தமிழ் அரங்கம்

Wednesday, May 28, 2008

சி.ஐ.டி.யு. : தொழிற்சங்கமா? குண்டர் படையா?

கொல்கத்தா நகரைச் சேர்ந்த மின்சார ஒப்பந்தத் தொழிலாளர்கள், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்வதாக இருந்தனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காகத் துண்டுப் பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 லாரிகளில் ஒரு கும்பல் வந்திறங்கியது. பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கøக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. இரத்தம் சொட்டச் சொட்ட அவர்கள் சிதறி ஓடியும், அவர்களைத் துரத்திக் கொலைவெறியுடன் தாக்கியது.

இத்தாக்குதலில் ராம் பர்வேஸ்சிங் என்ற தொழிலாளி உயிரிழந்தார். 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் இப்படி ஈவிரக்கமின்றி ஒருவரை அடித்துக் கொன்றது ஏதோ ரவுடிக் கும்பல் அல்ல. தொழிலாளி வர்க்கத் தோழனாகத் தன்னைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் சி.ஐ.டி.யு.வின் குண்டர்கள்தான் அவர்கள்.

கொல்கத்தாவுக்கும், அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் மின்சாரம் வழங்கும் ""கல்கத்தா மின் விநியோகக் கழகத்து''க்காக ஒப்பந்த அடிப்படையில் மின்கம்பிகள் பதிக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் இந்தத் தொழிலாளர்களை, அரசு மின்சார ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கியக் கோரிக்கை. உயர் அழுத்த மின்கம்பிகளை நிலத்தடியில் புதைக்க மண்ணைத் தோண்டும் இவர்கள் தவறுதலாக ஏற்கெனவே பதிக்கப்பட்டுள்ள மின்கம்பிகளைத் தொட்டுவிட நேரும்போது கருகிச் சாகும் அபாயம் மிக்க வேலையைச் செய்பவர்கள். இவர்களை மின்சாரத் தொழிலாளர்களாக அங்கீகரித்தால் மட்டுமே தினசரி ஊதியமாக ரூ. 225ம், பணிக்காலத்தில் உயிர் இழப்பின் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சமும் இவர்களுக்குக் கிடைக்கும். இதுவரை அவர்களை அரசு, கட்டுமானத் தொழிலாளர்களாக மட்டுமே அங்கீகரித்து வந்துள்ளதால், இப்போது கிடைக்கும் தினக்கூலி ரூ. 110 மட்டுமே. இழப்பீட்டுத் தொகையோ ரூ. 1.5 லட்சம்தான்.
.

No comments: