தமிழ் அரங்கம்

Monday, October 3, 2005

மலையக மக்கள்

மற்றைய சமூகங்களும்

அடிமைகளாகவே வாழ்ந்த இந்த மக்களை அடிமைகளாக நிலைநிறுத்தவும், கண்காணிக்கவும் சாதிய அடிமைப் பிளவை பயன்படுத்திய பிரிட்டிசார், உயர் சாதிகளைச் சேர்ந்தோரையே கங்காணியாக நியமித்தனர். அதாவது நிலப்பிரபுத்துவ மத அடிப்படைவாத சாதிய வடிவத்தையே மலையக மக்கள் மேல் நிலைநிறுத்தினர். இதையே மலையக மக்கள் திரட்டிய போது ஒடுக்கப்பட்டவற்றை பாடல்கள் ஊடாக பாடத் தயங்கவில்லை.

"கண்டி கண்டி எங்காதீங்கா
கண்டி பேச்சு பேசாதீங்கசாதி
கெட்ட கண்டியிலே
சங்கிலியன் கங்காணி"

மலையக மக்களை கண்காணிக்கவும் சுரண்டவும் இடைத்தட்டாக கங்காணிகள் என்ற புதிய வர்க்கம் உருவானது. இவர்கள் உயர்சாதியாக இருந்ததுடன் மலையக மக்களை அடக்கியாண்டனர். கூலிகள் முதல் அனைத்தையும் இவர்களுக்கு ஊடாகவே கொடுத்ததன் மூலம் அடக்கியாளும் வகையில் படிநிலை வடிவத்தை வெள்ளை நிற காலனித்துவவாதிகள் கையாண்டனர். உழைப்பைச் சுரண்டுவதிலும், அவர்களை அடக்கியாள்வதிலும் பிரித்தாளும் வடிவத்தை, சமூக முரண்பாடுகளில் இருந்து எடுத்து தரகு வடிவத்தில் கையாண்டனர். பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் நிலப்பிரபுத்துவ முறையையும் சாதி வடிவத்தையும் ஒருங்கே பயன்படுத்தி, மலையகமக்கள் மேல் கறுப்பு அதிகார வர்க்கத்தை உருவாக்கினர். இப்படியாக பெரிய மற்றும் சிறிய உயர்சாதி கங்காணிகள் இருந்தனர். 2000க்கும் மேற்;பட்ட பெரிய கங்காணிகள் இருந்ததுடன், அவர்கள் ஜமீந்தார்கள் போல் வாழ்ந்தனர். நிலப்பிரபுத்துவ மற்றும் சாதிய வடிவத்துக்குரிய அனைத்து ஒழுக்க வடிவத்தையும் ஈவிரக்கமின்றி இவர்கள் கையாண்டார்கள். கூலியாக 4 சதமும், சில்லறை தொழிலுக்கு 2 சதமும் வழங்கிய இவர்கள், காலை 5.30 முதல் மலை 6.30 மணிவரை வேலை வாங்கினர். இந்த வேலையை சர்வ சாதாரணமாகவே சவுக்கடிகள் மூலம் பெறப்பட்டது. மலையக மக்கள் இந்த உழைப்பின் கொடூரத்தை, சோகத்தை சொல்லிப் பாடத் தயங்கவில்லை.

"கோண கோண மலை ஏறி
கோப்பி பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சின்னு
ஒதச்சானாம் சின்ன தோர"

"ஊத்தாத அடமழையில்
ஒதறல் எடுக்குதடா - அந்த
தாத்தான் கணக்கப்புள்ள
கத்தி தொலைக்கிறானே
ஏத்தல ஏறி எறங்க முடியுமா
சீத்துபூத்தன் னெனக்கு
சீவன் வதை போகுதையோ
எத்தனை நாளைக்கிதான் - இந்த
எழவ எடுக்கிறது
வெக்கங்கெட்ட நாயிகளும்
எகத்தாளம் போடுதுன்னு
இருந்துதான் பாத்துடுவோம்"

என்று குமுறும் பாடல், சுரண்டலுக்கே சவால் விடுகின்றது. வாழ்வின் நரகலை அனுபவிப்பவன், அதைக் கண்டு சினந்தெளும் பாடல் வரிகள் இவை. ஆனால் இந்த மக்களுக்கு எதிரான வர்க்கமோ தமது கொழுத்த வாழ்வை அனுபவிக்க, இந்தியாவில் ஆள் காட்டிகள் மூலமே ஆட்கள் பிடித்து கடத்தினர். ஆள் காட்டிகள் ஏமாற்றியும் கட்டாயப்படுத்தியும் பிடித்த போது, அங்கு கலவரங்கள் நடந்தன. மக்கள் கடத்தப்பட்ட கிராமங்கள் கண்காணிக்கப்பட்டன. இதில் பெண்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டனர். கண்டி மக்களின் சோகம் வெளியில் தெரிவதை தடுக்க குறிப்பாக பெண்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டனர். மூலதன திரட்டலுக்கு தேவைப்பட்ட உயிருள்ள உழைப்பின் அளவே, ஆளும் வர்க்கத்தின் நனவுகளை யதார்த்தமாக்கியது. சுரண்டலுக்கு தேவையான ஆட்களை கடத்தி வர பல்வேறு வழிகள் கையாளப்பட்டது. மலையக மக்களை கடத்திக் கொண்டு வரும் எண்ணிக்கை பெருகிச் சென்றது. இதற்கு இசைவாக பிரிட்டிசார் கொடூரமான சுரண்டலை தமிழ் நாட்டில் ஏற்படுத்தி பஞ்சத்தை உருவாக்கினர். 1833-34 இல் குண்டூர் பகுதியில் 30 முதல் 50 சதவீதமான மக்கள் பஞ்சத்தால் இறந்தனர். 1876-78 இல் தஞ்சாவூர் பகுதியில் 40 லட்சம் மக்கள் பஞ்சத்தால் கொல்லப்பட்டனர். இதை விட பரவலாக பல இடங்களில் பஞ்சம் மக்களை கொடூரமாக கொன்றது. இந்த சூறையாடும் பிரிட்டிசாரின் வரலாற்றில் இருந்தே மலையக மக்களின் நாடு கடத்தல் இலகுவாக்கியது. மலையகம் மட்டுமல்ல, உலகின் பல பாகத்துக்கும் பிரிட்டிசார் இந்தியா மக்களை நாடு கடத்த முடிந்தது. பல நேரங்களில் செயற்கையாகவே பஞ்சம் வரவழைக்கப்பட்டதுடன், உற்பத்தியில் பாதியை வரியாக பிரிட்டிசார் கோரினர். இந்த மனித விரோத கொடூரங்களின் மூலமே நாட்டை விட்டு மக்களை கடத்தினர்.
-----------------------------------------------------

2 comments:

Sri Rangan said...

இரயா,வணக்கம்!

பதிவு பலவற்றைச் சொல்கிறது.

உழைப்பாளிகளுக்குள்ளேயே பல பிரிவுகள்.இந்தப் பிரிவுகளின் தளத்திலிருந்து வேதனைப்படும் 'உடல்' உழைப்பாளியேதாம் இப்பதிவைக் குறித்துத் தனது உணர்வை வெளிப்படுத்துவான்.இன்றைய காலத்தில் அந்நிய தேசமெங்கும் அகதியாய் அலையும் ஈழத்தமிழர்களினால் இவற்றைப் பொதுவாகவே உணரமுடியும்.

அதையிந்த அகதிவாழ்வு உணர்த்தியுள்ளது.


தன் வீட்டுத் திண்ணைக்குள் தலைபுதைத்து மனித அவலங்களைப் பற்றியே அறிந்துகொள்ள விருப்பின்றியிருந்த ஈழத் தமிழர்களுக்கு, அன்றிந்த அவலம் தெரிந்து-உணர்ந்துகொள்ள முடியாதிருந்திருக்கும்.

இன்றைய இந்த அவலமான வாழ்வியற் சூழலானது நிச்சியமாக நம்மைப் புடம்போட்டுள்ளது.

நாம்,நமக்காவும்-மற்றவர்களுக்காகவும் சிந்திக்கக் கற்றுக்கொள்கிறோம்.வர்க்கங்களாக மனிதர்கள் பிரிந்துள்ளதைப் புரிந்துள்ளோம்.மனிதர்கள்-உழைப்பாளர்கள் படும் வேதனையை,நாம் உடல் உழைப்பாளர்களாவிருந்து அநுபவித்து-வேதனைப்பட்டு,துன்பத்தோடு நிஷத்தைத் தரிசிக்கிறோம்.

அன்றைய தினத்தில் நமது மக்கள் மலையகத்தில் பட்ட வேதனையும்,துன்பமும் மிகக் கொடியது.அதை எந்த நிகழ்வோடும் ஒப்பிட முடியாது.அமெரிக்கா அடிமைகளை எப்படி உருவாக்கியதோ அதே பண்போடுதாம் நம்மக்களைக் காலனித்துவ ஆட்சியாளர்கள் நடாத்தினார்கள்.இந்த அவலத்தை இன்றைய இளைய தலைமுறை அறிந்துகொள்வதும்,ஆய்வு செய்வதும் அவசியம்!இதிலிருந்து புதிய படிப்பினைகளை உருவாக்கி மேலே நகர்வது அவசியமாகும்.

நன்றி,இப்பதிவுக்கு!

தோழமையுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

தமிழரங்கம் said...

தமிழ் அரங்கத்துக்கு அனுப்பபட்ட செய்தி

நல்லபதிவு,

எங்களின் தலையெழுத்து நிர்ணயிக்கபட்டது எப்படியென்று..., மற்றவருக்கும் தெரியும் படி அமைந்திருக்கிறது. அனால் இன்னும் வெளிச்சத்திற்கு வராத உண்மைகள் ஆயிரம் ஆயிரம்....

ஆனாலும்...., இந்த மக்கள் கொண்டு சென்று குடியேற்றப்பட்ட நாள் முதல் நாட்டின் பொருளாதார நலனுக்காகவும் வெள்ளையரின் சுகத்துக்காகவும் தங்கள் வியவர்வையையும், தங்கள் வாழ்கையையும் மொத்தமாக கொடுத்து இன்னமும் திரும்பி பெறமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.....!

அம்மக்கள் அரசியல் ரீதியாக பலம் பெறகூடாது என்பதை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டு செய்யப்பட்டுவரும் வெளியில் வராத ஏராளமான செயற்திட்டங்கள் உள்ளன.... அதில் ஆநேகம் அமுல் படுத்தப்பட்டும்விட்டன,

அதிலும் அதே மக்களிடம் இன்னமும் ஆசை வார்தைகளையும், மணல் வீடுக்கொப்பான வாக்குறுதிகளையும் கொடுத்து இன்னமும் அவர்களை சுரண்டுபவாகள் ஏராளம்.

ஆனாலும் "தோட்டக்காட்டான்" என்ற கேலிப்பெயர் கொஞ்சம் அதன் வீரியத்தை இழந்து இப்போது மலையக தமிழன் என்று விளிக்கபடுவது ஒரு சிறிய மகிழ்ச்சியை தந்தாலும்

bilad"