தமிழ் அரங்கம்

Saturday, June 7, 2008

விவசாயக் கடன் தள்ளுபடி: புண்ணுக்குப் புனுகு

மைய
அரசு 60,000/ கோடி ரூபாய் பெறுமான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது; தமிழக அரசின் பட்ஜெட்டில் விவசாயக் கடனுக்கான வட்டி 4 சதவீதமாகக் குறைப்பு; 1,500 கோடி ரூபாய் பெறுமான புதிய விவசாயக் கடன்; பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு எனச் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐந்து ஏக்கர் வரை விளைநிலங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ள சிறு / குறு விவசாயிகள், 31.3.2007 முடிய பொதுத்துறை வங்கிகள் / கிராமப்புற வங்கிகள் / கூட்டுறவு வங்கிகளிடம் வாங்கிய கடன்கள் அல்லது அந்த தேதி வரை நிலுவையாக இருக்கும் அவர்களின் கடன்களை ரத்து செய்ய ரூ.50,000 கோடியும்; ஐந்து ஏக்கருக்கு மேல் நில உடைமை வைத்திருக்கும் விவசாயிகள், தாங்கள் மேற்படி வங்கிகளில் 31.3.2007க்குள் வாங்கிய அல்லது தங்களின் பெயரில் நிலுவையில் உள்ள கடன்களில் 75 சதவீதத்தை ஒரே தவணையில் அடைத்து விட்டால், மீதமுள்ள 25 சதவீதக் கடனை ரத்து செய்ய ரூ. 10,000 கோடியும் ஒதுக்கப் போவதாக மைய அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த அளவுகோலுக்குள் வரும் விவசாயக் கடன்கள் அனைத்தையும் 30.06.2008க்குள் ரத்து செய்துவிடுவோம் என்றும் மைய அரசு உறுதியளித்திருக்கிறது.

விவசாயத்தில் உலகமயம் புகுத்தப்பட்ட பிறகுதான் இந்தியாவெங்கும் விவசாயிகள், மீளவே முடியாத கடன் வலைக்குள் சிக்கிக் கொண்டார்கள். அக்கொள்கைப்படி விவசாயிகளுக்கு மானியம்கூடத் தரக்கூடாது என வாதிட்டு வரும் மன்மோகன் சிங் ப.சிதம்பரம் மான்டேக் சிங் அலுவாலியா கும்பலிடமிருந்து இந்தக் கடன் தள்ளுபடியைப் பெறுவதற்கு, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருந்தது.

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா எனப் பரவிய விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் என்ற சூறாவளி கடந்த மூன்று ஆண்டுகளாக மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில்தான் மையம் கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், விதர்பாவைச் சேர்ந்த 1,242 பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்குள் (மார்ச் 22 முடிய) 220 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பா பருத்தி விவசாயிகளின் இந்தக் "கலகம்''தான், கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுவதற்குத் தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது.
.

No comments: