தமிழ் அரங்கம்

Tuesday, January 29, 2008

வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபை: நமக்கான கொலைக் களம்

ப. வி. ஸ்ரீரங்கன்
27. 01. 2008

"மக்களே!

அந்நிய மிருகங்கள் உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டு,

உங்களது சுதந்திரமான பரிசுத்த மண்ணில் தீட்டுப்படுத்தி

நீங்கள் வாழ்ந்த இல்லங்களை மண்மேடுகளாக்கின.


உங்கள் குழந்தைகளின் பிரேதங்களை

சிங்களத்துத் தீக் குண்டுகளுக்கும்,

உங்கள் உறவுகளின் மாமிசத்தைத்

தெரு நாய்களுக்கும் இரையாக்கின


நீங்கள் வாழ்ந்த

மண்ணைச் சுற்றிலும்

உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல்

சிந்தின, உங்கள் உற்றோரினது

உடல்களையெல்லாம் மாற்றியக்கமென்றும்,

துரோகிகளென்றும் கதைவிட்டு

மண்ணெண்ணை, இரயர் போட்டெரித்தன ஈழத்தைப்போலவே! ! ! "


அன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே!

எமது தேசம் அந்நிய இனங்களிடம் அடிமையாகக்கிடக்கிறது. இந்த அடிமைத்தனமானது இன்று நேற்றாக ஆரம்பித்ததல்ல. கடந்த ஈராயிரமாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்கள் தம் அனைத்து உரிமைகளையும் படையெடுப்பாளர்களிடமும், உள்ளுர் ஆதிக்கச் சமுதாயங்களிடம் பறிகொடுத்துள்ளார்கள். இந்தவுரிமையானது வெறும் பொருளியல் சார்பு வாழ்வியல் உரிமைகளில்லை. மக்களின் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும் அது சார்ந்த மனித இருத்தலும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. நமது பொருளாதார வலுவைச் சிதைத்தவர்கள் எம்மை அந்த நிலையிலிருந்து மீளவிடாது இன்னும் பொருளாதார, பண்பாட்டு ஒடுக்குமுறையால் பிரித்தாளுகிறார்கள். நாம் நமக்கென்றொரு அரசையும், பொருளாதாரப்பலத்தையும் பெறுவதற்குத் தடையாக இருப்பது நமக்குள் நிலவும் வர்க்க முரண்பாடுகளே காரணமாகிறது. இந்த முரண்பாட்டைச் சரியான வகையில் பயன்படுத்தி நமது மக்களை ஓரணியில் அணிதிரட்டுவதில் ஈழத்தமிழ் மக்களின் அரசியலானது சமீப காலமாக வலுவிழந்து விவேகமற்று நகர்கிறது. இந்த நகர்வானது நமது மக்களை வலுவானவொரு வெகுஜனப்போராட்டத்துக்குள் உந்தித் தள்ளி எமது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான போரை ஏதேதோ காரணங்கூறி நசுக்கி வருகிறது. நாம் கையாலாகாத இனமாக உலகின் முன் நிற்கிறோம். எங்கள்மீதான உலகத்தின் பார்வை குவிந்தபோது அதை நாசமாக்கிய மொனராகலத் தாக்குதலை எந்த நாய்கள் செய்தார்கள்?, சிங்கள அப்பாவி மக்களைப் பலிகொண்டு நமது உரிமைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதமாக்கிய சதி எம்மைப் பூண்டோடு அழிக்கும் அந்நிய நலன்களின் பிரதிபலிப்பாகவே இருக்கமுடியும். அந்நியனுக்குக் கூஜாத் தூக்கும் தமிழ் இயக்கக் குழுக்களும் புலிகளும் நம்மைக் கேடான முறையில் அழித்த வரலாறு இன்னும் தொடரும்போது நாம் எங்கே நிற்கிறோம்?

பலம் பெறும் எதிரிகள்:

எதிரிகள் பல ரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணிப்பதற்கான இன்னொரு வடிவமாக இந்த 13வது திருத்தச்சட்ட நிர்வாக அலகு மிக அண்மைய நாட்டின் விருப்பத்தின்-ஆர்வத்தின் வெளிப்பாடாக விரிகிறது.

நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியக் கட்சியால் சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். சிங்களத் தரப்புத் தன்னை அணு அணுவாக அரசியலிலும், கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்தெடுத்து வரும்போது, இவர்கள் தமிழர்களை வெறும் உணர்ச்சிவழி சிந்திக்கும் கூட்டமாகச் சீரழித்தார்கள். இன்றைய நிலையிலோ ஆயுதக் குழுக்களின் ஈனத்தனமான கொலை அரசியலிலுக்குத் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பலியாக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின் இன்றுவரை ஈழத்துத் தமிழினம் ஏமாற்றப்பட்டுவருகிறது. இத்தகைய ஏமாற்று அரசியலுக்கு இதுவரை எமது மக்களின் இலட்சம் உயிர்கள் இரையாக்கப்பட்டுள்ளது! இதுதாம் இலங்கைத் தேசத்தின் இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் வடு!



இந்திய-உலக நலன்கள், பொருளாதாரக் கனவுகள், புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது. இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம். அன்று ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும், இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள். இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு ஆயுதக் குழுக்கள் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் தீர்வு ஆலோசனைகள் அதுசார்ந்த நிர்வாக அலகுகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.

இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான புலி எதிர்ப்பு-புலி ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு, தம்மைத் தலைவர்களாக்கும் வியூகத்தைக் கொண்டிருக்கிறது. பி(ப)ணம் தின்னிகளான இந்த ஆயுததாரி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள். டக்ளஸ் தேவாநந்தா என்ற பயங்கரவாதியும், புலிகளும் இப்போது நடாத்தும் அரசியலில் நமது மக்களின் நலன்கள்தாம் பலியாகிவிட்டது! இந்தியவோடுசோந்து இலங்கையும், இந்த மக்களின் (தமிழ்பேசும் மக்கள்) உரிமைகளைச் சிதைத்து எம்மை நிரந்தரமாக அடிமைக்கூட்டமாக்கி விடுவதில் அதன் வெற்றி, இந்தக் கேடுகெட்ட13வது சட்டத்திருத்தத்துக்குள் வரையறுக்க முனையும் நிர்வாகசபை அரசியலால் உறுதியாகிவருகிறது.

எமது தேசிய அபிலாசைகள்:

நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை, அவர்களது வர்க்க-சாதிய-பிரேதேச நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும். அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது மக்கள் பயன்படுத்தி, அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.

நம்மை, நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை பன்முகக் கட்சிகள்-அமைப்புகள், ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடிக்கத் தயாராகியபடி. இவர்களே தனிநபர் துதிபாடி, கேவலமான பாசிஷ்டுக்களை தமிழரின் பிரமுகர்களாகவும்-தலைவர்களாகவும், மகாமேதைகளாகவும் ஒளிவட்டம் கட்டுகிறார்கள். டக்ளஸ் தேவாநந்தனனோ அல்ல ஆனந்த சங்கரியோ பிரபாகரனுக்கு மாற்றான மக்கள் சார்ந்த அரசியலைத் தரப்போவதில்லை! இவர்களும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும், அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அந்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை, போராடவுமில்லை. இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு. இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இவர்கள் கூறும் ஜனநாயம், சுதந்திரம், இடைக்கால நிர்வாக சபை, 13வது திருத்துச் சட்டப் பரிந்துரைகள் யாவும் வெறும் பூச்சுற்றலாகும்.

எமது சிந்தனைத் தளம் புனரமைக்கப்பட்டு, அது விவேகமாக நிர்மாணிக்கப்படவேண்டும். இந்த நிர்மாணம் எமது தேசிய இன அடையாளத்தின் இருப்பை வலுவாக நிர்மாணிக்க வேண்டும். எமது வரலாற்றுத் தாயகத்தை நாம்(இங்கே பாசிசப் புலித் தலைமையைக் கற்பனை செய்யவேண்டாம். மாறாக, அவர்களோடு இணைந்துள்ள நமது குழந்தைகளைக் கற்பனை செய்யவும்) நிர்மாணித்துவரும் இன்றைய காலத்தில் எங்கள் மனங்களும் புனரமைக்கப்படவேண்டும். இங்கே புலிகளின் தவறுகளைக்கொண்டே நம்மை நெருங்கிவரும் இந்திய வலுக்கரம் முறியடிக்கப்படவேண்டும். இதற்கு நமது மக்களின் பூரணமான பங்களிப்பு அவசியமாகிறது. மக்களைச் சுயவெழிச்சுக்குள் தள்ளி அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத்தக்க சூழலுக்குத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே! மக்களைச் சுயமாகப் போராடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது நமது நிலைப்பாடாகவே இருக்கிறது. எங்கள் மக்களின் தயவில் சாராத எந்தப் போராட்ட வியூகமும் இலங்கை-இந்தியச் சதியை முறியடித்து நமது மக்களை விடுவிக்க முடியாது. இது நாம் அறிந்த நமது போராட்ட அநுபவமாகவே இப்போதும் விரிகிறது. நமது போராட்ட இயக்கம் நமது மக்களைத் தொடர்ந்து ஆயுதங்களால் மிரட்டிப்பணிய வைத்தபடி நமது மக்களை முட்டாளாக்கி அந்நிய சக்திக்களுக்கு அடியாளாக இருப்பதை எமது இளைய தலைமுறை நிராகரித்துத் தமது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்திப் புலிகளைப் புரட்சிப்படையாக மறுசீரமைப்பது அவசியமென்பது இன்றைய எமது இழி நிலையிலிருந்து நாம் கற்கும் பாடமாகும். இதைப் பின்தள்ளும் புத்தி ஆபத்தானது.

இரண்டு அரசஜந்திரங்கள், அவைகளின் அமுக்கம்:

இன்றோ இரண்டு அரசஜந்திரங்களுக்குள் மாட்டப்பட்டிருக்கும் தமிழ், முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது. இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது. இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது. இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும். இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து புரட்சிகரமான படையணியாக மேலெழுந்தே தீரும். அதை வழிநடத்தும் புரட்சிகரமான கட்சியாகப் புலிப்படையணி மாறுவது காலத்தின் தேவை. நாம் கால் நூற்றாண்டாகப் போராடியவொரு இனம். தமிழ்சினிமாவுக்குள் தலை புதைத்த விடுபேயர்கள் நாம் இல்லை என்பதை நிருபிக்கும் ஒரு தலைமுறையானது தனது தகமையை உலகெங்குஞ் சென்று வளர்த்துள்ளது. இந்த இளைஞர்கள் அந்நிய வியூகத்துக்குத் தோற்றுப் போனால் நாம் எப்போதுமே விடுதலை அடைவது சாத்தியமே இல்லை.



பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள். ஆயுத முனையிலும், கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது. இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடிக்கிறார்கள். தமிழர்களை இராணுவத்தோடு சேர்ந்தழித்த ஈ. பி. ஆர். எல:எப், ஈ. பி. டி. பி. புளோட் கும்பல்கள் ஒரு புறமாகவும், மக்களால் அறியப்பட்ட பெரும் இந்தியக்கைக்கூலி ஆனந்தசங்கரி மறுபுறமாகவும் "13வது திருத்தச் சட்டமூலம் வடக்கு கிழக்கின்

மாகாணத்துக்கான இடைக்கால நிர்வாகசபையைத் தமது அரசியல் தந்திரத்தால் கிடைத்த வெற்றியாக" உரிமைகூறி பைத்தியகாரத்தனமாகக் கருத்தாடி நம்மக்களைக் கேவலமாகச் சுரண்டிக்கொள்ள முனைதல், மிகக் கேவலமானதாகும். தமிழரின் குருதியில் கும்மாளமடித்த காலங்களையெல்லாம் மறந்து- அவர்தம் கொஞ்சநஞ்ச பொருளாதாரவலுவையும் தங்கள் தேவைக்கேற்றவாறு காசாக்கிய கயமையை மறைத்து, இப்போது தமிழ்மாகாணங்களுக்கான இடைகால நிர்வாகசபையில் பன்முகத்துவ கட்சிகளின் பங்கை வலியுறுத்தும் இந்தப் பாசிசக் குழுக்கள் மக்களின் உயிர்வாழ்வின் அதிமுக்கியமான வாழ்விடங்களைச் சிங்கள ஆதிக்க ஜந்திரம் அதியுச்சப்பாதுகாப்பு வலையமாக்கி, இராணுவச் சூனியப் பிரதேசமாக்கிவைத்துள்ள அவலத்தைப்பற்றி பேசாது, நிர்வாகத்தில் தத்தம் பங்கை-பாகத்தைப் பற்றியானதான குரல்களைத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமையாக இனம்காட்ட முனைதல் எவ்வளவு நரித்தனமான தந்திரம்!

எமது வாழ்வு பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு, மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்கள் வாழும்போது, சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது. இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து, இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த்த தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு (தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காக) பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது! ஈழப் போராட்டத்துக்குப் பின்பான அரசியல் மக்களின் இருப்பிடங்களை விட்டுத்துரத்தியடித்தபோது, அவர்களின் வாழ்வாதாரத்தச் சொத்தைத் திருடிக் குவித்துள்ள செல்வங்களும் அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் ஆசையாக்கி விட்டுள்ளது. இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது. இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல கொலைகள் வீழ்ந்து வருகிறது. அரசியல் கொலைகள் எத்துணை அவசியமாக நமது நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது. இவற்றினூடாகக் காய் நகர்த்தித் தம் வலுவைத் தக்கவைக்க முற்படும் அதிகார மையங்கள் நம் இனத்தின் விடிவுக்கு வேட்டுவைத்தே இதைச் செய்கிறார்கள். இப்போது, 13வது அரைச் சனியன் நம்மை அண்டி வந்து, நமது மக்களைப் பூண்டோடு அழித்தே தீருவதெனக் கங்கணங்கட்டப் புலிகள் வாழ்விழந்து கிடக்க மக்கள் படும் துன்பமோ அரசியல் பகடையாக மாறுகிறது. என்ன மானங்கெட்ட தலையெழுத்து நமக்கு?

இந்த இழி அரசியல்சூழலுக்குள் சிக்குண்ட மக்கள் தம் உயிரைத் தினம் இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு, ஆயுதக் குழக்களின் அராஜகத்துக்கு இரையாக்கி வருகிறார்கள். மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?

மக்களின் பரிதாப நிலையும், புலிகளின் மக்கள்சார-மறுப்பு வியூகமும்:

மக்களை அணிதிரட்டி இத்தகையச் சதி அரசியல் சாணாக்கியத்தை-இந்தியாவின் அத்துமீறிய ஆதிக்க அரசியல் காய் நகர்த்தலை முறியடிக்கும் எந்த முன்னெடுப்பும் இதுவரைப் புலிகளால் செய்து முடிப்பதற்கு அவர்களுக்கும் மக்களுக்குமான மிக நெருங்கிய உறவு பாழ்பட்ட ஒடுக்குமுறையாக இருக்கும்போது நமது மக்களின் எதிபார்ப்பு-அபிலாசைகளைச் சிதைத்த அரசியலின் இன்றைய விடிவு இதுவா? இன்றைய இந்தத் தரணத்திலும் மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்பும் புலி இயக்கத்துள் நிகழவில்லை. இதற்கானவொரு "பொதுச் சூழலை"எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம், எனினும் இன்றைய சூழலில் இத்தகைவொரு போராட்ம் என்றுமில்லாவாறு அவசியமானது. எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம். எனவே, புலிகளுக்குள் மக்களின் குரல்கள் ஓங்கியொலித்தாகவேண்டும். இயக்கம் தனது கட்டமைப்பை "மக்களோடு மக்களாக நிற்கும்" பாரிய மறுசீரமைப்பைச் செய்தே ஆகவேண்டும். இல்லையேல் தொடரும் சிங்கள-இந்தியக்கூட்டுப் புலிகளை அழித்து நமது குழந்தைகளின் கைகளிலுள்ள ஆயுதத்தைமட்டுமல்ல அவர்களது பொன்னான உயிர்களையும் பறித்துவிடப் போகிறது.

அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு, தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது. இதன் மறுவிளைவாகத் தமிழ்க் குறுந்தேசியவாதம் தமிழ் மக்களை வேட்டையாடும் சூழல் நிரந்தரமாகப்படுகிறது.

இந்த முரண்பாட்டைத் தொடர்ந்து யுத்தங்களால் கூர்மைப்படுத்தும் இலங்கை ஆளும் வர்க்கமானது இலங்கையின் இறைமையை எப்போதோ இந்திய- அந்நிய எஜமானர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது. இதுதாம் இன்றைய அனைத்து முரண்பாட்டையும் சிக்கலுக்குள் மாட்டி தமிழ்த் தலைமைகளை அடிமைக் கூட்டாமாகவும், பிழைப்புவாதிகளாகவும் நிலைப்படுத்திய அரசியல் அவலமாக விரிகிறது. தமிழ் அரசியல் கிரிமனல்கள் 13வது சட்டத் திருத்தத்துக்குள் நமது சுயநிர்ணயவுரிமையை முடக்க எடுக்கும் அனைத்து நடவடிக்கையும் நமது மக்களின் தலைகளை முற்றுமுழுதாக உருட்டும் முயற்சியே. அப்பாவி மக்கள் அழிவுயுத்தால் தமது வாழ்விருப்பிடங்களையிழந்து, உயிரையிழந்து-உடமைகளையிழந்து, அகதிகளாக இடம்பெயர்ந்து வாழும்போது-அவர்களுக்கெந்த உதவிகளையும் செய்யமுடியாத போக்கிரி இயக்கங்கள், இந்திய ஆளும் வர்க்கங்கள், அரசியல்வாதிகள் வடக்குக் கிழக்குக்கான இடைகால நிர்வாக சபையில் முதல்வர்களாக உட்காருவதற்கு யாரு பாத்திரமுடையவர்கள் என்று திமிர்பிடித்து அலைகிறது. இத் திமிரோடான அரசியல், படுகொலைக் களத்தை ஈழமெங்கும் உருவாக்கும். அங்கே, இன்னும் எத்தனை மண்டையன் குழுக்கள் தோன்றுமோ அவ்வளவு மக்களின் அழிவு தொடரும். இது முழுமக்களையும் காயடித்து அவர்களின் சுயவெழிச்சியை முடக்கி மக்களை அடிமைகளாக்கும் அந்நிய சக்திகளுக்காக நம்மை நாம் அழிப்பதாக வரலாறு விரியும்.

இந்தியாவின் அழிவு அரசியலுக்கு முகவர்களாக மாறிய தமிழ் அரசியல் சாக்கடைகள், ஆயுதப் பயங்கரவாதிகள் மீதமுள்ள அப்பாவி மக்களின் சொத்தை சட்டப்படி கொள்ளையிடவும் தமது ஏவல்-கூலிப்படையளுக்கு நிர்வாகப் பலத்தைத் தேடுவது மக்களின் உரிமையல்லவே. இதற்கு எந்த சட்டச் சீர்திருத்தமும் தேவையில்லை. அப்பாவிச் சிறார்களை போரின் கொடுமையால் அநாதைகளாகி, பெற்றோர்களின்றிச் சிறார்கள் காப்பகங்களில் தமது வாழ்வைப் போக்கும்போதே அவர்களைக் குண்டுபோட்டுக் கொல்லும் வன்கொடுமைச் சிங்கள அரசை உலகத்துக்கு நியாயமான அரசாக இனம் காட்டும் அரசியலைத் தமிழ் மக்களின் விரோதிகள் செய்து முடிக்கும் தரணமே வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபையாகும்! இந்தத் துரோகமானது அன்று மலையகத் தமிழ் மக்களை நாடற்றவர்களாக்கியது. இன்று வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களையும் அதே நிலைமைக்குள் இட்டுச் செல்லும் அரசியலை இந்தியாவின் ஆலோசனையின்படி செய்து முடிக்கும் புலித்தனமான அரசியலாகப் புலி எதிப்புக் கூட்டம் நடாத்தி முடித்தல் நமது சாபக்கேடா அல்லது நமது மக்களை ஒடுக்கிய புலிகளின் பாதகமான அரசியல் நீட்சியின் விளைவா?

No comments: