தமிழ் அரங்கம்

Sunday, December 18, 2005

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்? பகுதி 2

பெண் விடுதலை என்பது பாலியல் சுதந்திரம் அல்ல

பெண் விடுதலையைப் பற்றி பேசமுற்படுபவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். சூக்குமமாக சந்தர்ப்பத்துக்கும் நிலைமைக்கும் ஏற்ப கூத்தடிப்பது பெண்ணியமல்ல. முதலில் தெளிவாக இன்றைய ஆணாதிக்க உலகைப்பற்றிய கருத்துகளை சமூகத்தின் முன் வைக்கவேண்டும். ஆணாதிக்க உலகை எப்படி மாற்றினால், அது பெண்ணியமாக இருக்கும் என்பதை முரணற்ற வகையில் தெளிவாக்க வேண்டும். அதாவது ஆணாதிக்கமற்ற சமூகமாக, ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் ஒரு சமூகம் எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அங்கும் இங்குமாக ஒழிந்து நின்று கொண்டு, கருத்துரைக்க முடியாது. பெண்ணியத்தை சூக்குமமாக இருண்டவெளியில் வைத்து சமூகத்தை கொச்சைப்படுத்த முடியாது. இங்கு தனிப்பட்ட ஒரு பெண், தனது சொந்த வாழ்வியல் துயரத்தை போக்க போராடுவதற்கு, இது எந்தவிதத்திலும் தடையானதல்ல. சமூகத்துக்கு கருத்துரைப்பவர்கள், இப்படித் தான் பெண்கள் வாழவேண்டும் என்று கூற முற்படுபவர்கள், நிச்சயமாக தெளிவான வகையில் பெண்ணியத்தை விளக்கியாகவேண்டும். நாம் குறிப்பாக இன்றைய சமூக பொருளாதார அமைப்பு சார்ந்த ஆணாதிக்கத்தில் இருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டவேண்டும்.

இன்றைய அனைத்து சமூக பொருளாதார அமைப்பும், அது சார்ந்த சித்தாந்தங்களும், மனித கோட்பாடுகள், இது உருவாக்கும் வாழ்கை முறைகள் அனைத்தும் ஆணாதிக்கம் சார்ந்தது. இதில் இருந்து பெண்ணியம் எப்படி வேறுபடுகின்றது என்பதே, அடிப்படையான பெண்ணியம் பற்றிய புரிதலாகும், விவாதமாகும். குஷ்புவின் ஒழுக்கக்கேடான சமூகவிரோதக் கூற்றுகள் கூட, இந்த ஆணாதிக்க அமைப்பில் இருந்தே வருகின்றது.

ஆணாதிக்க வடிவங்களினுள் சோரம் போகும் பெண்ணியம்

இன்றைய ஆணாதிக்க சமூக பொருளாதார அமைப்பில், அனைத்தும் ஆணாதிக்க வடிவங்கள் தான். எந்த ஆணாதிக்க ஒழுக்கமும், இருக்கும் சமூக அமைப்பில் மறுக்கப்படும் போது அவையும் ஆணாதிக்கம் தான். அதாவது இருக்கும் சமூக அமைப்பை மறுக்கும் போது தான், ஆணாதிக்கமற்ற நிலை உருவாகின்றது. இன்று இருக்கும் ஆணாதிக்க சமூகப் பொருளாதார அமைப்பு என்ன எனப்பார்ப்போம்.

1. உலகமயமாதல் என்ற ஏகாதிபத்திய சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு, பெண்ணைப் பற்றி முன்வைக்கும் பார்வை என்ன என்பதையே எந்தப் பெண்ணியமும் முதலில் தெளிவாக்க வேண்டும். குஷ்புவின் கருத்துக்கு ஆதரவாக பதிலளிக்க முன், இது தெளிவாக்கப்பட வேண்டும். இதில் இருந்துதான், நாம் சமூகத்தில் வெளிவரும் கருத்துகளை பெண்ணிய நோக்கில் பகுத்தாயமுடியும். இல்லையென்றால் தத்துவ வறுமையில், ஒழுக்ககேடான விபச்சாரத்தை பெண்ணியமாக சித்தரிப்பது நிகழும். இதுவும் ஆணாதிக்கம் சார்ந்தது.

2.நிலப்பிரபுத்துவ சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு முன்வைக்கும் பெண் பற்றிய பார்வை என்ன என்பதையும், பெண்ணியம் முதலில் முன்வைக்க வேண்டும். இதை தெளிவுபடுத்தாவிட்டால், தத்துவ வறுமை உலகமயமாதல் பெண்ணின் ஒழுக்கக்கேடான வாழ்வை பெண்ணியமாக சித்தரிப்பது நிகழும்.

3.இதே போன்று முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு முன்வைக்கும் பெண் பற்றிய பார்வையையும் தெளிவாக முன்னிறுத்த வேண்டும். இந்த முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்பு கோரமாக இழிந்து மனிதவிரோதத் தன்மை கொண்டதாக மாறும் போதுதான், உலகமயமாதல் என்ற பொருளாதார கட்டமைப்பு உருவானது. இங்கு பெண்பற்றிய பார்வை இக்காலத்தில் வெவ்வேறானதாகவே அமைந்தன. இதைப் பற்றிய வரலாற்று வளர்ச்சியை பெண்ணியம் கோட்பாட்டு ரீதியாக தெளிவாக்க வேண்டும்.

ஆனால் பெண்ணியம் பற்றி பேசுபவர்கள் யாரும் இதைச் செய்வதில்லை. சொந்த தத்துவ வறுமையில் நின்று, சந்தர்ப்பத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப, உலகமயமாதல் ஆணாதிக்கம் வழங்கும் பெண் பற்றிய வாழ்வியல் ஒழுங்கை பெண்ணியமாக கருதுவது நிகழ்கின்றது. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் அடிமைப் பெண்ணாக பெண்ணை உருவாக்கிய எமது அமைப்பில், உலகமயமாதல் அமைப்பு உருவாக்கும் மாற்றத்தை பெண்ணியமாக கருதுவதும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதும் இயல்பாக ஏற்பட்டு விடுகின்றது. இதை ஒரு பெண்ணின் புரட்சியாக நம்புவதும் கூட நிகழுகின்றது.

மேல் குறிப்பிட்ட இந்த மூன்று ஆணாதிக்க சமூக அமைப்பு சார்ந்து, பெண் பற்றி மூன்று விதமான பொதுப்போக்கு காணப்பட்டது, காணப்படுகின்றது. இந்த மூன்றும் ஆணாதிக்க சமூக பொருளாதார அமைப்பு சார்ந்தது. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கும், உலகமயமாதல் என்ற சமூக அமைப்புக்கும் இடையில் பெண்பற்றி ஆணாதிக்கப் பார்வை, முரண்பட்ட எதிர்நிலைத் தன்மை கொண்ட போக்காக காணப்படுகின்றது. இதுவே இன்று முரண்பாடாக, கூக்குரலாகவும் கூட வெளிப்படுகின்றது. இன்று ஒரு பெண் பற்றிய ஆணின் பார்வை சரி, பெண்ணின் பார்வை சரி, இந்த சமூக பொருளாதார கூறுகளுக்கு வெளியில் எதையும் கொண்டிருப்பதில்லை.

உண்மையில் பண்பாட்டு கலாச்சாரத்துறையில் இவர்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடு, பொருளாதார துறையில் காணப்படுவதில்லை. பண்பாட்டு, கலாச்சாரத் துறையில் முரண்பட்டு எதிர்நிலையில் மோதும் இவர்கள், பொருளாதாரத் துறையில் உலகமயமாதலை ஆதரிப்பவர்களாக ஐக்கியப்பட்டு உள்ளனர். குஷ்பு விவகாரத்தில் மோதும் இரு தரப்பும், உலகமயமாதலை ஆதரிப்பதில், அந்த சமூக பொருளாதார கோட்பாட்டை முன்னெடுப்பதில் ஒன்றுபடுகின்றனர். பாரிஸ் இலக்கியச் சந்திப்பில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜனி, இந்த அரசியல் விபச்சார தரகுவேலையை சிறப்பாகவே செய்தார். இதில் எதிரெதிராக களத்தில் நிற்பவர்கள் தலித்துகள், பெண்ணியல் வாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள்! ஆனால் இருதரப்பும், உலகமயமாதலை விசுவாசமாக ஆதரிக்கின்றனர். ஒரு விசித்திரமான, ஆனால் மக்கள் விரோதத் தன்மை கொண்ட ஒரு உண்மையாகும்.

பெண்ணின் மீதான ஆணாதிக்க அடக்குமுறையை ஆணாதிக்க சமூக பொருளாதார உள்ளடக்கத்தில் புரிந்து விளக்காத அனைத்தும், இந்த ஆணாதிக்கத்தில் ஏதோ ஒரு சார்புத் தன்மை கொண்டதாகவே அமைகின்றது. இந்த ஆணாதிக்க சமூக பொருளாதாரத்தில் பெண் ஆணின் பாலியல் நுகர்வுப் பொருளாக இருப்பதால், இந்த பொருளாதார அமைப்பில் பெண் விடுதலை அடைதல் என்பது கற்பனையிலும் சாத்தியமற்றது. மாறாக இந்த சமூகப் பொருளாதார அமைப்பின் மீதான ஒட்டுமொத்த மறுதலிப்பின்றி, எந்த பெண்ணும் இந்த ஆணாதிக்க சமூக பொருளாதார கூறுகளில் இருந்து விடுதலையடைய முடியாது. இதை மறுதலிக்கும் எந்தப் பெண்ணியக் கோட்பாடும், நிலவும் ஆணாதிக்க சமூக பொருளாதாரம் சார்ந்து ஆணாதிக்கமாகவே நீடிக்கும். சுற்றி சுற்றி இந்த ஆணாதிக்க அமைப்பில் சறுக்கி வீழ்வதே நிகழும்.

நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூகப் பொருளாதார பெண்ணை, ஆண் தனது தனிப்பட்ட நுகர்வுக்குரிய ஒரு சொத்தாகவே கருதினான், கருதுகின்றான். இதன் ஒரு அங்கமாக சொத்துரிமை சார்ந்து, வளர்ச்சியுற்றதுதான் குடும்பம் என்ற அலகு. இது பெண்ணின் நோக்கில் ஒரு திரிபுதான். பெண் ஒருதார மணத்தை, தனிச்சொத்துடமை அமைப்பில் ஆணின் வரைமுறையற்ற காட்டுமிராண்டித் தனமான புணர்ச்சியில் இருந்து தப்பிப்பிழைக்கவே, தனது சொந்தத் தேர்வாகவே தெரிவு செய்தாள். ஆனால் ஆணாதிக்க சமூக அமைப்பின் வளர்ச்சியில் அவள் விரும்பி தேர்ந்த வடிவம் கூட திரிபடைந்தது. கடந்த 2000 வருடங்கள் பல மாறுதலை அது கண்டுவந்த போதும் கூட, பெண்ணின் மீதான நிலப்பிரபுத்துவ ஆணின் அதிகாரம் சொத்துரிமையின் அடிப்படையிலேயே காணப்பட்டது. பெண்ணின் உழைப்பை சுரண்டவும், பெண்ணின் மீதான பாலியல் நுகர்வை அடையவும், இதனடிப்படையிலான குடும்ப அலகு ஒரு இறுக்கமான வடிவத்தில் காணப்பட்டது. இதைப் பாதுகாப்பதில் மதமே மிகமுக்கியமாக ஆணாதிக்க சமூக கோட்பாட்டுக்குரிய பங்கை வகித்தது.

சமூக பொருளாதார கட்டமைபில் ஏற்பட்ட முரண்பாட்டால் உருவான உலகமயமாதல் என்ற சமூக கட்டமைப்பு, எப்படி நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பை மறுத்ததோ அப்படி கடந்தகால நிலப்பிரபுத்துவ குடும்ப அலகு சார்ந்த ஆணாதிக்க பெண்ணையும் மறுதலிக்கின்றது. இதை இன்று பெரும்பாலான பெண்ணியல் வாதிகள் புரிந்து கொண்டதில்லை. மாறாக உலகமயமாதல் ஆணாதிக்கத்தையே, பெண்ணியமாக விளக்குவதே இன்று தீவிர பெண்ணியமாக காட்டப்படுகின்றது. இதுதான் உண்மை. இதை அவர்கள் யாரும் மறுக்க முடியாது.

இன்று உலகமயமாதல் என்ற ஆணாதிக்க பொருளாதாரக் கட்டமைப்பு பெண் பற்றி கொண்டுள்ள கொள்கை என்பது, ஒரு பெண்ணை வெறும் நுகர்வுச் சரக்காக மட்டும் காண்கின்றது. இன்றைய விளம்பரங்கள் அனைத்தும் இந்த வகையில் தான், பெண்ணைச் சித்தரிக்கின்றது. சினிமா முதல் ஒலி, ஒளி நிகழ்ச்சி வரை, ஏன் பெண் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து தளத்திலும், பெண் ஒரு நுகர்வுக்குரிய கவர்ச்சிகரமான பெண்ணாகவே இன்று உலகமயமாதல் காட்டுகின்றது. இது பழைய நிலப்பிரபுத்துவ பெண்ணின் ஆணாதிக்கக் கட்டுக்கோப்பையே கிண்டல் செய்கின்றது. அதை ஜனநாயக மீறல் என்கின்றது. அதை அநாகரிகமானதாகவும், மனித உரிமை மீறலாகவும் கூட காட்டுகின்றது. இதன் போதே தீவிர பெண்ணியல் வாதிகள் என்போர் (இங்கு ஆண் பெண்) வேப்பிலைக்கட்டிக் கொண்டு, இதற்கு அரோகரா போட்டு கும்மியடிக்கின்றனர்.

உலகமயமாதல் என்ற சமூக பொருளாதார ஆணாதிக்க அமைப்பு பெண்ணை நுகர்வுக்குரிய ஒரு பாலியல் பண்டமாகவே கருதுகின்றது. உலகமயமாதல் உலகில் சொத்துரிமையை சமூக அலகில் இருந்து பிரித்து, அதை தனிப்பட்ட சொத்தாக குடும்பத்தக்கு வெளியிலும் குவிக்கின்றது. குடும்பச் சொத்து என்ற நிலப்பிரபுத்துவ சொத்துரிமை கூறு கூட, தனக்கு தடையாக இருப்பதை உலகமயமாதல் அனுமதிக்கவில்லை. இதனால் இந்த சொத்துடமைக் குடும்பத்தையும் கூட உலகமயமாதல் சிதைக்கின்றது. நுகர்வு சார்ந்த பாலியல் நோக்கில், நிலப்பிரபுத்துவ குடும்ப அலகு என்பது சுதந்திரமான பாலியல் நுகர்வுக்கு தடையாக இருப்பதை உலகமயமாதல் காண்கின்றது. பெண்ணை பாலியலில் சுதந்திரமான தனிப்பட்ட பெண்ணாக, குடும்பத்துக்கு வெளியில் கவர்ச்சிகரமான பதுமையாக நிறுத்துகின்றது. அதேநேரம் பெண்ணின் உழைப்பை ஆணுக்கு ஊடாக அல்லாது, கூலி கொடுத்து வாங்கும் ஒரு உழைப்புக் கருவியாக சந்தையில் நிறுத்துகின்றது. ஆணின் உழைப்புக்கான கூலியைக் குறைத்து, ஆண் ஒரு குடும்பமாக பெண் அதில் தங்கி வாழமுடியாத நிலையை உருவாக்கி, பெண்ணை கூலிகளாக மூலதனம் சந்தைக்கு கொண்டு வந்தது.

இப்படி ஆணாதிக்க சுரண்டல் சமூக அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இசைவாக, பெண்ணும் மாற்றப்படுகின்றாள். இவை பொதுவாக சமூக ஆதிக்கம் பெற்ற வர்க்கங்களின் பொது நிலைப்பாடாகவே இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஒரு பெண் அதை எப்படி உள்வாங்கி உணருகின்றாள் என்பதைப் பார்ப்போம்.

நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூக அமைப்பில் ஒரு பெண், கட்டுக்கோப்பான தனது குடும்ப அலகை பராமரிப்பதே தனது கடமை என்று காண்கின்றாள். குடும்பத்தின் தேவையையும், ஆணின் தேவையையும் பூர்த்தி செய்து வாழ்வதே பெண்ணின் ஒழுக்கமாக காண்கின்றாள். தனிப்பட்ட ஆணுக்கான சேவை உழைப்பும், பாலியல் ரீதியாக குறித்த ஆணுடன் இணங்கி வாழ்ந்து மகிழ்ச்சி அடைவதே குடும்பமாக காண்கின்றாள். இதை அவள் மகிழ்ச்சிக்குரியதாக மாற்ற முனைந்தாள். இதில் இருந்தே ஆணாதிக்க பண்பாடுகளும், கலாச்சாரங்களும் பெண் சார்ந்து உருவாகின. தாய்மைக்குரிய சமூகப் பண்பு பெண்ணிடம் உயர்ந்து நின்றதால், காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சமூக அமைப்பிலும் கூட, பெண் சமூக உயிரியாக இருந்ததால் மொத்த சமூகத் தன்மையையே உயிருள்ளதாக்கி வைத்திருந்தாள். இதனால் சமூகம் உயிருள்ளதாக இருந்தது. சமூகத் தன்மை குடும்பம் சார்ந்த போதும் கூட, சமூகத்தின் இயல்பான வாழ்வியல் இதுவே அடிப்படையாக இருந்தது.

ஆனால் இவை எல்லாம் உலகமயமாதல் அமைப்பில் முற்றாக தகர்ந்து போகின்றது. ஒவ்வொரு மனிதனும் ஒரு சமூக உயிரி என்பதை மறுப்பதே, உலகமயமாதலின் ஆதாரமான கொள்கை. ஆணோ பெண்ணோ அல்லது குழந்தையோ யாராக இருந்தாலும், அவாகள் ஒரு சமூக உயிரியாக இருக்க வேண்டியதில்லை. மாறாக தனிமனித நலனுடன் ஒருவரையொருவர் சார்ந்தல்ல, குழிபறித்து வாழ்வதை வழிகாட்டுகின்றது. பழைய குடும்ப அலகுக்கு பதில், சுயநலமாக ஆணைப் போல் பெண் மற்றும் குழந்தைகளும் சுயநலத்துடன் வாழ்தலையே சுதந்திரம், ஜனநாயகம் என்கின்றது. பழைய நிலபிரபுத்துவ குடும்ப அலகு என்பது, அதாவது ஆணின் சுயநலம் சார்ந்த இந்த அமைப்பு தகர்ந்து போகின்றது. இதையே தீவிர பெண்ணியல்வாதிகள் பெண்ணியம் என்கின்றனர். இது பெண்ணை ஆணில் இருந்து விடுவிக்கின்றது என்கின்றனர். பெண் பாலியல் ரீதியாக சுதந்திரம் அடைகின்றாள் என்கின்றனர். உண்மையில் நடப்பது ஒரு ஆணின் சொத்து சார்ந்து பெண் ஆணாதிக்க சமூகத்தில் வாழ்ந்த நிலை என்பது தகர்ந்து, பெண் நுகர்வுக்குரிய பாலியல் பொருளாகி ஆணாதிக்க சந்தைப் பொருளாகின்றாள். இதில் பெண்ணையும், பாலியல் ரீதியாக ஆணைப் போல் ஆணுக்கு சோரம் போய் பெண்ணை நுகரக் கோருகின்றது. இந்த ஆணாதிக்க உலகமயமாதல் உருவாக்கும் பெண்ணின் நிலையைத்தான், தீவிர பெண்ணியம் என்று கூறி கும்மியடிப்போர் பெண்ணியம் என்கின்றனர். இதை யாரும் இல்லை என்று நிறுவவே முடியாது.

முதலாளித்துவ சமூக அமைப்பு நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கு மாற்றாக உருவான போது கூட, கடந்து வந்த குடும்ப அலகை முற்றாக சிதைத்துவிடவில்லை. இப்படி நீடித்த சமூக அமைப்பு, உலகமயமாதல் என்ற சமூக பொருளாதார அமைப்பில் குடும்பம் என்ற அலகு அவசியமற்றதாகின்றது. பாலியல் என்பது இங்கு நுகர்வு கண்ணோட்டத்தில், தனிமனிதனின் சுயநல எல்லைக்குள் சுருங்கிப் போனது. இது இயந்திரத் தன்மையானதாகவும், கவர்ச்சியை அடிப்படையாக கொண்டதாகவும், போலித்தனமான கூறுகளே, இந்த பாலியல் இணைப்பின் புள்ளியாகின்றது.

ஆண் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் பெண்ணை கற்புள்ள ஒருதார மணத்தில் ஒழுக்கத்தைக் கோரிய போது கூட, ஒழுக்கத்தை தனக்கு விதிவிலக்காக்கி பொது விபச்சாரத்தை ஆண் தக்கவைத்துக் கொண்டான். இன்று உலகமயமாதல் பெண்ணின் கற்பு சார்ந்த ஒருதார மணத்தை தகர்த்து, அதனிடத்தில் பெண் பொது விபச்சாரியாக்கப்படுகின்றது. தனிச்சொத்துரிமை அமைப்பு உருவான போது, அது இயல்பில் பெண் மீதான ஆணின் காட்டுமிராண்டித்தனமான வரைமுறையற்ற பாலியல் அத்துமீறலைத் தடுக்க, பெண் ஒரு தலைபட்சமாக ஒருதாரமணத்தை தேர்ந்தெடுத்தாள். ஆனால் பின் அந்த ஒருதாரமணமே பெண்ணின் சிறைக்கூடமாகவும் மாறியது. ஆணால் ஆண் பலதார மணத்தில் வாழ, பொது விபச்சாரத்தை தக்கவைத்து இருந்தான். பெண் அன்று எதைத்தடுக்க ஒரு தாரமணத்தை தேர்ந்தாளோ, அதை தகர்த்து ஆண் மீண்டும் பொது விபச்சாரியாக்கி பெண் மீதான பாலியல் அதிகாரத்தைப் பெற்று விடுகின்றான். இங்கும் பெண்ணும் ஆணுக்கு நிகராக நுகரலாம் என்பது, தொழிலாளியும் முதலாளியாகலாம் என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது.

ஏனென்றால் இந்த சமூகப் பொருளாதார அமைப்பே ஆணாதிக்கமாக உள்ளதால், பெண்ணின் நிலை இயல்பாகவே பொது விபச்சார நிலையை அடைகின்றது. இதையே பெண் விடுதலை என்று ஏகாதிபத்தியமும் சொல்லுகின்றது. தீவிர பெண்ணியமும் இதைத் தான் வாந்தியெடுத்து சொல்லுகின்றது. பெண்ணின் சுயம் சார்ந்த ஒழுக்கம் (இது ஆணுக்கும் உண்டு)அவசியமற்றதாக்கி, பொதுவிபச்சாரமே ஒழுக்கமாகின்றது. நுகர்வை, செல்வத்தின் உச்சத்தில் உள்ளவர்கள் (பொதுவாக மேற்கத்தையவர்கள்) எப்படி நுகர்கின்றனரோ, அப்படித் தான் பெண்ணையும் பாலியல் ரீதியாகவும் நுகர்வதை உலகமயமாதல் வழிகாட்டுகின்றது. ஆண் பெண் பாலியல் உறவு என்பது, வெறும் உடல் சார்ந்த பாலியல் சரக்கு என்ற நிலையைத்தான் ஆண் பெண் உறவு வழிகாட்டுகின்றது. இங்கு எந்த சமூக உணர்வும், இவர்களுக்கு இடையில் உருவாவதை உலகமயமாதல் மறுக்கின்றது. உதாரணமாக பிரான்சில் டிஸ்கோ ஒன்றில் வேலை செய்யும் ஒருவரின் வேலைபற்றி ஒருவர் குறிப்பிட்டார். அவரின் வேலை ஆண் பெண் சோடியாக, அதாவது சோடியாக யார் மலசலகூடத்துக்குச் சென்றாவும் அவர்களை தடுப்பதுதான் அவரின் வேலை. நான் முன்பு வேலை செய்த ஒரு டிஸ்கோவில், மலசலக் கூடத்துக்கு முன்னால் ஆண் உறையைப் பெறும் தன்னியங்கி இயந்திரம் பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே கால் வைத்தால் சறுக்கும் வகையில் ஆண் உறைகள்.

இது டிஸ்கோவில் மட்டுமல்ல. பல தளத்தில் காணப்படுகின்றது. நுகர்வு என்ற உள்ளடக்கம், பணம் கொடுத்தும், பரஸ்பரம் நுகர்தல் என்ற எல்லைவரை விரிந்து காணப்படுகின்றது. இதைத்தான் பெண்ணியம் என்றால், இதைத் தான் பாலியல் சுதந்திரம் என்றால், இந்த கோட்பாட்டாளர்களின் நுகர்வு வெறியே வக்கிரப்பட்டு வெளி வருகின்றது. குஷ்பு போன்ற மேட்டுக் குடிகள் தமது சொந்த வாழ்வு சார்ந்து இப்படித் தான் வாழ்கின்றனர். அவர்களின் மேட்டுக்குடி வாழ்வில் சமூக நலன் சார்ந்து எந்தக் கூறும் இருப்பதில்லை. இது அவர்களின் பாலியல் கூறிலும் கூட இருக்கமுடியாது. இருப்பது நுகர்வு அடிப்படையிலான கண்ணோட்டம் தான். பாலியலிலும் கூட சமூகக் கூறு உள்ளது. இதை தீவிர பெண்ணியம் கண்டுகொள்வதேயில்லை. இதில் இருந்தே உலகமயமாதலில் பெண் தாய்மைப் பண்பை இழந்து, சமூகப் பண்பை இழந்து வெறும் பாலியல் சரக்காக உடல் சார்ந்த பண்டமாகி விடுகின்றாள். இந்த நிலையை ஆதரிப்பவர்கள் தான், தீவிர பெண்ணியம் என்ற பெயரில் கவர்ச்சியாக தம்மை சிங்காரித்துக் காட்டுகின்றனர். இதை ஆதரிக்கும் ஆண், அந்த நுகர்வுக்குரிய பெண்ணை அடையும் நோக்கில் அணுகுகின்றான். இந்த தத்துவ உலகில் இப்படி ஆண்களையும், பெண்களையும் கூட நாம் கண்டு வருகின்றோம்.

பெண் சமூக உயிரிக்குரிய இயற்கையாகவே அவளிடம் எஞ்சிக் கிடந்த தாய்மைப் பண்பை வலிந்து இழக்கும் போதே, குழந்தைக்கு பாலூட்ட மறுக்கின்றாள். குழந்தையின் பிறப்பையே இழிவாகப் பார்க்கின்றாள். கற்பப் பையை அறுத்து எறிவது பற்றி வீரவசனம் பேசுகின்றாள். தனது சொந்த குழந்தையையே கைவிடுகின்றாள். ஆனால் பாலியல் ரீதியாக ஆணுடன் உறவு கொள்வதை மட்டும் நுகர்வு அடிப்படையில் கைவிடுவதில்லை. ஒரு அராஜகப் பெண்ணாக தன்னைத்தான் சிங்காரித்து சீரழிகின்றாள். இதைத்தான் பெண்ணியமாக சித்தரிக்கின்றனர். இந்த ஆணாதிக்க சமூக பொருளாதார அமைப்பை மாற்றாத ஆணாதிக்கமே இன்று பெண்ணியமாக சித்தரிக்கப்படுகின்றது. பெண்ணியம் பேசும் இன்றைய இந்த சித்தாந்த வாதிகளின் கோட்பாடே இதுதான்.

உண்மையில் நிலப்பிரபுத்துவ சமூகப் பொருளாதார கட்டமைப்பில் இருந்து முதலாளித்துவ கட்டமைப்பின் ஊடாக வளர்ச்சியுற்ற உலகமயமாதல் என்ற கட்டமைப்பின், பல இடைகட்டங்களை பெண் பல வடிவங்களில் கடந்துவந்தாள். இப்படி மாறிவந்த சமூகப் போக்கு சார்ந்து, ஆதிக்கம் பெற்ற வர்க்கங்களிடையே தான் எப்போதும் ஆதிக்கம் பெற்ற ஆணாதிக்க ஒழுக்கம் அதிகார பூர்வமான பண்பாடாக நடைமுறையில் இருந்தது. ஆனால் ஆதிக்கம் பெற்ற சமூகப் பொருளாதார அமைப்பினால் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளில், இது அதிகார பூர்வமான பண்பாடாகவும் ஒழுக்கமாகவும் கூட ஒருநாளுமே இருக்கவில்லை. இந்த சமூகப் போக்குடன் முரண்பட்ட சமூகமும், குறிப்பாக பெண்களும் பொது ஆணாதிக்க ஒழுக்கத்துடன் முரண்பட்டு பலவேறு கூறுகளுடன் தான் அவள் வாழ்ந்தாள். ஆதிக்கம் பெற்ற சமூக போக்கு முரண்பாடாக, இங்கு பெண்கள் சுதந்திரமுள்ளவராக இருந்தனர்.

உதாரணமாக உயர்சாதி பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ பெண்ணின் ஒருதார மணமுறையை, தாழ்த்தப்பட்ட பெண்கள் தமது ஒழுக்கமாக கடைப்பிடிக்கவில்லை. இங்கு பெண்ணின் விருப்பார்ந்த தேர்வு சுதந்திரமானதாக இருந்தது. இது இன்று ஏகாதிபத்தியம் பெண்ணியம் கூறும் அடிப்படையில், அதாவது பாலியல் அடிப்படையில் நிகழவில்லை. மாறாக பாலியல் அல்லாத கூறுகளே, ஆண் பெண் உறவில் முதன்மை பெற்றதாக இருந்தது. இங்கு ஆண் பெண்ணுக்கு இடையில் பரஸ்பர விசுவாசம் அந்தக் குடும்பத்தின் மையக் கூறாக இருந்தது. பெண்ணின் பிரிவும் ஐக்கியமும் பாலியல் சார்நத்தாக இருக்கவில்லை. வாழ்வு சார்ந்ததாகவே இருந்தது.

இன்றைய பெண்ணியல் வாதிகளினதும், பெண் விடுதலையை பேசும் ஆண்களினதும் கருத்துகள் இதற்கே எதிரானது. கோட்பாட்டு ரீதியில் தீவிர பெண்ணியம் பற்றிய கோட்பாடுகள் செயல்பாடுகள், நடைமுறைகள் உலகமயமாதல் சமூக பொருளாதார விளைவின் சீரழிவாக உள்ளது. ஆனால் கிராமப்புற பெண்ணகளின் நிலைப்பாடுகள் ஜனநாயகக் கூறாக உள்ளது.

நிலப்பிரபுத்துவ அமைப்பின் பெண்ணின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் தீவிர பெண்ணியம் உலகமயமாதல் பெண்ணை சுதந்திரமாக காணும் போக்கு காணப்படுகின்றது. இதற்கு மாறாக உலகமயமாதல் சமூக அமைப்பில் பெண் வெறும் பாலியல் பண்டமாக இருப்பதை எதிர்த்து, நிலப்பிரபுத்துவ குடும்பப் பெண்ணை வலியுறுத்துவது காணப்படுகின்றது. இந்த வகையில் தான் இன்று புலம்பல்கள், தீர்மானங்கள், வாய் வீச்சுக்கள், போராட்டங்கள் எல்லாம் நடத்தப்படுகின்றன.

இந்த இரண்டும் மக்கள் விரோத ஆணாதிக்க சமூக பொருளாதார கூறாக இருப்பதை இவர்கள் காண்பதில்லை. ஒரு பெண்ணை இந்த நிலையில் வைத்திருக்கின்ற சமூக பொருளாதார கூறுகளை பற்றிய தெளிவான பார்வை இன்றி, அதை சமூகம் சார்ந்து புரட்சிகரமாக மாற்றுவதைப் பற்றிய அரசியல் சமூக பொருளாதார நடைமுறையின்றி, பெண்விடுதலை பற்றிய கருத்துகள் அனைத்தும் அபத்தமானவை. இவை அனைத்தும் இந்த ஆணாதிக்க சமூகப் பொருளாதார கட்டமைப்புக்குள், ஏதோ ஒரு வகையில் தன்னைத்தான் அடையாளம் காட்டிக் கொள்பவைதான். இந்த சமூக உண்மையை யாரும் மறுத்து நிறுவமுடியாது.

2 comments:

Anonymous said...

enkalaip patti pesa neengal yar enru kedpathu oruvakai kaiyalaakatha thanmai.unkalukkenru oru ulagam amaithu enna sejjap pookinreergal?

தமிழரங்கம் said...

(டோண்டு, மற்றும் உம்மை)யின் கருத்துகளுக்கு எனது பதில் விரைவில்.
பி.இரயாகரன்