தமிழ் அரங்கம்

Friday, February 2, 2007

மறுகாலனியாதிக்கம்: தியாகம் கேட்கின்றது...

மறுகாலனியாதிக்கம்:
தியாகம் கேட்கின்றது...
உங்கள் மறுமொழி என்ன?

ரலாறு என்பது கடந்த காலத்தின் தேங்கிப்போன குட்டை அல்ல. அது வற்றாத ஜீவ நதி. கற்கள் சிதைந்து துகள்களாகவும். துகள்கள் சேர்ந்து கற்களாகவும் உருமாற்றம் பெற்ற வண்ணம் ஓடிக் கொண்டிருக்கும் வரலாற்றில் தியாகிகள் உருவாகிறார்கள், துரோகிகளும் உருவாகிறார்கள். தியாகிகளும் துரோகிகளும் கடந்த காலத்துக்கு மட்டுமே உரியவர்கள் அல்லர். அவர்கள் நம் கண் முன்னே நிகழ்காலத்திலும் இருக்கிறார்கள். தியாகத்தையும், துரோகத்தையும் பகுத்துப் பார்க்க முடியாத அவலமும், பார்க்க விரும்பாத அலட்சியமும் கூட கடந்த காலத்துக்கு மட்டும் உரியது அல்ல. அது நிகழ்காலச் சமூகத்திலும் கோலோச்சத்தான் செய்கிறது.


ஆனால் வரலாறு இவ்வாறு பார்க்கப்படுவதில்லை. நமது விடுதலைப் போராட்ட மரபின் வீரமிக்க நாயகர்கள் சிலைகளாகச் சமைந்திருக் கிறார்கள். இந்த நாயகர்களைப் பற்றிய நமது பழைய கதைப்பாடல்களின் உணர்ச்சி, நாட்டுப் பற்றுக்கு மட்டுமின்றி, மக்களுடைய கையறு நிலைக்கும் சான்று கூறுகிறது. ஆம். அது அன்றைய சமூகத்தின் அவலம். அந்த மாவீரர்களுடைய போராட்டத்தின் வரலாற்றுப் பாத்திரத்தைப் புரிந்து கொள்ள இயலாத இந்தியச் சமூகத்தின் அவலம்.


புரட்சிகளால் உலுக்கப்பட்ட 18ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றைச் சிந்தனையில் ஓடவிட்டுப் பாருங்கள். பிரெஞ்சுப் புரட்சியின் வீரியத்தைக் கண்டு பீதியுற்ற ஐரோப்பிய மன்னர்கள் பிரான்சின் மீது படையெ டுத்து முடியாட்சியை மீண்டும் நிலைநாட்ட முயன்று கொண்டிருந்த போது, நம்முடைய திப்பு பிரெஞ்சுப் புரட்சியை வரவேற்று, "குடிமகன்' என்ற பட்டத்தை விருப்பத்துடன் சூடிக் கொள்கிறார். ஆங்கிலேயக் காலனியா திக்கத்தை நொறுக்கும் நோக்கத்துக்காக, தன்னுடைய முடியாட்சியைத் தாங்கி நின்ற அடித்தளக் கற்களான நிலப்பிரபுக் களைத் தன் கைகளாலேயே அகற்றி விட்டு நாட்டை நவீனமயமாக்கிக் கொண்டிருந்தார்.


தன் அரியணையையும், அந்தப்புரத் தையும் தாண்டி வேறெதையும் பார்க்கத் தெரியாத மன்னர்களும், சாதி, வமிசப் பெருமைகளில் ஊறித் திளைத்துக் கொண்டிருந்த பாளையக்காரர்களும் நிறைந்திருந்த நாட்டில், காலனியாதிக் கத்துக்கு எதிரான போரை மக்கள் போராக மாற்றிக் காட்டியிருக்கிறார் சின்னமருது. சாதி மத வேறுபாடின்றி எல்லா மக்களையும் கும்பினியின் சிப்பாய்களையும் கூட காலனியாதிக் கத்துக்கு எதிராக அணிதிரளுமாறு அறைகூவும் அவருடைய "திருச்சி பிரகடனம்' வெறும் அறிவிப்பு அல்ல. சாதி, மத, மொழி எல்லைகளைக் கடந்து கும்பினியாதிக்கத்துக்கு எதிராக அவர் நடத்திய மாபெரும் போராட்டத்தின் எழுத்து பூர்வமான ஆதாரம்.


நூற்றுக்கணக்கான மன்னர்கள் ஆயிரக்கணக்கான பாளையங்கள் என்று சிதறிக்கிடந்த இந்த நாட்டை பிரிட்டிஷ் ஆட்சி தன் வாள் முனையால் ஒருங்கிணைத்து இந்தியாவை உருவாக்குவதற்கு முன்னமே, அந்த ஆங்கிலேயரைத் தூக்கியெறிவதற்காக சாதி, மொழி, இனம் கடந்து இந்த விடுதலை வீரர்கள் சாதித்த ஒற்றுமைதான் அவர்களால் உருவாக்கப்பட்ட தீபகற்பக் கூட்டிணைவு!


மருதுவின் அறைகூவல் 1806இல் வேலூர் சிப்பாய்ப் புரட்சியாய் எதிரொலித்தது. அங்கே ஐரோப்பியர்கள் அனைவரையும் கொன்று குவித்த வேலூர் புரட்சிச் சிப்பாய்கள், ""வெளியே வாருங்கள் நவாப், இனி அச்சமில்லை!'' என்று திப்புவின் மகனைத் தலைமையேற்க அழைத்தார் கள். கும்பினியாட்சியையே நிலை குலைய வைத்த 1857இன் புரட்சிச் சிப்பாய்களோ, தயங்கிக் கொண்டிருந்த பகதூர் ஷாவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தினார்கள்.


""மன்னர்களின் தலைமையில் புரட்சியாம்!'' என்று ஏளனம் பேசியது ஆங்கிலேய ஆளும்வர்க்கம். ""இந்தியா வில் நடைபெறும் புரட்சி ஐரோப்பியப் புரட்சியின் நகலாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது அபத்தம்'' என்று சாடினார் மார்க்ஸ்.


காலனியாதிக்கத்தை அகற்றிய இடத்தில் ஜனநாயகத்தை நிறுவ வேண்டும் என மருதுவோ 1857இன் சிப்பாய்களோ கனவு காணவில்லை. அவர்கள் முந்தைய மன்னராட்சியை மீட்கவேண்டும் என்று மட்டுமே நினைத்தார்கள். அன்று அவர்களுடைய சிந்தனைக்கு வரலாறு விதித்திருந்த வரம்பு அது.


எனினும் அவர்களது செயலோ அதற்கு நேரெதிரான விளைவைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது. ஆயுதமேந்திய சிப்பாய்களும் குடிமக்களும் நடைமுறையில் தங்கள் மன்னனை நியமித்துக் கொண்டிருந் தார்கள். மக்களால் நியமிக்கப்பட்ட மன்னர்கள்!


ஒருவேளை அந்தப் புரட்சி வெற்றி பெற்றிருந்தால், அந்த மன்னர்கள் பழைய மன்னர்களாக இருந்திருக்க முடியுமா, மக்களும்தான் பழைய பிரஜைகளாக நீடித்திருக்கக் கூடுமா?


""நாற்று நட்டாயா, களை பறித்தாயா'' என்று ஜாக்சன் துரையைப் பார்த்து கட்டபொம்மன் பேசும் திரைப்பட வசனத்தை நாம் கேட்டிருக்கிறோம். மக்கள் மத்தியில் வழங்கி வந்த கட்டபொம்மு கதைப்பாடலிலிருந்து எடுத்தாளப்பட்ட வசனம் அது. தன் மரபுரிமையைப் பற்றி மட்டுமே பேச வேண்டிய பாளையக்காரன், அங்கே மக்களின் குரலிலும் பேசுகிறான். எனவே, அது நிலப்பிரபுவுக்கு எதிராக ஒரு விவசாயி கேட்க விரும்பும் கேள்வியாகவும் அமைகிறது. தான் உருவாக்கிய கதைப்பாடலில் தன்னுடைய வசனத்தைப் பேசுமாறு கட்டபொம்மனைப் பணித்திருக்கிறான் விவசாயி.


காலனியாதிக்கத்தை எதிர்ப்பதற் காகத் தோன்றிய இந்த மாபெரும் புரட்சிகள், அவை மக்கள் புரட்சிகளாக இருந்த காரணத்தினால், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பைத் தம் தவிர்க்கவியலாத உட்கிடையாகக் கொண்டிருந்தன. அனைத்து உழைக்கும் சாதியினரும் ஆயுதமேந்தி நடத்திய அந்தக் கிளர்ச்சிகள் ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால், 2000 ஆண்டுகளாக இந்த மண்ணைக் கவ்வியிருக்கும் சாபக்கேடான சாதியம் அன்றே நொறுங்கிச் சரியத் துவங்கியிருக்கும். சூழ்ச்சிகள் நிரம்பிய அதிகார மாற்றமாக இல்லாமல் தம் சொந்தக் கைகளால் மக்கள் பறித்தெடுத்த வெற்றியாக நம் சுதந்திரமும் இருந்திருக்கும்.


இது வெறும் கற்பனையல்ல. இங்கிலாந்தில் தொழிற்புரட்சி தொடங்கிய அதே காலகட்டத்தில்தான் வங்காளம் கும்பினியின் பிடிக்குள் வந்தது. வங்கத்து நெசவாளர்களின் எலும்புகளையும் விவசாயிகளின் பிணங்களையும் உரமாக்கிக் கொண்டு தான் தொழிற்புரட்சி வளர்ந்தது. இந்தியத் தொழில்களை முன்னேற முடியாமல் முடக்கியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.


மறுமலர்ச்சிக் காலம் தொடங்கி, பல்வேறு சமூகப்போராட்டங்கள் மற்றும் புரட்சிகளின் தொடர்ச்சியாகத்தான், ஐரோப்பா முதலாளித்துவத் தொழிலுற் பத்திக்கு மாறத்தொடங்கியது. ஆனால், தனது காலனியாதிக்க எதிர்ப்புப் போரினூடாகவே நாட்டைத் தொழில் மயமாக்கி மேலிருந்து ஒரு புரட்சியைத் தோற்றுவிக்க முயன்றார் திப்பு. அதே காலகட்டத்தில் கீழிருந்து மக்களை அணிதிரட்டி காலனியாதிக்கத்தை ஒழிக்க முயன்றிருக்கிறார் சின்ன மருது. ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றிருந்தால்?


"ஒருவேளை' என்ற சொல்லை வரலாறு அனுமதிப்பதில்லை. சில தற்செயல் நிகழ்வுகளோ, திடீர் திருப்பங்களோ வரலாற்றின் போக்கை மாற்றிவிடுவதுமில்லை. எனினும் அந்த மக்கள் எழுச்சிகளில் வெடித்தெழுந்த அசாத்தியமான வீரமும், அதன் நாயகர்களிடம் வெளிப்பட்ட தன்னல மறுப்பும், இந்தத் தோல்வியின் விளைவாக நாம் தவறவிட்ட வரலாற்று வாய்ப்பும் "அவர்கள் வெற்றி பெற்றிருக்கக் கூடாதா' என்ற ஏக்கத்தை நம் உள்ளத்தில் தோற்றுவிக்கத்தான் செய்கின்றன.


இதோ, கட்டபொம்மன் வீழ்ந்த மண்ணிலிருந்து வ.உ.சி எழுகிறார். பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கத்தை இந்த மண்ணில் ஒலித்த திப்புவைத் தொடர்ந்து, ரசியப் புரட்சியின் சோசலிசத்தை முழங்க பகத்சிங் வருகிறார். இந்திய விடுதலைப் போராட்ட மரபால்தான் எத்தனை மின்னல்கள், இடிமுழக்கங்கள்! ஆனால் ஒவ்வொரு முறையும் மழைமேகத்தைக் கலைத்துச் சென்றிருக்கிறது துரோகத்தின் காற்று.


துரோகிகள் எனப்படுவோர், சமூக அடித்தளம் ஏதுமற்ற தனியாட்களாக இருந்திருந்தால் அன்றே துடைத்தொழிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அவர்களின் பின்புலமாக ஒரு பெரியபிழைப்புவாதக் கூட்டம் இருந்திருக்கிறது. பிழைப்புவாதம் என்பதை வெறுக்கத்தக்கதாகக் கருதும் பண்பை நம் சமூகம் பெற்றிருந்தால், துரோகத்தின் ஆணிவேர் அன்றே பட்டுப்போயிருக்கும். அறியாமையை யும் அடிமைத்தனத்தையும் அலட்சியத் தையுமே தம் பெருமைமிக்க மரபாகக் கொண்டிருந்த நம் சமூகம் துரோகிகளை வாழவைத்திருக்கிறது, வளரச் செய்திருக்கிறது.


துரோகமும் பிழைப்புவாதமும் பெற்ற வெற்றியைப் புரிந்து கொள்வதற்கு நுண்÷ணாக்கி கொண்டு வரலாற்றை ஆய்வு செய்யத் தேவையில்லை, நிகழ்காலத்தைக் கண்திறந்து பார்ப்பதே போதுமானது.


மருதுவைக் கொன்று தன்னை அரியணையில் அமர்த்திய கும்பினி அதிகாரியின் காலில் விழுந்து கண்ணீர் விடுகிறான் கௌரி வல்லப உடையத் தேவன். இந்த அற்பத்தனத்தை எப்படி விளங்கிக் கொள்வது? ""என்னை அமைச்சர் பதவியில் அமரவைத்து அழகு பார்த்த தலைவா!'' என்று கூறிக் கண்ணீர் விடும் அமைச்சர்கள் அந்த வரலாற்றுப் புதிருக்கு விடை தருகிறார்கள்.


தமிழகத்தை கும்பினிக்கு எழுதிக் கொடுத்துவிட்டு, நவாப் பதவியை அவனிடம் லஞ்சமாகப் பெற்றான் ஆற்காட்டு நவாப். அந்தப் பரம்பரைக்கு சமூகம் அன்று வழங்கிய அங்கீகாரத்தை எப்படிப் புரிந்து கொள்வது? ""சென்னைப் பல்கலைக் கழகம் கட்டுவதற்குத் தேவையான இடத்தை தானமாகக் கொடுத்தார்'' என்று கூறி ஆற்காடு இளவரசரை அழைத்துக் கவுரவிக்கிறதே இன்றைய அரசு, இந்த ஆபாசம் அன்றைய அங்கீகாரத்திற்கு பொழிப்புரை வழங்குகிறது.


""அந்தக் காட்டு நாய் சின்ன மருது எதற்காகப் போராடுகிறான் என்றே தெரியவில்லை'' என்று கும்பினிக்குக் கடிதம் எழுதினான் தொண்டைமான். ஏனென்றால், ""அவர்கள் சாக விரும்பு கிறார்கள்'' என்று 18ஆம் நூற்றாண்டில் தொண்டைமான் எழுப்பிய ஐயத்துக்கு 20ஆம் நூற்றாண்டில் விளக்கமளித்தார் காந்தி. பகத்சிங்கின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யப் போராடுமாறு கோரியவர்களிடம்இப்படியொரு பதிலைக் கூறியபின்னரும் காந்தியை மகாத்மாவாகக் கொண்டாட முடிந்த தேசம் தொண்டைமான்களைத் தொடர்ந்து பெற்றெடுப்பதில் என்ன வியப்பு?


கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்ததால் எட்டப்பன் துரோகி. அந்த எட்டப்பன் பரம்பரையிடம் காசு வாங்கித் தின்றுவிட்டு கட்டபொம்மனை யும் மருதுவையும் தன் எழுத்தில் இருட்டடிப்பு செய்த பாரதி? பாரதியின் இந்த இழிவை தெரிந்தே இருட்டடிப்பு செய்யும் பாரதி பக்தர்கள்? எட்டயபுரம் ராஜா இன்றளவும் அரண்மனையில் வாழ்வதும், கட்டபொம்மனின் வாரிசுகள் தொகுப்பு வீடு கேட்டு மனுப்போடுவதும் எட்டப்பனின் வெற்றியைப் பறை சாற்றவில்லையா?


நிகழ்காலத்தைக் கூர்ந்து கவனியுங்கள். கடந்த காலம் உங்கள் கண் முன் தெரியும். இதோ, காலனியாதிக்கத்தின் வரலாறு நம் கண்முன்னே விரிகிறது.


இன்று கடன் சுமை தாளாமல் விவசாயிகள் செய்து கொள்ளும் தற்கொலை என்பது அன்று பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்கு வழங்கிய 34 பஞ்சங்களின் மறுபதிப்பு.


""வடஇந்தியாவின் சமவெளிகள் இந்திய நெசவாளர்களின் எலும்புகளால் வெளுக்கப்படுகின்றன'' என்று 1830 களின் கோரச் சித்திரத்தைப் பதிவு செய்தான் பென்டிங் பிரபு. இன்று அவர்களுடைய தறிகள் விறகாகி எரிந்து அடங்கியும் விட்டன.


வரிக்கொடுமையால் விவசாயத் தைத் துறந்து, வயிற்றுப்பாட்டுக்காக ஆங்கில இராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்து, தம் சொந்த மக்களை வேட்டை யாடும் கூலிப்படையாக மாறினார்கள், அன்றைய மக்கள். இன்று ஈராக்கில் அமெரிக்கா வழங்கும் கூலிப்படை வேலை வாய்ப்புக்குக் கூட்டம் அலை மோதுகிறது.


தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மலாயா, ஃபிஜி என எல்லாத் திசைகளிலும் மக்களைக் கொத்தடிமை களாகக் கப்பலேற்றி அனுப்பிய காலனியாதிக்க காலம் மாறிவிட்டது. இன்று பட்டினியிலிருந்து பிழைக்க கொத்தடிமைகள் வளைகுடாவுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் தாமே விமானமேறிச் செல்கிறார்கள்.


கும்பினிக்காரர்கள் தம் வணிகத் துக்காக விலை கொடுத்து வாங்கிய சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற பல பகுதிகள் அன்று காலனியாதிக்கத் தின் கொத்தளங்களாகின. இன்று மறுகாலனியாதிக்கத்தின் தளப்பகுதி களாக சிறப்புப் பொருளாதார மண்டலங் களை அரசே நிறுவிக் கொடுக்கிறது.


அன்று தன் அரண்மனைக் கதவுக்கு வெளியிலுள்ள சாம்ராச்சியம் அனைத்தையும் வெள்ளையனுக்கு எழுதிக் கொடுத்த தஞ்சை மன்னன் சரபோஜி, அதற்கு மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டிய தேவை இருக்கவில்லை. எனவேதான் அவனை துரோகி என்று எளிதில் அடையாளம் காணமுடிகிறது.


இன்று மறுகாலனியாக்கத்தை மக்களுடைய ஒப்புதலோடு அமல் படுத்த வேண்டியிருப்பதால், "துரோகம்' என்ற சொல்லை "முன்னேற்றம்' என்பதாக மொழிமாற்றம் செய்திருக் கிறார்கள் சரபோஜியின் வாரிசுகள். தன் நலனையே பொதுநலனாகக் காட்டும்இந்த வித்தையில் படித்த வர்க்கத்தை நன்றாகவே பயிற்றுவித்திருக்கிறது இந்திய ஆளும் வர்க்கம்.


எனவேதான், பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்குச் செய்த நன்மைகளுக் காக லண்டனுக்குச் சென்று நன்றி கூறிய மன்மோகன் சிங்கை யாரும் காறி உமிழவில்லை. ""இன்öனாரு 200 ஆண்டு காலம் வணிகம் செய்ய வாருங் கள்'' என்று ஐரோப்பிய முதலாளிகளை பாக்கு வைத்து அழைத்த ப.சிதம்பரம் துரோகி என்று அடையாளம் காணப்படவுமில்லை.


பதவிக்கும் பவிசுக்கும் ஆசைப் பட்டு ஆங்கிலேயருக்குச் சேவகம் செய்தவர்களை அன்று "ஈனப்பிறவிகள்' என்று இகழ்ந்தான் சின்ன மருது. இன்று பன்னாட்டுக் கம்பெனிகளின் பதவி களில் அமர்ந்து பெற்ற மண்ணை விலை பேசும் வித்தகர்களைத்தான் நாட்டின் பெருமையை உயர்த்தும் "ஞானப்பிறவி கள்' என்று கொண்டாடுகிறது ஆளும் வர்க்கம்.


கல்வியறிவும் வரலாற்றறிவும் பெற்றிராத பரிதாபத்துக்குரிய 18ஆம் நூற்றாண்டின் மக்களல்ல நாம். இன்றைய மறுகாலனியாதிக்கம் அன்றைய காலனியாதிக்கத்தின் கோரமான மறு பதிப்பாக இருந்த போதிலும், அதனை ஒப்பிட்டுப் புரிந்து கொள்வதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகள் கண்முன்னே குவிந்த போதிலும் நமது வரலாற்றுணர்வு நமத்துக் கிடக்கிறது.


சொரணையின்றி அடிமைத்தனத்தை தெரிவு செய்துகொள்வதில் அவலம் ஏதும் இல்லை. எதிர்த்துப் போராட முடியாத கோழைத்தனம் கையறுநிலையும் இல்லை.


அதோ, தூக்கு மேடையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான் பகத்சிங். தன்னை விடுவிப்பதற்காக ஆங்கில அரசிடம் கருணை மனுப்போட்ட தன் தந்தையை ""வேறு யாரும் இதைச் செய்திருந்தால் துரோகி என்றே நான் கூறியிருப்பேன்'' என்று கோபம் தெறிக்கக் கண்டிக்கிறான்.


மார்பில் குருதி கொப்புளிக்கக் களத்தில் சரிந்து கிடக்கிறான் திப்பு. ""மன்னா, யாரேனும் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியிடம் சரணடைந்து உயிர் பிழைத்து விடலாம்'' என்று கூறிய தன் பணியாளை ""முட்டாள்.. .. வாயை மூடு!'' என்று எச்சரிக்கிறான்.


குண்டடிபட்டு, மகன்கள், பேரன்கள், சக வீரர்கள்.. என நூற்றுக்கணக்கா னோருடன் தூக்குக்காகக் காத்திருக் கிறான் சின்ன மருது. ""சமாதானம் பேசலாம்'' என்று ஆசை காட்டுகிறான் துரோகி கௌரி வல்லப உடையத் தேவன். தனது குடிவழியே தூக்கில் தொங்கப்போகும் காட்சி மனக்கண்ணில் தெரிந்தும், அந்தத் துரோகியின் முகத்தில் காறி உமிழ்கிறான் சின்ன மருது.


கைகளைப் பின்புறம் பிணைத்து கட்டபொம்மனைத் தூக்குமேடையை நோக்கி இழுத்துச் செல்கிறார்கள் கும்பினிச் சிப்பாய்கள். சுற்றி நிற்கும் பாளையக்காரர்கள் மீது ஏளனமும் வெறுப்பும் கலந்த பார்வையை வீசுகிறான் கட்டபொம்மன். தலை தொங்கிச் சரிந்த பின்னரும் கட்டபொம்ம னின் விழிகள் சரியவில்லை.


இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் உறைந்து நிற்கிறது அவனுடைய ஏளனப்பார்வை. அந்தப் பார்வைக்கு இலக்காவதற்கு இன்று பாளையக்காரர் எவருமில்லை. நாம்தான் இருக்கிறோம். கண் கலங்கித் தலைகுனிகிறோம்.


No comments: