தமிழ் அரங்கம்

Saturday, April 19, 2008

ஒரிசா: பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக்காடு


ஒரிசா :
பன்னாட்டு முதலாளிகளின்
வேட்டைக்காடு




ரிசா மாநிலத்திலுள்ள காசிபுர் வட்டத்தைச் சேர்ந்தவர் சரோஜ் மோகந்தி. இவர், கடந்த ஜூலை 14, 2007 அன்று காசிபுருக்குச் சென்று கொண்டிருந்தபொழுது, போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்டு பல்வேறு கிரிமினல் குற்றங்கள், ஒரிசா போலீசாரால் சுமத்தப்பட்டுள்ளன.

சரோஜ் மோகந்தியின் கைது, பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்பது போன்ற கதையல்ல. சரோஜ் மோகந்தி, ""அன்வேசா'' என்ற ஒரிய மொழி பத்திரிகையின் ஆசிரியர்; கவிஞர்; பழங்குடி இன மக்களின் நலனுக்காகப் போராடி வரும் ""பி.எஸ்.எஸ்.பி.'' என்ற அமைப்பின் செயல் வீரர். இப்படிபட்ட பின்னணி கொண்ட சரோஜ் மோகந்தி மீது ஒரிசா போலீசும், அம்மாநில அரசும் வன்மத்தோடு பல்வேறு கிரிமினல் வழக்குகளைப் போட்டு, கடந்த ஏழெட்டு மாதங்களாகப் பிணைகூட வழங்காமல், சிறையில் அடைத்து வைத்திருப்பதற்குக் காரணம், அவர், பிர்லா குழுமம் காசிபுர் பகுதியில் அமைத்துவரும் ""உத்கல் அலுமினா இண்டர்நேஷனல் லிட்.'' என்ற அலுமினிய உருக்காலையைத் தீவிரமாக எதிர்த்துப் போராடி வருகிறார் என்பதுதான்.

தரகு முதலாளி டாடாவுக்காக சிங்கூரிலும்; பன்னாட்டு முதலாளி சலீமுக்காக நந்திகிராமத்திலும் நடந்த அரசு பயங்கரவாதத் தாக்குதல்கள் அம்பலமான அளவிற்கு, ஒரிசாவில் தரகு மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நலன்களைக் காப்பதற்காக நடந்துவரும் அரசின் அடக்குமுறைகள் வெளியே தெரிவதில்லை. ஒரிசாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் இருக்கும் பழங்குடி இன மக்கள் மீதான தாக்குதல்கள், அவர்களின் மலை கிராமங்களுக்குள்ளேயே அமுக்கப்பட்டு விடுகின்றன. அதையும் மீறி வெளியே கசிந்துள்ள அடக்குமுறைகளுள் ஒன்றுதான் சரோஜ் மோகந்தியின் கைதும், அவர் மீதான பொய் வழக்குகளும்.

சரோஜ் மோகந்தி மட்டுமல்ல, காசிபுர் வட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், பிர்லாவின் அலுமினிய ஆலையை எதிர்த்துப் போராடிய ஒரே காரணத்திற்காக, பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

· ஜஜ்புர் மாவட்டத்திலுள்ள கலிங்கா நகர் தொழிற்பேட்டையில் அமையவுள்ள டாடாவின் இரும்பு உருக்காலைக்குப் பழங்குடி இன மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து மே 9, 2005 அன்று பழங்குடி மக்கள் மிகப் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவது என்ற போர்வையில் ஒரிசா போலீசார் கிராமம் கிராமமாகப் புகுந்து தடியடி நடத்தினர். இத்தடியடியில் வயதான முதியவர் ஒருவரும், இரண்டு பழங்குடி இனக் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

இதன்பிறகு, டாடா ஆலைக்காகப் பழங்குடி இன மக்களின் நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்படுவதை எதிர்த்து நடந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக, சனவரி 2, 2006 அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

· காளஹந்தி மாவட்டத்தில், கோண்டு பழங்குடி இன மக்கள் வசித்து வரும் நியம்கிரி மலைப் பகுதியில், இங்கிலாந்தைச் சேர்ந்த வேதாந்தா நிறுவனம் இரும்பு உருக்காலை அமைத்து வருகிறது. பல்வேறு காட்டு விலங்குகள் / உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் உறைவிடமாக இருக்கும் இம்மலைப் பகுதியில் இரும்பு உருக்காலை அமைவதை எதிர்த்துப் போராடி வரும் பழங்குடி இன மக்களை ஒடுக்குவதற்கு, வேதாந்தா நிறுவனமே ஒரு குண்டர் படையைப் பராமரித்து வருகிறது.

இக்குண்டர்படையின் அட்டூழியங்கள் பற்றி போலீசிடம் புகார் கொடுக்க கோண்டு பழங்குடிஇன மக்கள் ஊர்வலமாகச் சென்ற பொழுது, அந்தக் குண்டர்கள் லஞ்சிகடா போலீசு நிலையம் முன்பே பழங்குடி இன மக்களைத் தடுத்து நிறுத்தியதோடு, போலீசாரின் கண் முன்னாலேயே அவர்களை அடித்தும் துரத்தினர்.

வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக ஏப்ரல் 2004இல் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒரே காரணத்திற்காக, நியம்கிரி மலை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த 14 பேர் மீது பொதுச் சொத்தைத் தீ வைத்துக் கொளுத்தியதாகப் பொய் வழக்குப் போடப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நியம்கிரி மலை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரான சுக்ரு மஜ்ஹி உள்ளிட்டு மூன்று பழங்குடியினர் வேதாந்தா நிறுவனத்தின் குண்டர்படையால் 2005ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர். எனினும், இன்றுவரை வேதாந்தா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீதோ, அக்குண்டர்கள் மீதோ ஒரிசா போலீசார் ஒரு ""பெட்டி கேஸ்'' கூடப் போடவில்லை.

· ஒரிசா மாநில அரசு, தென்கொரிய நிறுவனமான ""போஸ்கோ''வின் வளர்ப்புப் பிராணியாகச் செயல்பட்டு வருவது நாடே அறிந்த உண்மை. சுற்றுப்புறச் சூழல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், போஸ்கோ தொழில் தொடங்க அனுமதிப்பதற்காகத் தடையில்லாச் சான்றிதழ் வழங்கும் பொருட்டு, ஏப்.15, 2007 அன்று ""மக்கள் விசாரணை''யொன்றை நடத்தினார்கள். இவ்விசாரணை நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே, ஒரிசா ஆயுதப்படையைச் சேர்ந்த 19 ""பட்டாலியன்கள்'' கிராமங்களில் குவிக்கப்பட்டு, இடைஞ்சல் ஏற்படுத்தும் நபர்களைத் தேடும் வேட்டை நடத்தப்பட்டு, பழங்குடி இன மக்கள் பீதியூட்டப்பட்டனர். இது போதாதென்று, மக்கள் விசாரணையும், போஸ்கோ ஆலை அமையவுள்ள இடத்தில் இருந்து 20 கி.மீ. தள்ளி குஜங்க் என்ற இடத்தில் போலீசின் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது. இந்த ஆலையின் ""ஆதரவாளர்கள்'' தரும் புகாரின் அடிப்படையில், ஆலையை எதிர்க்கும் பழங்குடி இன மக்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்படுவதற்கு நீதிமன்றங்களும் ஒத்தூதுகின்றன.

· நேபாஸ் இரும்பு உருக்காலை அதிகார வர்க்கத்தின் துணையோடு, சுந்தர்கர் மாவட்டத்தில் குவார்முண்டா பகுதியில் பாசன வசதிமிக்க விளைநிலங்களை வளைத்துப் போட முயன்றதை எதிர்த்து, மார்ச் 24, 2006 அன்று, 4,000 பேர் கலந்து கொண்ட பேரணி நடந்தது அப்பொழுது போலீசுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த ஆலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட போலீசு, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மிகக் கொடூரமான தடியடி நடத்தியதோடு, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு 118 பேரை மறுநாள் கைது செய்தது. திருட்டு, சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்டு, பிணையில் வெளியே வர முடியாத பொய் வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டன.

· காந்தாமர்தன் எனுமிடத்தில் அமையவுள்ள தனியார் அலுமினிய உருக்காலைக்குத் தேவைப்படும் தண்ணீரை வழங்குவதற்காக ஒரிசா மாநில அரசு போலாங்கிர் மாவட்டத்தில் கீழ் சுக்தேல் அணையைக் கட்டி வருகிறது. இந்த அணையால் மூழ்கப் போகும் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், அணைக்கு அடிக்கல் நாட்டப்படுவதை எதிர்த்து மே 11, 2005 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மறுநாள், கிராமங்களுக்குள் புகுந்த போலீசார், பொதுமக்களின் மீது தடியடி நடத்தி, அவர்களின் அற்ப உடைமைகளையும் சேதப்படுத்தியதோடு, 70 விவசாயிகளைக் கைது செய்து சிறையில் தள்ளினர்.

· காசிபுர் பகுதியைச் சேர்ந்த லத்ரா மஜ்ஹி, பிப். 2005இல், ஒரிசா போலீசாரால் திடீரெனக் கைது செய்யப்பட்டார். காசிபுர் பகுதியில் நடந்து வரும் போராட்டங்களில் ஆர்வமாகக் கலந்து கொண்டு வருகிறார் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை இழிவுபடுத்தும் தீய நோக்கத்தோடு, அவர் மீது இரண்டு திருட்டு வழக்குகள் போடப்பட்டன. நீதிமன்றம் இவ்வழக்கில் இவருக்குப் பிணை வழங்கவே ஆறு மாத காலம் எடுத்துக் கொண்டது. வழக்கு விசாரணையின்பொழுது, இது போலீசார் புனைந்த பொய் வழக்கு என்பதும், போலீசு தரப்பு சாட்சிகள் பொய் சாட்சிகள் என்பதும் அம்பலமான பிறகும், நீதிமன்றம் இந்த இரண்டு திருட்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்ய மறுத்து விட்டது. லத்ரா மஜ்ஹியை மட்டும் விடுதலை செய்த நீதிமன்றம், அவரோடு சேர்த்து கைது செய்யப்பட்ட மீதி ஆறு பேரின் மீதும் போடப்பட்ட திருட்டு வழக்குகளை ""ஆய்ந்து'' கொண்டிருக்கிறது.

கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக ஒரிசா மக்களின் மீது ஏவிவிடப்படும் இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலைப் பட்டியல் போட்டு மாளாது. ""மக்களாட்சி'' என்ற முகமூடியை, இப்பொழுது ஒரிசா மாநில அரசு சீண்டுவதேயில்லை. பழங்குடி இன மக்களின் பூமியில் சுரங்கங்களும், உருக்காலைகளும் அமைவதை எதிர்ப்பவர்களைச் சுட்டுக் கொன்றால்தான், பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளினால்தான் ""தொழில் வளர்ச்சி''யைச் சாதிக்க முடியும் என்று கூறி, இந்த அடக்குமுறையை நியாயப்படுத்துகிறது.

உங்களுக்கு நக்சலைட்டுகள் யாரென்று கூடத் தெரிந்திருக்க வேண்டியதில்லை; உங்களைத் தீவிரவாதி என்று முத்திரை குத்த, உங்கள் இடுப்பில் துப்பாக்கி இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தத் ""தொழில் வளர்ச்சி''யை எதிர்த்தாலே போதும், உங்களை, நக்சலைட்டுகள், சமூக விரோதிகள், தேச விரோதிகள், தீவிரவாதிகள் என முத்திரைக் குத்தித் தண்டிக்க மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும் கையில் குண்டாந்தடிகளோடு அலைகிறார்கள்.

""ஒரிசாவில் அமையவுள்ள சுரங்கங்களிலும் உருக்காலைகளிலும் 50,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றாலும், இதனால் ஏறத்தாழ 2.5 இலட்சம் குடும்பங்கள் (10 இலட்சம் மக்கள்) தங்கள் கிராமங்களை, நிலங்களை இழந்து இடம் பெயர வேண்டியிருக்கும்'' என மாநில அரசே ஒப்புக் கொள்கிறது. எனவே, இத்தகைய ""தொழிற் கொள்கையால்'' ஒரிசாவில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை பெருகுகிறதோ இல்லையோ, சிறைச்சாலைகளின் எண்ணிக்கை உயர வாய்ப்பிருக்கிறது.

ஈராக் நாட்டில் அமெரிக்கப் படைகள் நுழைந்திருப்பதால், அந்த ஆக்கிரமிப்பு வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரிசாவிலோ, டாடா, பிர்லா, ஜிந்தால், வேதாந்தா, போஸ்கோ எனத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் இரும்பு, பாக்ஸைட் போன்ற தாது வளங்களைச் சூறையாடுவதற்காக, பழங்குடி இன மக்களின் நிலங்களையும்; காடுகள், மலைகள் போன்ற பொதுச் சொத்துக்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர். இத்தகைய ஆக்கிரமிப்பு ஒரிசாவில் மட்டுமின்றி, இந்தியாவெங்கிலும் ""வளர்ச்சி'' என்ற பெயரில் மூடி மறைக்கப்படுகிறது.


· குப்பன்


No comments: