தமிழ் அரங்கம்

Wednesday, November 21, 2007

கனிவுமில்லைக் கருணையுமில்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்
19.11.2007


"கனிவுமில்லைக் கருணையுமில்லை" என்ற தலைப்பின் கீழ் பேராசிரியர் கலாநிதி.சி.சிவசேகரம் அவர்கள் காலஞ்சென்ற தோழர் விஸ்வானந்ததேவனுக்கான நினைவுப் பேருரையொன்றை 1989ஆம் ஆண்டு செய்தார்.அதை, இலண்டனில் சிறு பதிப்பாகவும் அவரது நண்பர்கள் வெளியிட்டார்கள்.தென்னாசியப் பிராந்திய அரசியலில் இந்தியாவின் பங்கு-மேலாதிக்கம் பற்றிய மிக எளிமையான பார்வையை அதுள் முன்வைத்தார் திரு.சி.சிவசேகரம் அவர்கள்.இன்று, கிட்டத்தட்ட பதினெட்டாண்டுகளுக்குப் பின்பு, நமது தேசிய விடுதலைப் போராட்டத்தினதும்,அது சார்ந்தியங்குவதாகப் புலிகளால் முன் தள்ளப்பட்ட"தமிழர் தேசியக் கூட்டமைப்பு" மற்றும் மலையக மக்களின் இன்னல்களில் குளிர்காயும் அவர்களின் அரசியல் தலைவர்களும் இந்தியாவின் மூலமாகத் தமிழ் பேசும் மக்களின் இன்னல்களை இலங்கையில் தீர்த்துவிடலாமென்கிறார்கள்.இத்தகைய கூற்றை-பேட்டிகளை,கருத்துக்களை புலிகளின் ஊடகங்களோ விழுந்தடித்துச் செய்தியாகத் தலையங்கம் தீட்டி, எம்மக்கள் முன் தள்ளுவதில் முன்னணியில் நிற்பவர்கள்.


இது ஒரு சாபக்கேடான சூழல் இல்லை!


இங்குதாம் நாம் வர்க்கம் சார்ந்து சிந்திக்க- இயங்கக் கோருகிறோம்.வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை என்பது விஞ்ஞானத்தின் வழி உண்மையானதாகும்.ஒவ்வொருவரும் தாம் எந்தெந்த வர்க்கத்தின் உணர்வுகளைக் காவித்திரிவதென்பதை முதலில் கண்டடையவேண்டும்.தொழிலாளியாக இருந்தபடி முதலாளியாகக் கனவுகாண வைக்கிறது இன்றைய ஆதிக்க வர்க்கத்தின் ஊடகங்கள்-பண்பாட்டுப்படையெடுப்புகள்.


நாம் நமது வாழ்வைத் தொலைத்தபடி எவரெவருக்காகவோ எமது உயிரை விட்டுவிடுகிறோம்.இது தப்பானது.நமது பெற்றோர்கள் பட்டுணிகிடக்கும்போது நாம் நமது வாழ்வையே ஆளும் வர்க்கத்துக்குத் தாரை வார்த்துவிடுகிறோம்.இதை இலகுவாக விளங்கிக்கொள்ள,கட்சித் தலைவனுக்காகத் தீக்குளித்து உயிரைவிடும் தொண்டனை எண்ணிக்கொண்டோமானால் உலகம் புரியும்.


"தொண்டனின் பிணத்தைவைத்தே
அரசியல் நடத்தி முடிப்பவர்கள்
ஓட்டுக்கட்சி-பாராளுமன்ற அரசியல் சாக்கடைகள்!"


இந்த நிலையில்,இலங்கையில்(இலங்கையிலென்ன உலகம் பூராகவும்தாம்)தமிழ் பேசும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் அன்றாடம் உழைத்துண்ணும் கூலித் தொழிலாளர்களும்,விவசாயிகளும்,கைவினைத் தொழிலாளர்களுமே.இத்தகைய மக்கள் சமுதாயத்தில் நிலவுகின்ற அரசியலானது இந்த மக்களை அடக்கும்-ஒடுக்கும் அரசியலாகவே இருக்கிறது.இதை முன்னெடுப்பவர்கள் தமிழ் பேசும் மக்கள் சமுதாயத்துள் சிறு தொகையான உடமையாளர்களும்,அவர்களுக்குக் கூஜாத் தூக்கும் அரசாங்க ஊழியர்கள்-அதிகாரிகளுமே!இவர்களின் நலனுக்கான அரசியலாகவும்-அபிலாசையாகவும்"தமிழீழம்"கோசமாகியது.இதைப் பற்பல சந்தர்ப்பத்தில் நாம் கட்டுரைகளுடாகச் சொன்னோம்.எமது மக்களின் அனைத்து முன்னெடுப்புகளும் முடக்கப்பட்டுள்ளது.அன்றாடச் சமூகச் சீவியம் சிதறடிக்கப்பட்டு,வாழ்விடங்களிலிருந்தே முற்றாகத் துரத்தப்பட்டு,அவர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள்.அவர்களின் குழந்தைகளான நாமோ நமது வீடுவாசல்கள் அனைத்தையும் சிங்கள இராணுவத்திடம் பறி கொடுத்து, அகதியாகி ஐரோப்பிய மண்ணில் கூலித் தொழிலாளிகளாகி,ஐரோப்பியத் தெருக்களைச் சுத்தஞ் செய்கிறோம்.எமது வாழ்வு நிர்மூலமாகப்பட்டபின் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்-கொல்லப்பட்டு வருகிறார்கள்.


இந்த நிலையிலும் நமது அரசியல்தலைமையிடம் கபடம் நிறைந்து, இந்தியாவோடு,ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களோடு,அமெரிக்க அழிவுவாதிகளோடு கைகுலுக்கியபடி நம்மை ஏமாற்றி வருகிறார்கள்.இது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல,இந்தக் கபோதித்தனமான ஈனமிக்க அரசியல்-இயக்க வாதிகளை மக்கள் முன் நிறுத்தித் தண்டிக்கவேண்டும்.ஏனெனில்,நாம் இலட்சம் உயிர்களை இவர்களின் ஈனத்தனத்துக்காகப் பறிகொடுத்துள்ளோம்!


பேராசிரியர் சி.சிவசேகரம் பதினெட்டாண்டுகளுக்குமுன் சொன்ன அதே கருத்தை மீளவும் இக்கட்டுரையில் வலியுறுத்துகிறார்.


தற்போது, உலக மூலதனமானது தென்னாசியப் பிராந்தியமெங்கும் பாய்ந்து, கணிசமானளவு தென்னாசிய அரசியலைக் கட்டுப்படுத்தி வருகின்றபோதும்,இந்தியாவின் மேலாதிக்க அரசியல் வியூகம் காலாவதியாகிவிடவில்லை.இந்தியாவின் மிகக் கெடுதியான அரசியல் நலன் நமது மக்களின் கணிசமானவர்களைக் கொலை செய்து,இந்திய ஆளும் வர்க்கத்தின் கனவை இலங்கையில் நிலைப்படுத்தி வருகிறது.மிகக் கேணைத்தனமாக இந்தியக் கோமாளிகள்-தமிழ்நாட்டு விரோதிகள் இராஜீவ் என்ற பாசிஸ்ட்டின் கொலைக்கு வக்காலத்து வேண்டுகின்ற இன்றைய சூழலில்கூட நமது மக்களை வகை தொகையின்றிக் கொன்று குவிக்கும் இந்தியத் துரோகத்தை நமது அரசியல்வாதிகள் கேள்விக்குட்படுத்தவில்லை.புலிகளின் மிகக் கெடுதியான அரசியல் கூட்டுக்கள் இந்தியாவிடம்-உலக ஏகாதிபத்தியங்களிடம் தமது நாணயக் கயிற்றை வழங்கியபின்,அந்த எஜமானர்களின் இழுப்புக்கேற்றபடி "போராட்டம்"செய்கிறார்கள்!மக்களோ இத்தகைய கொடிய யுத்தங்களால்,அரசியல் ஏமாற்றால் தமது பொன்னான உயிர்களைப் பறிகொடுத்தும்,வாழ்விடங்களை இழந்தும் வதைபடுகிறார்கள்.இதைத் தட்டிக் கேட்க எவருமேயில்லை!புலிகளை எதிர்ப்பதாக நாடகமாடும் புலி எதிர்ப்புக் குழுக்களோ இந்தியாவின் இன்னொரு வடிவிலான கைக்கூலிகள்.இவர்களை இனம் காட்டும் பேராசிரியர் சி.சிவசேகரம் மிக இலாவகமாக இந்திய-தமிழ்நாட்டு அரசியல் சூழ்ச்சிக்காரர்களையும்,அவர்களது துரோகத்தையும் இனம் காட்டுகிறார்.


கடைந்தெடுத்த துரோகிகளானவர்கள் இந்தியக் கைக்கூலி ஆனந்தசங்கரி,டக்ளஸ்,கருணா-பிள்ளையான்,தமிழ் தேசிய கூட்டமைப்பு,புலிகளின் தலைமைமட்டுமல்ல தமிழ்நாட்டின் வளங்களைச் சுருட்டி ஏப்பமிட்ட வடிகட்டிய துரோகி கருணாநிதியும்தாம் என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.இதையும், சிவசேகரம் அவர்கள் குறித்துரைக்கிறார்.


வடிகட்டிய துரோகி கருணாநிதியின் போலிக்கண்ணீர் ஒப்பாரியைப் பாட்டாக்கிய கண்ணனின் இசையைக் கேட்டபோது, இந்த முயற்சியில் கண்ணனின் திறமை வெளிப்பட்டபோது, சயந்தனின் பதிவில் கண்ணனைப் பாராட்டியபடி கருணாநிதியின் ஓலத்தை அம்பலப்படுத்தியிருந்தேன். அதை அனானியாகச் சொன்னேன். பேராசிரியரோ அக் கவிதையையும் விடாமற் சாடியிருக்கிறார்.


இவையெல்லாம் எதற்காகச் சொல்கிறோம்?


நமது பிரச்சனையைத் தத்தமது இலாபத்துக்காக அரசியலாக்கி மக்களை அழித்துவரும் கொடிய சக்திகளை இனம் காட்டவே நாம் இதுவரை எழுதித் தள்ளுகிறோம்.நாமும், நமது பெருங் கல்வியாளர்கள்போல் வாய்மூடி மெளனித்திருக்க முடியும்.இப்படியிருந்தால் எமது மக்களின் அழிவை எங்ஙனம் தடுத்து நிறுத்துவது நண்பர்களே?


எல்லோரும் தத்தமது குடும்பம், பதவி, பட்டம் என்றிருந்தால் அப்பாவி மக்களின் வாழ்வோடு விளையாடும் அந்நிய-உள்நாட்டு யுத்தப் பேய்களை எங்ஙனம் அம்பலப்படுத்துவது-மக்களை அவர்களிடம் பலியாக்காது தடுப்பது?


இதுவோ பெரும் வரலாற்றுக்கடமை நண்பர்களே!


நாம் புரட்சி செய்கிறோமோ இல்லையோ நமது மக்களின் உரிமைகளை அந்நியர்களிடம் அடைவு வைத்துத் தமது வாழ்வையும், வளத்தையும் பெருக்கும் கயமைமிக்க அரசியல்-இயக்கவாதிகளை நாம் மக்களுக்கு இனம் காட்டியாகவேண்டும்!இதுவரை எமது மக்களின் உயிரோடு விளையாடிய இந்தப் போராட்ட முறைமை நம் இனத்தின் அனைத்து வளங்களையும் அந்நியர்களோடு பங்குபோட்டு அநுபவித்துவருகிறது.அதைத் தொடர்ந்து நிலைப்படுத்தவும்,மக்களைச் சட்ட ரீதியாக ஒடுக்கும் உரிமைக்குமாக இவர்கள் போடும் கூச்சல் யுத்தம்-ஜனநாயகம் என்றபடி.நமது மக்களின் எதிர்காலம் இருண்டுபோய்க் கிடக்கிறது.இந்த நிலையிலும் நாம் மெளனித்திருக்க முடியுமா?


தமிழ்த் தேசிய மாயையில் கட்டுண்டு கிடந்தபடி இயக்கவாத மாயைக்குள் மெளனித்திருந்தோ அல்லது வக்காலத்து வாங்கியோ எம்மை நாம் ஏமாற்றமுடியாது!நாம் இழந்திருப்பது வரலாற்றால் மீளக்கட்டியமைக்க முடியாத உயிர்கள்.அந்த உயிர்களின் தியாகத்தைப் பிழைப்புக்காகப் பயன்படுத்தும் கட்சி-இயக்க அரசியல் தலைமைகள் தத்தம் பதவிகளுக்கும்-இருப்புக்குமாக நம்மை இன்னும் படுகுழியில் தள்ளுவதை அநுமதிக்க முடியாது.


தமிழ்நாட்டுச் சினிமாக்கூட்டமும், பொறுக்கி அரசியல்வாதிகளும் தமிழ்ச் செல்வனின் கொலைக்கு நீலிக்கண்ணீர் வடித்தவுடன் ஈழத்துத் தமிழனுக்கு உச்சி குளிர்கிறது. ஆனால், அந்தக் கூட்டம் இதுவரை எமக்கு என்ன செய்தார்கள், எமது மக்களின் அழிவுக்கு காரணமானவர்களை எதிர்க்கக்கூட முடியாத-முனையாத கழிசடைகளின் ஒப்பாரிகள், நமது மக்களின் குருதியை-கண்ணீரை நிறுத்திவிடாது. மாறாகத் தமிழகத்தின் அப்பாவிக் குடிகளின் பெரும் குரலே எமது மக்களின் கண்ணீருக்கு முடிவுகட்ட ஒத்திசைவாகும்.


தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகளும்,சினிமாக் கூத்தாடிகளும் தமிழகத்து அப்பாவி மக்களின் குரல்வளைகளைத் திருகியே தமது அதிகாரத்தை, ஆதிக்கத்தை,செல்வத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள். தமது சொந்த குடிகளையே அடியோடு மொட்டையடிக்கும் இந்தக் கூட்டத்தின் குரலா எமது மக்களின் துயர் துடைக்கும்?-இலங்கையில் இந்தியாவினது பங்கு என்ன?புலிகள் ஏன் இந்தியாவுக்குத் தூதுவிடுகிறார்கள்,எப்படி இந்தியாவால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள்?மிக இலகுவான கேள்விகள்.தொடர்ந்து தேடும்போது விடைகள் மிக இலகுவாகக் கிடைத்துவிடும்.


சிந்தியுங்கள்!


நாம் அவசியம் நமது நண்பர்களை-எதிரிகளை இனம் கண்டாக வேண்டும்.


அதற்குப் பேராசிரியரின் இக்கட்டுரை பலகோணத்தில் பார்வைகளைத் திறந்துவிடுகிறது.


"படிப்போம்,
பாருக்குள் நமது எதிரிகளை
நேரிய-சீரிய,செம்மையான போராட்டத்துடன்
எதிர்கொள்வோம்.அங்கே, நாம் வணங்கும்
இன்றைய தெய்வங்கள்கூட
எதிரிகள் என்பதை வரலாறு புகட்டும்."


அதுவரையும் விவாதிப்போம்-விழிப்படைவோம்!


நட்புடன்;,


ப.வி.ஸ்ரீரங்கன்
19.11.2007

மறுபக்கம் :



"தமிழ்ச்செல்வனுக்குக் கருணாநிதி என்கிற நம்பிக்கைத் துரோகி இரங்கற் கவிதை எழுதினால் அது எட்டுப்பத்தி அகலச் செய்தியாகவும் வரலாம்."


லங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய இந்திய நிலைப்பாடென்ன என்றும் அதுபற்றிய இலங்கைவாழ் தமிழ்த் தலைமைகளின் மதிப்பீடென்ன என்றும் யாருங் கேட்டால், முதலாவது கேள்விக்கு விடை கூறுவது எளிது. மற்றக் கேள்விக்கான பதிலைத் தலைவர்களாற் கூடத் தெளிவாகக் கூற இயலுமா என்பது நிச்சயமற்றது.


அக்டோபர் பிற்பகுதில் ஒரு தமிழ் நாளேட்டின் முதலாவது பக்கத்தில் ஒரு கட்டமிடப்பட்ட செய்தி இருந்தது. அதற்குக் கீழாகக் கொட்டையெழுத்துத் தலைப்புடனான ஒரு செய்தி இருந்தது. முதலாவது செய்தி இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி வருவதை உறுதிப்படுத்துவது. மற்றது இந்தியா இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்குப் பங்களிக்க வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கேட்டுக் கொண்டது பற்றியது.


இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றியும் சமகால நிலைமைகள் பற்றியும் இந்திய ஆட்சியாளர்கள் சரிவர அறியமாட்டார்கள் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்பையும் இருப்பையும் அடையாளத்தையும் உறுதிப்படுத்துகிற தீர்வு பற்றி இந்தியாவுக்கு அக்கறை இருக்கிறது என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அரசில் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அரசின் நிலைப்பாட்டை இலங்கைத் தமிழருக்குச் சாதகமான திசையிற் திருப்ப வல்லவர்கள் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்களுக்கு அந்தவிதமான அக்கறை உண்டு என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு பகுதியை நம்புவதற்குக் கால் நூற்றாண்டுக் காலம் முன்பு பலருக்கு ஒரு நியாயம் இருந்தது. இருபது ஆண்டுகள் முன்பு வரை அந்த நியாயம் தொடர்ந்தது. அதற்குப் பிறகும் தமிழகத் தலைமைகள் பற்றிய ஒரு நம்பிக்கை இன்னொரு ஐந்து வருடங்கள் தொடர ஏதோ நியாயம் இருந்தது.







ஆனாலும், இந்த நம்பிக்கைகள் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமையவில்லை என்றும் இந்திய மேலாதிக்கத்தின் நோக்கங்கள் பற்றியும் கவனமாயிருக்குமாறும் எச்சரித்து வந்தவர்கள் இருந்தார்கள். பங்களாதேஷின் உருவாக்கத்தில் இந்தியாவின் பங்கு பற்றி எதிர்மாறான இரு மதிப்பீடுகள் இருந்தன. ஒன்று தமிழீழ விடுதலைக்கு இந்தியா கைகொடுக்கும் என்று சொன்னது. மற்றது தமிழர் பிரச்சினையைத் தனது மேலாதிக்க எண்ணங்கட்காக அல்லாமல் வேறெதற்கும் இந்தியா பயன்படுத்தாது என்றது. எல்லாத் தமிழ் தேசியவாதிகளும் ஏதோ வகையில் இந்தியாவை நம்பியவர்கள் தாம். அவர்கள் மட்டுமன்றிக் குழம்பிப்போன சில தமிழ் இடதுசாரிகளும் இந்தியாவை நம்பினார்கள். சிலரது நம்பிக்கைகள் ஏமாற்றத்துக்கு இட்டுச் சென்றன.



வேறு சிலர் இந்தியாவின் துரோகத்தைத் தெரிந்து கொண்டே அதன் பங்காளிகளானார்கள். இவையெல்லாம் வரலாறு கூறும் உண்மைகள். எளிதில் மறக்கும் அளவுக்கு அவை அற்ப விடயங்களுமல்ல, எப்போதோ ஒரு யுகத்தில் நடந்துமுடிந்தவையுமல்ல.


கடந்த பன்னிரண்டு மாதங்கட்குள்ளேயே தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய ஆட்சியாளர்களாலும் அவர்களது பிரசார முகவர்களாலும் எவ்வளவு கேவலமாக நடத்தப்பட்டார்கள் என்பதுகூடப் பலருக்கு நினைவில் இல்லை என்றால் அவர்கள் பாராளுமன்ற அரசியலால் முற்றாகவே சுரணை கெட்டுப் போனவர்கள் என்று தான் சொல்ல முடியும். இந்தியாவை வளைத்துப் போடச் சீனாவையும் பாகிஸ்தானையும் காட்டினவர்கள் கண்டதெல்லாம் எதிர்பார்த்ததற்கு நேரெதிரான விளைவுகள் தாம். இந்திய அமெரிக்கப் போட்டியை வைத்துப் போட்ட கணக்கும் பொய்யாகிவிட்டது "கொக்குப் பிடிக்கிறதற்கு வழி, அதிகாலையில் கொக்கின் தலையில் வெண்ணெய்யை வைத்து விட்டால், வெய்யில் ஏறும்போது வெண்ணெய் உருகிக் கொக்கின் கண்கள் தெரியாமற் போகும்; அப்போது பார்த்துக் கொக்கைப் பிடிக்கலாம்" என்று ஆலோசனை சொன்னவனுக்குக் கூட இந்த அரசியல் ஞானிகளை விட விவேகம் அதிகம் என்று நினைக்கிறேன்.


நான் இப்போது கேள்விக்கு உட்படுத்துவது அறியாமையாற் செய்கிற பிழைகளையல்ல. முழு அரசியல் அயோக்கியத் தனத்தையே கேள்விக்குட்படுத்துகிறேன்.


இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்கள் விற்பதைப் பற்றி அரசியல்வசதி கருதியேனும் தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்புக் குரல் எழுப்புகிற சிலர் இருக்கிறார்கள். நமது நாளேடுகளில் இந்திய அரசாங்கத்தைக் கண்டித்து அவர்கள் விடுகிற அறிக்கைகள் வெளிவருகின்றன. பலவாறான செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இந்தியாவின் வஞ்சகத்தைக் கண்டித்து இங்கே எந்தத் தமிழ்த் தேசியவாதத் தலைமையும் வாயே திறப்பதில்லை. செய்யாதீர்கள் என்று கெஞ்சுகிறவர்கள் இருக்கிறார்கள் செய்ததைக் கண்டிக்கவோ எவரும் இல்லை.


வரதராஜப் பெருமாள் முதலாக ஆனந்த சங்கரி வரையிலானவர்கள் வேண்டுகிற இந்தியக் குறுக்கீடு பற்றி அவர்களுக்குப் பூரணமான தெரிவுண்டு. இந்தியா தனது மேலாதிக்க நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு என்ன செய்தாலும் அதை அவர்கள் முழு மனதுடன் ஏற்பார்கள். இதில் அவர்களுக்கு தெரிவு, மாற்றுக் கருத்து என்ற விதமாக எதற்கும் இடமில்லை. எனவே தான் இந்தியா அவர்களைத் தமிழர் தலைவர்களாகக் கருதுகிறது.


ஆனால், வெளிவெளியாகவே யூ.என்.பி.யிடம் தமிழ் மக்களைச் சரணடையச் செய்ய முன்னிற்கின்ற மனோ கணேசன் போன்றவர்கள் முதல் திக்குத் தெரியாமல் தடுமாறுகிற தமிழர் தேசியக் கூட்டணித் தலைவர்கள் வரையிலானோர் எவ்வகையில் இந்தியா குறுக்கிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? அவர்கள் எதிர்பார்ப்பதில் இந்தியாவால் எவ்வளவை நிறைவேற்ற இயலும் என்று எதிர்பார்க்கிறார்கள்?


வெறுமனே இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாகக் குறிப்பாக எவ்வெவ் வகையிற் குறுக்கிட வேண்டும் என்று பட்டியலிடுவார்களா? அக் குறுக்கீட்டின் இலக்கு எவ்வகையில் அமைய வேண்டும் என்று தெளிவுபடுத்துவார்களா? இந்தியாவின் போக்கு இன்று வரை எவ்வாறு இருந்துள்ளது என்றும் அதில் அவர்கட்கு உடன்பாடான பகுதி எது உடன்பாடற்றது எது என்று சொல்வார்களா? இந்தியா தனது போக்கை எந்த விடயங்களை எவ்வாறு மாற்ற வேண்டும் என்று விளக்குவார்களா?
அவை பற்றி இந்திய ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும்படி கேட்பார்களா?


இந்தியக் குறுக்கீடு பற்றி ஆழச் சிந்தித்தவர்கட்கு இந்தியக் குறுக்கீடு வேண்டிய ஒன்றாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. எனினும், திரும்பத் திரும்பக் கீறல் விழுந்த கிராமபோன் தட்டுமாதிரி இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் தங்கள் மனதில் உள்ளது என்ன என்று சொல்ல வேண்டும். சொல்ல மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியும், செய்தியை அனுப்புகிற நிருபருக்குத் தெரியும், அதைக் கொட்டை எழுத்தில் தலைப்பிட்டு வெளியிடுகிற பத்திரிகை ஆசிரியருக்கும் தெரியும்.

அந்தப் புலுடாவுக்கு வழங்கப்படுகிற முக்கியத்தை ஏன் அதை அவிழ்த்து விடுவதற்கு தாம் வழங்க மறுக்கிறோம்? எங்களுக்கு என்ன நடக்கிறது? ஏன் எங்களால் உண்மைகளையும் பொய்களையும் பிரித்துப் பார்க்க இயலவில்லை?


தமிழ்ச்செல்வனுக்குக் கருணாநிதி என்கிற நம்பிக்கைத் துரோகி இரங்கற் கவிதை எழுதினால் அது எட்டுப்பத்தி அகலச் செய்தியாகவும் வரலாம். அதை ஜெயலலிதா கண்டித்ததில் எனக்கு உடன்பாடுண்டு. ஆனால், எனது காரணங்கள் வேறு. முதலாவதாக அது நேர்மையற்றது. இரண்டாவதாக அது மிகவும் மட்டரகமான கவிதை சொல்லப்போனால் அது கவிதையே அல்ல. தி.மு.க. சினிமா பாணியிலான சுத்தமான பேத்தல்; கருணாநிதி அரசியலின் பம்மாத்து.


தமிழகத்தையும் இலங்கையையும், குறிப்பாக வட, வடமேற்கு இலங்கையைப் பல்வேறு கெடுதல்கட்குள்ளாக்கி மீனவர்களது வயிற்றில் அடிக்கப்போகிற சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிக் கூட வாய் திறக்க வக்கில்லாத தமிழ்த் தலைவர்கள் தான் நமக்கு வாய்த்திருக்கிறார்கள்.


இந்தியா இலங்கைக்குக் குழி பறிக்கிறது. இலங்கையின் பொருளாதாரம், பாதுகாப்பு, தேசிய இனங்களிடையில் புரிந்துணர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு, அமைதியான எதிர்காலம் ஆகிய எல்லாவற்றுக்குமே இந்தியா குழிபறித்து வந்துள்ளது.


இந்தியக் குறுக்கீட்டைப் பேரினவாத வெறியர்கள் விரும்புகிறார்கள் என்றால், அமெரிக்கா மறைமுகமாக ஏற்கிறது என்றால், அதை தமிழர் விடுதலைக்கு ஆதரவான எவரும் ஆதரித்துப் பேசுகிற போது அவருடைய அரசியல் ஞானத்தைவிட அதிகம் ஐயத்துக்குரியது. அடிப்படையான நேர்மைதான்.


-பேராசிரியர் சி.சிவசேகரம்.


நன்றி தினக்குரலுக்கு.

No comments: