தமிழ் அரங்கம்

Saturday, September 24, 2005

தனியார்மயத்திற்கு மனித...

தனியார்மயத்திற்கு மனித முகம் பொருந்துமா?

...சில வாரங்களுக்கு முன்புதான் அது நடந்தது. கோவையை நெருங்கிக் கொண்டிருந்த சேரன் துரித ரயில்வண்டி அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்து, இரண்டு பெட்டிகள் எரிந்து சாம்பலாயின. இரயில் பெட்டியின் கழிவறையில் எரிந்து கரிக்கட்டையாகிப் போன ஒரு இளைஞனின் பிணம் கிடந்தது.

காற்றில் இலையசைந்தால் கூட தீவிரவாதிகள் என்று பீதியுற்று கண்மண் தெரியாமல் சரமாரியாகச் சுடும் போலீசுச் சூரப்புலிகள் துப்புத்துலக்குவதற்கு முன்பே வழக்கமான புரளி கிளப்பிவிட்டார்கள்: ''யாராவது தற்கொலைப் படைத் தீவிரவாதியாக இருக்கலாம்!''

கடைசியில் ஒருவழியாக உண்மை தெரிய வந்தது. எரிந்து போனவர் ஒரு தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்தான்! ஆனால், எந்தவொரு தீவிரவாத இயக்கத்தின் தற்கொலைப் படையுமில்லை. ''வேலையில்லாத் தற்கொலைப் படை''யைச் சேர்ந்தவர்! கோவைப் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டயப் படிப்புப் படித்த வேலையில்லா இளைஞர். சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள தனியார் நிறுவனங்களில் அடுத்தடுத்து தற்காலிக வேலை செய்து விரட்டப்பட்டவர். வாழ்க்கையில் வெறுப்படைந்து வீடு திரும்பும் வழியில் தற்கொலை செய்து கொண்டார்.

''2012இல் இந்த நாட்டில் நாற்பது கோடிப்பேர் வேலை தேடி அலைவார்கள். தனியார்துறையும் அரசுத்துறையும் சேர்ந்து ஒரு ஆறுகோடிப் பேருக்குத்தான் வேலை தர முடியும்'' என்று எச்சரிக்கிறார் டாடா நிறுவனத்தின் இயக்குநர். இந்த எச்சரிக்கையின் எதார்த்த விளைவை நேரிலே அனுபவித்தவன்தான் தன்னைத்தானே கொளுத்திக் கொண்ட அந்த இளைஞன்.

ஆனால், நாட்டின் முதன்மைக் கோமாளி அப்துல் கலாம், மாணவர்கள் இளைஞர்களைப் பார்த்துச் சொல்கிறார், ''கனவு காணுங்கள்! 2020இல் இந்த நாடு ஒரு மேல்நிலை வல்லரசாகிவிடும்!''

அந்த இளைஞன் கண்ணை மூடினாலும் சரி, திறந்தாலும் சரி இருண்ட எதிர்காலமே தெரிந்திருக்கிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் தோல்விகளும் தொடர்ந்த வெறுப்புமே அவர் சாவைத் தழுவிக் கொண்டதற்கான காரணங்கள். தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்கிற சூத்திரம் அதிகாரபூர்வமாகச் செயல்படுத்தத் தொடங்கி 15 ஆண்டுகளாகி விட்டன. இருந்தும் இதுதான் நிலைமை.
மனித முகங்கொண்ட சீர்திருத்தம், அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவு எரிந்து கரிக்கட்டைகளாகிப் போகும் முகங்களைக் கொண்டவர்களாக மனிதர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது!

மு சிவராஜ்
நன்றி புதியகலச்சாரம்

விரிவான கட்டுரைக்கு http://www.tamilcircle.net/

No comments: