தமிழ் அரங்கம்

Tuesday, January 13, 2009

விசுவநாத் பிரதாப் சிங் : காக்கை குயிலாகாது!

சமூகநீதிக் காவலர் என்றும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்காகப் பதவியை இழந்தவர் என்றும் புகழப்படும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், கடந்த நவம்பர் 27ஆம் நாள் மறைந்துவிட்டார். காவிரி நீர்ப் பங்கீட்டுக்கு நடுவர் மையம் அமைத்ததும், பல்லாண்டுகளாக அரசின் குப்பைத் தொட்டியில் கிடந்த மண்டல் பரிந்துரைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதும் வி.பி.சிங்கின் அரசியல் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கவை.

அவரின் மரணத்தையடுத்துத் திராவிடக் கட்சிகள், தலித் அமைப்புகள் போன்றவைகளும், அறிவுஜீவிகள், தன்னார்வக் குழுக்களின் மனித உரிமைப்போராளிகள் போன்றவர்களும் "சமூகநீதிப் புரட்சியை ஏற்படுத்தியவர்' என்று ஏற்றிப் போற்றி, அவரைப் புனிதராக்குகின்றனர். சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த வி.பி.சிங்கை இடஒதுக்கீட்டுக்காக மட்டும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா, பார்ப்பன பயங்கரவாதி சங்கராச்சாரியைத் துணிவோடு கைது செய்ததை வைத்து அவரைப் "பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி' என்று கொண்டாட முடியுமா?

வி.பி.சிங் தனது அரசியலை காங்கிரசு கட்சியிலிருந்து தொடங்கினார். தெலுங்கானாப் புரட்சி வெற்றிகரமாக நிலப்பங்கீட்டை நடத்தி முடித்திருந்த காலகட்டத்தில், எங்கே புரட்சித் தீ இந்தியா முழுவதும் பரவி விடுமோ என்ற அச் சத்தில் வினோபா பாவே ஆரம்பித்த மோசடித்தனமான "பூமிதான' இயக்கம்தான் இந்த முன்னாள் ராஜாவை காங்கிரசுக்குக் கொண்டுவந்தது.

No comments: