தமிழ் அரங்கம்

Wednesday, April 16, 2008

தென்காசி குண்டு வெடிப்பு: இந்து முன்னணியின் கிரிமினல் முகம்


தென்காசி குண்டு வெடிப்பு:
இந்து முன்னணியின் கிரிமினல் முகம்


ஜெர்மனியின் நாடாளுமன்றக் கட்டிடத்துக்குத் தாமே தீ வைத்துக் கொளுத்திவிட்டு, அப்பழியை கம்யூனிஸ்டுகள் மீது சுமத்தியது, ஆரிய இனவெறிப் பிடித்த பாசிச இட்லர் கும்பல். அது பழைய வரலாறு அல்ல; அந்த வரலாறு இன்னமும் தொடர்கிறது. பாசிச இட்லரின் வாரிசுகள் இந்து முன்னணி என்ற பெயரில் அதே உத்தியுடன் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திவிட்டு, பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள். இட்லர் நடத்திய பயங்கரவாதச் சதி உலகெங்கும் அம்பலமானதைப் போல, இப்போது இந்து முன்னணி நடத்திய பயங்கரவாதச் சதியும் தென்காசி வெடிகுண்டு விவகாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நில உரிமை தொடர்பான தகராறில், தென்காசியைச் சேர்ந்த இந்து முன்னணி தலைவரான குமார் பாண்டியன், கடந்த 2006 டிசம்பரில் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் முஸ்லிம்களாக இருந்ததால், மதக் கலவரத்தைத் தூண்டிவிட இந்து முன்னணியும், இந்து மதவெறிக் கும்பலும் தீவிரமாக முயற்சித்தன. ஆனால் அவற்றின் எத்தணிப்புகள் அங்கே வெற்றி பெறவில்லை. இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் பிணையில் இருந்து கொண்டு கையெழுத்துப் போட வந்தபோது, 2007 ஆகஸ்டில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டு குமார் பாண்டியனின் சகோதரர்கள் உட்பட மூவரும், முஸ்லீம்கள் மூவரும் ஒரே நேரத்தில் கொலையுண்டனர். அதைத் தொடர்ந்து இந்துமத வெறிக் கும்பல் தென்காசியை முற்றுகையிட்டு, என்னென்னவோ செய்து பார்த்தது. ஆனாலும், அதன் முயற்சிகள் பலிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த ஜனவரியில் அதாவது "குடியரசு' தினத்துக்கு இரு நாட்களுக்கு முன், தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இரண்டு ""பைப்'' வெடிகுண்டுகள் வெடித்தன. தென்காசி பேருந்து நிலையத்திலும் இதேபோன்ற குண்டுகள் வெடித்தன. முன்னிரவு நேரத்தில் நடந்த இக்குண்டு வெடிப்புகளில் ஓரிருவருக்குக் காயங்கள் ஏற்பட்ட போதிலும், உயிர்சேதங்கள் நிகழவில்லை.

குண்டு வெடிப்புகள் நடந்தவுடனேயே, ஆர்.எஸ்.எஸ். இன் மாநிலத் தலைவரான மாரிமுத்து, தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளும் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும், இவர்கள்தாம் இக்குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் என்றும், இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தவறினால், மாநிலம் தழுவிய தீவிர போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்தார். குண்டு வெடிப்புகளுக்கு எதிராக பா.ஜ.க. அப்பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதோடு, முஸ்லீம்களுக்கு எதிரான கீழ்த்தரமான மதவெறிப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டது.

குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வந்த போலீசார், கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று மூவரைக் கைது செய்தனர். இவர்கள், இந்துமத வெறியர்கள் குற்றம் சாட்டியதுபோல பாகிஸ்தானிலிருந்து கூலிக்கு அனுப்பப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளோ, மாவோயிஸ்டுகளோ அல்ல. பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே, இக்குண்டு வைப்புகளில் ஈடுபட்டவர்கள் இந்து முன்னணி பயங்கரவாதிகள்தாம்!

நிலத்தகராறில் கொலையுண்ட குமார் பாண்டியனின் அண்ணன் ரவி பாண்டியன், கே.டி.சி.குமார், நாராயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகளைக் கைது செய்துள்ள போலீசார் விசாரணைக்குப் பின் பாலமுருகன், முருகன் எனுமிருவரையும் கைது செய்துள்ளனர்.

ரவி பாண்டியனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ""தனது வீட்டில் அடுத்தடுத்து 3 பேர் பலியான போதிலும் இந்துக்களிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை; போதிய ஆதரவும் கிடைக்கவில்லை. இப்படியொரு குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தால், இந்துக்கள் ஒன்றாகச் சேர்வார்கள் என்ற நோக்கத்தில் இக்குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டதாக'' அவன் தெரிவித்துள்ளான்.

கைது செய்யப்பட்டுள்ள ரவிபாண்டியனுக்குச் சொந்தமான கேபிள் டி.வி. அறையில் வைத்து இந்த ""பைப்'' குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தென்காசியில் 6 பேர் கொல்லப்பட்ட நிகழ்ச்சிக்கு முன்னரே, அதாவது கடந்த ஆண்டு ஜூலையிலிருந்தே இக்குண்டு தயாரிப்பு வேலையில் இப்பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். மின்தடையை ஏற்படுத்தி குண்டுகளைப் பொருத்திவிட்டு, மீண்டும் மின் இணைப்பு கொடுத்தால் 20 நொடிகளில் குண்டுகள் வெடிக்கும் வகையில் தொழில்நுட்பத் தேர்ச்சியுடன் இக்குண்டுகளைத் தயாரித்துள்ளனர். இதே தொழில்நுட்பத்தைக் கொண்ட ""பைப்'' வெடிகுண்டுகள் தாம், ஐதராபாத் தொடர்குண்டு வெடிப்புகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் நாடு தழுவிய வலைப்பின்னலைக் கொண்டு நவீன தொழில்நுட்பத்துடன் இந்துவெறி பயங்கரவாதிகள் குண்டு வைப்புகளில் ஈடுபட்டு வருவதை நிரூபித்துக் காட்டுகின்றன.

ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலம் நாண்டெட் நகரில் குண்டு தயாரிக்கும்போது விபத்தில் சிக்கிய இந்துவெறி பயங்கரவாதிகள் அளித்த வாக்குமூலங்களும், தற்போது தென்காசி குண்டு வெடிப்புச் சம்பவத்தையொட்டி கைதாகியுள்ள இந்து முன்னணி பயங்கரவாதிகள் அளித்துள்ள வாக்குமூலங்களும், அவை எத்தகையதொரு பாசிச பயங்கரவாத வலைப்பின்னலைக் கொண்ட அமைப்புகள் என்பதை மீண்டும் மெய்ப்பித்துக் காட்டியுள்ளன. இனி, இப்பாசிச பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்து, அவ்வமைப்பினரைச் சிறையிலடைத்துத் தண்டிப்பதற்கான மக்கள் திரள் போராட்டங்களே அவசியமாகியுள்ளது.

· கவி

No comments: