தமிழ் அரங்கம்

Saturday, October 22, 2005

அமெரிக்க மாயைக்

கலைத்த கத்ரீன்

கடந்த ஆகஸ்டு 29 அன்று கடுமையான ஐந்தாம் ரக, தீவிரச் சூறாவளி புயல் கத்ரீனா தென்கிழக்கு லூசியானா நியூ ஆர்லீன்ஸ், தெற்கு மிஸிஸிபி ஆகிய இரண்டு அமெரிக்க மாகாணப் பகுதிகளை மோதித் தாக்கியது. கடந்த ஏழாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்த அளவு இயற்கைச் சீற்றம் கடுமையாக இருந்திருக்கிறது.
புயலின்போது கடலின் அலைகள் இருபது அடி உயரம் எழும்பி ஆர்ப்பரித்தது; கரையோரம் பழமையில் எழுப்பப்பட்ட அரண்கள் தவிடு பொடியாக்கப்பட்டன் நியூ ஆர்லீன்சின் எண்ணெய்க் கிணறுகள் ஸ்தம்பித்தன் இரண்டு அணு உலைகள் முடங்கின. ஊருக்குள் பாய்ந்த கடலலை வீடுகளை மூழ்கடித்தது; நகரத்தை நாலாபுறமும் சூறையாடியது.

சூறாவளிக்கு முன்னால் பொது எச்சரிக்கை வந்தவுடன் கார் வசதி இருந்த வெள்ளை அமெரிக்கர்கள் வெளியேறிவிட்டார்கள். சூறாவளி தாக்கி உயிர்ப் பலி ஆனவர்கள் சுமார் 20,000 பேர் ஏழ்மையினால் வெளியேறுவதற்குச் செலவு செய்ய முடியாமல் தங்கி சிக்கியவர்கள் 1,00,000 பேர் பெரும்பான்மை ஆப்பிரிக்கா வம்சா வழி அமெரிக்கர்கள் அதாவது, கருப்பர்கள். இவர்கள் மூன்று நாள் சோறு, தண்ணீர், சுகாதார வசதிகள் இல்லாமல் நோய்க் கிருமிகள் நடுவே, அழுகிய பிணங்களின் நடுவே மயக்கமாகவே கிடந்தார்கள்.

டெக்ஸாஸுக்குப் புகலிடம் தேடிப் போனவர்களை அம்மாகாணம் ஏற்க மறுத்தது. சொந்த நாட்டிலேயே அவர்கள் இன்று அகதிகள். எண்ணெய்ப் பணக்காரர்கள் நிறைந்த டெக்ஸாஸ் மாகாணத்தில் பொதுச் சேவை செய்ய ஏற்பாடுகளே கிடையாது என்று சொல்லி அம்மாகாண நிர்வாகம் கை கழுவி விட்டது மைய அரசைக் கை காட்டி விட்டது. அங்கு எல்லாம் தனியார் உலகம்.

--------

புயல் எச்சரிக்கை வந்த நாள் ஆகஸ்டு 25. புஷ் பெயரால் அவசர நிலை அறிவிக்கப்பட்ட நாள் ஆகஸ்டு 27. அதன் பிறகும் கூட நியூ ஆர்லீன்சுக்கு கூடுதல் படையோ, தண்ணீர் உணவு உதவிகளோ அனுப்பப்படவில்லை.
சூறாவளிப் புயல் கத்ரீனா தாக்கியநாள் ஆகஸ்டு 29. செப்டம்பர் 1 அன்று உள்ளூர் அதிகாரிகள் ஐக்கிய (மைய) அரசிடம் உதவி கேட்டுக் கெஞ்சுகிறார்கள். நாகரீக நிலை கைவிட்டு ஆர்லீன்ஸில் மக்கள் உணவுக்காக அலைந்தார்கள். அதையே அமெரிக்கப் பத்திரிக்கைகள் 'வெள்ளை அமெரிக்கர்கள் உணவு தேடிக் கண்டெடுத்து திரும்புகிறார்கள்' என்றும், 'கறுப்பர்கள் கொள்ளை அடித்தார்கள்' என்றும் எழுதி இனவெறி நஞ்சைக் கக்கின.

பிணங்கள் அழுக ஆரம்பித்தன. கொண்டு சென்று புதைக்கப் பாதுகாவல்படை இல்லை. 16,000 காவல் படைவீரர்கள் ஈராக்கில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். பிணங்கள் வைக்க இடமும் இல்லை.

நியூ ஆர்லீன்ஸ் போலீசு கண்காணிப்பாளர் உணவு தண்ணீர் வந்துவிட்டதாகப் புளுகினார்; மைய அரசின் அவசரநிலை அதிகாரி மைக்கேல் பிரவுன், தான் நியூ ஆர்லீன்ஸ் முகாமில் சோறு போட்டதாகப் புளுகினார் இவர்தான் முந்திய நாள் முகாமில் மக்கள் இருப்பதே தெரியாது என்று தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தார். இந்த அதிகாரியின் வினோதமான திறமையைப் பார்த்து அனைத்து அöமரிக்க மக்களுமே கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.

ஆர்லீன்ஸ் மூழ்கிக் கொண்டிருந்தபோது ஆட்சித் தலைவர்கள் ஓய்வில் உல்லாசமாக இருந்தார்கள். (பார்க்க: பெட்டிச் செய்தி). அதேநேரம் உலகம் முழுவதும் 'டி.வி.' சேனல்கள் சாவுச் செய்திகளைக் காட்டின. அமர்ந்த நிலையில், சுவரோடு மோதி நிற்கும் ஸ்டிரெச்சரில் சரிந்த நிலையில் பிணங்கள்; இனவெறியால் ஒதுக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் கோபம் கொந்தளிக்கும் பேட்டிகள்.

------------

நியூ ஆர்லீன்ஸ் கடல்நீரில் மூழ்கக் காரணம், கடந்த 5 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த கடலோரப் பாதுகாப்புத் தடை அரண்கள் சூறாவளி தாக்கி உடைந்து விட்டன. இதனால் 3 இடங்களில் மொத்தம் 1000 அடிநீள உடைப்புகள் ஏற்பட்டு, அதன் வழியாகத்தான் கடல்நீர் புகுந்து நகரைச் சூறையாடி விட்டது.

இந்த நகரத்தையே 'சாத்தியமில்லாத' நகரம் என்பார்கள். அதாவது, கடல்மட்டத்திற்கு 10 அடி கீழே நிரந்தர அபாயத்தில் உள்ள நகரம். மிகப் பெரிய சுற்றளவு கொண்ட சதுப்புநிலங்களும், வெள்ளநீர் பரவிக் கிடக்க வெட்டவெளிகளும் 100 ஆண்டுகளுக்கு முன் இருந்தன. மெல்ல மெல்ல அந்த இடங்களைத் தூர்த்துக் கட்டிடங்களை எழுப்பினார்கள், பணக்காரர்கள். நம் நாட்டில் மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை கிழக்குக் கடற்கரையோரம் கடலை ஆக்கிரமித்ததைப் போலவே.

1927இல் இராணுவப் பொறியாளரின் அரிய முயற்சியால் தடுப்பரண்கள் முதன்முதலில் எழுப்பப்பட்டன. எழுபதே ஆண்டுகளுக்குள் உலகமயத்தைக் காரணம் காட்டி மாகாணச் செலவை மைய அரசு வெட்டிவிட்டது; தடையரண் பாதுகாப்பை, பராமரிப்பை ரத்து செய்தது.

இத்தனைக்கும் கடந்த 10 ஆண்டுகளில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வரிக் குறைப்பில் பல லட்சம் கோடிகளும், ஈராக் போர்ச் செலவு சுமார் எட்டரை லட்சம் கோடியும், தனியார் விவசாய வர்த்தக மானியமாக சுமார் 9 லட்சம் கோடியும் ஆக, மொத்தம் 20 லட்சம் கோடி ரூபாய் அரசு நிதி விரயம். அதையே காரணமாக்கி, நியூ ஆர்லீன்ஸ் நகரப் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் தேவைப்பட்ட சில்லறைச் செலவு 50 கோடி ரூபாயைச் செலவு செய்ய மறுத்து நிறுத்திவிட்டது, அரசு.

தொடர்ந்து தடுப்பரணைப் பாதுகாத்து, செப்பனிட்டு, நவீனப்படுத்தி, வடிகால் பராமரிப்பும் பொறுப்போடு நடத்தியிருந்தால் நகரம் நீரில் மூழ்கியிருக்காது. ரீகன் காலத்திலிருந்தே அரசாங்கச் செலவையும், அரசாங்கத்தையும் வெட்டிக் குறைத்துக் கொண்டே வந்த மைய அரசு, கத்ரீனா சூறாவளி, பிறகு ரீட்டா புயலின்போது நியூ ஆர்லீன்ஸ் நகரையே தண்ணீரில் கவிழ்த்துவிட்டது.
அரசாங்கத்தை விமர்சித்தாலோ, எதிர்த்தாலோ 'வர்க்கப் போராட்டம், கலகம்' என்று பீதியூட்டி ஒடுக்கிவந்த அமெரிக்க அரசை இப்போது மக்கள் 'நிறவெறி, வர்க்க வேறுபாடு, ஏழை பணக்காரன் பாகுபாடு காட்டும் பொறுப்பற்ற கையாலாகாத அரசு' என்று நேரடியாக விமர்சிக்கிறார்கள்; 'ஆமாம், இது வர்க்கப் போர்தான்' என்று துணிச்சலோடு எதிர்க்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வது போலவே, இழவு விழுந்த பிறகுதான் புஷ் எட்டிப் பார்க்க வந்தார். எதற்காக? அமெரிக்காவின் 25 சதம் எண்ணெய் உற்பத்தி முடங்கி விட்டதை எப்படிச் சரி செய்வது என்று பரிசீலிப்பதற்காக் புஷ் ஷின் கட்டளையின் பேரில் துணை அதிபர் டிக்செனி ஓடிவந்தார் கணக்கு காட்டுவதற்கும், எதிர்காலத்திற்கான ஒப்பந்த பேரங்கள் பார்ப்பதற்கும்.

இந்த நேரத்தில் கூட புஷ்ஷின் திமிர் குறையவில்லை. பேரழிவு ஏன் நடந்தது, எப்படி நடந்தது, பொறுப்பு யார் என்று கேள்விகளைச் சந்திக்கத் திராணியும், தார்மீக நியாயமும் இழந்துவிட்ட புஷ் வக்கிரமாகப் பேட்டி அளித்தார்: 'மக்கள் எங்களிடம் என்ன கேட்கிறார்கள்? யார் மீதாவது பழிபோடும் விளையாட்டு ஆடச் சொல்கிறார்கள்.' யார் மீதாவது பழிபோடும் அநியாயமான குணம் அமெரிக்க உழைக்கும் மக்களிடம் இல்லை; அவர்கள், நேருக்கு நேராக புஷ் மற்றும் புஷ் கும்பல் மீதுதான் குற்றம் சாட்டுகிறார்கள்.

புஷ்ஷின் வக்கிரப் பொய்களை மக்கள் அறுத்து வெளியே கொண்டு வந்துவிட்டார்கள். முதல் பொய்: 'இப்படி ஒரு அபாயம் நியூ ஆர்லீன்சுக்கு வருமென்று யாருக்குமே தெரியாது.' இரண்டாவது பொய்: 'மக்கள் பழிபோடும் விளையாட்டு ஆட விரும்புகிறார்கள்.'

புஷ்ஷிற்கு ஒருபடி மேலே போய் அவர் அம்மா பார்பரா, 'டெக்ஸாஸுக்கு வந்த அகதிகள் அங்குள்ள உபசரிப்பைக் கண்டு அங்கேயே தங்கிவிட ஆசைப்படுகிறார்கள்' என்று வக்கிரம் ஒழுகப் பேசியிருக்கிறார். இவ்வளவு பேசிய பிறகுதான் காரியக் கோமாளி புஷ் கடைசி 'அஸ்திரமாக' வெள்ளை மாளிகை விசாரணைக் கமிசனை அவிழ்த்து விட்டிருக்கிறார். அமெரிக்கா மட்டுமல்ல, உலகத்துக்கே விசாரணைக் கமிசன்களின் ரகசியம் ஊர் அறிந்த இரகசியமாதலால் யாரும் புஷ்ஷை நம்புவதாக இல்லை.

------------

'இந்தியா போன்ற ஏழை நாடுகளில் இருக்கும் அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும்தான் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வார்கள். ஆனால் அமெரிக்க சமூகமோ சொக்கத் தங்கம்' என்ற ஒரு பிம்பத்தை, இங்கே படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் முதலாளித்துவ பத்திரிகைகளும்; துக்ளக் 'சோ', சுப்பிரமணிய சுவாமி போன்ற அமெரிக்க எடுபிடிகளும் உருவாக்கி வைத்துள்ளனர். இந்த மாய்மாலத்தை கத்ரீனா சூறாவளி அடித்து நொறுக்கி விட்டது.

அமெரிக்கா அருகே இருக்கும் சின்னஞ்சிறு ஏழை நாடான கியூபா கூட, சூறாவளி தாக்குவதற்கு முன்பே, தனது குடிமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியிருக்கிறது. ஆனால், 'நட்சத்திர போர்' நடத்தும் அளவிற்கு அறிவியல் 'வளர்ச்சி'யில் முன்னேறியிருக்கும் அமெரிக்காவால் நியூ ஆர்லின்ஸ் நகரைச் சேர்ந்த ஏழை கருப்பின மக்களை, ஏன் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை?

ஆசிய நாடுகளை 'சுனாமி' தாக்கியபொழுது, தனது கப்பற்படையை உடனடியாக இலங்கைக்கும், தாய்லாந்திற்கும் அனுப்பி தன்னை 'ஆபத்தாண்டவனாக'க் காட்டிக் கொண்ட அமெரிக்கா, தனது குடிமக்களை அமெரிக்க கருப்பர்களை ஏன் கைவிட்டது?

'எங்கும் தனியார்மயம், எதிலும் தனியார்மயம்' எனக் கூப்பாடு போடும் அமெரிக்க அரசியல் தலைவர்கள், ஒரு இயற்கைப் பேரழிவு ஏற்படும்பொழுது மட்டும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அதனால்தான், அவரவர் பாதுகாப்பை அவரவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஒதுங்கிக் கொண்டு, நியூ ஆர்லின்ஸ் நகர மக்களைக் கைவிட்டு விட்டார்கள்.

ஏழை நாடுகளின் அரசுகள், தங்களின் குடிமக்களுக்கு ரேஷனில் அரிசி கொடுக்கக் கூடாது; விவசாய மானியம் கொடுக்கக் கூடாது; இலவச கல்வி, மருத்துவ வசதி செய்து தரக் கூடாது; மொத்தத்தில் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளக் கூடாது என உத்தரவு போடும் ஒரு ஏகாதிபத்திய அரசு (அமெரிக்கா) உள்நாட்டில் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளாது.
ஏழை நாடுகள் இயற்கைப் பேரழிவினால் சீரழிந்து நிற்கும்போது கூட, 'உதவி' என்ற போர்வையில் அந்நாடுகளில் தனது சுரண்டலை, ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொள்ளும் ஒரு கந்துவட்டி அரசு (அமெரிக்கா), உள்நாட்டு மக்கள் இயற்கைப் பேரழிவில் சிக்கிக் கொள்ளும்போது மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளாது.

'ஜனநாயக' முகமூடிக்குள் மறைந்து இருக்கும் அமெரிக்காவின் இந்தக் கோர முகத்தைத்தான் கத்ரீனா, அமெரிக்க மக்களுக்கும், உலகுக்கும் மீண்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

மு வேலாயுதம்

நன்றி புதியஜனநாயகம்

No comments: