தமிழ் அரங்கம்

Wednesday, April 4, 2007

புலிகளின் விமானத் தாக்குதலும், அது வெளிப்படுத்தும் மலட்டு அரசியலும்

புலிகளின் விமானத் தாக்குதலும், அது வெளிப்படுத்தும் மலட்டு அரசியலும்

பி.இரயாகரன்
03.04.2007


ரசியல் ரீதியாக மலடாகிப் போனவர்கள், ஹீரோயிச நடவடிக்கைகள் மூலம் தாக்குப்பிடிக்க முனைகின்றனர். ஆண்மையை இழந்தவர்கள் ஆண்மை மருந்துகளைக் குடிப்பதன் மூலம், தமது ஆண்மையை மெயப்பிக்க படாத பாடுபடுவார்கள். புலிகளின் எஞ்சிய காலம் இந்த நிலைக்கு பரிதாபகரமாக தரம் தாழ்ந்துவிட்டது.


இது போன்ற தாக்குதல்கள் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய நன்மை தான் என்ன? அதை மட்டும் சொல்லத் தெரியாத ஆய்வுகளும் அரிப்புகளும். ஆகாகா தமிழன் விமானம் வைத்திருக்கின்றான் என்று சுய பெருமை பேசும் உப்புச்சப்பற்ற வக்கிரங்கள்.


மக்களின் நிலை என்ன? இலட்சக்கணக்கான மக்களோ அகதி முகாமில் அல்லது தெருவோரங்களில் ஒரு நேரக் கஞ்சிக்கு கையேந்துகின்றனர். எந்த மீட்பாளர்களுமின்றி அனாதைகளாகி விட்டனர் (தமிழ்) மக்கள். கிழக்கின் மனித அவலம் வெளிவராத வகையில், அது இராணுவ பிரதேசமாகிவிட்டது. அந்த மண்ணில் உழைத்து வாழ்ந்த மக்கள், மீளவே முடியாது அடிமைத்தனத்துக்குள் புதைந்துவிட்டனர். வடக்கில் கொடுமை மேல் கொடுமை. அவலங்கள் மேலாய் அவலம். இவை வெளிவராத வண்ணம் இராணுவ இறுக்கிய பிரதேசமாகின்றது.


வன்னியில் புலிகளின் காட்டுமிராண்டித்தனமான காடையர் கூட்டத்தின் மனித விகாரங்களுக்குள், மனிதம் அழுந்தி சிதைந்து விட்டது. அங்கு வாழும் தமிழர்கள் மனித கூட்டம் என்பதையே அவர்கள் மறந்து விட்டனர். இலங்கை எங்கும் மக்கள் (தமிழர்கள்) வாழ முடியாத அவலம். இதையெல்லாம் யார் உருவாக்கியது? சொந்த பெருமையை பேசும் எந்த நாய்களுக்கும், இந்த மக்களைப்பற்றிப் பேசுவதற்கு வக்கு கிடையாது.


மவுனமாகி மனிதம் சிதைந்து அழுகின்றது. திக்குத்தெரியாத அராஜகப் பிடியில் சிக்கி மக்கள் அனுதினமும் திணறுகின்றனர். மக்களைப்பற்றி எந்த சமூகக் கருசனையுமற்ற மாபியா குண்டர்கள், தமது பாசிச பெருமைகளைப் பேசுவதால் எதுவும் மக்களுக்கு வந்துவிடப்போவதில்லை. ஹீரோக்கள், ஹீரோயிச நடவடிக்கைகள் வரலாற்றை தீர்மானிப்பதில்லை. மக்கள் தான் வரலாற்றை தீர்மானிக்கின்றார்கள் என்பதே, மாறாத ஒரு உண்மை. மாறாக தற்பெருமைகளை, அதிகாரம் அடாவடித்தனங்கள் மூலம் தம்மைத்தாமே பீற்றுவதால், எதார்த்த உண்மைகள் பொய்யாகிவிடுவதில்லை. பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் சமூக அடித்தளம் இருப்பதில்லை.


ஒருபுறம் வீரமும், பெருமையும் பேசும் நடவடிக்கைகள் , மறுபுறமோ மனித அவலத்தில் மனித குலம் (தமிழ் இனம்) ஓலமிடுகின்றது. கடந்த ஒரு வருடத்தில் யுத்தகளமல்லாத சூழ் நிலையில் குறைந்தபட்சம் 2000 பேரை தமது சொந்த வக்கிரங்களுக்காக யார் நரைவேட்டையாடினர்? எங்கு? எதில்? எப்படி? உப்புச்சப்பற்ற வீரம் பேசப்படுகின்து.


எங்கும் எதிலும் ஆறாத துயரக் கண்ணீர், கண்ணீரே வரண்டு போகும் அளவுக்கு மக்களின் (தமிழனின்) முதுகில் குத்தி அறையப்படுகின்றனர். பொறுக்கியாக சமூக விரோதிகளாக வாழ்ந்தபடி, வீரமும் பெருமையும் பேசும் கும்பல், தான் சொகுசான வாழ்க்கை வாழும் சமூக முரண்நிலை. தேசியம் என்பது சுரண்டும் வர்க்க நலன்களை ஈடு செய்கின்ற ஒரு கருவியாக கொண்டே, பெருமையும் வீரமும் சிலரின் மகுடங்களாக்கப்படுகின்றது.


நாம் இந்த வரலாற்றை திரும்பிப் பார்ப்போம். 1983 இல் தின்னைவேலியில் இராணுவத்தினர் கொல்லப்பட்ட நிகழ்வும், அதை தொடர்ந்து நடத்தப்பட்ட பேரினவாத இனக் கலவரமும் ஏற்படுத்திய சமூக விளைவுகள் என்ன? அன்று இராணுவம் கொல்லப்பட்டதை தமிழன் பெருமையாக பேசியவர்கள் பீற்றியவர்கள் எல்லாம் எங்கே? (தமிழ்) சமூகம் கண்டது தான் என்ன?


அன்று இந்த இனக்கலவரம் உருவாக்கிய மனித அழிவுகளையிட்டு, தம் பெருமை பேசியவர்கள் எவரும் அலட்டிக்கொண்டது கிடையாது. ஒரு சமூகம் மீது நிகழ்த்திய அநீதிக்கு எதிரான போராட்டம், எதைத்தான் மக்களுக்கு தந்துள்ளது. அதுவும் அநீதியான பாசிசத்தையே விடுதலையின் பெயரில் பரிசளித்துள்ளது. இந்த பாசிச மாபியாத்தனம், தனது காடைத்தனம் மூலம் மக்களை நாளும் பொழுதும் சூறையாடி தின்னுகின்றது.


அன்று இனக்கலவரம் ஆயிரம் ஆயிரம் மக்களின் வாழ்வை இல்லாதொழித்தது. அன்று வாழ்வை பறிகொடுத்த அந்த மக்களுக்கு ஒரு சமூக நம்பிக்கையையோ, எதிர்காலத்தையோ உருவாக்க முடியாத எமது போராட்டம், அவர்களுக்கு எதிராகவே படுபிற்போக்காக மாறியது. எந்த பாசிட்டும், எந்த மாபியாவும், எந்த காடையர் கூட்டமும் மக்களின் விடுதலையை ஒருநாளும் பெற்றுத் தரமுடியாது. மாறாக மேலும் மேலும் மக்களின் விடுதலைக்கு வேட்டு வைப்பார்கள். எஞ்சிய அந்த மக்களின் சமூக இருப்புக்கான அனைத்து சமூக அடித்தளத்தையும் அழிப்பார்கள். இதையே எமது சமூக விரோத வீர பாசிச வரலாறு நிறுவி வந்துள்ளது.


இதைத் தவிர எதைத்தான் தமிழ் மக்கள் கண்டார்கள்? உங்களிடம் ஒரு துளியாவது சமூக நேர்மை இருந்தால், வாயைத் திறவுங்கள், சொல்லுங்கள் எம் மக்கள் சாதித்தது என்ன? சாதிக்கப்போவது என்ன? (தமிழ்) விமானம் குண்டு விசினால் மக்களுக்கு (தமிழனுக்கு) கிடைப்பது தான் என்ன? எதுவுமில்லை. சூனியம், வாய் பொத்தி நிற்கும் சமூக அடிமைத்தனம். சிலர் தாம் பிழைப்பதற்கு ஏற்ற போர் கோட்பாடுகளும், கூச்சல்களும். யுத்தத்தை வெறுக்கும் மக்களின் உணர்வுடன் அன்னியமான பாசிச லும்பன்கள், ஒரு சமூகத்தையே (தமிழனையே) கடித்துக் குதறுகின்றனர். இதன் மூலம் சிலர் செல்வங்களைக் குவித்து வைத்துக் கொண்டு, சமூகத்தின் ஏக பிரதிநிதிகளாக காட்டிக்கொள்கின்றனர். இதை பாதுகாக்கவே இராணுவ மயமாக்கல். தேசம், தேசியம் என்பது காய் அடிக்கப்பட்டு, குலைப்பதற்காகவும் அதைச் சொல்லி நக்கிவாழ்வதற்காகவும் விடப்பட்டுள்ளது.


நெற்றியில் அறைவார்கள். அது சந்தனமாக இருந்தாலும் சரி, ஒரு துப்பாக்கி குண்டாக இருந்தாலும் சரி இரண்டும் ஒன்று தான். இதைத் தான் அவர்கள் கடந்தகாலம் முழுக்க மக்களுக்கு பரிசளித்தவர்கள்.


மக்கள் எந்த சமூக குறிக்கோளுமற்ற வகையில் வாழ்வை இழத்தல் அரங்கேறுகின்றது. இருக்கின்ற வாழ்வு பறிபோகின்றது. இதைத் தவிர எதைத்தான் மக்கள் விடிவாக பெற்றார்கள். அல்லது பெறுவார்கள். சுனாமி ஏற்படுத்திய இயற்கை அழிவை எல்லாம் பணமாக்கி தின்று தீர்த்தவர்கள் யார்? இவர்களா மக்களின் விடுதலை பெற்றுத் தருவார்கள்! இவர்கள் எப்படிப்பட்ட விடுதலையைத் தருவார்கள்? தெரிந்தால் சொல்லுங்கள்.


3 comments:

இவன் said...

ஆமாம் இந்த கட்டுரையில் என்ன சொல்ல வரைங்க ? ஒன்னும் புரியலையே!

ஈழ தமிழர் விடுதலைக்காக யாரும் போராட கூடாதா? இல்லை விடுதலைப் போராட்டமே கூடாதா?

கால் நூற்றாண்டில் விடை கண்ட விடுதலை போராட்டம் எதாவது உலக வரலாற்றில் எதாவது உண்டா?

தமிழரங்கம் said...

ஈழ தமிழர் விடுதலைக்காக யாரும் போராட கூடாதா? இல்லை விடுதலைப் போராட்டமே கூடாதா?

விடுதலைப்போரட்டம் என்றால் என்ன? அதை முதலில் சொல்லுங்கள். பிறகு யார் அதற்காக போராடுகின்றனர் என்று பார்ப்போம்.

கால் நூற்றாண்டில் விடை கண்ட விடுதலை போராட்டம் எதாவது உலக வரலாற்றில் எதாவது உண்டா?

விடுதலைப்போராடடத்துக்கு காலம் உண்டோ? சரி இலங்கையில் விடுதலைப்போராட்டம்; எப்படி? எங்கே? யாரால்? கால்நூற்றாண்டாக நடத்தப்படுகின்றது? எந்த மக்கள் பிரிவை சார்ந்து? சரி விடுதலைப்புபலிகள் விடுதலை இயக்கமேயல்ல.

ஆமாம் இந்த கட்டுரையில் என்ன சொல்ல வரைங்க ? ஒன்னும் புரியலையே!

புரியவில்லை என்றால் இந்தியவில் விடுதலைப்போராட்டம் என்று எதை கருதுகின்றீhகள்!. அதாவது புரிகின்றதா?

திருவடியான் said...

தமிழன் என்றொரு இனம் உண்டு. தனியே அவர்க்கோர் குணம் உண்டு. என்றொரு பாடலுண்டு. அந்தக் குணம் உழக்குக்குள் கிழக்கு மேற்கு பார்ப்பது. அதுதான் இன்றைக்கு விடுதலைக்கான தேடலை முயற்சியை இப்படி பிரித்துப் பேசத் தலைப்படுகிறது.

இதே வகையான எண்ணங்கள்தான் இயக்கத்தினருக்கும் இருந்திருக்க வேண்டும். ஒரு உரைக்குள் எத்தனை வாள்கள் இருக்க முடியும் என்ற விளக்கவுரையுடன் பலவேறு தரப்பட்ட போராளி இயக்கங்கள் கடந்த காலங்களில் நிர்மூலமாய்ப் போக்கடிக்கப்பட்டன. கருத்து வேறுபாடுகள் இருப்பது அவரவர் உரிமை, அதே சமயம், விடியலை நோக்கிப் பயணப்படுவதும் விடியலுக்காக காத்திருப்பதும்தான் முக்கிய நோக்கமாக இருக்க அம் முயற்சியை ஏந்தி களத்தில் போராடுவோரை நிந்திப்பதும் உங்கள் உரிமைதான். விடியல் போராடுவோருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தான். நோக்கம், எதிர்பார்ப்புகள் விடியலை நோக்கியே இருக்கட்டும்.

மற்றபடி, விமானத்தாக்குதல் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருந்தாலும், அதன் பின்னணியையும், அது நடத்தப்பட்ட காலகட்டத்தையும் அவதானித்தால் பல கூற்றுக்கள் புரியும். இது ஒரு அதிர்ச்சி வைத்தியமாகத் தோன்றினாலும், தளர்ந்து வரும் ஆதரவுக்குரலை தொடர்ந்து உயர்த்தி வைத்திருக்க இம்மாதிரியான ART of WAR உத்திகள் தேவைப்படுகிறது போலும்.