தமிழ் அரங்கம்

Saturday, April 7, 2007

புலி ஒழிப்பையா பேரினவாதம் நடத்துகின்றது?

புலி ஒழிப்பையா பேரினவாதம் நடத்துகின்றது?

பி.இரயாகரன்
07.04.2007


ல்லை. மாறாக தமிழ் மக்களை ஒழித்துக்கட்டுகின்றனர். தமிழ் மக்களின் ஒவ்வொரு உணர்வையும், புலிப் பாசிசத்தை மூலதனமானக் கொண்டு பேரினவாதம் வேட்டையாடுகின்றது. தமிழ் மக்களின் இருப்பே இன்று கேள்விக்குள்ளாகி நிற்கின்றது.


புலிகளின் பாசிச பயங்கரவாதத்தை உலகுக்கு காட்டியபடி, அழிப்பது தமிழ் மக்களின் அடிப்படையான வாழ்வியலைத்தான. இந்த அடிப்படையான உண்மையை புலிகளும் சரி, புலியெதிர்ப்பும் சரி மறுதலிக்கின்றது. இந்த வகையில் புலிகளும், புலி எதிர்ப்பும் பேரினவாதத்துக்கு தத்தம் அரசியல் வழிகளில் உதவுகின்றனர்.


ஒருபுறம் பேரினவாதம் தமிழ் மக்களையல்ல புலிகளையே அழிப்பதாக புலியெதிர்ப்பு கூச்சல் போடுகின்றது. மறுபுறம் தமிழ் மக்களுக்காகவே தாம் மரணித்துக்கொண்டிருப்பதாக புலிகள் ஓப்புக்கு ஒப்பாரி வைக்கின்றனர்.


பேரினவாதம் வழமைபோல் தனது பேரினவாத வழிகளில் புலிகளின் பெயரில் யுத்தத்தை செய்கின்றது. தமிழ்பேசும் மக்களின் எந்த பிரச்சனையும், இவர்களாக தீர்க்கப்படப் போவதில்லை. தமிழ் மக்களை புலிகளின் பெயரில் அழித்தொழிக்க, காலத்தை இழுத்தடிப்பதைத் தாண்டி, எதையும் பேரினவாதம் செய்வதில்லை. இவர்கள் வைக்கப் போவதாக கூறக்கொள்ளும் தீர்வுத் திட்டமும் கூட, தொடர்ச்சியாக திட்டமிட்டு கிடப்பில் போடப்படுகின்றது. மாட்டுக்கு குழையைக் காட்டி செல்வது போல், இந்தா தீர்வு என்று ஏமாற்றி வெல்லுகின்றனர். புலியெதிர்ப்பு செக்கு மாடுகள் புலிகள் தான் இதற்கு தடையாக உள்ளனர் என்று உளறிக் கொண்டு, அந்த இனவாத குழையை நோக்கி ஆவலாக அங்கலாய்த்து பறக்கின்றனர். ஆனால் இனவாத எதார்த்தம் காலத்தை நீடிப்பதும், அழித்தொழிப்பை முதன்மைப்படுத்தியுமே தமிழ்மக்கள் மேல் வெறியாட்டம் போடுகின்றது.


தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தேசிய ரீதியாக, இன ரீதியாக, மொழி ரீதியாக இனம் காண மறுக்கும் இனவாத அரசுகள், புலியெதிர்ப்பும், அந்த மக்களுக்கு ஜனநாயக பூர்வமான அரசியல் தீர்வை வழங்கப் போவதில்லை. இந்த உண்மை மீள மீள மெய்ப்பிக்கப்படுகின்றது. கொடுமையான கொடூரமான யுத்தம் நடத்தப்படுகின்றது. வகை தொகை தெரியாத அளவில் குண்டுகள், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பொழியப்படுகின்றது. அழித்தொழிப்பும், சமூகத்தை விரட்டி அடிப்பும் அன்றாடம் நிகழ்கின்றது.


மக்கள் மந்தைக் கூட்டம் போல் விரட்டிவரப்பட்டு, ஒவ்வொருவர் காலிலும் சுயவிலங்கிட்டு தமது இராணுவ பாசிச கோட்டைக்குள் சிறை வைக்கின்றனர். இந்த மக்கள் சுயமாக சிந்திக்கவும், செயலாற்றவும், ஏன் தமது அபிப்பிராயத்தை தெரிவிக்கவும் முடியாத வகையில், ஒரு பேரினவாத அடக்குமுறைக்குள் நாயிலும் கீழாக வைக்கப்படுகின்றனர்.


அனைத்தும் புலியை அகற்றல், புலிப் பயங்கரவாதியிடமிருந்து மக்களை பாதுகாத்தல் என்ற புலியெதிர்ப்பு விளக்கம் தரப்படுகின்றது. புலிகளை எப்போதோ தமிழ் மக்கள், தமது விடுதலையின் எதிரி என்பதை அறிந்து அதில் இருந்து விலகி வாழ்கின்றனர் என்ற உண்மை, பேரினவாதத்தின் சதியை பொய்யாக்கிவிடுகின்றது. மக்கள் எப்போதோ புலிகளை தோற்கடித்துவிட்டனர். பாசிசமின்றி புலிகள் உலகின் எந்த மூலையிலும் உயிர்வாழ முடியாத நிலை. எந்த நிகழ்ச்சியின் பின்பும் பாசிசம் விகாரமாகி வெளிபட்டு நிற்கின்றது. தமிழ் மக்களை புதிதாக விடுவிப்பதற்கு என பேரினவாத பாசிச திட்டத்தில் எதுவுமிருப்பதில்லை. பேரினவாத பாசிசம் புலிப்பாசிசத்தை துணையாக கொண்டு, தமிழ்மக்களையே அடக்கியொடுக்கி அடிமைப்படுத்த விரும்புகின்றது. இந்த வகையில் இன்று கிழக்கு மிக மோசமாக அழிக்கப்படுகின்றது. அந்த மக்களின் வாழ்வு கற்பழிக்கப்படுகின்றது. வரலாறு காணாத புலம்பெயர்வும், இழப்புகளும். சிதைவுகளும். எங்கும் மனித அவலங்கள். வீதியோரங்களில் அனாதை வாழ்வு. புலிப் பயங்கரவாதத்திடம் இருந்தான மீட்சி, இப்படித்தான் நிதர்சனமாகி நிர்வாணமாகி நிற்கின்றது.


இதற்கு பின்னால் அரசியலற்ற கருணா என்ற பாசிச மாபியா கூலி குண்டர் படையும் மற்றைய குண்டர் குழுக்களும் வீரர்களாக பவனி வருகின்றனர். கருணா என்ற மாபியாக் கும்பல் கொழும்பு முதல் வவுனியா வரை கறக்கும் கப்பப் பணம், புலியின் பாசிச மாபியாத்தனத்தை மிஞ்சுவதாகும். இந்த பணம் கூட அந்த கிழக்கு மக்களுக்கு காட்டவேயில்லை. தாம் மனிதாபிமான பணியில் ஈடுபடுவதாக காட்ட, கமராவுடன் அரசியல் நாடகங்களை நடத்துகின்றனர். இதன் மூலம் புலம்பெயர் பணமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வீணி வடிய காத்துக் கிடக்கும் மக்கள் விரோதக் கும்பல்கள்.


பேரினவாதத்தின் கிழக்கு எடுபிடியாகி ஊரைச் சுருட்டுகின்றனர். கருணா குண்டர்கள் மேலான சர்வதேச குற்றச்சாட்டுகள் அதிகரிக்கும் போது, அரசு அவர்களின் மூச்சே வெளியில் தெரியாத வண்ணம் பூட்டிவைக்கின்றது.


கிழக்கு மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக் கொண்டு, இந்த கூலிக் குழுக்கள் எல்லாம் பேரினவாதத்தின் கால்களை நக்குகின்றது. அந்த மக்களின் நிரந்தரமான அடிமை வாழ்வும், பேரினவாதத்தின் அழுங்கு பிடியும் மீட்கவே முடியாத ஒரு சகதியினுள் சென்று கொண்டு இருக்கின்றது. இதையே வரலாறு நிச்சயமாக அனைத்து தரப்புக்கும் நிறுவிக்காட்டுகின்றது.


No comments: