தமிழ் அரங்கம்

Friday, September 22, 2006

அமெரிக்காவில் தொடரும் போர்குற்றங்கள்

வியட்நாம் மைலாய்! ஈராக்கில் ஹதிதா!
அமெரிக்காவில் தொடரும் போர்குற்றங்கள்

ராக்கின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹதிதா என்ற சிறு நகரம், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடும் சன்னி பிரிவு முசுலீம் போராளிகளின் செல்வாக்கு நிறைந்த பிராந்தியம். இதன் காரணமாகவே ஹதிதா, அமெரிக்க இராணுவத்தின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று அதிகாலை நேரத்தில் இந்நகரைச் சேர்ந்த 23 ஈராக்கியர்கள் துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டு இறந்து போனார்கள். அகால மரணமடைந்த இந்த 23 பேரில், மூன்று குழந்தைகள், ஏழு பெண்கள், மற்றும் நடக்கவே முடியாத முதியவர் ஒருவரும் அடங்குவார்கள்.


இந்தச் சம்பவம் குறித்து மறுநாள் நவம்பர் 20 அன்று அறிக்கை வெளியிட்ட அமெரிக்க இராணுவம் ""இறந்து போனவர்களுள் 8 பேர் தீவிரவாதிகள்; 15 பேர் பொதுமக்கள். தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க இராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தபொழுது, அதனிடையே மாட்டிக் கொண்டு இந்த 15 பேர் இறந்து போனதாக''க் குறிப்பிட்டுள்ளது. ஈராக்கில் அன்றாடம் நடக்கும் உயிர்ப் பலிகளில் இதுவும் ஒன்று எனக் கருதி இதனை உலகம் மறந்துவிட்ட நிலையில், இப்பொழுது இச்சம்பவம் நடந்து ஏழு மாதங்கள் கழித்து உண்மைகள் மெதுவாகக் கசியத் தொடங்கியுள்ளன.


நவம்பர் 19 அன்று அதிகாலையில் ஹதிதா நகரையொட்டிச் செல்லும் நெடுஞ்சாலையில் ரோந்து சென்று கொண்டிருந்த அமெரிக்க இராணுவக் கவச வாகனங்களுள் ஒன்று, கண்ணிவெடித் தாக்குதலுக்கு உள்ளாகி உருக்குலைந்து போனது. இத்தாக்குதலில் 20 வயதான டெர்ரஸஸ் என்ற அமெரிக்க இராணுவச் சிப்பாய் இறந்து போனதோடு, இரண்டு சிப்பாய்கள் காயமடைந்தனர். இதற்குப் பழிக்குப் பழிவாங்கும் வெறியோடு, அந்நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள வீடுகளுக்குள் புகுந்து அமெரிக்க இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டதன் விளைவாகத்தான் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு 23 பேர் இறந்து போனார்கள்.


இச்சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெடுஞ்சாலையில் கண்ணிவெடி வெடித்ததும், அதில் சிக்கி ஒரு சிப்பாய் இறந்து போனது மட்டும்தான் உண்மை. தீவிரவாதிகளோடு நடந்த துப்பாக்கி சண்டை, அவர்களிடமிருந்து இரண்டு ஏ.கே.47 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது போன்றவை அனைத்தும், தனது போர் குற்றங்களை மறைக்க அமெரிக்கா சோடித்துள்ள கட்டுக்கதை என்பதை நிரூபிப்பதற்கு ஏராளமான சாட்சியங்களும், ஆதாரங்களும் உள்ளன.


ஒன்பது வயதான இமான் வாலீத் என்ற சிறுமியின் வீடு, கண்ணி வெடி தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் உள்ளது. அமெரிக்க இராணுவம் இச்சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து சுட்டபொழுது, காலில் குண்டு காயத்தோடு மயிரிழையில் உயிர் பிழைத்து விட்டாள் இமான் வாலீத்.


""தெருவில் பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டவுடனேயே, என் அப்பா குர்ஆனை எடுத்துக் கொண்டு பக்கத்து அறைக்குச் சென்றுவிட்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்கும் பொழுதெல்லாம், தனியாகப் போய், குடும்பத்தினருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என அல்லாவிடம் வேண்டுவது அவர் வழக்கம். நான், என் தம்பி, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை அனைவரும் படுக்கை அறையில் பதுங்கிக் கொண்டோம்.


நாங்கள் அனைவரும் இரவு உடைகளை அணிந்திருந்ததால், வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்பவில்லை. எங்கள் வீட்டிற்குள் துப்பாக்கிகளோடு புகுந்த சிலர், அப்பா பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தனர். மறுநிமிடம், சடசடவெனத் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் அந்த அறையில் இருந்து கேட்டது.


நாங்கள் பதுங்கியிருந்த அறைக்குள் புகுந்தவர்களின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. நீட்டிக் கொண்டிருந்த துப்பாக்கி முனையை மட்டும்தான் என்னால் பார்க்க முடிந்தது. அவர்கள் முதலில் எனது தாத்தாவின் நெஞ்சில் சுட்டார்கள். பிறகு அவரது தலையை துப்பாக்கி குண்டுகள் சல்லடையாகத் துளைத்தன. அடுத்து, என் பாட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பிறகு, அறையின் மூலையில் பதுங்கியிருந்த என்னையும், என் தம்பியையும் நோக்கி அவர்கள் திரும்பினர். எனது இரண்டு அத்தைகளும், மாமாக்களும் எங்களைச் சுற்றி கவசம் போல நின்று கொண்டு, எங்கள் இருவரின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் குண்டடிபட்டுச் செத்துப் போய்விட்டனர்.


எனது வலது காலிலும், என் தம்பியின் தோள்பட்டையிலும் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருந்தன. இரத்தப் பெருக்காலும், வலியாலும் துடித்துக் கொண்டிருந்த எங்களைச் சிலர் மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். "எங்கள் குடும்பத்தை ஏன் இப்படி கொன்று போட்டீர்கள்?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அந்த ஈராக்கிய சிப்பாய்கள், நாங்கள் செய்யவில்லை. அமெரிக்கர்கள்தான் எனச் சொன்னார்கள்.


நானும் எனது தம்பியும் அநாதைகளாகி விட்டோம். அல்லா, இந்த முறை எனது குடும்பத்தைக் காக்காமல் கைவிட்டு விட்டார்'' எனத் தனது குடும்பம் இரக்கமற்ற முறையில் சுட்டுக் கொல்லப்பட்டதை மனித உரிமை அமைப்புகளிடம் கூறியிருக்கிறார், இமான் வாலீத்.


ஆனால், வாலீதின் வீட்டுப் பக்கத்தில் இருந்துதான் தீவிரவாதிகள் தங்களை நோக்கிச் சுட்டதாகவும், அந்த வீட்டிற்குள் நாங்கள் நுழைந்த போது, ஏ.கே.47 துப்பாக்கிகளை இயக்கப் போகும் ஓசை கேட்டதையடுத்துதான், தங்களைத் தற்காத்துக் கொள்ள அந்த வீட்டில் இருந்தவர்களைச் சுட்டுத் தள்ளியதாகவும் கூறி, இப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது, அமெரிக்க இராணுவம்.


எனினும், வாலீதின் வீட்டில் இருந்து ஒரு விளையாட்டு துப்பாக்கியைக் கூட அமெரிக்க இராணுவம் கைப்பற்றவில்லை. வாலீதின் அப்பா கையில் இருந்த குர்ஆனை ஏ.கே. 47 ஆகப் பார்க்கும் அளவிற்கு அமெரிக்க இராணுவத்தின் கண்களும், மூளையும் முசுலீம் எதிர்ப்பு வெறியில் மூழ்கிக் கிடக்கின்றன.


வாலீதின் குடும்பத்தைத் தீர்த்துக் கட்டிய பிறகு, அச்சிறுமியின் பக்கத்து வீட்டிற்குள் புகுந்த அமெரிக்க சிப்பாய்கள், அங்கிருந்த நான்கு பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். ""அந்த நால்வரில், ஒருவர் கையில் ஏகே 47 துப்பாக்கி இருந்ததாகவும்; மற்றொருவர் துப்பாக்கியை எடுத்துவர முயன்ற பொழுது அவர்கள் இருவரை மட்டும்தான் தாங்கள் சுட்டுக் கொன்றதாகவும், மற்ற இருவர் எப்படி இறந்தார்கள் என்பது தங்களுக்குத் தெரியாது'' என அமெரிக்க சிப்பாய்கள் சாதிக்கின்றனர்.


ஆனால், சுட்டுக் கொல்லப்பட்ட நால்வரின் சகோதரரான ஆயேத், ""தனது நான்கு சகோதரர்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டி, ஒரே அறையில் அடைத்து வைத்து மிகவும் அருகாமையில் இருந்து அமெரிக்க சிப்பாய்கள் சுட்டுக் கொன்றதாகக் கூறுகிறார். அவர்களைக் காப்பாற்ற நான் வீட்டிற்குள் நுழைய முயன்றபொழுது, சில ஈராக்கிய சிப்பாய்கள், அமெரிக்கர்கள் உன்னையும் கொன்று விடுவார்கள் எனக் கூறித் தன்னைத் தடுத்துவிட்டதையும் சாட்சியமாகக் கூறியிருக்கிறார்'', ஆயேத்.


வாலீத், ஆயேத் குடும்பங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, மற்றொரு வீட்டின் கதவை குண்டுவீசி தகர்த்துவிட்டு, அவ்வீட்டிற்குள் புகுந்த அமெரிக்க சிப்பாய்கள், அந்த வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி, அவரது சகோதரி, அவரது இரண்டு வயது ஆண் குழந்தை மற்றும் மூன்று பெண் குழந்தைகளைச் சுட்டுக் கொன்றனர். இதற்கும் அமெரிக்க சிப்பாய்கள் சொல்லியிருக்கும் காரணம் அந்த வீட்டில் இருந்து எங்களை நோக்கிச் சுட்டார்கள் என்பதுதான்.


சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அமெரிக்க சிப்பாய்களே மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, ""அவர்கள் அனைவரும் தெருவோரம் வெடித்துச் சிதறிய வெடிகுண்டால் இறந்து போனதாக'' மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். அதேசமயம், பிரதேப் பரிசோதனை நடத்திய மருத்துவர்கள், ""இந்த 23 பேரில், பலரும் மிக அருகாமையில் இருந்து மார்பிலும், தலையிலும் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பதை'' பத்திரிகையாளர்களிடம் அம்பலப்படுத்தியுள்ளனர்.


ஹதிதாவைச் சேர்ந்த இதழியல் மாணவர் ஒருவர், தாக்குதல் நடந்த மறுநாளே, தாக்குதல் நடந்த வீடுகளின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் ஒளிப் பேழையில் படமாகப் பதிவு செய்திருக்கிறார். ""இந்தப் படத்தைப் பார்த்தால், அமெரிக்க சிப்பாய்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்ததற்கான சிறு ஆதாரத்தையும் காண முடியவில்லை'' என ஹம்முராபி மனித உரிமைக் குழு கூறியிருக்கிறது.


இந்த ஹதிதா படுகொலைகள் உலகெங்கிலும் அம்பலமாகி, அமெரிக்க மேலாதிக்கவாதிகள் ஈராக் மீது திணித்திருக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் சந்தி சிரிக்க வைத்து விட்டன. இதனால் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் இந்தச் சம்பவம் பற்றி விசாரிக்க அமெரிக்க இராணுவத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார். விசாரணை நடத்தும் அதிகாரிகளோ, இந்தச் சம்பவத்தை, ""தீவிரவாதத்துக்கு எதிராக நடக்கும் போரில் ஏற்படும் துணை விளைவு'' என முத்திரை குத்திவிட முயன்று கொண்டிருக்கிறார்கள். எனவே, அமெரிக்க இராணுவம் நடத்திய கொலைகளை விசாரிக்கும் அமெரிக்க இராணுவத்தின் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை இதன் மூலம் அனுமானித்துக் கொள்ளலாம்.


ஹதிதா தாக்குதல் சம்பவத்தில் இறந்து போன ஒவ்வொருக்கும் 2,500 அமெரிக்க டாலர்களை (ஏறத்தாழ 1,13,000 ரூபாய்) நட்ட ஈடாக வழங்கியிருக்கிறது அமெரிக்க இராணுவம். இந்த 2,500 அமெரிக்க டாலர் ஒரு ஈராக்கிய குடிமகனின் மதிப்பு மட்டுமல்ல் அமெரிக்காவை எதிர்த்தால், உங்கள் உயிரின் விலையும் இந்த 2,500 அமெரிக்க டாலர்களைத் தாண்டாது!


மு செல்வம்


1 comment:

Osai Chella said...

murrilum padiththen. excelent article. i ahve many on these us atrocities. write more and more.