய்வது இன்று அன்றாட நிகழ்வாகிவிட்டது. கொல்லப்படுவது சரியான அரசியலால் வழிநடத்தப்படாத அப்பாவி தமிழ் மக்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. பல அரசியல் குழுக்கள் மீதான புலிகளின் வலிந்த படுகொலைகள், படிப்படியாக எதிர் தாக்குதலாக மாறிவருகின்றது. தமிழ்பேசும் மக்களிடையே இருந்து குறுகிச் செல்லும் புலி அரசியல், தனக்கு எதிராக பல தளத்தில், பல களத்தில் எதிரியை உருவாக்கி வருகின்றனது.

இன்று இராணுவம் தனது கட்டுப்பாட்டு பிரதேசத்தில், கொலையாளியை இனம் கண்டு குறிவைத்து தாக்கியழிப்பதில் வெற்றி வெற்று வருகின்றான்;. இராணுவம் தனது உத்தியை மாற்றிய போது, வேடிக்கை பார்ப்போர் யாரும் கூடுவதில்லை. இதனால் யார் அந்த மக்கள் படை என்பது தெளிவாக அம்பலமாகிவிடுகின்றது. அதனால் களத்தில் அல்லது படுகொலைகள் மூலம் மரணிக்கின்றனர். உண்மையில் அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முடியாத அனாதைகளாகவே அவர்கள் மரணிக்கின்றனர்.

மறுபக்கம் மக்கள் அனாதைகளாக்கப்பட்டு மிருகத்தனமாக அவர்களின் மவுனத்தின் மேல் புணரப்படுகின்றனர். பேரினவாத இராணுவமும், புலிகளும் இதை செய்வதில், தமக்கு இடையில் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டிவிடுகின்றனர். மக்களின் எதிர்காலம், தேசியத்தின் எதிர்காலம் அனைத்தும் புணரப்பட்டு சிதைக்கப்படுகின்றது.

Saturday, December 31, 2005

வியட்நாம், ஈராக் மீதான

ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்

வியட்நாம்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளின் சிந்தையில் உற்சாகத்தைத் தோற்றுவிக்கும் மாபெரும் ஊற்று. இந்தோசீன தீபகற்பத்தில் இருக்கும் இந்தச் சிறிய நாடு கோலியாத் போன்ற அமெரிக்க வல்லரசை 1975ஆம் ஆண்டு வீழ்த்தி 30 ஆண்டுகள் முடிந்துவிட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் வியட்நாமிய மக்கள், குறிப்பாக, விவசாயிகள் போராடிப் பெற்ற இந்த வெற்றி உலக வரலாற்றில் ஒரு சகாப்தம். அமெரிக்க அதிபர்கள் கென்னடி முதல் நிக்சன் வரை 10 ஆண்டுகளாக 50 சதவீத தரைப்படை, விமானப்படைகள், 15 விமானம் தாங்கிக் கப்பல்கள் என 10 லட்சம் துருப்புக்களைக் குவித்துக் கொண்டும், ஒரு கோடி டன் வெடிகுண்டுகள்; என வெறிகொண்டு தாக்கியும் அமெரிக்கா படுதோல்வியடைந்தது.

தங்களைத் தாங்களே ஆள்வதற்கும், போர் புரிவதற்கும் வியட்நாம் லாயக்கற்ற நாலாந்தர நாடு என்று 1970இல் அமெரிக்காவின் 37வது அதிபர் நிக்சன் எகத்தாளம் பேசினார். கடைசியில் முதல் தர நாடான அமெரிக்கா தனது படுதோல்வியை ஒப்புக் கொண்டு 1975இல் சமாதான ஒப்பந்தம் போட பாரீசு நகருக்கு வந்தது. இராணுவ ரீதியாக மட்டுமல்ல் அரசியல், உளவியல் மற்றும் தார்மீக ரீதியாகவும் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புப் போர் நடத்திய 10 ஆண்டு காலத்தில் அமெரிக்காவால் ஒரு வியட்நாமிய கம்யூனிசத் தலைவரைக் கூடப் பிடிக்க முடியவில்லை. அவர்களின் மறைவிடத்தையும் தாக்க முடியவில்லை. பதிலாக நூற்றுக்கணக்கான வியட்நாமிய கிராமங்களை சின்னாபின்னமாக்கி அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா.

அமெரிக்க இராணுவத்தின் மனதில் வியட்நாமிய மக்களின் வீரம் ஏற்படுத்திய பீதி நெடுங்காலம் ஆட்சி செய்தது. அதனால்தான் தற்போது ஈராக்கை கற்காலத்திற்கு அனுப்பும் வகையில் குண்டுவீசி அழித்துக் கொண்டிருக்கும் புஷ்ஷின் தகப்பன் 'அப்பா புஷ்' ஒருமுறை சொன்னார்: ''கடவுளே, இறுதியாக வியட்நாமிய பீதியை உதைத்து அனுப்பிவிட்டோம்.'' பாவம், புஷ் பரம்பரையின் வேண்டுதல் பலிக்கவில்லை. இப்போது ஈராக்கியப் போராளிகள் ஈராக்கிய பீதியை அமெரிக்காவின் மனதில் அடித்தல் திருத்தலில்லாமல் அழகாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

கணினியும், செயற்கைக்கோளும், பி52 எனும் பிரம்மாண்டமான குண்டுவீச்சு விமானங்களும் மனிதனின் விடுதலை உணர்வை வெல்ல முடியாது என்பதை உலகிற்கு உணர்த்தியது வியட்நாம். அதற்காக வியட்நாம் மக்கள் அளித்த விலையும் தியாகமும் ஒப்பிட முடியாத ஒன்று. போரில் வியட்நாமை நேரடியாக வெல்ல முடியாத அமெரிக்க இராணுவம் பல்வேறு இரசாயனக் குண்டுகளை வீசி வியட்நாமை மறைமுகமாக சுடுகாடாக்கியது. இந்தப் பேரழிவு ஆயுதங்கள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்த உண்மைகள் இன்றுவரை அமெரிக்காவால் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த அநீதிக்காகவே இனிவரும் அமெரிக்க அதிபர்களையும் சேர்த்து சிரச்சேதம் செய்தால்கூட நீதியின் கணக்கு வழக்கு தீராது.

1950களில் மலேயாவிலிருந்து பிரிட்டிஷ் இராணுவம் கம்யூனிசப் போராளிகளை அழிக்க டயாக்சின் கலந்த இரசாயனக் குண்டுகளை முதன்முதலாகப் பயன்படுத்தியது. இதனால் நாட்டுப்புறங்கள் மற்றும் காடுகளில் மரங்கள், பயிர்கள் பட்டுப்போய் விவசாயப் பொருளாதாரம் அழிவுக்குள்ளானது. இதிலிருந்து பரிசோதனை செய்து ஏஜெண்ட் பர்ப்பிள், ஏஜெண்ட் ப்ளூ, ஏஜெண்ட் ஆரஞ்சு போன்ற பேரழிவு இரசாயனக் குண்டுகளை உருவாக்கியது அமெரிக்க இராணுவம். இவற்றை 1965 முதல் 1975 வரை கப்பல் கப்பலாகக் கொண்டு போய் வியட்நாமில் இறக்கியது. இதைப் பற்றி தெற்கு வியட்நாமில் இருந்த அமெரிக்க ஆதரவு பொம்மை ஆட்சியாளர்களுக்குக் கூடத் தெரியாமல் செய்தது அமெரிக்கா.

ஏஜெண்ட் ஆரஞ்சு எனப்படும் டயாக்சின் கலந்த இந்த வெடிகுண்டு 28 வகையான நோய்களை உருவாக்கும். இந்த நோய்கள் உடனடியாகவும் வரும். அல்லது 10,20 ஆண்டுகள் கழித்தும் வரலாம். டயாக்சின் நோய்களுக்கான சிகிச்சை செலவு மிக மிக அதிகம். நோய் இருப்பதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனைச் செலவு மட்டும் 45 ஆயிரம் ரூபாய் (45,000). வியட்நாமின் அமெரிக்க விமான ஓட்டிகள் பறந்த சென்சஸ் கணக்குப் படி 3,000 கிராமங்களில் 42,00,000 மக்கள் மீது ஏஜெண்ட் ஆரஞ்சு வீசப்பட்டுள்ளது. இதில் 5,00,000 மக்கள் கொல்லப்பட்டார்கள்; 7,00,000 மக்கள் டயாக்சின் பாதிப்பினால் நடைப்பிணமானார்கள். மொத்த வியட்நாமின் பரப்பளவில் 10 சதவீத நிலம் நஞ்சாக்கப்பட்டது. இந்த நச்சுத்தன்மை 7 அடி ஆழம் வரை நிலத்தில் ஊடுருவி முப்பது ஆண்டுகள் வரை அதனை பட்டுப்போன நிலமாக ஆக்கி விடும். ஏஜெண்ட் ஆரஞ்சின் பயங்கரத்தை ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் நியூயார்க் நகரத்தின் குடிநீர்த் தொட்டியில் இந்த வெடிமருந்தின் 80 கிராம் அளவு கலக்கப்பட்டால் அந்த நகரத்தின் 70,00,000 மக்களும் கொல்லப்பட்டு விடுவார்கள்.

வியட்நாமில் எவ்வளவு வீசினார்கள் என்ற கணக்கு எவருக்கும் தெரியாது. தற்போதைய ஆய்வின்படி சுமார் 600 கிலோ ஏஜெண்ட் ஆரஞ்சு வீசப்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியென்றால் வியட்நாமின் பாதிப்பை நினைத்துப் பார்க்கவே நடுங்க வைக்கிறது. இரத்தத்தைக் கொதிக்க வைக்கும் இந்த உண்மை குறைந்தபட்சம் மேற்கத்தியச் செய்தி ஊடகங்களில் கூட வெளிவரவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது வியட்நாமிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய நட்ட ஈடு குறித்து எவரும் மறந்தும் கூடக் கேட்டதில்லை. ஆனாலும் உலகில் ஜனநாயகமும், ஐ.நா. சபையும் இன்னபிற இழவுகளும் இருப்பதாய்ச் சொல்கிறார்கள்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஏஜெண்ட் ஆரஞ்சின் பயங்கரம் குறித்த உண்மைகள் வியட்நாம் மக்களை முன்னிட்டுப் பேசப்படவில்லை. மாறாக, வியட்நாமில் போரிட்ட 3,00,000 அமெரிக்க வீரர்களுக்கு டயாக்சின் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்து, அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. பாதிக்கப்பட்ட அமெரிக்க வீரர்களுக்கு நட்டஈடாகத் தரப்பட்ட 1,000 கோடி ரூபாய் மேற்குலகின் ஜனநாயகக் கண்களைத் திறந்துவிட்டது. ஏஜெண்ட் ஆரஞ்சு குறித்த பயங்கரம் உலகத்தின் தோலில் உறைத்தது. குண்டு வீசிய விமான ஓட்டுனர்களுக்கே இப்படியொரு பாதிப்பு என்றால் அதற்கு இலக்கான வியட்நாமிய மக்களின் நிலைமை எவ்வளவு பயங்கரமாக இருக்கும்.

அமெரிக்க இராணுவத்திற்கு டயாக்சின் எனும் இந்த இரசாயனப் பொருளைத் தயாரித்து அளிப்பது யார் தெரியுமா? நமக்கு அறிமுகமான மான்சான்டோ எனும் பன்னாட்டு நிறுவனம்தான். தற்போது பருத்தி விதைகளில் டெர்மினேட்டர், பி.டி. காட்டன் எனும் புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தி நமதுநாட்டு பருத்தி விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளியதும் இந்நிறுவனம்தான். டயாக்சினைத் தயாரித்து அமெரிக்க இராணுவத்திற்கு சப்ளை செய்வதன் மூலம் கோடி கோடியாகச் சம்பாதிக்கிறது. இந்தக் கொலைகார நிறுவனத்திற்கு இந்தியாவிலும் ஆய்வகங்கள் இருக்கின்றன. மான்சான்டோவிற்கும் அமெரிக்க இராணுவத்திற்கும் உள்ள வர்த்தக உறவு முற்றிலும் இரகசியமானது. டயாக்சின்போல இன்னும் வேறு என்னென்ன இரசாயனக் கொலைப் பொருட்களை அந்த நிறுவனம் தயாரிக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

உண்மைகளின் மேல் ஏறி நின்று சளைக்காமல் பொய் சொல்வதில் அமெரிக்கர்களை யாரும் விஞ்ச முடியாது. அமெரிக்காவின் அரசுத்துறைச் செயலராக இருந்த காலின் பாவெல் இப்படிச் சொன்னார். ''முதல் உலகப் போருக்குப் பிறகு இரசாயன உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தியது ஈராக்கின் சதாம் உசேன்தான்.'' வியட்நாம் போரின்போதே இரசாயன ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தி விதிகளை மீறியது. இது ஒருபுறம் இருக்க, இரசாயன உயிரியல் ஆயுதங்களை இராணுவ இலக்குகளைத் தாக்குவதற்குக் கூடப் பயன்படுத்தக் கூடாது என்று 1980இல் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்தத் தடையை ஈராக்கில் அமெரிக்கா வெளிப்படையாகவே மீறி இருப்பது அம்பலமாகியுள்ளது.

இத்தாலியின் அரசுத் தொலைக்காட்சி நிறுவனமான ஆர்.ஏ.ஐ. ''ஃபலூஜா மறைக்கப்பட்ட படுகொலை'' என்ற ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இதில் அமெரிக்க இராணுவம் எம்.77 எனும் வெள்ளை பாஸ்பரசைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இரசாயனக் குண்டை பலூஜா நகரத்தில் மக்கள் குடியிருப்பில் வீசியிருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. பாஸ்பரஸ் குண்டு விழுந்த மாத்திரத்திலேயே 150 மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் எரிந்து, உருகி, இறந்து போனார்கள். பெண்கள், குழந்தைகளின் சட்டைகள் அப்படியே இருக்க சதையும், எலும்பும் சாம்பலாகும் கோரக் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. குண்டுவீசிய வீரர்களின் நேர்காணலும் படத்திலுள்ளது. இதை ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளாத அமெரிக்க அரசு தற்போது ''ஆமாம், வீசினோம், அதனால் என்ன?'' என்று திமிராகப் பேசி வருகிறது.

அமெரிக்காவின் பிரம்மாண்டமான இராணுவ பலத்தை வெறும் மூங்கில் ஆயுதங்களைக் கொண்டு விரட்டியடித்தார்கள் வியட்நாமிய மக்கள். தங்கள் உடலையே ஆயுதமாக்கி அமெரிக்காவை எதிர்கொண்டு தாக்குகிறார்கள் ஈராக்கியப் போராளிகள். வியட்நாமிலும், ஈராக்கிலும் அமெரிக்கா ஏற்படுத்தியிருக்கும் பேரழிவுகளுக்கு வருங்கால வரலாறு நிச்சயம் கணக்குத் தீர்க்கும். வீரம் செறிந்த வியட்நாமின் 30 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறே அதை நிரூபித்திருக்கிறது.

மு வேல்ராசன்நன்றி புதியகலச்சாரம்

Thursday, December 29, 2005

ஏழை நாடுகளின் அந்நியக் கடன்

ஏழை நாடுகளின் அந்நியக் கடன் தள்ளுபடி:
மறுகாலனியாதிக்கத்தின்
'மனித முகம்'


வறுமை, பஞ்சம், பட்டினிச் சாவுகள் உலகெங்கிலும் பரவலாகக் காணப்பட்டாலும், இந்த மூன்றும் மற்ற நாடுகளைவிட, ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த மிகவும் வறியஏழை நாடுகளை ஒரு சாபக்கெடு போல பிடித்தாட்டி வருவதை யாரும் மறுக்க முடியாது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எத்தியோப்பியர் பத்தாண்டுகளுக்கு முன்பு சோமாலியர் இப்பொழுது நைஜர், பர்கினோ ஃபாஸோ, மாலி, மொரிதானியா ஆகிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் பட்டினிச் சாவின் பிடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளன.

இந்நாடுகளில் வயதுக்கு வந்த பெரியவர்கள் காட்டுக் கிழங்குகளைத் தின்று உயிரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளுக்கு ஒரு சொட்டு பால்கூடக் கிடைக்காததால், பட்டினியால் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்றன. வயல்வெளியெங்கும் செத்துப் போன ஆடு, மாடுகளின் எலும்புகள் சிதறிக் கிடப்பதைப் பார்க்கும் பொழுது, ''திறந்தவெளி இறைச்சி வெட்டும், கூடத்தில்'' நுழைந்துவிட்டதைப் போன்ற பீதி ஏற்படுகிறது.

அதிகார வர்க்கத்தின் கணக்குப்படியே நைஜரில் 36 இலட்சம் பேர்; பர்கினோ ஃபாஸோவில் 5 இலட்சம் பேர்; மாலியில் 11 இலட்சம் பேர்; மொரிதானியாவில் 8 இலட்சம் பேர் பட்டினிச் சாவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க கண்டத்தில் நடக்கும் இப்பட்டினிச் சாவுகளைத் தடுத்து நிறுத்தக் கோரி, ஐரோப்பாவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்த பிறகுதான், ஏகாதிபத்திய நாடுகளின் எடுபிடியான ஐ.நா.மன்றம் ''கஞ்சித் தொட்டி''யைத் திறக்க முன்வந்தது; — அதுவும் நைஜரில் மட்டும்.

இதே சமயத்தில் ஸ்காட்லாந்தின் க்ளென்ஈகிள்ஸ் என்ற நகரில் கூடிய ஜி8 நாடுகளின் (அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ரசியா, கனடா, ஜப்பான்) தலைவர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து மட்டுமல்ல, உலகில் இருந்தே வறுமையை ஒழித்துக் கட்டப் போவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார்கள். இதற்காக, மிகவும் வறிய 18 ஏழை நாடுகள் தர வேண்டிய கடன்களை ரத்து செய்யப் போவதாக அறிவித்தார்கள். தற்பொழுது பட்டினிச் சாவுகள் நடந்து கொண்டிருக்கும் நான்கு ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்டு, 12 ஆப்பிரிக்க நாடுகள் இக்கடன் தள்ளுபடியால் பயன்பெறும் என்று ஜி8 மாநாட்டில் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டது.

மேலும், ''2010க்குப் பிறகு ஏகாதிபத்திய நாடுகள், ஏழை நாடுகளுக்குச் செய்யும் உதவி 4,000 கோடி அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ 1,80,000 கோடி ரூபாய்) அதிகரிக்கும். இதில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 2,500 கோடி அமெரிக்க டாலர்கள் (1,12,500 கோடி ரூபாய்) கூடுதலாக உதவி கிடைக்கும்'' என்றும் ஜி8 நாடுகளின் தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

இதைக் கேட்கும்பொழுது, 18 ஏழை நாடுகளின் வெளிநாட்டுக் கடன்கள் அனைத்தும் அடியோடு ரத்து செய்யப்படும்; இக்கடன் தள்ளுபடி போக, நிதியுதவி கிடைக்கும் என்று நாம் கற்பனை செய்து கொண்டால், நம்மைவிட ஏமாளி வேறு யாரும் இருக்க முடியாது.

''உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி ஆகிய நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்கள்தான் ரத்து செய்யப்படும். இதிலும் கூட, இந்த நிதி நிறுவனங்களிடமிருந்து வணிக நோக்கத்திற்காகப் பெறப்பட்ட கடன்கள் ரத்து செய்யப்படமாட்டாது. இந்த நிதி நிறுவனங்கள் அல்லாது, வேறு சர்வதேச நிதி நிறுவங்களிடமிருந்து பெறப்பட்ட கடன்களும் தள்ளுபடியாகாது. இதற்கும் மேலாக, இக்கடன் தள்ளுபடியால், இந்த மூன்று நிதி நிறுவனங்களுக்கும் ஏற்படக்கூடிய நட்டத்தை ஈடு செய்வதற்கு ஏற்றவாறு, ஏகாதிபத்திய நாடுகள் நிதி அளித்தால்தான் கடன் தள்ளுபடி நடைமுறைக்கு வரும்'' இவையனைத்தும் கடன் தள்ளுபடி என்ற டாம்பீக அறிவிப்பின் பின் மறைந்துள்ள நிபந்தனைகள்.

இது ஒருபுறமிருக்க, ரசிய ஏகாதிபத்தியம் தனது சார்பாக எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்படுகிறதோ, அதையே தனது கூடுதல் நிதியுதவியாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறிவிட்டது. பிரான்சு ஏகாதிபத்தியம், தான் அளிக்க வேண்டிய கூடுதல் நிதியுதவியில், மூன்றில் ஒரு பங்கு கடன் தள்ளுபடியாக இருக்கும் எனக் கூறிவிட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், 18 ஏழை நாடுகளின் வறுமையை ஒழிக்க ஏகாதிபத்திய நாடுகள் அறிவித்துள்ள கடன் தள்ளுபடி கூடுதல் நிதியுதவி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத் தான் இருக்கும் என முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களே நையாண்டி செய்கிறார்கள்.

ஆப்பிரிக்காவைப் பிடித்தாட்டும் வறுமைக்கும், பஞ்சத்திற்கும் அக்கண்டத்து நாடுகளில் நடைபெறும் சர்வாதிகார ஊழல் ஆட்சி, இனக்குழுக்களுக்கு இடையேயான சண்டை இவைதான் காரணம் என ஏகாதிபத்திய நாடுகள் குற்றஞ் சுமத்துகின்றன. எனவே, கடன் தள்ளுபடி பெற விரும்பும் ஆப்பிரிக்க ஏழை நாடுகள், வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் இட்டுச் செல்லும் நல்லாட்சி நடைபெற உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றன.

''எண்ணெய் வயல் நிறைந்த நைஜீரியாவில் நடந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தேசங்கடந்த எண்ணெய் தொழிற்கழகமான ''ஷெல்'' தான் தாங்கிப் பிடித்தது; காங்கோவில் நடந்த மொபுடுவின் சர்வாதிகார ஆட்சிக்கு, பன்னாட்டு சுரங்கத் தொழிற்கழகங்கள்தான் முட்டுக் கொடுத்தன் ருவாண்டாவில் நடந்த ஹூடு டுட்ஸி இன மோதலுக்கு பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் காரணமாக அமைந்தது; சியாரா லியோனின் வைரச் சுரங்கங்களைக் கைப்பற்றிக் கொள்ளுவதற்காகவே, அந்நாட்டில் ஏகாதிபத்தியங்களால் உள்நாட்டுக் கலவரம் தூண்டிவிடப்பட்டது'' என நீளமாகப் போகும் இந்தப் பழைய வரலாற்றை மறந்துவிட்டால், நாமும் ஏகாதிபத்தியங்களின் நல்லாட்சி திட்டத்திற்கு ''ஜெ'' போடலாம்.

ஆப்பிரிக்காவை இருண்ட கண்டமாக்கிய ஏகாதிபத்தியங்களின் சதி ஒருபுறம் இருக்கட்டும். ''வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் இட்டுச் செல்லும் நல்லாட்சி'' என்பதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா?

ஏகாதிபத்தியங்கள் அறிவித்துள்ள கடன் தள்ளுபடி சலுகையைப் பெறப் போகும் 18 நாடுகளுள் ஜாம்பியாவும் ஒன்று. இந்தச் சலுகையைப் பெறுவதற்காக, ஜாம்பியா, ஏகாதிபத்தியங்களின் கட்டளைப்படி, சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் தொகையை மேலும், மேலும் வெட்டித் தள்ளுகிறது.

இந்தப் பதினெட்டு நாடுகளுள் ஒன்றான கானா, தனது நாட்டின் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்புத் தொழிலையும் பாதுகாக்க, சிறப்புச் சட்டமொன்றினை இயற்றி வைத்திருந்தது. இச்சட்டத்தை நீக்கினால்தான் கானாவிற்குக் கூடுதல் நிதியுதவி கிடைக்கும் என உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் நெருக்குதல் கொடுத்ததையடுத்து, இச்சட்டம் நீக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் அந்நாட்டின் அரிசிச் சந்தையில் 40 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொண்டதால், அந்நாட்டின் உள்நாட்டு அரிசி உற்பத்தியே நிலைகுலைந்து போய்விட்டது.

கடன் தள்ளுபடி பெற விரும்பும் ஏழை நாடுகள் தனியார்மயம் தாராளமயத்தை மேலும் தீவிரப்படுத்தினால்தான், ஏகாதிபத்தியங்களிடமிருந்து நல்லாட்சி சான்றிதழைப் பெற முடியும். இதை, ''ஆப்பிரிக்க வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள்'' என்ற அமெரிக்கச் சட்டம் மிகவும் பச்சையாகவே கூறுகிறது:

''தனியார் சொத்துரிமையைப் பாதுகாக்கக் கூடிய சந்தைப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும்; அமெரிக்காவின் வர்த்தகத்திற்கும், மூலதனத்திற்கும் தடையாக இருக்கக் கூடியச் சட்டங்களை நீக்க வேண்டும்; அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு நாடு பிடிக்கும் மேலாதிக்கப் போர் வெறிக்கு ஒத்துழைப்பு தரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.''
தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் ஏகாதிபத்தியங்கள் திணிக்கும் இந்த சந்தை பயங்கரவாதம்தான், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பஞ்சத்தையும், பட்டினிச் சாவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உண்மையை நைஜர் நாட்டு நிலைமை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது.

நைஜர் நாட்டு மக்கள் அரைக்கவளம் சோறு கிடைக்காமல் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும்போது, அந்நாட்டு அரசும், தரகு முதலாளிகளும் அண்டை நாடான நைஜீரியாவுக்கு அரிசியை ஏற்றுமதி செய்கிறார்கள்.

நைஜர் நாட்டு ஏழை விவசாயிகள், தங்களின் குழந்தைகளுக்குப் பால் கூட வாங்க முடியாமல் போண்டியாகி நிற்கும் பொழுது, அந்நாட்டுத் தலைநகரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு காபிக்கு ஏழு வகையான ஜீனி பரிமாறப்படுவதைக் குறிப்பிட்டு, அந்நாட்டில் செல்வம் ஒரு பக்கமும்; ஏழ்மையும் பட்டினியும் ஒரு பக்கமும் குவிந்து கிடப்பதை அம்பலப்படுத்துகிறார், ஒரு பத்திரிகையாளர்.

கடந்த ஏப்ரல் மாதம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்க வேண்டும் எனக் கோரி, அந்நாட்டு தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பொழுது, ஐ.நா. மன்றமும், நைஜர் அரசும், ''இலசமாக அரிசி வழங்கினால், சந்தை பாதிக்கப்படும்'' என்ற மனிதத் தன்மையற்ற, இலாபவெறி பிடித்த காரணத்தைக் கூறி, இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்க மறுத்துவிட்டார்கள். இதற்குப் பரிசாகத்தான் ஏகாதிபத்திய நாடுகள், நைஜருக்குக் கடன் தள்ளுபடி என்று சலுகையைத் தூக்கிக் கொடுத்துள்ளன.

உண்மை இப்படியிருக்க ஏகாதிபத்தியங்களோ மழையின்மை, வெட்டுக் கிளி படையெப்பு போன்ற இயற்கை சீற்றங்களின் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்ள முயலுகின்றன.


1970 தொடங்கி 2002 வரையில், ஆப்பிரிக்க நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து வாங்கிய கடன் 54,000 கோடி அமெரிக்க டாலர்கள்; இந்த 32 ஆண்டுகளில், வாங்கிய கடனுக்கு வட்டியாகவும், அசலாகவும் அந்நாடுகள் திருப்பிச் செலுத்தியிருக்கும் தொகை 55,000 கோடி அமெரிக்க டாலர்கள். வாங்கிய கடனுக்கு மேலே 1,000 கோடி அமெரிக்க டாலர்கள் (45,000 கோடி ரூபாய்) திருப்பிச் செலுத்திய பிறகும், கந்துவட்டிக்காரன் கணக்குப் போல, ஏகாதிபத்திய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் இன்னும் திருப்பி அடைக்க வேண்டிய அசல் 29,500 கோடி அமெரிக்க டாலர்கள் எனக் கணக்கு காட்டுகின்றன.

ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனத்தையொட்டி அமைந்துள்ள நாடுகளில் இருந்து மட்டும், தாராள இறக்மதி என்ற பெயரில், கடந்த இருபது ஆண்டுகளில் 27,200 கோடி அமெரிக்க டாலர்களை (12,24,000 கோடி ரூபாய்) ஏகாதிபத்திய நாடுகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளன. இந்தப் பணம் அந்நாடுகளின் கஜானாவில் இருந்திருந்தால், ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து வாங்கிய கடனை மட்டுமல்ல, அந்நாட்டு மக்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து, வறுமையையும், பஞ்சத்தையும் ஓட ஓட விரட்டியிருக்க முடியும்.

ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், தனியார்மயம் தாராளமயத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் ஆப்பிரிக்க கண்ட நாடுகளில் இருந்து 10,400 கோடி ரூபாயை இலாபமாகக் கொள்ளையடித்துச் செல்கின்றன. இது, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏகாதிபத்திய நாடுகள் வழங்கும் வருடாந்திர நிதி உதவியை விட 14 மடங்கு அதிகம்.

இந்தப் புள்ளிவிவரங்கள் ஆப்பிரிக்காவின் வறுமைக்கும், பஞ்சத்திற்கும் ஏகாதிபத்தியச் சுரண்டல்தான் காரணம் என்பதை மட்டும் எடுத்துக் காட்டவில்லை. ஏகாதிபத்திய நாடுகள் அறிவித்துள்ள கடன் தள்ளுபடி, கூடுதல் நிதியுதவி என்பதெல்லாம் மிகப் பெரிய மோசடி என்பதையும் அம்பலப்படுத்திக் காட்டுகின்றன.

மாட்டை இரண்டு முறை தோலுரிப்பது என்பார்களே, அதைப்போல, ஏற்கெனவே ''கடன்'' என்ற போர்வையில் ஏழை நாடுகளை அடிமைப்படுத்திவிட்ட ஏகாதிபத்திய நாடுகள், இப்பொழுது தங்களதுச் சுரண்டலையும், மேலாதிக்கத்தையும் தொடரவும், தீவிரப்படுத்தவும் ''கடன் தள்ளுபடி'' என்ற முகமூடியை மாட்டிக் கொண்டு வருகிறார்கள். போலி கம்யூனிஸ்டுகளின் மொழியில் சொன்னால், ''கடன் தள்ளுபடி'' என்பது ஜி8 நாடுகள் மறுகாலனியாதிக்கத்திற்கு மாட்டிவிட்டுள்ள ''மனித முகம்!''

மு ரஹீம்
நன்றி புதியஜனநாயகம்

Tuesday, December 27, 2005

ஜெயதேவனும் ரி.பி.சியும் புலியின் பெயரால் நடத்தும் மக்கள் விரோத அரசியல்

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ரி.பி..சி யின்) அரசியல் என்ன? அதன் அரசியல் நோக்கம் என்ன? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? இந்த வகையில் நேரடியாகவே நாம் இந்தக் கேள்வியை எழுப்பி, இவர்களின் மக்கள்விரோத செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளமுனைவோம்.

நாம் ஒருவனின் நேர்மையான அரசியல் செயல்பாட்டை, ஏன் அவனின் அரசியலை நாம் எப்படி புரிந்துகொள்வது? இதை நாம் முதலில் தெரிந்து கொள்ளும் முனைப்புவேண்டும். மக்கள் பற்றிய எமது மற்றும் உனது நிலைபாடு என்ன என்பதே, அனைத்துக்குமான அடிப்படையாகும். எமது அரசியல், எமது மற்றும் உனது நடைமுறை என அனைத்தும் மக்களின் நலன்கள் சார்ந்து, மக்களை செயலில் இறங்கக் கோருவதாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் சிந்திக்க, கருத்துரைக்க வேண்டும். அரசியல் ரீதியாக இதை முன்வைக்காத அனைத்தும் மக்கள் விரோதத் தன்மை கொண்டவையே. மக்களுக்கு வெளியில் நாம் பேசும் அரசியல், அந்த மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதிகள் தான். அந்த மக்களின் பெயரில் நடத்தும் அரசியல் மோசடிதான். இங்கு மக்கள் நலன் என்பது, எப்போதும் எங்கும் பரந்துபட்ட மக்களின் சமூக பொருளாதார நலன்கள் தான்.

பேரினவாதம் மக்கள் என்ற பெயரில் தான் அனைத்தையும் செய்கின்றது. புலிகள் மக்கள் என்ற பெயரில் தான் அனைத்தையும்; செய்கின்றார்கள். இதில் இருந்து மாறுபட்ட வகையில் ரி.பி.சி கும்பல் செயற்படுகின்றதா? உங்களைப் பார்த்துத்தான் தான், இதை நான் கேட்கின்றேன். ரி.பி.சி கும்பல் மக்கள் நலன் சார்ந்தது என்று நம்பிய நீங்கள், அதன் கருத்துக்களை கிளிப்பிள்ளை போல் உள்வாங்குகின்றீர்கள். நான் உங்களை கேட்கின்றேன், ரி.பி.சி மக்கள் நலன் சார்ந்தது என்று உங்களால் உறுதி செய்யமுடியுமா?

புலிக்கும், ரி.பி.சி க்கும் கொள்கையளவில் என்ன வேறுபாடு உள்ளது. உங்களால் இதை வேறுபடுத்திக் காட்ட முடியுமா? ரி.பி.சி கூறுவது போல் புலிகளை ஒழித்தால், அதில் மாற்றீடாக எந்தவகையான ஒரு மாற்றீட்டை கொண்டுவர முனைகின்றனர். ரி.பி.சி கும்பல் ஆயுதம் ஏந்தினால் என்ன செய்வார்கள்;. பதிலை நீங்களே கேட்டுப் பாருங்கள். அவர்கள் இன்னுமொரு புலியாகவே இருப்பார்கள். ஏன்? இதை நீங்கள் என்றாவது கேட்டுபார்த்தது உண்டா! நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ரி.பி.சி கும்பலுக்கு ஆதரவு அளிக்கும் போது, என்றாவது புலியின் அரசியலில் இருந்து எந்த வகையில் இவர்கள் வேறுபட்டவர்கள் என்று நீங்கள் கேட்டுப் பார்த்தது உண்டா? புலி ஆதரவாளர்கள் போல் அல்லவா நாங்களும் இருக்கின்றோம் என்பதை, நீங்கள் என்றாவது உணர்ந்ததுண்டா! இதை நீங்களே உங்களைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளுங்கள்.

புலிகள் என்பது தனிப்பட்ட பிரபாகரனின் கண்டுபிடிப்பல்ல. இதையே அவர்கள் சொல்வதற்கு அப்பால், இதையே ரி.பி.சி கும்பலும் கூறுகின்றது. புலிகள் என்பது அவர்கள் முன் வைக்கும் மக்கள் விரோத அரசியல் (வர்க்க) உருவாக்கியது. இந்த இடத்தில் பிரபாகரன் இருந்தாலும் சரி, ஜெயதேவன் இருந்தாலும் சரி, ஒரே மாதிரியான அரசியல் அணுகுமுறைதான் இருக்கும்;. இந்த இடத்தில் "நான்" இருந்தாலும் அதுதான் நிகழும். தனிப்பட்ட தலைமைக்குரிய ஆளுமை சில செல்வாக்கை செலுத்தினாலும், மக்கள் விரோத அரசியல் (வர்க்க) உள்ளடக்கம் மாறிவிடாது. மக்கள் நலன் சார்ந்த தலைமை என்பது, மக்கள் நலன் சார்ந்த அரசியலுடன் (வர்க்க நலன்) தொடர்புடையது. புலியின் மக்கள் விரோத வர்க்க அரசியலுக்கு பதில், மக்கள் நலன் சார்ந்த வர்க்க அரசியலுக்கு பிரபாகரன் தலைமை தாங்கினால், மிக சிறந்த பண்புள்ள மக்கள் தலைவராக இருப்பார். இங்கு பினாமிகள் யாரும் வந்து "மேதகு" என்று போற்ற வேண்டிய அவசியமில்லை. மக்களே தமது மேதமை கொண்ட தலைவர்களை ஆழமாக நேசிப்பர்.

ரி.பி.சி அரசியல் பேசும் பாதிரிமாரும் அவர்களின் எடுபிடிகளான அலுக்கோசுகளும் சொல்வது என்ன? புலிக்கு மாற்று புலியைப் போன்ற அரசியலுடைய மற்றொரு மக்கள் விரோதக் கும்பலையே முன்வைக்கின்றது. இதற்காக புலியை ஒழிக்க ஏகாதிபத்திய துணையை நாடுகின்றனர். அதாவது ஈராக்கில் என்ன நடந்ததோ, அதையே இங்கு அமுல் செய்ய துடிக்கின்றனர். ஈராக்கில் இறக்குமதி செய்யப்பட்ட புதிய திடீர் கைக்கூலி அரசியல் தலைவர்கள் போல், தாம் இருக்க (குறிப்பாக ஜெயதேவன் போன்றவர்கள்) விரும்புகின்றனர். அந்த அரசியலைத்தான் இன்று ரி.பி.சி கும்பல் செய்கின்றது. இதை யாரும் மறுத்து நிறுவமுடியாது.

இதை புலியின் மனிதவிரோத அரசியல் மீது கொடிகட்டி ஏற்றுகின்றனர். புலிகளின் ஈவிரக்கமற்ற பாசிச நடைமுறைகள், இரத்தமும் சதையும் கொண்ட அவலமான சமூக அராஜகத்தை உருவாக்குகின்றது. மனிதன் நிமிர்ந்து கூட பார்க்க முடியாத மனித அவலங்கள் எங்கும் தலைவிரித்தாடுகின்றது. எங்கும் சுவாசிக்கும் காற்றுக் கூட இரத்த வாடையுடன் வீசுகின்றது. பாக்குமிடமெங்கும் உயிருடன் சிதறிய சதைப்பிண்டங்கள். மனிதன் தான் மட்டுமே, மற்றவர் பாராது ஒழித்து நின்றே கண்ணீர் வடிக்கின்றான். இந்தக் கண்ணீரோ இரத்தமாகி ஒடுகின்றது. இதை ரி.பி.சி தனது ஏகாதிபத்திய ஆதரவு அரசியலுக்கு பயன்படுத்த நினைப்பதன் மூலம், எதை தமிழ் மக்களுக்கு கொடுக்க முனைகின்றனர். இதை நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?

தமிழ் மக்களின் இன்றைய பிரச்சனைகள் பேரினவாத வழியில் வந்தாலும் சரி, குறுந்தேசிய புலிகள் வடிவில் வந்தாலும் சரி, மக்கள் தாம் தமது சொந்தப் பலத்தில் நின்றே இதை எதிர்கொள்ள வேண்டும். இது புலிக்கும் பொருந்தும். ரி.பி.சிக்கும் பொருந்தும். இந்த அரசியல் உண்மையை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் புலியெதிர்ப்பு கும்பல் இதை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது. உண்மையில் இவர்களின் சோரம் போகும் அரசியல் என்பது, தமிழ் மக்களுக்கு புதிய அடிமை விலங்கை அணிவிக்க முனைகின்றது. இது அன்னிய சக்திகளின் தயவில் அரங்கேற்றப்படுகின்றது. சமூக கொந்தளிப்புகளுக்கும், சமூக அவலங்களுக்கும் தீர்வுகள் என்பது, மக்கள் மத்தியில் இருந்து அவர்களே தாமே தீர்;த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படவேண்டும். இதில் ஒவ்வொருவரும் ஒரு உறுப்பினராக இருக்க முடிமே ஒழிய, அன்னிய எடுபிடிகளாக இருக்க முடியாது.
இதை மறுத்து இது சாத்தியமில்லை என்று கூறும் அரசியல், மாறாக எதைத்தான் முன்மொழிகின்றது. இந்த கேள்விக்கும் விடைக்கும் இடையில் உள்ள அரசியலை புரிந்து கொள்ளத் தவறுவோமாயின், பாலசிங்கத்தின் கூட்டத்தில் விசிலடித்த ஆதரவாளர்கள் நிலையில் தான் புலியெதிர்ப்பு அணி உள்ளது என்பதே உண்மை. அதாவது புலியெதிர்ப்பு அணியும் கூட, விசிலடிக்கின்ற கூட்டம் தான்.

மக்கள் தமது சொந்த பிரச்சனைகளை தாமே தீர்க்கும் வகையில் முன்னெடுக்காத அரசியல் செயல்பாடுகள் தான் என்ன? இதை சுயஅறிவுள்ளதாக கருதும் நீங்கள் யாராவது சுயமாக கேட்டுப் பாhத்ததுண்டா? மக்கள் சம்பந்தப்படாது எதுவாக இருந்தாலும், அது மக்களுக்கு எதிரானது தான். அது மக்களுடன் தொடர்பற்றது. அவை மக்களின் வாழ்வுடன் எந்தவிதத்திலும் ஒன்றியிருப்பதில்லை.

ரி.பி.சி யின் கும்பல் அரசியல் என்பது தெளிவாக மக்களைச் சார்ந்து நிற்காத ஒரே காரணத்தினாலேயே அவை மக்களுக்கு துரோகம் செய்பவை. இந்த அரசியல் துரோகம் என்பது, புலியை அழித்தல் என்ற பெயரில் புலியல்லாத அனைவருடனும் கூட்டுச் சேருகின்றது. இதை யாரும் இல்லை என்று இன்று மறுக்கமுடியாது. புலியல்லாத அன்னிய சக்திகளுடன், சிங்கள பேரினவாதத்துடன் தமது சொந்த அரசியலை அடையாளப்படுத்தியே, இந்த புலியெதிர்ப்பு கும்பல் வளர்ச்சியுறுகின்றது. ஏகாதிபத்தியங்களின் எடுபிடிகளாக செயல்படுவதையே, இவர்களின் அரசியல் தெளிவாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. புலியின் நடவடிக்கை ஒவ்வொன்றையும் கடுமையாக எதிர்நிலையில் வைத்து எதிர்க்கும் இவர்கள், பேரினவாதத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்டும் காணாமல் அல்லது அதை ஆதரிக்கும் தர்க்க வாதங்களை முன்வைக்கின்றனர். அதேநேரம் ஏகாதிபத்தியம் முன்வைப்பதை தீர்வாக முன்மொழிகின்றனர். இதுதான் புலியெதிர்ப்பு கும்பலின் அரசியல் எல்லை. ஏகாதிபத்தியங்களுடன் மிக நெருக்கமாக கூட்டாக செயல்படத் தொடங்கியுள்ளனர். அதை அவர்கள் பிரகடனம் கூட செய்து வருகின்றனர்.

புலம்பெயர் நாடுகள் பெருமளவில் ஏகாதிபத்தியங்களாக உள்ள நிலையிலும் கூட, தனிப்பட்ட நபர்களின் மீதான வன்முறைகள் மற்றும் இது போன்றவற்றில் இந்த நாட்டின் சட்டத் திட்டத்துக்கு அமைவாக போராடுவது துரோகத்தனமானவையல்ல. அதாவது அந்த நாட்டு மக்கள் எப்படி ஒரு வன்முறையை எதிர்கொள்கின்றனரோ, அதுவே எமது உயர்ந்தபட்ச எல்லையாகும். இதுவல்லாத அனைத்தும் துரோகத்தனமாகும்;. உதாரணமாக இலங்கை இனப்பிரச்சனையில் ஏகாதிபத்திய தலையீட்டை நடத்தவும், புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கோரியும் ஏகாதிபத்திய அரசுடன் கூடிக்குலாவும் அரசியல் துரோகத்தனமானது. இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும், இலங்கையின் முழு மக்களுக்கும் கூட இது எதிரானது. தனிமனிதனிடம் புலிகள் நிர்ப்பந்தித்து பணம் வாங்குதல் என்பதை, இங்குள்ள சட்டத்திட்டத்தின் அடிப்படையில் தனிமனிதனாக எதிர்கொள்வது அரசியல் செயல்பாடல்ல. மாறாக இலங்கையின் மொத்த அரசியலை எடுத்து, ஏகாதிபத்திய தலையீட்டைக் கோரும் போதே, அது மக்கள் விரோத அரசியல் பரிணாமத்தைப் பெறுகின்றது. தனிமனிதனின் தனிப்பட்ட செயல்பாடுகள், அந்த நாட்டின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டது. அரசியல் செயல்பாட்டில் உள்ளவர்களின் செயல்பாடுகள் அந்த நாட்டின் சட்டதிட்டத்தைக் கடந்து, அந்த நாட்டின் உலகளாவிய மக்கள் விரோத அரசியல் சதிக்கு துணையாக அமையக் கூடாது.

இந்த ரி.பி;சி கும்பல் கைக்கூலிகள் அல்ல என்றால், குறிப்பாக ஏகாதிபத்திய நாட்டில் கைக்கூலிகள் எப்படி இருப்பார்கள். அவர்கள் என்ன செய்வார்கள். தமிழ் மக்களின் போராட்டத்தில் கைக்கூலிகள் என்ன மாதிரி தகவலை ஏகாதிபத்தியத்துக்கு வழங்குவர். ஏகாதிபத்திய அமைப்பு என்னமாதிரியான தகவலை பெற முனைவர்?. அவர்கள் எதைச் செய்யக் கோருவர். இதை நீங்கள் உங்களையே கேட்டு பதிலை தெரிந்து கொண்டு, விடையத்தை புரிந்து கொள்ள முயலுங்கள்.

தமிழ் மக்களின் முதுகில் குத்தும் ஜெயதேவனின் அரசியல்

ஜெயதேவன் தமிழ் மக்களுக்கு செய்ய முனைவது, அன்னிய ஆக்கிரமிப்பை இலங்கையில் நடத்துவது தான். இதை எப்படி நடத்துவது என்பதை, அவர் வெளிப்படையாகவே செய்கின்றார். அன்னிய ஏகாதிபத்திய சக்திகளுடன் அன்றாடம் இதற்காகவே கூடிக் கூலாவுகின்றார். ஒரு காலத்தில் அன்னிய சக்திகளை பயன்படுத்தி புலியின் பாசிசத்தை நியாயப்படுத்தவும், பாதுகாக்கவும் இதையே செய்தார். இன்று இதை எதிர்நிலையில் புதிய பாசிச சக்திகளை புலிக்கு மாற்றாக கொண்டுவர முனைகின்றார். இந்தவகையில் அன்னியக் கைக்கூலியாக செயல்படுகின்றார்.

உண்மையில் ஜெயதேவன் ரி.பி.சிக்கு வருகை தந்த பின்பான அரசியல் பரிணாமம், மிகத் துல்லியமாக ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தை அப்பட்டமாக செய்யத் தொடங்கியுள்ளது. உதாரணமாக அதை அவர் வெளிப்படுத்தவும் செய்தார். இலங்கையில் எண்ணை எதுவும் இல்லை. அதனால் ஜனநாயகத்தின் பெயரில் ஏகாதிபத்தியம் தலையிடாது. இதனால் நாம் முயன்று தலையிட வைக்க வேண்டும் என்றால், புலியெதிர்ப்பு ஆர்பாட்டங்கைள நடத்த வேண்டும் என்றார். இது பத்து பேரில் இருந்து ஆயிரமாக வேண்டும். அன்னிய தலையீட்டை நியாயப்படுத்த, நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இந்தச் செய்தி. இந்த வகையில் தான் முதலாவது ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஐரோப்பியயூனியன் முன் ரி.பி.சிக்கு ஊடாக நடத்தினார். இந்த விடையத்தை ஜெயதேவன் மட்டும் தான், புலியெதிர்ப்புக் கும்பலில் தெளிவாக புரிந்துள்ளார். எது நடக்கவேண்டுமோ, அதை நோக்கி அவரின் முன்னெடுப்புகள் தெளிவாக உள்ளது.

ஜெயதேவன் புலிகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில், பிரிட்டிஸ் ஆளும் வர்க்கத்தால் கருசனையுடன் மீட்கப்பட்டவர். இந்த அடையாளத்துடன் தான் ரி.பி.சிக்கு வருகை தருகின்றார். நான் புலிகளினால் கைது செய்யப்பட்டது எப்படி நியாயமாகும் என்ற வாதங்கள் மூலமும், எந்த நீதி விசாரணையும் கிடையாது என்ற தர்க்கத்துடன் தன்னை நிலைப்படுத்தத் தொடங்கினார். அங்குள்ள மனிதவிரோத நடைமுறைகளுடன் அணுகுகின்றார். பண்பாக பேசுதல், தம்பி போட்டு கதைத்தால் (புலிகள் அண்ணை போட்டு கதைப்பார்கள்) மூலம், தமிழ் மக்களின் அரசியல் அறியாமை மீது ஒரு பிற்போக்கு அரசியலை திட்டமிட்ட வகையில் நகர்த்துகின்றார். அத்துடன் படித்தவர், பண்பாளர், நேர்மையானவர், புலியின் துன்பத்தை நேரில் அனுபவித்தவர், புலிகளுடன் நேர்மையாக கதைக்கச் சென்றவர், புலிக்கு பல வழிகளில் உதவியவர், பிரிட்டிஸ் ஆளும் வர்க்க அரசியல்வாதி, சாதிமான், கோயில் நிர்வாகி என சமூகத்தை ஏமாற்றக் கூடிய, பற்பல பொது அங்கீகாரம் பெறத்தக்க சமூகத் தகுதிகள். இதைக் கொண்டு அவர் சொல்ல வரும் அரசியல் அன்னிய தலையீடுதான். புலிக்கு பதில் தன் தலைமையிலான (தன்னைப் போன்ற) புதிய தலைமை. புலிகளின் அதே வர்க்க அரசியலே, அவரின் அரசியல். இதில் முரண்பாடில்லை. முரண்பாடு தன்னைப் போன்றவர்கள் மீதான நடவடிக்கை அவசியமற்றது என்பதே. அதில் இருந்து முரண்பாடான அரசியல் முன்னெடுப்புகள். புலியை அன்று பிரிட்டிஸ் தடைசெய்த போது, அதை எதிர்த்து நீதிமன்றம் வரை செல்ல முயன்றவர், இன்று ஐரோப்பிய யூனியன் முன் சென்று புலியை தடை செய்யக் கோருகின்றார்.

இப்படி அரசியலின் மற்றொரு கோடிக்குச் சென்று மக்கள் விரோத அரசியலைச் செய்கின்றார். அன்று புலியை ஆதரித்த போது மக்கள் விரோத அரசியலே அவரின் அரசியலாக இருந்தது. இன்று ஏகாதிபத்தியத்தின் பின்நின்று, அதே மக்கள் விரோத அரசியலையே அவர் பண்பாகச் செய்கின்றார். ஐரோப்பிய யூனியன் முன்னான புலியெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னனியில் ஜெயதேவனின் திட்டமிட்ட அரசியல் நகர்வுள்ளது. இது ஜெயதேவன் போன்றவர்களின் சொந்தக் கண்டுபிடிப்பல்ல. மாறாக இலங்கையை நேரடியாகவே மறுகாலனியாக்க, விரும்பும் ஏகாதிபத்தியங்களின் தெளிவான ஆலோசனைகள் தான் இவை. இதற்கு மேல் எதுவும் இவர்களின் அரசியலில் கிடையாது. துல்லியமாக யாரையும் விட, ஏகாதிபத்திய தலையீட்டுக்குரிய சூழலை உருவாக்குவது எப்படி என்பதை ஜெயதேவனால் மட்டும் தான் வழிகாட்டமுடிகின்றது. கடந்துவந்த வரலாற்றில் இந்தியா, இலங்கை கைக்கூலிகளாக ஒரு தலைமுறையை சிதைத்த சில தலைமைகள் போல், இன்று புலி அம்பலமாகி வரும் வெற்றிடத்தில் ஏகாதிபத்திய கைக்கூலிகளே அந்த இடத்தை நிரப்ப முனைகின்றனர். இது ஒரு ஆச்சரியமான உண்மை.

ஏகாதிபத்திய கைக்கூலியாக செயல்படும் ஜெயதேவன், இன்று ரி.பி.சி ஊடாக சமூக அரங்கில் வரமுன்னம் என்னசெய்தார். புலிகளின் அனைத்து மக்கள் விரோத செயல்பாட்டையும் ஆதரித்து நின்றவர். சகல மனிதயுரிமை மீறலையும் பூசி மெழுகும் ஒரு மக்கள் விரோத செயலைச் செய்தவர். புலிகள் செய்த ஒவ்வொரு கொலைக்கும், ஒவ்வொரு மனிதயுரிமை மீறலுக்கும் ஜெயதேவன் போன்றவர்களின் ஆதரவு இன்றி, இவர்களின் நிதி வளங்களுமின்றி எதுவும் நடக்கவில்லை. இன்று அதையே எதிரணியில் நின்று செய்கின்றார். பாதிக்கப்பட்டது அன்று மக்கள் தான், இன்றும் அதே மக்கள் தான்.

அவரை கைது செய்த புலிகள், அவருக்கு ஞானப்பாலைக் கொடுத்து ஞானம் கொடுக்க முன்பாக, பல ஆயிரம் இளைஞர்களை புலிகள் கொன்று குவித்திருந்தனர். அப்போதெல்லாம் ஜனநாயகம் பொத்து கொண்டு வரவில்லை. அவர் கூறுவது போல் தேசியத்தை ஆதரிக்க வேண்டியிருந்தது அதனால் ஆதரித்தோம், அதேபோல் தான் தேசியத்துக்காக கொலைகளை நியாயப்படுத்தினோம். இதை மட்டும் அவர் நேரடியாக சொல்லவில்லை, மறைமுகமாக சொல்ல முனைகின்றார். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்போதும் இன்றைய பிரிட்டிஸ் தொழில் கட்சியின் உறுப்பினர். தற்போதும் அக்கட்சியின் உறுப்பினர். இது எதைச் சொல்லுகின்றது. அவர் அரசியல் ரீதியாக தன்னை மாற்றவில்லை என்பதையே. அரசியல் ரீதியாக ஒரே அரசியல். தனிப்பட்ட முரண்பாடு, எதிர் அரசியலாக வருகின்றது. அதாவது எதிர்கட்சி அரசியல் வகைப்பட்டது. இது தெளிவாக மக்கள் விரோத அரசியல் தான்.

இப்படி சொந்த நலன் சார்ந்து குத்துக்கரணமடித்து, ஜனநாயகம் பற்றிய திடீர் அக்கறை போலியானது. சாதாரண மனிதன் இப்படி உணர்வது வேறு, அரசியல்வாதிகள் இப்படி திடீர் வேஷம் கட்டியாடுவது வேறு. திடீர் ஜனநாயகவாதியாக முன் மற்றவனுக்கு ஜனநாயகம் மறுக்கப்பட்ட போது, அதற்கு தூணாக துணை நின்றவர் தான் இவர். இன்று அதுதான் அவரின் நிலை. இன்று அவர் திடீர் ஜனநாயகத்தை மீட்க பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள், இலங்கையில் தலையிட வேண்டும் என்ற கொள்கையை அவர் முன்வைக்கின்றா. இந்த வகையில் அவர் ஒரு ஜனநாயக விரோதியாகவே உள்ளார். மக்களின் ஜனநாயகத்தை, அவர்களின் போராடும் ஜனநாயகத்தை மறுப்பவராகவும் உள்ளார். ஈராக்கின் கைக்கூலி பிரதமர் போல், வடக்கு கிழக்கு அதிகாரத்தில் தலைவராக வேண்டும் என்ற கனவுடன் செயல்படுகின்றார். இதனால் தான் அவர் ஒரு விவாதத்தில், தான் நிச்சயமாக வன்னி செல்வேன் என்று ஆணித்தரமாக சொல்லுகின்றார். அன்னிய தலையீட்டு மீதான ஆழ்ந்த நம்பிககையுடன் செயல்படுகின்றார்.

சரி இந்த திடீர் ஜனநாயகக் கனவான், திடீர் ஜனநாயகவாதியாக முன் ஏன் வன்னிக்குச் சென்றார். இங்கு எம்முன் நெருடுவது என்ன. புலியின் நம்பிக்கைக்குரிய ஒரு பினாமிதான் நான் என்பதைச் சொல்லத்தான், வன்னிக்கு சென்றார். இதை யாரும் மறக்கமுடியாது. பிரிட்டிஸ்சில் புலிகளுக்கு இடையில் உள்ள முரண்பாட்டில் தான் புறக்கணிக்கப்படுவதை முறையிடவும், தனக்குரிய தகுதியை அங்கீகரிக்க கோரிய ஒரு நேர்த்தியாகவே வன்னி சென்றார். பக்தன் எடுத்துச் சென்ற பூசைப் பொருட்களை (பெரும் தொகை பணம் கொடுக்கப்பட்டது) காலடியில் வைத்த நிலையிலும், கடவுளோ கண்ணைத் திறந்து முறையிடச் சென்றவரை ஏறெடுத்து பார்க்கவில்லை. மாறாக நெற்றிக் கண்ணை திறந்து எரியூட்டுவதற்காக, பலிபீடத்துக்கு அழைத்துச் சென்றனர். இப்படித் தான் திடீர் ஜனநாயகவாதியாகி ஞானம் பெற்றவர். ஈராக்கில் சகல மனிதயுரிமை மீறலுக்கும், ஏன் ஈரான் மீதான படையெடுப்பை தூண்டி பெருமளவில் இராணுவ பொருளாதார உதவியை வழங்கிய அமெரிக்கா, பின் திடீர் ஜனநாயகவாதியாக ஈராக்கை ஆக்கிரமித்த அதே உத்தி அதே அரசியல் தான் ஜெயதேவனின் நடத்தையிலும் நாம் காணமுடியும். இது தான் பிரிட்டிஸ் தொழில் கட்சியின் நிலையும் கூட.

வழமையாக புலிகள் பல்லைக்காட்டி வாலையாட்ட வைக்க, பெரும் தொகை பணம் கைமாறுவது வழக்கம். இந்த உத்தியைத் தான் ஜெயதேவன் வன்னிக்கு போனபோது செய்ய முனைந்தவர். பெரும் தொகை பணத்துடன், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தை துடைக்க என்று சொல்லி எடுத்துச்சென்றார். இப்படித் தான் புலிகளின் கடைக்கண் பார்வைக்காக விமானமேறி தானாக வன்னி சென்றார். ஆனால் புலிகள் இவர் அல்லாத லண்டன் தரப்பை ஆதரிக்கவும், இவர் நடுவீதியில் கைவிடப்பட்டார். அவர்களின் பொறிக்குள் சிக்கிய நிலையில், அவர்கள் வழமையான அணுகுமுறைக்கு ஏற்ப சிறைவைத்தனர்.

இப்படி திடீர் ஜனநாயகத்தை அவர் பேச புலிகளே காரணமாகவே இருந்தார்கள். ஒரு கணம் எதிர்நிலையில் சிந்தித்து பாருங்கள். புலிகள் ஜெயதேவனை வாங்கோ, நீங்கள் தான் எல்லாம் என்று வழமைபோல் தமிழ்ச்செல்வன் பல்லைக்காட்டி இருந்தால் என்ன நடக்கும். ஊரார் வீட்டுப் பணத்தின் நல்ல விருந்துபசாரம் செய்து இவர்களை திருப்பி அனுப்பியிருந்தால் இவர்கள் இன்று ஐரோப்பாவில் என்ன செய்வார்கள். நேர்மையாக நீங்களே கேள்வியை கேட்டு பதிலை சொல்லுங்கள்.
தமிழ்பேசும் மக்களின் ஜனநாயகம் பற்றி பேசுவார்களா!. சொல்லுங்கள். நிச்சயமாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியெனின் ஏன் தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றீர்கள். உங்களுக்கு சூடுசுரணை எதுவும் கிடையாதா? இவரை தனிப்பட்ட ரீதியில் புலிகள் அணுகிக் கொண்ட அனுகுமுறையின் பின்பு தான் திடீர் ஜனநாயகவாதியானர். இவர் இன்று தமிழ் மக்களின் அரசியல் ஆய்வாளர். தமிழ் மக்களின் ஜனநாயகத்தை மீட்கும் தலைவர். தமிழ் மக்களை வழிநடத்த, புலி அல்லாத தரப்பு தலைவர்களில் ஒருவர். கொஞ்சம் யோசியுங்கள், ஜெயதேவன் வன்னி செல்லாவிட்டால் அல்லது புலிகள் அவரை நல்லவிதமாக நடத்தியிருந்தால் என்ன நடந்து இருக்கும். உங்களுக்கு எந்த ஆச்சரியமும் இருக்காது. பாலசிங்கம் கூட்டத்தின் முன்வரிசையில் அமர்ந்து இருந்து விசிலடித்து இருப்பார். இல்லை என்கின்றிர்களா!

இவர் சொல்லுகின்றார் தனக்கு இப்பதான் எல்லாம் தெரியுமாம். நம்புங்கள்! இப்படி கூறுபவர் எப்படி தமிழ் மக்களின் தலைவனாக இருக்கமுடியும். இப்படி கூறுவதே, அதே புலி அரசியலாகும். இப்படி சொல்பவன் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியும், மோசடிக்காரனுமாவான். அவர் சொல்லுகின்றார் மாத்தையா கொலைக்கு முன் நடந்த கொலைகள் எதுவும் தனக்கு தெரியாதாம். மாத்தையாவே பலரைக் கொன்ற கதைகள் பல. ஏன் நான் புலிகளின் வதைமுகாமில் சித்திரவதை செய்யப்பட்ட போது, அதை மாத்தையாவே நேரடியாக செய்தவன். அந்த வதைமுகாமில் இருந்து, சிறையுடைத்து தப்பியவன்தான் நான். நான் பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்ததால், மாணவர் போராட்டத்தை தணிக்க எனக்கு உயிர் உத்தரவாதத்தை மாத்தையா, தீலிபன் போன்றோர் பகிரங்கமாக பல்கலைக்கழக மேடையில் வழங்கியவர்கள் தான். இவை அனைத்தும் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தவைதான். எனக்கு வதைமுகாமில் என்ன நடந்தது என்பதை, 300 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக "வதை முகாமில் இருந்து தப்பிய தூக்கு மேடைக் கைதியின் நினைவுகள் அழிவதில்லை" என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். இன்றைய நிலையில் இந்த நூல் எனது மரணத்தின் பின் வெளிவரும் வகையில் பாதுகாத்து வைத்துள்ளேன்.

இப்படி பல நூறு சம்பவங்கள் நடந்த போதும் அவை எதுவும் ஜெயதேவனுக்கு தெரியாதாம். இது ஜெர்மனிய நாசிகள் நடத்திய யூதப் படுகொலைகளைப் பற்றி எதுவும் தெரியாது என்று, தனிப்பட்ட நாசிகள் பின்னால் கூறி பிழைக்க முனைந்தது போன்றது. இதைத் தான் ஜெயதேவன் செய்ய முனைகின்றார்.

புலிகளின் மனிதஉரிமை மீறல்கள், அன்றாடக் கொலைகள், இயக்க அழிப்புகள் 1970 களிலேயே தொடங்கியது. 1980க்கு முன்னமே இயக்க உட்படுகொலைகள் இயக்கத்தில் தொடங்கி இருந்தது. 1980 க்கும் 1986 க்கும் இடையில் இயக்க உட்படகொலைகள், இயக்க மோதல்கள் அன்றாடம் நடந்தது. மக்களின் கதி அதைவிட மோசமானது. மக்கள் இயக்கத்துக்கு எதிராக பல நூறு போராட்டங்களை நடத்தினர். யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் முதல் பல நூறு போராட்டங்கள் அன்றாடம் நடந்தவண்ணம் இருந்தது. ஜனநாயகத்துக்கான குரல்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது எல்லாம் இதை மழுங்கடிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் யார். நீங்களும் உங்களைப் போன்றவர்களுமே. பல நூறு இளைஞர்கள் இதன் போது கொல்லப்பட்டனர். அவர்களை எல்லாம் இன்று புலியெதிர்ப்பு அணி, புலியைப் போல் முதலில் புதைகுழிக்கு அனுப்புகின்றனர். அவர்கள் மக்களுடன் நிற்க, முன்வைத்த அரசியலை காலில் போட்டு மிதிக்கின்றனர். இலக்கியச் சந்திப்பு முதல் ரி.பி.சி வரை இதைத் தான் செய்கின்றது. 1985தின் பின் புலிகள் இயக்கங்களையே அழித்து, அவர்களை உயிருடன் வீதியில் இட்டு கொழுத்திய போது, முன்னாள் பின்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எரித்த களைப்புத் தீர கொக்கோலோ உடைத்து கொடுத்தவர்கள் தான். அதாவது மனிதப் படுகொலைகள் மூலம் மனிதயுரிமை மீறலை புலிகள் செய்த போது, ஜெயதேவன் போன்றோரே அதன் தூணாக இருந்தவர்கள்.

இன்று ஜெயதேவனின் தனிப்பட்ட அதிகாரம் சார்ந்த பாதிப்பு, இன்று திடீர் ஜனநாயகமாகிய போது புலியல்லாத தலைமைபற்றி கூறி அதன் தலைவர்களில் ஒருவராக முனைகின்றார். புலியல்லாத தலைவராக பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் தோளில் அமர்ந்து இருந்தபடி, புலியால் பாதிக்கப்படும் மக்களே தம் பின்னால் வாருங்கள் என்று அழைக்கின்றார்.
இதற்கு கடிவாளம் கொடுக்கும் ரி.பி.சியின் கதையும் இப்படித் தான். முதன் முதலில் ஐரோப்பாவில் மாவீரர் தின உரையை தாமே நேரடியாக வன்னியில் இருந்து ஒளிபரப்பியதாக பெருமைப்படும் ராம்ராஜ்க்கும், புலிக்கும் இடையில் ஒரு தேனிலவு ஒரு காலத்தில் இருந்தது. அதாவது ஒரு பினாமிய உறவு இருந்தது. புலிகளின் அனுமதியுடன், புலியின் தயவுடன் வன்னியில் இருந்து மாவீரர் தின உரையை ஐரோப்பாவுக்கு முதன் முதலில் ஒளிபரப்பிய பெருமையை நினைவு கூரும் இவர்கள், புலிகளின் ஜனநாயக விரோதச் செயலைப் பற்றி அப்போது அவர்கள் பேசியது கிடையாது. அரசியல் ரீதியாக ஒரே அரசியல், ஒரே கொலைக் கலாச்சாரம் என்ற தொழில்முறைக் கூட்டாளிகள் என்பதால், அப்போது இவர்களுக்கு ஜனநாயகம் பிரச்சனையாக இருக்கவில்லை.

அந்த வகையில் தான் மாவீரர் செய்தியை ஒளிபரப்பியவர்கள். புலி அல்லாத போராளிகளின் நினைவை போற்றவில்லை. அன்று புலிக்கு விமர்சனம் வைத்தவர்களை, வானொலியில் இருந்தே வெளியேற்றினர். இன்று பூகோளம் இணையத்தளத்தைச் சேர்ந்த அழகுகுணசீலன் மற்றும் ஜெயந்திமாலா போன்றோர், புலிகளை அரசியல் ரீதியாக விமர்சித்ததால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இன்றைய அரசியல் கலந்துரையாடலை, அவர்கள் தான் தமது பணியில் தொடங்கிவைத்தவர்கள். ஆனால் அவர்கள் இன்று அதில் இல்லை. இதுபோல் தான் இலக்கியச் சந்திப்பும். தொடக்கியவர்கள் அதில் இல்லை. சீரழிவின் வக்கிரம் இப்படித் தான் எங்கும் அரங்கேறியது. தமிழ் மக்களின் மாற்றுத் தலைமையாக திடீர் ஜனநாயகவாதி ஜெயதேவன் வந்தது போல் தான், திடீர் சிவலிங்கமும் அரசியல் ஆய்வாளராக அரங்கில் வந்தார். கடந்த 25 வருடமாக ஜனநாயகத்துக்கான போராட்டம் ஒன்று நடந்து வந்ததை மறுப்பது தான், இவர்களின் முதல் வேலை. மக்கள் இப்பதான் சிந்திக்கின்றனர் என்று கூறுவதே, அரசியல் விபச்சாரம் தான். புலிகள் மக்களானது போல் தான், ஜெயதேவன் மக்களாகின்றார்.

இப்படி கடிவாளம் கொடுக்கும் ரி.பி.சி புலியெதிhப்பு அரசியலைக் கூட புலிகளுடன் விபச்சாரம் செய்தபோது அன்று வைக்கவில்லை. இப்படி புலி சார்பு ஜனநாயக விரோத நிலைப்பாட்டுடன் தான் ரி.பி.சி புலியாகவே இயங்கியது. புலிகளின் கடைக்கண் பார்வைக்காகவும், புலியின் உத்தியோகபூர்வமான பினாமியாக ரி;பி.சி இருக்கமுயன்றது. ராம்ராஜ் இந்தியக் கைக்கூலியாக, இந்திய இராணுவத்தின் எடுபிடியாக தமிழ் மண்ணில் வக்கரித்து திரிந்த போது, இதே ஜனநாயகத்தைச் சொல்லித் தான் தமிழ் மக்களை அடக்கியொடுக்கினர். பின் சந்தர்ப்பவாதியாக புலியின் பினாமியாக இலங்கை இராணுவத்திடம் இருந்து ஜனநாயகத்தை பெறப் போவதாக கூறி புலியின் பினாமியானவன். இன்று ஏகாதிபத்திய துணையுடன், இலங்கை அரசின் துணையுடன் புலியிடமிருந்து ஜனநாயகத்தை மீட்கும் போராட்டத்தை நடத்துகின்றாராம். நீங்கள் முட்டாளாக இருக்கும் வரை, இதை அவர்களால் செய்யமுடியும்.

புலியுடனான ரி.பி.சியின் தேனிலவு எப்படி தகர்ந்து போனது. அதே ஜெயதேவன் வரலாறு படிதான். புலிகள் அணுகும் விதமே அபகரிப்பு வழிமுறைதான். ரி.பி.சி யை புலிகள் தமதாக்க முற்பட்ட போது முரண்பாடு எற்பட்டது. உதாரணமாக இன்றைய ரி.ரி.என் கூட புலிகளால் உருவாக்கப்பட்டதல்ல. அதுவும் மோசடி செய்து ஏமாற்றி அபகரிக்கப்பட்டது. இன்றைய எரிமலை கதையும் அப்படித்தான். புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சபாலிங்கம் தொடங்கியதே எரிமலை. இலங்கையில் இதற்கு வேறு வரலாறு உள்ளது. புலிகள் ஜ.பி.சியை கைப்பற்றிய பின்பாக, ரி;.பி.சிக்கும் புலிக்கும் இடையில் முரண்பாடு உருவானது. இது ஐ.பி.சியைக் கைப்பற்றியதில் அல்ல, புலி ரி.பிசிக்கு எதிரான நிலைப்பாட்டால் உருவானது. ஒரு கட்டத்தில் தமிழ்செல்வனுடன் (ரி.பி.சியின் பத்திரிகை தொடர்பாக) தொடர்பு கொண்டு, புலிப்பினாமியாக இருக்கவும் முரண்பாட்டை தணிக்கவும் முனைந்தனர்.

ஆனால் பல்லைக்காட்டிவிட்டு இரகசியமாக தமிழ்ச்செல்வன் ரி.பி.சிக்கு எதிராக எழுதி கடிதம் தீடிரென ஐ.பி.சியில் வாசிக்கப்பட்ட பின்பே, ரி.பி.சி திடீர் ஜனநாயகவாதியாக மாறியவர்கள். இப்படி இவர்களின் திடீர் ஜனநாயக வேஷங்கள், அவதாரங்கள் பலவாகும். இதுவே பின்னால் புலியெதிர்ப்பு அரசியலாக மாறியது. இன்று புலியை அழிக்கும் யாருடனும் கூட்டுச் சேரும் அரசியலே இவர்களின் மையச் செயல்பாடாகியுள்ளது.

இன்று இந்தியா, இலங்கை, ஏகாதிபத்தியங்களுடன் நெருங்கிய தொடர்புடன் இயங்குகின்றனர். இதை அவர்கள் கூறவும் செய்கின்றனர். இன்று ஜெயதேவன் பின்னும், ரி.பி.சி வானொலியின் பின்னால் செயல்படும் பல ஏகாதிபத்திய நாடுகளில் அரசியல்வாதிகளும், பொலிசும், உளவுத்துறையும் நெருக்கமாக செயல்படுகின்றனர். இதை இவர்கள் சட்டஒழுங்கு பிரச்சனைக்கு உட்பட்டதாகவே காட்டமுனைகின்றனர். இன்று தகவல்களை வழங்குதல், புலம்பெயர் நாட்டு செயல்பாடுகளை காட்டிக் கொடுத்தல் (புலிகள் அல்லாத எல்லைவரை) என்ற விரிந்த தளத்தில் இவர்கள் கைக்கூலிகளாக செயல்படுகின்றனர். பிரான்சின் உள்துறை அமைச்சின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசியல் பொலிஸ், என்னை அழைத்து உலகில் உள்ள எந்த அரசுகளைப்பற்றியும் எழுதுவதை உடன் நிறுத்தக் கோரியது. தமக்கு தகவல்களை தரக் கோரியது. தேசியம் என்பது சாத்தியமில்லை என்றதுடன், பல நாடுகளின் உதாரணத்தைக் கூறி அதை தாம் அனுமதிக்க மாட்டோம் என்றனர். இப்படிப் பல. இதன் பின்னால் புலியெதிர்ப்பு அரசியல் பிரிவுகளின் செயல்பாடுகள் உள்ளன. இந்த வகையில் இன்று புலியெதிர்ப்பு என்பது, ஏகாதிபத்தியம் எமது நாட்டை ஆக்கிரமிக்க எது தேவையோ, அதை நிறைவு செய்யும் செயல்பாட்டில் இவர்கள் உள்ளனர். அதை இவர்களால் மறுக்கவே முடியாது. இவர்கள் நடத்தும் அரசியல் சந்திப்புகள், பொலிஸ்சுடனான தொடர்புகள், பத்திரிகை சந்திப்புகள், கடிதங்கள், மகஜர்கள் எங்கும் இதுவே நிகழ்கின்றது. தமிழ் மக்களுடன் அவர்கள் விடுதலையை அவர்களே போராடிப் பெறவேண்டும் என்று எப்படி பேசுவதில்லையோ, அப்படி ஐரோப்பிய மக்களுடன் இவர்கள் பேசுவது கிடையாது. பேசுவது, கூடி நிற்பது ஆக்கிரமிப்பு சதிகாரர்களுடன் தான்.

ஜெயதேவன் அடிக்கடி கூறுகின்றார் உண்மையைக் கண்டு கொள்ளும்படி. கண்ணதை திறந்து அங்கே என்ன நடக்கின்றது என்பதை பாருங்கள் என்கின்றார். புலிகள் பொய்களையும், அவதூறுகளையும் கூறுவதால், உண்மையை கண்டறியக் கோருகின்றார். சிந்திக்கக் கோருகின்றார். நல்லது.
ஆனால் அவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இதற்கு எதிராகச் செயல்பட்டவர்தான். சரி கடந்த ஒரு வருடத்தின் பின் என்ன செய்கின்றார். அவர் புலிகள் விடையத்தில் மட்டும் இப்படி செய்யக் கோருகின்றார். இது ஒரு அரசியல் மோசடி அல்லவா! ஏன் சமூகத்தின் அனைத்து விடையத்திலும் இதைக் கோரவில்லை. ஏன் அவர் தான் இதைச் செய்யவில்லை. புலிகள் விடையத்தில் மட்டும் அவர் தன்னை மாற்றியவர், மற்றைய விடையங்களில் பழைய அதே நிலைப்பாடு. இது எப்படி சரியானது. இங்கு மாற்றம் எதுவும் நிகழவில்லை. ஒரு மோசடி, சதி அரசியலாகின்றது. இதுவே புலியெதிர்ப்பு அரசியலின் பின்னுள்ளவர்களின் நிலையாகும்.

ஜெயதேவன் மக்களை முட்டாளாக்கும் ஒரு பார்ப்பனிய கோயிலை நடத்துகின்றார். இங்கு உண்மையைக் கண்டறியக் கோரவில்லை. கடவுள் உண்டு என்று கூறி, கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி உண்டியல் பணத்தை வசூலிக்கும் கயவர்கள் தான் இவர்கள். எப்படி உண்மையானவராக இருக்கமுடியும். இவர்கள் எப்படி நேர்மையானவர்கள். கோயில்களுக்கும், உண்டியல்களுக்கும் கதைகளுண்டு. மக்கள் தமது பிரச்சனைக்கு உண்டியலில் பணம் போடுவதால் எதுவும் நிகழ்வதில்லை என்பது, உண்மையைக் காணும் ஆய்வாளனுக்கு ஏன் இவை தெரிவதில்லையா? இதுவரை தெரியாவிட்டால் இன்றே தெரிந்துகொண்டு, அந்த கயவாளித் தொழிலை ராஜினமா செய்யும். கோயில்கள் என்பன மக்கள் சிந்திக்கவிடாது அடிமைப்படுத்தும் ஒரு மக்கள் விரோத நிறுவனம் தான். இதனால் தான் புலிகள் பிரதேசத்திலும் இது செழிப்புற்று வளருகின்றது.

தனிப்பட்ட மனிதன் வழிபட முனைவது என்பது இதில் முற்றிலும் வேறுபட்டது. சமூகத்தின் அவலமான நிலையைக் கண்டு அஞ்சி, தனிப்பட்ட மனிதன் இன்னுமொரு சக்தியிடம் முறையிடுவதாக இது அமைகின்றது. அதாவது இன்றைய சமூகம் காது கொடுத்து கேட்கமறுக்கும் நிலையில், அதை தீர்க்க முன்வராத போது, அதை இல்லாத ஒன்றிடம் கூறி ஒப்பாரி வைப்பதுதான் வழிபாடு. உண்மையானவன் நேர்மையானவன் மக்களின் பிரச்சனை தீர்க்கும் வகையில் வழிகாட்ட வேண்டுமே ஒழிய, இல்லாத ஒன்றிடம் ஒப்பாரி வைக்க துணை நிற்கமுடியாது. இவர்கள் எப்படி நேர்மையாக புலிகளுக்கு மாற்றாக தமிழ் மக்களை வழிநடத்துவர்.

கோயில் வைத்து மக்களை ஏமாற்றி வாழ்வோர், மதப்பிரச்சாரம் செய்வோரின் நோக்கம் தனிமனித வழிபாட்டில் இருந்து வேறுபட்டது. கோயிலும் அது சார்ந்த தத்துவங்களும். மக்களை மந்தையாக்கி, பணம் கறக்கும் நிறுவனங்;கள் தான். அத்துடன் ஆளும் மக்கள் விரோத அரசின் அடக்கு முறைக்கு, மக்களை வழிபாட்டின் மூலம் அடிபணிய வைப்பவைதான். உண்மையில் கோயில் அது சார்ந்த மதக்கோட்பாடு என்பது புலிகளைப் போல், பணத்தை கறப்பதுடன் மக்களை அடிமையாக வைததிருக்க விரும்பும் ஆளும் வர்க்கத்தின் கருவியாகவேயுள்ளது. இங்கு பணம் வசூலிப்பு என்பது கடவுளின் பெயரால், பக்தியின் பெயரால் நடக்கின்றது. புலிகளின் பணவசூலிப்பு பிரபா என்ற கடவுள் பெயரால், தேசியத்தின் பெயரால் நடக்கின்றது. மக்களின் பெயரில், கடவுளின் பெயரில் மனிதர்கள் ஏமாற்றப்படுகின்றனர். மனிதவுழைப்பு உருவாக்கும் செல்வத்தையே புடுங்குகின்றனர். இதில் ஜெயதேவனி;ன் கோயிலும் இதைத்தான் செய்கின்றது. மனிதன் தான் சிந்தித்து செயலாற்றும் உணர்வை, ஜெயதேவனின் கோயிலும் அதன் நோக்கமும் மறுதலிக்கின்றது. பின்பு வேடிக்கையாக உண்மையைக் கண்டறிய சமூகத்தைக் கோருகின்றார்.
உண்மையானவர் நேர்மையானவர் என்ற போலித்தனத்துடன் திடீர் ஜனநாயகவாதியான ஜெயதேவன், மற்றொரு மக்கள் விரோத சர்வதேச அரசியலில் ஈடுபடுகின்றார். பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை ஆளும் தொழில் கட்சியின் ஒரு விசுவாசமிக்க கட்சி உறுப்பினர். பிரிட்டிஸ் தொழில்கட்சி பிரிட்டனிலும், உலகளாவிலும் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. அதாவது புலிகள் தமிழ் மக்களை மட்டும் தான் மொட்டை அடிக்கின்றனர். ஆனால் பிரிட்டிஸ் அரசு உலகெங்கும் உள்ள மக்களையே மொட்டை அடிக்கின்றது. ஆட்சிகவிழ்ப்புகள், அரசியல் சதிகள், ஆக்கிரமிப்புகள், படுகொலைகள் என்று அனைத்தையும் செய்கின்றது. பல சந்தர்ப்பத்தில் இதை நாகரிகமாக செய்கின்றது, புலிகள் இதை காட்டுமிராண்டித்தனமாகச் செய்கின்றது.

பிரிட்டிஸ் தொழில்கட்சி பிரிட்டிஸ் ஏகாதிபத்திய என்ற அதிகாரத் திமிருடன், உலக ஜனநாயகத்துக்கு புறம்பாக ஈராக் ஆக்கிரமிப்பை முன்னின்று நடத்தியது. ஒரு கட்டத்தில் ஒரே நாளில், ஒரு கோடி மக்கள் உலகெங்கும் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பொது கூட இந்த ஜெயதேவன் மக்கள் பக்கம் இருக்கவில்லை. புலிகளைப் போல் மக்களுக்கு பொய்யையும் புரட்டையும் திணித்து, யுத்தத்தை ஈராக் மக்கள் மீது நடத்த துணை நின்றவர். பிரிட்டிஸ் மக்கள் வீதியில் இறங்கி போராடிய போது, பிரிட்டிஸ் தொழிற் கட்சிகள் மக்கள் விரோத ஆக்கிரமிப்பை நடத்த அன்று உதவினார், இன்று உதவுகின்றார். உலக ஆக்கிரமிப்பாளக் கட்சியின் உறுப்பினர் தான் இவர். அன்றும் சரி, இன்றும் சரி கட்சியை விட்டு வெளியேறி பிரிட்டிஸ் மக்களுடன் இணைந்து தனது கட்சியை எதிர்த்து இந்த ஜெயதேவன் போராடவில்லை. ஆனால் புலியில் இருந்து விலகி தமிழ் மக்களை, புலிக்கு எதிராக போராடக் கோருகின்றார். இதில் ஏன் இரட்டை வேடம். இரண்டும் மக்களுக்கு எதிரானது தான். ஆனால் ஆக்கிரமிப்பாளனுக்கு துணையாகவே இன்று, ஏன் இந்தக் கணம் வரை உள்ளார்.

ஈராக்கின் எண்ணைக்காக எண்ணை முதலாளிகள் ஜனநாயகத்தின் பெயரில் சதாம்குசைனை ஆட்சியில் இருந்து அகற்றி ஈராக்கை ஆக்கிரமித்தவர்கள் எப்படிப்பட்ட ஜனநாயகத்தை அங்கு நிறுவினார்கள். ஏகாதிபத்திய நாடுகளில் வைத்து கைக்கூலிகளாக்கியவர்களையே, ஆட்சியில் அமர்த்தினர். இதுதான் இன்று ரி;பி.சி கும்பல் தமிழ் மக்களுக்கு மாற்றுப்பாதையாக உங்களுக்கு வழிகாட்டு பாதை. ஈராக்கை ~ஜனநாயக ஆக்கிரமிப்பாளன் ஆக்கிரமித்த பின்பாக 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள் இவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். எங்கும் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களின் சிறைகளில் அரசியல் கைதிகளாக பல ஆயிரம் பேரை அடைத்து வைத்து, சித்திரவதை செய்கின்றனர். பல நூறு பெண்கள் உட்பட ஆண்களைக் கூட பாலியல் ரீதியாக வதைத்துள்ளனர், வதைக்கின்றனர். சதாம்குசைன் காலத்தில் நடக்காத அளவுக்கு மிகப் பெரிய மனித உரிமை மீறலை இவர்கள் செய்கின்றனர். ஆனால் இதை எல்லாம் ஆதரித்து தான், அவர் பிரிட்டிஸ் தொழில் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

இன்று இலங்கையில் அன்னிய ஆக்கிரமிப்பு நடக்கவேண்டும் எனக், கூறுவதில் ஜெயதேவன் மிக முக்கியமானவர். எண்ணை வளம் இருந்தால் அதை உடன் செய்துவிடலாம்; என்று கூறும் இவர், அதை எப்படிச் செய்யலாம் என்று கூறுவதே அவரின் இன்றைய அரசியலாகியுள்ளது.. இதன் மூலம் ஈராக்கில் செய்ததை இலங்கையில் செய்வதை, இவர் கொள்கை ரீதியாக ஆதரிக்கின்றார்.

உண்மை, நேர்மை என்ற இவர்கள் கூறுவது எல்லாம், புலிகளைப் போல் தமது சொந்த நலன் சார்ந்தவை தான். மக்கள் நலன் என எதுவும் கிடையாது. மக்கள் என்பது புலிகளைப் போல், தமது சொந்த நலனை அடையும் ஒரு கருவி மட்டும் தான்.

இவர்கள் எப்படி மக்கள் விரோத அரசியலை ரி.;பி.சியில் வைக்கின்றனர். ஒரு சில உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.

1.அண்மையில் மீண்டும் பேச்சுவார்த்தை என்றும் அதை ஜரோப்பாவில் நடத்த வேண்டும் என்று புலிகளும், ஆசியாவில் நடத்தவேண்டும் என்று அரசும் வாதாடியது. இதில் ரி.பி.சி புலிகளுக்கு எதிராக வழமை போல் தமது குறுகிய புலியெதிர்ப்பு அரசியல் நிலையையெடுத்தது.

ஏன் ஐரோப்பாவில் நடத்த முடியாது? ஏன் ஆசியாவில் நடத்த வேண்டும்;? முதலில் இந்த பேச்சுவார்த்தையை தடுக்கும் அரசியல் குதர்க்கத்துடன் இனவாதிகளான ஜே.வி.பியும், சிங்கள உறுமயவும் தான் ஆசியாவில் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று முன்மொழிந்தனர். இந்த முன்மொழிவை அல்லவா இவர்கள் கண்டித்து விவாதத்தை நடத்தியிருக்க வேண்டும். அதை அவர்கள் உள்நோக்குடன் செய்யவில்லை. ஜே.வி.பியைப் போல் பதிலளிக்க விரும்பிய புலிகள், பேச்சுவார்த்தை ஐரோப்பாவில் என்றனர்.

இதில் என்ன தவறுள்ளது. அரசியல் நேர்மையீனம் கொண்டதாகவும், சதிகளை அடிப்படையாக கொண்ட பேரினவாத அரசு, அதனுடன் உள்ள அரசியல் கும்பலும் அணுகும் போது, அதையே தொழிலாக கொண்ட புலிகள் சும்மாவிடுவார்களா!

பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டால், இருதரப்பும் தாமே பேசி எங்கே என்று முடிவு எடுக்க வேண்டும். இல்லாது நிபந்தனையுடன் கூடிய இடத்தெரிவை முதலில் வைத்தது அரசு அல்லவா! இதில் பேச்சுவார்த்தைக்கு தடையாக உள்ளவர்கள் யார். இப்படி பல விடையங்கள் உள்ள போது, ரி.பி.சி கும்பல் விடையத்தையே திரித்து காட்டுகின்றனர். ஏன்? உங்களுக்கு புரிந்தால் சரி.


2.புலிகள் மாற்றுத் தீர்வு என்று எதை வைக்கின்றனர் என்று புலிகளுக்கு எதிராக விவாதத்தை தொடங்குகின்றனர்.

மரமண்டைகளே புலிகள் தானே தமிழ் ஈழத்தை முன்வைக்கின்றனர். அவர்கள் அதற்கு குறைந்த ஒரு தீர்வை முன்வைத்து உடன்பட வைக்கவேண்டும் என்றால், அரசு அல்லவா தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதை புலிகள் ஏற்றுக் கொள்கின்றார்களா அல்லது நிராகரிக்கின்றார்களா என்பது வேறு விடையம். இன்று தீர்வுத் திட்டத்தை பகிரங்கமாக மக்கள் முன் வைக்க வேண்டியது அரசே ஒழிய புலிகள் அல்ல. அதற்கு பின்தான் புலிகள் வைக்கவேண்டும். இலங்கையில் பேரினவாதக் கட்சிகள் எதுவும் தமது அரசியல் வேலைத்திட்டத்தில் தமிழ்மக்களுக்கு என எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லை. தமிழ்மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை கடந்த காலத்திலும் நிகழ்காலத்தில் முன் கூட்டியே வைக்கின்றனர். ஆனால் இந்த புலியெதிhப்புக் கும்பல் அரசு சார்பாக நிலையெடுத்து புலிக்கு எதிராகவே விடையத்தை மாற்றுகின்றனர். புலிகளின் மக்கள் விரோத தவறுகளை பயன்படுத்தி, தமிழ் மக்களின் அறிவையே புலிகளைப் போல் மலடாக்குகின்றனர். இந்த வகையில் உள்நோக்கம் கொண்ட சதிகளில் ஈடுபடுகின்றனர்.

இப்படி அனைத்து விவாதமும் புலிகளுக்கு எதிராகவே முன்னெடுக்கின்றனர். உண்மைகளின் மீது அல்ல. புலிக்கு மாற்று அன்னிய தலையீட்டின் மூலமான இலங்கை பேரினவாத அரசின் ஊடாக இவர்கள் முன்மொழிகின்றனர். இதுவே இவர்களின் அரசியல் முன்னெடுப்புகளின் மைய விடையமாக உள்ளது. இந்த வகையில் தான் புலிக்கு மாற்று என்ற பெயரில், ரி.;பி.சி வானொலி தன்னை புலி அல்லாத தரப்புகள் அனைத்தினதும் ஏகபிரதிநிதியாக்க முனைகின்றது. இந்த வகையிலான முயற்சிகள் ஒருபுறம். இதனால் ஈ.பி.டி.பி யுடான முரண்பாடு, இவர்களுக்கு இடையில் நடக்கின்றது. இந்த வகையில் புலியெதிர்ப்பு இணையங்கள் பல ரி.பி.சி.க்கு பக்கபலமாக உள்ளது.
இவை அனைத்துக்கும் புலிகளின் மக்கள் விரோத அரசியலே துணைநிற்கின்றது. புலிகளின் பாசிச போக்கு, மக்கள் விரோத நடத்தைகள் ரத்தமும் சதையுமாகிவிட்டது. இந்தநிலையில் இதை எதிர்ப்பவர்கள் ஒரு அணியில் இணைய வேண்டும் என்ற கோசத்தை, மிக இலகுவாக ரி.பி.சியால் முன்வைக்கப்படுகின்றது. இதில் அவர்கள் கணிசமான வெற்றி பெற்று வருகின்றனர்.

இப்படி தமிழ் மக்களின் சமூக பொருளாதார நலனுக்கு ஆபத்து இரண்டு தளத்தில் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் புலிகள். மறுபுறம் புலியெதிர்ப்பு அணி. மக்களின் சமூக அறியாமை மீது, கண்முடித்தமான நம்பிக்கைகள் மீது மக்கள் விரோத அரசியல் புகுத்தப்படுகின்றது. சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள், இதைப் புரிந்து எதிர்வினையற்ற வேண்டிய வரலாற்று காலத்தில் நாம் வாழ்கின்றோம்.

Sunday, December 25, 2005

அரசியல் என்பது

அரசியல் என்பது கொலைகளை, கற்பழிப்புகளை, வன்முறைகளை, பொய்களை, சதிகளை எல்லாம் கூட்டி அள்ளி எம்முகத்தில் எறிகின்றது. இதைப் பார்த்து, தெரிந்துகொள் என்கின்றது.

தமிழ்மக்களின் தலைவீதி ஒரு சிலரால், தமது சொந்த குறுகிய நோக்கில் கையாளப்படுகின்றது. அரசியல் கொலைகள் தொடருகின்றன. இந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரறாஜசிங்கம் நேற்று (இன்று) படுகொலை செய்பப்பட்டார். இப்படியான ஒவ்வொரு கொலையும் மக்களுக்கு மீண்டும் மீண்டும் அறைந்து சொல்லும் செய்தியென்ன.

வாயை மூடு என்பது தான். அடிமையாய் இரு என்பதைத் தான் சொல்லுகின்றது. இதைத் தாண்டி எதுவுமல்ல. இது தேசியத்தை பெற்றுத் தரப்போவதுமில்லை. கைக்கூலிகளை ஒழித்துவிடப் போவதுமில்லை. புலியின் அராஜகத்தை ஒழித்துவிடப் போவதுமில்லை.

அடிமை மக்கள் கைகட்டி, வாய் பொத்தி, மௌனமாக இரு என்று ஒவ்வொரு கொலையும் எமக்கு உரைக்கின்றது. உண்பதற்காக வாயை திற, அதற்காக மாடுமாதிரி உழை, கொலைகாரர்களை உருவாக்க புணர்ந்த பிள்ளையைப் பெறு. இது தான் கொலைகாரர்கள் மக்களுக்கு சொல்லும் ஒருயொரு செய்தி. கொலையை கண்டிக்காதே. அதை விமர்சனம் செய்யாதே. நாம் சொன்னால் கர்த்தால் செய், ஊர்வலம் போ. இது கொலைகாரனின் அதிகாரத்துடன் கூடிய செய்தி.

அமைதி சமாதனம் வேஷம் போட்டு மீண்டும் கொலைகளை தொடங்கியவர்கள் புலிகள். அதே பாணியில் அண்மைக்காலத்தில் எதிர்தரப்பும் மீண்டும் கொலைகளை செய்யத் தொடங்கியுள்ளனர். ஜோசப் பரறாஜசிங்கம் இந்த வகையில் கொலப்பட்டுள்ளார். இதற்கு முன் நிகழ்ந்த பல படுகொலைகளை இவர் கண்டித்தவர் அல்ல, ஆதாதரித்தவர் கூட. அந்த அரசிலுக்கு இவர் பலியாகியுள்ளார். கொல்லப்படும் பலரின் சோகம் இப்படி உள்ளது. இதை எப்படி நாம் புரிந்து எதிர்கொள்வது.

கொலை செய்யப்படுவர்கள் சமூகத்தின் மேல் மட்டத்தில் இருந்து சமூகத்தின் கீழ் மட்டம் வரை உள்ளடங்குகின்றனர். மிக மோசமான மக்கள் விரோதிகள் முதல் அன்றாடம் கஞ்சிக்கே வழி இல்லாது எதிர்வினையாற்றுபவர்கள் கூட கொல்லப்படுகின்றனர்.

நடக்கின்ற தொடாச்சியான நிகழ்வுகள், எந்தக் கொலையையும் நாம் மௌனமாக ஏற்றுக் கொண்டு இருக்க முடியாத நிலையை உருவாக்கின்றது. நடப்பவை எல்லாம் தமிழ் மக்களை மேலும் அழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது. தமிழ் மக்கள் என்ற அடையாளம் சிதைந்து, சிராழிந்து போகும் அளவுக்கு இவை மாறிவிட்டது. கொலைகளை இன்று கண்டிப்போர் பலவிதமாக செயலாற்றுகின்றனர். புலிகள் தாம் செய்யும் கொலைகளை கண்டிப்பதில்லை. புலியெதிர்ப்பு அணியினர் தாம் செய்யும் கொலைகளைக் கண்டிப்பதில்லை. பரஸ்பரம் இதில் ஒரு இனம் காணமடியாத ஒற்றுமை. கொலை செய்தவர்கள், அதை கொலை செய்யப்பட்ட தரப்பே செய்தாக புணாந்து செய்தி வெளியிடுகின்றனர்.

உண்மை, நீதி, மனிதத்துவம் என என எதுவுமற்ற அராஜகத்தில் அரசியல், தேசியம், மனித உரிமை எல்லாம் சிதைந்து சின்னபின்னமாகின்றது. கொலையைக் கண்டிப்பது கூட சிலருக்கு (ரி.பி.சி புலியெதிர்ப்பு அணிக்கு) உள்நோக்கம் கொண்ட அரசியலாகிவிட்டது. கொலைக்கான சமூகக் காரணங்களை கேள்விக்குள்ளாக்காத கண்டிப்பது போலித்தனமானவை.

ஒரு தரப்பு கொலையைக் கண்டிப்பது அதை விடக் கேவலமானது. அரசியல் கொலைகளை, கற்பழிப்புகளை, வன்முறைகளை, பொய்களை, சதிகளை எல்லாம் கூட்டி அள்ளி எம் முதத்தில் எறிகின்றது. இதைப் பார்த்து, தெரிந்துகொள் என்கின்றது. ஒரு பக்கம் பேரினவாதத்தால் ஊட்டிவளர்க்கப்படும் கைக்கூலி கொலைகாரக் கும்பல்கள், மறுபக்கம் குறுந்தேசியத்தின் பெயரில் அலையும் வெறிபிடித்த கொலைகாரர்கள். இதுவே எம் அரசியலாகிவி;ட்டது. அங்கு இங்கும் சமரை வீசுவதும் எமது நக்குத் தனமாகிவிட்டது.

பாவம் மக்கள். மிரண்ட விழியுடன் பரபரக்க தமக்குள் தாமே குசுகுசுக்கின்றனர். இந்த கொலைகள் அனைத்தும் மக்களுக்கு எதிரானவை. கொல்லப்பட்டவர் எந்தளவு பெரிய சமூக விரோதியாக இருந்தாலும், இன்று இதுவே எமது மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த கொலைகளின் பின்னால் எந்த தர்மிக பலமும், குறைந்தபட்ச அரசியல் நேர்மையும் கிடையாது. ஒரு தலைப்பட்சமாக கொலைகளை கண்டிப்பதையும் நாம் அனுமதிக்க முடியாது. மக்கள் மட்டும் தான், தமது சொந்த தீர்வுகளை வழங்க முடியுமே ஒழிய, மக்களை அடிமைப்படுத்தும் கொலைகாரக் கும்பல்கள் அல்ல.

அனைத்து கொலைகளையும் நாம் எதிர்ப்போம்!
இதற்கான அரசியல் சமூக வேரை இனம் கண்டு, அதை அம்பலம் செய்வோம்!
மக்கள் மட்டும் தான் வரலாற்றை தீர்மாணிக்க முடியும்;. கொலைகாரர்கள் அல்ல!