தமிழ் அரங்கம்

Monday, November 19, 2007

சிங்கள, புலி அரசியலை மதிப்பிடும் போக்கு: 4

ப. வி. ஸ்ரீரங்கன்

17. 11. 2007


". . . சமயத்தில்

எதிரி கிடைக்காவிட்டால்

ஊரில் மனிதர்களும்,

மின்சாரக்கம்பங்களும் உண்டு

அதுவும் கிடையாத போது

நெறி பிறழாத ஒரு தோழனை. . .


துப்பாக்கி சூடாறக்கூடாது பாரும்

நியாயப்படுத்தத் தலைமைப் பீடமும்

பிரசுரம் அடிக்க வெளியீட்டுப் பிரிவும்

உள்ளன தோழரே

விடுதலைப் பாதையில் வீறு நடை போடும். "

-இளவாலை விஜயேந்திரன்.

நாம் தனி நபர்களாகவே இருக்கிறோம். நம்மிடம் எந்தக் காரியம் குறித்தும் கருத்துக்களைத் தவிர காரியம் இருப்பதில்லை. நாம் ஒன்று கூடிக்கொள்வதற்கான எந்தவொரு வழியும் சிறப்பாகவில்லை. மக்களின் அனைத்துப் பிரச்சனைகளும் பிரச்சனைகளாகவே தொடர்ந்திருத்தி வைக்கப்படுகிறது. அதைப் போக்குவதற்கான நோக்கு இந்த உலகத்திடமில்லை. புவிப் பரப்பின்மீதான இடைச் செயல்கள் மனித வாழ்வைப் பூண்டோடு அழிக்கும் நிலைக்குச் சென்றபடியேதான் இருக்கிறது.

இந்த நிலையை மனிதர்களே எட்டி விட்டதாக அறிஞர்கள் சொல்வதும், அதைப் போக்குவதற்கான எந்த நெறியுமின்றி அவர்களே வெறுங் கையோடு இருக்கையில் அமர்ந்து வெற்றுப் புன்னகை செய்வதும் நம் காலத்தின் உற்பத்திப் பொறி முறையின் தலைவிதியாகப் போகிறது.

"மக்களிடமிருந்து கற்று, அதை மக்களிடமே வழங்கல்"என்று எவனொருவன் கத்து, கத்தென்று கத்தித் தொலைத்தான். கூடவே"கற்றறி, கற்றறி, இன்னுமொரு முறை கற்றுத் தெளிவுறு"என்றான். -அவன் புரட்சிக்காரன், சோவியத்தை நிறுவிக்காட்டினான்.

அறிவைப் பெறுதலுக்கான எந்த வழியையும் மூடிவைத்துவிட்டுப் புலி அமைப்புக்குள்ளேயிருந்து வெடித்துச் சிதறிவிடும் "எறிகணையில்" தேசியத்தையும், தமிழுரிமையும் காணுமொரு தலைமுறைக்குத் "தம்மை-எம்மை"ப் புரிகிறதுக்குப் புறத்தே பற்பல தடுப்புச் சுவர்கள்"தமிழீழம், தேசியம், தனிநாடு, தலைவர்-இயக்கம்"என்ற வடிவில்.

மீளவும் ஈழத்துக்கான-பயங்கரவாதத்துக்கெதிரான போர்கள்:

இலங்கையில் மீளவும் யுத்தம் தொடர்கதையாகிவிட்டது!

கடந்த காலத்தில் நிகழ்ந்த யுத்தத்துக்கும் இன்றைய யுத்தத்துக்கும் உள்ளடகத்திலும், உருவத்தில் மிகப் பெரிய வேறுபாடு நிலவுகிறது. முன்பு இலங்கைப் பயங்கரவாத இராணுவம் இனவழிப்பைச் செய்யுமொரு இராணுவமாகக் கட்டமைக்கப்பட்டு வந்தது. இன்று அந்த இராணுவமானது "தமிழர்களின் ஜனநாயக அரசியல் முன்னெடுப்பாளர்கள்" பலாராலும் பயங்கரவாதத்துக்கு எதிரான படையாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களுக்கான பிரச்சனையே என்னவென்றுவுணர முடியாதளவுக்குப் போராட்டம் நடைபெறுகிறது.

இலங்கை போன்ற குட்டித் தீவில் தனியரசுக்கான தமிழர் போராட்டமானது வெறும் மேம்போக்கான ஒரு "ஆண்ட பரம்பரை"க் கனவானதாகும். ஆனால் இலங்கைப் பாசிச அரசின் இனவாதச் சிங்களச் சியோனிசமானது எப்பவும் பாராளுமன்ற அரசியல் நெருக்கடியை தற்காலிகமாகவேனும் திசை திருப்புவதற்காக இந்தத் தமிழர் விரோத இனவொதுக்கல் அரசியல் நகர்வைச் செய்தே வருகிறது. இதை எதிர்கொள்வதற்கான போராட்டமானது எந்தத் திசை வழியைப் பின்பற்றியதென்பதில்தான் நமது எதிர்காலம் தங்கியிருந்தது. எமது போராட்டத் திசைவழி அதே பாராளுமன்றச் சகதியைத் தழிர்களின் பேரால் ஏற்படுத்தும் ஒரு சட்டவாக்க எல்லையைத் தமிழர்களின் பெயரால் ஏற்படுத்தித் தமிழர்களை ஆளமுனையும்"ஆண்ட பரம்பரைக் கனவு"வெறும் நிர்பந்தப் போருக்கு இதுவரைத் தமிழர்களைத் தள்ளி, அவர்களது சகல குடிசார் உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது. இங்கே மனிதவுயிர்ப்புக்கூட போராட்டத்துக்கான தேவையோடே கருத்தாடப்படுகிறது. எந்தப் பக்கம் பார்த்தாலும்"போராடு, போராடு"என்பதாகவும், தற்கொலைக்காக மட்டுப்படுத்தப்படும் உயிர்வாழ்வு, விடியலுக்கான உயிர் ஆயுதமாகவும் குறித்துரைக்கப்படுகிறது.

இத்தொடர் நடவடிக்கைகள் மனித வாழ்வின் மிகக் குறுகிய வழிகளைத் தகவமைத்துக்கொண்டு ஒரு தேசத்தை விடுவிக்க முடியுமெனப் பொய்யுரைப்பது நமது காலத்து ஊழ்வினை! இத்தகைய கொடுமையான மனிதவிரோத அரசியலைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஜனநாயக மறுப்பாக- உலகத்தில் தனிமைப்படும் தமிழ்பேசும் மக்களின் "சுயநிர்ணய உரிமை"சிங்களச் சியோனிசத்தின் வெற்றியாகவும் , தமிழ் மக்களின் நியாய வாதத்தைக் கையிலெடுத்த புலிகளின் தோல்வியாகவும் நாம் கருத முடியாது. அமெரிக்காவானது ஒவ்வொரு படிமுறையாகப் புலிகளை முடக்குவதற்காகச் செய்யும் காரியங்களுக்குள் அப்பாவித் தமிழர்களிடம் தட்டிப்பறித்த பல்லாயிரக்கணக்கான பணங்கள்வேறு முடங்கிக் கொள்கிறது.

இலங்கையரசு புலிகளுக்கெதிராக-தமிழ் பேசும் மக்களுக்கெதிராகச் செய்யும் இனவொடுக்குமுறைப் போரை"பயங்கரவாதத்துக்கு எதிரானது"என்றால், இலங்கைச் சமுதாயத்துள் எது பயங்கரவாதமாகிறதென்பதே எம் கேள்வியாகிறது ? மக்கள் அன்றாட வாழ்வியல் முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க முடியாது திண்டாடும்போது, தமது உரிமைகள் குறித்தவர்கள் சிந்திப்பதற்கான தார்மீக மனத்திடமும் அவர்களிடத்திலின்றி, அவர்கள் உயிர்வாழும் ஆதாரங்களுக்காக ஏங்கிகிடக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களின் குடிசார் வாழ்வியல் பண்புகள் யாவும் இல்லாதொழிக்கப்பட்டுவரும் அரச-இயக்க ஆதிக்கங்களால் மக்கள் தினமும் பலிகடாவாக்கப்பட்டும் வருவது மிகக் கொடுமையானதாகும்.

புலிகள் தம்மளவில் கேடுகெட்ட அரசியல் போக்குகளை உள்வாங்கிய வலதுசாரி அமைப்பானாலும் அது தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகச் செயற்படுவது எப்படியென்பதே முக்கியமாக இனம்காணவேண்டிய இன்றைய அவசியத் தேவையாகும். புலிகளின் வர்க்க நிலை இவ்வளவுதூரம் மக்களை அழிவுப்பாதைக்கிட்டுச் செல்வது, அந்த அமைப்பின் இருப்பையும் அழித்துக்கொள்வதற்கான அரசியல் மதியூகத்தைச் சிங்களச் சியோனிசத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்தபடி நகரும்போது, எந்தவொரு அரசியல் முன்னெடுப்புமற்றுக் கிடக்குமொரு சூழலில் புலிகள் போருக்குத் தயாராவது எந்தத் தளத்திலும் அதன் இருப்பைத் தக்கவைப்பதில் சாத்தியமிருக்காது. புலிகளின் இந்த வரம்புமீறிய மீள் போராட்டத் திசைவழிக்கு நிச்சியமான அவசியமொன்றிருப்தாக எந்தக் காரணமுமில்லை. இது உள்ளிருந்து புலித் தலைமையால் எடுக்கப்பட்ட நகர்வாக இருக்கமுடியாது. புலிகளைப் பலவீனப்படுத்தித் திசைவழியை எவரெவரோ தகவமைத்துக் கொடுக்கும் ஒரு நிர்ப்பந்தம் இன்றைக்குப் புதிதாக நடப்பதல்ல. ஆரம்பத்திலிருந்து இதுதான் கதை.

புலிகளின் அதீத அரசியற் குழு வாதமானது ஒற்றைத் துருவ இயக்கமாக அதை வளர்த்தெடுத்தபோது, இதை நிலைப்படுத்திய அதன் அரசியல் தலைமையானது தமிழ் மக்கள் நலனைத் துவசம் செய்வதில் முனைப்புறும் இன்னொரு பகுதியைத் தோற்றுவிக்கும் இயக்கப்பாட்டை கணிப்பிடுவதில் தவறிழைத்தது!அல்லது திட்டமிட்ட சதிவலையை பின்னிய வெளியுலகச் சக்திகள் புலிகளின் அரசியல் தலைமையைப் பயன் படுத்தியுள்ளது-பயன்படுத்தி வருகிறது!

துரத்தியடிக்கப்பட்ட ஈழப்போராட்டக் குழுக்களைத் துரோகியாக்கிய அரசியற் பரப்புரைகளைப் புலிகள் உருவாக்கிக்கொண்ட சூழலை மிகவும் கவனமாக அவர்கள் மறுத்தொதுக்குவதும், அதன் நீட்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாசிசக் கொலைகளும் இதனூடாக வலுப்பெற்ற புலியெதிர்ப்பு முகாமும் தமிழரின் சுயநிர்ணயவுரிமையைக் களைந்தெறிவதற்கானவொரு சதிவலையை கருத்தியல் தளத்தில் மெல்லவுருவாக்கிக்கொண்டுள்ளது. இதன் உச்சபட்ச நீட்சியே மாற்றுக்குழுக்களை ஒட்டுக் குழுக்களெனும் சதியுடைய மொழிவாகும். இன்றிவர்கள் மக்களுக்குத் தம்மைத் தவிர வேறெவரும் காப்பர்களாகமுடியதென்ற கதையாகப் பரப்புரையிட்டுக்கொள்கிறார்கள்!இவர்களே புலி எதிர்பார்களாகவும், இலங்கை-இந்திய ஆதரவர்களாகவும், இலங்கை-இந்தியாவே மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாக் காட்டிவருகிறார்கள். இன்றிந்தச் சதியானது இலங்கை அரசின் அனைத்துவகைக் கறைபடிந்த காட்டுமிராண்டித் தனங்களையும் புலிகளின் பெயரால் கழுவிப் புனிதச் செயலாக்கி விடுகிறது, இன்று!இதற்கு நல்ல உதாரணம்: ரீ. பீ. சீ. வானொலியின் அரசியல் கலந்துரையாடல் மற்றும் தேசம் நெற்றில் இடம்பெறும் வெற்று விவாதங்கள்-தனிநபர் வாதம் மற்றும் சேறடிப்புகள், கே. ரீ. இராஜசிங்கத்தினது கைக்கூலித்தனங்கள் மற்றும் கண்றாவிகள். இது குறித்துப் பின் தனியான கட்டுரையில் விவாதிப்போம்.

பொருளாதார ஊக்கம் விரிக்கும் யுத்தம்:

இந்த நூற்றாண்டின் பொருள் வயப்பட்ட ஊக்கங்கள் யாவும் சாமானிய மக்களின் உரிமைகளைப் பறிப்பதிலும், அவர்களைப் பன்முகப்படுத்தப்பட்ட கருத்தியல் மற்றும் வன்முறைசார்ந்த நடவடிக்கைகள்(சட்டவாக்கம், யுத்தம்)மூலமாக அடக்கியொடுக்குவதில் மிக நுணுக்கமாகச் செயற்பட்டு வருகிறது. இது எந்தப் பகுதி மக்களானாலும், அவர்கள் உழைத்துண்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இத்தகைய அளவுகோலுக்கு இரையாவது தொடர்ந்தபடிதாம் இருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் மற்றும் தார்மீகப் பலம் இந்த மக்களிடமில்லை. இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பறித்து ஏப்பமிட்டு மக்களைத் தினமும் அடிமைகொள்வதும், அடக்கியாளத் திட்டமிடப்படுவதும் தொடர்ந்தபடியே இன்றையப் பொருளாதார நகர்வு இடம் பெறுகிறது.

இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது. இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது. இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு மெல்லத் தகர்ந்துவந்தது. என்றபோதும் இத்தகைய இனஅழிப்பானது அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையின் அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான"முகமூடி"யுத்தமாக வெடிக்கிறது. இது தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் காவுகொண்டு அத்தகைய இடங்களைக் இராணுவக் குடியேற்றமாக்கித் தமிழ் பேசும் மக்களைத் தனது குடியேற்றத்துக்குரிய பொருளுற்பத்தியில் பயன்படுத்தி வருவதோடு தமது புறத் தேவைகளையும் நிறைவு செய்யுங் காரணிகளாக்கி வைத்திருக்கிறது. இதற்கு இன்றைய யாழ்ப்பாணம் மற்றும் சமீபத்தில் புலிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சாம்பூர், கிழக்கு மாகணம் போன்ற தமிழர் பிரதேசங்கள் நல்ல எடுத்துக்காட்டு!

இது ஒருவகையில் வளர்வுற்றுக் கூர்மையடையும் முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கும், பாராளுமன்ற ஆட்சி நெருக்கடிக்கு மாற்றானவொரு பண்பாக வளரும் இலங்கை இனவொடுக்குமுறைக்குச் சாதகமான ஊற்றாகவும் இனம் காணப்பட்டு"உயர் பாதுகாப்பு வலையம்"என்ற போர்வையில் தரணம் பார்த்து ஏவும் அம்பாகச் செயற்படுத்தப்படுகிறது. இலங்கையின் யுத்தநெருக்கடி, ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்து பல படுகொலைகள்(தமிழ்ச் செல்வன் போன்றவர்களின் படுகொலைகள்) நிகழ்த்தப்படுகின்றன. அக்கொலைகளுக்குப் பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் வியூகமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும். தமிழ் மக்களின் உயிரை, உடமையை, மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே நம்மில் பலருக்குள்ள அரசியலறிவாகும். இந்தத் தலைமைகளுக்குப் பின்னால் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது கொலைகளினூடே தமது நலன்களை வலுவாகப் பாதிக்கும் தமிழ்த் தேசியவாத்தத்திடமிருந்து காக்க முனைவதுமட்டுமல்ல, மாறாகப் பொருளாதார ஏற்றவிறக்கத்தின் முரண்பாடுகளைத் திசை திருப்பித் தமது ஏவல் நாய்களான ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது ஆட்சியையும் தக்க வைப்பதே முதன்மையான நோக்கமாகும். இந்த நோக்கத்தைச் சரிவரச் செய்யாத ஓட்டுக்கட்சிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, இராணுவப்பாசிச ஆட்சிகளைக்கூட இலங்கைபோன்ற குறைவிருத்தி மூன்றாமுலக நாடுகள் செய்வதற்கும் பற்பல சாத்தியங்களுண்டு. எனினும் இலங்கையானது பல்லாண்டுகளாகத் தமிழ் மக்கள்மீது படுகொலைகளைச் செய்வது அவர்களின் ஆன்மாவைத் திணறடித்து, எந்த நிலையிலும் அடிமைகளாக்கும் வியூகத்தையுங் கொண்டிருக்கிறது.


இந்தச் சூழலில்தாம் இலங்கையின் யுத்த மற்றும் அரசியல் நகர்வும், புலிகளின் போராட்ட நிலைமையும் தமிழ்பேசும் மக்களை அடிமைகொள்ளும் அராஜகத்தைக் கடைப்பிடித்து ஒப்பேற்றப்படுகின்றன!இவைகளை நாம் போலித்தனமான அரசியல் கருத்துகளால் சமப்படுத்தி, அநுமதிப்பது எங்கள் மக்களுக்கான நலனாக இருக்கமுடியாது. காலம் கடந்த அரசியல் வியூகங்கள் எதுவும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தகமையைக் கொண்டிருக்க முடியாது. இந்தவுண்மை நமது தேசிய விடுதலைப் போராட்ட செல்நெறியூடே நாம் படிப்பினைகளைக் கொண்டிருக்கும் இன்றைய யுத்தகால நகர்வில் வெகுவாக உணரத்தக்கவொரு படிப்பினையாகும். எனவே நமது மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் இந்தவகை யுத்தங்காளால் நிறைவேற்றப்பட முடியாதென்பதும், நமது அரசியல் உரிமைகள் வெறும் "போட்டி யுத்தங்காளால்" வென்றெடுக்கும் விடையமில்லையென்பதும் வெளிப்படையாக விமர்சிக்கப்பட வேண்டியதாகும்.

உண்மைகளைப் பகுத்தறிதலும், ஈழப் போரும் அது காணத்துடிக்கும் பொருளுலகமும்:

பெளதிக மற்றும் மனோபாவ அடிப்படைக் கட்டுமானம் சிதிலமடைந்தவொரு வெளியில் உருவாகும் மனிதர் எத்தனை கருத்துக்களை, உண்மையைச் சொன்னாலும் அதை உள்வாங்கி ஒப்பீடு செய்து, ஆய்ந்தறியும் மனத்தைக் கொண்டிருப்பதில்லை. இதை நாம் தெளிவாகத் தமிழ் சமுதாயத்திடம் உணரமுடியும். இந்தச் சமூகத்தின் அண்ணளவான தனித் தன்மையானது தொங்குநிலையானது. அதாவது ஒரு அதீத மனிதருக்கு விசுவாசமாக அல்லது அவரைக் கடவுளாக ஏற்கும் மனநிலைக்குள் கட்டுண்டுகிடப்பதாகும். குறிப்பாக எதுவுமே அறியாத அல்லது அறிவினில் தாழ்ச்சியானவொரு தலைவரைத் தெய்வமாகவும், பெரும் ஆசானாகவும் ஒருவர் உணர்வாரானால் அவரது நிலை அந்தத் தலைவரைவிட மோசமாக இருக்கவேண்டும். இன்றைய ஈழத்துமனிதர்களிடம் இந்த நோய் மிகமிகப் பரவலாகி வருவதை நாம் கண்ணுற்று வருகிறோம். எனவே நமது சமூகத்தின் வளர்ச்சியை ஒரு கட்டத்தில் முடக்கிவிட்டிருக்கும் இயக்க ஆதிக்கமானது சமுதாயத்தின் பொருளியற்கட்டுமானதையும் அதன்மீதான முரண்பாட்டையும் திட்டமிட்ட முறையில் ஸ்தம்பிக்க வைத்துத் தமிழ் மக்களின் பொருள் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறது. இங்கே ஒட்டுப் பொருளாதாரப் பொறிமுறையை மேற்குலக எஜமானர்களின் துணையுடன் இறக்குமதியாக்கும் அமைப்பைத்தாம் நாம் "தரகு"முதலாளியமென்கிறோம். புலிகள் கூறும் அல்லது அவர்களது கருவூலத்தில் அர்த்தங்கொண்ட பொருளாதார முன்னெடுப்புகள், கட்டுப்படுத்தித் தம்மால் இயக்கப்படும் இன்றைய பொருளாதார முன்னெடுப்பானது உள் மட்டத்தில் யுத்தத்துக்கு உந்துதலைக் கொடுக்கவும், அத்தகைய தரணத்தில் மக்களை பட்டுணிச் சாவிலிருந்து காக்கும் பொருளாதார முன்னெடுப்பல்ல. அவர்கள் சாரம்சத்தில் புதிய தரகு முதலாளிகளாகி வருவதற்கும், அதை நிலைப்படுத்தித் தமிழ் பேசும் மக்கள் இனத்தில் ஆளும் வர்க்கமாக ஆதிக்கம் பெறுவதற்குமான ஒரு திட்டமிட்ட யுத்தத்தைச் செய்வதால் இனவாதச் சிங்கள அரசுக்கெதிரான மக்களின் உண்மையான எழிச்சி-மக்கள் திரள் போராட்டம் முடமாகியுள்ளது.

ஒரு முறைமையின் கட்டுமானமானது வளர்வுறுவதற்கு அடிப்படையில் அந்த முறைமையைக் கொண்டிருக்கும் மனித சமூகத்தின் வளர்ச்சியோடு தொடர்புடையது. அந்த மனித சமூகமானது தனது வளர்ப்பு முறைமையில் பின்தங்கிய நெறிகளைக் கொண்டதாயின் அதன் மொத்தக் கட்டுமானங்களும் பின்தங்கியதே!இங்கே மனிதவுருவாக்கமானது எந்தப்பக்கம் திரும்பினாலும் அடிக்கட்டுமானமான பொருளாதாரத்தை கொண்டே-சார்ந்திருப்பதை நாம் நுணுக்கமாக அறியலாம். இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை காப்பதற்கான மேற்கட்டுமானம் எப்பவும் அந்தப் பொருளாதார நெறியாண்மையின் விருத்தியின் பலாபலனைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இதுவே நிறுவனத்தளத்தில் மனிதர்களைக் கட்டிப்போடுவதும், அத்தகைய நிறுவனங்களைக்கடக்க முடியாது மனித மனோவளர்ச்சி முடங்குவதையும் அன்றாடம் நாம் பார்க்கமுடியும். நிறுவனத் தளமானது தனது தாயான சமுதாயத் தளத்தைப் பிறிதொரு முறையில் மட்டுப்படுத்த முனையும்போதே சமூகத்தில் அமுக்கம் ஏற்படுகிறது. இந்த அமுக்க நிகழ்வுகளை மனித சமூகத்திலுள்ள சிறுசிறு தன்னார்வக் குழுக்கள் முன்னெடுக்கின்றனர். இதைப்புரியாத தனிநபர் இயக்கவாத மாயையில் கட்டுண்டு இத்தகைய தன்னார்வச் செயற்பாட்டைத்"துரோகம்"என்ற அடைமொழியில் நிறுவிக்கொள்கிறார். இங்கே புலிகள் கூறும் அல்லது செய்யும் அரசியல் தமிழ் மக்களுக்குள் அவற்றியாவதற்கான நிலைமைகள் இங்ஙனமே கட்டப்படுகின்றன. இதுவே யுத்தத்தைச் சொல்லியே முழுமொத்த மக்களையும் ஒட்ட மொட்டையடிக்கும் சூழலுக்கும் ஒரு வகையான உள ஒப்புதலை அவர்களுக்கு மறைமுகமாக அங்கீகரித்திருக்கிறது. இவையெல்லாம் ஈழத்தில் தமிழ் பேசும் மக்களுக்குச் சுதந்திரமான சமத்துவமான-ஒடுக்கு முறையற்ற, சாதிவேறுபாடுகளற்ற, பெண்ணடிமைத்தனமற்ற, சுரண்டலற்ற வாழ்வுண்டு என்ற நம்பிக்கையின் மீது கட்டப்பட்ட அதீத ஏமாற்று வித்தைகளாகவே இருக்கிறது!

இந்தச் சூழலில்-காலவர்த்தமானத்தில் மனித சமூகத்தின் மீதான அதீத நம்பிக்கைகளும், அந்தச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்மீதும் அளப்பெரிய பொறுப்பும் சுமத்தி, இந்த நம்பிக்கைமீதான மிகையான எதிர்பார்ப்புகள் எங்ஙனம் மனித சமூகத்தின் எதிர்கால வாழ்வுக்கு உடந்தையாக இருக்குமென்பதை நாம் வெறுமனவே நம்பிக்கைகளாக்கிச் செயற்படமுடியாது. இன்றைய மக்கள் சமுதாயமானது இருவேறு நோக்குகளை முன் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது. அது கடந்த கால மூலதனத்தைப் பெருக்குவது, காப்பதென்பதைத்தாண்டி, இன்று விஞ்ஞானத்தையும், காற்றையும் மூலதனத்தினது இடத்துக்கு பெயர்த்தெடுத்து மூலதனத்தை வெறும் சூட்சுமமான இயக்கமாக்கியுள்ளது. இந்த அறுதியற்ற சுழற்சிப்போக்கை சமூகத்தின் அதிர்வில் பொருத்துகின்ற இன்றைய விஞ்ஞானத் திருவிளையாடல் மேன் மேலும் மனித சமூகத்தின் உழைப்பை வெறும் அர்த்தமற்றவொன்றாக்கிவிட்டு-உழைப்பை இன்னும் கீழான நிலைக்குள் தள்ளிவிட்டு சமூகத்தின் இருப்பைத் தகர்த்து-உழைப்பவர்களை வெறும் உயிர் வாழும் மனிதக் கூட்டமாக்கிறது. இதற்கான விஞ்ஞானத்தின் அதீத மனித மூளை உழைப்புத் தனது சக பிரிவை வெறும் அர்த்தமற்ற, செயலூக்கமற்ற பிரிவாக்கி அதைச் சந்தைப் படுத்தும் ஒரு உப தொழிலாக்கி"உழைபுச் சந்தையை"திறந்துள்ளது. இங்கே புலிகள் சொல்லும் அல்லது செய்யும் அரசியலில் உள்ளார்ந்து இருப்பது இத்தகைய உலகப் பொது நிலையின் பிரதிபலிப்பாகும். இவர்கள் நவீனவுலகத்தில் தமது வளங்களை மிக நன்றாக அறிந்து வைத்து அவற்றைக் கையகப்படுத்தி மக்களை அத்தோடிணைத்துச் சுரண்டுவதற்கானவொரு சட்டப்படியான அங்கீகாரத்துக்குக்காகச் செய்யும் இந்தப் பேர யுத்தத்தை நாம் வன்மையாக எதிர்ப்பதும் மட்டுமல்ல. இத்தகையவொரு போரினால் மக்களை ஏமாற்றிப் பலியிடுவது தமிழ் பேசும் மக்களின் விடிவுக்கானதல்ல என்பதைத் தெளிவாகச் சொல்லியே ஆக வேண்டும்!

புலிகளுக்கும், பாசிசத்துக்குமான நெருக்கம் இந்த முறைமையிலேயே விளங்கிக் கொள்ள முடிகிறது. இங்கே நிறுவனப்பட்ட புலி அரசப் பொறிமுறையானது தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்துவதும், அதன் சாரம்சமாக இருக்கும் பன்மைத்துவ நிகழ்வுப்போக்குகள் மக்களை அடிமைப்படுத்தும் தறுவாயில் அந்த அமைப்பில் பிரத்தியேகமான எந்தக் கருத்தியல் மற்றும் முறைமைகளும் ஜனநாயகப் பண்பைக்கொண்டிருப்பதற்கு வாய்பே இல்லை. இதைத்தாம் அராஜகமென்கிறோம். இங்கோ கொலையும், பொல்லாத அடக்கு முறைகளும் மக்களின் அமைப்பாண்மையை உடைத்து மக்களின் ஐக்கியத்தை-வலுவை, ஆத்மீக உறுவுகளை இல்லாதொழிக்கிறது. இங்கே மக்களின் கூட்டுச் சமூகச் சீவியம் சிதைந்து உதிரிகளாகிவிடுகிறார்கள். இவர்களிடம் உயிர்த்திருப்பதே மேலெனப்படும் ஒரு குறைவிருத்தி மனோபாவம் இவர்களது பெளதிக மற்றும் மனோநிலையில் வலுவாக ஊன்றப்படுகிறது. இதனூடாகத் தமிழ் பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் ஒட்டச் சுரண்டித் தத்தமது கைகளுக்குள் போட்டுக்கொள்ள எடுக்கும் நடிவடிக்கைக்குப் பெயர் ஈழத்துக்கான நான்காம் கட்டப் போர் என்பதாக விரியப் போகிறது. இதுவே ஒவ்வொரு கட்டத்திலும் தமிழருக்கென்றொரு தாயகம் வேண்டுமென்றும், ஆண்ட பரம்பரை ஆளத்துடிக்கிறதென்றும் கோசமிடுகிறது. எமக்கென்றொரு நாடு வேண்டும் என்றும் பெரும் வீராப்புக் கோசம் போடுகிறது. இதற்குள் இருக்கும் சூட்சுமம் பொருள் குவிப்புத்தாம்.

மாதிரித் தமிழன், தமிழீழத்துப் போருக்கான ஊற்று:

இது மனித மனங்களின் தனித்தன்மை அபிவிருத்தியை வெறும் ஒத்தூதும் கும்பல் மனப்பாண்மைக்கு இட்டுச் செல்கிறது. இங்கே நடக்கின்ற ஒவ்வொரு கருத்துக்கட்டுமானம், பரப்புரைகளும் தனிநபரது தனித் தன்மையைக் காவுகொள்கின்றபோது அந்தச் செயலூக்கம் பொதுவான தளத்தில் ஒரு அமைப்பை முன்நிறுத்தும் கைங்காரியத்தை இந்தச் சமுதாயத்துள் எந்தக் குறுகீடுமின்றிச் செய்கிறது. அமைப்பாண்மையுடையவொரு இயக்கமாக வளரும் குறிப்பிட்டவொரு நலன்-அது சார்ந்த வர்க்கம் இத்தகைவொரு வெற்றுச் சூழலைத் தக்கபடி உபயோகிக்கும்போது அங்கே மனித மூளை, மனம் காய் அடிக்கப்படுவதாக நாம் பல முறை கூறுகிறோம். இதுவே இன்றைய புலிகளின் புரளிகளை நம்பும் தனிநபர் விருப்பாகவும்-அறிவாகவும் உருவாக்கப்படுகிறது. இந்த இயக்கப்பாட்டில் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுப் பூர்வமான ஜீவாதாரவுரிமைகளை இயக்க நலனுக்குத் தாரவார்ப்பதில்போய்முடிகிறது!-இவனே ஈழத்துக்கான ஆதரவுச் சக்தி-உத்தமத் தமிழன்!

மனித சமூகத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின், அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது ஈழத்து அரசியல் நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை, தனிநபர் துதிகளை, போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதிரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும். இந்தக் கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனு}டாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே. இங்கே நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.

ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கம் சார்ந்து உரையாடுவதும், எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது. உதாரணமாக:இன்று புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிகத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது, அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே. இவர்களுக்கு மிஞ்சிப்போனால் முப்பது வயதே நடக்கின்றது. கருத்தியல் தளம் உருவாகிவிடும் "மனத்தளத்திலிருந்து" நோக்கின் இது மிக நேர்த்தியவுணரத்தக்க ஆரம்பப் படிமங்களை உள்ளடக்கியதாக, அந்த மனிதத் "தனித்தன்மையை" நாம் அறிவது சுலபம்.

நவீனக் கருத்தாடல்கள் யாவும் மனிதவுரிமை, மனிதத் தன்மை, தனிநபர் சுயநிர்ணயம், சுயதெரிவு என்ற தளத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்தக் கருத்தாடல்களை வழிப்படுத்தும் மூலதன இயக்கமானது தனக்குகந்த வகையில் மனித மாதிரிகளைத் தெரிவு செய்வதில் இவற்றைச் சாதகமாக்கியபின்"பெரும் காதையாடல்களெனும்"மேற்குலக அகண்ட கருத்தாடற் பன்மைத்துவம் மனிதர்களின் விருப்பத்தின்மீதான தெரிவானதைத் தனித்துவமென்கிறது. ஆனால் இத்தகைய விருப்புறுதிகளைத் தெரிவு செய்து, அதையே தனிநபரின் விருப்பாகத் தகவமைத்து வரும் புலிகள் அமைப்பின் கருத்தியல் பலமானது எங்கிருந்து தனித்துவத்தை முன்னெடுப்பதென்பதை எவரும் ஒருமித்த குரலில் தெளிவுப் படுத்துவதாகவில்லை. கருத்தியில் பன்மைத்துவமானது சிந்தனையின் சுதந்திரத்தைக் கோரிக்கொண்டாலும், அந்தச் சுதந்திரத்துக்கான எல்லைகளையும், வரைமுறைகளையும் "அடிமட்டத்தின்" நலன்கள் வரையறுத்துப் புதிய தலைமுறையை உருவாக்கிவரும் ஆதிக்கமானது, எங்கே சிந்தனைச் சுதந்திரத்தை விட்டுவைத்திருக்கிறது. ஒவ்வொரு தனிநபரும் தனது தனித்துவமென்பதின் உள்ளடக்கம் இந்தவகைக் கருத்தியல் தளத்தை மேவிக் கொண்டு, அதன் நகலாகத்தாம் இருக்கிறது. இத்தகைய நகல்களைப் பெரும் கருத்தாடலென்று பின்னியெடுக்கும் சிந்தனை மட்டம் தமக்குள் முற்றுமுழுதானவொரு காலச் சிதைவை வற்புறுத்துகிறது! ஆனால், இணையங்களில் புலிகளைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் சில முகமூடி மனிதர்களுக்கு இது மட்டும் புரிவதேயில்லை. இவர்கள் நியூட்டன் விதியையும் தொட்டுச் செல்கிறார்களென்றால் பாருங்களேன்!

மக்கள் தாம் வரலாற்றைப் படைக்கிறார்கள். ஆனால் அந்த மக்களைக் காவுகொண்ட நவீன விஞ்ஞானமானது தனது சர்வ வியாபகத்தையும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதில்-ஒடுக்குவதில் வலுவாகச் செயற்படுகிறது எங்கிருந்தோ ஆட்டுவிக்கும் சூத்திரதாரியைப் பற்றியும், அந்தச் சூத்திரதாரியை உலகத்தின் முதல் தர எதிரியாகக் கண்டு, அதை எதிர்ப்பதற்கான வெகுஜனப் போரை முன் நடத்தும் அமைப்புகளே, அந்தச் சூத்திரதாரியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பினாமிகளாக இருப்பதற்கும், போலித் தேசியம் பேசி மக்களைப் பலியிடும் ஆளும் வர்கத்தின் கயமைக்கும்-உள் நோக்குக்கும் உள்ளே நிலவுகின்ற இயங்கியற் தொடர்ச்சிதாம் என்ன ? நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும். இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை. மாறாக அவர்களையின்னும் அந்நியப்படுத்தி, புரட்சிக்கு எதிரான வர்க்கமாக மாற்றும் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கையாக மாறுகிறது. இதுகூட இந்தவுலகத்தின் மூலதனப் பொறிக்குச் சாதகமாகவேயிருக்கிறது. இங்கே தேசியத் தலைவர் எல்லாவற்றையுமே செய்து முடிப்பாரென்னும் மனதைக் கண்முன்னே கொணர்ந்து சிந்தியுங்கள்!

தமிழர்களின் சமுதாய வளர்ச்சிநிலையானது அவர்களது பண்பாட்டு வளர்ச்சியிலிருந்து அணுகத்தக்க முறைமைகளில் பொருள்வளர்ச்சி உருவாகவில்லை. இந்தக் காரணத்தால் தமிழினம் ஒழுங்கமைந்த சமூக வளர்ச்சி நிலையை இன்னும் எட்டவில்லை. இந்தச் சமுதாயமானது வெறும் வீரப்புடைய நலிந்தவொரு இனக் குழுவாகும். இதன் பாத்திரத்தை விளக்குவதற்கு அதன் அடிப்படையான பொருள் வாழ்வை உற்று நோக்கியாகவேண்டும். இதன் அடிக் கட்டுமானம் வெறும் குறைவிருத்தியுடைய பழைய உற்பத்தி அலகுகளைக்கொண்ட ஆரம்பகாலச் சமுதாயத்தின் உள்வயப்பட்ட வளர்ச்சி நிலையிலிருப்பதை நாம் அறிந்து ஒத்துக் கொண்டேயாகவேண்டும். இங்கே புலிகள் விடும் கயிற்றை நாம் கட்டிப் பிடித்திழுக்கும் ஈழத்தேர் இன்னும் இருப்பிடம் வந்த பாடில்லை. அது வருவதற்கான அறிகுறி கிடையவே கிடையாது.

சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது. இந்த இயக்கப்பாட்டில் ஒருவர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்தே! சமீப காலமாகச் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலைகீழாக்கிவிட்டு வாழ்வது-புலிகளை ஆதரித்துக்கொண்டு புரட்சி பேசுவது, கயிறு திரிப்பது நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு. இது பல புரட்சிகர அமைப்புகளுக்குள் நிகழ்ந்து வருகிறது. இவர்களை நாம் ஓடுகாலியென்று கூவிக்கொண்டோமேயொழிய அதன் தர்க்கமான இயக்கப்பாட்டைக் கணிப்பதில் தவறிழைத்து வந்திருக்கிறோம். தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்பு, மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக மனிதர்களின் அகம் தயார்ப்படுத்தப்படுகிறது. அங்கே சதா ஊசாலாட்டமும், வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது. இது ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது. இத்தகைய வாழ் சூழலைத் தக்கப்படி ஏற்படுத்துகிற ஆதிக்க சக்திகள்(புலிகள், சிங்கள-இந்திய அரசுகள்) மக்களின் முரண்பாடுகளை வெறும் சட்டவாதத்துக்குள் முடக்கி அவற்றைச் சரி செய்வதற்கான புதிய வரையறுப்புகளை "பொருளாதார அபிவிருத்தி" என்ற மாயாமானால் தீர்த்துவிட முடியுமெனப் பரப்புரை செய்து மக்களின் மனங்களை குளிர் நிலைக்கு மாற்றுகிறது. இத்தகைய பொருளாதார நோக்குள் உந்தித் தள்ளும் ஈழத்துக் கோசங்கள் யாவும் தமிழ் பேசும் மக்களை மிகக் கேவலமாகத் தகவமைத்துக் கொண்ட வரலாறானது அந்த மக்களையே காவு கொள்ளும் இன்றைய அரசியலாக விடிந்துள்ளது.

தொடரும்.

ப. வி. ஸ்ரீரங்கன்

17. 11. 2007

1 comment:

சுகுணாதிவாகர் said...

நல்ல பதிவு.