தமிழ் அரங்கம்

Saturday, February 2, 2008

டம்புல்லக் குண்டுவெடிப்பும் அடுத்த நகர்வுகளும்



ப. வி. ஸ்ரீரங்கன்.
02. 02. 2008

ம்புல்ல அரச பண்ணையை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். அது, ஒரு அழகான விவசாயப்பண்ணை! இலங்கையின் அழகானவொரு சிறு நகரம். இங்கே, இன்று மனிதர்கள் குண்டுவெடிப்பால் இறக்கின்றார்கள்! வன்னியில் மனிதர்கள். . . யாழ்ப்பாணத்தில் மனிதர்கள். . . மன்னாரில் மனிதர்கள். . . மொனராக்கலவில் மனிதர்கள். . . டம்புல்லவில் மனிதர்கள். . . இலங்கை பூராகவும் கொலைக் களமாகிவிட்டது!

சிங்கள ஆளும் வர்க்கத்தின் அடிவருடி இராஜபக்ஷவே இலங்கையின் மிகப்பெரும் பண்ணைக்காரன்-கொடுங்கோலனுக்கு நிகரான ஆட்சியை நிலைப்படுத்த அன்னியத் தயவை நாடி நாட்டையே நாசமாக்கி. . . அப்பாவிகளைக் கொல்லும் யுத்த முன்னெடுப்பைச் சிங்கள-தமிழ்த் தரப்புகளிடம் தோற்றிவைத்துத் தனது ஆட்சியை இனவாதத்தூடாகக் கட்டி வளர்த்துவிட்டுள்ளான். பாவி! இதற்குடந்தையாக எதிர்கட்சிகள், இயக்கங்கள் தம்மாலான அனைத்து ஒத்துழைப்பையும் அரசியல் தீர்வின் பெயராலும் இந்தியாவின்-இலங்கையின் நலத்தின் பெயராலும் செய்து மக்களைப் பலியெடுத்து வருகிறார்கள்!



எனது பால்யக் காலத்தில் டம்புல்லையைத் தரிசித்திருக்கிறேன்.

டம்புல்ல மக்கள் மிக அழகான மனதுடையவர்கள்,

தமது கிராமத்தைப் போலவே-நகரத்தைப் போலவே!

எனது குஞ்சியய்யா இராமச்சந்திரன் டம்புல்ல பார்மில் தலைமை அதிகாரியாக இருந்தார். அமெரிக்கக் கல்வி, அவரை அப்பண்ணைக்கு அதிகாரமிக்கத் தலைமைக்குத் தகமையாக்கியது. அரச ஜீப் வண்டியில் தம்புல்லக் கிராமத்தைச் சுற்றிப் பார்த்த எண்பதின் முற்பகுதி மிக அழகானது-அமைதியானது! அப்போதைய மனிதர்களும் அமைதியாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இன்று, இனவாதம் என்றுமில்லாதவாறு வளர்த்தெடுக்கப்பட்டு மனிதர்கள் கொலைகளை ஆதரிக்கும் மனநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

என்னவொரு இலங்கை?

அழிவு அரசியலால் அற்புதமாக வாழ்ந்த இனங்கள் பிளவுபட்டுப் போகிறார்கள்!

தென்னாசியவிலேயே அதிக ஜனநாயகப்பண்பைக்கொண்டிருந்த இலங்கை-இன்று, இராணுவச் சர்வதிகாரத்துக்குள் உள்வாங்கப்பட்டு அராஜகத் தேசமாக விரிந்து கிடக்கிறது. இது, தமிழரை, இஸ்லாமியரை, சிங்களவரை மட்டுமல்ல இலங்கையின் அற்புதமான சூழலையே அழித்து வருகிறது! அதீத யுத்த முனைப்புகள் கொட்டும் குண்டுகள் இயற்கை வளங்களை அற்புதமான காடுகளைக்கூட நாசமாக்கிச் சுடுகாடாக மாற்றுகிறது. தமிழருக்குப் பசி தீர்த்த பனைகளையே இந்த யுத்தம் அதிகமாக அழித்துத் தமிழரின் வயிற்றைத் தொடர்ந்து காயப்போடுகிறது! இப்போது, மக்களின் தலைகளை உருட்டிவிடும் குண்டுகளை இடம்வலம் தெரியாதபடி எங்கும் புதைத்தபடி நரவேட்டையாடுகிறது!

மனிதர்கள், தாம் சாவதற்கான ஒவ்வொரு நிமிடத்தையும் கண்ணெதிரே காணவேண்டிய சூழலை இலங்கையெங்கும் தரிசித்தபடி. . .

இலங்கையின் எந்தப் பகுதியும் இனி அமைதியானவொரு வாழ்சூழலை இலங்கை மக்களுக்குத் தரமுடியாது!

இலங்கைத் தேசம் மக்களை வருத்தும் ஆட்சிக்குள் நிலைப்பட்ட சந்தர்ப்பம் தற்செயலானது அல்ல! இது திட்டமிடப்பட்டு வழி நடாத்தப்படுகிறது. இலங்கையின் கட்சிகள் இலங்கையை ஆளத் தகுதியற்றதாக்கப்பட்டு அன்னிய ஐ. நா. படைகள் இலங்கைக்குள் கால் வைக்கும் சூழலுக்கு வித்திடப்படுகிறது! அதற்காகவே அப்பாவி மக்கள் தினமும் கொல்லப்படுகிறார்கள். தமிழ், சிங்கள இனங்களுக்குள் படுகொலையைச் செய்யும் ஒவ்வொரு குண்டுகளும் அன்னியத் துருப்புகள் இலங்கையைத் தளமாக்க முனையும் அரசியலோடு சம்பந்தப்பட்டது.



எந்த அமைப்பு-குழு, மாபியாக்கள்-அரசுகள் இதற்குப் பின்னால் இருக்கிறார்கள்?

இலங்கையின் மக்கள் பசிக்கும், பட்டுணிக்கும் நோய்க்கும் முகங்கொடுத்த காலம்போய், இப்போது யுத்தக் கிரிமனல்களின் கொலைகளுக்கும், குண்டுகளுக்கும் தமது அன்றாட வாழ்வைச் சிதைக்கும் பயங்கர வன்முறைக்குள் உயிரைவிட வேண்டிய அரசியலை எந்த வர்க்கம் உற்பத்தியாக்கியது?

பாகிஸ்தான் அதிபர் முஸ்ராப் இலங்கையின் பயங்காரவாதத்தை அழிக்க உதவுவதாகச் சொல்கிறார். தனது தேசத்தின் அதீத பயங்கரவாதத்தைத் தானே செய்தபடி!

நாம் அரேபியக் குறைவிருத்தி இனமோ அல்லது பாகிஸ்தானின் கல்வியறிவற்ற மதஅடிப்படைவாத மக்கள் தொகையைக் கொண்ட தேசத்தவர்களில்லை! அன்றிச் சினிமாவே-இந்தியத் தேசியமே உலகமெனவெண்ணும் இந்தியப் பெருங்குடிகளோ அல்ல!

எமக்கென்றொரு வரலாறுண்டு.

மிகவுயர்ந்த மனித நடத்தையின்-ஜனநாயக-வாழ்வு விழுமியத்துக்கு இலங்கை மக்கள் சொந்தக்காரர்கள்.

எங்கள் தேசம் அடிப்படைவாதக் கிரிமினல்களை அதிகமாகக்கொண்டிருக்கவில்லை! ஆனால், இன்றைக்கு பாகிஸ்தானுக்கு நிகராக இத்தேசம் பயங்கரவாதிகளால் நிறைந்து சுடுகாடாக மாறுகிறது. சிங்கள இராணுவம் முழுமையான பயங்கரவாதிகளால் வழி நடாத்தப்படுகிறது. தமிழ் விடுதலை இயக்கங்கள் அன்னிய அரசுகளுக்காகக் கண்மண் தெரியாத கொலைக்காரர்களாக மாற்றப்பட்டபின் சிங்கள வன் கொடுமை இராணுவத்தின் இருப்பு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது! சிங்களப் பயங்கரவாத இராணுவத்தின் நிலைப்பு, இலங்கைத் தேசம் முழுவதையும் அதன் பரவலான அடக்குமுறைக்குள் உட்படுத்தி இலங்கையிலிருந்த அனைத்து மனித விழுமியங்களும் இல்லாதாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஊடகங்கள் சிங்களப் பாசிச இராணுவத்தைத் தேசத்தைக் காக்கும் படையணியாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்து, அதன் இருப்புக்கும், நிலைப்புக்கும், அன்னியச் சேவைக்கும் மக்களிடம் ஆதரவைத் தேடித் தருகின்றன.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வலுவான அடக்குமுறைகள் நிகழும்போது இயக்கவாதம் மேலோங்கியும், குறிப்பிட்ட அமைப்பைத் தொடர்ந்து ஏகபோகமாக நிலைப்படுத்தவும் இத்தகைய குண்டுதாக்குதல்கள் தமிழ் மக்கள் மத்தியில் நடாத்தப்படுகிறது. இது மக்களைத் தொடர்ந்து இனவாதத் தீயில் சிக்க வைத்துத் தொடர்ந்து இனவாதிகளாகவும், மக்களினங்களுக்குள் பரபஸ்பர இணக்கவுறவைத் திட்டமிட்டு அழிப்பதாகவும் இருக்கிறது. இத்தகையவொரு சூழலே பற்பல இயக்க-கட்சி அரசியலுக்கு விரும்பத் தக்கதாக இருக்கிறது. மக்கள் நலனற்ற அடியாட்படை அரசியலுக்கு இவையே கதியாகவும் இருக்கிறது.

இதை முடிவுக்குக்கொணர்ந்து, மக்களின் பரஸ்பர நட்போடும், உறவோடும் இலங்கையில் நியாயமான தீர்வை எட்டி இலங்கையில் ஜனநாயக விழுமியங்களை மீளத் தகவமைக்கும் அரசியல் நடைமுறைகளை எங்ஙனம் கட்டியொழுப்புவது அவசியமோ, அதேயளவு இனங்களுக்கிடையிலான சுயநிர்ணயவுரிமைசார்ந்த சுயாதிக்கம் அவசியமாக இருக்கிறது. இதை மறுத்தபடி இலங்கையில் ஜனநாயக விழுமியங்கள் குறித்துப் பேசுபவர்கள் மொத்தத்தில் இலங்கையின் அழிவு அரசியலையே நிலைப்படுத்த முனைகிறார்கள்.

இலங்கையின் இன்றைய சூழல் அன்னிய நலன்களின் அதீத ஆர்வங்களுக்கான செயற்கையான சூழலாகும்.

மக்கள் தமது வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பப்படும் சூழல் மிகத் தற்காலிகமானவை. மக்களை அதிலிருந்து மீண்டுவர இன்றைய கட்சிசார்-அரச, இயக்கசார் ஊடகங்கள் விடுவதாகவில்லை! ஊடகங்களின் தனியுடமையானது இன்றைய இந்த அவலக் கொலைகளுக்குத் தீனிபோடுவதாகவே இருக்கிறது. பணக்கார-அதிகாரக் குடும்பங்கள் ஒவ்வொன்றிடமும் இன்றைக்குத் தொடர்பூடகங்கள் தொலைக்காட்சியாகவும், வானொலியாகவும், பத்திரிகையாகவும் இருக்கும்போது மக்களைக் குரோதவாதிகளாகவும், இனவாதிகளாகம் தமது நலன்களைச் சார்ந்து உருவாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் இணையங்களுடாகவே மக்களை ஒருமைப்படுத்தும் பரப்புரைகளைச் செய்யக்கூடியதாக இருக்கிறது. எனினும், இணையச் சஞ்சிகைகள் பரந்தபட்ட மக்களை இன்னும் அண்மிக்கவில்லை! இது, மக்களைக் கூறுபோட்டுக் கொலை செய்யும் அரசியலை முன்னெடுக்கும் அன்னிய-உள்நாட்டு மாபியாக்களை நம்பி மக்கள் கொலைப்பட்டுப் போகும் விட்டில் பூச்சிகளாக இலங்கை மக்களின் வாழ் சூழல் மாற்றப்பட்டதையே இன்றைய தம்புல, மன்னார், மொனராக்கல, யாழ்ப்பாணக் குண்டுவெடிப்புகள் சொல்கின்றன-மெய்பிக்கின்றன!

இதிலிருந்து இலங்கையை மீட்பதென்பது ஒரு தசாப்பதகாலப் போராட்டமாகவே இருக்கப் போகிறது.

இதற்குத் தகமையுடைய முற்போக்கு சக்திகளின் செயற்பாடுகள் மிக மெலிதானதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது. இது, மக்களுக்கு விடிவைத் தரும் செயற்பாடுகளைச் செய்வதற்குகந்த முனைப்பைக் கொண்டிருக்கவில்லை!

எனவே, அன்னியப்படைகளின் வருகைக்கு ஜ. நா. ஒப்புதல் வழங்க, இலங்கை இன்னொரு அவ்கானிஸ்தானாக மாறும். அங்கே, காலாகாலத்துக்குமான ஒடுக்குமுறை உழைப்பவர்களின் அரச-இயக்க முன்னெடுப்புகளைத் தடுத்தபடி மாறிவரும் இந்தியத் துணைக்கண்ட ஆளும் வர்க்க நலன்களை மேற்குலகத்தோடு இணைத்தபடி இன்னும் வளத்தெடுக்கும் ஒரு அராஜகச் சர்வதிகார அரச-கட்சி இராணுவத் தன்மையிலான ஆட்சியை நமது தேசங்களுக்குத் தீர்வாக உலகம் செய்து முடிக்கும்.

இதற்குத்தான் ஈழப்போராட்டம் வழிவகுத்து நடாத்தப்பட்டது? தூ. . .

No comments: