தமிழ் அரங்கம்

Wednesday, December 5, 2007

இனவாத அரசின் யுத்த முனைப்பு அதற்குச் சாதகமாகவே இருக்கும்.

ப. வி. ஸ்ரீரங்கன்
04. 12. 2007

லகத்துப் பொருள்வயப்பட்ட நலன்களை வெறும் யுத்தமாகக் கருதாது அதன் வீச்சு எப்போதும் "மக்கள் நலன், மனிதாபிமானம், மனிதவுரிமை, ஜனநாயகம்" எனும் அர்த்தம் புரியாதவொரு வார்த்தை விளையாட்டாக நமக்குள் வந்துகொண்டபின் யுத்தங்கள் நம்மைக் கருவறுப்பதில் தமக்கான நியாயத் தன்மைகளையும், பெரும் ஆதரவையும் நிலைப்படுத்தி பொருள்வயத் தேவைகளை எட்டுகின்றன.

பெரும்பகுதி மக்களால் ஏற்கப்படும் ஒரு நிகழ்வில் அது பெரும் பங்கை அந்த மக்களுக்கு எதிராகவே ஆற்றும் யுத்தக் கூறுகளாக விரித்து வைக்கிறது. நமது கடந்தகாலத்துத் தவறுகள் தற்செயலானதென்று எவராவது கூறுமிடத்து அவரது அரசியல் புரிதலில் ஊனமிருப்பது அவருக்கே பிரச்சனையானதாக மாறும்போது உண்மையெது என்பதை அத்தகைய மனிதர் உணர்வு பூர்வமாகத் தரிசிக்கும்போது ஒரு தலைமுறை அழிந்தோய்ந்து விடுகிறது. எமது சமுதாயத்துள் இந்த நிலைமை இப்போதைய சூழலாகி வருகிறது. சிங்கள இனவாத அரசு அதை நோக்கியே நம்மைத் தள்ளி நமது முழு வலுவையும் சிதைப்பதில் உலக உதவியையும் நாடியுள்ளது. இதன் தொடர் நிகழ்வில் நிர்பந்தமாக முன்வைக்கப்படும் பாரிய யுத்த முன்னெடுப்புகள் தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்விடங்களையும் அழித்து அவர்களை முழுநிலையானவொரு தொடர் வருத்தலுக்குள் தள்ளப் போகிறது.

எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தரணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இங்கே நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது. ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம், கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.

இதைக் கடந்தவொரு மாற்றுக்கருத்தெழுவதற்கானவொரு சூழல் வலு மூர்க்கமாக அழித்தொழிக்கப்படுகிறது. இது தேசத்தினது பெயரால்-தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டபடி " புலிகளை எதிர்பவர்கள் தமிழர்களை எதிர்பவர்கள்" என்றும் கருத்துக் கட்டுகிறது.

இத்தகைய கருத்துக்களின் பின்னே மறைந்திருக்கும் அதிகார மையம் பாசிசத்தால் தன்னை இருத்திக் கட்டிக்காத்து வருகிறது. இங்கே, மக்களின் துயரங்கள் துன்பங்கள் யாவும் சிங்களப் பாசிச அரசுக்கும், புலிகளுக்கும் மற்றும் (. . . ) குழுக்கழுக்கும் அரசியல் செய்வதற்கானவொரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பரிதாபம் நிலவுகிறது.

அப்பாவி மக்கள் உயிர்வாழ்வதற்காகத் தமது எதிர்கால விடிவை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.

ஆனால், தொடரும் யுத்தங்களின் பின்னே ஏற்படும்"வெற்றி-தோல்விகள்"இலங்கையின் இராணுவப் பிடியிலிருந்து தமிழ் பேசும் மக்களை ஒருபோதும் விடுவிக்க முடியாது. தமிழ்பேசும் மக்கள் தமது விடுதலையை வென்றெடுப்பதற்கான நிபந்தனைகளை உருவாக்காது தமது விடுதலை குறித்த கற்பனைகளை வளர்த்துள்ளார்கள். ஓட்டுக் கட்சிகளின் அற்பத் தனமான பரப்புரைகளால் இந்த மக்களின் விடுதலையென்பது வெறும் வடிகட்டிய முட்டாள் தனமான யுத்தங்களால் பெற்றுவிட முடியுமெனுங் கருத்தோங்கியுள்ளது.

பொதுவாக ஒரு யுத்த வாழ்சூழலை மனிதர்களுக்கான வாழ்வுச் சுதந்திரமாக வரையறுக்க முடியுமா?

திணிக்கப்படும் யுத்தால் முழுமொத்த மக்களின் விடுதலை
சாத்தியப்படமுடியுமா?

இங்கே, எந்த வர்க்கம் யுத்தத்தில் நலமடைய முனைகிறது?

அந்த நலனை அடைவதற்காகத் தன் முரண்பாட்டை முழு மொத்த மக்களினதும் முரண்பாடாக்கி வைத்திருக்கும் இந்த அரசியலில் புலிகளின் பங்கு எத்தகையது?

சுருங்கக் கூறினால்: இது தமிழ் மக்களை ஆளத்துடிக்கும் தமிழ் மூலதனத்தின் முன்னெடுப்பு. அது மக்களின் அனைத்து வளங்களையும் மூலதனமாக்கி வைத்து யுத்த்தில் தன்னை முதன்மைப் படுத்தி வருகிறது!

இங்கே, தேசிய விடுதலை என்பது இருப்புக்கான-மக்களை அணி திரட்டுவதற்கான கோசமாகவே இருக்கிறது. ஆனால், இதைச் சாட்டாக வைத்துச் சிங்கள இனவாத அரசு தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து அழித்து வருகிறது. இது மக்களை காலவோட்டத்தில் சிங்கள அரசுக்குக் காட்டிக் கொடுக்கும் யுத்தாமாகச் சீரழிந்து போகிறது.

புவிப்பரப்பில் உயிர்வாழ்வுக்கான அனைத்து முயற்சிகளையும் எல்லாவகை உயிரிகளும் தம்மால் முடிந்தவரை ஒரு வரையறைக்குள் உணருகின்ற இன்றைய பொழுதவரை புவியின்மீதான இடைச்செயல் தத்தமது உணர்வினது மட்டுப்படுத்தப்பட்ட "அறிதிறனால்"செயலூக்கமாக விரிகிறது. வாழ்வாதரமற்ற பகுதிகளைவிட்டகலும் உயிரியானது தனது இருப்புக்காக இன்னொரு பகுதியைக் கண்டடையவேண்டிய நிர்பந்தம் யுத்தசூழலால் தீர்மானிக்கப்படுகிறது. இந்த யுத்த சூழலைத் தீர்மானித்த பொருளாதார முரண்பாடானது வரலாற்றுப்போக்கில் வெகுவாக முழுமொத்த மனித சமுதாயத்தையும் பாதிப்புக்குள்ளாக்கிறது. இந்நிலையில், மனிதரின் உயிர்வாழ்வுக்கான புவிமீதான இடைச்செயல் அத்தியவசியத்துக்கு மீறிய மட்டுப்படுத்தமுடியாத குவிப்புறுதியூக்கத்தால் தொடர்ந்து இயற்கை வளம், மனித வளம் அழிக்கப்படுகிறது.

இதன் உச்சபச்ச நுகர்வூக்கம் மக்களின் உயிர்வாழ்வைக் கேள்விக் குறியாக்கிவிடுகிறது. இத்தகைய நிலைமையில் இன்றைய மக்கள் சமுதயாங்களின் இருப்பானது எதுவரை சாத்தியமாகும்? தமிழ்பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் தொடரும் யுத்தம் திருடிக்கொண்டிருக்கிறது. இது தேசத்தின் பெயராலும், தேசியத்தின் பெயராலும் அனைத்தையும் ஓப்பேற்றி முடிக்கும் கருத்துக்களை மிக அராஜமாக விதைக்கிறது. இதற்கெதிரான பார்வைகளைத் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரானதாகச் சொல்லித் தன்னை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இன்றைய யுத்த முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன. இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும், யுத்தத்துள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது. அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் புலிகளுக்கும் இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது.

நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் யுத்த முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.

இப்போது, புலிகளின் தரப்பில் யுத்தமென்பது தவிர்க்க முடியாத காரணியாகக் கருத்துக்கட்டப்படுகிறது. சிங்களப்பாசிச இனவாத அரசோ புலிகளைக் கொல்லுவதாகச் சொல்லித் தமிழ்பேசும் மக்கள் அனைவரையுமே கொல்லுகிறது. வலுகட்டாயமாக ஆட்களைச் சேர்க்கும் புலிகள் அதன் வாயிலாகப் "புலிகள் என்றால் தமிழர்கள், தமிழர்களென்றால் புலிகளெனும்" புதிய தத்துவத்தைச் சொல்லிக் கொள்ளும் கருத்துக்கு வலுச் சேர்க்கத் தமது பரப்புரைப் பீரங்கிகளையும் தயாராக்கி வைத்துள்ளார்கள்.

இந்தக்கேடுகெட்ட சமூக யதார்தமானது மனிதவுயிர்களைப் பலியெடுத்து எதிர்காலத்தை நாசமாக்கி வரும்போது தனித்த தேசங்களும் , மக்களினங்களும் தமது சுயநிர்ணயமான அரசை, வாழ்வை, பொருள் உற்பத்தியைக் கொண்டிருக்க முடியுமா?

தொடர்கின்ற இனங்களுக்கிடையிலான யுத்தங்கள் இறுதி இலட்சியத்தை அடைந்து மக்களை நிம்தியோடு வாழும் அரசியல், பொருளியல் வாழ்வைத் தருமா? இது சார்ந்து நாம் சிந்திக்கிறோமா? கற்பனைகளில் எவரும் அரசியல், பொருளியல் வாழ்வைத் தீர்மானிக்க முடியாது.

இத்தகைய கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டுப் புலிகள் செய்யும் யுத்தம் தமிழ்பேசும் மக்களுக்கு விடுதலையளிக்க முடியாது! பரந்துபட்ட மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு, அந்த மக்களின் அதிமானுடத்தேவைகளைத் தமது அரசியலுக்குப் பகடைக்காயாக்கியபடி புரட்சி முன்நகர்வதல்ல. புலிகளின் போராட்டம் புரட்சியை நிபந்தனையாக்கியபடி இத்தகைய மக்களின் முன்னணிப்படையைக் கொண்டிருப்பவர்களும் அல்ல. எனவே, மக்களின் உரிமைகளைத் தமது இருப்புக்காக மக்களிடமும், உலகினடமும் கோசமாக்கியபடி அந்த மக்களை வருத்தி யுத்தத்துக்குள் திணிப்பது இனவாதச் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை இன்னும் வலுப்படுத்துமேயொழிய அதைத் தடுத்துத் தகர்த்தெறிந்து தேசத்தை விடுவிக்க முடியாது. இது நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.

சமூக முரண்பாடுகளை வெறும் மொழிவழிக் காரணியளாகக் கருதும் தமிழ்மனம்-சிங்களமனம் எங்ஙனம் உருவாக்கப்படுகிறது? இந்த மனம் கட்டவிழ்த்துவிடும் உளவியற்பயங்கரம் மற்றைய மனிதர்களைக் கொல்வதில் எதேச்சையாக முடிவுகளை எடுக்கிறது. இது குண்டுகளைக்கட்டித் தலைமையை ஒழிப்பதால் அந்த அமைப்பையே அழித்துவிடலமென மனப்பால் குடிக்கிறது. நிலவுகின்ற அமைப்பை அழிப்பதற்கு-உடைப்பதற்கு முனையாமல் தனிநபர்களை அழிப்பதால் விடுதலை வர முடியாது. என்றபோதும், தற்கொலைத் தாக்குதல்களும், விமானத் தாக்குதல்களுமாக யுத்தம் சூடுபிடித்து மக்களைப் புரட்டியெடுக்கிறது!

இந்தச் சமூகத்தில் ஒடுக்குமுறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும், அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி, மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும். ஆனால், இனவாத்த்தைத் தூண்டும் இத்தகைய தாக்குதல்களால் இன்னும் வலுப்படும் சிங்களப் பேரினவாதமானது இலங்கையில் சிறுபான்மையினங்களைப் பூண்டோடு அழிக்கும் வலுவைச் சிங்களக் கூலிப்படைக்கு வழங்கி, அந்த இராணவத்தை தேசிய இராணுவமாக்கி இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கனவை நிறைவேற்றி விடுகிறது.

வன்னியில் கொட்டும் சிங்கள விமானங்களின் ஒவ்வொரு குண்டிலும் தமிழ் பேசும் மக்களுக் கெதிரான உலக ஒப்புதல் இருக்கிறது. அதை உணருமுடியாதளவுக்குப் "புலிப் பயரங்வாதத்தை" முன் நிறுத்தி வருகிறது தமிழ்ர்களுக்குள் இருக்கும் பதவி வெறிபிடித்த குழுக்களும், இலங்கை அரசும்.

தொடர்கிற யுத்தங்களால் நாம் இழந்தவை பல்லாயிரம் மனிதவுயிர்களாகும்!

நமது சமூக சீவியம் உடைந்து, நாம் உதிரிகளாக அலையும் வாழ்வுதாம் நமக்கு வாய்க்கப் பெற்றுள்ளது. இந்தக் கொடிய யுத்தங்கள் எமது தேசத்துள் எமக்கான விடுதலையை ஒருபோதும் பெற்றுத் தருவதற்கில்லை.

மக்களால் முன்னெடுக்கப்படாத எந்தப் போராட்டமும் மக்களுக்கானதாக இருப்பதற்கில்லை. மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்துள் மக்களை இருத்திவைப்பதைவிட்டு, மக்களின் பிரதான முரண்பாட்டைக் கையிலெடுத்து, அவர்களை அதன்வாயிலாக அணி திரட்டிக் கொண்டு புரட்சிகரமான போராட்டத்தைப் புலிகள் செய்யாத வரை, புலிகள் யுத்த்தில் பெறும் வெற்றிகள் நிலைத்த வரலாறாக இருக்கமுடியாதென்பதற்குக் கிழக்கு மாகாணத்தில் புலிகளின் ஆதிக்கம் உடைந்தது நல்ல உதாரணம்.

எனவே, புலிகளின் போராட்டச் செல்நெறியானது தொடர் தோல்விகளைத் தந்திருக்கும் இன்றைய சூழலில் இலங்கை இனவாத அரசின் யுத்த முனைப்பு அதற்குச் சாதகமாகவே இருக்கும். இதைப் புலிகள் அறிவார்களா?

No comments: