தமிழ் அரங்கம்

Saturday, September 29, 2007

தகவல் ஊடகங்களும் சூசையும்

பி.இரயாகரன்
29.09.2007

தமிழ் மக்களின் தலைவிதி என்பது, பொய்களையும் புரட்டுகளையும் நம்புவதே. இதையே அவர்கள் கொசிப்பாக்கி, அரசியலாக்கி விடுகின்றனர். தொட்டுக் கொண்டு வம்பளக்க, ஊர் பெயர் தெரியாத அனாதை இணையங்கள்.

இப்படிப்பட்ட இணையங்கள் சரி, மூகமுடி போட்டு எழுதுபவர்களுக்கும் சரி, அவர்களுக்கு எந்த சமூகப் பொறுப்புணர்வும் கிடையாது. எதையும் எப்படியும் எழுதி வம்பளக்க முடியும். சூடுசுரணையற்ற இந்த எருமைகளுக்கு, அடிப்படையான மனித நேர்மை கூட கிடையாது.

மக்களிடையே கொசிப்பை அரசியலாக்கி, சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்க முனைகின்றனர். இதைத்தான் அவரவர் பாணிக்கு தமிழீழம் என்றும், ஜனநாயகம் என்றும் அவர்களே கூறிக் கொள்கின்றனர். இதற்குள் தான் தியாகம், துரோகம் என்ற வார்த்தை ஜாலங்கள். இப்படி மக்களின் முதுகில் குத்தி நக்கும் கூட்டம், ஊடகவியலில் சலசலக்கின்றது.

தமிழ் மக்கள் தகவல் அறியும் உரிமை கிடையாது என்பதே, இந்த இரு தரப்பினரதும் அரசியல் நிலையாகும். தமிழ் மக்கள் உண்மையை அறியமுடியாது. தமிழ் மக்களை கேனயன்களாக நடத்துவதே, இந்த திமிர் பிடித்த புலி மற்றும் புலியெதிர்ப்புவாதிகளின் கோட்பாடாகும். இதனால் தமிழ் மக்களை நம்பி, இந்த இருதரப்பும் அரசியல் செய்வது கிடையாது. அவர்களை அரசியல் ரீதியாக அணுகுவதோ, அணிதிரட்டுவதோ கிடையாது. மாறாக கொசிப்புக்குள்ளும், வம்பளப்புக்குள்ளும் மக்களை அணிதிரட்ட முனைகின்றனர். இந்த தரப்பு கொசிப்பு, அந்தத் தரப்பு கொசிப்பை மிஞ்சுமா என்ற தர்க்கமும் வாதங்களும்.

இப்படி ஊடகவியலூடாக இயங்குகின்ற தெருப்பொறுக்கிகளின் கூட்டம். இந்த பொறுக்கிகளுக்கு எந்த சமூகப் பொறுப்புணர்வும் கிடையாது. பெரும்பாலானவர்கள் தன்னை மறைத்துக்கொண்டு, ஊடகவியலூடாக மக்களை மேய்க்கின்றனர். தமிழ் ஊடகவியல் என்பதும், அது மக்களுக்கு சொல்வது என்பதும், சொந்த இழிவான மலிவான வக்கிரத்தைத் தான்.

ஒரு மனிதன் தான் ஏன் எதற்காக கொல்லப்படுகின்றேன் என்று தெரியாத ஒரு நிலையிலேயே கொல்லப்படுகின்றான். அவன் மற்றும் அவளின் உற்றார் முதல், மொத்த தமிழ் சமூகத்துக்கும் கொல்லப்பட்டமைக்கான காரணங்கள் தெரிவதில்லை. ஏன் கொல்லப்பட்டது என்று தெரியாத வகையில் கொசிக்க, தமிழ் மக்களை அதற்கு ஏற்ப ஊடகவியல் மாற்றி அமைக்கின்றது. இதை நியாயப்படுத்துகின்ற மலிவான இழிவான பிரச்சாரங்கள். இந்த புலி மற்றும் ஜனநாயக ஊடகவியலின் கருத்துக்கள், மனிதர்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கின்ற தெருப்பொறுக்கிகளாலானது.

புலியல்லாத பிரதேசத்தில் மக்கள் கண்ணிவெடி மூலம் இறந்தால் அதை இராணுவம் செய்ததாகவும், இதுவே புலிகள் பிரதேசத்தில் இறந்தால் அதை புலிசெய்ததாக கூறுகின்ற ஊடகவியல். தெருப் பொறுக்கிகளான இந்த ஊடகவியல், சம்பவம் நடந்தவுடன் அதை யார் செய்தது என்று எழுதுகின்ற கட்டுக் கதைகள். மக்களையே கேனயனாக கருதி செயல்படுகின்ற அரசியல் கூத்துகள். ஒருபுறம் தமிழீழம், மறுபுறம் ஜனநாயகம், இப்படி தமிழ் மக்களின் ரணங்களின் மேல் நின்று கூத்தடிக்கின்றனர்.

தமிழ் மக்களை நம்பக் கோருகின்றனர். நம்ப வைக்கின்றனர். இதை கேள்வி கேட்க முடியாது. சுய சிந்தனையை இழந்த மலட்டுக் கூட்டமாக மாற்றி, கொசிப்பை ஊடகவியலாக்குகின்றனர். தமிழ் மக்கள் மேல் பொய்யையும் புரட்டையும் பேந்து விடுவதே, இவர்கள் நடத்தும் ஊடக தர்மமாகின்றது. தமிழ் மக்கள் சுயமாக சிந்திப்பதையோ, சுயமாக முடிவுகளை எடுப்பதையோ அனுமதிப்பதில்லை. இதை தமக்கு எதிரானதாக கருதுகின்றனர். மக்கள் உண்மைத் தன்மையை அறியக்கூடாது என்பது, இவர்களின் மையக் குறிக்கோள்.

உதாரணத்துக்கு சூசை பற்றிய புலியெதிர்ப்பு மற்றும் அரசு சார்பு தகவல்கள். மறுபுறம் புலிதரப்பு தகவல்கள். மக்கள் இதில் இருந்து எதைத் தெரிந்து கொண்டனர். இந்தத் தகவல் எதை தான் கூறிவிட்டு சென்றுள்ளது.

சூசையின் மீள் வருகையும் அவரின் உரையும். இந்த தகவல் பின்னணியில் எது உண்மை எது பொய்? சூசையின் வருகையின் பின்னும் கூட, நாம் இனம் காணமுடியாது உள்ளது. இதே போல்தான் புலிகளின் ஆயுத முகவர் பத்மநாதன் விவகாரம். புலியெதிர்ப்பு இணையங்கள் வெளியிட்ட எந்தக் கருத்தையும், சமூக பொறுப்புணர்வுடன் மீள அணுகியுள்ளனரா? எனின் இல்லை. மக்களின் தலையில் அரைத்துக்கொண்டு அவர்கள் மேலேயே பேந்தவர்கள் தாம் புறம்போக்குகள் போல் மௌனமாகி விடுகின்றனர். இது போன்ற புதிய தகவலை புனைய தொடங்கிவிடுகின்றனர்.

புலிகள் கூட இப்படித்தான். பிரபாகரன் மகன் வெளிநாட்டில் படித்ததாக வெளியாகிய தகவல் முதல் அவர் இன்று புலிகளின் விமானப்படை பொறுப்பாளர் என்ற புலியெதிர்ப்புத் தகவல்களை எப்படி கையாண்டனர். பிரபாகரன் மகனை விமானப்படை தளபதியாக காட்டுகின்ற இலங்கை அரசின் செய்தியை தமது செய்தியாக்குகின்றனர். அரசு தரப்புச் செய்திகள் அல்லது எதிர்க்கட்சி செய்திகள், சிங்கள இனவாதச் செய்திகள் தமக்கு சார்பாக இருக்கும் போது, அதை வைத்து தம்மை மிதப்பாக்க முனைகின்றனர். இதில் உண்மைத் தன்மை பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது. இப்படி எத்தனை தகவல்கள். மக்களை முட்டாளாக்கி, முடமாக்கி தம்பக்கம் வைத்திருக்க வேண்டும் என்ற வக்கிரம். மக்களின் அறியாமை தான், இவர்களின் ஊடகவியலின் மேன்மை.

சூசை விவகாரத்தையே எடுப்போம். சூசை தொடர்பான சம்பவம், உண்மையா பொய்யா என்பதே முதலில் புலி மற்றும் புலி எதிர்ப்புத் தளத்தில் சர்ச்சையாகியது. பின் சம்பவம் ஒன்று நடந்தது உண்மையாகியது. இதையும் புலிகள் நீண்ட மௌனத்தின் பின் ஒத்துக் கொள்கின்றனர். அதை பின் சூசையே உறுதி செய்கின்றார். இது போன்ற பெரும்பாலான தகவலை புலிகள் மறைப்பது ஏன்? மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் உள்ள அக்கறை தான் என்ன?

அடுத்து இந்த சம்பவம் என்ன? இது முடிவு காண முடியாத சந்தேகத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சர்ச்சையாகவே தொடருகின்றது. சூசை சொல்வதோ அல்லது புலியெதிர்ப்பு சொல்வதோ நம்பக் கூடிய வகையில் இல்லை என்பதையே, கடந்தகால அனுபவம் எமக்கு காட்டுகின்றது.

சூசைக்கும் புலிக்கும் இடையில் முரண்பாடு எதுவுமில்லை என்றும், இல்லை முரண்பாடு தான் என்று புலியெதிர்ப்புத் தகவலும் கூறுகின்றது. எதையும் தமிழ் இனம் இதில் தெரிந்து கொள்ள முடியாது. தலைவரின் காலம் முழுக்க அவர் பதவி இழக்காமல் அதே அதிகாரத்துடன் வாழ்ந்தால், சூசை சொல்வது சரியாக இருக்கும். இப்படி இதற்குள் நாம் விடையத்தை ஆராய வேண்டியளவுக்கு, புலிகளின் வரலாறு நேர்மையற்றது.

இப்படி தகவல்கள் புனையப்படும் விதமும், கட்டுக்கதைகளுமே தமிழ் ஊடகவியலை ஆக்கிரமித்து நிற்கின்றது. புலிகளின் வரலாற்றில் இருந்து கடந்த காலத்தையு ஒரிரு சம்பவத்தைப் பார்ப்போம்.

கருணா விவகாரமும், அதைத் தொடர்ந்து திருகோணமலை பொறுப்பாளர் பதுமன் திடீரென்று தோன்றி தான் தான் இன்னமும் திருகோணமலை தளபதி என்று ஊர் உலகம் அறிய அறிவிக்கவில்iiயா? பின் அவருக்கு என்ன நடந்தது? அந்த திருகோணமலை தளபதியின் கதை இன்னமும் மர்மம் தானே. மக்களுக்கு இதன் மூலம் புலிகள் எதைச் சொன்னார்கள்.

கருணா விவகாரம் வந்தவுடன், இரத்தக்களரி இன்றி இது தீர்க்கப்படும் என்று தமிழ்ச்செல்வன் தலைவரின் பெயரில் கூறினாரே, அது என்னவாயிற்று?

இதற்கு சற்று முன் புலிகளின் தலைவர் பிhபாகரன் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் இது போன்ற கதை அரங்கேற்றப்பட்டதை பலர் மறந்திருக்கலாம். பிரபாகரனுக்கு அருகில் கருணா மற்றும் பதுமன் அமர்ந்து இருந்தது, எந்த தளபதிக்கும் இல்லாத விதிவிலக்காக இருந்தது. ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, அருகில் கிழக்கு தளபதிகள் உள்ளனர் என்றார். எமக்கு இடையில் எந்த முரண்பாடும் கிடையாது என்றனர். அந்த பத்திரிகை மாநாட்டில் இருவரும் திருட்டு மூஞ்சையுடன் முழுசிக்கொண்டு இருந்ததை நாம் எப்படி மறந்துவிட முடியும். அந்த இருவரின் கதியும் என்ன, அந்த பதவிகளுடன் அவர்கள் இன்று இல்லை.

இதற்கு சற்று முன் மாத்தையா பிரபா முரண்பாடு பற்றிய செய்திகள். புலிகள் இதை பொய்ப் பிரச்சாரம் என்றனர். இந்தியா மற்றும் இலங்கை அரசின் பொய் என்றனர். அவர்கள் இருவரும் ஒன்றாக நிற்கும் படத்தைக் கூட புலிகள் உலகுக்கு காட்டினர். கடைசியில் மாத்தையா கதை முடிக்கப்பட்டது.

இப்படி எத்தனையோ தகவல்கள், செய்திகள், காட்சிகள் எல்லாம் புலிகளின் வரலாற்றில் பொய்யாக்கப்பட்டுள்ளது. பாவம் சூசை என்பதா அல்லது புலியெதிர்ப்பை பாவம் என்பதா? காலம் இதில் ஒன்றுக்கு பதிலளிக்கின்றது.

இப்படித்தான் விடையங்கள். திரிந்தும், புரண்டும், பொய்யாகியும் புணர்ந்து கிடக்கின்றது. புலிகள் ஒருபுறம் என்றால், புலியெதிர்ப்பு அதேபாணி அதே யுத்தி. தகவலை விரும்பியவாறு தயாரித்து, பின் அதைச் சமூகம் மீது பேலுகின்றனர். ஆதாரங்கள், அடிப்படைகள் எதுவுமின்றி தகவலை தமக்கு ஏற்ப செய்தியாக்குகின்றனர்.

இதற்குள் ஆய்வுகள், அறிக்கைகள் வேறு. புலிகளின் வழமையான சுத்துமாத்தைப் பயன்படுத்தி, அதைத் திரித்து புரட்டிப் போடுவதே புலியெதிர்ப்பின் ஊடகவியலாகிவிட்டது. சேற்றைக் கலக்கி மீன்பிடிக்க முனைகின்றனர்.

இந்த வகையான செய்திகள் சமூகத்தினரிடையே கொசிப்புத் தன்மையைத்தான், சமூகத்தின் பண்பாடாக்குகின்றனா. கொசிப்பதும், அதற்காக செய்திகளை பார்ப்பதுமாகி, அதுவே வீங்கி வெம்புகின்றது. மறுபக்கத்தில் தமிழ் இனம் அழிக்கப்படுகின்றது. தமிழினம் என்ற அடிப்படையே தகர்க்கப்படுகின்றது. தமிழினத்தை அழிப்பது தான், ஊடகவியலாகின்றது. மக்கள் சுயமாக சிந்தித்து செயலாற்றுவதையே மறுக்கின்றது. அது தான் புலி மற்றும் புலியெதிர்ப்பின் அரசியல் சாரமாகும்.

No comments: