தமிழ் அரங்கம்

Thursday, June 5, 2008

மும்பய்க் கலவர வழக்குகள் : காங்கிரசு கட்டிய கல்லறை

மகாரஷஹ்டிர அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம், பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்குவதை மறுக்கின்றது.
மும்பய்க் கலவரம் நடந்து முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இக்கலவரத்தை விசாரித்த சிறீகிருஷ்ணா கமிசன், சிவசேனா தலைவர் பால் தாக்கரே, உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்டுப் பலரைக் குற்றவாளிகளாக அடையாளம் காட்டியிருக்கிறது.

எனினும், அரசியல் செல்வாக்குமிக்க குற்றவாளிகளுள் ஒருவர்கூட இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. குறைந்தபட்சம், குற்றவாளிகள் விசாரணைக் கைதிகளாகக் கூடச் சிறையில் அடைக்கப்படவில்லை.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறீ கிருஷ்ணா கமிசன் அறிக்கையை அமல்படுத்துவோம்'' என்ற வாக்குறுதியை அள்ளி வீசி அதிகாரத்தைப் பிடித்த காங்கிரசு கூட்டணி ஆட்சியில்தான் மும்பய்க் கலவரம் தொடர்பான 1,371 வழக்குகள் போலீசு விசாரணையின் பொழுதே குழிதோண்டி புதைக்கப்பட்டன. 539 வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்; 253 வழக்குகள் நீதிமன்ற விசாரணை நாடகத்தில் சிக்கிக் கொண்டுள்ளன; 93 வழக்குகள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படாமல், அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுவரும் இப்படிப்பட்ட நிலையில், சிறீகிருஷ்ணா கமிசன் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் உச்சநீதி மன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. மகாராஷ்டிர மாநில காங்கிரசு கூட்டணி அரசு, இவ்வழக்கு தொடர்பாக கடந்த சனவரி 16 அன்று தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம், இந்து மதவெறிக்குக் காங்கிரசு பாதுகாவலனாக இருந்து வருவதை மீண்டும் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது.

மும்பய்க் கலவரம் தொடர்பாக, சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரே மற்றும் அக்கட்சியின் நாளேடு "சாம்னா'' மீதும் ஒன்பது வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் மூன்று வழக்குகள் அரசாலேயே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன; நான்கு வழக்குகளில் குற்றப் பத்திரிகை வினையப்படாததால் (Framing of charges) பால் தாக்கரேயும், பிற குற்றவாளிகளும் அவ்வழக்குகளில் இருந்து 1996ஆம் ஆண்டே விடுவிக்கப்பட்டு விட்டனர்; மீதமுள்ள இரண்டு வழக்குகளிலும், பால் தாக்கரே நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.
.

No comments: