தமிழ் அரங்கம்

Monday, September 18, 2006

மக்கள் விரோத அரசை ஒழித்தால்தான் கொசுவும் ஓழியும்!

சிக்குன்குன்யா நோய் தாக்குதல்:
மக்கள் விரோத அரசை ஒழித்தால்தான் கொசுவும் ஓழியும்!

சிக்குன்குன்யா மனிதனை முடமாக்கிவிடும் கொடிய நோய். ""ஏடீஸ் அஜெப்டி'' எனப்படும் கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் நோய், கடந்த நான்கு மாதங்களாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோரைத் தாக்கி படுக்கையில் வீழ்த்தியுள்ளது. கடந்த இரு மாதங்களாக விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்நோய் பரவி, சத்திரப்பட்டி வட்டாரத்தில் மட்டும் 19 பேரின் உயிரைக் காவு கொண்டுள்ளது. உயிரிழந்த அனைவரும் முதியவர்கள் என்றாலும், சிக்குன்குன்யா நோயின் கடுமை தாங்காமல், உரிய சிகிச்சையின்றி மாண்டு போயுள்ளனர்.


குப்பைகள், கழிவுநீர் குட்டைகள், பயன்பாடற்ற தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் இந்த வகை கொசுக்கள் வேகமாகப் பல்கிப் பெருகி மனிதர்களைத் தாக்குகின்றன. நோய் வாய்ப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கொசுக்கடி மூலம் இந்நோய் பரவி ஊரையே முடமாக்கி விடுகிறது.


நோய் தடுப்பு மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லாமல், சாதாரண தலைவலிகாய்ச்சலுக்கான மாத்திரைகளே தரப்படுவதால், வீங்கிய கால்களோடும், வலியோடும், காய்ச்சலோடும் வேதனைப்படும் ஏராளமான நோயாளிகள், நம்பிக்கையிழந்து வேப்பிலை அடிப்பது, தாயத்து கட்டுவது என்று போகிறார்கள். கோழிகளால் பரவும் காய்ச்சல், தண்ணீரால் பரவும் காய்ச்சல், நோயாளிகளுடன் இருந்தாலே தொற்றிக் கொள்ளும் என்றெல்லாம் அறியாமையால் வதந்திகளை நம்பி பீதியடைகிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு அருகே தோணிரேவு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சிக்குன்குன்யாவுக்கு அஞ்சி ஊரையே காலி செய்து வேறிடங்களுக்குச் சென்று விட்டனர். அதன் பின்னரே தாசில்தார், மருத்துவர்கள் குழு, அரசியல்வாதிகள் படையெடுத்து வந்து மருத்துவ முகாம் அமைத்துச் சிகிச்சையளித்துள்ளனர்.


சத்திரப்பட்டி வட்டாரத்தில் சிக்குன்குன்யா நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ள தகவலறிந்து, நாம் அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்குச் சென்று பார்த்தோம். அங்கு படுக்கை வசதியோ உரிய மருந்துகளோ சிகிச்சையோ இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். பஞ்சாயத்து நிர்வாகமோ இரண்டு முறை கொசு மருந்து அடித்ததோடு முடங்கி விட்டது.


சிக்குன்குனியா நோயினால் உடலில் நீர்வற்றி நாவறட்சியும் கண் எரிச்சலும் அதீத உடற் சோர்வும் ஏற்படுவதால், நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றுவது அவசியம். ஆனால் சத்திரப்பட்டி மருத்துவமனையில் அதற்கான வாய்ப்போ அறிகுறியோ அறவே இல்லை. நோயினால் பாதிக்கப்பட்ட நெசவுத் தொழிலாளியான முத்துசாமி, ""கவருமெண்டு ஆசுபத்திரிக்குப் போயிருந்தால் நான் செத்துப் போயிருப்பேன். எனது உறவினர்கள் என்னை தனியார் ஆசுபத்திரியில் சேர்த்தார்கள். அங்கு 5 நாட்களுக்கு குளுக்கோஸ் ஏற்றியதால் உயிர் பிழைத்தேன். ஆயிரக்கணக்கில் பணம் செலவாகி விட்டது. கவருமெண்டு ஆசுபத்திரி ஒழுங்காக இல்லாததால், தனியார் டாக்டர் முதலாளிகளுக்குத்தான் கொள்ளை லாபம்'' என்று வேதனையோடு கூறுகிறார்.


சத்திரப்பட்டி வட்டாரத்தில் 2000க்கும் மேற்பட்டோரை இந்நோய் தாக்கிய பின்னரும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியப்படுத்தியதால், உழைக்கும் மக்கள் சாலை மறியல் போராட்டத்துக்கு ஆயத்தமாகினர். இத்தகவல் அறிந்ததும் கலெக்டர், தாசில்தார், ஆர்.டி.ஓ. என அதிகார வர்க்கம் ஓடோடி வந்து மக்களைச் சாந்தப்படுத்திவிட்டு, மருத்துவமனை வளாகத்தில் இருந்த, ஊரின் நோய் பரப்பும் மையமாக விளங்கிய மிகப்பெரிய கழிவுநீர் குட்டையை அவசரமாக மண்ணைப் போட்டு மூடினர். உள்ளூர் பிரமுகர்களுடன் பேசி, ஒரு திருமண மண்டபத்தை தற்காலிக மருத்துவ முகாமாக மாற்றி, 10 மருத்துவர்களை அனுப்பினர். ஆனால், உரிய மருந்துகளை அனுப்பவில்லை பின்னர் பஞ்சாயத்து நிர்வாகம் நன்கொடை திரட்டி மருந்துகளை வாங்கிக் கொடுத்தது. அவையும் ஒரு வாரத்தில் தீர்ந்துவிட மருத்துவர்களும் கிளம்பி விட்டனர். சத்திரப்பட்டியில் சிக்குன்குன்யாவைக் கட்டுப்படுத்தி விட்டதாக அதிகாரிகள் அறிக்கை தயாரித்து அனுப்பிவிட்டனர். ஆனால், இந்நோய் இப்போது சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம், ரெட்டியப்பட்டி, தேவராயன்பட்டி என அடுத்துள்ள ஊர்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.


""சாதாரண வைரஸ் நோய்தான்; இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது'' என்று ஆரூடம் சொல்கிறது அரசு. ஆனால், அச்சாதாரண நோய்க்குக் கூட அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை கிடைப்பதில்லை. சாதாரண நோய் புதிய வீரியத்துடன் தாக்குவதற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றியும் அரசு அக்கறை காட்டுவதில்லை. சிக்குன்குன்யா மட்டுமல்ல் ஏற்கெனவே ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படும் காலரா, மலேரியா, பிளேக், அம்மை நோய், மூளைக் காய்ச்சல் முதலான பலவும் ஆண்டுதோறும் படையெடுக்கின்றன. டெங்கு காய்ச்சலும் ""மெட்ராஸ் ஐ'' எனப்படும் கண்நோயும் குறிப்பிட்ட பருவங்களில் தாக்குவது வாடிக்கையாகி விட்டது.


சுற்றுப்புற சுகாதாரமும் உரிய சிகிச்சையும் ஆரோக்கியமான உணவும் இருந்தால் இத்தகைய நோய்கள் மீண்டும் தலைதூக்க அடிப்படையில்லாமல் போயிருக்கும்! ஆனால், முதலாளிகளுக்கு வரிச் சலுகை, கண்ணகிக்கு சிலை, சிவாஜிக்கு சிலை என்று மக்கள் வரிப்பணத்தை கோடிகோடியாய் வாரியிறைக்கும் அரசு, அடிப்படை மருத்துவசுகாதாரத்துக்கு அற்ப நிதியையே ஒதுக்குகிறது. அடிப்படை மருத்துவ சுகாதார வசதிகளை அறவே புறக்கணித்துவிட்டு, நிலைமை முற்றியதும் கொசு மருந்து அடிப்பது, மருத்துவ முகாம் நடத்துவது, விழிப்புணர்வு பிரச்சாரம், நோய் தடுப்புக்காக ரூ. 2.856 கோடி ஒதுக்கீடு என்று திடீர் நாடகமாடுகிறது தி.மு.க. அரசு. உலக வங்கி உத்தரவுப்படி மருத்துவசுகாதார வசதிகளுக்கான மானியங்களை வெட்டியும், பஞ்சாயத்துகளுக்கு உரிய நிதி ஒதுக்காமலும் மக்கள் நல்வாழ்வைத் தொடர்ந்து புறக்கணித்ததன் கோரவிளைவுதான் இத்தகைய நோய்கள் பெருகக் காரணம்.


துப்புரவு சுகாதார மருத்துவ வசதிகள் அறவே புறக்கணிக்கப்பட்டு, சிக்குன்குன்யா போன்ற நோய்கள் பெருகுவதற்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கும் இந்த அரசுதான் பொறுப்பு என மக்களை உணரச் செய்ய வேண்டும். மக்களின் குமுறலை எதிரொலிக்கும் வகையில் போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும். அடிப்படை வசதிகளை அறவே புறக்கணிக்கும் தனியார்மய தாராளமயக் கொள்கைக்கு எதிரான, இக்கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களாக இவை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இது தான் உண்மையான நிவாரணப் பணி; அரசியல் பணி.


பு.ஜ. செய்தியாளர்கள், மதுரை.


No comments: